Saturday, September 26, 2009

தமிழனாய் பிறந்தது குற்றமா??

கற்களும் முட்களும்
கிழிந்த பாதம்
இரத்தத்தில் தோய
எல்லாமே கடந்துவிட்டோம்
தலை சுமையிறக்க
இன்னுமொரு
சத்திரம் கூட
கிடைக்கவில்லை...
இளைப்பாற நினைத்து
ஒதுங்கிய ஆலயங்களிலும்
எலும்பும் ஊனமும்
தடயங்களாக
மீண்டும் சுமையுடன்
நெடுந்தூராம் ஓடுகிறோம்...
நாதியற்றவராய்
தாய் நாட்டில் அன்னியராய்
அழைக்கழிக்கப்படுகிறோம்..
காரணம்
நாங்கள் தமிழனாக
பிறந்ததுதானாம்...!!!

Tuesday, September 22, 2009

நீ யாரோ??

நீ யாரோ
எனக்கு தெரியாது - நீ
என்னை பெண் பார்க்க
நாளை வருவதாக
தரகர் வந்து சொன்னார்...
எத்தனையோ தடவையாக
சேலை கட்டிக்கட்டி
சேமித்து வைத்திருக்கிறேன்
மன ரணங்களை...
சரி
நாளையும் சேலைகட்டி
ஒரு சோலையாக
உன் கண்முன்
காட்சிதர
காத்திருக்கிறேன்...
நீயாரோ
எனக்கு தெரியாது
இரவில்
இதயச்சுவரில்
எண்ணத்தூரிகை
கீரிப்பார்க்கிறது
இப்படியெல்லாம்
உன் முகம் இருக்குமோ என்று....
பொழுது விடிந்தது
எனக்கும் பொழுது விடியாதா? என்ற
பழைய ஆசையோடு
உனக்காக காத்திருக்கிறேன்...
நீயாரோ எனக்கு தெரியாது
வேறொரு பெண்ணை
நேர்முக பரீட்சை
நடத்த போய்விட்டதாக
தரகரின்
தந்திதகவல் சொல்லியது...
தவித்துபோனேன்
உன் வருகை
தந்தியில் கூட
வரவில்லையென்று
தவித்துபோனேன்.
ஆனால்
நீயாரோ
எனக்கு தெரியாது....

Wednesday, September 16, 2009

சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை பெரியாரின் பிறந்த நாள் இன்று


1879 செப்டம்பர் 17: ஈரோட்டில் பெரியார் பிறந்தார். பெற்-றோர்: வெங்கட்ட (நாயக்கர்) - சின்னத்தாயம்மாள், உடன்பிறந்-தோர்: ஈ.வெ.கிருஷ்ணசாமி, கண்ணம்மாள், பொன்னுத்தாய்.
1885 - 1889: வயது 6 முதல் 10 வயதுவரை 5 ஆண்டு பள்ளிப்படிப்பு
1895: திராவிடத்தைச் சதியால் அடக்கி ஆண்ட ஆரி-யத்தை கூர்மதியால் (தமது இல்லத்தில் நடக்கும் மதப்-பிரசங்கங்களில்) குறுக்குக் கேள்விகேட்டு பொய்யையும், புரட்டையும் கற்பனையையும் தோலுரித்து பகுத்தறிவுப் புரட்சியைத் தொடங்கிவிட்டார் இயல்பாய் இளம்வயதிலேயே.
1898: பெருவணிகர் ராமசாமி, 13 அகவை ஏழை நாகம்மையாரை வாழ்க்கைத் துணைவராக விரும்பி மணந்தார்.
1902: ஜாதிஒழிப்பு ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து ஜாதியினர், மதத்தினருடன் சமபந்திபோஜனம் நடத்தினார்.
1904: பகுத்தறிவை ஏற்கமுடியாத பார்ப்பனச் சூழ்ச்சியால் தந்தையின் கடும் கண்டனத்தால் துறவு பூண்டு காசி சென்றார். அறிவுத் தெளிவு தந்த காசி அவமானம். தானச்சத்திரம் கட்டியதோ திராவிடர்; தண்டச்சோறு உண்பதோ பார்ப்பனர் மட்டும். காசியில் பார்ப்பன மோசமும், வேசிகளின் வேசமும், திராவிடர்கள் பிச்சைக்காரர்களாகவும், கங்கையில் எங்கும் பிணங்கள் மிதந்ததைப் பார்த்ததும் துறவைத் துறந்து, உறவை உணர்ந்தார்.
1905-06: பவுத்தம் போற்றி, பகுத்தறிவை ஊட்டி, பார்ப்-ப-னரின் இந்துமதத்தைச் சாடிய ஆதிதிராவிடரான பண்டித-மணி அயோத்திதாசரை மிகவும் நேசித்தார். இந்துமதம், ஜாதி-முறை, இதிகாசப்புரட்டு, வேத சாஸ்திரம் ஆகியவற்றைக் கடுமை-யாகச் சாடிய, நாத்திகத்தைச் சூடிய கரூர் புலவர் மருதை-யாப் பிள்ளை மேலும் இவரிடம் நுண்ணறிவுப் பகுத்-தறிவுச் சிந்தனையை வளர்த்தார். தமிழறிஞர் துறவி கைவல்-யம் அடிகளார், கல்விமான் பொறியாளர் பா.வே.மாணிக்க நாயக்கர் போன்றோரின் உள்ளார்ந்த நட்பும் திராவிட ஒளி உயர்ந்தோங்க வழிவகுத்தது.
1909: தனது தங்கையின் மகளுக்கு விதவை மறுமணம் செய்வித்தார்.
1918: சேலம் நகரமன்றத் தலைவர் திரு.சி. இராச-கோபாலாச்சாரியார் (இராஜாஜி) நண்பரானார்.
1919: திரு.பி.வரதராசுலு நாயுடு, திரு.சி.இராசகோபால ஆச்சாரியார் ஆகியோர் திரு.எம்.கே.காந்தி வழிநடத்தும் காங்கிரசில் சேருமாறு அழைத்து விரும்பி வேண்டிக்-கொண்டனர். நகரமன்றத் தலைவர் பதவியைத் துறந்து, காங்கிரசில் உறுப்பினராகத் தம்மை இணைத்துக்கொண்டார்.
1920: 29 பொதுப் பொறுப்புகளைத் தூக்கி எறிந்தார். பவுன் 10 ரூபாய்கூட விற்காத காலத்தில் ஆண்டிற்கு 20,000 ஆயிரம் ரூபாய் வருமானமுள்ள மூடி, வணிகத்தைத் துறந்தார். 1921: மதுவிலக்குக் கொள்கை; கள்ளுக்கடை மறியலில் தங்கை கண்ணம்மாளுடனும், துணைவியார் நாகம்மை யாருடனும் பங்கேற்று ஒரு மாதம் சிறை சென்றார். தம்முடைய 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார்.
1922: பெரியார் காங்கிரசுத் தலைமையை ஏற்றார். திருப்பூர் மாநாட்டில் ஆதிதிராவிடர் கோயில் நுழைவுத் தீர்மானம் கொணர்ந்தார். வருணதரும பார்ப்பன எதிர்ப்பால் ஆரியரின் மதக்கருவியான மனுசுமிருதி, இராமாயணம் போன்றவற்றை கொளுத்தப்போவதாக அறிவித்தார்.
1923: கோயில்களில் பார்ப்பனச் சுரண்டல் வேட்டைக்-கெதிராக -பனகல் அரசர் தலைமையில் நீதிக்கட்சி ஆட்சி - சட்ட-சபையில் சட்டத்தை நிறைவேற்றி இந்துசமய அறக்கட்டளை வாரியம் அமைக்க வழிசெய்தார்.
1924: 1920களிலிருந்து மாநாடுகளில் இடஒதுக்கீட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றினார். நீதிக்கட்சியாரின் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வகுப்புவாரி இடஒதுக்கீடு கொள்-கையை பெரிதும் பாராட்டினார். ஓர் ஆண்டுக்கும்மேல் நடை-பெற்ற வைக்கம் முதல் மனித உரிமைப் போராட்டத்தில் பங்கு-கொண்டு இரண்டு முறை சிறைவாசம், தீண்டாமை விலக்கி வெற்றி-பெற்று வைக்கம் வீரரானார். அயல்நாட்டுப் பொருள்-களைப் புறக்கணித்துப் பிரசாரம் செய்து செப். 11 இல் சிறை புகுந்தார். ஜாதிவெறி பிடித்த வ.வே.சு.அய்யரின் சேரன்மாதேவி குருகுலத்தின் வருணாசிரம நடவடிக்கையை எதிர்த்து, தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் செயலாளர் பதவியைத் தூக்கி எறிந்தார். ஆயினும் தன்னலமற்ற அரும்பணிகளால் மீண்டும் தலைவராக்கியது.
1925- டிசம்பர்: காஞ்சிபுரம் காங்கிரசு மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானம் கொண்டுவர முயன்று தோல்வி. காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். காஞ்சியில் பார்ப்பனரல்லாதார் மாநாடு: தமிழரின் இனம், மொழி, நாகரிகம் காக்கவேண்டியது கட்டாயத் தேவை-யென முழங்கினார்.
1927: ஜாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கமுடியாது என பெங்களூரில் காந்தியாரிடம் பெரியார் கடுமையாக வாதாடினார்.
1928: பெரியார் ஆதரவில் முத்தையா (முதலியார்) வகுப்புவாரி இடஒதுக்கீடு அரசு ஆணை பிறப்பித்தார்.
1928- நவம்பர் 7: ரிவோல்ட்(கிளர்ச்சி) ஆங்கில இதழைத் தொடங்கினார்.
1929- பிப்ரவரி: செங்கற்பட்டில் முதல் மாகாண சுயமரியாதை மகாநாடு, புரட்சித் தீர்மானங்கள் நிறைவேற்றம். சுயமரியாதை திருமணம் எனும் புதிய வாழ்க்கை ஒப்பந்த முறையை பெரியார் அறிமுகம் செய்து நடத்திக் காட்டினார். ஜாதிமறுப்பு -மத மறுப்பு - விதவை மறுமணத்தை ஊக்கப்படுத்தினார்.
1929:- மலேசியா சுற்றுப் பயணம்செய்தார். பினாங்கு துறை--முகத்தில் 50,000_க்கும் மேற்பட்டோர் திரண்டு வரவேற்றனர். ஈப்போ நகரில் தமிழர் சீர்திருத்த சங்கத்தில் மாநாட்டைத் துவக்கி வைத்து உரை.
1930: தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டமுன்வரைவை பெரியார் ஆதரித்தார்.
1932: கிரீன், துருக்கி, சோவியத் ரஷியா, ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், போர்த்துகல் நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து உலக அனுபவங்களுடன் திரும்பினார். 1933: நாகம்மை மறைவு; திராவிடன் இதழ் தொடர்பாக சிறைவாசம்; புரட்சி வார இதழ் தொடக்கம்; ஈரோடு சமதர்மத் திட்டம் உருவாதல் அரசு வெறுப்புக் குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
1934: புரட்சி இதழ் நிறுத்தப்பட்டு பகுத்தறிவு இதழ் தொடக்கம்.
1935: பெரியார் சமதர்மத் திட்டம் ஏற்கப்பட்டதால் நீதிக்-கட்சிக்கு ஆதரவு. விடுதலைப் பத்திரிகை பெரியார் பொறுப்பில் வந்தது.
1936: இந்தியை பொதுமொழியாக்குவதை எதிர்த்தார்.
1937: தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முதலில் எழுப்பினார்.
1938: இந்தித் திணிப்பை எதிர்த்துச் சிறை சென்றார். பெண்கள் மாநாட்டில் பெரியார் பட்டம் பெற்றார். டிசம்பர் 29-இல் சிறையில் இருக்கும்போதே நீதிக் கட்சிக்குத் தலை-வராகத் தேர்வு செய்யப்பட்டார். சோதனைக் குழாய் குழந்தை பற்றி உரையாற்றினார்.
1941: பெரியார் முயற்சியால் தென்-னிந்திய ரயில்வே ஓட்டல்களில் 20.03.1941_ ஜாதிபேதம் ஒழிந்தது.
1942: சென்னை ராஜதானி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்க இரண்டாம் தட-வை-யாக ஆளுநர் ஆர்தர் ஹோப் வேண்டு-கோளை மறுத்தார். பெயர்களில் ஸ்ரீக்கு பதிலாக திரு-அடைமொழி சேர்க்க, மாநாட்டில் தீர்மானித்து, மக்களைக் கேட்டுக்கொண்டார்.
1943: தந்தை பெரியாரும், - ஆல்பர்ட் அய்ன்ஸ்டினும்_- சமவயது, சமசிந்தனை விஞ்ஞானி என்பதை வெளிப்படுத்தினார். சோதனைக்குழாய் குழந்தை, செல்போன், உணவு மாத்திரைகள், ஆகாயக் கப்பல் (விமானம்), கம்பியில்லாத் தந்தி முதலானவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார்கள்.
1944: தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் எனும் நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றப்பட்டது.
1945: கருப்புச்சட்டைப் படை அமைத்தார். 29.04.1945இல் முதல் தொண்டராக கலைஞர் மு.கருணாநிதி தம்மைப் பதிவு செய்துகொண்டார்.
1947: ஆகஸ்ட்-15 சுதந்திர நாள் திராவிடருக்குத் துக்க நாள் என அறிவித்தார். அவற்றில் திராவிடர் மாநாடு கூட்டி திராவிட நாட்டுப் பிரிவினை உணர்ச்சி ஊட்டினார்.
1948: கருஞ்சட்டைப் படைக்குத் தடை, தூத்துக்குடி மாநாடு, இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம், கைது செய்யப்பட்டார்.
1949: மணியம்மையாரை வாழ்க்கைத் இணையராகப் பதிவு செய்தார்.
1951: வடவர் எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக கைது: வகுப்புரிமைக்கு ஆதரவாக முதன்முதலாக இந்திய அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.
1952: குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம். ஒரே சிறையில் அண்ணாவும் -_அய்யாவும்.
1953: மூடநம்பிக்கை ஒழிய பிள்ளையார் உருவ பொம்மைகள் உடைப்பு.
1955: இந்திய தேசியக்கொடி எரிப்புப் போராட்டத்தை அறிவித்தார்.
1956: ஜாதி ஒழிப்பு - இராமன் பட எரிப்புக்காக கைது செய்யப்பட்டார்.
1957: ஜாதி ஒழிப்பு - சட்ட எரிப்புப் போராட்டம், 3000 பேர் கைது, 6 மாதம்வரை சிறைவாசம். நிலக்கொடை இயக்கத் தலைவர் வினோபா பாவே ஈரோட்டில் பெரியாரைச் சந்தித்தார். தஞ்சையில் எடைக்கு எடை வெள்ளி.
1958: பெரியார் - லோகியா சந்திப்பு, உணவு விடுதிகளில் பிராமணாள் பெயர் அழிப்புப் போர்.
1959: வடநாட்டுப் பயணம், இராமாயணக் கண்டனக் கூட்டங்கள்
1960: தமிழ்நாடு நீங்கிய தேசப்படம் எரிப்புப்போர் -கைது.
1961: 12.03.1961 அன்று சுயமரியாதை மாநாட்டில் மனுநீதி, கீதை, இராமாயணம் முதலானவை கொளுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
1962: விடுதலை இதழின் ஆசிரியராக கி.வீரமணி எம்.ஏ., பி.எல்., அவர்களை (10.08.1962) வரவேற்றார்.
1963: காமராஜர் பதவி விலகுவது தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும், காமராசருக்கும் தற்கொலையாக முடியும் என முன்கூட்டியே தந்திமூலம் அவருக்கு அறிவித்தார்.
1964: நில உச்சவரம்புக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றக் கண்டன நாள் கூட்டங்கள் நடத்தினார்.
1965: வைக்கம் வீரர் பெரியார், கேரளாவில் 11.03.1965 அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
1966: நாடெங்கும் இராமாயணம் எரிக்கப்படச் செய்தார்.
1967: அண்ணா முதல்வராகி ஆட்சியைப் பெரியாருக்குக் காணிக்கையாக்குதல்; சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
1970: உண்மை இதழ் தொடக்கம்; யுனெஸ்கோ விருது வழங்கிப் பாராட்டியது. பகுத்தறிவாளர் கழகம் எனும் அமைப்பைத் தொடங்கினார். மாடர்ன் ரேஷனலிஸ்ட் எனும் ஆங்கில மாத இதழைத் தொடங்கினார். அறிவியல் அறிஞர் ஜி.டி.நாயுடு அவர்களுக்குத் தந்தை பெரியார் தலைமையில் சிறை திறக்கப்பட்டது.
1971: தமிழ்நாடு சட்டசபையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றம். பெரியார் தலைமையில் திமுகவை ஆதரித்துப் பிரச்சாரம். 183 இடங்களைக் கைப்பற்றி கலைஞர் முதலமைச்சரானார். சேலத்தில் மாநாட்டில் வெள்ளி சிம்மாசனம் பரிசாக பெரியாருக்கு வழங்கப்பட்டது.
1972: பெரியார் மீது செருப்பு, பாம்பு வீசப்பட்ட இடமான கடலூரில் 13.08.1972 பெரியார் சிலையை கலைஞர் திறந்துவைத்தார்.
1973: 95 ஆவது பிறந்தநாள் விழாவில் எம்.ஜி.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பணமுடிப்பை வழங்கினார். சென்னையில் சமுதாய இன இழிவு ஒழிப்பு மாநாடு _ உடல் பாதிப்பு - வேலூர் மருத்துவமனையில் அனுமதி 24.12.1973 அன்று மறைந்தார். சென்னையில் காவல் துறையினரின் வேட்டு முழக்கத்துடன் பெரியார் உடலுக்கு அரசுமுறை அடக்கம் தந்திட கலைஞர் ஆவன செய்தார். சென்னை வேப்பேரியில் பெரியார் திடலில் பெரியார் அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அன்றைய தினத்தை அரசு விடுமுறை நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
மதத்தின் பெயரால் நடக்கும் மூடத்தனங்கள் சாதிக் கொடுமைகள், மதக்கலவரங்கள் இவற்றை எதிர்த்து நாம் குரல் கொடுத்து போராட வேண்டும். 'தமிழ்நாடு தமிழருக்கே' என தமிழ்த் தேச நலனை முன்னிறுத்தி தன் இறுதிநாள்வரை வாழ்ந்த பெரியாரே 'தமிழ்த் தேசியத் தந்தை'யாவார். அவரது லட்சியத்தை நிறைவேற்ற வேண்டிய அரும்பணியை நாம்மால் முடிந்தவரை ஆற்றுவோம் என இந்நாளில் உறுதியேற்போம்.

Friday, September 11, 2009

புரட்சியில் பிறந்த கியூபா


வட அமெரிக்காவும்,தென் அமெரிக்காவும் இணையும் இடத்துக்கு மேலே கிழக்கு திசையில் கர்பியன் கடலில் அமைந்திருக்கும் தீவுநாடு கியூபா. இதன் தலைநகரம் ஹவானா. இந்த கம்யூனிச நாட்டின் தற்போதைய அதிபராக இருப்பவர் ரவுல் காஸ்ட்ரோ. கியூபா புரட்சியின் போது கொரில்லா படைத்தளபதிகளில் ஒருவரான இவர் முந்தைய அதிபர் பிடல்காஸ்ட்ரோவின் தம்பி ஆவார்.
இந்தியாவுக்கு வழி கண்டு பிடிக்க புறப்பட்ட கொலம்பஸ் வழியில் அமெரிக்காவை கண்டுபிடித்தது போலவே கியூபாவையும் கண்டு பிடித்தார். முதலில் பஹாமாவையும் சான்சல்வடார் தீவையும் கடந்து 1492-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் நாள் கியூபாவில் காலடி வைத்தார். கொலம்பஸ் கியூபாவில் ஸ்பெயினின் ஆதிக்கம் வருவதற்கு இவரே முக்கிய காரணம்.
அமெரிக்க ஆதரவாளராக இருந்த அதிபர் பாடிஸ்டாவின் கொடுங்கோல் ஆட்சியை ஆயுதப் புரட்சியின் மூலம் தூக்கி எறிந்த பிடல்காஸ்ட்ரோ 1959ம் ஆண்டு பிரதம மந்திரியானார். கியூபாவின் வளங்களை சுரண்டி வந்த அமெரிக்காவுக்காவை எதிர்க்கத் துவங்கினார். இவரை கொல்ல அமெரிக்க உளவுத்துறை எடுத்த அத்தனை முயற்ச்சிகளையும் முறியடித்தார். ஜனவரி 1959ம் ஆண்டு முதல் பிப்ரவரி 2008 வரை கியூபாவின் அதிபராக இருந்த பிடல்காஸ்ட்ரோ வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலக்குறைவின் காரணமாகவும் தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவை கியூபாவின் புதிய அதிபராக பதவி அமர்த்தினார்.
கியூபாவின் கொரில்லா முறை ஆயுதப்புரட்சி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், சேகுவேரா. அர்ஜெண்டினாவின் செல்வ குடும்பத்தில் பிறந்த சேகுவேராவின் இயற்பெயர் எர்னஸ்டோ சேகுவேராடி லா செர்னா என்பதாகும். தனக்கு சம்பந்தமே இல்லாத நாட்டின் புரட்சி யுத்தத்தில் பிடல்காஸ்ட்ரோவுடன் இணைந்து போரிட்டார். அதன் பின்னர் பிடல்காஸ்ட்ரோவின் தலைமையில் அமைந்த புதிய அரசாங்கத்தில் கொஞ்சகாலம் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றினார். அதன் பிறகு காங்கோ, பொலிவியா போன்ற நாடுகளின் புரட்சியிலும் பங்கு கொண்டார். பொலிவியாவில் 1967ம் ஆண்டு அக்டோபர் 7ம் நாள் அமெரிக்கா ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கியூபாவில் சோஷியலிஸ்ட் ரிபப்ளிக்கில் முறையிலான அரசு செயல்படுகிறது. காரல்மார்க்ஸ்,ஏங்கெல்ஸ்,லெனின்,ஜோஸ் மார்ட்டி ஆகியோரின் அரசியல் கொள்கைகளை பின் பற்றி கியூபாவின் அரசாங்கம் செயல்படுகிறது.

Saturday, September 5, 2009

ஜனநாயகச் சாமியார்கள்

எங்களை விட
எங்கள் நாட்டு
சாமியார்கள்தான்
ஜனநாயகத்தை
சரியாக
புரிந்து கொண்டிருக்கிறார்கள்...
அதனால்தான்
இங்கு சில
தந்திரசாமிகளின்
மந்திர வலைகளில்
எங்கள் மந்திரிமார்கள்
மயங்கி கிடக்கிறார்கள்...
சாமியார் மடங்களின்
சாய்வு மேசையில் - எங்கள்
சட்டவரவுகள்
சரி செய்யப்படுகின்றன...
அரசியல்வாதிகளை விட
ஆசிரமவாசிகள் அதிகமாய்
அதிகாரம் செலுத்துகிறார்கள்...
ஆட்சியாளர்கள் மாறலாம்
ஆனால்
ஆசியாளர்கள் மாறுவதில்லை...
எனவேதான்
ஆட்சியாளர்களை விட
ஆசிரமவாசிகளுக்கு
அதிக மரியாதை...
ஒன்று மட்டும் புரிந்தது
எதையும் புரிந்து கொள்ளாத
இந்தியனைத்தான்
இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்...

Wednesday, September 2, 2009

இளையோர்களின் கைகளில் தேசத்தின் விடுதலை

எந்தவொரு சமுதாயத்தின் எதிர்காலப் போக்கும், அதன் கலாச்சார,பொருண்மிய நிலைப்பாடுகளும் சமுதாய வளர்ச்சியும் அந்த சமுதாயத்தினைச் சார்ந்த இளையோரின் பங்களிப்பிலேயே முக்கியமாகத் தங்கியிருக்கின்றன. இது உலகின் அனைத்து சமுதாயங்களிற்கும் பொருந்தும்.ஆனால் ஈழத்தமிழர்கள் என்ற எமது இன சமுதாயத்திற்கு தற்போதைய நிலைமையில் தமிழ் இளையோர்களின் பங்களிப்பென்பது இன்றியமையாத தேவையாக மாறியிருக்கின்றது.
ஈழப்போராட்டமானது தற்போதைய இளையோர்களின் வளர்ச்சிக்காலங்களினூடேதான் கடந்து வந்திருந்தது. குண்டுச் சத்தங்கள் தொட்டில் தூக்கத்தினைக் கலைத்தபோது கண்முழித்தோம், பிஞ்சு வயதில் பதுங்கு குழிக்குள் தூங்கியெழுந்தோம். இரவோடிரவாக சொந்த ஊர்விட்டு இடம்பெயர்ந்தபோது இனம்புரியாத வலியை உணர்ந்தோம். அறியாத வயதில் அவையெல்லாம் ஏன் என்று புரியவில்லை. ஆனாலும் அந்த வலிகளின் வடுக்கள் மட்டும் இன்னும் அழியவேயில்லை.
கொஞ்சம் புரியும் வயதிலும் வலிகள் தொடர்ந்தன. ஆனாலும், ஏன் என்ற கேள்விக்கு முழுமையான பதில்கள் தெரிந்திருக்கவில்லை. பின்னர் வந்த காலங்களில்… முழுமையாக தெரிந்து கொண்டபோது, அதுவரைகாலமும் அனுபவித்து வந்த வலிகள் அனைத்தும் சேர்ந்து விடுதலை உணர்வாய் மாற்றம் பெற்றன. இவ்வாறான விடுதலை உணர்வு இன்றைய இளையோர்கள் அனைவர் மனத்திலும் என்றும் அணையாத தீயாக எரிந்துகொண்டுதான் இருக்கின்றது.
அந்த விடுதலையுணர்வை தலைவன் வழிநின்று களத்தில் காட்டியோர் புலிகள். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை உலகறியக் கொண்டுவந்தது புலிகளின் தீரமிக்க, தியாகம் நிறைந்த போராட்டங்களே. அத்தனை தீரங்களையும் செய்து காட்டியவர்கள் இளையோர்களே.
ஆனால் நடந்து முடிந்திருக்கும் வன்னிச் சமரின் பின் புலிகளை அழித்துவிட்டோம். இனிமேல் புலிகள் என்ற நாமமே இல்லாதொழிக்கப்படும் என சிங்கள அரசு அறிக்கைவிட்டு வருகின்றது. முப்பது வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டுவந்த ஆயுதப் போராட்டமானது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பது உண்மையே.
சில நாடுகளின் சதிவேலைகளும்,சர்வதேசத்தின் பாராமுகமும், சிங்களத்தின் கொலைவெறித்தனமான போரும் வன்னி மண்ணில் பேரழிவை ஏற்படுத்தியிருந்தன. இந்தப் பேரழிவுக்குள் தமிழர்களின் ஆயுதப் போராட்ட வலுவும் பெரும் பின்னடைவைச் சந்தித்து புலிகளும் அஞ்ஞாதவாசம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இதுவரைகாலமும் ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாக, பலமாக இருந்துவந்த புலிகளின் பின்னடைவிற்கு பிற்பாடு , அவர்கள் தொடர்ந்த தமிழினத்திற்கான போராட்டம் கேள்விக்குரியதாக மாறியிருக்கின்றது. ஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகங்கள் நிறைந்த போராட்டத்தின் இலட்சியப்பாதை தடம் மாறிவிடுமோ? என்ற ஐயப்பாடும் தற்போது உருவாகியுள்ளது.
ஆனாலும், முன்னதாகவே தமிழர்களின் போராட்ட பரிமாணங்கள் மாற்றமடைந்து புலம்பெயர்தேசங்களிலும் பரிணமிக்கத் தொடங்கியிருந்தன. தீர்க்க தரிசனமிக்க தமிழீழ தேசியத்தலைவரின் கடந்த மாவீரர்தின உரையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்மக்களை நோக்கி குறிப்பாக இளையோர்களை நோக்கித் தெரிவிக்கப்பட்ட கருத்தானது, புலம்பெயர் தேசங்களில் இனிவரும் காலங்களில் தொடரப்படும் போராட்டங்களில் இளையோர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தினையே குறித்து நிற்கின்றது. தாயகத்திலுள்ள இளைய தலைமுறையினரின் போராட்ட உணர்வுகள் அடக்குமுறைகளினால் அடக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் இளைய தலைமுறையினரின் முழு அளவிலான பங்களிப்பு அவசியமாகியிருக்கின்றது.
திட்டமிடல்களுடன் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்களில் இளையோரின் பங்களிப்பும் பெரியோர்களின் வழிநடத்தல்களும் ஒருங்கிணைந்து செயற்படுத்தப்படவேண்டும். இதுவரை நாட்களும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இளையோர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தன. அவர்களோடு பெரியோர்களும் தங்களது ஒத்துழைப்பினைக் கொடுத்திருந்தார்கள். இளையோர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்கள் சர்வதேசத்தின் கவனத்தினை பெருமளவில் ஈர்த்திருந்தன. அதன் விளைவாக அவர்களினது நிலைப்பாடுகளிலும் மாற்றங்களை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட நிலையில், அறவழிப் போராட்டத்திற்கான புதிய போராட்டப் பாதை திறக்கப்பட்டிருக்கின்றது. சர்வதேசத்தினை நோக்கி தமிழர்களது நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டிய காலச் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. வதை முகாங்களில் சிக்கித் தவிக்கும் உறவுகளை மீட்டுக் காப்பாற்ற வேண்டியது நமது கட்டாயக் கடமை. தாயகத்தில் நடந்த படுகொலைகளும், நடந்தேறும் துயரங்களும் அதனாலான வலிகளும் மற்றவர்களுக்கு தெரியாவிட்டாலும் நமக்கு நன்கே தெரியும். அந்த வலிகளும் புரியும். நமது இனத்தின் அவலங்களை உலகின் கண்களுக்கு வெளிக்கொணர வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடப்பாடும் கடமையுமாகும். நமது உணர்வெழுச்சிகொண்ட போராட்டங்கள் மூலம் அவை வெளிப்படுத்தப்பட வேண்டும்.
தமிழினத்தின் தாயகவிடுதலைப் போராட்டம் இளையோர்களின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், போராட்டத்தினை நிலைநிறுத்தி அதை மேலும் வீரியத்துடன் தொடர்ந்து நடத்தவேண்டிய கடப்பாடும் அவர்களின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. ஆயுதப் போராட்டமானது தமிழர்களை மிகவும் பலப்படுத்திய ஒன்றாக விளங்கியபோதும் அதுவே தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தினை சர்வதேசம் “பயங்கரவாதம்” என பொய்முத்திரை குத்தவும் காரணமாக அமைந்தது. புலிகளைப் பொறுத்தவரையில், நாங்கள் “பயங்கரவாதிகள்” இல்லை. அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடும் “விடுதலைப் போராளிகள்” என்பதை அனைத்துலகத்திற்கு எடுத்துக்கூறியும், செயலில் காட்டியும் அதனை நடைமுறையில் கடைப்பிடித்தும் வந்தனர். ஆனால்,சர்வதேசம் அதனை ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.
இன்றுவரைக்கும் ஈழத்தமிழர்களின் போராட்டம் நியாயமானது என்பதையோ அல்லது சிங்கள பேரினவாதிகளால் தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள், கொன்றொழிக்கப்படுகின்றார்கள் என்பதனையோ முழுமையாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக ஆதரவுக்குரல் கொடுக்க எந்தவோரு நாடும் முன்வரவில்லையென்பது தமிழர்களின் துரதிஷ்டம் என்றே கருதத் தோன்றுகின்றது.
ஈழ விடுதலைப் போராட்டத்தினைப் பொறுத்தவரையில் அதிகளவான இழப்புக்களைச் சந்தித்ததும் அதிகளவில் பாதிக்கப்பட்டதும் இளம் சமுதாயமே. கடத்தப்படுவோர், காணாமல் போவோர், கைது செய்யப்படுவோர், சுட்டுக்கொல்லப்படுவோர், சித்திரவதைப்படுத்தப்படுவோர் என அனைத்திலும் இளைஞர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றார்கள். அண்மையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் காணொளிக்காட்சியில்கூட அப்பாவித்தமிழ் இளைஞர்கள் படுகோரமாக சுட்டுப் படுகொலை செய்யப்படுவது அம்பலமாகியுள்ளது.
உண்மைகள் எப்பொழுதுமே உறங்கிவிடுவதில்லை என்பதற்கிணங்க… சிங்களக் கொலைவெறியர்களின் அட்டூழியத்தினை அப்பட்டமாக வெளிக்கொணர்ந்திருந்தது அந்தக் காணொளிப் பதிவு. இதைப்போன்ற பல ஆதாரங்கள் இன்னும் வரக் காத்திருக்கின்றன. ஆனால், இதுபோன்ற ஆதாரங்களை சாட்சியங்களாக்கி உலகத்தின் கண்முன் நிறுத்தி, தமிழர்களுக்கான நீதி பெறப்படுவதற்கான முயற்சிகள், முன்னெடுக்கப்படும் போராட்டங்களினால்தான் சாத்தியப்படக் கூடியனவாக இருக்கும். இளையோரினால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம், பரப்புரைப் போராட்டம், நடைப்பயண கவனயீர்ப்பு,சிங்களத்தின் தமிழின அழிப்பினை வெளிக்கொணரும் பிரச்சாரப் போராட்டம் என்பன புலம்பெயர் தேசங்களில் பெரும் பாதிப்பினை உண்டுபண்ணி சாதகமான விளைவுகளை உருவாக்கத் தொடங்கியுள்ளன.
செய்தி ஊடகத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை என்பவற்றிலும் இளையோரின் பங்கு அதிகமாக இருப்பதனால், போராட்டங்கள் தொடர்பான தகவல்களும் விளக்கங்களும் அனைத்துலகத்திற்கும் இலகுவாக சென்றடையக்கூடியதாக அமைந்திருக்கின்றது.கல்வியறிவு, செயற்திறன், வேகம், விவேகம், விடுதலையுணர்வு என அனைத்திலும் மேலோங்கி நிற்கும் இளந்தமிழ் சமுதாயத்திற்கு அனுபவமிக்க,பக்குவமிக்க, விடுதலைப் போராட்டம் தொடர்பான ஆழ்ந்த சிந்தனையுள்ள பெரியவர்களினது ஆதரவும் வழிகாட்டலும் கிடைக்குமாக இருந்தால் அனைத்துமே சாத்தியப்படக் கூடியதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
எங்கள் செல்வங்களே! ஈழத் தமிழ் இளையோரே!
உங்கள் ஈழத் தமிழினத்தின் எதிர்கால வரலாற்றை தீர்மானிக்கப் போவது நீங்களும் உங்கள் உணர்வெழுச்சிமிக்க போராட்டமும்தான்.
ஆயுதமேந்தி போராட வேண்டிய அவசியம் இப்போதில்லை. உங்களால் முடிந்தவரைக்கும் அறவழிப் போராட்டத்தினை உணர்வெழுச்சியோடு அறிவுவழி கொண்டு முன்னெடுங்கள். தற்போதைய காலத்தின் கட்டாயத்தில், இதனை மட்டும்தான் நாம் மேற்கொள்ளமுடியும். இத்தருணத்தில், இதை சரிவர மேற்கொள்வோமானால் எம் விடுதலைக்கான காலம் வெகுதொலைவில் இருக்காது.
உறவுகளே! உங்கள் சகோதரங்களின், மாவீரர்களின் இலட்சியக் கனவினை வீணாக்கி விடாதீர்கள். அவர்களின் தியாகங்கள் உங்களுக்கானதே. உங்களுக்காக, உங்களின் உரிமை தேசத்திற்காக தங்கள் இன்னுயிரையே தியாகம் பண்ணியவர்கள் இந்த மாவீரர்கள். அந்த தன்னலமற்ற ஆன்மாக்களின் தாயகக் கனவினை ஈடேற்ற வேண்டிய கடமை நம் முன்னே வைக்கப்பட்டுள்ளது. நம் தாய் மண்ணுக்காக நம்மால் முடிந்தளவுக்கு தாயகக் கடமையை ஆற்ற வேண்டிய சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. இதையும் நாம் தவற விடுவோமானால் “நான் தமிழன்” என்று சொல்லிக்கொள்ள அருகதையற்றவர் ஆகிவிடுவோம். அவர்களை விதைத்த அந்த புனித பூமியில் கால் வைக்கக்கூட உரிமையற்றவர்கள் ஆகிநிற்போம்.
இனிவரும் காலங்களை எமக்குரியதாக மாற்றிக்கொள்ளவேண்டும். இப்பொழுதும் போராடாமல் இருப்போமானால், எம் உறவுகள் எதிரியின் கைகளினால் சின்னாபின்னமாக்கப்பட்டு அழிக்கப்படுவதையோ, இவ்வளவு காலமாய் செய்த அத்தனை தியாகங்கள்,போராட்டங்கள் அனைத்தும் வீணடிக்கப்படுவதையோ, தமிழர் தாயகம் சிங்கள வல்லூறுகளின் கூடாரமாகுவதையோ யாராலும் தடுக்க முடியாததாகிவிடும். உயிரைக் கொடுத்து போராடிய மாவீரர்களின் கனவை நனவாக்க நம் உணர்வைக் கொடுத்து போராடுவோம்.
இழப்புக்களின் வலிகளை உணர்வுகளாக்கி மீண்டும் உயிர்த்தெழுவோம்!
துவண்டு போய் இருந்த நிலைமாற்றி நிமிர்ந்தெழுவோம்!
உறவுகளைக் காக்க உணர்வெழுச்சியோடு பொங்கியெழுவோம் !
இறுதிவரை… போராடுவோம்!
தமிழரிற்கு நிரந்தரமான விடுதலை கிடைக்கும்வரைக்கும்… இலட்சியமான ஈழ தேசத்தினை அடையும்வரைக்கும்… நமது போராட்டம் தொடரும், அதுவரைக்கும் ஈழத் தமிழினம் ஓயாது என்பதனை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்துவோம்!
இறுதியில்…. வெற்றி எமக்கே!
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
- பருத்தியன் -