Wednesday, September 16, 2009

சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை பெரியாரின் பிறந்த நாள் இன்று


1879 செப்டம்பர் 17: ஈரோட்டில் பெரியார் பிறந்தார். பெற்-றோர்: வெங்கட்ட (நாயக்கர்) - சின்னத்தாயம்மாள், உடன்பிறந்-தோர்: ஈ.வெ.கிருஷ்ணசாமி, கண்ணம்மாள், பொன்னுத்தாய்.
1885 - 1889: வயது 6 முதல் 10 வயதுவரை 5 ஆண்டு பள்ளிப்படிப்பு
1895: திராவிடத்தைச் சதியால் அடக்கி ஆண்ட ஆரி-யத்தை கூர்மதியால் (தமது இல்லத்தில் நடக்கும் மதப்-பிரசங்கங்களில்) குறுக்குக் கேள்விகேட்டு பொய்யையும், புரட்டையும் கற்பனையையும் தோலுரித்து பகுத்தறிவுப் புரட்சியைத் தொடங்கிவிட்டார் இயல்பாய் இளம்வயதிலேயே.
1898: பெருவணிகர் ராமசாமி, 13 அகவை ஏழை நாகம்மையாரை வாழ்க்கைத் துணைவராக விரும்பி மணந்தார்.
1902: ஜாதிஒழிப்பு ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து ஜாதியினர், மதத்தினருடன் சமபந்திபோஜனம் நடத்தினார்.
1904: பகுத்தறிவை ஏற்கமுடியாத பார்ப்பனச் சூழ்ச்சியால் தந்தையின் கடும் கண்டனத்தால் துறவு பூண்டு காசி சென்றார். அறிவுத் தெளிவு தந்த காசி அவமானம். தானச்சத்திரம் கட்டியதோ திராவிடர்; தண்டச்சோறு உண்பதோ பார்ப்பனர் மட்டும். காசியில் பார்ப்பன மோசமும், வேசிகளின் வேசமும், திராவிடர்கள் பிச்சைக்காரர்களாகவும், கங்கையில் எங்கும் பிணங்கள் மிதந்ததைப் பார்த்ததும் துறவைத் துறந்து, உறவை உணர்ந்தார்.
1905-06: பவுத்தம் போற்றி, பகுத்தறிவை ஊட்டி, பார்ப்-ப-னரின் இந்துமதத்தைச் சாடிய ஆதிதிராவிடரான பண்டித-மணி அயோத்திதாசரை மிகவும் நேசித்தார். இந்துமதம், ஜாதி-முறை, இதிகாசப்புரட்டு, வேத சாஸ்திரம் ஆகியவற்றைக் கடுமை-யாகச் சாடிய, நாத்திகத்தைச் சூடிய கரூர் புலவர் மருதை-யாப் பிள்ளை மேலும் இவரிடம் நுண்ணறிவுப் பகுத்-தறிவுச் சிந்தனையை வளர்த்தார். தமிழறிஞர் துறவி கைவல்-யம் அடிகளார், கல்விமான் பொறியாளர் பா.வே.மாணிக்க நாயக்கர் போன்றோரின் உள்ளார்ந்த நட்பும் திராவிட ஒளி உயர்ந்தோங்க வழிவகுத்தது.
1909: தனது தங்கையின் மகளுக்கு விதவை மறுமணம் செய்வித்தார்.
1918: சேலம் நகரமன்றத் தலைவர் திரு.சி. இராச-கோபாலாச்சாரியார் (இராஜாஜி) நண்பரானார்.
1919: திரு.பி.வரதராசுலு நாயுடு, திரு.சி.இராசகோபால ஆச்சாரியார் ஆகியோர் திரு.எம்.கே.காந்தி வழிநடத்தும் காங்கிரசில் சேருமாறு அழைத்து விரும்பி வேண்டிக்-கொண்டனர். நகரமன்றத் தலைவர் பதவியைத் துறந்து, காங்கிரசில் உறுப்பினராகத் தம்மை இணைத்துக்கொண்டார்.
1920: 29 பொதுப் பொறுப்புகளைத் தூக்கி எறிந்தார். பவுன் 10 ரூபாய்கூட விற்காத காலத்தில் ஆண்டிற்கு 20,000 ஆயிரம் ரூபாய் வருமானமுள்ள மூடி, வணிகத்தைத் துறந்தார். 1921: மதுவிலக்குக் கொள்கை; கள்ளுக்கடை மறியலில் தங்கை கண்ணம்மாளுடனும், துணைவியார் நாகம்மை யாருடனும் பங்கேற்று ஒரு மாதம் சிறை சென்றார். தம்முடைய 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார்.
1922: பெரியார் காங்கிரசுத் தலைமையை ஏற்றார். திருப்பூர் மாநாட்டில் ஆதிதிராவிடர் கோயில் நுழைவுத் தீர்மானம் கொணர்ந்தார். வருணதரும பார்ப்பன எதிர்ப்பால் ஆரியரின் மதக்கருவியான மனுசுமிருதி, இராமாயணம் போன்றவற்றை கொளுத்தப்போவதாக அறிவித்தார்.
1923: கோயில்களில் பார்ப்பனச் சுரண்டல் வேட்டைக்-கெதிராக -பனகல் அரசர் தலைமையில் நீதிக்கட்சி ஆட்சி - சட்ட-சபையில் சட்டத்தை நிறைவேற்றி இந்துசமய அறக்கட்டளை வாரியம் அமைக்க வழிசெய்தார்.
1924: 1920களிலிருந்து மாநாடுகளில் இடஒதுக்கீட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றினார். நீதிக்கட்சியாரின் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வகுப்புவாரி இடஒதுக்கீடு கொள்-கையை பெரிதும் பாராட்டினார். ஓர் ஆண்டுக்கும்மேல் நடை-பெற்ற வைக்கம் முதல் மனித உரிமைப் போராட்டத்தில் பங்கு-கொண்டு இரண்டு முறை சிறைவாசம், தீண்டாமை விலக்கி வெற்றி-பெற்று வைக்கம் வீரரானார். அயல்நாட்டுப் பொருள்-களைப் புறக்கணித்துப் பிரசாரம் செய்து செப். 11 இல் சிறை புகுந்தார். ஜாதிவெறி பிடித்த வ.வே.சு.அய்யரின் சேரன்மாதேவி குருகுலத்தின் வருணாசிரம நடவடிக்கையை எதிர்த்து, தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் செயலாளர் பதவியைத் தூக்கி எறிந்தார். ஆயினும் தன்னலமற்ற அரும்பணிகளால் மீண்டும் தலைவராக்கியது.
1925- டிசம்பர்: காஞ்சிபுரம் காங்கிரசு மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானம் கொண்டுவர முயன்று தோல்வி. காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். காஞ்சியில் பார்ப்பனரல்லாதார் மாநாடு: தமிழரின் இனம், மொழி, நாகரிகம் காக்கவேண்டியது கட்டாயத் தேவை-யென முழங்கினார்.
1927: ஜாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கமுடியாது என பெங்களூரில் காந்தியாரிடம் பெரியார் கடுமையாக வாதாடினார்.
1928: பெரியார் ஆதரவில் முத்தையா (முதலியார்) வகுப்புவாரி இடஒதுக்கீடு அரசு ஆணை பிறப்பித்தார்.
1928- நவம்பர் 7: ரிவோல்ட்(கிளர்ச்சி) ஆங்கில இதழைத் தொடங்கினார்.
1929- பிப்ரவரி: செங்கற்பட்டில் முதல் மாகாண சுயமரியாதை மகாநாடு, புரட்சித் தீர்மானங்கள் நிறைவேற்றம். சுயமரியாதை திருமணம் எனும் புதிய வாழ்க்கை ஒப்பந்த முறையை பெரியார் அறிமுகம் செய்து நடத்திக் காட்டினார். ஜாதிமறுப்பு -மத மறுப்பு - விதவை மறுமணத்தை ஊக்கப்படுத்தினார்.
1929:- மலேசியா சுற்றுப் பயணம்செய்தார். பினாங்கு துறை--முகத்தில் 50,000_க்கும் மேற்பட்டோர் திரண்டு வரவேற்றனர். ஈப்போ நகரில் தமிழர் சீர்திருத்த சங்கத்தில் மாநாட்டைத் துவக்கி வைத்து உரை.
1930: தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டமுன்வரைவை பெரியார் ஆதரித்தார்.
1932: கிரீன், துருக்கி, சோவியத் ரஷியா, ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், போர்த்துகல் நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து உலக அனுபவங்களுடன் திரும்பினார். 1933: நாகம்மை மறைவு; திராவிடன் இதழ் தொடர்பாக சிறைவாசம்; புரட்சி வார இதழ் தொடக்கம்; ஈரோடு சமதர்மத் திட்டம் உருவாதல் அரசு வெறுப்புக் குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
1934: புரட்சி இதழ் நிறுத்தப்பட்டு பகுத்தறிவு இதழ் தொடக்கம்.
1935: பெரியார் சமதர்மத் திட்டம் ஏற்கப்பட்டதால் நீதிக்-கட்சிக்கு ஆதரவு. விடுதலைப் பத்திரிகை பெரியார் பொறுப்பில் வந்தது.
1936: இந்தியை பொதுமொழியாக்குவதை எதிர்த்தார்.
1937: தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முதலில் எழுப்பினார்.
1938: இந்தித் திணிப்பை எதிர்த்துச் சிறை சென்றார். பெண்கள் மாநாட்டில் பெரியார் பட்டம் பெற்றார். டிசம்பர் 29-இல் சிறையில் இருக்கும்போதே நீதிக் கட்சிக்குத் தலை-வராகத் தேர்வு செய்யப்பட்டார். சோதனைக் குழாய் குழந்தை பற்றி உரையாற்றினார்.
1941: பெரியார் முயற்சியால் தென்-னிந்திய ரயில்வே ஓட்டல்களில் 20.03.1941_ ஜாதிபேதம் ஒழிந்தது.
1942: சென்னை ராஜதானி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்க இரண்டாம் தட-வை-யாக ஆளுநர் ஆர்தர் ஹோப் வேண்டு-கோளை மறுத்தார். பெயர்களில் ஸ்ரீக்கு பதிலாக திரு-அடைமொழி சேர்க்க, மாநாட்டில் தீர்மானித்து, மக்களைக் கேட்டுக்கொண்டார்.
1943: தந்தை பெரியாரும், - ஆல்பர்ட் அய்ன்ஸ்டினும்_- சமவயது, சமசிந்தனை விஞ்ஞானி என்பதை வெளிப்படுத்தினார். சோதனைக்குழாய் குழந்தை, செல்போன், உணவு மாத்திரைகள், ஆகாயக் கப்பல் (விமானம்), கம்பியில்லாத் தந்தி முதலானவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார்கள்.
1944: தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் எனும் நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றப்பட்டது.
1945: கருப்புச்சட்டைப் படை அமைத்தார். 29.04.1945இல் முதல் தொண்டராக கலைஞர் மு.கருணாநிதி தம்மைப் பதிவு செய்துகொண்டார்.
1947: ஆகஸ்ட்-15 சுதந்திர நாள் திராவிடருக்குத் துக்க நாள் என அறிவித்தார். அவற்றில் திராவிடர் மாநாடு கூட்டி திராவிட நாட்டுப் பிரிவினை உணர்ச்சி ஊட்டினார்.
1948: கருஞ்சட்டைப் படைக்குத் தடை, தூத்துக்குடி மாநாடு, இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம், கைது செய்யப்பட்டார்.
1949: மணியம்மையாரை வாழ்க்கைத் இணையராகப் பதிவு செய்தார்.
1951: வடவர் எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக கைது: வகுப்புரிமைக்கு ஆதரவாக முதன்முதலாக இந்திய அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.
1952: குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம். ஒரே சிறையில் அண்ணாவும் -_அய்யாவும்.
1953: மூடநம்பிக்கை ஒழிய பிள்ளையார் உருவ பொம்மைகள் உடைப்பு.
1955: இந்திய தேசியக்கொடி எரிப்புப் போராட்டத்தை அறிவித்தார்.
1956: ஜாதி ஒழிப்பு - இராமன் பட எரிப்புக்காக கைது செய்யப்பட்டார்.
1957: ஜாதி ஒழிப்பு - சட்ட எரிப்புப் போராட்டம், 3000 பேர் கைது, 6 மாதம்வரை சிறைவாசம். நிலக்கொடை இயக்கத் தலைவர் வினோபா பாவே ஈரோட்டில் பெரியாரைச் சந்தித்தார். தஞ்சையில் எடைக்கு எடை வெள்ளி.
1958: பெரியார் - லோகியா சந்திப்பு, உணவு விடுதிகளில் பிராமணாள் பெயர் அழிப்புப் போர்.
1959: வடநாட்டுப் பயணம், இராமாயணக் கண்டனக் கூட்டங்கள்
1960: தமிழ்நாடு நீங்கிய தேசப்படம் எரிப்புப்போர் -கைது.
1961: 12.03.1961 அன்று சுயமரியாதை மாநாட்டில் மனுநீதி, கீதை, இராமாயணம் முதலானவை கொளுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
1962: விடுதலை இதழின் ஆசிரியராக கி.வீரமணி எம்.ஏ., பி.எல்., அவர்களை (10.08.1962) வரவேற்றார்.
1963: காமராஜர் பதவி விலகுவது தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும், காமராசருக்கும் தற்கொலையாக முடியும் என முன்கூட்டியே தந்திமூலம் அவருக்கு அறிவித்தார்.
1964: நில உச்சவரம்புக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றக் கண்டன நாள் கூட்டங்கள் நடத்தினார்.
1965: வைக்கம் வீரர் பெரியார், கேரளாவில் 11.03.1965 அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
1966: நாடெங்கும் இராமாயணம் எரிக்கப்படச் செய்தார்.
1967: அண்ணா முதல்வராகி ஆட்சியைப் பெரியாருக்குக் காணிக்கையாக்குதல்; சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
1970: உண்மை இதழ் தொடக்கம்; யுனெஸ்கோ விருது வழங்கிப் பாராட்டியது. பகுத்தறிவாளர் கழகம் எனும் அமைப்பைத் தொடங்கினார். மாடர்ன் ரேஷனலிஸ்ட் எனும் ஆங்கில மாத இதழைத் தொடங்கினார். அறிவியல் அறிஞர் ஜி.டி.நாயுடு அவர்களுக்குத் தந்தை பெரியார் தலைமையில் சிறை திறக்கப்பட்டது.
1971: தமிழ்நாடு சட்டசபையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றம். பெரியார் தலைமையில் திமுகவை ஆதரித்துப் பிரச்சாரம். 183 இடங்களைக் கைப்பற்றி கலைஞர் முதலமைச்சரானார். சேலத்தில் மாநாட்டில் வெள்ளி சிம்மாசனம் பரிசாக பெரியாருக்கு வழங்கப்பட்டது.
1972: பெரியார் மீது செருப்பு, பாம்பு வீசப்பட்ட இடமான கடலூரில் 13.08.1972 பெரியார் சிலையை கலைஞர் திறந்துவைத்தார்.
1973: 95 ஆவது பிறந்தநாள் விழாவில் எம்.ஜி.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பணமுடிப்பை வழங்கினார். சென்னையில் சமுதாய இன இழிவு ஒழிப்பு மாநாடு _ உடல் பாதிப்பு - வேலூர் மருத்துவமனையில் அனுமதி 24.12.1973 அன்று மறைந்தார். சென்னையில் காவல் துறையினரின் வேட்டு முழக்கத்துடன் பெரியார் உடலுக்கு அரசுமுறை அடக்கம் தந்திட கலைஞர் ஆவன செய்தார். சென்னை வேப்பேரியில் பெரியார் திடலில் பெரியார் அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அன்றைய தினத்தை அரசு விடுமுறை நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
மதத்தின் பெயரால் நடக்கும் மூடத்தனங்கள் சாதிக் கொடுமைகள், மதக்கலவரங்கள் இவற்றை எதிர்த்து நாம் குரல் கொடுத்து போராட வேண்டும். 'தமிழ்நாடு தமிழருக்கே' என தமிழ்த் தேச நலனை முன்னிறுத்தி தன் இறுதிநாள்வரை வாழ்ந்த பெரியாரே 'தமிழ்த் தேசியத் தந்தை'யாவார். அவரது லட்சியத்தை நிறைவேற்ற வேண்டிய அரும்பணியை நாம்மால் முடிந்தவரை ஆற்றுவோம் என இந்நாளில் உறுதியேற்போம்.

Friday, September 11, 2009

புரட்சியில் பிறந்த கியூபா


வட அமெரிக்காவும்,தென் அமெரிக்காவும் இணையும் இடத்துக்கு மேலே கிழக்கு திசையில் கர்பியன் கடலில் அமைந்திருக்கும் தீவுநாடு கியூபா. இதன் தலைநகரம் ஹவானா. இந்த கம்யூனிச நாட்டின் தற்போதைய அதிபராக இருப்பவர் ரவுல் காஸ்ட்ரோ. கியூபா புரட்சியின் போது கொரில்லா படைத்தளபதிகளில் ஒருவரான இவர் முந்தைய அதிபர் பிடல்காஸ்ட்ரோவின் தம்பி ஆவார்.
இந்தியாவுக்கு வழி கண்டு பிடிக்க புறப்பட்ட கொலம்பஸ் வழியில் அமெரிக்காவை கண்டுபிடித்தது போலவே கியூபாவையும் கண்டு பிடித்தார். முதலில் பஹாமாவையும் சான்சல்வடார் தீவையும் கடந்து 1492-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் நாள் கியூபாவில் காலடி வைத்தார். கொலம்பஸ் கியூபாவில் ஸ்பெயினின் ஆதிக்கம் வருவதற்கு இவரே முக்கிய காரணம்.
அமெரிக்க ஆதரவாளராக இருந்த அதிபர் பாடிஸ்டாவின் கொடுங்கோல் ஆட்சியை ஆயுதப் புரட்சியின் மூலம் தூக்கி எறிந்த பிடல்காஸ்ட்ரோ 1959ம் ஆண்டு பிரதம மந்திரியானார். கியூபாவின் வளங்களை சுரண்டி வந்த அமெரிக்காவுக்காவை எதிர்க்கத் துவங்கினார். இவரை கொல்ல அமெரிக்க உளவுத்துறை எடுத்த அத்தனை முயற்ச்சிகளையும் முறியடித்தார். ஜனவரி 1959ம் ஆண்டு முதல் பிப்ரவரி 2008 வரை கியூபாவின் அதிபராக இருந்த பிடல்காஸ்ட்ரோ வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலக்குறைவின் காரணமாகவும் தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவை கியூபாவின் புதிய அதிபராக பதவி அமர்த்தினார்.
கியூபாவின் கொரில்லா முறை ஆயுதப்புரட்சி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், சேகுவேரா. அர்ஜெண்டினாவின் செல்வ குடும்பத்தில் பிறந்த சேகுவேராவின் இயற்பெயர் எர்னஸ்டோ சேகுவேராடி லா செர்னா என்பதாகும். தனக்கு சம்பந்தமே இல்லாத நாட்டின் புரட்சி யுத்தத்தில் பிடல்காஸ்ட்ரோவுடன் இணைந்து போரிட்டார். அதன் பின்னர் பிடல்காஸ்ட்ரோவின் தலைமையில் அமைந்த புதிய அரசாங்கத்தில் கொஞ்சகாலம் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றினார். அதன் பிறகு காங்கோ, பொலிவியா போன்ற நாடுகளின் புரட்சியிலும் பங்கு கொண்டார். பொலிவியாவில் 1967ம் ஆண்டு அக்டோபர் 7ம் நாள் அமெரிக்கா ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கியூபாவில் சோஷியலிஸ்ட் ரிபப்ளிக்கில் முறையிலான அரசு செயல்படுகிறது. காரல்மார்க்ஸ்,ஏங்கெல்ஸ்,லெனின்,ஜோஸ் மார்ட்டி ஆகியோரின் அரசியல் கொள்கைகளை பின் பற்றி கியூபாவின் அரசாங்கம் செயல்படுகிறது.

Saturday, September 5, 2009

ஜனநாயகச் சாமியார்கள்

எங்களை விட
எங்கள் நாட்டு
சாமியார்கள்தான்
ஜனநாயகத்தை
சரியாக
புரிந்து கொண்டிருக்கிறார்கள்...
அதனால்தான்
இங்கு சில
தந்திரசாமிகளின்
மந்திர வலைகளில்
எங்கள் மந்திரிமார்கள்
மயங்கி கிடக்கிறார்கள்...
சாமியார் மடங்களின்
சாய்வு மேசையில் - எங்கள்
சட்டவரவுகள்
சரி செய்யப்படுகின்றன...
அரசியல்வாதிகளை விட
ஆசிரமவாசிகள் அதிகமாய்
அதிகாரம் செலுத்துகிறார்கள்...
ஆட்சியாளர்கள் மாறலாம்
ஆனால்
ஆசியாளர்கள் மாறுவதில்லை...
எனவேதான்
ஆட்சியாளர்களை விட
ஆசிரமவாசிகளுக்கு
அதிக மரியாதை...
ஒன்று மட்டும் புரிந்தது
எதையும் புரிந்து கொள்ளாத
இந்தியனைத்தான்
இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்...

Wednesday, September 2, 2009

இளையோர்களின் கைகளில் தேசத்தின் விடுதலை

எந்தவொரு சமுதாயத்தின் எதிர்காலப் போக்கும், அதன் கலாச்சார,பொருண்மிய நிலைப்பாடுகளும் சமுதாய வளர்ச்சியும் அந்த சமுதாயத்தினைச் சார்ந்த இளையோரின் பங்களிப்பிலேயே முக்கியமாகத் தங்கியிருக்கின்றன. இது உலகின் அனைத்து சமுதாயங்களிற்கும் பொருந்தும்.ஆனால் ஈழத்தமிழர்கள் என்ற எமது இன சமுதாயத்திற்கு தற்போதைய நிலைமையில் தமிழ் இளையோர்களின் பங்களிப்பென்பது இன்றியமையாத தேவையாக மாறியிருக்கின்றது.
ஈழப்போராட்டமானது தற்போதைய இளையோர்களின் வளர்ச்சிக்காலங்களினூடேதான் கடந்து வந்திருந்தது. குண்டுச் சத்தங்கள் தொட்டில் தூக்கத்தினைக் கலைத்தபோது கண்முழித்தோம், பிஞ்சு வயதில் பதுங்கு குழிக்குள் தூங்கியெழுந்தோம். இரவோடிரவாக சொந்த ஊர்விட்டு இடம்பெயர்ந்தபோது இனம்புரியாத வலியை உணர்ந்தோம். அறியாத வயதில் அவையெல்லாம் ஏன் என்று புரியவில்லை. ஆனாலும் அந்த வலிகளின் வடுக்கள் மட்டும் இன்னும் அழியவேயில்லை.
கொஞ்சம் புரியும் வயதிலும் வலிகள் தொடர்ந்தன. ஆனாலும், ஏன் என்ற கேள்விக்கு முழுமையான பதில்கள் தெரிந்திருக்கவில்லை. பின்னர் வந்த காலங்களில்… முழுமையாக தெரிந்து கொண்டபோது, அதுவரைகாலமும் அனுபவித்து வந்த வலிகள் அனைத்தும் சேர்ந்து விடுதலை உணர்வாய் மாற்றம் பெற்றன. இவ்வாறான விடுதலை உணர்வு இன்றைய இளையோர்கள் அனைவர் மனத்திலும் என்றும் அணையாத தீயாக எரிந்துகொண்டுதான் இருக்கின்றது.
அந்த விடுதலையுணர்வை தலைவன் வழிநின்று களத்தில் காட்டியோர் புலிகள். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை உலகறியக் கொண்டுவந்தது புலிகளின் தீரமிக்க, தியாகம் நிறைந்த போராட்டங்களே. அத்தனை தீரங்களையும் செய்து காட்டியவர்கள் இளையோர்களே.
ஆனால் நடந்து முடிந்திருக்கும் வன்னிச் சமரின் பின் புலிகளை அழித்துவிட்டோம். இனிமேல் புலிகள் என்ற நாமமே இல்லாதொழிக்கப்படும் என சிங்கள அரசு அறிக்கைவிட்டு வருகின்றது. முப்பது வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டுவந்த ஆயுதப் போராட்டமானது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பது உண்மையே.
சில நாடுகளின் சதிவேலைகளும்,சர்வதேசத்தின் பாராமுகமும், சிங்களத்தின் கொலைவெறித்தனமான போரும் வன்னி மண்ணில் பேரழிவை ஏற்படுத்தியிருந்தன. இந்தப் பேரழிவுக்குள் தமிழர்களின் ஆயுதப் போராட்ட வலுவும் பெரும் பின்னடைவைச் சந்தித்து புலிகளும் அஞ்ஞாதவாசம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இதுவரைகாலமும் ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாக, பலமாக இருந்துவந்த புலிகளின் பின்னடைவிற்கு பிற்பாடு , அவர்கள் தொடர்ந்த தமிழினத்திற்கான போராட்டம் கேள்விக்குரியதாக மாறியிருக்கின்றது. ஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகங்கள் நிறைந்த போராட்டத்தின் இலட்சியப்பாதை தடம் மாறிவிடுமோ? என்ற ஐயப்பாடும் தற்போது உருவாகியுள்ளது.
ஆனாலும், முன்னதாகவே தமிழர்களின் போராட்ட பரிமாணங்கள் மாற்றமடைந்து புலம்பெயர்தேசங்களிலும் பரிணமிக்கத் தொடங்கியிருந்தன. தீர்க்க தரிசனமிக்க தமிழீழ தேசியத்தலைவரின் கடந்த மாவீரர்தின உரையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்மக்களை நோக்கி குறிப்பாக இளையோர்களை நோக்கித் தெரிவிக்கப்பட்ட கருத்தானது, புலம்பெயர் தேசங்களில் இனிவரும் காலங்களில் தொடரப்படும் போராட்டங்களில் இளையோர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தினையே குறித்து நிற்கின்றது. தாயகத்திலுள்ள இளைய தலைமுறையினரின் போராட்ட உணர்வுகள் அடக்குமுறைகளினால் அடக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் இளைய தலைமுறையினரின் முழு அளவிலான பங்களிப்பு அவசியமாகியிருக்கின்றது.
திட்டமிடல்களுடன் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்களில் இளையோரின் பங்களிப்பும் பெரியோர்களின் வழிநடத்தல்களும் ஒருங்கிணைந்து செயற்படுத்தப்படவேண்டும். இதுவரை நாட்களும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இளையோர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தன. அவர்களோடு பெரியோர்களும் தங்களது ஒத்துழைப்பினைக் கொடுத்திருந்தார்கள். இளையோர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்கள் சர்வதேசத்தின் கவனத்தினை பெருமளவில் ஈர்த்திருந்தன. அதன் விளைவாக அவர்களினது நிலைப்பாடுகளிலும் மாற்றங்களை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட நிலையில், அறவழிப் போராட்டத்திற்கான புதிய போராட்டப் பாதை திறக்கப்பட்டிருக்கின்றது. சர்வதேசத்தினை நோக்கி தமிழர்களது நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டிய காலச் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. வதை முகாங்களில் சிக்கித் தவிக்கும் உறவுகளை மீட்டுக் காப்பாற்ற வேண்டியது நமது கட்டாயக் கடமை. தாயகத்தில் நடந்த படுகொலைகளும், நடந்தேறும் துயரங்களும் அதனாலான வலிகளும் மற்றவர்களுக்கு தெரியாவிட்டாலும் நமக்கு நன்கே தெரியும். அந்த வலிகளும் புரியும். நமது இனத்தின் அவலங்களை உலகின் கண்களுக்கு வெளிக்கொணர வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடப்பாடும் கடமையுமாகும். நமது உணர்வெழுச்சிகொண்ட போராட்டங்கள் மூலம் அவை வெளிப்படுத்தப்பட வேண்டும்.
தமிழினத்தின் தாயகவிடுதலைப் போராட்டம் இளையோர்களின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், போராட்டத்தினை நிலைநிறுத்தி அதை மேலும் வீரியத்துடன் தொடர்ந்து நடத்தவேண்டிய கடப்பாடும் அவர்களின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. ஆயுதப் போராட்டமானது தமிழர்களை மிகவும் பலப்படுத்திய ஒன்றாக விளங்கியபோதும் அதுவே தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தினை சர்வதேசம் “பயங்கரவாதம்” என பொய்முத்திரை குத்தவும் காரணமாக அமைந்தது. புலிகளைப் பொறுத்தவரையில், நாங்கள் “பயங்கரவாதிகள்” இல்லை. அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடும் “விடுதலைப் போராளிகள்” என்பதை அனைத்துலகத்திற்கு எடுத்துக்கூறியும், செயலில் காட்டியும் அதனை நடைமுறையில் கடைப்பிடித்தும் வந்தனர். ஆனால்,சர்வதேசம் அதனை ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.
இன்றுவரைக்கும் ஈழத்தமிழர்களின் போராட்டம் நியாயமானது என்பதையோ அல்லது சிங்கள பேரினவாதிகளால் தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள், கொன்றொழிக்கப்படுகின்றார்கள் என்பதனையோ முழுமையாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக ஆதரவுக்குரல் கொடுக்க எந்தவோரு நாடும் முன்வரவில்லையென்பது தமிழர்களின் துரதிஷ்டம் என்றே கருதத் தோன்றுகின்றது.
ஈழ விடுதலைப் போராட்டத்தினைப் பொறுத்தவரையில் அதிகளவான இழப்புக்களைச் சந்தித்ததும் அதிகளவில் பாதிக்கப்பட்டதும் இளம் சமுதாயமே. கடத்தப்படுவோர், காணாமல் போவோர், கைது செய்யப்படுவோர், சுட்டுக்கொல்லப்படுவோர், சித்திரவதைப்படுத்தப்படுவோர் என அனைத்திலும் இளைஞர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றார்கள். அண்மையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் காணொளிக்காட்சியில்கூட அப்பாவித்தமிழ் இளைஞர்கள் படுகோரமாக சுட்டுப் படுகொலை செய்யப்படுவது அம்பலமாகியுள்ளது.
உண்மைகள் எப்பொழுதுமே உறங்கிவிடுவதில்லை என்பதற்கிணங்க… சிங்களக் கொலைவெறியர்களின் அட்டூழியத்தினை அப்பட்டமாக வெளிக்கொணர்ந்திருந்தது அந்தக் காணொளிப் பதிவு. இதைப்போன்ற பல ஆதாரங்கள் இன்னும் வரக் காத்திருக்கின்றன. ஆனால், இதுபோன்ற ஆதாரங்களை சாட்சியங்களாக்கி உலகத்தின் கண்முன் நிறுத்தி, தமிழர்களுக்கான நீதி பெறப்படுவதற்கான முயற்சிகள், முன்னெடுக்கப்படும் போராட்டங்களினால்தான் சாத்தியப்படக் கூடியனவாக இருக்கும். இளையோரினால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம், பரப்புரைப் போராட்டம், நடைப்பயண கவனயீர்ப்பு,சிங்களத்தின் தமிழின அழிப்பினை வெளிக்கொணரும் பிரச்சாரப் போராட்டம் என்பன புலம்பெயர் தேசங்களில் பெரும் பாதிப்பினை உண்டுபண்ணி சாதகமான விளைவுகளை உருவாக்கத் தொடங்கியுள்ளன.
செய்தி ஊடகத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை என்பவற்றிலும் இளையோரின் பங்கு அதிகமாக இருப்பதனால், போராட்டங்கள் தொடர்பான தகவல்களும் விளக்கங்களும் அனைத்துலகத்திற்கும் இலகுவாக சென்றடையக்கூடியதாக அமைந்திருக்கின்றது.கல்வியறிவு, செயற்திறன், வேகம், விவேகம், விடுதலையுணர்வு என அனைத்திலும் மேலோங்கி நிற்கும் இளந்தமிழ் சமுதாயத்திற்கு அனுபவமிக்க,பக்குவமிக்க, விடுதலைப் போராட்டம் தொடர்பான ஆழ்ந்த சிந்தனையுள்ள பெரியவர்களினது ஆதரவும் வழிகாட்டலும் கிடைக்குமாக இருந்தால் அனைத்துமே சாத்தியப்படக் கூடியதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
எங்கள் செல்வங்களே! ஈழத் தமிழ் இளையோரே!
உங்கள் ஈழத் தமிழினத்தின் எதிர்கால வரலாற்றை தீர்மானிக்கப் போவது நீங்களும் உங்கள் உணர்வெழுச்சிமிக்க போராட்டமும்தான்.
ஆயுதமேந்தி போராட வேண்டிய அவசியம் இப்போதில்லை. உங்களால் முடிந்தவரைக்கும் அறவழிப் போராட்டத்தினை உணர்வெழுச்சியோடு அறிவுவழி கொண்டு முன்னெடுங்கள். தற்போதைய காலத்தின் கட்டாயத்தில், இதனை மட்டும்தான் நாம் மேற்கொள்ளமுடியும். இத்தருணத்தில், இதை சரிவர மேற்கொள்வோமானால் எம் விடுதலைக்கான காலம் வெகுதொலைவில் இருக்காது.
உறவுகளே! உங்கள் சகோதரங்களின், மாவீரர்களின் இலட்சியக் கனவினை வீணாக்கி விடாதீர்கள். அவர்களின் தியாகங்கள் உங்களுக்கானதே. உங்களுக்காக, உங்களின் உரிமை தேசத்திற்காக தங்கள் இன்னுயிரையே தியாகம் பண்ணியவர்கள் இந்த மாவீரர்கள். அந்த தன்னலமற்ற ஆன்மாக்களின் தாயகக் கனவினை ஈடேற்ற வேண்டிய கடமை நம் முன்னே வைக்கப்பட்டுள்ளது. நம் தாய் மண்ணுக்காக நம்மால் முடிந்தளவுக்கு தாயகக் கடமையை ஆற்ற வேண்டிய சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. இதையும் நாம் தவற விடுவோமானால் “நான் தமிழன்” என்று சொல்லிக்கொள்ள அருகதையற்றவர் ஆகிவிடுவோம். அவர்களை விதைத்த அந்த புனித பூமியில் கால் வைக்கக்கூட உரிமையற்றவர்கள் ஆகிநிற்போம்.
இனிவரும் காலங்களை எமக்குரியதாக மாற்றிக்கொள்ளவேண்டும். இப்பொழுதும் போராடாமல் இருப்போமானால், எம் உறவுகள் எதிரியின் கைகளினால் சின்னாபின்னமாக்கப்பட்டு அழிக்கப்படுவதையோ, இவ்வளவு காலமாய் செய்த அத்தனை தியாகங்கள்,போராட்டங்கள் அனைத்தும் வீணடிக்கப்படுவதையோ, தமிழர் தாயகம் சிங்கள வல்லூறுகளின் கூடாரமாகுவதையோ யாராலும் தடுக்க முடியாததாகிவிடும். உயிரைக் கொடுத்து போராடிய மாவீரர்களின் கனவை நனவாக்க நம் உணர்வைக் கொடுத்து போராடுவோம்.
இழப்புக்களின் வலிகளை உணர்வுகளாக்கி மீண்டும் உயிர்த்தெழுவோம்!
துவண்டு போய் இருந்த நிலைமாற்றி நிமிர்ந்தெழுவோம்!
உறவுகளைக் காக்க உணர்வெழுச்சியோடு பொங்கியெழுவோம் !
இறுதிவரை… போராடுவோம்!
தமிழரிற்கு நிரந்தரமான விடுதலை கிடைக்கும்வரைக்கும்… இலட்சியமான ஈழ தேசத்தினை அடையும்வரைக்கும்… நமது போராட்டம் தொடரும், அதுவரைக்கும் ஈழத் தமிழினம் ஓயாது என்பதனை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்துவோம்!
இறுதியில்…. வெற்றி எமக்கே!
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
- பருத்தியன் -

Sunday, August 30, 2009

ஈழத்தில் என்னாதான் நடக்கிறது

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற கண்ணி வெடிகள் தடையாக இருக்கின்றன. அவற்றை அகற்றிய பின்னர்தான் மக்களை மீளக் குடியமர்த்த டியும் எனக் கூறும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம்,
கிளிநொச்சியிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும், இராணுவத்திற்கும், பௌத்த கோவில்களை அமைப்பதற்குமான பாய கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

ஓமந்தையில் இருந்து பளை வரை ஏ9 பாதையின் இருமருங்கிலும் 150 யாருக்கு மேற்பட்ட பிரதேசத்தில் இருந்த சகல கட்டிடங்களும் தரை மட்டமாக்கப்பட்டு அவை இருந்த இடமே தெரியாமல் செய்யப்பட்டு வருகின்றது.சைவத்தையும் தமிழையும் பாதுகாத்த தமிழ் மக்களின் கலாசார சின்னமான யாழ். குடாநாட்டின் முகப்பான ஆனையிறவில் பிரமாண்டமான புத்த விகாரை கட்டப்பட்டு வருகின்றது. இங்கு எந்தக் கால கட்டத்திலும் சிங்கள மக்கள் வாழ்ந்ததில்லை. புத்த கோவிலும் இருந்ததில்லை.

இராணுவ காம் மட்டுமே இருந்தது. இன்று பௌத்த, சிங்களத்தின் ஆக்கிரமிப்பின் வடிவமாக யாழ்ப்பாணத்து நுழைவாயிலில் புத்த கோவில் கட்டப்பட்டு வருகின்றது.கிளிநொச்சியில் மிகச் சிறிய ஒரு நிலப்பரப்புக்குள் இருந்த புத்த கோவில் தற்போது பாரியளவில் கட்டப்பட்டுள்ளதுடன், அக்கோவில் கட்டுவதற்காக சுற்றிவர இருந்த கடைகள், வீடுகள் யாவும் அழிக்கப்பட்டு அவையும் புத்த கோவிலுடன் இணைக்கப்பட்டுள்ளன.இவை ஒரு புறமிருக்க, தமிழ் மக்களின் கலை மரபுகளை வெளிப்படுத்தும் கிளிநொச்சி மாவட்ட கலாசார மண்டபம், இந்துப் பேரவைக் கட்டிடம், பனம் பொருள் கைப்பணி மண்டபம் போன்ற அனைத்தும் மண்ணோடு மண்ணாக அழிக்கப்பட்டு, அங்கிருந்த கலாசாரச் சின்னங்கள் யாவும் அகற்றப்பட்டும் அழிக்கப்பட்டுள் ளன. பல கோடி பெறுமதியான இம்மண்டபங்களும் கலாசாரச் சின்னங்களும், அழிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கருகில் 350 கடைத்தொகுதிகளைக் கொண்ட கிளிநொச்சி பொதுச்சந்தை, எண்ணெய் நிரப்பும் நிலையம், போக்குவரத்து டிப்போ போன்ற சகல இடங்களும் கையகப்படுத்தப்பட்டு அங்கு யுத்தத்தில் கொல்லப் பட்ட சிங்கள இராணுவத்தினருக்கான சமாதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதனையும் விடக் கொடுமையான நடவடிக்கை கிளி நொச்சி பிரதேச சபைக்கு சொந்தமான இயற்கை பூங்கா வில் இருந்த பெறுமதி வாய்ந்த பல மரங்கள் (அம்மண்ணுக்கே சொந்தமான பல மரங்கள் அங்கு வளர்க்கப்பட்டன. அவை வெட்டி எடுக்கப்பட்டுள்ளதுடன் அப்பூங் காவிற்கு நடுவில் இராணுவத்தினருக்கான நினைவு ஸ்தூபி ஒன்றும் கட்டப்பட்டு வருகின்றது. இவற்றைச் சுற்றி அமைக்கப்பட்டுவரும் மதில்கள் தலதா மாளி கையைச் சுற்றியுள்ள மதில் போன்ற அமைப்பில் கட்டப்பட்டு வருகின்றது.இப்பூங்காவுக்கு பின்புறமாக கட்டப்பட்டு வந்த நூல் நிலையம் பாயளவில் சேதமாக்கப்பட்டுள்ளது.மொத்தத்தில் கிளிநொச்சி நகரத்தின் மையப்பகுதிகள் யாவும் அகற்றப்பட்டு, தமிழன் கலாசார மண்டபங்களும் இடிக்கப்பட்டு அங்கு இராணுவ நினைவாலயம் பௌத்த கோவில்களும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் பட்சத்தில் அங்கு சந் தையில்லை. பஸ் நிலையமில்லை. பொழுது போக்கு மண்டபம் இல்லை. பூங்கா இல்லை. நூல் நிலைய மில்லை. இவை யாவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. 1981இல் யாழ்ப்பாண நூல் நிலையம் ஏறத்தாழ ஒரு இலட்சம் புத்தகங்களுடன் சிங்கள இன வாதிகளால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதுடன் சிங்கள இனவாதிகளால் ஓர் கலாசாரப் படுகொலைஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் அடுத்த கட்ட கலாசாரப்படு கொலைகள் கிளிநொச்சியில் அரங்கேறி வருகின்றன.இது தவிர கிளிநொச்சி பொன்னம்பலம் வைத்தியசாலையில் இருந்து கந்தசாமி கோவிலை உள்ளடக்கி கரடிப்போக்கு சந்திவரை பாய இராணுவத்தளத்துக்கான பகுதியெனவும் அதியுயர் பாதுகாப்பு வலயமெனவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு ஆக்கிரமிப்பு வேலைகளுக்கும் கண்ணிவெடிப் பிரச்சினை கிடையாது. மக்கள் குடியேற வேண்டுமாயின் கண்ணிவெடி என அரசாங்கத்தால் புரளி கிளப்பி விடப்படுகிறது.ஏ9 வீதியிலுள்ள அரச மரங்களுக்குக் கீழ் புதுப்புது புத்தர் கோவில்கள் உருவாகி வருவதுடன், பாய கண்காணிப்பு கோபுரங்களும் உருவாகி வருகின்றன.மக்கள் மீளக் குடியேறும் பொழுது அவர்களது வீடுகள் அவர்களுக்கு கிடைக்காது. அவர்களது பொதுக் கட்டிடங்கள், கோவில்கள் எதுவுமே அவர்களுக்கு கிடைக்காது. மக்கள் மீளக்குடியேற்றப்பட்டால் அவர்களது எதிர்ப்புக்கு மத்தியில் இவற்றைச் செய்ய முடியாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் மக்கள் இன்னும் காம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.வன்னியை இராணுவ ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வந்து ஒட்டு மொத்த வடக்கு கிழக்கை சிங்கள பௌத்த பூமியாக மாற்றுவதே அரசின் கொள்கை என்பதை வன்னி நிலமைகள் துலாம்பரமாக எடுத்துக் காட்டுகின்றன. அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கு சிங்கள ஜனநாயக ற்போக்கு புத்தி ஜீவிகளும், சர்வதேச சகம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டிய காலகட்டமிது.

Tuesday, August 25, 2009

தமிழீழ சரித்திரத்தில் எழுதப்பட்ட எங்கள் மாவீரர்கள்

சிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக்காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள். அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள். இவர்களது தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போக ஈழத் தமிழர்கள் யாரும் அனுமதிக்கமாட்டார்கள்.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலைப் போராட்டம் கசப்பான முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்ட போதும், ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தியேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தையே சிங்கள அரசு திணித்து வருகின்றது.
சிங்கள நரி ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் தேசியத் தலைவர் அவர்கள் ஒரு நேர்காணலின் போது ‘ஜெயவர்த்தன உண்மையான பெளத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியமே இருந்திருக்காது’ என்று கூறியிருந்தார். இந்த யதார்த்தம் இன்றுவரை அப்படியே தொடர்வதையே காணக்கூடியதாக உள்ளது.
இலங்கையின் ஆட்சியைப் பிடிக்கக்கூடிய எந்த சிங்கள அரசியல்வாதியும் இந்த யதார்த்தத்திற்கு வெளியே வந்தது கிடையாது. வரப்போவதும் கிடையாது. இதுவே ஈழத் தமிழர்கள் தமது தாயகத்தை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் அவர்களுக்கு வழங்கி வருகின்றது. மாற்றமே இல்லாத சிங்கள மேலாதிக்க மனப்பான்மையே தமிழர்களை மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தை நோக்கித் தள்ளும் என்பது மறுதலிக்க முடியாத யதார்த்தம்.
ஆயுதம் ஏந்திய ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகப் பட்டியலிட்டு, விடுதலைப் புலிகள் மீது தடை விதித்த அமெரிக்கா கூட தற்போது ஈழத் தமிழர்களின் அவலங்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. மேற்குலகின் பல நாடுகளும் ஈழத் தமிழர்களுக்கான நிர்ப்பந்தத்தைப் புரிந்து கொண்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்பதற்கான போர் என உலக நாடுகளுக்கு அறிவித்த இலங்கை அரசு, இறுதி யுத்தத்தின்போது தப்பிச் சரணடைந்த தமிழ் மக்களை நடாத்தும் விதம் மனிதாபிமானமுள்ள எந்தச் சமூகத்தினாலும் அங்கீகரிக்க முடியாத கொடுமையாகவே பார்க்கப்படுகின்றது.
இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய நாசிப் படைகளும், ஜப்பானியப் படைகளும் தோற்றுப் போன பின்னர் அந்த மக்கள் வெற்றி கொண்டவர்களால் தண்டிக் கப்படவில்லை. மாறாக, அவர்களது மனங்களை வெல்லும் முகமான விரைந்த நிவாரணங்களும், அழிவுகளுக்கான பரிகாரங்களும் வெற்றி கொண்ட தரப்பினால் வழங்கப்பட்டு, அவர்களது அமைதி வாழ்வுக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டது.
இலங்கையின் நிலவரமோ இதற்கு நேர் எதிராகவே உள்ளது. பல்லாயிரக் கணக்கான தமிழர்களை கொடிய ஆயுதங்கள் கொண்டு சிதைத்துக் கொன்றுவிட்டு, உயிரோடு புதைத்துவிட்டு அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடியதை ஒட்டுக்குழுவினர்கள் கூட ரசித்து இருக்க மாட்டார்கள். ஒண்டுவதற்கும், புகலிடம் வழங்குவதற்கும் உறவுகள் இருக்கும் நிலையில், கண்ணி வெடிகளைக் காரணம் காட்டி, மூன்று இலட்சம் தமிழர்களை வதை முகாம்களில் வைத்துக் கொடுமைப்படுத்துவதை சிங்களவரைத் தவிர எந்த மனித குலமும் ஏற்றுக் கொள்ளாது.
பிறந்த குழந்தை முதல், இறுதிக் காலத்தில் வாழும் பெரியவர்கள் வரை வவுனியா வதை முகாம்களின் முட்கம்பி வேலிகளுக்குள் வாழ்வைத் தொலைத்துவிட்டு ஏங்கித் தவிக்கின்றார்கள். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான யுவதிகளும், இளைஞர்களும் எதிர்காலம் தெரியாத இருட்டில் வாழ்கின்றனர்.
வவுனியா முகாம்களிலிருந்து நாளாந்தம் பலர் கடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவர்கள் திரும்பி வருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.இந்த அவல வாழ்க்கை தொடரும் நிலையில், இலங்கைத் தீவில் அமைதி என்பது எப்போதுமே சாத்தியம் இல்லை. சிறுபான்மைத் தமிழினத்தின் அவல வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து, அவர்கள் கெளரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ வகை செய்யப்படாதவரை சிங்களத்தின் வெற்றி என்பது நீண்டு செல்லப் போவதில்லை.
சிங்களத்தின் இனவெறியும், மேலாதிக்க சிந்தனையும் இனிமேலும் மாற்றங் கொள்ளத் தவறினால், தமிழீழக் கருவில் உருவாகும் அத்தனை குழந்தைகளும் விடுதலைப் புலிகளாகவே பிறப்பார்கள் என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்று சொல்வதால் மட்டும் நெருப்பு குளிர்ந்துவிடப் போவதில்லை. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்று மார் தட்டுவதால் மட்டும் விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்து விட முடியாது.
‘விடுதலைப் புலிகள்’ என்பது எதிர்வினை. சிங்கள தேசத்துக் கொடூரங்களின் அறுவடை. சிங்கள அரச பயங்கரவாதத்தின் பிரசவம். தமிழீழ மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் மீண்டும் பலங்கொண்டு எழுவதற்குரிய அத்தனை காரணங்களையும் சிங்கள தேசம் அப்படியே பாதுகாக்கவே விரும்புகின்றது. ஈழத் தமிழர்களுக்கு எதையுமே வழங்காமல், போரின் வெற்றி மூலம் அவர்களை அச்சுறுத்துவதால் மட்டும் அமைதியை ஏற்படுத்திவிட முடியாது.
சிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக் காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள். அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள். தமிழீழ விடுதலையை வென்றெடுக்க அவதரித்த அக்கினிக் குஞ்சுகளாக அவர்களை நெஞ்சில் சுமக்கின்றார்கள்.
இவர்களது தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போக ஈழத் தமிழர்கள் யாரும் அனுமதிக்கமாட்டார்கள். முழத்திற்கு ஒரு இராணுவமும், வீதிக்கு ஒரு சோதனை முகாமும் எனப் படை விரிவாக்கம் மட்டுமே ஈழத் தமிழர்களைச் சிறை வைக்கப் போதுமானது அல்ல. இலங்கையில் வாழும் அத்தனை சிங்களவரும் தம் மனச் சிறைகளிலிருந்து வெளியே வரவேண்டும். தமிழர்களைச் சக மனிதர்களாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பக்குவம் வராதவரை இலங்கைத் தீவில் அமைதி என்பது வெறும் கனவாகவே முடியும்.
சிங்கள தேசத்தில் ஆயுதக் கிளர்ச்சியை அறிமுகப்படுத்திய ஜே.வி.பி.யினர் சிங்களவர்கள் என்பதால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டு, இன்று அரசியல் தலைவர்களாக வலம் வருகின்றார்கள். இந்த ஜே.வி.பி. கிளர்ச்சிக்கு ஆதரவானவர்கள் சிங்களவர்கள் என்பதால் மன்னிக்கப்பட்டு சமூக வாழ்வில் இணைக்கப்பட்டார்கள். காரணமற்ற ஆயுதக் கிளர்ச்சியை நடாத்தியவர்கள் சிங்களவர்கள் என்பதால் அவர்கள் என்றுமே வதை முகாமில் சிறை வைக்கப்படவில்லை. ஆனால், நியாயமான அத்தனை காரணங்களையும் கொண்டுள்ள தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் சிங்கள தேசத்திற்கு பயங்கரவாதமாகவும், தமிழர்கள் பயங்கரவாதிகளாகவும் தெரிகின்றார்கள். தமிழர்களின் அழிவும், இழப்பும் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அள்ளி வழங்குகின்றது.
சிங்கள தேசத்தின் வெற்றிக் கொண்டாட்டமும், தமிழர் மீதான வதை முகாம் கொடுமைகளும், அச்சுறுத்தல்களும், கடத்தல்களும், படு கொலைகளும், காணாமல் ஆக்குதல்களும் முன்னரை விடவும் பலமான எதிர்வினைகளை உருவாக்கியே தீரும். அந்த எதிர்வினை, ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, உலகில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஒன்றிணைக்கும். அந்த மாபெரும் தமிழர் எழுச்சி ஈழத் தமிழர்களை வெகு விரைவில் விடுவிக்கும். அதுவே விடுதலைப் புலிகளின் தியாகத்திற்கு உலகத் தமிழினம் வழங்கும் கவுரவமாக அமையும்.

Thursday, August 20, 2009

அழுக்குருண்டை பிள்ளையார் ஆண்டவனா சொல்லுங்க???


அழுக்குருண்டை பிள்ளையார் ஆண்டவனா சொல்லுங்க???

களிமண்!களி மண்ணால் செய்யப்பட்ட, இரசாயனக் கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்குப் பயன்படுத்தவேண்டும் என்றும், இத்தகு பொம்மைகளையே நீர் நிலைகளில் கரைக்கவேண்டும் என்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.உண்மையிலே விநாயகர் பொம்மைக்குச் சக்தி இருந்தால் இதுபோன்ற நிபந்தனைகளை ஓர் அரசால் விதிக்க முடியுமா?
சிறிய வயதில் குழந்தைகள் விளையாடும் பொம்மை விளையாட்டு, பெரியவர்களாக ஆன பிறகும்கூட அவர்களை விடுவதில்லை. அதில் ஒன்றுதான் இந்தப் பிள்ளையார் விளையாட்டு.இரசாயனக் கலவை பிள்ளையாரை நீர் நிலைகளில் கரைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று கூறுவது கூட ஒருவகை நாத்திகம்தான்.சுற்றுச்சூழலை மட்டுமா பாதிக்கிறது இந்தப் பிள்ளையார் உள்ளிட்ட கடவுள்களின் பட்டியல் மனிதனின் அறிவையும் அல்லவா பாழ்படுத்துகிறது.இந்தப் பிள்ளையாரிடம் தோப்புக் கரணம் போட்டால் எந்தவித விக்னமும் இல்லாமல் நினைத்த காரியம் நிறைவேறுமாம். அதனால்-தான் விக்னேஷ்வரர் என்று அதற்கு இன்னொரு பெயராம்.தேர்வுத் தாளில் பிள்ளையார் சுழி போட்டு எழுதும் மாணவர், மாணவிகள் எல்லாம் நூற்றுக்கு நூற மதிப்பெண்கள் வாங்குவது ஒருபுறம் இருக்கட்டும்; குறைந்தபட்சம் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களையாவது வாங்குவர் என்று உத்தரவாதம் கொடுக்க முடியுமா?கணக்குப் பாடத்தில் பிள்ளையார் சுழிபோட்டு எழுதினால், அது இரண்டு என்று நினைத்துக்கொண்டு தவறான விடை என்று விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் X - குறி போடவும் வாய்ப்புண்டு.பொதுவாகப் பிள்ளையார் பிறந்ததே பார்வதி தேவியாரின் அழுக்கில்தானே! இது எவ்வளவுப் பெரிய கேடு!அழுக்குக்குப் புனிதத்தைக் கற்பிக்கும் கேடுகெட்டதனம் இந்த இந்து மதத்தைத் தவிர வேறு எங்குண்டு?அழுக்கிலிருந்து தோன்றிய பிள்ளையார் தான் நமது முக்கிய கடவுள் என்று பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தால் பிள்ளைகள் மனதில் என்ன தோன்றும்? அழுக்கை விரும்புமா வெறுக்குமா? சோப்புப் போட்டுக் குளிப்பதுகூட குற்றம் என்ற எண்ணம்தானே வரும்?
பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் ஆகிய நான்கைக் கலந்து கொடுத்தால் பிள்ளையார் சங்கத் தமிழ் மூன்றையும் கொடுப்பார் என்று பிள்ளைகளைப் பாட வைத்தால் பிள்ளைகள் உருப்பட்ட மாதிரிதான். சங்கத் தமிழ் என்ன சுண்டலா, அள்ளி அள்ளிக் கொடுக்க?சின்ன வயதிலேயே பிள்ளைகளின் மூளையை இப்படிக் கிள்ளினால், அவர்களின் நிலை என்னவாகும்?விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் சொன்னால் போதாது! முதலில் இது மாதிரி அசிங்கமான அழுக்கைக் கடவுளாக்கும் புராணக் கசுமாலங்களை பிள்ளைகளின் மூளைகளைக் குப்பைத்தொட்டி என்று நினைத்துக் கொட்டுவதைத் தடுக்கவேண்டாமா?அழுக்குருண்டை பிள்ளையாரு ஆண்டவனா சொல்லுங்க! மண்ணுருண்டை பிள்ளையாரு மகேசனா சொல்லுங்க!