Tuesday, May 18, 2010

நாம் தமிழர் கட்சி: புலிக்கொடி ஏற்றி வீரவணக்கம்






இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சித் துவக்கவிழா செவ்வாய்க்கிழமை மாலை மதுரையில் நடந்தது. பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக உதயமானது.

செவ்வாய்க்கிழமை மாலை, மதுரை ரிங் ரோடு அருகே உள்ள மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் நாம் தமிழர் கட்சி, பாயும் புலி கொடியோடு உதயமானது.


மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மற்றும் காந்திய அரசியல் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தனர்.


பின்னர், ஈழப் போர்க்களத்தில் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை நீத்த மக்களுக்கும் போராளிகளுக்கும் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அடுத்து, சீமான் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதி மொழியை சீமான் படிக்க, தொடர்ந்து கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானோர் அதைத் திருப்பிச் சொன்னார்கள்.

Sunday, May 16, 2010

வித்தாகிய எம் பிள்ளைகளை மறந்தோம்; மடிந்த எம் மக்களை மறந்தோம்; மொத்த ஈழத்தையுமே மறந்தோம்; இருப்பவரின் எதிர்காலம் கருதியாவது நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டாமா?




ஆயுதப் போராட்டம் ஓய்ந்து ஆண்டொன்றை எட்டி நிற்கிறது. எத்தனையோ துன்பங்கள், துயரங்களை கடந்தும் எந்தக் குறிக்கோளையும் எட்டாமலே இறுதி முடிவை எட்டிவிட்டது ஆயுதப் போராட்டம். கடந்த வருடம் இதே காலப்பகுதியில் வன்னி மண்ணில் அரங்கேறிய கொலை வெறியாட்டம், நம் இனத்தின் வாழ்வாதார ஆணி வேர்களையே அடியோடு சாய்த்துவிட்டது.


மூன்று லட்சம் மக்களின் உயிர்களோடு விளையாடியது இந்த உலகம். மனித குலத்தின் பண்புகளுக்குள் அடங்காத அரக்கத்தனத்தை இலங்கை அரசும், அதன் படைகளும் தமிழ் இனத்தின் மேல் கட்டவிழ்த்து விட்டபோது இந்த உலகமே கைகட்டிப் பார்த்து நின்றது. ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் உண்மையான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக எடைபோட்டு, எப்படியும் அடக்க வேண்டும் என்ற ஒரு கோணத்திலேயே சிந்தித்தது இந்த உலகம். ஆண்டாண்டு காலமாக ஒரு கொடிய அரசின் அடக்கு முறையால் அல்லலுறும் மக்களைப் பற்றி அவர்கள் அக்கறைப்படவே இல்லை. அரசுக்கு அரசு என்ற ஆதரவுத் தளத்திலேயே அவர்கள் நின்றிருந்தார்கள்.

உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட அகிம்சைப் போராட்டங்கள் தோற்றுவிட்ட நிலையிலேயே ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதும், ஆயுத சமபலத்தின் வாயிலாகத்தான் பேரம் பேசல் மூலம் உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்ற யதார்த்த நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டதும், அதற்கான கட்டமைப்புகள் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டதும் வரலாறாகிவிட்டன. ஒரு நாட்டுக்குத் தேவையான அத்தனை கட்டமைப்புகளையும் குறிப்பிட்ட காலம்வரை தம்மிடம் வைத்திருந்தவர்கள் புலிகள். பொலிஸ் நிர்வாகம், நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாகம், தரைப்படை, கடற்படை, விமானப்படை என்று அத்தனையும் கொண்ட ஒரு அரச நிர்வாகம் இறுதிக் காலம் வரை இயங்கி வந்ததை எவரும் மறந்துவிட முடியாது. அப்படிப்பட்ட ஒரு தனித்துவத்தை எட்டுவது அவ்வளவு இலகுவான விசயம் அல்ல என்பதை இந்த உலகமே அறிந்திருந்தது. ஆனாலும், அந்த வலிமையை பெற்றுக் கொண்டதனால் ஏற்பட்ட அதீத நம்பிக்கைதான் புலிகளின் வீழ்ச்சிக்கு வித்திட்டதோ! என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.

புலிகளை அழித்தது சர்வதேச பயங்கரவாதம்!

புலிகளின் வளர்ச்சியை மேற்குலகமும், இந்தியாவும் விரும்பவில்லை என்பதன் விளைவே புலிகளின் வீழ்ச்சியாகும். தமிழ் மக்களின் போராட்ட நியாயங்களை புரிந்து கொண்டாலும் கூட புலிகள் போன்ற ஒரு கட்டுக்கோப்பான, அதிசக்தி வாய்ந்த, வசதி படைத்த ஒரு இயக்கத்தை ஆதரிக்க அவர்கள் மட்டுமல்ல இந்தியாகூட தயாராக இருக்கவில்லை. அதனால்தான் ஆயிரக் கணக்கான மக்களை இலங்கை அரசு கொன்றொழித்த போதும், இறுதிநேரத்தில் புலிகள் முற்றாக சிதைவடையும்வரை இவர்கள் பார்த்து நின்றார்கள். மகிந்த அரசின் அலட்சியப் போக்கையும், அதிகார வெறியையும் இப்போது உணர்ந்துகொண்டு, போர் குற்றம்பற்றி ஓலமிடும் மேற்குலகம், அன்று தன் நெற்றிக் கண்ணை திறந்திருந்தால், எத்தனையோ உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். வெளிநாடுகளில் வாழும் எம்மைப் பொறுத்தவரை, பத்து லட்சம் தமிழரை வாழ வைப்பவர்கள் என்ற நன்றிக் கடனுக்காக இவர்கள் செய்த துரோகத்தை மறக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

கொடூரத்தின் உச்சம்!

கடந்த வருடம் இதே காலப் பகுதியில் தமிழனுக்கு நடந்ததை போன்ற கொடுமைகள் வேறு எந்த ஒரு இனத்துக்குமே இந்த நூற்றாண்டில் நடக்கவில்லை என்று சொல்லும் அளவுக்கு அராஜகத்தின் உச்சம் இலங்கையில் அரங்கேறியது. மூன்று லட்சம் மக்களை ஒரு மூலைக்குள் ஒதுங்க வைத்து பட்டினி போட்டு, குண்டுகளை வீசி மரணிக்கவும், உடல் அவயவங்களை இழக்கவும், கர்ப்பிணி தாய்மாரும், சிறுகுழந்தைகளும், வயோதிபர்களும் உடல் சிதறி மாண்டு போகும்படியான கொடூரத்தை இலங்கைப் படைகள் செய்வது தெரிந்தும் பார்த்து நின்றது இந்த உலகம். ஆயிரக் கணக்கில் மண்ணோடு மண்ணாக உயிரோடு மாண்டுபோன எமது மக்களை நினைக்கையில் உள்ளம் பதறுகிறது. என்ன பாவம் செய்தார்கள் நம் மக்கள்? உரிமையைத் தாருங்கள் என்று கேட்டுப் போராடியதற்கா இந்தத் தண்டனை. புலிகளை வென்றதாக வீரம் பேசுகிறது சிங்கள அரசு. அது உண்மை தான், மறுப்பதற்கில்லை. ஆனால் தனித்து நின்றா வென்றீர்கள்? பயங்கரவாதம் என்ற உங்கள் பொய்யான வார்த்தைகளை நம்பி உலக வல்லரசுகளே உங்கள் பின்னால் நின்றனவே. ஒரு சிறிய இயக்கத்தை அழிப்பதற்கு இத்தனை நாடுகளின் உதவி உங்களுக்கு தேவைப்பட்டதே! நேரடியாகவே உங்களோடு அயல்நாட்டு இராணுவம் களத்தில் நின்றதே! தனித்து நின்று வென்றீர்கள்? அன்னியப் படைகளின் உதவியோடும், ஆள் கொல்லி ஆயதங்களோடும், ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்துத்தானே இறுதி வெற்றியை நீங்கள் பெற்றீர்கள். அதிஉச்ச அழிவுகளை செய்தாவது வெற்றி பெறவேண்டும் என்ற அசுரத்தனமான உங்கள் இனவாதச் சிந்தனைதான் உங்களை வெல்ல வைத்திருக்கிறது. நீங்கள் தமிழ் மக்களை கொன்றதிலும் பார்க்க, அதிக அளவு சிங்களப் பொதுமக்கள் இறக்கும் நிலை இறுதி நேரத்தில் உருவாக்கப்பட்டிருந்தால், போரின் திசை மாறியிருக்கும் என்பதை மார்தட்டுபவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

வன்னிப் பெருநிலம் சிறுபான்மை நிலமாகிறது!

எது எப்படியோ, போர் முடிந்துவிட்டது! புலிகள் இலங்கையில் இல்லை என்றாகிவிட்டது. அப்படியிருந்தும் தமிழ் மக்களுக்கு நிம்மதி கிடைத்துவிட்டதா? இன்னமும் வலியை சுமந்து கொண்டுதானே தமிழன் வாழ்கிறான். தமிழினம் சிதைவைக் கண்டு பன்னிரண்டு மாதங்கள் ஆகின்றன. இவ்வளவு தூரம் தமிழனுக்கு அழிவைத் தந்த சிங்களவர் மனதில் சிறுதுளி இரக்கமாவது பிறந்திருக்கிறதா? ஒருவருட இடைவெளியில் மூன்று நான்கு தேர்தல்களை வைத்து மக்களை பிரித்தாள நினைத்ததோடு, வெளியுலகின் பார்வையை திசை திருப்பச் செய்தார்கள். இடம்பெயர்ந்த மூன்று லட்சம் மக்களில் அனேகரை அவரவர் சொந்தங்களையே நம்பி வாழ வெறுங்கையோடு அனுப்பி வைத்தார்கள். வன்னியில் கொண்டு சென்று இறக்கப்பட்டவர்கள் வாழ வழியின்றி, நிவாரணம் கூட கிடைக்காமல் தவிக்கின்றதான தகவல்கள் இப்போது வந்தவண்ணம் உள்ளன. தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு ஊர்களிலும் ஆயுதப்படைகளை நிறுத்தியிருப்பதின் மூலம் அந்த மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு போவதானால்கூட கரையெங்கும் காவல்படை. மண்சுமந்த மேனியராய் வாழ்ந்த வன்னித் தமிழினம் விதைத்து வாழ்வதற்கு கூட வழியில்லாமல் தவிக்கிறது. சிதைந்துவிட்ட வீடுகளை திருத்த வழியில்லாமல் மரத்தின் கீழ் வாழும் நிலை அவர்களுக்கு. ஆயுதப் படைகளின் இரவு நேர நடமாட்டத்தால் வெளியே தலைகாட்ட முடியாத நிலையில் பெண்ணினம். இதுவே வன்னிப் பெருநிலத்து நிலமை. தமிழ் இனத்தின் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் அடியோடு அழித்துவிடும் முனைப்போடு வன்னி நிலப்பரப்பெங்கும் புத்தர் சிலையும், இராணுவ நினைவுச் சின்னங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

நம் இனம் எங்கே போகிறது?

ஓராண்டு போர் வெற்றியை புதைக்கப்பட்ட தமிழ் மக்களின் புதை குழியின் மேல் நின்று கொண்டாடத் துடிக்கிறது இலங்கை அரசு. இவ்வளவுக்குப் பின்னும் இப்போது கூட தமிழ் மக்களின் வேதனைகளையும், இழப்புக்களையும் பொருட்படுத்தாது தங்கள் வக்கிரபுத்தியை வெளிக்காட்ட நினைக்கும் இலங்கை அரசு எமக்கு ஏதாவது தீர்வைத் தரும் என்று நம்பி இருக்க முடியுமா? அவர்கள் செய்யும் கொடுமைகளையும் கொலைகளையும் மறந்து மறக்கத்தான் முடியுமா? கடந்துபோனவை எல்லாம் முடிந்து போனவையாகவே இருக்கட்டும் என்று விட்டுவிட்டு இணங்கிப் போக நினைத்தால் கூட, அவர்கள் எங்களை மேலும் மேலும் துன்புறுத்துவதிலும், எங்கள் இனத்தை சிதைப்பதிலும், சமூக சீரழிவுகளை ஏற்படுத்துவதிலும், தாயகத்தின் தமிழின அடையாளத்தையும், தனித்துவத்தையும் அழித்து சின்னாபின்னமாக்கி தனிச் சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதையே குறிக்கோளாக கொண்டு காரியம் ஆற்றிவருகிறார்களே! இந்தக் கொடுமைகளிலிருந்து எப்படி விடுபடுவோம்? விடுபடத்தான் முடியுமா? வலிமை இல்லாமல் போய்விட்டோமே! அடிமைப்பட்ட இனமாக, சீரழிவுகள் மலிந்த ஒரு இனமாக நாம் மாறிக் கொண்டிருக்கிறோமே என்ற ஏக்கம்தான் மிஞ்சி இருக்கிறது. கடந்த ஒரு வருடத்திலேயே பிளவுபட்ட இனமாக மாறிவிட்டோம். வலிசுமந்த மக்களைப் பற்றிய சிந்தனையே அற்றவர்களாக போட்டி, பொறாமை, காட்டிக் கொடுப்பு, சொத்துச் சண்டை, பதவிப் போட்டி என்று சீரழிந்த வாழ்வுக்குள் நுழைந்துவிட்டோம் என்பதே வேதனையான விடயம்.

சிங்களவனின் திட்டமிட்ட சதி வலைக்குள் தமிழினம் விழுந்துவிட்டதற்கான அறிகுறிகளே தாயகத்தில் தெரிகிறது. அவனுக்கு உடந்தையாக இருந்து தங்கள் வயிறை வளர்க்க நினைக்கும் எட்டப்பர் கூட்டத்தின் கடத்தல், கப்பம், கொலை இன்று உச்சத்தை எட்டி, இன்று நம் இனத்தையே வதைத்து வருகிறது. இந்த நிலை உருவாவதற்கா முள்ளிவாய்க்காலில் நாம் இத்தனை உயிர்களை இழந்தோம். வலி சுமந்த இந்த மாதத்தில் உயிர் துடிதுடிக்க மடிந்தார்களே நம் மக்கள்! அவர்களை நினைத்தாவது எம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டாமா? பட்டினியால் மாண்டவர்களும், எறிகணையால் மடிந்தவர்களுமாக ஆயிரம் ஆயிரம் உறவுகளை இழந்தோமே, அவர்களின் ஆன்மாக்கள் துடித்து மாண்டதை நாம் மனமார நினைக்கின்றோமா? மாண்ட மாவீரரின் கல்லறைகளே இடிக்கப்படும்போது புதையுண்ட நம் மக்களின் புதைகுழிகள் எங்கே இருக்கப் போகின்றன? அவர்களது எச்சங்கள் சாட்சிகள் ஆகிவிடும் என்று பயந்தே தோண்டி அழித்திருப்பார்களே அந்த அரக்கர்கள்! தங்கள் உறவுகளை இழந்து இன்னமும் தவித்துக்கொண்டிருக்கும் எமது இனத்தின் சொந்தங்கள் கரைசேர முடியாமல் தவிக்கின்றனவே! அவர்களின் எதிர்காலம் கருதியாவது நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டாமா?

- க. ரவீந்திரநாதன்

Wednesday, May 12, 2010

நம்பிக்கைத் துரோகிகள்...

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடந்த போர் முடிந்து ஓராண்டு நிறைவடையும் இந்த நேரத்தில் வேறொரு விதமான தாக்குதலை தமிழர்கள் மீது தொடுத்திருக்கிறது ராஜபட்ச அரசு.தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு கெüரவமான பிரதிநிதித்துவம் அளித்துவந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறையைக் கைவிடுவதற்கு இப்போதுள்ள அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பதுதான் அது.இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படும், தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடிக்கும் வேட்பாளரே வெற்றியாளர் என்ற தேர்தல் முறைக்கு இலங்கையும் மாறவிருக்கிறது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் என்ன குறை என்றே கேட்கத் தோன்றும். இந்தியாவைப் போல பல்வேறு மொழி, இன குழுக்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை என்றாலும் இலங்கையில் சிங்களர், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற 3 இனங்களே முக்கியமானவை. கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய கடும் உழைப்பாளிகளின் வளர்ச்சியை சிங்களர்களால் சகித்துக் கொள்ள முடியாமல் போனதால்தான் அங்கு இனப் பகையே மூண்டது.இப்போது தமிழர்களின் பகுதிகளில் சிங்களர்களைக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேகவேகமாக நடந்து வருகின்றன. அதற்காகவே இன்னமும் ஏராளமான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் விட்டுவிட்டுப் போன ஊர்களிலும் வீடுகளிலும் இப்போது சிங்களர்கள் குடியிருக்கின்றனர்.

விவசாயம் செய்யவும் அவர்களுக்கு நிலங்கள் தரப்படுகின்றன. இந்தப் பின்னணியில்தான் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளரை வெற்றியாளராக அறிவிக்க சட்டம் திருத்தப்படுகிறது. தமிழர்களின் பகுதிகளில்கூட சிங்கள வேட்பாளர் அதிக எண்ணிக்கையில் வாக்குகளைப் பெறுவது என்பது இனி சாத்தியமே. சிங்களர்களைக் குடியேற்றுவதால் மட்டும் உடனடியாக இதைச் சாதிக்க முடியாது என்பதால், இப்போதுள்ள நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளையும் பிரித்து மறுவரையறை செய்யும் பணியும் தொடங்கவிருக்கிறது.அதில் தமிழர்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதி ஒரே தொகுதிக்குள் வராமல் சிங்களர்கள் பெரும்பான்மையினராக உள்ள தொகுதிகளில் பரவலாகச் சேர்க்கப்படும் முயற்சிகள் தொடங்கிவிட்டன.225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்குப் பிரதிநிதித்துவம் குறைந்துவிடுமே என்று கூறுவோருக்குப் பதில் அளிக்கவே, 25 உறுப்பினர்களைக் கொண்ட செனட் என்ற மேலவையைக் கொண்டு வரப்போவதாக அரசு அறிவித்துள்ளது.

இதில் அறிஞர்களும்,சிறுபான்மைக் குழுக்களின் பிரதிநிதிகளும் இடம் பெறுவர் என்கிறது அரசு. இதில் அரசின் நியமன உறுப்பினர்களும் இருப்பார்கள்.என்னதான் பிரதிநிதித்துவம் தரப்பட்டாலும் இந்த அவைக்கு அதிகாரங்கள் குறைவுதான். எனவே இதில் இடம் பெறுகிறவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டாலும் கூட இந்த அவையின் அந்தஸ்து என்பது நாடாளுமன்றத்தைப் போல இல்லை என்பது வெளிப்படை.அதிபராக இருப்பவர் இருமுறைதான் அந்தப் பதவிக்கு வர முடியும் என்று இப்போதுள்ள அரசியல் சட்டத்தைத் திருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இது, இப்போதுள்ள அதிபர் மகிந்த ராஜபட்சவை ஆயுள்கால அதிபராக்கும் முயற்சி என்றே கூறிவிடலாம்.இந்த திருத்தங்களின் நோக்கம் எல்லோருக்கும் தெரிந்த நிலையில், இனப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில்தான் இந்த நடவடிக்கைகள் என்று இலங்கை அரசு கூறுவதுதான் இரக்கமற்ற நகைச்சுவை.இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனவும் செய்துகொண்ட ஒப்பந்தம் பற்றி இப்போது பேச்சே கிடையாது.தமிழர்களை இலங்கை மீது உரிமையுள்ள இனமாக அங்கீகரிக்கும் பேச்சோ, வடக்கும் - தெற்கும் அவர்களுடைய பாரம்பரிய தாயகம் என்பதை ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மையோ, தமிழர்களின் பகுதிகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி வளப்படுத்தும் நோக்கமோ, வடக்கையும் தெற்கையும் இணைத்து தமிழர்களின் கோரிக்கைகளை முழுமையாக இல்லாவிடினும் ஆறுதல் கொள்ளும் வகையிலாவது நிறைவேற்றும் நல்லெண்ணமோ இலங்கை அரசுக்கு இல்லை என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறது

.இந்த நிலையில்,கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தமிழர்களுக்கு இலங்கை அரசு எத்தகைய சலுகைகளையும் சமவாய்ப்புகளையும் இனி அளிக்கப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.தமிழர்களைத் தங்களுடைய சகோதரர்களாக பாவிக்காமல் எதிரிகளாகவே கருதுகிறது இலங்கை அரசு என்று அதன் சில நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.ராணுவத்துடனான போரில் இறந்த வீரர்களின் சமாதிகளை வடக்கிலும் கிழக்கிலும் அமைத்த விடுதலைப் புலிகள், மாவீரர் தினத்தில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திவந்தனர். இப்போது அந்தச் சமாதிகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு இலங்கை ராணுவ வீரர்களுக்கு நினைவிடங்களை அமைத்து வருகிறது இலங்கை அரசு. தமிழர்களோடு சமரசமாகப் போக வேண்டிய அவசியமும்கூட, கடமையும் தங்களுக்கு இருப்பதாக இலங்கை அரசு கருதவில்லை என்பதையே இந்தச் செயல்கள் உணர்த்துகின்றன.

இலங்கையில் இப்போது நிலவும் அதிபர் ஆட்சிமுறை என்பதே பெரும்பான்மையினரின் ஆட்சிமுறை என்பதுதான் உண்மை. பெரும்பான்மை சிங்களவரின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே, அமெரிககாவில் பராக் ஒபாமா அதிபரானதுபோல, ஒரு தமிழர் இலங்கையின் அதிபராக முடியும். இப்போது நாடாளுமன்றத்திலும் தமிழர்களும் சிறுபான்மையினரும் குரலெழுப்ப முடியாத நிலைமைக்கு புதிய அரசியல் சட்டத்திருத்தம் வழிகோலப் போகிறது.இத்தனைக்கும்பிறகு இந்திய அரசு இது அன்னிய நாட்டு விவகாரம் என்று தலையிடாமல் தவிர்ப்பது ஏன் என்பதும், அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படத் தயங்குவது ஏன் என்பதும் புதிராக இருக்கிறது. "விடுதலைப் புலிகளைத்தான் எதிர்க்கிறோம். அப்பாவி ஈழத் தமிழர்களை அல்ல' என்று சொன்னதெல்லாம் பொய்தானே?தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா!

Tuesday, May 11, 2010

சித்தன்னவாசலின் சிறப்பும். சீரழிக்க துடிக்கும் மனிதர்களும்..












இந்த மூடப்பட்ட மண்டபத்தில் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.


சரியான வழி எங்கேயும் சொல்லப்படவில்லை, சித்தன்னவாசல் என்ற நேம் போர்ட்டை நாங்கள் பார்த்த இடங்களில் அந்த போர்ட்கள் நிச்சயம் தேவையில்லை என்றே கூட சொல்லலாம். பாழடைந்த மண்டபம் ஏதோ ஒன்றிற்குச் செல்லும் வழி போல் இருந்தது, அங்கே ஒரு பூங்கா வேறு கேட்கணுமா லவ்வர்ஸ் ஸ்பாட் ஆகிவிட்டது, கல்லணை முக்கொம்பு புளியஞ்சோலை என்று கெடுத்துவிட்டு இப்பொழுது கல்லூரி இளசுகளும் வகையறா ஆட்களுக்கும் புகலிடமாக இப்பொழுது சித்தன்னவாசல் இருக்கிறது.

நிறைய எதிர்பார்த்துப் போனேன் என்பது உண்மைதான், ஆனால் மண்டபத்தைப் பார்த்த பொழுது அத்தனை பிரமிப்பு வரவில்லை பின்னர் அங்கிருந்த தொல்பொருள்த்துறை ஊழியர் சொல்லப்போய் தான் விவரம் புரிந்தது. பின்னர் புதுக்கோட்டை மாவட்ட வரலாறு – ராஜா முகமதுவில் படித்து இன்னும் விவரங்கள் தெரிந்து கொண்டேன். வெகு சமீபத்தில் தான் அந்த ஓவியங்களைப் பாதுகாக்க அரசாங்கம் முயற்சித்திருக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம்.

கையில் 500 ரூபாயைத் திணித்தாவது அன்றைக்கு புகைப்படம் எடுத்துவிடும் மனநிலையில் தான் நான் இருந்தேன் ஏனென்றால் தனியாக கார் வைத்துக் கொண்டு சித்தன்னவாசலைப் பார்க்க வந்த பொழுது குடுமியான்மலை திட்டத்தில் இல்லை. காசு செலவு செய்து வந்துவிட்டு புகைப்படம் எடுக்காமல் போக மனம்வரவில்லை, ஆனால் தொல்பொருள்த்துறை ஊழியர் நிச்சயமாக அனுமதிக்க மறுத்துவிட்டார். நான் வற்புறுத்தவில்லை எனக்கு வருத்தத்தை விடவும் சந்தோஷமே அதிகம் இருந்தது. அதனால் என்வசம் சித்திரங்களின் புகைப்படம் இல்லை.

மேலே சமணர் படுக்கைக்கு சென்று பார்த்ததும் ஏன் கம்பிவேலி போட்டிருக்கிறார்கள் என்று புரிந்தது, சமணர் படுக்கையை காதலர்கள் தங்கள் வேலைகளை செய்யும் இடமாக மாற்றியதை வேதனையுடன் சொன்ன அவர் இதனாலெல்லாம் வேலி போடுவேண்டியதாகிவிட்டது என்று வருத்தப்பட்டார்.

சமணர்படுக்கையின் தற்போதைய நிலை – பலங்காலத்துக் கல்வெட்டுக்களைக் காட்டிலும் நம் காலத்து ஹார்டின்களும் இன்ன பிற பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

நாங்கள் சென்றிந்த பொழுதும் நாலைந்து கப்புள் பூங்காவிலும் மேலே சமணர் படுக்கை அருகில் மூன்று கப்புள்களும் இருந்தனர். லால் பாஹ், கப்பன் பார்க் அளவிற்கு இறங்கி வேலை பார்ப்பதாக தொல்பொருள் துறை ஊழியர் புலம்பினார். இதில் தண்ணியடித்துவிட்டு அவரிடம் வேறு கரைச்சல் செய்வார்களாம், வெட்கக்கேடு. சரி நல்ல விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்து அப்படியே நகர்ந்துவிட்டது.

எனக்குத் தெரிந்து மாமல்லன் என்ற பெயர் வரும் பொழுதெல்லாம் நீங்கள் பல புத்தகங்களில் ஒரு அரசனுடைய சித்திரம் காண்பிக்கப்படும், ஆனால் அது அவர் இல்லை என்றும் ஒரு பாண்டிய மன்னனுடைய படம் தான் அது என்றும் கண்டுபிடித்திருப்பதாக தொல்பொருள் துறை நண்பரும் சொன்னார் பின்னர் புத்தகமும் அதையே சொன்னது. 1000 வருடங்களுக்கு முன் வரைந்திருக்கிறார்கள் இந்த ஓவியங்களை எனும் பொழுது ஆச்சர்யம் வருகிறது, மண்டபத்தின் விதானத்தில் எப்படி வரைந்திருப்பார்கள், அதிலும் அளவுப் பொருத்தம் எல்லாம் அவ்வளவு அருமையாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து எல்லோருமே ஒரு முறை சித்தன்னவாசலுக்குச் சென்று அந்த ஓவியங்களைப் பார்த்துவரவேண்டும் என்று நினைக்கிறேன்.

கீழிருப்பது சித்தன்னவாசல் என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாவட்ட வரலாறு எழுதிய ராஜா முகமது அவர்கள் வானொலியில் வாசித்த கட்டுரையின் வடிவம் கீழே, சொல்லப்போனால் சித்தன்னவாசலைப் பற்றி விரிவாகவே அலசுகிறது கட்டுரை.
சித்தன்ன வாசல்

புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை செல்லும் வழித்தடத்தில் 15 கிமீ தூரம் சென்றதும் உயரமான ஒரு குன்று நம் கவனத்தை கவருகிறது. இதுதான் சித்தன்னவாசல். இங்கு காணப்படும் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறைகளும் முதுமக்கள் தாழிகள். கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டு உலகப் புகழ்வாய்ந்த ஓவியங்களுடன் விளங்கும் குகைக்கோயில் ஆகியன இந்த சிறிய கிராமத்தின் தொன்மைச் சிறப்பை நமக்கு விளக்குகின்றன. இவ்வூர் அண்ணல் வாயிலுக்கு(அன்னவாசல்) அடுத்த சிற்றூராக இருப்பதாலும் இங்கு சித்தர்கள் வாழ்ந்து வந்ததாலும் சித்தர் அன்னவாயில் என்று வழங்கப்பட்டு பின்னர் சித்தன்னவாயில், சித்தன்னவாசல் என மருவி வழங்குவதாகக் கொள்ளலாம். இங்குள்ள பிராமிக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் சிறுபாவில் என்பது சித்துப்போசில் என்பதன் திரிபு என்று அறிஞர்கள் கருதுகின்றனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பே கல்வெட்டுகளும் இவ்வூரைச் சேர்ந்த பழமையான சமணச் சின்னங்களும் புலப்படுத்துகின்றன. அக்காலத்தில் காஞ்சி மாநகர் புத்தமத மையமாக விளங்கியது போல சித்தன்னவாசல் சமண மத மையமாகத் திகழ்ந்ததாக அறிகிறோம்.

பேருந்து தடத்திலிருந்து குகைக்கோயிலுக்குச் செல்லும் பிரிவுச் சாலையின் கிழக்குப் பகுதியில், அக்காலத்தில், இறந்தவர்களைப் புதைப்பதற்குப் பயன்படுத்திய கல்லறைகளும் முதுமக்கள் தாழிகளும் காணப்படுகின்றன. இவைகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவை கருங்கல் பலகையினால் ஆன நீள் சதுரக் கல்லறைகள், பல, தரையில் புதைந்திருப்பதையும் அவற்றைச் சுற்றி செம்புறைக் கற்கள் வட்டமாக அமைந்திருப்பதையும் காண்கிறோம். இன்னும் சில கல்வட்டங்களுள் முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. இவை இவ்விடத்தின் காலத்தால் முற்பட்ட வரலாற்றை நமக்குத் தெரிவிக்கின்றன.

குன்றின் நடுவில் கிழக்கு முகத்தில் அமைந்திருக்கும் இயற்கையான குகையின் பெயர் தான் ஏழடிப்பட்டம். ஆரவார உலகை வெறுத்து அமைதியை நாடிய சமண முனிவர்கள் தங்கியிருந்த இடம்.

இந்த குகைக்குச் செல்ல மேற்குப் பகுதியிலிருந்து குன்றின் மீது ஏறி குகையின் வாயிலில் உள்ள ஏழு படிக்கட்டுகளைக் குடைந்து குகையினுள் நுழைகிறோம். எனவே தான் இவ்விடம் ஏழப்பட்டம் எனப் பலராலும் அழைக்கப்படுகிறது. ஆனால் உலக வாழ்க்கை விடுத்து ஏழுவிதமான ஆன்மீக உறுதிகளை மேற்கொண்டு, உண்ணாநோன்பு இருந்து உயிர்நீக்க விழைந்த சமண முனிவர்கள் தங்கியிருந்ததால் ஏழடிப்பட்டம் எனப் பெயர் பெற்றது எனக் கொள்ளுதல் பொருந்தும். எனினும் இப்பெயர் மிகவும் பிற்காலத்திலேயே வழக்கிற்கு வந்ததாகத் தெரிகிறது.
குகையில் நுழைந்ததும் ஒரு ஏர்கண்டிஷண் தியேட்டருக்குள் நுழைந்தது போன்ற உணர்வு, அவ்வளவு குளிர்ச்சி குகையின் தரையில் 17 படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. இவை வழவழப்பாகவும் ஆக்கப்பட்டுள்ளன. படுக்கையின் ஒரு பகுதி தலையணையாக பயன்படுத்தும் வண்ணம் உயர்ந்துள்ளது. இந்த படுக்கை ஒன்றின் விளிம்பில் தான் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு சமண முனிவரைப் பற்றீய செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. இது இந்தக் குகையின் தொன்மையைக் காட்டுகிறது. கி.பி. 10ம் நூற்றாண்டுவரை சமண முனிவர்கள் இந்தக் குகையில் தங்கியிருந்திருக்க வேண்டுமென்பதற்கு இங்குள்ள இன்னும் சில கல்வெட்டுகள் சான்றளிக்கின்றன.

குன்றின் மேற்கு முகப்பில் எளிதாகச் சென்றடையக்கூடிய பகுதியில் அறிவர் கோயில் என்னும் சமண குகைக்கோயில் அமைந்துள்ளது. கருங்கல் மலையைக் குடைந்து இந்தக் குகைக்கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குகைக்கோயிலில்தான் நமது சிந்தையைக் கவரும் ஓவியங்கள் உள்ளன. மரம் போன்ற அழியும் பொருட்களில் கோயில் கட்டுவதை விடுத்து இதுபோன்ற குகைக்கோயில் எடுக்கும் பழக்கத்தை கி.பி.ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் தமிழகத்தில் அறிமுகம் செய்தான். அந்த குகைகளில் ஓவியம் தீட்டி வைக்கும் பழக்கமும் ஏற்பட்டது. கி.பி 7ம் நூற்றாண்டில் காவிரிக்கு வடக்கே பல்லவர்கள் ஆட்சியும் தெற்கே பாண்டிய மன்னர்களின் ஆட்சியும் நிலவியது. பல்லவர் கலைப் பாணி பாண்டிய நாட்டிலும் பரவத் தொடங்கியது. இக்காலத்தில் சித்தன்னவாசல் பாண்டியராட்சிக்கு உட்பட்டிருந்தப் பகுதியாகும்.

மகேந்திரவர்ம பல்லவன், மண்டகப்பட்டு, வல்லம், திருச்சி ஆகிய இடங்களில் குகைக்கோயில்கள் எடுப்பித்தப் பாணியைப் பின்பற்றி சித்தன்னவாசலிலும் பாண்டிய மன்னர்களால் குகைக்கோயில் குடைவிக்கப்பட்டிருக்க வேண்டும். சித்தன்னவாசல் குகைக் கோயிலும் ஓவியங்களும் மகேந்திரவர்ம பல்லவனின் கலைப்பாணியை ஒத்திருப்பதால் இது பல்லவர் கலைப்படைப்பு எனவும் மகேந்திரவர்மன், அப்பரின் முயற்சியால் சைவனாக மாறுவதற்கு முன்பு சமண மதத்தைப் பின்பற்றியபோது இந்த சமண குகையை எடுப்பித்திருக்கலாம் என்றும் கருத்தப்பட்டு வந்தது.

ஆனால் குகைக்கோயிலின் வெளிப்பக்கம் தென்புறச் சுவற்றில் உள்ள கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே இது பாண்டிய மன்னர்களது கலைப்படைப்பு என்பது தெரியவந்தது. கி.பி 9ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட, ஸ்ரீமார ஸ்ரீ வல்லப பாண்டியன் காலத்தில்(815 – 862) மதுரை ஆசிரியன் இளங்கௌதமன் என்னும் சமண முனிவர் குகைக்கோயில் முன் மண்டபத்தைப் புதுப்பித்து தற்போது நாம் காணும் ஓவியங்களையும் வரைந்து வைத்ததாக இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

"திருத்திய பெரும்புகழ் தேவதரிசனத்து
அருந்தவ முனிவனைப் பொருட்செல்வன்
அறன்கிளர் நிலைமை இளம்கௌதமன் எனும்
வளங்கெழு திருநகர் மதிரை ஆசிரியன்
அவனிபசேகர சீர்கெழு செங்கோல் சீரீவல்லபன்"

இந்தக் கல்வெட்டுச் செய்தியாகக் கொண்டும் காவிரிக்குத் தெற்கே மகேந்திரவர்ம பல்லவனின் ஆட்சி ஏற்பட்டிருக்கவில்லை என்பதைக் கொண்டும் சித்தன்னவாசல் ஓவியம் பல்லவ மகேந்திரவர்மன் காலத்தது அல்ல என்பது தெரியவருகிறது.

குகைக்கோயில் 160 சதுர அடி, அளவுள்ள ஒரு முக மண்டபத்தையும் அதையடுத்த 100 சதுர அடி அளவுள்ள சிறிய ஒரு கருவறையும் கொண்டது. முன் மண்டபத்தின் முகப்பில் இரண்டு தூண்கள் உள்ளன. மண்டபத்தின் வடக்குச் சுவர் மாடத்தில் ஒரு சமண ஆசிரியரின் (திருவாசிரியன்) சிற்பமும், தெற்கு மாடத்தில் ஐந்து தலை பாம்பு குடைவிரித்திருக்க வீற்றிருக்கும் 23வது சமண தீர்த்தங்கரர் பார்சுவநாதர் சிற்பமும் உள்ளன. இடது பக்கமும் நடுவிலும் உள்ள சிற்பங்கள் முக்கடையின் கீழ் உள்ளதால் தீர்த்தங்கரர்கள் என்றும் வலது பக்கம் உள்ளது ஒரு குடையின் கீழ் உள்ளதால் இது ஒரு சக்கரவர்த்தியின் சிற்பம் என்று சொல்லலாம். குகையின் முகப்பிலுள்ள சிறிய மண்டபம், அலக்சாண்டர் டாட்டன்ஹாம் சமஸ்தான ஆட்சியாளராக இருந்த போது குடுமியான்மலை, பனங்குடி ஆகிய இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கற்களைக் கொண்டு கட்டப்பட்டதாகத் தெரியவருகிறது.

சிற்பங்களை விட இங்குள்ள ஓவியங்களே நம் மனதைக் கவர்ந்திழுக்கின்றன. குகைக்கோயிலின் தரை நீங்கலாக மற்ற பகுதிகள் அனைத்திலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தற்கான அடையாளங்கள் தென்படுகின்றன. அழிந்தவை போக எஞ்சியுள்ள ஓவியங்களை முன் மண்டபத்தின் விதானத்திலும் கருவறையின் விதானத்திலும் காணலாம். இந்த ஓவியங்கள் Fresco-Secco என்னும் முறையில் தீட்டப்பட்டுள்ளன. கருங்கல் பரப்பை பொளிந்து சமப்படுத்தி சுண்ணாம்பு சாந்து பூசி அதன்மீது வெண்சுண்ணாம்பு பூச்சிட்டு வழுவழப்பாகத் தேய்ந்து அப்பரப்பில் ரேகைகளும் வண்ணங்களும் தீட்டப்பட்டுள்ளன. மேற்கத்திய நாடுகளிலெல்லாம் சமீப காலத்தில் தோன்றிய இவ்வகைப்பாணி ஓவியக்கலை வெகுகாலத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் வழக்கத்திலிருந்தது. இதற்கு சங்க இலக்கியங்கள் பல சான்று பகர்கின்றன. மனித உணர்வுகளையும் அங்க அசைவுகளையும் ஓவியங்களில் வெளிக்கொணரும் பாங்கு ஓவியர்கள் கையாண்ட உத்திகள், சங்ககால அரண்மனை சித்திர கூடங்களின் சிறப்பு ஆகியன பற்றியெல்லாம் பரிபாடல், மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய சங்க நூல்கள் நிறைய செய்திகளைத் தெரிவிக்கின்றன. ஓவியச் செந்நூல் என்றொரு நூல் இருந்ததை மணிமேகலைக் குறிப்பிடுகிறது. சங்ககால ஓவியங்களை காணும் வாய்ப்பினை நாம் பெறவில்லையாயினும் இலக்கியங்கள் கூறும் இலக்கணத்தோடு தமிழக சித்திரக்காரர்கள் சித்தன்னவாசல் ஓவியங்களைத் தீட்டி நமது கண்ணூக்கும் விருந்தாக்கியிருக்கின்றனர்.

கருவறையின்(உள் மண்டபம்) விதானத்தில் ஓவியம் வரையப்பட்ட பட்டுத்துகில் ஒன்று விரிந்துள்ளது போன்ற காட்சியினைக் காண்கிறோம். இதில் பல வட்டங்களும் சதுரங்களும் இணைப்பின்னி ஒரு தொகுதியாக விளங்குகின்றன. சதுரங்களில் தாமரைப் பூக்கோலமும் வட்டங்கள் ஸ்வஸ்திக் வடிவத்தில் நான்கு பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் மேல் இரண்டு பிரிவில் இரண்டு மனித உருவங்களும் கீழ் இரண்டு பிரிவில் இரண்டு சிங்கங்களும் மிகத் துல்லியமாக வரையப்பட்டுள்ளன.

முன்மண்டபத்தின் விதானத்தை அண்ணாந்து பார்த்தால் அங்கு சித்தரிக்கப்பட்டுள்ள தாமரைத் தடாகம் நம் சிந்தையைக் கவருகிறது. சித்தன்னவாசல் ஓவிய வேலைப்பாட்டின் உயிர்நாடியே இந்த தாமரைத் தடாகம்தான். மணிமேகலைக் கூறும், வித்தகரியற்றிய கண்கவர் ஓவியங்கள் இவைதானோ என எண்ணத் தோன்றுகிறது. பசுமையான இலைகளுடன் தாமரையும் அல்லியும் இந்த தடாகத்தில் பூத்துக் குலுங்குகின்றன. பலவிதமான மீன்கள் அங்குமிங்கும் ஓடி விளையாடுகின்ற்ன. யானைகள் நீரக் கலக்கி களித்திருக்கின்றன சுற்றுச் சூழலை மறந்து அசைபோட்டு இருமாந்திருக்கும் எருமை மாடுகளின் தோற்றம் இயல்பாகவே உள்ளது. துள்ளிக்குதிக்கும் மீன்கள் மீனலோசினி மீனாட்சியின் கண்களுடன் போட்டியிடுகின்றன. அன்னம், சிறகி, வாத்து போன்ற பறவைகள் தங்கள் பெடைகளுடன் குஞ்சுகளுடன் குலாவிக் கொண்டிருக்கின்றன. மருட்சியுடன் விழித்துக் கொண்டு "யார் எனது குஞ்சுகளை மிரட்டுவது" என்று கேட்கும் பாவனையில் தனது குஞ்சுகளுக்கு அடைக்கலமளிக்கப் பறந்தோடி செல்லும் ஒரு சிறகியின் ஓவியத்தோற்றம் தாயன்பு எவ்வுயிர்க்கும் பொதுவானது என்பதனை உணர்த்துகிறது.

தாமரையும் அல்லியும் கூட மொட்டாகவும் இதழ் விரித்தும் இயற்கையின் விதியை நம் கண்முன் கொண்டு வருகின்றன. பவ்யர்கள் என்னும் கந்தர்வ புருஷர்கள் நீராடி வழிபாட்டிற்கு பூக்களை பறித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக தடாகம் முழுவதும் எங்கு நோக்கினும் உயிரோட்டம் நிறைந்த கண்கொள்ளாக் காட்சி. இங்கு காணப்படும் அனைத்துமே சுறுசுறுப்புடன் இயங்குவதுபோல நமக்குத் தோற்றமளிக்கின்றன. மனதிற்கினிய இந்த ஓவியங்களை எப்படித்தான் வரைந்திருப்பார்களோ என்று எண்ணும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது. சமண புராணங்கள் கூறும் சுவர்க்கங்களுள் ஒன்றாகிய கடிக பூமியிலுள்ள சமசரண மண்டபத்திற்குச் செல்லும் வழியில் உள்ள தாமரைத் தடாகத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது இந்தக் காட்சி, எனக் கூறப்படுகிறது.

தூண்களின் முகப்பில் நாட்டியக் கணிகையர் இருவர் நடனமாடும் எழில்மிகு தோற்றம் தீட்டப்பட்டுள்ளன. இவை மிகவும் அழிந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இருப்பினும் இந்த கன்னியரின் ஓவியங்கள் காட்டும் அபிநயமும், முத்திரைகளும், நாட்டிய சக்கரவர்த்தி நடராசரின் தாண்டவத்தை நினைவுபடுத்துகின்றன. நாட்டியக் கச்சையணிந்து பலவித அணிகலன்களையும் அணிந்துள்ள பாங்கு வியக்கத்தக்கது. பொன்னிறமான மேனியழகு புன்முறுவல் நெஞ்சத்தை ஊடுருவிப்பார்க்கும் நீண்ட நயனங்கள் குறுகிய இடை பாம்புபோல் நெளியும் கரங்கள், அங்க அசைவுகள் கண்களின் ஒளி இவையாவும் ஒன்று சேர்ந்து உயிரோட்டம் ததும்பும் இவ்விரு கன்னியரும் தேவலோகத்திலிருந்து இறங்கிவந்து இன்னிசைக்கேற்றவாறு நடனமாடுவது போல் உள்ளது.

இன்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வழக்கிலிருந்த நாட்டிய பாவனைகளையும் நாட்டியக்கலை விதிகளையும் தெரிந்துகொள்ள இந்த ஓவியங்கள் நல்ல சான்று பகிர்கின்றன. அஜந்தா ஓவியங்களில் கூட இது போன்ற நாட்டிய சாத்திர விதிகள் பின்பற்றப்படவில்லை. ஆகவே சித்தன்னவாசல் நடன கன்னியரின் ஓவியங்கள் இந்திய நாட்டியக்கலைக்கே சிறப்பு செய்கின்றன.

தென்புறத்தூணின் வடக்கு முகத்தில் மணிமுடியுடனும் கம்பீரத் தோற்றத்துடன் காணப்படும் ஓவியம் இந்த கோவிலுக்கு திருப்பணி செய்வித்த ஸ்ரீமார ஸ்ரீ வல்லப பாண்டியன் என்றும் அவனுக்குப் பின்னால் மிடுக்கான தோற்றத்துடன் உள்ள ஓவியம் அவனது தேவி என்றும் கருதப்படுகிறது. இதுவரை சொன்ன ஓவியங்களைத் தவிர தூண்களுக்கு மேலே உள்ள விட்டத்திலும் அதிலிருந்து நீண்டிருக்கும் கொடுங்கையிலும் தாமரை மலர்களும் அன்னப்பறவைகளும் வரையப்பட்டுள்ளன.

உயிரோட்டம், இயற்கையின் இலக்கணம் அங்க அளவுப் பொருத்தம் லாவண்யம் ஆகிய பண்புகளனைத்தும் அமைந்தவையே உயர்கலை ஆகுமென்றால் இக்குணங்க்கள் அனைத்தும் பொருத்தப் பல உயிரனங்களையும் மலர்களையும் உயிரோட்டத்துடன் இங்கு படைத்திருக்கும் சித்திரக்காரர்கள் மணிமேகலை கூறும் வரந்தரவெழுதிய லோவிய மாக்களே ஆவார்கள்.

சித்தன்னவாசல் ஓவியங்களை வரைய உபயோகப்படுத்திய வண்ணங்கள் யாவும் இயற்கை கனிப்பொருள்களே ஆகும் கருப்புக்கு கரிப்பொடியும், சிகப்பு, மஞ்சள் நிறங்களுக்கு இவ்வண்ண காவிக்கற்களும் நீல நிறத்திற்கு நீலக்கல்லும் பிறவண்ணங்களுக்கு இந்த வண்ணங்களின் கலப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அஜந்தா ஓவியங்களிலும், பல்லவர் ஓவியங்களிலும் காணப்படும் அழகையும் அமைதியையும் பண்பட்ட கலைத்திறனையும் சித்தன்னவாசல் ஓவியங்களில் காணமுடிகிறது.இந்திய ஓவியக்கலைப் பாரம்பரியத்தில் தமிழகத்தின் பங்கினை சித்தன்னவாசல் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

காலத்தின் கருணையின்மையால் பெரும்பாலான ஓவியங்கள் சிதைந்து அழிந்துவிடட் போதிலும், இன்று நாம்காணும் எஞ்சியுள்ள ஓவியங்கள் அக்கால தமிழகத்தில் ஓவியக்கலை, நாட்டியக்கலை ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள காலத்தால் முற்பட்ட சான்றாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. உங்களது சிந்தைக்கு விருந்தளிக்க சித்தன்னவாசல் ஓவியக்கூடம் அன்புடன் உங்களை அழைக்கின்றது.

Saturday, May 8, 2010

உயிர் த‌ய‌ங்க‌ உனை பிரிந்து...



உயிர் த‌ய‌ங்க‌ உனை பிரிந்து
இருதிப் பிரித‌லின்
இம்சை மிகு க‌ண‌ங்க‌ளை
எண்ணி பார்க்கிறேன்...
இருதி த‌ரிச‌ன‌ம் அது
செங்கோடுக‌ள் இழையோட‌ச்
சிவ‌ந்து போயிருந்த‌
உன் விழி இர‌ண்டை
நெஞ்சின் ஆழ‌ம் வரை
நினைவிருத்த‌ முய‌ன்றேன்...
அன்று மாத்திர‌ம்
அந்தியின் இருள்
நாம் அவ‌காச‌ம் பெற்றிருந்த‌
நேர‌த்தின் இடைவெளியை
சுருக்கி கொண்டேயிருந்த‌து...
என‌து ஆறுத‌லுக்காக‌ வேனும்
எந்த‌ ந‌ம்பிக்கையும்
உன்னால் த‌ர‌ முடிய‌வில்லை
பிரிவு உறுதியாய்ப் போயிருந்த‌
உன்னுள்ளே
மீண்டும் நாம் சேர்வ‌தை ப‌ற்றிய‌
சொப்ப‌ண‌ங்க‌ள‌ல்லாம்
அழிந்து கொண்டேயிருந்த‌து...
உன்னெதிரே
நான் க‌ண்ணீரைச் சிந்த‌வில்லை
க‌டைசிச் ச‌ந்திப்பின்
ச‌ம்பிர‌தாய‌மென‌க்கூறி
ச‌த்திய‌ங்க‌ள் வாங்க‌வில்லை...


உன் அழைப்புக்காக‌
யுக‌ங்க‌ள் முழுவ‌தும்
காத்திருப்ப‌தாய் கூறினேன்...
அதுவ‌ரை
அன்பின் நிழ‌ல‌ற்ற‌
பாலைவ‌ன‌மொன்றில்
ச‌ர‌ண்புகுவ‌தாய் கூறினேன்...
சாவு என் உட‌லை
ச‌ட‌ல‌மாக்கும் வ‌ரை
என்னுயிரில் நீயே
நிறைந்திருப்ப‌தாய் கூறினேன்...
க‌ர‌ம் பற்றலோ,த‌ழுவ‌லோ
காத‌லின் அடையாள‌மென‌க்
க‌ருதாத‌தால்
உன் உருவ‌த்தை இனி
உள்வாங்கும் வ‌ர‌மில்லையென‌
த‌ய‌ங்கி த‌ய‌ங்கி
இமை மூடிய‌ விழிக‌ளோடு
நான் அன்று விடைபெற்றேன்...

Wednesday, May 5, 2010

தோற்கடிக்கப்பட்டவர்கள், தோற்றுப் போனவர்கள் அல்லர் - நாடாளுமன்றில் சிறிதரன் எழுச்சியுரை!

"தோற்கடிக்கப்பட்டவர்கள் எல்லோரும் தோற்றுப்போனவர்கள் அல்லர், அழிக்கப்பட்டவர்கள் எல்லோரும் அழிந்துபோனவர்களும் அல்லர் என்பதற்கு உலக வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உண்டு. ஒரு தேசமோ ஒரு இனமோ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பேரழிவுகளுக்கு முகங்கொடுக்கும்போது மீளெழுவதற்கு இன்னுமொரு பாதை உண்டு என்பதை ஜப்பானியர்களும் உரோமானியர்கும், முழு உலகத்திற்கும் நிரூபித்துவிட்டனர்.

நாம் பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டப்பட்டோம். உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் எமது இராணுவ பலத்தையும் எமது சந்ததியையும் அழிப்பதற்கு உரிய நியாயப்பாட்டை எம்மை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துக்கொண்டதன் மூலம் ஏற்படுத்திக்கொண்டன.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழ்மக்களுக்கெதிராக ஒரு பெரும் யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டது" எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்றத்தில் நேற்று ர நிகழ்த்திய கன்னி உரையில் தெரிவித்தார். தமிழ்மக்களின் குரல் அடக்கபட்டு வரும் சூழலில், நம்பிக்கை தரும் புதிய குரலாக நாடாளுமன்றத்தில் அவர் குரல் ஒலித்திருக்கிறது. அவரது கன்னி உரை முழுமையாக;

கெளரவ சபாநாயகர் அவர்களே மதிப்பிற்குரிய சக உறுப்பினர்களே என்னை தங்கள் பிரதிநிதியாக உங்கள் முன் அனுப்பி இருக்கும் எமது மக்களின் சார்பிலும் எனது சார்பிலும் எனது வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் முதலில் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இறந்துபோன உறவுகளின் எலும்புத்துண்டங்கள் என் பாதங்களை முத்தமிட அழிந்துபோன எம் தேசத்தின் சாம்பல் மேட்டிலிருந்து எனது மக்களின் நிரந்தர பூர்வீக வாழ்வியல் உரிமைக்கான அங்கீகாரம் மக்களின் அங்கீகாரத்தோடு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தமது கெளரவமிக்க உயிரினும் மேலான உரிமைக்காக காலமெல்லாம் போராடி தவமிருக்கும் தமிழ்பேசும் மக்களிடமிருந்து வருகின்றேன்.

இரண்டாவது உலக யுத்தம் முடிவடையும் தறுவாயில் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டு சரணடையும் நிலையிலிருந்த போதிலும் அணுகுண்டு வீச்சுக்குட்படுத்தப்பட்டு இரு பெரும் நகரங்களையும் இரண்டு லட்சம் மக்களையும் இழந்து இன்றுவரை கதிர்வீச்சு தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடாத போதிலும் மீண்டுமொரு பொருளாதார வல்லரசாக இடிச்சு பெருப்பித்திருக்கும் இரசாயண தேசத்தின் அன்பளிப்பான இக்கட்டிடத்தொகுதியில் இருந்து என் கன்னி உரையை எதிர்காலம் பற்றிய உயர்வான நம்பிகையுடன் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றேன்.

தோற்கடிக்கப்பட்டவர்கள் எல்லோரும் தோற்றுப்போனவர்கள் அல்லர், அழிக்கப்பட்டவர்கள் எல்லோரும் அழிந்துபோனவர்களும் அல்லர் என்பதற்கு உலக வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உண்டு.

துருக்கிய பேரரசாலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளாலும் காலத்திற்கு காலம் அழிக்கப்பட்டு வெறும் கற்குவியலாக்கப்பட்ட உரோமானிய தேசம். அந்தக் கற்களையே தம் மூலதனமாக்கி சீமெந்து உற்பத்தியில் பெரும் சாதனையீட்டி இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றது. அந்தக் கற்களில் எழுதப்பட்ட சோக காவியங்கள் இன்று வசந்த கீதங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

ஒரு தேசமோ ஒரு இனமோ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பேரழிவுகளுக்கு முகங்கொடுக்கும்போது மீளெழுவதற்கு இன்னுமொரு பாதை உண்டு என்பதை ஜப்பானியர்களும் உரோமானியர்கள் இன்று முழு உலகத்திற்கும் நிரூபித்துவிட்டனர். நாம் பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டப்பட்டோம்.

உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் எமது இராணுவ பலத்தையும் எமது சந்ததியையும் அழிப்பதற்கு உரிய நியாயப்பாட்டை எம்மை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துக்கொண்டதன் மூலம் ஏற்படுத்திக்கொண்டன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழ்மக்களுக்கெதிராக ஒரு பெரும் யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

பல்லாயிரம் தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் ஆயிரமவர் ஊனமாக்கப்பட்டனர், காணாமல் போனோரின் தொகை இன்னமும் கணக்கிடப்படவில்லை, பலகோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. சூறையாடப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக வெறுங்கைகளுடன் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டோர் தொகை லட்சங்களாக உயர்ந்தது.

இப்பேரழிவின் பின்னால், இலங்கை அரசுக்கு உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பெரும்பங்களிப்பை வழங்கின. இன்று இப்போரின் எம்மீது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தி சிங்கள தேசத்தின் கழுத்தை நெரிக்க, வல்லரசுகள் தங்கள் கரங்களை நீட்டுகின்றன. அதாவது எங்களை அழிக்க உங்களுக்கு தோள்கொடுத்தவர்கள் இன்று உங்களை அடிமைப்படுத்த எங்களைப் பாவிக்கின்றனர்.

மதிப்பிற்குரிய எங்கள் சகோதர்களே எங்களுக்கெதிராக உங்களையும் உங்களுக்கெதிராக எங்களையும் பாவித்து எங்கள் எல்லோரையும் அடிமைகொள்ள முயலும் இவர்களின் வழியில் நாம் தொடர்ந்து விழத்தான் வேண்டுமா?

நாம் ஒரு தேசத்தின் இரு தேசிய இனங்களாக அங்கீகரிக்கப்பட்டதுண்டு. நாங்கள் எங்களையும், எங்கள் தேசத்தையும் தற்காத்துக்கொள்ள வேண்டாமா? இரு இனங்களுக்குமிடையேயான புரிந்துணர்வும் நல்லடக்கமும் வேறு இப்போது அவசியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நமது இராணுவ வலிமை அழிக்கப்பட்ட பின்பு, எமது உரிமைகளுக்கான போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்பு, எங்கள் பலவீனமான நிலைமையை மீறி மேலாதிக்கம் செலுத்துவதன் மூலம் ஒரு ஐக்கியத்தை உருவாக்கிவிட முடியும் என்ற ஒரு தவறான பார்வை உங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கலாம்.

இத்தகையதோர் பார்வையும் அதன் வேர்களில் இருந்து எழுந்த சிந்தனைப்போக்குமே நமது அறுபது வருட போராட்டத்திற்கும் முப்பது வருட ஆயுதப்போராட்டத்திற்கும் அடிப்படை என்ற உண்மையை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய காலமிது. மீண்டும் குருதி சிந்தும் நாட்களை உருவாக்கும் காரணிகளை தயவுசெய்து உங்கள் எண்ணங்களிலிருந்து தூக்கி தூர வீசிவிடுங்கள். அடக்குபவர்களுக்கும் அடக்கப்படுபவர்களுக்கும் இடையே ஐக்கியம் நிலவியதாக வரலாறு இல்லை. நிம்மதி கிடைத்ததாக உதாரணங்கள் இல்லை. நாங்கள் நாங்களாகவும் நீங்கள் நீங்களாகவும் கரங்கோத்து நின்று எங்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவோம்.

எங்கள் கழுத்தை உங்கள் கரங்கள் நெரிக்கவேண்டாம். உங்கள் கரங்களை எங்கள் பற்கள் காயப்படுத்த வேண்டாம். உங்களுக்கென ஒரு பாரம்பரிய வாழ் நிலம், மொழி, பொருளாதாரம், தனித்துவமான கலாச்சாரம் உண்டு. எமக்கும் இவை அனைத்தும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

அன்புக்குரியவர்களே இலங்கை மக்களாகிய நாங்களும் நீங்களும் பேரழிவுகளைச் சந்தித்த அதேவேளையில் அந்நிய ஆயுத வியாபாரிகளும் தரகர்களும் கோடிகோடியாக இலாபம் வைத்து எம்மைக் கொள்ளையடித்தார்கள். இதுமட்டுமா போரின்போதும் அதன்பின்பும் எமக்குப் பலவித நெருக்கடிகளைக் கொடுத்து எமது மூலவளங்களையும் மனித உழைப்பையும் கொள்ளையிடுகின்றார்கள்.

புல்மோட்டையில் இல்மனைட் வளமும் கொள்ளையடிக்கப்படுகின்றது. வடக்கின் சுண்ணக்கல் வளமும் எண்ணெய் வளமும் இந்தியாவால் அபகரிக்கப்பட திட்டம் தீட்டப்பட்டுவிட்டன. இன்னொருபுறம் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட ரஷ்யா ஒப்பந்தம் எழுதிவிட்டது. சேது சமுத்திர திட்ட மூலம் எமது கடல்வாழ் உயிரினங்களின் வளம் அழிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் கரங்களுக்கு போய்விட்டது. சுதந்திர வர்த்தக வலயம் அந்நிய முதலீடுகளைக் கவர்தல் என்ற பெயரில் எமது மக்களின் மனித உழைப்பு மலிவான விலையில் கொள்ளையிடப்படுகின்றது.

இலங்கை "பெண்களின் சொர்க்கம்" என்ற விளம்பரம் செய்யப்படும் அளவிற்கு உல்லாசப் பயணத்துறை என்ற பெயரில் கலாச்சார பாரம்பரியமூட்டல்களால் பெண்கள் கேவலப்படுத்தப்படுகின்றனர். பதினான்காயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர் வெளிநாட்டவரின் பாலிய வக்கிரத்திற்கு பலியாகி எதிர்காலத்தை இழக்கின்றார்கள்.

ஆம், எங்கள் மூலவளங்களும் மனித உழைப்பும் கொள்ளையிடப்பட்டு எமது தேசம் ஒட்டாண்டி நிலைக்கு தள்ளப்படுகின்றது. இப்பேராபத்தில் இருந்து எம்மை நாம் மீட்க நாம் உரிமை கொண்டு ஐக்கியப்பட்டு எழுச்சிபெற வேண்டும். இந்நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை என எதுவுமில்லை என்பது வெறும் வெற்றுக்கோசமாக இருந்துவிடக்கூடாது. இனியும் அடக்குபவர்களோ அடக்கபடுபவர்களோ இல்லை என மிளிருபடவேண்டும் என்பதே நமது அவாவாகும்.

நிற்க, இப்படியான ஒரு புறச்சூழலில் இப்போரின் கொடுமைகளையும் அதன் பின்னரான காலத்தில் கொடுமைகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் கிளிநொச்சி முல்லத்தீவு மாவட்ட மக்களின் இடர்களை கவனித்து களைவதில் முக்கிய பணி எனக்கு அதிகமாக உள்ளதாகவே நான் உணர்கின்றேன். நாம் போருக்கு நேரடியாகவே முகங்கொடுத்தவர்கள். இந்த போர் எங்கள் மீது விமானங்கள் குண்டுகளை வீசியது, எறிகணைகள் எங்கள் உடல்களை துளைத்தன. துப்பாக்கி வேட்டுக்கள் எங்களை துளை போட்டன. மரணம் எங்களை விரட்ட விரட்ட இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து ஓடினோம், போகுமிடம் தெரியாமலேயே வெட்டவெளிகளில் வீதியோரங்களிலும் கூடார வாழ்க்கையை ஏற்றோம். மீண்டும் மீண்டும் போர் எங்களை துரத்திய போதும் ஓடினோம். இருப்பினும் மரணங்களைத் தவிர்க்க முடியவில்லை. உடலுறுப்புக்கள் இழப்பதை தவிர்க்க முடியவில்லை. இறந்த உடல்களை எடுத்து புதைக்கவும் வழியின்றி ஓடினோம். உணவில்லை குடிக்க நீரில்லை இயற்கை கடன்களை கழிக்க இடமில்லை, அடுத்த நிமிட உயிர்வாழ்வு பற்றிய நம்பிக்கைக்கு இடமில்லை, முள்ளிவாய்க்காலுக்குள் மூன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோர் முடக்கப்பட்டோம்.

உலகின் நற்பண்புகளுக்கும் மனிதாபிமானமாக காட்டப்பட்ட நடவடிக்கைகள் எங்களை மரணக்குழிகளுக்குள் தள்ளின. இறந்தவர் போக எஞ்சியோர் நந்திக்கடல் தாண்டினோம். வவுனியாவில் அகதிமுகாமுக்குள் எங்கள் வாழ்வு முடக்கப்பட்டது. உணவுக்களஞ்சியமான வன்னிமண்ணில் உற்பத்தியைப் பெருக்கி மற்றவருக்கு உண்டி கொடுத்த நாம் ஒருபிடி சோற்றுக்கு கையேந்தி வரிசையில் நின்றோம். இன்று எம்மில் ஒரு பகுதியினர், ஆறு தகரங்களுடனும் ஆறுமாத நிவாரண பொருட்களுடனும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டோம். ஏனையோர் இன்னும் முகாம்களில். போர் முடிந்து ஓர் வருடம் ஓடிப்போய்விட்டது. எம் துயரங்கள் முடிய இன்னும் எத்தனை வருடங்கள் போகும் என்பது எமக்குள்ள கேள்வி. போராளிகள் என்ற பெயரில் இன்னமும் பல ஆயிரமவர் தடுப்புமுகாம் அவலங்களுக்குள் தவிக்கின்றனர். பெற்றோர்கள் தம் பிள்ளைகளைப் பார்த்துவிட மணிக்கணக்காக மழையிலும் வெயிலிலும் காத்துநிற்கின்றனர். இன்னும் எத்தனையோ பெண்களும் பிள்ளைகளும் எங்கையென்று அறியமுடியாது உறவினர் அலைந்து திரிகின்றனர் . ஒவ்வொரு நாளும் காயப்பட்டு சிகிச்சைக்காக உலங்குவானூர்தியில் ஏற்றப்பட்ட எத்தனையோ பேரை தேடி விளம்பரங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இச்சபையில் பெருமைக்குரிய உறுப்பினர்களே ஒரு ஜனநாயக தேசத்தில் இதுதான் எங்கள் வாழ்வு. இதிலிருந்து நாம் மீளெழ வேண்டும். அந்நிய தேசங்கள் நமது நாட்டின் மூலவளங்களையும் மனித வளங்களையும் கொள்ளையடிப்பதுடன் எமது இறைமையை நிறைவேற்றுவதுடன் பாதுகாக்கவும் நாம் உங்களுடன் ஒன்றிணைய காத்திருக்கின்றோம். ஆனால் நாம் மனிதர்களாக வாழும்போது மட்டும்தான் அது சாத்தியப்படும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாம் எல்லோரும் இந்நாட்டு மக்களென மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் வார்த்தைகளை நேசிக்க முயலுங்கள். உரிமை பறிக்கப்பட்டவர்களும் உரிமை பறிப்பவர்களும் ஒரே சகோதரர்களாக எப்படி வாழமுடியும்? எங்கள் சகோதர்களே மக்கள் சார்பில் மீண்டும் நான் உங்களைக் கேட்பது, மீண்டும் எங்கள் வாழ்வை ஆரம்பிக்க எமக்கு வழிவிடுங்கள். உருளும் உலகப்பந்தின் இந்த அழகிய மாங்கனித் தீவிலே கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால வரலாற்று சிந்தனையை கைவிட்டு, இருபத்தோராம் நூற்றாண்டுக்குரிய நவீன சிந்த்னையின்படி இனப்பிரச்சினையை அணுகவேண்டும். சிங்கள மக்களும் தமிழ்பேசும் மக்களும் இலங்கைத் தீவின் இணை உரிமையாளர்களும் இணைப் பங்காளர்களும் என்ற மனபாங்குடன் ஒரு புதிய அரசியலை அணுக அரசாங்கம் தயாராக வேண்டும்.

தற்போது சிங்கள மக்களிடம் தமிழரை வெற்றிகொண்ட மனப்பாங்கும், தமிழரிடம் வேதனையும் வெறுப்பும் நிறைந்த நிலையும் காணப்படுகின்றது. ஒரே நாடு ஒரே மக்கள் என்று சொல்லிக்கொண்டே பூநகரி வெற்றி விழாவையும், கிளிநொச்சி வெற்றி விழாவையும், முள்ளிவாய்க்கால் வெற்றி விழாவையும் கொண்டாடிய தினமும், இனிவரும் நாட்களில் மே மாதம் 12ம் திகதி முதல் 18ம் திகதிவரை கொண்டாடப்படவுள்ள இராணுவ வெற்றிவிழாவும், தமிழர்களின் மனங்களை எப்படி உடைத்து சிதறிடிக்கப்போகின்றது என்பதை சிந்தியுங்கள். இராணுவத்தால் தீவு நிரம்பி வழிந்து ஒன்றுபட்டது போல் காணப்பட்டாலும், மனத்தால் தீவு இரண்டுபட்டே இருக்கின்றது. புத்தபகவான் பரிநிர்வாணம் அடைவதற்காக தவமிருந்தார் என்ற மகிமை சிங்கள மக்களுக்கு தெரியும்.

சுதந்திர இலங்கையில் இதுவரை இரண்டரை லட்சத்திற்கும் மேலான உயிர்களை இழந்து தமிழ்மக்கள் தமது உரிமைக்காக தவமிருக்கின்றார்கள் என்ற உண்மையை சிங்கள சகோதரர்களும் இந்த உலகமும் புரியும் நாள் வந்திருக்கின்றது. தன் சொந்த சகோதர இனத்துடன் அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொள்ள தயாரில்லாமல், அந்நிய நாடுகளிடம் கையேந்தி தனது சொந்த தமிழ் மக்களுக்கெதிரான அரசியலை வலைவீசி வரும் அரசாங்கங்கள் நடத்தியதன் விளைவாய் இலங்கைத் தீவை அந்நிய அரசுகளின் காலடிக்குள் சிக்குண்டிருப்பதையும் ஆட்சியாளர்கள் உணர இன்னும் எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியாது.

ஒரு இனத்தை எந்த இனம் ஒடுக்குகின்றதோ அந்த இனமும் அமைதியாக இருக்க முடியாது அந்த நாடும் சுபீட்சம் அடைய முடியாது. அத்துடன் எம் ஓரினத்தை ஒடுக்க எடுத்த நடிவடிக்கைகளின் விளைவால் அந்நிய தேசங்களிடம் அடிமைப்பட்டு போகவும் நேரும். சுதந்திரமும் சுபீட்சமும் நிறைந்த இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமென்றால், அது ஏனைய இனங்களின் தனித்துவ உரிமைகளை அங்கீகரிப்பதிலும் அவர்களுடன் அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்வதிலுமே அதனை ஆரம்பிக்க வேண்டும். அதற்கான துணிச்சலையும், தூரப்பார்வையையும், இன்றைய அரசாங்கம் முன்னெடுக்குமா என்பதே இன்றைய கேள்வியாகும்.

முதிர்ந்த அரசியல் அனுபவமிக்க சம்பந்தர் ஐயா தலைமையில் இதற்கான வாய்ப்பை அளிக்க எமது கட்சி தயாராக உள்ளது. இத்தகைய அரிய வரலாற்று வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்ல தீர்வை ஏற்படுத்தி, புதிய இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக வேண்டும். இதனை தவறவிட்டால், வரலாறு தான் விரும்பும் இன்னொரு திசைக்கு தீர்வை இட்டுச் செல்லும் என்பது திண்ணம்.

சுனாமியாலும் யுத்தத்தாலும் அழிந்து சின்னாபின்னப்பட்டிருக்கும் தமிழ்பேசும் மக்களின் மனங்களைப் புரிந்து அவர்களின் துன்பங்களைப் பகிர்ந்து அவர்களின் தனித்துவமான உரிமைகளை புரிந்து அதற்கேற்ப நியாய பூர்வமானதும் நீதியானதுமான தீர்வை காணவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. நாம் இரு சுதந்திரமான தேசிய இனங்களாக ஒரு நாட்டின் மக்களாக ஒன்றினைந்து நம் தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற பிரகடனத்தை மனமுவந்து நாம் அனைவரும் நினைப்போம் என்று கூறி என் கன்னி உரையை நிறைவு செய்கின்றேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கன்னி உரை, புதிய எழுச்சிக் குரலாகவும், நியாயபூர்வமான நேசக் குரலாகவும் இருந்ததாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்

நன்றி - 4தமிழ்மீடியா

Sunday, May 2, 2010

பத்திரிகையாளர்களுக்கு காமராஜர் சொன்ன அறிவுரை!




சொத்து சுகம் நாடார்
சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார்
பொருள் நாடார்
தான்பிறந்த அன்னையையும் நாடார்
ஆசைதனை நாடார்
நாடொன்றே நாடித் – தன்
நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்
-பெருந்தலைவர் காமராஜர் பற்றி கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகள் இவை. இந்த வரிகளுக்கு ஒரு விளக்கவுரை எழுதியதுபோல, விகடன் இந்த வாரம் பெருந்தலைவர் பற்றிய 25 குறிப்புகளைத் தந்துள்ளது. அந்தக் கட்டுரை…

இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்… என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்! 25 துளிகளுக்குள் அடக்கிவிட முடியாத மகா சமுத்திரமாக வாழ்ந்த கர்மவீரர்!

காமாட்சி என்பது பெற்றோர் வைத்த பெயர். ராஜா என்றே உறவினர்கள் அழைத்தார்கள். காமாட்சியும் ராஜாவும் காலப் போக்கில் இணைந்து காமராஜ் ஆனது. டெல்லிக்காரர்களுக்கு ‘காலா காந்தி’, பெரியாருக்கு ‘பச்சைத் தமிழர்’, காங்கிரஸ்காரர்களுக்கு ‘பெரியவர்’. இன்று வரை பெருந்தலைவர் என்றால் அவரே!

‘இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்’, ‘அப்படி ஏன் சொல்றேன்னேன்’, ‘ரொம்ப தப்புன்னேன்’, ‘அப்பிடித்தானேங்கிறேன்’, ‘அப்ப பாப்போம்’, ‘ஆகட்டும் பார்க்கலாம்’ போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!

நிறையப் பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோ டு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதை மீறித் திறந்த சிலை இவருடையதுதான்!

அரசியலில் அவருக்கு குரு தீரர் சத்திய மூர்த்தி. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜ் இருக்க… செயலாளராகச் செயல்பட சத்தியமூர்த்தி மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்!
தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், ‘கொஞ்சம் நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், ‘அதுக்கா இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்!

மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!

சினிமா அவருக்குப் பிடிக்காது. ‘ஒளவையார்’ விரும்பிப் பார்த்திருக்கிறார். ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படத்தைப் போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். அவர் கடைசியாகப் பார்த்த படம் ‘சினிமா பைத்தியம்’!

சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், ‘கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க’ என்று வாங்க மறுப்பார்!

மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. ‘நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு’ என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!
பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். ‘நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?’ என்று கமென்ட் அடித்தார்!

இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். ‘கிங் மேக்கர்’ என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

பத்திரிகையாளர்களுக்கு அவரது அறிவுரை… ‘ஒண்ணு, நீங்க பத்திரிகைக்காரனா இருங்க. அல்லது அரசியல்வாதியாவோ பிசினஸ்மேனாவோ இருங்க. மூணாகவும் இருக்க முயற்சி பண்ணாதீங்க!’

மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற ‘கே.பிளான்’ போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். ‘எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்’ என்றார்!
ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தாராம்!

அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பிரஸ்மீட். 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். ‘இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று மட்டுமேசொல்லி விட்டு இறங்கினார்!

நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார்!
கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்!

‘ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!’ என்று அவரது அறிவாற்றலை மெச்சினார் ஆர்.வெங்கட்ராமன்!

தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!

தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!

‘தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை’ – காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!
விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். ‘இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!’ என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.
கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!

ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!

இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, ‘டாக்டர் வந்தா எழுப்பு… விளக்கை அணைச்சிட்டுப் போ’ என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!