Thursday, July 22, 2010

கறுப்பு ஜுலை 83 – ஒரு அனுபவப் பகிர்வு

ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட ‘தரப்படுத்தல்” என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது.

தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப் பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் எழுந்தது. ஆனால் துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. அதுவும் அவர்களால் வெளிப்படையாக தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.

இந்த நிலையில்தான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு இருபத்திமூன்றாம் திகதி திருநெல்வேலி மண் ஈழத் தமிழினத்தின் போராட்டத்தைப்பற்றிச் சிந்திக்காத மனப்பான்மைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.திருநெல்வேலியில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் அழிக்கப்பட்ட செய்தி கேட்ட தூங்கிக் கிடந்த ஈழத் தமிழினம் சோம்பல் முறித்துக்கொண்டது. அரச படை இயந்திரங்களை எதிர்த்துப் போரிட முடியுமா என்ற கேள்வியே ஈழத் தமிழினத்தால், குறிப்பாக தமிழின அரசியல் மேடைப்பேச்சுத் தலைவர்களால் நினைத்துப்பாராததொன்றாக இருந்தவேளையில், திருநெல்வேலித் தாக்குதல் ஒரு விடிவெள்ளியாகியது.

ஈழத்தமிழனின் கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் தீடீர் வளர்ச்சிக்கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தது.ஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு யூலைக் கலவரமானது பெரும்பாலான ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அந்தவகையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே இரைமீட்க விரும்புகிறேன்.அப்போது நான் கொழும்பில் தெமட்டகொட என்ற இடத்தில் ஒரு சிங்கள வீட்டு அறையொன்றில் வாடகைக்கு குடியிருந்தேன். மருதானையில் அமைந்துள்ள ‘தில்லீஸ் குறூப்” என்ற நிறுவனத்தின் கணக்குப் பகுதியில் கடமையாற்றிக்கொண்டிருந்தேன்.

‘தில்லீஸ் குறூப்”பின் கீழே பல வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின. அவற்றில் ஒன்று கல்கிசை என்னும் இடத்தில் கடற்கரையை அண்மித்திருந்த ‘தில்லீஸ் பீச் ஹோட்டல்” என்ற வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலாகும். அன்று 1983 யூலை 23ம் திகதி என்று நினைக்கிறேன். அதாவது இனக்கலவரத்துக்கு முதல்நாள். சில கணக்குச் சம்பந்தமான அலுவல்களுக்காக அங்கே சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிட்டது. கல்கிசையில் இருந்து தெமட்டகொட வரவேண்டுமானால் 154 இலக்க வஸ் எடுக்கவேண்டும். அந்த வஸ் பொரளை என்ற இடத்தினூடாக தெமட்டகொடவுக்கு செல்லும். வஸ் பொரளையை அண்மித்தபோது அதன் வேகம் குறைந்தது. அது பொரளையில் கனத்தை மயானம் அமைந்துள்ள பகுதி. அங்கே பெருந்திரளான மக்களும் பொலீசாரும் திரண்டிருந்தார்கள். வாகனங்கள் அதற்கப்பால் செல்ல இயலாதவாறு ஒரே சன நெரிசல். திருநெல்வேலியில் பலியான இராணுவச் சடலங்கள் கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட இருந்ததால்தான் அந்தச் சனத்திரள் என்பதை மறுநாள்தான் என்னால் அறியமுடிந்தது. பஸ் வண்டி வேறொரு பாதை வழியாக தெமட்டகொடவை அடைய, வீடு செல்லக்கூடியதாக இருந்தது.

மறுநாள் காலை ஏழு மணியிருக்கும். வீட்டு உரிமையாளர் அவசரமாக அறைக்கதவைத் தட்டும் சத்தம்கேட்டு எழுந்தேன். அந்த சிங்களவர் தலையில் கையை வைத்தவாறு, ‘தெமட்டகொட சந்தியிலுள்ள தமிழ்க் கடைகள் யாவும் அடித்து நொறுக்கப்படுகிறதென்றும், பெரிய பிரச்சினை ஒன்று கொழும்பில் ஆரம்பமாகிவிட்டது” என்றும் கூறி, என்னை வெளியே போகாமல் பாதுகாப்பாக இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.ஒரு மணித்தியாலம் கழிந்திருக்கும். வெளியே சென்ற வீட்டு உரிமையாளர் வியர்த்து விறுவிறுக்க வந்தார்.’தமிழர்களை வைத்திருக்கிற சிங்களவர்களுடைய வீடுகளையும் எரிக்கிறார்களாம். அதனால் நீ இங்கிருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது” என்றார்.மாதக் கடைசி. கையில் பணமில்லை.

வேலைத்தலத்தில் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மருதானையை நோக்கி விரைந்தேன். அனேகமாக வேலைக்கு ஒரு குறுக்குப் பாதை வழியாக நடந்துதான் போவேன். அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து நின்றது.அதிலிருந்து வியர்த்து விறுவிறுத்தவாறு இரண்டு சிங்களவர்கள் இறங்கி என்னை கூப்பிட்டு, தங்களுடன் சேர்ந்து அந்த ‘ஓட்டோ”வை தள்ளிவிடுமாறு கூறினார்கள். கைகளில் கத்தி பொல்லுகளுடன் விழிகள் சிவப்பைக் கக்க, விகாரமான முகங்களுடன் நின்றிருந்தவர்களுக்கு நான் தமிழன் என்று அடையாளம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அந்த நேரம் என்னிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.

மனதில் பயம் தோன்றினாலும், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு என்னை இனங்காட்டக் கூடாதென்ற நிலமையில் அவர்களுடன் ஒருவனாக அந்த ‘ஓட்டோ”வைத் தள்ள ஆரம்பித்தேன்.அந்த ‘ஓட்டோ”வினுள் இரண்டு மூன்று பெரிய ‘சூட்கேஸ்கள் அரைகுறையாக திறந்தநிலையில் உடுபுடவைகளும் நகைகளுமாக வெளியே தெரிந்தன. அந்த ‘சூட்கேஸின்” வெளிப்பகுதி எங்கும் ஈரம் காயாத இரத்தக்கறைகள் வியாபித்திருந்து, எங்கோ ஒரு வீட்டில் தமிழுயிர்கள் அந்த இரு காடையரினால் கொடூர அவலத்துக்குள்ளாகி, தமது சொத்துக்களையும் பறிகொடுத்ததை எடுத்தியம்பின. சிலசமயம் அந்த உயிர்களும் பறிபோயிருக்கலாம்.எனினும் என்ன பயன்?எனது உயிர்ப் பாதுகாப்புக்காக அந்த ‘ஓட்டோ” தொடர்ந்து முன்னே செல்ல, கைகொடுத்துவிட்டு, கையாலாகாத்தனத்துடன் எனது வேலைத்தலத்தை நோக்கி விரையலானேன்.அது திறக்கப்படவில்லை.மீண்டும் வீட்டை அடைந்தேன். எனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த வீட்டு உரிமையாளர், கைச்செலவுக்கு சிறிதளவு பணத்தை கேட்காமலேயே தந்தார்.
எங்கே போவது? எவரிடம் உதவி கேட்பது?யோசித்து முடிவெடுக்க முடியவில்லை.வீதியால் செல்லும் வஸ் வண்டிகளிலிருந்து ‘ஜயவேவா, ஜயவேவா” என்ற பலநு}று குரலொலிகள் எழுந்து சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்திக்கொண்டிருந்தன.வேலைக்கென வந்து மக்கள் வீதியெங்கும் கும்பல் கும்பலாக தமிழனின் அவலத்தை வேடிக்கை பார்த்தவாறு மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தார்கள்.அப்போது ஒரேயொரு வழிதான் தென்பட்டது.கல்கிசையில் அமைந்திருந்த ‘தில்லீஸ் பீச் ஹோட்ட”லுக்குச் செல்வது என்பதுதான். அது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான ‘ஹோட்டல்” என்பதால், அதுவே பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்தேன்.தெமட்டகொடவிலிருந்து கல்கிசைக்குச் செல்லவேண்டும்.

பொரளையூடாகவும் போகலாம். மருதானை ஊடாகவும் செல்லலாம். கலவரம் ஆரம்பமான இடம் பொரளை என்பதால், மருதானை ஊடாகச் செல்ல ஆரம்பித்தேன். நடந்து செல்வதே பாதுகாப்பானதாகத் தோன்றியது.

மருதானை, நகரமண்டபம் எல்லாவற்றையும் கடந்து கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது, சில நு}று மீற்றர் முன்னால் காடையர் கூட்டமொன்று பல தமிழர் வர்த்தக ஸ்தாபனங்களைக் கொள்ளையிட்டு, அவற்றை எரித்தவாறு சென்றுகொண்டிருந்தது.அவர்களின் பின்னால் ‘ஜயவேவா” என்ற கோசங்களுடன் ஒரு கூட்டம். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு வந்து, அலுவலகங்கள் திறக்காததால் திரும்பிச் செல்பவர்கள். தமிழரின்மீது நடாத்தப்படும் அராஜகங்களைப் பார்த்து வேதனைப்படும் சிங்கள மக்களும் அந்தக் கூட்டத்தில் இல்லாமலில்லை.

இராணுவத்தினர் ‘ட்ரக்”குகளில் பெற்றோலைக் கொண்டுவந்து அந்தக் காடையர்களுக்கு விநியோகிப்பதையும், ‘ஜயவேவா” என்று கத்தி உற்சாகமூட்டுவதையும் காணக்கூடியதாக இருந்தது.
பல சரக்குக் கடைகளைச் சூறையாடி அதிலிருந்த இனிப்பு, குமிழ்முனைப் பேனா போன்றவைகளை அந்தக் காடையர்கள் சனங்களை நோக்கி வீசுவதையும் அவற்றை அந்தச் சனங்கள் முண்டியடித்தவாறு பொறுக்கி எடுத்து ஆனந்தம் அடைவதையும் பார்த்தவாறு மெல்லமெல்ல அவர்களோடு ஒருவனாக நகர்ந்துகொண்டிருந்தேன்.

பம்பலப்பிட்டி என்ற பகுதியை அண்மித்தபோது காடையாரின் தொகையும், தாக்குதல்களும் மிகவும் அதிகரித்துவிட்டது. சுற்றிநிற்கும் கூட்டத்திலே எவராவது தமிழர்கள் உள்ளார்களா என நோட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றிநிற்கும் மக்களின் ஆதரவும், இராணுவத்தினரின் பெற்றோல் விநியோக உதவியும் காடையரின் உற்சாகத்தைக் கூட்ட, அவர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது.

பம்பலப்பிட்டி சரஸ்வதி லொட்ஜ் என்ற தோசைக்குப் பெயர்பெற்ற அந்தச் சைவக் கடையின் பலகைக் கதவுகளை நொறுக்கித் திறந்து, உள்ளேயிருந்து வேட்டியணிந்த ஒரு பெரியவரை வெளியே இழுத்து வந்து ஏதோ செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பாவம் அந்தப் பெரியவர் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, தேகம் நடுங்க அந்தக் காலி வீதியில் மண்டியிட்டு இருகரம் கூப்பி அந்தக் காடையர்களைக் கும்பிடலானார். அருகில் உடைந்து சிதறியிருந்த அந்தக் கடைக் கதவுப் பலகையொன்றால் அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தான் அந்தக் காடையர்களில் ஒருவன். இரத்தம் குபீரெனப் பாய்ந்தது.

கண் முன்னால் ஒரு கொலையொன்று நிகழப்போகிறதோ என்ற பீதியுடன் உடல் உறைய நின்றிருந்தேன்.
அப்போது சில சிங்களப் பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்து அந்த முதியவருக்கும் காடையருக்கும் இடையே ஒரு பாதுகாப்புக் கவசமாக நின்றுகொண்டு, அந்தக் காடையரைப் பார்த்து ஏசிக் கத்தினார்கள்.

அங்கே அந்தத் தமிழ் முதியவரது உயிர் பிழைத்துக் கொண்டது.அந்தச் சிங்களப் பெண்களின் தாய்மை உள்ளத்துக்கு மனதாரத் தலை வணங்கியவாறு, மேலும் அந்த வழியால் தொடர்ந்து செல்வது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுடன் கடற்கரைவழியாகக் கல்கிசையை அடையலாம் என்ற முடிவில், கடற்கரையில் அமைந்துள்ள தண்டவாளத்தின் வழியாக கல்கிசையை நோக்கி நடக்கலானேன்.

வெள்ளவத்தையில் காலிவீதியிலிருந்து கடற்கரை நோக்கி குறுக்காக அமைந்த வீதியெங்கும் ஒரே புகைமயமாகவும், மக்களின் அபயக் குரல்களாகவும் அந்த கடல் காற்றிலே கலந்துகொண்டிருந்தது.நான் ராஜசிங்க வீதியை அண்மித்தபோது பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.சில காடையர்களும், ஒரு புத்த பிக்குவும் கையில் கத்தி பொல்லுகளுடன் வந்துகொண்டிருந்தார்கள்.ஆபத்து பின்னால் நெருங்குவதை உணர முடிந்தது.

ஓடினால் ‘தமிழன்” என்று இனங்கண்டு துரத்திப் பிடித்துவிடுவார்கள்.நடையின் வேகத்தை அதிகரித்தேன்.
எனினும் கல்கிசைக்கு இன்னும் து}ரமிருந்தது. அப்போது வெள்ளவத்தையில் போய்க்கொண்டிருந்தேன். கல்கிசையை அடைய தெகிவளை என்னும் இடத்தையும் தாண்டியாகவேண்டும்.கல்கிசையை சென்றடைவேன் என்ற நம்பிக்கை பின்னால் வந்தவர்களின் தொடர்தலால் மெல்லமெல்ல அகன்று கொண்டிருந்தது.

வீதி எங்கும் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுடன் அரங்கேறிக்கொண்டிருந்த ஈழத்தழிழர்மீதான அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் நேரடியாகவே பார்த்தவாறு வந்ததால், அந்த புத்த பிக்குவுடன் பின்தொடரும் காடையர்களால் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணம் என் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.

அப்போது இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பல தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பது மண்டபக் கண்ணாடிச் சுவர்களினுாடே தெரிந்தது.
அப்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பிரயாணசேவையை நடாத்திக் கொண்டிருந்த பிள்ளையார் ஸ்ரோர்ஸ் சொகுசு வஸ் ஒன்று அரைகுறையாக எரிந்து புகைய, மண்டப முன் கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருந்தன.
அவசர அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்தக் காடையர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு மண்டபத்தினுள்ளே இருந்த பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அப்போது அந்த மிஷன் சுவாமிகள் காவியுடையுடன் முகத்தில் அமைதி தவழ, அபயக் குரலெடுத்து அலறும் அந்த அப்பாவி தமிழர்களை விலத்தியவாறு, புத்த பிக்குவின் முன்னால் வந்து நின்றுகொண்டார்.என்னை அழித்துவிட்டு, அப்பால் சென்று உங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்னும் போக்கில் ஒரு காவியுடை தரித்த துறவி.தமிழர்களை அழித்தே தீருவேன் என்னும் நோக்கில் இனவெறி கண்களில் தெறிக்கக் காடையருடன் இன்னொரு காவியுடை தரித்த புத்த துறவி.இரண்டு வேறுபட்ட குணாம்சம் பொருந்திய துறவிகள் நேரடியாகச் சந்தித்தார்கள்.

அந்த புத்த துறவிக்கு அங்கே குற்றத்தை உணரும் மனப்பக்குவம் ஏற்பட்டதோ, என்னவோ, அவர் காடையர்களை அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டார்.சிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் யாபேருக்கும் சுடச்சுடத் தேனீர் பரிமாறப்பட்டது.பாலைவனத்தில் ஒரு துளி நீர் கிடைத்ததுபோன்ற உணர்வெழுந்தது.சுற்றிலும் ஒரே புகைமயமாக இருந்தது. பல தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டும் எரியூட்டப்பட்டும் மக்கள் அநாதரவாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.குழந்தைகள் பசியால் கதற ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையுமே பசி வாட்டி வதைத்தது.

இனிமேல் என்ன நடக்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது.இரவு எட்டு மணியிருக்கும்.முன்னே பொலீஸ் ஜீப் வண்டி வர, பின்னால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறிகள் மூன்று வந்தன.அவற்றில் ஏற்றப்பட்டோம். அவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியைச் சென்றடைந்தன.

லொறிகளிலிருந்து பரபரப்பாக இறங்கிய அனேகர் முண்டியடித்தக்கொண்டு உள்ளே ஓடினார்கள். ஏதாவது உணவு வழங்குகிறார்களோ என்று நோட்டமிட்டேன். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு வகுப்பறைகளாகத் தமக்கு இடம் ஒதுக்குவதில் ஈடுபட்டிருந்தார்கள்.உடமைகளையும் கட்டிக்காத்த செல்வங்களையும் இழந்து அகதிகளாக அவலங்களுடன் எதிர்காலமே சூனியமாகிவிட்ட நிலையில், ஒரு வகுப்பறையின் வெறும்தரையில் கையோடு எடுத்துவந்த சில சில்லறைப் பொருட்களை வைத்து இடம் பிடிப்பதில் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தப் போட்டியானது அப்போதிருந்து அகதி முகாமான பம்பலப்பிட்டி இந்துக் கல்லு}ரியில், ஒவ்வொரு சிறுசிறு விசயங்களுக்குமாய் சங்கிலிக் கோவையாய் பின்னிப்பிணைந்து வளர்ந்துகொண்டே சென்றது.

உறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில் போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி.
இத்தனைக்கும் மேலாக இலங்கைத் தமிழன், இந்தியத் தமிழன் என்று போட்டி. இத்தனை போட்டிகளும்அதனால் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகும் புதுப்புதுப் பிரச்சினைகளுமாக அகதிமுகாம் வாழ்வு வித்தியாசமான, அதேநேரத்தில் தமிழினம் எப்போது ஒற்றுமைப்படும் என்ற ஏக்கத்தையும் தந்ததென்றால் மிகையாகாது.

அழிவுகளும் அவலங்களும் ஈழத் தமிழினத்தின் சுயநல, சுகபோக தேடலை ஒருபுறமாகத் தள்ளி, விட்டுக்கொடுப்புக்களோடுகூடிய ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்குமா என்ற வினாவுக்கு ஒரு சாதகமான பதில் வெகுதொலைவிலேயே காத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது.ஒரு சம்பவம்…
ஒரு யாழ்ப்பாணக் குடும்பம். பல வருடங்களாக கொழும்பு வாழ்க்கை என்பதை அவர்களது செயற்பாடுகள் எடுத்தியம்பின. அவர்களுடன் ஒரு வீட்டுப் பணிப்பெண். அப்போது அங்கே எல்லோரும் அகதித் தமிழர்கள் என்றாலும், அவர்களைப் பொறுத்தளவில் அந்த இளம்பெண் பணிப் பெண்ணாகவே நடாத்தப்பட்டாள்.

பெரியதொரு கம்பளத்தை விரித்து அதிலே உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் அவர்களுக்காக வரிசைகளில் நின்று தண்ணீர் என்றும் உணவென்றும், அவர்களின் உடுபிடவைகளைத் தோய்ப்பதென்றும் உழைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள் உணவருந்தினாளா, உறங்கினாளா என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவள் என்னதான் பணிவிடை செய்தாலும், அவள்மீது வசைபாடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.அவளுக்கு அந்த முகாம் வதைமுகாமானது. அதிலிருந்து விடுபட அவளுக்கு தெரிந்த வழி அவளது வாழ்க்கையையே மாற்றியது. ஆம். அவள் அந்த முகாமில் ஒரு இளைஞனை திருமணம் செய்தாள். அந்தத் திருமணம் அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் முன்னிலையில் நிகழ்ந்தது.அந்த யாழ்ப்பாணக் குடும்பத்தின் அதிகாரத்துக்கு அவள் தனது திருமணத்தின் மூலம் கடிவாளமிட்டாள் என்பதுதான் யதார்த்தம்.

இந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு யூலையானது சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா? அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா?யாழ்ப்பாணத்துக்கு சரக்குக் கப்பலில் செல்லவென கொழும்புத் துறைமுகத்தில் நானும் சில நண்பர்களும் நின்றிருந்தோம்.பசித்தது.துறைமுகத்தில் சாப்பாட்டுப் ‘பார்சல்”களை சிலர் மலிவு விலையில் விற்பதுண்டு. அங்கு கடமையிலிருந்த இரு சிங்கள இளைஞர்களிடம் விசாரித்தோம்.

அவர்கள் உடனே விரைந்து சென்று சில சாப்பாட்டு பார்சல்களை எடுத்துவந்து தந்தார்கள்.பணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தார்கள்.’இது நாங்கள் சாப்பிட வைத்திருந்தவை. இந்தக் கலவரத்துக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இங்கு எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் மீண்டும் கொழும்புக்கு வரவேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம்.”
அவர்கள் கூறிக்கொண்டே போனார்கள்.
நாங்கள் அவர்களிடம் விடைபெற்று கப்பலில் ஏறினோம்.
கப்பல் காங்கேசன்துறையை நோக்கி நகர ஆரம்பித்தது..

நன்றி.மீனகம்
http://meenakam.com/?p=3141#more-3141

விடுதலை – வளைகுடாவிலிருந்து பண்டாரவன்னியன்

கட்டுமரமேறி கடலுக்குச்சென்றவனை
காணவில்லை என்று கரையெல்லாம் கூட்டம்
கட்டுமரம் மட்டும் கரைவந்து சேர்ந்தது
கட்டுமரக்காரனை காணவிலை

உற்றாரும் பெற்றாரும் கதறியழ
தேடிசெண்ற நண்பர்கூட்டம்
கண்ணீருடன் கரைவந்தது

என்னவென்றுகேட்டால் கொடுமையடா
பக்கத்து நாட்டு சிங்கள காடயர்
கொலைவெறி கொண்டு கொண்றனர் என

காதுக்குள் புகுந்தசேதி கோபத்தை தூண்டியது
முற்றத்தில் கிடந்தவனை சுற்றி கண்ணீருடன் உறவினர்
ஆத்திரமும் அழுகையுமாய் சென்றனர் நீதிகேட்டு

வந்து பார்த்த வயோதிபர் எழுதுகிறார் கடிதமொன்று
வீள்பவர் யாராயினும் ஆழ்பவன் நானாக
என்று தொடங்கிய கடிதத்தில் பாவம்
மீதம் என்ன அவரெழுத

மாண்டவர் மாண்டதுதான்
மீண்ட தமிழினமே இனியும் முடங்கிக்கிடவாதே
நீ வீறுகொண்டெழுந்தால் நானள உன் வரலாறு
இல்லையேல் உனை மதிக்கது தமிழினம்

சிவன் கையில் திரிசூலமும் முருகன் கையில் வேலும்
உனக்கு சொல்லுவது என்னவெண்று
உனக்கு புரியவில்லயா?

உன் பாட்டன் ராஜராசோழனின் வாள் எங்கே?
உன் முப்பாட்டன் தொடுத்த வில் எங்கே?
மானத்தமிழினமே விழித்தெழு
காலத்தின் தேவயை உனர்ந்து கொள்

கடலுக்கு மீன்பிடிக்க போகும் உனக்கு வலை வேண்டாம்
வேட்டைக்குவரும் கழுகுக்கூட்டத்தை வேட்டையாட
வீட்டுக்குள் பூட்டி வைத்த உன் வீர வாளை நிமிர்த்து
கொலைவெறிகாரனை கொன்று வீழ்த்து

வீரத்தமிழிமே மானத்தமிழினமே
மரணம் என்பது மனிதனுக்கு மாவீரனுக்கு அல்ல

கரிகாலன் சேனைகள் களமிறங்கும் காலம்
விரைவில்

– வளைகுடாவிலிருந்து பண்டாரவன்னியன்

பிரித்தானியாவில் இருந்து ஐ.நாவை நோக்கி நடை பயணம்



போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தியும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும், பிரித்தானியாவில் இருந்து ஜி.சிவந்தன் என்பவர் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.

கறுப்பு ஜூலையை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் நாள் இரவு 9:00 மணி முதல் 11:30 மணிவரை பிரித்தானியப் பிரதமர் இல்லத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ள இரவுநேரப் போராட்டத்தைத் தொடர்ந்து இவரது நடை பயணம் ஆரம்பமாகவுள்ளது.

மத்திய லண்டனில் இருந்து நடை பயணத்தை ஆரம்பிக்கும் சிவந்தன், ஏ-3 நெடுஞ்சாலையூடாக நடந்து போட்ஸ்மவுத் கடற்கரையைச் சென்றடைந்து, அங்கிருந்து பிரான்சின் கடற்கரையான கலையை அடைந்த பின்னர், ஜெனீவா நோக்கி நடந்துசெல்ல இருக்கின்றார்.

இவரது நடை பயணத்திற்கு சுமார் இரண்டு வாரங்கள் எடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் நாள் ஜெனீவாவை சென்றடைந்து, ஐ.நா மனித உரிமைகள் சபையில் மனுக் கையளிக்கப்பட இருக்கின்றது.

சிவந்தனின் நடை பயணத்தின்போது அந்தந்த நாட்டு மக்களிற்கு அவர்களின் மொழியில் அச்சிடப்பட்ட அவரது கோரிக்கைகள், மற்றும் ஈழத்தமிழ் மக்களின் நிலை பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படவுள்ளன.

அந்தப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரசபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் போன்ற சமூகத் தலைவர்களுனான சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளன. அத்துடன், சிவந்தன் மேற்கொள்ளும் இந்த நடை பயணத்தில் தத்தமது பிரதேசங்களில் தமிழ் மக்களும் இணைந்து நடக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

மாற்றுமொழி ஊடகங்களுக்கும் இது பற்றி அறிவிப்பதுடன், தமிழ் ஊடகங்களும் இந்த நடை பயணத்திற்கும், ஆங்காங்கே தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை, மற்றும் தமிழ் இளையோம் அமைப்பு போன்றன கேட்டுள்ளன.

இதேபோன்று பிரான்ஸ், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் மக்களும் இந்த நடை பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், சிவந்தனுடன் இணைந்து நடப்பதன் ஊடாக தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஐரோப்பிய மக்கள் முன்னலையில் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் எனவும் இந்த நடை பயணத்தை ஏனைய நாடுகளில் ஒழுங்கு செய்துள்ள ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மகிந்தவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையில் ஆஜராக தயார்: உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரீனோ

சிறீலங்கா அதிபர் மகிந்த இராசபக்சேவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையில் ஆஜராக தயார் என்று உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரீனோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஆண்டு தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்ச அரசு மீதான போர்க்குற்ற விசாரணையை நியூயார்க்கில் நேற்று ஐ.நா.நிபுணர் குழு தொடங்கியது. இக்குழுவிற்கு உதவுவதற்காக ஐநா மனித உரிமை ஆணையம் துணைக்குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
அதே நேரத்தில் சூடான் அதிபர் அல் பஷீர் போர்க்குற்றங்களை விசாரித்த உலக குற்றவியல் நீதிமன்றம், கறுப்பின பழங்குடி மக்களை கொன்று குவித்ததற்கு அவரை கைது செய்ய ஆணையிட்டது.
அதிபர் அல் பஷீர் வழக்கு தொடர்பாக உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரீனோ அக்காம்போ, ‘’போர்க்குற்ற உண்மையை வெளியில் கொண்டு வந்துள்ளோம்.
அதிபர் அல் பஷீர் மறைக்க முயன்ற உண்மைகள் தற்போது வெளிப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனால் அவற்றை பொருட்படுத்தாது இந்த வழக்கு நடத்தப்பட்டது’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’ஐநா கேட்டுக்கொண்டால் இலங்கை அதிபர் ராஜபக்சவின் போர்க்குற்ற விசாரணை வழக்கில் ஆஜராகி உண்மைகளை வெளிக்கொண்டுவர தயார்’’ என்று தெரிவித்தார்

Tuesday, July 20, 2010

இந்திய அரசு மீது கோவத்தின் உச்சத்தில் கொலைக்காரன் ராஜபக்சே..

இந்தியா மீது செமக் கடுப்பில் இருக்கின்றார் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே என்கின்றன கொழும்பில் அதிபர் மாளிகை வட்டாரங்கள்.

யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை என்ற சுருக்குக் கயிறு ராஜபக்ஷே ஆட்சிப் பீடத்தின் மீது மெல்ல விழத் தொடங்கியிருக்கின்றது. இந்தச் சுருக்குக் கயிற்றின் பின்னால் செயற்படும் பிரதான சூத்திரதாரிகள் ஜப்பானும் இந்தியாவுமே எனத் தமக்கு நெருக்கமான தரப்புகளிடம் திட்டித் தீர்த்திருக்கின்றார் ராஜபக்ஷே.

தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை ஆயுத முனையில் அடக்கும் கொழும்பு அரசின் கொடூர ராணுவ நடவடிக்கைத் திட்டத்தின் உச்சக் கட்டம் கடந்த ஆண்டு முற்பகுதியில் உக்கிரமடைந்தபோது, பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் வேட்டையாடப்பட்டுக் கொன்றொழிக்கப்பட்டார்கள். மறைக்கப்பட்ட அந்தக் கொடூரங்களின் பின்னணியில் புதைந்து கிடக்கும் உண்மைகளை அம்பலப்படுத்தும் விதத்தில் அவை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மேற்குத்தரப்பு அப்போதே ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸிலின் முன் வைத்தபோது அந்த முயற்சியை வெளிப்படையாக எதிர்த்து அதற்குத் தடை போட்டது இந்தியாதான்.

அந்த இந்தியாவே அதே யுத்தக் கொடூர விஷயங்களுக்கான சர்வதேச விசாரணை அவசியம் என்று தற்போது மீண்டும் எழுந்திருக்கும் கோரிக்கைக்கு அதரவு தெரிவிக்கும் வகையில் செயற்படுகின்றது என இலங்கை அதிபர் ராஜபக்ஷே சீறிப் புழுங்கும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கின்றது.

ராஜபக்ஷே ஆட்சிப் பீடத்தின் நரித் தந்திரப்போக்குக் குறித்து காலம் பிந்தியாவது புதுடெல்லி புரியத் தொடங்கியிருப்பதுதான் இந்த நிலை மாற்றத்துக்குப் பிரதான காரணம் என்கின்றனர் அவதானிகள்.

ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக, விடுதலைக்காகப்- போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தனது எதிரி அமைப்பாகக் கருதிச் செயற்பட்டது புதுடெல்லி. அதன் காரணமாக பொது எதிரியான புலிகளை அழிப்பதற்கு கொழும்புடன் முழு அளவில் கைகோர்த்தது அது. ஆனால் புலிகளை ராணுவ ரீதியில் அழிக்கும் வரை இந்தியாவுடன் சேர்ந்து செயற்படுவதாகக் காட்டிக் கொண்ட ராஜபக்ஷே நிர்வாகம், யுத்தத்தில் இறுதி வெற்றி கண்டாயிற்று என்ற உறுதி வந்ததும் இந்திய விஷயத்தில் ‘ஆறு கடக்கும் வரை அண்ணன்- தம்பி, ஆறு கடந்ததும் நீ யாரோ நான் யாரோ.....’ என்ற கணக்கில் செயற்படத் தொடங்கி விட்டது.

புலிகளுக்கு எதிராகத் தான் தொடுத்த கொடூரப் போர் மூலம் ஈழத்தமிழர் தாயகத்தையே துவம்சம் செய்து நாசம் பண்ணிய ராஜபக்ஷே நிர்வாகம் அந்த யுத்த வெற்றி மூலம் சிங்களவர் மத்தியில் தனக்குக் கிடைத்த செல்வாக்கை அடுத்தடுத்து நடத்திய ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவைகளை நல்ல அரசியல் முதலாக்கி தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டது.

தன்னை அரசியல் ரீதியாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உறுதிப்படுத்திக் கொண்ட ராஜபக்ஷே அரசு, அதைத் தொடர்ந்து அதுவரை புலிகளை அடக்குவதற்குத் தன்னைப் பகிரங்கப்படுத்தாமல் ஒத்துழைத்து வந்த புதுடெல்லிக்கு எதிராகவும் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியமைதான் புதுடெல்லி அதிகார வர்க்கத்துக்குப் பெரும் எதிர்பாராத அதிர்ச்சியாக வந்து அமைந்தது.

இந்தியாவின் தென்கோடி முனையில் இந்தனூண்டு சைஸில் இருந்து கொண்டு இலங்கை பண்ணத் தொடங்கியிருக்கும் அதிகப் பிரசங்கித்தனமான நடவடிக்கைகள் புதுடெல்லியின் புவியியல் கேந்திர ஸ்திர உறுதிப்பாட்டுக்குப் பேராபத்தாக மாறத் தொடங்கியிருக்கும் நெருக்கடியை புதுடெல்லி காலம் பிந்தித்தான் இப்போதுதான் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றது.

‘பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டும் விலாங்கு மீன்’ போல ஒரு புறம் புதுடெல்லியையும் தடவிக் கொள்வதாகக் காட்டிக் கொண்டு மறுபுறும் இந்தியாவிற்கு சவால் சக்தியாக விளங்கும் சீனாவை இலங்கையில் வலுவாகக் காலூன்றி, ஆதிக்கம் செலுத்தி, நிலைபெறுவதற்கும் இடமளிக்கும் ராஜபக்ஷே தந்திரத்தை இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாது என்ற கட்டத்தை புதுடெல்லி இப்போது அடைந்துவிட்டது.

இந்த நெருக்கடி நிலையைத் தணித்து கொழும்பைத் தன் வழிக்குக் கொண்டு வரும் முயற்சியாக பல எத்தனங்களை புதுடெல்லி எடுத்துப் பார்த்தது. கடைசியாக அண்மையில் ராஜபக்ஷே புதுடெல்லி வந்தபோது இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கே நாசூக்காகவும் ஒரு கட்டத்தில் வெளிப்படையாகவும் -இந்த விஷயத்தை அதிபர் ராஜபக்ஷேவிடம் நேரடியாக எடுத்துரைத்தார் எனக் கூறப்படுகின்றது. அப்போதும் கூட, வழமைபோல சிரித்துப் பேசி, உறுதி கூறி, வார்த்தை ஜாலம் காட்டிய அதிபர் மஹிந்த ராஜபக்ஷே, பின்னர் செயலில் தொடர்ந்தும் சீன உறவை வலுப்படுத்தி நிற்கும் சமிக்ஞைகளையே வெளிப்படுத்தி வருகிறார் என்று பொருமுகிறது புதுடெல்லி.

புதுடெல்லியைக் கிள்ளுக் கீரையாக்கி எகிறிக் குதிக்கும் ராஜபக்ஷேவை எப்படியும் அடக்கி வழிக்குக் கொண்டு வருவதற்காக சாம, பேத, தான, தண்டம் என்ற நான்கு முறைகளில் தேவையானது எதையும் கையாளப் புதுடெல்லி தீர்மானித்துவிட்டதாகத் தெரிகின்றது. அதன் ஒரு கட்டமாகவே இலங்கையில் யுத்தக் குற்றம் தொடர்பாக ஆராய்ந்து ஆலோசனையை சமர்ப்பிப்பதற்காக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீன் மூன் நிபுணர் குழு ஒன்றை நியமிக்கும் நடவடிக்கை இந்திய ஆதரவுடன் கட்டவிழ்கிறது என்கின்றன உள்வீட்டுத் தகவல்கள்.

இந்த நிபுணர் குழுவை அமைக்கும் ஐ.நா. செயலரின் உத்தேசம், கடந்த பல மாதங்களாக செயல்படுத்தப்படாமல் பேச்சோடு கிடப்பில் போடப்பட்டு வந்தது. ஆனால் இப்போது இந்த எத்தனத்துக்கு இந்தியாவின் முழு ஆசீர்வாதமும் உண்டு என்ற சமிக்ஞை கிடைத்ததும் - ஏற்கெனவே அதற்கு மேற்குலகின் முழு ஆதரவும் உண்டு என்பதைப் புரிந்து கொண்டிருந்த - ஐ.நா. செயலாளர் நாயகம், அந்தத் திட்டத்தைச் செயற்படுத்த பச்சைக்கொடிகாட்டிவிட்டார்.

மனித குலத்துக்கு எதிரான யுத்தக் குற்றச்செயல்களுக்காக சூடானிய அதிபருக்கு எதிராக எத்தகைய நடவடிக்கைகள் கட்டவிழ்ந்தனவோ அதே பாணியிலான செயற்போக்கே இலங்கை அதிபர் ராஜபக்ஷே விஷயத்திலும் சர்வதேச சமூகத்தினால் அச்சொட்டாக முன்னெடுக்கப்படுகின்றன என்பது இங்கு அவதானிக்கத்தக்கது.

சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகளுக்காகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என சர்வதேச விசாரணை மன்றினால் அடையாளம் காணப்பட்டுள்ள சூடானிய அதிபர், அதன் காரணமாக தமது நாட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றமை போன்ற நிலைமை இலங்கை அதிபருக்கும் ஏற்படுமா? அந்த விஷயத்தில் ஆரம்பத்தில் சூடானிய அதிபருக்கு ஆதரவான தரப்பினர் போல காட்டி அவரைக் காப்பாற்ற முயன்ற சீனா, ரஷ்யா போன்ற தரப்புகள் சர்வதேச கருத்து நிலைப்பாடு சூடானிய அதிபரின் நிர்வாகத்துக்கு எதிராக வலுவாக முற்றித் திரண்டபோது, ஐ.நா. மன்ற நடவடிக்கைகளில் சூடானிய அதிபரைக் கைவிட்டு பின்வாங்கியமை போன்று இப்போதும் இலங்கை அதிபரை ஐ.நா. மன்ற நடவடிக்கைகளில் காப்பாற்றக் கூடியவை என்று கருதப்படும் சீனா, ரஷ்யா போன்ற தரப்புகள் கடைசி நேரத்தில் கைவிட்டுப் பின்வாங்குமா? இதற்கெல்லாம் உரிய பதில்களை அடுத்துவரும் மாதங்களில் நாம் காணமுடியும்.

ஆனாலும் இந்தியாவைத் துச்சமாக மதித்து, எள்ளி நகையாடும் விதத்தில் நடந்து கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷேவை தனது வழிக்குக் கொண்டு வருவதற்கு புதுடெல்லி தற்போது வகுத்திருக்கும் வியூகம் -அல்லது காய் நகர்த்தல் -மிக்க காலதாமதமானது என்பது மட்டும் நிச்சயம்.

இந்தியாவின் இப்போதைய போக்குக்காக சீறி எரிச்சல்படும் ராஜபக்ஷே, தப்பித் தவறி சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை ஒன்று அவருக்கு எதிராக நடத்தப்படுமானால் அந்தக் கொடூர யுத்த நடவடிக்கைகளை எல்லாம் இந்தியாவின் வழிகாட்டுதலிலேயே - புதுடெல்லியின் சொல்படியே முன்னெடுத்தேன் என இந்தியாவுக்கு எதிராக ‘ஸேம் சைட்’ கோல் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதுதான் தற்போதைய நிலையாகும்.

http://www.suriyakat...age.php?key1=T3

Sunday, July 18, 2010

சீதை இராவணனால் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டாளா?

பகுத்தறிவைப் பரப்பும் சாதனங்களாகவே கலைகள் மிளிர வேண்டும்.
20.12.1955 அன்று ராசிபுரம் ரங்கவிலாஸ் தியேட்டரில் நாடகத் தலைமையேற்று தந்தை பெரியார் அவர்கள் பேசுகையில், குறிப்பிட்டதாவது:
இதுபோன்று நாடகங்களுக்குத் தலைமை வகிக்கவும், இரவில் அதிக நேரம் கண் விழித்துத் தூக்கம் இன்றி பேசுவதென்பதும், எனக்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், என்னுடைய தொண்டின் மீது கொண்டுள்ள எல்லை கடந்த ஆவலின் காரணமாக எழும் ஊக்கம் அப்பேர்ப்பட்ட கஷ்டங்களை எல்லாம் பொருட்படுத்தாவண்ணம் செய்து விடுகிறது.

நம் நாட்டில் இதுவரை கலைகள் என்பனவெல்லாம் கடவுள் பிரச்சார முறையாகவே அமைந்திருந்தன. ஆனால், இப்பொழுது உள்ள காலமோ திருப்புமுனை என்று சொல்லக் கூடிய காலம் இதுவரை மனிதன் தனது மனிதத் தன்மையை இழந்து பகுத்தறிவற்றவானாகி மூடத்தன்மையிலேயே ஆழ்ந்து, காட்டுமிராண்டிப் பழக்க வழக்கங்களைக் கொண்டு வாழ்ந்தான் மனிதன். அதற்கேற்ற வண்ணம் பாழாய்ப்போன கடவுள்களும், மத சாதனங்களும் உண்டாக்கப்பட்டு விட்டன.

சூழ்ச்சியில் வலுத்த பார்ப்பனர்கள் நம் நாட்டுப் பழங்குடி மக்களை ஏமாற்றி அவர்களிடம் காட்டுமிராண்டிப் பழக்க வழக்கங்களைப் புகுத்திவிட்டார்கள். தன் சுயநலத்தையே பெரிதாகக் கொண்டு பார்ப்பனர்களுக்கும் இதுவரை நம் மக்கள் அடிமைகளாக இருந்ததுமன்றி கீழ்ஜாதிகள், நான்காம் ஜாதி, அய்ந்தாம் ஜாதி, சூத்திரன், பஞ்சமன், பார்ப்பனரின் இழிமகன், பார்ப்பனரின் கூலி, எப்பொழுதும் உடல் உழைப்புக் கொண்டு வாழும் தொழிலாளி என்று ஆக்கப்பட்டு விட்டான்.

இந்நிலையை என்றைக்கும் நிலைநாட்டவும், அழியாமல் மேன்மேலும் இந்நிலை வளர்ந்து கொண்டே போகவும்தான் பார்ப்பனர்கள் தங்கள் மதம், கடவுள், புராணம் இவற்றை உண்டாக்க வேண்டியதாயிற்று. அவற்றைப் பிரசாரம் செய்ய பல வழிகளிலும் முயற்சி எடுக்கும் முறைகளில் ஒன்றுதான் கலைகள் என்ற பெயராலும் பிரசாரம் செய்யப்பட்டு வந்திருக்கின்றன.

கலைஞர்கள் என்பவர்கள் எல்லாம் கடவுள்களைப் பற்றியே பிரசாரம் செய்பவர்களாக இருந்ததால்தான் அவர்கள் கலைஞர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள். கடவுளின் பித்தலாட்டத்தையும் மதம், சாஸ்திர, புராணங்களின் அயோக்கியத் தன்மைகளையும் வெளியிடுபவர்கள் கலையில் சிறந்த வல்லுநர்களாக இருந்ததாலும், அவர்கள் நாஸ்திகர்கள், பார்ப்பனத் துவேஷிகள் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள், ஏன்? இன்றைக்கும் எத்தனையோ கலைஞர்கள், புலவர்கள் இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் எல்லாம் பார்ப்பனர்களின் கூலிகளும், கடவுள் பிரச்சாரக்காரர்களும்தான் ஆவார்கள். மதப் புரட்டுகளையும், கடவுள் பித்தலாட்டங்களையும் வெளியிடுவார்களேயானால் அவர்கள் கலைஞர்கள் என்று அழைக்கப்படுவதில்லை.

கலைகளில் நாடகம், நடனம், சங்கீதம், ஓவியம் இப்படி பல வகை இருக்கின்றன என்றாலும் அவை ஒவ்வொன்றிலும் மதத்தையும், கடவுளையும் புகுத்தி இருக்கிறார்கள். கடவுள் அவதாரம் எடுத்ததாகக் கூறப்படும் புராணக் கதைகளை நடிப்பவர்கள்தான் நடிகர்கள். அப்படிப்பட்ட நாடகத்திற்குத்தான் அதிக மதிப்பும், சலுகையும் அளிக்கப்படுகிறது.

நடனக் கலையோ கடவுள் இப்படி ஆடினார்; கிருஷ்ணன் இன்னின்ன லீலைகள் செய்தான் என்பதைத்தான் சித்திரித்துக் காட்டப்படுகிறது. அதன்றி, அய்ந்து வயதுப் பெண்ணும் நடனம் ஆடுகிறதென்றால், காமமே உருவெடுத்தாற்போல் கண்ணனின் லீலா வினோதங்களை சித்திரித்து ஆடுகின்றனர். இப்படிப்பட்ட நடனக் கலையினால் அக்கலையைக் கைக்கொள்பவர்கள் மட்டுமின்றி, அதை ரசிக்கும் ரசிகனும் அவ்வித உணர்ச்சி கொள்ளும்படி ஆடுகிறான். சித்திரக்கலையும் அப்படித்தான். கடவுளின் உருவத்தை இப்படி அப்படி என்று இவர்களாக நினைத்துக் கொண்டான். அதை வரைந்து காட்டுவதுதான் சித்திரக்காரர்களின் திறமையாக இருக்கிறது.

இப்படிப் பலவிதமான கலைஞர்கள் என்பவர்களின் திறமையெல்லாம் மத சம்பந்தப்பட்டவற்றைப் பிரச்சாரம் செய்வதற்கென்றே அமைந்துவிட்டன. பகுத்தறிவற்ற கலைஞர்களும், பார்ப்பனர்களின் மாயையில் மூழ்கி அவர்கள் கூறுவதையே ஆராயாது பெரும் மடமையிலேயே ஆழ்ந்து கலையைக் கொலை செய்து விடுகிறார்கள்.

கலையின் பேரால் ஒரு விதத்திலாவது மக்களுக்கு நன்மை கிடைப்பதில்லை. நாகரிகம், பகுத்தறிவு, இவை வளருவதற்கு நம் நாட்டுக் கலைகள் பயன்படுவதற்கு வழி இன்றிப் போய்விட்டது. அன்றியும், மேன்மேலும் மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்தவும், அநாகரிகத்தை வளர்க்கவும், பொய்ப் புரட்டுகளை உண்டாக்கவும் தான் உபயோகப்படுகின்றன.

பாரதத்தில் வருகிற திரவுபதி என்று கூறப்படுகிற பலே கைகாரி மகாபத்தினி என்று அழைக்கப்படுகிறது. ஒருவனுக்கு மனைவியாகியவள் அய்ந்து பேர்கள் கூடி தன்னை அனுபவிக்க இசைந்துள்ளதும் அன்றி, அய்ந்து பேர்களும் போதாது. ஆறாவதாகக் கர்ணன் என்பவன்மேல் ஆசை கொண்டிருந்தாளாம். இப்பேர்ப்பட்ட ஆபாசம் நிறைந்த கதை நாடகமாக நடிக்கப்படுகிறதென்றால், இதனால் என்ன அறிவு வளர முடியும்? திரவுபதியைப் போன்று ஒவ்வொரு பெண்ணும் நடந்து கொள்ள வேண்டும். அல்லது ஒருவன் மணந்த மனைவியை அண்ணன் தம்பிகள் எத்தனை பேர் இருந்தாலும் அத்தனைப் பேர்களும் அனுபவிக்கவேண்டும் என்பதா? இதில் என்ன கருத்து இருக்கிறதோ தெரியவில்லை. அன்றியும் பாரதத்தில் வருகிற பஞ்சபாண்டவர்கள் என்ற அத்தனை பேர்களுள் ஒருவராவது தன் தகப்பனுக்குப் பிறந்ததாகக் கூறப்படவில்லை. ஒவ்வொருவனையும் தனித்தனியே கள்ளப் புருஷனுக்குப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதைப்போன்று, இராமாயணம் என்ற புராணத்தின் ஊழலோ மிகவும் மோசமானது. அதில் வரும் பத்தினி என்று கூறப்படும் சீதையின் அயோக்கியத்தனமோ கொஞ்சமல்ல; தன் கணவனை எப்படியும் ஏமாற்றி விட்டு இராவணன் பின் செல்லவேண்டும் என்றே திட்டமிட்டு, தான் தனியாக இருக்கும் நிலையை ஏற்படுத்தவும், அது சமயம் இராவணன் தன்னைத் தூக்கிக் கொண்டு போகவேண்டும் என்பதற்காக மானைப் பிடிப்பதற்கென்று ராமனையும், பிறகு ராமனுக்குத் துணை செய்ய லட்சுமணனையும் அனுப்பி இருக்கிறாள். முன் கூட்டியே செய்த ஏற்பாட்டின்பேரில் தயாராக இருந்த இராவணன்அங்கு வந்து அவளை அழைத்துச் சென்றிருக்கிறான்.

இந்த இடத்தில் சீதை இராவணனால் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்படவில்லை; சீதையே இராவணன் மேல் இச்சை கொண்டு அவன் பின்னால் சென்றிருக்கிறாள் என்பதை நன்றாகக் கூற முடியும். அப்படிக் கூறுவது என் சொந்தக் கருத்தல்ல; பார்ப்பனர்கள் எழுதிய இராமாயணத்திலேயே ஆதாரம் எடுத்துக் காட்டுவேன்.

இராவணனுக்கு ஏற்பட்டிருக்கும் இரண்டு சாபங்களின் காரணமாக, இராவணன் சீதையை, சீதை சம்மதமின்றி தொட்டு எடுத்திருப்பானாகில் அவன் தலை வெடித்திருக்க வேண்டும். அல்லது உடம்பு நெருப்புப் பற்றி எரிந்திருக்க வேண்டும். இரண்டு ஆபத்துகளில் ஒன்றும் நேரவில்லை. சீதையின் தொடையை ஒரு கையாலும், மறு கையால் கூந்தலையும் பிடித்து தூக்கிச் சென்றிருக்கிறான். இதற்கு இராமாயண பக்தர்கள் என்ன பதில் கூற முடியும்?
இராவணனுக்குக் கொடுக்கப்பட்ட சாபங்கள் கப்ஸா என்று கூற முடியுமா? அல்லது சீதை இசைந்திருக்கிறாள்; இராவணனின் மேல் ஆசைப்பட்டு அவனுடன் சென்றிருக்கிறாள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

இதுமட்டுமல்ல, இன்னமும் இராமாயணத்தை மேன்மேலும் படித்து, துருவித் துருவி ஆராய்ந்தால்தான் அதனுடைய முழு வண்டவாளங்களும் நாளுக்குநாள் மேன்மேலும் புலப்படுகின்றன.

தோழர் நடிகவேள் ராதா அவர்கள் நடித்த இராமாயண நாடகத்தில்கூட ஒரு சீன் காண்பித்தார். அதாவது, இராவணனிடமிருந்து மீட்டு வரப்பட்ட சீதை இராவணன் படத்தை வரைந்து கொண்டு அழுது கொண்டிருந்தாளாம். அதைக் கண்ட இராமன் கோபம் கொண்டு அவளைக் கொலை செய்ய முற்படுகிறானாம். இந்தக் காட்சியைப் பலர் என்னிடம் கூட, இல்லாததைக் கற்பனை செய்து காண்பிக்கிறார் என்பதாகக் குறை கூறினார்கள். ஆனால், நானும் அதைச் சரியாகக் கவனிக்காமல் அந்தக் காட்சியை (சீனை) எடுத்து விடும்படி கேட்கவும், தோழர் நடிகவேள் ராதாவும் இசைந்து அதன்படியே அதை எடுத்துவிட்டார்.

ஆனால், இப்போது பார்க்க அந்த இடம்தான் அவசியம் தேவை என்று தெரிகிறது. அந்தச் சம்பவம் இராமாயணத்தில் கூறப்படுகிறது. வால்மீகி இராமாயணத்தைவிட மேலான இராமாயணம் ஆனந்த இராமாயணம் என்று கூறுவார்கள். அதில் கூறப்படுவதை அப்படியே சி.ஆர். சீனிவாசய்யங்கார் கூறுகிறார்.:

இராவணன் வீட்டிலிருந்து சீதை மீட்கப்பட்டு இராமனுடைய அந்தப்புரத்தில் தனியாக இருக்கும்பொழுது அவளுக்குப் பழைய நினைப்பு வந்துவிடுகிறது; அதாவது இராவணனுடன் அனுபவித்த இன்பங்கள் எல்லாம் மனதில் தோன்றுகின்றன. அவள்தன் மனத்தில் இராவணனைச் சித்தரித்துக் கொண்டு இராவணனின் உருவத்தை சித்திரமாக வரைகிறாள். அதுசமயம் இராமன் அங்கு வந்து விடுகிறான். இராமனைக் கண்டவுடன் சீதை அந்தப் படத்தைப் படுக்கைக் கட்டிலின் கீழ் போட்டு விடுகிறாள். இதைக் கண்டு கொள்ளாத இராமன் சீதையிடம் சல்லாபங்கள் செய்ய முயற்சிக்கிறான். இருவரும் ஜாலியாக இருக்கும்பொழுது கீழே கிடந்த இராவணனின் சித்திரமானது தெய்விகசக்தி கொண்டதாகி படபடவென்று அடித்துக் கொண்டதாம். அப்போது இராமன், யாரடா இந்த வேளையில் சப்தம் செய்கிறவனென்று கட்டிலின் கீழ் கீழே குனிந்து பார்த்ததும் அங்கு இராவணனின் படம் கிடக்கிறது. அதை எடுத்து சீதையிடம் காண்பித்து, உனக்கு இன்னமும் அந்த புத்தி போகவில்லையே! எவ்வளவு துணிவிருந்தால் இன்னும் இராவணன் ஞாபகமாகவே இருப்பாய் என்று கடிந்துவிட்டு உடனே அவளைக் கொலை செய்து வரும்படி லட்சுமணனை அனுப்புகிறான். அவன் காட்டிற்குச் சென்று அவளை உயிருடன் விட்டு விட்டு ஏதோ ஒரு பொய்யான கை ஒன்றைக் கொண்டு வந்து இராமனிடம் காண்பித்து சீதையைக் கொலை செய்து அவள் கையை எடுத்து வந்திருக்கிறேன் என்று ஏமாற்றி விட்டான். இப்படி சீதையின் யோக்கியதை இருக்க அவள் எப்படி பதிவிரதைப் பட்டியலில் சேர்க் கப்பட்டிருக்கிறாள்?

இதனால், இராமன் ஒருவன் இருந்தான், அவன் மனைவி சீதை என்பவள் இருந்தாள் என்பதையோ நாங்கள் அப்படிப்பட்ட கதை ஒன்று நடந்திருக்கிறது என்பதையோ ஒப்புக்கொள்வதில்லை என்றாலும், அதன்மூலம் பார்ப்பனர்கள் யோக்கியதை என்ன? அன்று எழுதிய பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட நாகரிகம் கொண்டவர்கள்? அவர்களில் ஒரு பெண் பதிவிரதை என்றால் அவளுடைய நடத்தை எப்படி இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. எனவே, புராணங்கள் நடந்ததாகக் கூறப்படுவது பொய் என்பதோடு, அதன்மூலம் பார்ப்பனர்களின் நாகரிகம் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அப்பேர்ப்பட்ட பார்ப்பனர்களின் நாகரிகம் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

அப்பேர்ப்பட்ட பார்ப்பனர்களின் நாகரிகத்திற்கும், நம் நாகரிகத்திற்கும் முற்றிலும் மாறுபட்டவை என்பதை உணர முடிகிறது. ஆகவேதான், இதுவரையிலும் அநாகரிகத்திலேயே மூழ்கி எதையும் பகுத்தறிவுடன் ஆராயாமல் இருந்ததால் பார்ப்பனர்களின் அநாகரிகம் நம்மிடம் புகுந்து விட்டன.

அவை எல்லாம் இப்போதுதான் விளங்குகிறது. இக்காலம் ஆராய்ச்சிக்கு மதிப்புக் கொடுக்கும் காலமாகி விட்டது. ஆராய்ச்சியின் பலனால் மனிதன் புதுப்புது அற்புதங்களைக் காண்கிறான். ஆராய்ச்சியின் பலனாக நாகரிகம் மிளிர்கிறது. அநாகரிகம் மறைகிறது. மின்சார சாதனங்களும், அதிசயிக்கத் தக்க விஞ்ஞானக் கருவிகளும் உண்டாக்கப்படுகின்றன. ஆனால், இதுபோன்ற உயர்நிலையை அடைவதெல்லாம் மேல்நாடுகளே தவிர, நம்நாட்டில் அடைய வழிஇன்றிப் போய்விட்டது. காரணம் இதுவரை ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் நாஸ்திகர்கள் என்று தூற்றப்பட்டிருக்கிறார்கள். இப்போதுதான் எங்களைப் போன்றவர்கள் நாஸ்திகர்கள் என்பதை ஏற்றுக்கொண்டு, நாங்கள் நாஸ்திகர்கள் தான் என்பதை ஒப்புக்கொண்டு, எதையும் துணிவுடன் செய்ய முற்படுகிறோம். நாஸ்திகம் என்பதற்கே அறிவைக் கொண்டு பார்ப்பனர்களின் மதம், கடவுள், சாஸ்திரம் இப்படிப்பட்டவற்றை ஆராய்தல் என்பது பொருள்; ஆகவே, நாஸ்திகன் என்பவன் பகுத்தறிவாளி என்பதுதான் பொருள். நாங்கள் பார்ப்பனப் புரட்டு களை நம்புகிறவர்கள் இல்லை; அவர்களின் வாழ்க்கைக்குச் சாதனமாக அமைத்துக் கொண்ட யாவற்றையும் ஆராய்கிறவர்கள். எனவே, நாஸ்திகம், நாஸ்திகன் என்பதைக் கண்டு பின்வாங்குகிறவர்கள் இல்லை.

பற்பல துறைகளிலும் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வருகிறோம். பற்பல தொல்லைகளும், சங்கடங்களும், கஷ்ட நஷ்டங்களும் உண்டான போதிலும் யாவற்றுக்கும் பின்வாங்காது எங்கள் கடமையைச் செய்து வருகிறோம். பல முறைகளில் ஒன்றுதான் நாடகத்தின் மூலம் பார்ப்பனப் பித்தலாட்டங்களை வெளிப்படுத்துவதாகும்.

நாடகம் என்பது சாயம் பூசிக் கொண்டு கூத்தாடவும், காசு சம்பாதிக்கவும் இருக்கிறதென்றால், அது மிகவும் முட்டாள்தனம் என்றே சொல்லுகிறேன். மக்கள் முன்னேற்றம் காணவும், உண்மை உணரவும் ஆன முறையில் இதுபோன்ற நாடகங்கள் நடிக்கப்படுவது அவசியம். ஆனால், முதலில் நாடகக் கலையைக் கைக்கொள்பவர்கள் பகுத்தறிவுக்கேற்ற வண்ணம் நடந்து நாடகம் நடித்து பெரும் புகழ் பெற்ற பிறகு, மாறிவிடுகிறார்கள். சுயநலத்திற்கும், காசு சேர்க்கவும் ஆன காரியத்தில் பிரியப்பட்டு மாறி விடுகிறார்கள்.

பல தோழர்கள் புகழ் பெற்றவுடன் பார்ப்பனர்கள் சொற்படி கூத்தாட ஆரம்பித்து விடுகிறார்கள். பணம் திரட்டும் முறையில் எதையும் செய்ய, தங்கள் கருத்துகளை மாற்றிக் கொள்ளுகிறார்கள். அவை யெல்லாம் அவர்களின் சுயநலத்தையும், மூடத் தன்மையையும் தான் வெளிப்படுத்துகின்றன.

அவ்விதமின்றி பல உண்மை உழைப்பு கொள்ளும் பொது நலத்தொண்டர்கள் முன்வர வேண்டும். சுயநலத்தையும், பணம் திரட்டும் ஆசையையும் விட்டுவிட வேண்டும். புராணங்களின் பித்தலாட்டங்களை வெளிப்படுத்துவதையே தங்கள் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். எப்பேர்ப்பட்ட துன்பம் கஷ்டம் வந்தபோதும் துணிவுடன் இருக்க வேண்டும். சில நேரங்களில் காலிகளும், கூலிகளும் எவ்வளவோ தொல்லை கொடுப்பார்கள். பண நஷ்டம் ஏற்படும். அவற்றுக்கெல்லாம் மனம் தளரக் கூடாது.

இதுவரை இப்படிப்பட்ட மன ஊக்கமுடன் கழகத்தின் கொள்கைகளையே பரவச் செய்வதற்கென்று பலவித இன்னல்களையும் பாராது பொருள் நஷ்டம் யாவற்றிற்கும் தளராமல் ஊக்கத்தைக் கொண்டு முயற்சித்து வருபவர் நடிகவேள் ராதாவைச் சொல்லலாம். அவரின் நாடகங்கள் முழுமையும் கழகக் கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இதுவரை அவரும் எவ்வளவோ துன்பங்களுக்கு ஆளாகி நாடகங்கள் நடைபெறாத வழியில் பலர் இடையூறுகள் செய்தாலும் ஒன்றிற்கும் தன்னுடைய மன தைரியத்தை விடாமல் மேன்மேலும் தீவிரமான முறையிலேயே தொண்டாற்றி வருதல் போற்றத் தகுந்ததும் பாராட்டத் தகுந்ததுமாகும். அதைப் போன்று பல இளைஞர்கள் முன்வர வேண்டும். நாடகங்களின் மூலம் புராணப் புரட்டுகளை வெளியாக்க வேண்டும். ஆங்காங்கே இலவசமாக யாவரும் பார்த்து உண்மை உணரும் வண்ணம் தெருக்களிலும், முச்சந்திகளிலும் நாடகங்கள் நடித்து, கழகக் கொள்கைகளைப் பரவச் செய்யும் தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதாகக் கேட்டுக் கொண்டு தமது சொற்பொழிவை முடித்தார்.

----------------- தந்தைபெரியார் - “விடுதலை”, 24.12.1955
http://thamizhoviya.blogspot.com/2010/07/blog-post_2455.html

அமெரிக்க முதலாளியை காப்பாற்றத் துடித்த ராஜீவ்காந்தி தேச பக்தரா?

22,000 சொந்த நாட்டு மக்களின் மரணத்தை புறந்தள்ளி, அமெரிக்க முதலாளியை காப்பாற்றத் துடித்த ராஜீவ்காந்தி, தேச பக்தரா?

ஆண்டர்சனை தப்பச் செய்தவர் ராஜிவ்காந்தி, காங்கிரசாரின் ‘தேசபக்தி’ இதுதானா?

* இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் குண்டுவீசப்பட்டதுபோல் போபால் நகரம் காட்சியளித்தபோது, செத்து பிணங்களாக வீழ்ந்துக் கொண்டிருந்த மக்களைக் காப்பாற்று வதற்கு, நச்சுவை முறியடிக்கக்கூடிய சிகிச்சை அவசரமாக அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்காக மருத்துவர்கள் போபாலில் வெளி யேறிய நச்சு வாயுவில் அடங்கியுள்ள பொருள்கள் என்ன என்பதை போபால் நிறுவனத்திடம் கேட்டபோது, அதை வெளிப்படுத்த நிர்வாகம் மறுத்துவிட்டது. அதன் அமெரிக்க தலைமை யகம், இந்த வாயுவில் (எம்.அய்.சி.) அடங்கியுள்ள மூலப் பொருள் களையும், ஆபத்து நேர்ந்தால் முறியடிப் பதற்கான மாற்று வேதிப் பொருள் என்ன என்பதையும் ரகசியமாகவே வைத் திருந்தது.

* சம்பவம் நடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சு வாயுவில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி ஆராய்ந்து அறிக்கை தந்த ‘இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு’, இந்த நச்சை முறியடிக்கக் கூடிய மருந்து ‘சோடியம் தையோ சல்பேட்’ என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்த முறிப்பு மருந்தை, அப்போதே பாதிக்கப் பட்டோருக்கு தந்திருந்தால் ஏராளமான உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என்றும் அந்த அறிக்கை கூறியது.

* இந்திய மருத்துவத் துறையிடம் இந்த முக்கியமான உண்மையை கார்பைடு நிர்வாகம் திட்டமிட்டு மறைத்தது மிகப் பெரும் கிரிமினல் குற்றம். ஆனால், கார்பைடு நிறுவனத்துக்கு எதிராக வழக்கை நடத்திய சி.பி.அய். புலனாய்வு நிறுவனம், இந்த முக்கியமான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் வலியுறுத்தவே இல்லை.

* குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத் தில் முன் வைக்கப்பட்ட வாதம் தான் விசித்திர மானது. வெளியேறிய வாயு மிகவும் நச்சுத் தன்மை கொண்டவை என்பதும் உயிருக்கு ஆபத்தானது என்பதும் உண்மைதான். ஆனால், இப்போது நடந்த விபத்துக்கு, நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? இது கடவுளின் செயல். எந்த மனிதரை யும் கடவுளின் செயலுக்கு பொறுப்பாக்க முடியாது (It was an act of god for which no human being was responsible) என்று நீதிமன்றத் தில் கடவுளை துணைக் கழைத்தார்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

* 1985 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் போபால் நச்சு வாயு பேரழிவுச் சட்டம் என்ற சட்டம் ஒன்றை இயற்றியது. இச் சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட் டவர்கள் தங்களுக்கு இழப்பீடு கோரி நேரடியாக நீதிமன்றம் போவதை அரசு தடுத்து நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக, இழப்பீடு கோரும் உரிமையை அரசு எடுத்துக் கொண்டது.

* முதலில் ரூ.3900 கோடி இழப்பீடாகத் தர வேண்டும் என்று இந்திய அரசு அமெரிக்கா விலுள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தின்மீது வழக்கு தொடர்ந்தது. வழக்கு அமெரிக்காவில் நடத்தப்பட்டிருந்தால், இழப்பீட்டுத் தொகை அதிகமாக தரவேண்டி இருக்கும் என்பதால், வழக்கு சூழ்ச்சியாக இந்தியாவுக்கே போபால் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே இந்தியப் பார்ப்பன ஆட்சி, யூனியடன் கார்பைடு நிறுவனத் துடன் ரகசியமாக பேச்சு நடத்தி வந்தது.

* போபால் மாவட்ட நீதிபதி இடைக்கால நிவாரணமாக, ரூ.350 கோடி தருவதற்கு உத்தர விட்டார். யூனியன் கார்பைடு நிறுவனம் இந்தத் தொகையை ஏற்க மறுத்து, ம.பி. உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது, உச்சநீதிமன்றமோ, நீதிமன்றத்துக்கு வெளியே இரு தரப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்ளு மாறு உத்தரவிட்டு, எல்லா மனுக்களையும் தள்ளுபடி செய்துவிட்டது. அமெரிக்காவி லிருந்து வரும் அன்னிய முதலீடுகள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, சொந்த நாட்டு குடி மக்களின் ‘பிணங்களை’ பணயமாக வைத்தது, இந்திய அரசு.

* 330 கோடி டாலருக்கு பதிலாக ரூ.173 கோடி இழப்பிட்டுத் தொகைக்கு இந்திய அரசு ஒப்புக் கொண்டது. இதைவிடக் கொடுமை பாதிக்கப்பட்ட மக்களிடம் இது பற்றி எந்தக் கருத்தையும் இந்திய அரசு கேட்கவில்லை என்பதுதான்!

* பாதிக்கப்பட்டவர்கள் - இறந்தவர்கள் -இழப் பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு கடுமையான சான்றுகளைக் கேட்டது, இந்திய அரசு. இறந்து போனவர் என்பதை நிரூபிப்பதற்கு இறுதி ஊர்வலத்தில் போனவர்கள் சான்று தர வேண்டும் என்றார்கள். நியாயமான பல விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்பட்டன. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் செலவை குறைக்க அரசு அவ்வளவு கவலை எடுத்துக் கொண்டது. இறந்தவர், பாதிக்கப்பட்டவர் பற்றி துல்லியமான கணக்கெடுப்பு நடத்துவதில், மத்திய பிரதேச அரசோ, இந்திய அரசோ, எந்த அக்கறையும் காட்டவில்லை. இறந்தவர்கள் 3000 பேர் என்றும், இறந்தவர்கள் உட்பட பாதிக்கப் பட்டவர்கள் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் என்றும், அவர்களே கணக்கிட்டுக் கொண் டார்கள். இழப்பீடு கோரி விண்ணப்பித்த 10 லட்சம் பேரில் 5,74,367 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. உண்மையாக பாதிப்புக்குள்ளான வர்களாக 5,74,367 பேர் என்று இந்திய அரசு ஏற்றுக் கொண்டாலும், 1 லட்சத்து 5 ஆயிரத்து 500 பேர் மட்டுமே பாதிப்புக்குரியவர்கள் என்ற அடிப்படையில், கார்பைடு நிறுவனம் வழங்க முன்வந்த ரூ.173 கோடியை மட்டும், இந்தியா பெற்றுக் கொண்டது.

* இதனால் சராசரியாக பாதிக்கப்பட்ட ஒருவருக்குக் கிடைத்தது ரூ.1500க்கும் குறைவு! பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவ செலவுக்குக் கூட பணமின்றி மரண மடைந்தனர். நச்சு வாயு வின் தாக்கம் மறையா மல், மக்களைத் தொடர்ந்து பாதிப்புக் குள்ளாக்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான அமைப்புகள் நீதி கேட்டு, இடை விடாமல் போராடின. 1989 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி உருவான உடன்பாட்டை எதிர்த்து, பாதிக்கப்பட்டோருக்கான அமைப்புகள் மீண்டும் உச்சநீதி மன்றத்தின் கதவைத் தட்டின. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி மீண்டும் போபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில்தான் கடந்த 7.6.2010 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

* இந்தியாவின் நீதித்துறை, மத்திய புலனாய்வு நிறுவனம், இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் அதிகார சக்திகள் அத்தனையுமே அமெரிக்கக் குற்றவாளியைத் தபிக்க வைப்பதில் ஆர்வம் காட்டி செயல்பட்டதற்கான ஏராளமான அதிர்ச்சியூட்டும் சான்றுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

* 1989 இல் நீதித் துறையும் இந்திய அரசும் இணைந்து அமெரிக்க நிறுவனத்துக்கு எதிரான அத்தனை வழக்குகளையும் கைவிட்டு, குற்றவாளிகள் தப்பிக்கச் செய்த பிறகும் மக்கள் எழுச்சியால் மீண்டும் 1991 இல் வழக்கு, தோண்டி எடுக்கப்படும் நிலை வந்தது. ஆனாலும் என்ன பயன்? 1991 இல் குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான கடுமையான குற்றப் பிரிவுகள் மாற்றப்பட்டன. தண்டனைச் சட்டப் பிரிவு 304-11 என்பதிலிருந்து 304-ஏ பிரிவுக்கு மாற்றி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்காமல் பாதுகாப்பை ஏற்படுத்தித் தந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.அகமத், எஸ்.பி. மஜீம்தார் ஆகியோர் ஆவர். அப்போது மத்திய புலனாய்வுத் துறையும், இந்த துரோகத்துக்கு உடந்தையாக செயல்பட்டதை ஏற்கனவே சுட்டிக் காட்டி யிருந்தோம். இந்த உத்தரவை எதிர்த்து மறு ஆய்வுசெய்யக் கோரும் மனுவை தாக்கல் செய்யாதது மட்டுமல்ல; மற்றொரு துரோகத்தை யும் சி.பி.அய். செய்தது. சி.பி.அய். தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை மட்டுமே உச்சநீதி மன்றத்தின் பார்வைக்கு வைத்ததேதவிர, தற்போது போபால் விசாரணை நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட விரிவான சாட்சி ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் சி.பி.அய். தாக்கல் செய்யவில்லை. இப்போது வெளிவந்துள்ள நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பரிசீலிக்க - ம.பி. மாநில அரசு நியமித்துள்ள நான்கு உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் தலைவர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விவேக் டென்ககா இந்த அதிர்ச்சியான தகவலைத் தெரிவித்துள்ளார்.

* அமெரிக்க நிறுவனத்தைக் காப்பாற்ற மற்றொரு பேருதவியையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அகமதியா எஸ்.பி.மஜிம்தார் அடங்கிய அமர்வும் செய்தது. அமெரிக்காவில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனம், இந்தியாவிலுள்ள அதன் கிளையான யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத்தில் நேரடியாக முதலீடு செய்திருந்த 51 சதவீத பங்குகளை பறிமுதல் செய்ய போபால் நீதிபதி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்புகள் தாக்கல் செய்த மனு மீது நீதி மன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. உடனடியாக யூனியன் கார்பைடு நிறுவனம் ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி, அந்த அறக் கட்டளைக்கு பங்குகளை மாற்றித் தருமாறு மனு போட்டது. உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.அகமதி, எஸ்.எம். மஜீம்தார் அமர்வு, இதற்கு ஒப்புதல் அளித்து விட்டது. (1994, பிப்.14). வழக்குதொடர்ந்த பாதுகாக்கப் பட்ட மக்களுக்கான அமைப்பின் கருத்து களைக் கேட்கவும் உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

* இப்படி - அமெரிக்க நிறுவனத்துக்காக நீதித் துறையை வளைத்து அதற்காக பதவி ஓய்வுக்குப் பிறகு அந்நிறுவனத்தில் பல கோடி மதிப்புள்ள அறக்கட்டளைக்கான தலைவர் பதவியையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி ஏ.எம். அகமதி இப்போது உச்சநீதிமன்றமே அப்பதவியை ஏற்குமாறு தன்னைப் பணித்ததாகக் குறிப்பிடு கிறார்.

* பாதிக்கப்பட்டோருக்காக அமைக்கப்பட்ட மறுவாழ்வு மீட்பு மய்யத்தின் வேண்டுகோளை ஏற்று, “டாட்டா சமூகவியல் ஆய்வு நிறுவனம்”, சம்பவம் நடந்த இரு வாரங்களில் 25,259 பாதிக்கப்பட்டோர் இல்லங்களுக்குச் சென்று பாதிப்புகளை நேரடியாக பதிவு செய்தது. பாதிப்புகள் குறித்த ஒரே நேரடியான பதிவு இது மட்டும்தான். கடுமையான பாதிப்புகளை வெளிக்கொண்டு வந்த இந்தக் கள ஆய்வுக்கான விவரங்களை ஒரு லாரி நிறைய ஏற்றி, மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்து. அத்தனையும் திட்டமிட்டு, அழிக்கப்பட்டன. இந்த ஆவணங் களின் கதி என்னவாயிற்று என்றே தெரியவில்லை.

* 1997 இல் யூனியன் கார்பைடு நிறுவனத்தை அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனமான ‘டொவ் கெமிக்கல்ஸ்’ (னுடிற ஊhநஅiஉயடள) விலைக்கு வாங்கியது. போபால் ஆலையில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டுப் போனது யூனியன் கார்பைடு; விலைக்கு வாங்கிய புதிய நிறுவனம், அதை சரி செய்ய வேண்டும் என்று பாதிக்கப் பட்டோர் நல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதற்காக ரூ.100 கோடியை ‘டவ் கெமிக்கல்’ அரசிடம் வைப்பு நிதியாக வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் கோரியது. ஆனால் ‘டவ் கெமிக்கல்’ நிறு வனத்துக்காக வாதாட காங்கிரசுக்குள்ளேயே புதிய ‘தேச பக்தர்கள்’ புறப்பட்டார்கள்.

* மன்மோகன் அமைச்சரவையில் 2006-07 இல் வர்த்தக அமைச்சராக இருந்த கமல்நாத் அந்த நிறுவனத்தின் மீது எந்தக் கடுமையான கட்டுப்பாடுகளையும் திணிக்கக் கூடாது என்றார். இப்போது காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளராக உள்ள அபிஷேக்சிங் கிங்வி - டவ் செமிக்கல்ஸ் நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இருந்து கொழுத்த ஊதியம் பெற்றவர். நச்சு வாயுவால் ஏற்பட்ட பாதிப்புக்கு இந்நிறு வனத்தைப் பொறுப்பாக்கக் கூடாது என்று மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். டாட்டா போன்ற தொழிலதிபர்கள், டவ் நிறுவனத்திடம் ரூ.100 கோடி வைப்புத் தொகையாகக் கேட்பதை கைவிட வேண்டும் என்றும், இப்படிக் கேட்டால், அன்னிய முதலீடு குறைந்துவிடும் என்றும், நச்சத் தன்மைகளை அகற்ற தனியே ஒரு நிதியம் அமைக்கலாம் என்றும் யோசனை தெரிவித்ததை, அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஏற்றுக் கொண்டு, அதையே தமது அலுவலகக் கோப்பிலும் குறிப்பு எழுதி வைத்தார். மாண்டேக் அலுவாலியா அமைச்சரவை செயலாளர் பி.கே. சதுர்வேதி, அமெரிக் காவுக்கான இந்திய தூதர் ரேனன்சென், பிரதமரின் முதன்மை செயலாளர் டி.கே.நாயர், இப்படி அதிகார செல்வாக்கு மிக்க ஒரு பெரும் குழு, ‘டவ்’ நிறுவனம் ரூ.100 கோடி செலுத்த வேண்டாம் என்று அரசிடம் வற்புறுத்தி வெற்றி பெற்றது. பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. படுகொலைக்குக் காரணமான ‘யூனியன் கார்பைடு’ ‘டவ் கெமிக்கல்’ என்று பெயர் மாற்றம் செய்து கொண்டுவந்த போது, அதற்கு பட்டுக் கம்பளம் விரித்த மக்கள் துரோகிகளாகவே இவர்கள் செயல் பட்டனர். இதே ப.சிதம்பரம்தான் இப் போதும் மன்மோகன் நியமித்த குழுவில் இடம் பெற்று போபால் மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் வழங்குவது பற்றி அறிக்கை தந்திருக்கிறார்.

* யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கிய டவ் கெமிக்கல் நிறுவனம், மீண்டும் இந்தியாவில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ‘தர்ஸ்பான்’ என்ற பூச்சிக் கொல்லி மருந்தை தயாரித்தது. இதற்காக இந்தியா வில் உள்ள அதிகாரிகளுக்கு அந் நிறுவனம் ரூ.80 லட்சம் லஞ்சம் கொடுத்தற்காக இந்நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் இரு வழக்குகள் பதிவாயின. இப்படி லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக அமெரிக்காவின் சட்டப்படி அந்த நிறுவனம், அந்நாட்டுக்கு அபராதம் செலுத்த வேண்டி யிருந்தது. இதுபற்றி சி.பி.அய். விசாரணைக்கு ஏற்பாடு செய்வதாக மார்க்சிஸ்ட் உறுப்பினர் பிருந்தாகாரத் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு சார்பில் மாநிலங்களவையில் பதிலளிக்கப் பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.

* யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சன், விபத்து நடந்த அடுத்த சில நாட்களில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி இந்தியா வந்தார். அவர் பத்திரமாக வந்து திரும்புவதற்கான உறுதியை இந்திய அரசு வழங்கியது. அப்போது பிரதமராகவும் அயல் துறை அமைச்சராகவும் இருந்தவர் ராஜிவ் காந்தி. ஆண்டர்சன் போபால் வருகை, ம.பி. மாநில முதல்வராக இருந்த அர்ஜூன் சிங்கிற்கும் தெரியாது; மாநில காவல் துறை, ஆண்டர்சனை சட்டப்படி கைது செய்து நடவடிக்கை எடுத்தது. அதற்குப் பிறகு டெல்லியிலிருந்து அர்ஜூன் சிங்கிற்கு, ஒரு தொலைபேசி வந்தது. ஆண்டர்சனை பத்திரமாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று தொலைபேசியில் பேசியவர் உத்தரவிடுகிறார். மாநில அரசுக்குச் சொந்தமான தனி விமானத்தில் பத்திரமாக ஆண்டர்சன் டெல்லிக்கு அனுப்பி வைக்கப் பட்டார். விமானத்தை ஓட்டிச் சென்ற கேப்டன் எஸ்.ஹசன், விமானத்தில் பயணித்த நபர் யார் என்பதே தமக்குத் தெரியாது என்று கூறுகிறார்.

* இப்போது ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேட் டுக்கு அளித்த பேட்டியில் மூத்த காங்கிரஸ் தலைவரான அர்ஜூன் சிங் இது பற்றி தனக்கென்று எந்த நிலைப்பாடும் இல்லை என்றும், அப்போது மத்தியில் இருந்த ராஜிவ் தலைமை யிலான காங்கிரஸ் அரசு தான், இதற்குக் காரணம் என்றும் கூறிவிட்டார். “It was the Central Government decision to provide safe passage to Anderson” (Sunday Express, June 20, 2011) ராஜிவ் காந்தியின் முதன்மைச் செயலாளராக அப்போது இருந்த பி.சி. அலெக்சாண்டர் “பிரதமர் ராஜிவும் முதலவர் அர்ஜூன் சிங்கும் தொடர்பில் இருந் தனர். போபால் நச்சுவாயுக் கசிவுக்குப் பின்னர் யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் இந்தியாவை விட்டு தப்பித்துச் செல்ல அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி அனுமதி அளித்திருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

* ஆண்டர்சன், இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகுதான், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு தெரிவிக்கப்பட்டது என்று காங்கிரசார் செய்து வரும் பொய்ப் பிரச்சாரம், இப்போது ஆதாரங் களுடன் அம்பலமாகி வருகிறது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி ‘இந்து’ ஏட்டின் டெல்லி செய்தியாளர் ஜி.கே. ரெட்டி, அந்த ஏட்டின் முதல் பக்கத்தில் எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடப்பட் டிருந்தது: “பிரதமரின் முதன்மை செயலாளர் பி.சி. அலெக்சாண்டர், பிரதமர் ராஜீவ்காந்தி யின் கவனத்துக்கு இன்று (டிசம். 7, 1984) இத் தகவல்களைக் கொண்டு வந்தார். ஆண்டர்சனை விடுதலை செய்து, தனி விமானத்தில் பத்திரமாக திருப்பி அனுப்புவதற்கு முன்பே, ராஜீவ் காந்தியிடம், இவை தெரிவிக்கப் பட்டன.”

* அடுத்த நாள் டிசம்பர் 8 ஆம் தேதி ‘இந்து’வில் ஜி.கே. ரெட்டி இதுபற்றி எழுதியுள்ள மற்றொரு செய்திக் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட் டுள்ளது.

* “நேற்று (டிசம்பர் 7 ஆம் தேதி) ராஜீவ் காந்தி, ம.பி. மாநிலத்திலுள்ள சாகர் எனும் இடத்தில் தான் இருந்தார். எனவே அர்ஜூன்சிங், ஆண்டர்சனை பிணையில் விடுதலைசெய்து பத்திரமாக அனுப்பிய செய்தியை பிரதமர் ராஜீவிடம் கலந்து பேச வில்லை என்று நம்புவதற்கு வாய்ப்பே இல்லை. ராஜீவ் வேறு மாநிலங்களில் இருந் திருந்தால்கூட அவர்கள் கலந்து பேச முடியாமல் போவதற்கு வாய்ப்புகள் இருந்திருக்கலாம். ம.பி. மாநிலத் திலேயே ராஜீவ் இருந்திருக்கும்போது எப்படி கலந்து பேசாமல், அர்ஜூன் சிங் முடிவெடுத் திருக்க முடியும்?” என்று அந்த செய்தி கூறுகிறது. (‘இந்து’ ஏடே இப்போது அதை வெளியிட்டு, ராஜிவுக்கு தெரிந்தே நடந்த சம்பவம்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.) ஆண்டர்சனின் இந்திய வருகையை வெளி நாட்டுத் துறை அமைச்சகப் பதிவில் திட்டமிட்டு மறைக்கப்பட்டது.

* அமெரிக்காவின் உளவுத் துறையான ‘சி.அய்.ஏ.’ இது பற்றி அப்போது தனது ரகசிய அறிக்கை யில், “இந்தியாவின் ராஜீவ்காந்தி அரசாங்கத்தின் தலையீடு காரணமாகவே ம.பி. மாநில ஆட்சி, ஆண்டர்சனை பத்திரமாக திருப்பி அனுப்பியது” என்று குறிப்பிட்டிருப்பதை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு எடுத்துக் காட்டியுள்ளது. (ஜூன் 12, 2010)

* ஆண்டர்சன் அமெரிக்காவில் நியூயார்க் நகரின் அருகில் தமது பண்ணை வீட்டில் சொகுசாக இருப்பது இந்திய அரசுக்கு தெரியும். ஆனாலும் அவர் தேடப்படுகிற குற்றவாளியாக அறிவிக்கப் பட்டுவிட்டார். அவரை, இந்தியாவுக்குக் கொண்டு வரும் எந்த முயற்சியையும் இந்தியா வில் பா.ஜ.க. ஆட்சியானாலும், காங்கிரஸ் ஆட்சியானா லும் எடுக்கவே இல்லை. 1995 பிப். 9 ஆம் தேதி இந்திய அரசின் செயலாளர்கள் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப் பட்டது. ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோரினால், அமெரிக்கா இந்தியாவுடனான நட்புறவு பாதிக்கும். எனவே அதை வலியுறுத்த வேண்டாம்” என்று முடிவு செய்யப் பட்டது. அந்தக் கூட்டத்தில் உள்துறை செயலாளர் கே. பத்மநாபய்யா, நிதித் துறை செயலாளர் கே.கே.மாத்தூர், ரசாயனம் மற்றும் பெட்ரோலியத் துறை செயலாளர் ஏ.என்.வர்மா உள்ளிட்ட உயர் பார்ப்பன அதிகார வர்க்கம் கலந்து கொண்டது. 2001 இல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் சோலி சோப் ராஜி, ஆண்டர்சனை இந்தி யாவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்” என்று அரசுக்கு பரிந் துரைத்தார். ஆனாலும், மக்கள் தந்த அழுத்தத்தின் காரண மாக, 2003 ஆம் ஆண்டு இந்திய அரசு உரிய ஆதாரங்களை, ஆவணங்களை முன் வைக்காமல், அமெரிக்காவிடம், இந்தக் கோரிக்கையை கண்துடைப்புக்காக வைத்தது. அமெரிக்கா உறுதி யாக ஆண்டர்சனை அனுப்ப மறுத்துவிட்டது.

* அணு உலைகள் விபத்து தொடர்பாக நாடாளு மன்றத்தில் சட்டம் ஒன்றைக் கொண்டு வரும் முயற்சிகளில் மன்மோகன்சிங் ஆட்சி தீவிரம் காட்டி வருகிறது. அணுவிபத்து ஏற்பட்டால், அணு உலைகளை வழங்கும் அமெரிக்க நிறுவனங்கள் ரூ.500 கோடி டாலர்களை இழப்பீடாக அளித்தால் போதும் என்று அந்த சட்டம் கூறுகிறது; இதை நிறைவேற்றும் நிலை யில் போபால் வழக்கின் தீர்ப்பு வந்துவிட்டதால், இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்ற இயலாத நெருக்கடிக்கு மன்மோகன்சிங் ஆட்சி தள்ளப் பட்டுள்ளது. எனவேதான் பாதிக்கப்பட் டோருக்கு இழப்பீடு தருவதில் தீவிரம் காட்டுவது போன்ற நடவடிக்கைகளில் மன்மோகன்சிங் ஆட்சி இறங்கியுள்ளது.

* அமெரிக்காவின் மெக்சிக்கோ கடற்கரைப் பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத் தின் கிணறு ஒன்றிலிருந்து எண்ணெய் வெடித்து வெளியேறியதால், கடல் தாவரங்கள், கடல் உயிரினங்கள் பெருமளவில் உயிரிழந்தன. மனித உயிரிழப்பு எதுவும் இல்லை. என்றாலும், அமெரிக்க அதிபர் ஒபாமா, கடந்த மே மாதம் 27 ஆம் தேதி சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு, ஆத்திரப்பட்டு, பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறு வனத்தைக் கடுமையாக சாடி 500 கோடி டாலர் இழப்பீட்டுத் தொகையைக் கேட்டுள்ளார். ஆனால், இந்தியாவின் ராஜீவ்காந்தியும் அவரது ஆட்சியும், பல்லாயிரம் மக்கள் பிணமான உலகின் மிக மோசமான “போபால்ஷிமா”வைப் பற்றிக் கவலைப்படாமல், குற்றவாளிகளை தப்பச் செய்வதிலும், நாட்டு மக்கள் மரணத்தைவிட அமெரிக்காவிடம் நேசக்கரம் நீட்டுவதிலேயே துடிப்புடன் செயல்பட்டனா.

* இந்திய பார்ப்பன அதிகார பார்ப்பன வர்க்கம், இந்திய பார்ப்பன நீதிமன்றம், இந்திய பார்ப்பனிய உளவுத்துறை, இந்தியப் பார்ப்பன காங்கிரஸ், இந்தியப் பார்ப்பனியத் தலைமை ராஜீவ், இந்திய பார்ப்பன பனியா சுரண்டல் கும்பல், பன்னாட்டு நிறுவனங்கள், இந்துத்துவ பா.ஜ.க. பார்ப்பன ஆட்சி - என்று அனைத்து ஆளும் வர்க்கங்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே நிற்கின்றன.

* போபாலை போல் ஒரு நிகழ்வு உலகில் எந்த ஒரு நாட்டிலும் நிகழ்ந் திருந்தாலும், அதை மக்கள் மன்றம் இந்த நாட்டு மக்களைப் போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா?

* ராஜீவ்காந்தி கொலைக்காக கசிந்துருகும் காங்கிரஸ்காரர்களே! ஈழத்தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரனை ஈழத்திலிருந்து தமிழ்நாடு கொண்டுவர வேண்டும் என்று கூக்குரல் போடும் “தேசபக்தர்களே!”

* 22,000 மக்களைப் பிணமாக்கிய ஒரு கோரப் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகள் மீது நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? அவர்களை, இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தாதது ஏன்?

* இந்திய ராணுவத்தை ஈழத்துக்கு அனுப்பி, 2000 மக்களைக் கொன்று குவித்த ராஜீவுக்கு, கண்ணீர் வடிக்கும் தேசிய திலகங்களே!

* இதோ, இன்றைக்கும் ஊனத்தை வாழ்வாக்கிக் கொண்டிருக்கும் இந்த போபால் மக்களுக்கு, நீங்கள் வழங்கிய நீதி என்ன?

* குற்றவாளிகளை தப்பிக்க விட்டது தானா?

* பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டை யும் வழங்காமல், அவர்களுக்கு பட்டை நாமம் சாத்துவது தானா?

* சொந்த நாட்டு மக்களின் பிணங்கள் மீது அமெரிக்க பன்னாட்டு நிறு வனத்துக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தரும் நீங்கள், இந்தியாவின் தேச பக்தர்களா? அமெரிக்காவின் தேச பக்தர்களா? பதில் சொல்லுங்கள்!

(புதுவை - ஆத்தூர் கூட்டங்களில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கம்)

நன்றி : புரட்சிப்பெரியார் முழக்கம்