Thursday, December 8, 2011

நாம் தமிழர் கட்சி நடைபயணம் மேற்கொள்ளும் : சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கயில், ’’முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு, அந்த இடத்தில் புதிதாக அணைக் கட்டி தமிழகத்தின் உரிமைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் செய்துவரும் மிரட்டல் அரசியலே தமிழினத்தவருக்கு எதிராக அம்மாநிலத்தில் நடந்துவரும் வன்முறை வெறியாட்டங்களாகும். 116 ஆண்டுகள் பழைமையாகிவிட்ட முல்லைப் பெரியாறு அணை பலவீனமான உள்ளது, அது நிலநடுக்கத்திற்குத் தாங்காது உடைந்து விடலாம், அப்படி உடைந்தால் கேரளத்தின் நான்கு மாவட்டத்தின் பெருத்த உயிர் சேதம் ஏற்படும் என்றெல்லாம் கால் நூற்றாண்டாக, கேரள மாநில அரசும், அம்மாநில அரசியல் கட்சிகளும் பரப்புரை செய்து வருகின்றன. முல்லைப் பெரியாறு அணை உடைவது போல் படமெடுத்து, அதனை கேரள மாநில திரையரங்குகளில் போட்டுக்காட்டியும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக அம்மக்களை தூண்டி வந்தன. இப்போது கேரள அரசே நிதியுதவி செய்து ஒரு பெரிய படமொன்றையும் எடுத்து வெளியிட்டுள்ளது. ஆனால் இத்தனை ஆண்டுக்காலமும் எவ்வித பாதிப்பும் இன்றி மலைபோல் உறுதியாக முல்லைப் பெரியாறு அணை நின்றுக்கொண்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை உள்ள இடத்தில் நிலநடுக்கம் ஏற்பாட்டல் அது உடைந்துவிடும் என்ற கேரள அரசின் பரப்புரை எந்த அளவிற்குத் தவறானது என்பதை நிரூபிக்க, 1993ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் நடந்த நிலநடுக்கத்தை சுட்டிக்காட்டலாம். ரிக்டர் அளவுகோலில் 6.4 ரிக்டர் அளவுகோலுக்கு நடந்த அந்த நிலநடுக்கத்தில் 10,000 மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அங்கிருந்த கொய்னா அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதுவும் முல்லைப் பெரியாறு அணையைப் போல் பழைய முறையில் கட்டப்பட்ட (Masonry Dam) அணைதான். எனவே நிலநடுக்கப் பூச்சிகாட்டல் அடிப்படையற்றது என்பது கட்டடப் பொறியாளர்கள் அனைவருக்கும் தெரியும். எனவே, முல்லைப் பெரியாறு அணை பலவீனமான உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத கேரள அரசு, அப்பிரச்னையை நீதிமன்றத்திற்கு வெளியே கொண்டுவந்து சிக்கலாக்கவே இரு மாநில மக்களுக்கு இடையிலான மோதலை தூண்டி வருகிறது. நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக, தொழில் நுட்ப ரீதியாக சாதிக்க முடியாததை வன்முறையின் மூலம் சாதிக்கத் துணிந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த அராஜக விளையாட்டு எப்போது தொடங்கியுள்ளது என்று பார்த்தாலே, இதன் பின்னணியில் உள்ள சதி புரியும். கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசிய பிறகே தமிழக மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள தோட்டங்களில் பணியாற்றிவிட்டுத் திரும்பிய தமிழ்நாட்டுப் பெண்கள் சிலரின் சேலையைப் பிடித்து இழுத்து அத்துமீறியுள்ளனர். அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறு கட்சிக்காரர்கள் அணையை உடைப்போம் என்று கூறிக்கொண்டு அணைப் பகுதிக்குள் செல்ல முயன்றுள்ளனர். இப்படிப்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் கேரள மாநில காவல் துறையினர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிந்துள்ளனர். முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க கேரள, தமிழக முதல்வர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்திருப்பதன் நோக்கம், பிரச்னையை நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து மீட்டு, பேச்சுவார்த்தை என்ற வலையில் தமிழகத்தை சிக்க வைத்து, அணையை உடைக்க கேரள அரசிற்கு சாதமான தீர்வைத் திணிக்கவே என்பதை தமிழக மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த மாதம் 22ஆம் தேதி மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சலை கேரள முதல்வர் உம்மன் சாண்டி சந்தித்துப் பேசினார். அப்போது புதிய அணை குறித்த திட்டத்தை அளிக்குமாறு உம்மன் சாண்டியிடம் பவன் குமார் பன்சல் கேட்டுக்கொண்டுள்ளார். அதன் பிறகு, 25ஆம் தேதி கேரள மாநிலத்தின் அனைத்துக் கட்சிக் குழு பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை கோரிக்கையை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்தே உம்மன் சாண்டி பிரதமரை சந்தித்துப் பேசியுள்ளார். ஆக, கேரள அரசும், அரசியல் கட்சிகளும் ஒன்று கூடியே இந்த பேச்சுவார்த்தை சதித் திட்டத்தை அரங்கேற்றி வருகின்றன. எனவே, பேச்சுவார்த்தை அழைப்பை தமிழக முதல்வர் நிராகரித்து இருப்பது சரியான நடவடிக்கையாகும். முல்லைப் பெரியாறு அணையின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை நிலைநிறுத்த நீதிமன்ற வழியே சரியானது, அதனை விட்டு ஒருபோதும் தமிழக அரசு விலகக் கூடாது. 1979ஆம் ஆண்டு அணை பலவீனமான இருக்கிறது என்று கூறி நீர்தேக்கம் அளவை 152 அடியில் இருந்து 136 அடிக்கு குறைத்த கேரள அரசு, அதனை 120 அடிக்குக் குறைக்க வேண்டும் என்று நேற்று கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ்நாட்டு அரசியல் கட்சி ஒன்று, அம்மாநில கட்சிகளின் இந்நோக்கத்தை புரிந்துகொள்ளத் தவறியது ஏன் என்று புரியவில்லை. எனவே, தமிழினத்திற்கு எதிராக நடத்தப்பட்டுவரும் வன்முறையானது முல்லைப் பெரியாறு அணையை உடைத்து தமிழினத்தின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக முடக்குவதே என்பதை புரிந்துகொண்டு, கேரள அரசியல்வாதிகளின் முயற்சியை முறியடிக்க வேண்டும். இந்த உண்மையை தென்தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வரும் 17, 18ஆம் தேதிகளில் நாம் தமிழர் கட்சி நடைபயணம் மேற்கொள்ளும். அப்பகுதியில் பொதுக் கூட்டங்களை நடத்தி கேரள அரசியல்வாதிகளின் சதித்திட்டத்தை தமிழர்களிடையே பகிரங்கப்படுத்துவோம். முல்லைப் பெரியாறு அணை தமிழினத்தின் சொத்து, அதனை விட்டுவிடாமல் கட்டிக்காத்து தமிழினத்தின் உரிமையை நிலைநிறுத்துவோம்’’என்று தெரிவித்துள்ளார். :

Wednesday, December 7, 2011

உடையப் போவது அணையா? தேசிய ஒருமைப்பாடா?

1886 ஆம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தானத் துக்கும் சென்னை மாகாணத்துக்கும் இடையே 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டது. 125 ஆண்டுகள் முற்றுப் பெறுவதற்கு முன்பாகவே இந்த ஒப்பந்தத்தை முறிக்கும் வகையில் கேரள மாநில அரசு நடந்துகொள்வது சரியானது தானா? இந்தப் பிரச்சினையில் தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்கிற முரட்டுத் தனத்தில் கேரளா ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது. இப்பொழுது கேரள அரசின் பாதுகாப்போடு வன்முறை நிகழ்வுகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பேருந்துகள், லாரிகள் தாக்கப்படுகின்றன. சபரி மலைக்குச் செல் லும் தமிழ் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள்கூட தாக்கப் படும் அவலம். வேலைக்குச் செல்லும் தமிழர்கள் அடித்து விரட்டப்படுகின்றனர். கேரள இளைஞர் காங்கிரசினர் தமிழ்நாட்டின் எல்லைக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி இருக் கின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறையினர் தாக்கப்பட்டிருக்கின்றனர். தமிழ்நாட்டின் பகுதியில் காங்கிரஸ் கொடியை நட்டு வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். பி.ஜே.பி.யும் தன் பங்குக்குப் போராட்டம் நடத்துகிறது. இதன் பொருள் என்னவாக இருக்க முடியும்? கேரளாவில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கிறது என்பதை நினைவூட்டவா? தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி என்று ஒன்று இருக்கிறதா? அது என்ன செய்து கொண்டிருக்கிறது? அதன் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் என்பது வெறும் மாநிலக் கட்சிதானா? அது தேசியக் கட்சி என்ற நிலையை இழந்துவிட்டதா? ஒருக்கால் தமிழ்நாட்டில் உள்ள காங்கிரசுக்கு மட்டும்தான் தேசிய உணர்வு உண்டு; மற்ற மாநிலங் களில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு அந்த உணர்வு கிடையாது என்பதையாவது அறிவித்து விடட்டும். காங்கிரசின் இந்த நிலைப்பாடுதான் கேரளா மற்றும் கருநாடக மாநிலத்தில் உள்ள பி.ஜே.பி., இடது சாரிகள் நிலையும் கூட. என்னதான் தேசியம் பேசினாலும் உள்ளத்துக்குள் ஊற்று எடுத்துக் கொண்டு இருப்பது மாநில உணர்ச்சி தான்! அதையாவது அறிவு நாணயமாக ஒப்புக் கொள்ள வேண்டாமா? தங்கள் பக்கம் நியாயம் இல்லை - ஏற்கெனவே வந்த தீர்ப்புகள் மறுபடியும் வந்துகொண்டிருக்கும் என்பதை உணர்ந்த நிலையில், வன்முறையில் இறங் கும் ஒரு வேலையில் கேரளா இறங்கியுள்ளது. இதற் குக் கேரள மாநில அரசும் பின்னணியில் உள்ளது. இதன் மூலமாக, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் அமைந்துள்ள குழுவையும் மிரட்டுகின்ற யுக்தியைக் கையாளுகின்றார்கள். கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி மிகப் பெரிய அளவில் பெரும்பான்மை கொண்ட ஆட்சியாக இல்லை. நூலிழையில் நித்திய கண்டம் பூரண ஆயுள் என்ற பரிதாபத்தில்தான் உள்ளது. இதிலிருந்து மீளும் யுக்தியும் இதில் புதைந்து இருக்கிறது. காவிரிப் பிரச்சினையில் கருநாடக மாநிலமும் சரி, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளாவும் சரி, ஒரு சார்பாக எல்லா வகையான நியாயங்கள், நேர்மை, நாணயம், நீதி, சட்டம், ஒப்பந்தம் முதலியவற்றை எல்லாம் மூர்க்கத்தனமாக தூக்கி எறிந்து செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மத்திய அரசின் போக்கும் சந்தேகத் துக்கு அப்பாற்பட்டதாக இருக்கவில்லை. தேர்தல் நேரம் என்றபோது கண்டும் காணாமலும் இருந்தது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி நடத்தும் நிலையில், காங்கிரசுக்குச் சாதகமான மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. திட்டவட்ட மாக பிரதமர் வாயிலிருந்து சொற்கள் வருகின்றனவா? அணையை உடைக்கும் அளவுக்குக் கேரளா நடந்து கொள்ளும் நிலையில், மத்திய காவல் படையைப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையைக் கூட ஏற்காமல் அதிகாரிகளைக் கலந்து ஆலோசிப்பதாகக் கூறுவது எல்லாம் தட்டிக் கழிக்கும் ஒன்றாகவே கருதப்பட வேண்டியுள்ளது. அணையை மட்டும் உடைக்கவில்லை. தேசிய ஒருமைப்பாட்டையும் உடைத்திட தேசியவாதிகள் முண்டா தட்டி நிற்பது பரிதாபமே!

Tuesday, December 6, 2011

முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கும் மலையாளிகளை வெளியேற்றுவோம்: ததே.பொ.க.

தமிழகத்திற்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கும் மலையாளிகளை தமிழகத்திலிருந்து வெளியெற்றுவொம் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார். முல்லைப் பெரியாறு அணையைக் காப்போம் என வலியுறுத்தி (03.12.2011) மாலை, மதுரை காளவாசல் மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கு அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், “கேரள அரசின் தலைமை வழக்கறிஞர் தண்டபாணி கேரள உயர்நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாகவும், பாதுகாப்பு குறைபாடுகள் ஏதும் இல்லையென்றும், ஒருவேளை அணை உடைந்தாலும் அத்தண்ணீர் முழுவதையும் முல்லை பெரியாறு அணைக்கு கீழ்ப்பகுதியில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை உள்வாங்கிக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். அணை பலவீனமடைந்திருப்பதாக அச்சம் ஏற்படுத்தும் பரைப்புரையை ஊடகங்கள் தான் செய்கின்றன என்றும் அவர் கூறினார். இது தான் உண்மை நிலை. ஊடகங்கள் மட்டுமின்றி, இதற்கு நேர் மாறாக காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தமிழனப்பகை வெறியைப் பரப்புகின்றன. முல்லைப் பெரியாறு அணையை விட இடுக்கி அணையின் கொள்ளளவு 7 மடங்கு பெரியது. எனவே எந்த நிலையிலும் அங்கு அச்சப்படுவதற்கு அடிப்படையே இல்லை. வேண்டுமென்றே தமிழினப் பகைப் பரப்புரை கேரளத்தில் நடக்கிறது. கேரளத்தின் அடிப்படை உணவுத்தேவையை தமிழகமே நிறைவு செய்கிறது. நாள் தோறும் 700 டன் அரிசி தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்கிறது. கேரளத்தின் முழு இறைச்சித் தேவையையும், காய்கறி, முட்டை ஆகியவற்றின் தேவையையும் தமிழ்நாடு தான் நிறைவு செய்கிறது. நெய்வேலி இரண்டாம் அனல் மின்நிலையத்திலிருந்து நாள்தோறும் 9 கோடி யூனிட் மின்சாரம் தமிழகத்திலிருந்து கேரளா செல்கின்றது. தமிழ்நாட்டில் வாழும் 30 இலட்சம் மலையாளிகள் வணிக அரசர்களாகவும், உயர் பதவிகளிலும் கோலோச்சுகிறார்கள். ஆனால், இதற்கான நன்றியுணர்ச்சி சிறிதும் இல்லாமல் தமிழினப் பகையோடு மலையாளிகள், முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்து தமிழ்நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள். குமுளியில் தமிழர்களின் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. இது தொடருமேயானால், தமிழகத்திலிருந்து மலையாளிகள் அனைவரையும் வெளியெற்றும் போராட்டத்தை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும் கேரளத்திற்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்து பொருள் போக்குவரத்தை முடக்க வேண்டும். நெய்வேலி மின்சாரம் கேரளாவிற்கு செல்வதைத் தடுக்க வேண்டும். தமிழர்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று பேசினார்.

Friday, December 2, 2011

ஒரு மலையாள படத்தில் இந்திய அமைதி (அழிப்பு ) படையை நியாயபடுத்தும் வசனங்கள்.

ஒரு மலையாள படத்தில் இந்திய அமைதி (அழிப்பு ) படையை நியாயபடுத்தும் வசனங்கள். தமிழ் படங்களில் நம் நியாயங்களை சொல்ல அனுமதிப்பார்களா இந்த இந்திய ஜனநாயக தேசத்திலே ஒரு மலையாள படத்தில் வரும் இந்த காட்சியை பாருங்கள்.. எப்படி வஞ்சகதொடு உருவாக்கி இருக்கிறார்கள் என்று... அவர்கள் கருத்தை பொய்யும் புனைவும் கலந்து படத்தில் சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது நம் கருத்தை சொல்ல அனுமதி இருக்கிறதா? Why Was Indian Peace Keeping Force (IPKF) sent to Sri Lanka by Rajiv Gandhi In the military movie flick 'MISSION 90 DAYS', Megastar Mammootty explains to an LTTE cadet the exact truth behind the Rajiv Gandhi - LTTE issue which happened at Sri Lanka... http://www.youtube.com/watch?v=evlxfcPvxfc&feature=share

Thursday, December 1, 2011

முல்லைப் பெரியாரைக் காக்கப் போராட்டங்கள் வைகோ அறிவிப்பு

தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான பென்னிகுக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் கச்சை கட்டிக்கொண்டு பல்வேறு அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் நாம், எல்லை மீறிய பொறுமையை கடைபிடித்து வருகிறோம். குட்டக் குட்டக் குனியும் நிலைக்கு நாம் ஆளாகிவிடக்கூடாது. நமக்கு உரிமையுள்ள முல்லைப் பெரியாறு அணையின் வலிமை குறித்தும், உண்மை நிலை குறித்தும் தமிழ்நாட்டின் பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் தயாரித்துள்ள குறுந்தட்டுகள் தமிழகம் முழுவதிலும் விநியோகிக்கப்பட வேண்டும். முல்லைப் பெரியாறு அணையைக் காக்கும் பிரச்சாரப் பயணத்தை நானும், முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் அப்பாஸ் அவர்களும் டிசம்பர் 7தேதி,மதுரையில் இருந்து கூடலூர் வரை மேற்க்கொள்கிறோம். டிசம்பர் 8 ஆம் தேதி அன்று முல்லைப் பெரியாரைக் காக்க கம்பம் நகரில் என்னுடைய தலைமையில், கம்பம் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைப்பார். விவசாய சங்கத்தலைவர்களும், பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் போராட்டத்தை ஆதரித்துப்பேசுவார்கள். அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்வார். கேரளம் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்துகின்ற முற்றுகைப் போராட்டம் ஜனவரி 21 ஆம் தேதி நடத்துவதாக திருச்சியில் அறிவித்து இருந்தோம். தற்போது அந்தப் போராட்டம் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என்றும், 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற கட்சிகள், அமைப்புகள் அனைவரும் இப்போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும், தமிழ் நாட்டின் உரிமையைக் காக்க இந்தப் போராட்டங்களுக்கு விவசாயிகளும் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். வைகோ பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க ‘தாயகம்’ சென்னை - 8 01.12.2011

Wednesday, November 30, 2011

ஏன் இந்த கொலைவெறி: தமிழக மாணவர்கள் பதிலடி போராட்டம்

கடந்த நவம்பர் 23-ஆம் தேதி முதல் கோவா மாநிலம் பனாஜியில் 42-ஆவது பன்னாட்டுத் திரைப்பட விழா நடைபெற்றுவருகிறது. பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் திரைப்படத் துறையினரும், மாணவர்களுமாக மொத்தம் 8ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இன்று (நவம்பர் 29) மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு திரைப்பட விழா நடக்கும் வளாகத்தில் கூடிய கேரளாவைச் சேர்ந்த நடிகர் ’ஒரு தலை ராகம்’ ரவீந்தர், சில பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 30 பேர் ‘முல்லைப் பெரியாறு அணை இடிந்துவிடும்’ என்றும், ’புதிய அணையைக் கட்ட வேண்டும்’ என்றும் குரல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, வளாகத்திற்குள்ளேயே ஊர்வலம் போலவும் நடத்தினர். இதனைக் கண்டு வெகுண்டெழுந்த பல்வேறு திரைப்படக் கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள், திரைப்படத் துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் உடனடியாக ஒன்றுகூடி, ”8000 ஏக்கர் விளைநிலம், 3 கோடி மக்கள் வறட்சியில் சாகும் அவலத்தைத் தடுக்க வேண்டும்”, “முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும்”, “அணையைச் சிதைப்பது, இந்திய ஒற்றுமையைச் சிதைத்துவிடும்”, “அன்பிற்குரிய கேரள மக்கள், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கவேண்டும்” “அன்பிற்குரிய கேரள மக்களே! ஏன் இந்த கொலைவெறி” என்றும் தொடர்ந்து உரக்க முழக்கம் எழுப்பி ஊர்வலம் சென்றனர். உடனடியான இந்த பதில் நடவடிக்கையைக் கண்டவர்கள் வியப்படைந்தனர். இரண்டு குழுவினரும் முழக்கம் எழுப்பி ஊர்வலம் சென்றதால் அங்கு சிறிதுநேரம் பதற்றம் நிலவியது. செய்தியாளர்களிடையே பேசிய மாணவர்கள், “கேரள அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து உடனடியாக தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு தமிழக மக்களின் வாழ்வாதாரம். அதனை ஒருபோதும் விட்டுத் தர முடியாது. இதற்காக தமிழக மாணவர்கள் போராடுவார்கள்” என்று தெரிவித்தனர். இந்திய, பன்னாட்டு பத்திரிகையாளர்கள், பார்வையாளர்களிடம் அவர்கள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பான உண்மை நிலைமையினை விளக்கினர். பிறகு அங்கு வந்த காவல்துறையினர் தமிழ் மாணவர்களைக் கலைந்து செல்லுமாறு வேண்டினர். ”கேரளப் போராட்டக் குழுவினர் கலைந்து சென்றால் தான் நாங்களும் கலைந்து செல்வோம். அவர்கள் ஒரு வேளை போராட்டம் செய்தால் தொடர்ந்து பதில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்து, பின்னர் கேரள போராட்டக் குழுவினர் கலைந்து சென்றதும் தமிழ்மாணவர்களும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

Tuesday, November 29, 2011

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பொருட்களை தடுப்போம்- சீமான்

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை. கேரள மக்கள் அனைவரும் முழுமூச்சில் மீண்டும் தமிழர்களுக்கு எதிராய் அவதூறையும் விஷமப் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார்கள்.முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று இன்று இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்பு நடத்தியிருக்கிறார்கள்.கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்தித்து அணை குறித்து முறையிட்டிருக்கிறார்கள்.பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேரள உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.மேலும் காந்தி சிலை முன்பு தர்ணாவில் இறங்கியுள்ளார்கள்.டெல்லியில் டேம் 999 என்னும் விஷமப் படத்தை பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்கள். இதன் மூலம் கேரள அரசும் அங்குள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழர்களுக்கு எதிராய் மறைமுகப் போரில் இறங்கியுள்ளனர் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. எண்ணற்ற முறை,பல மட்டங்களில்,கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தமிழர்களுக்கு உரிய,நியாயமான தீர்வு கிட்டவில்லை என்ற நிலையில் வேறு வழியின்றித் தான், தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றம் சென்று முறையிடப்பட்டது.உச்சநீதிமன்றமும் ஏழு பேர் கொண்ட வல்லுநர் குழுவினை அமைத்து அவர்களது அறிக்கையின் அடிப்படையில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்று தீர்ப்பளித்து விட்டது.ஆனால் தீர்ப்பளித்து காலங்கள் பல கடந்தும் அதனை அமல்படுத்துவதற்கு எதிராய் இதுவரை பல முட்டுக்கட்டைகளைப் போட்டு,அதற்கு எதிராய் செயல்பட்ட கேரள அரசு இப்பொழுது நில நடுக்கத்தால் அணை உடையும் அபாயம் இருப்பதாகவும் அதனால் எண்ணற்ற மக்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் பல வழிகளில் புதிய விஷமப் பிரச்சாரத்தினை ஆரம்பித்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் முல்லை பெரியாறு அணைக்கு எந்தச் சேதமும் இல்லை என அணையை ஆராய்ந்த பின்பு மத்திய புவியியல் ஆராய்ச்சித்துறை இயக்குனர் ஜான் மேத்யூ தெரிவித்துள்ளார்.கடல் மட்டத்தில் இருந்து முல்லை பெரியாறு அணை 2 ஆயிரத்து 889 அடியில் இருக்கிறது.ஆனால் அணை உடைந்தால் அழிந்து போகும் என கேரளத்த்தினர் கூறும் குமுளிப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 100 அடியிலும்,வண்டிப்பெரியாறு 3 ஆயிரத்து 350 அடியிலும்,பாம்பனாறு 3 ஆயிரத்து 750 அடியிலும் இருக்கிறது.இது ஒன்றே போதும் மலையாளிகள் தண்ணீரில் வடிகட்டிய பொய்யை எவ்வாறு கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என்பதனை நிரூபிப்பதற்கு. தென்மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் நலனில் எங்கோ இருந்து வந்த ஆங்கிலேயன் பென்னிக்குக்கிற்கு இருந்த அக்கறையில் துளியளவு கூட கூப்பிடு தூரத்தில் உள்ள கேரள மக்களுக்கும் அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கும் இல்லை.மாறாக வெறுப்பும் குரோதமும் மண்டிக் கிடக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து மின்சாரம்,மீன்,கறி,அரிசி,உப்பு,புளி,மணல் என தொடர்ந்து சுரண்டிக் கொழுக்கின்றனர்.அங்கிருந்து கொழுத்தது போதாது என்று இங்கு வந்தும் சுரண்டுகின்றனர்.ஆனால் பதிலுக்கு தமிழக விவசாயிகளின் வாழ்விற்குத் தேவையான தண்ணீரைத் தர மறுக்கின்றனர்.தண்ணீரைத் தர மறுப்பவர்கள் தான் இங்குள்ள விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களினால் உயிர் வாழ்கின்றனர். சர்வ தேசியம் பேசும் கம்யூனிஸ்டுகள்ஆட்சி செய்தாலும் சரி,இந்திய தேசியம் பேசும் காங்கிரசுக்காரன் ஆட்சி செய்தாலும் சரி,இது தான் நிலை.கேரள மக்கள் தன்னை திராவிடன் என்றோ இந்தியன் என்றோ கருதுவதில்லை. மலையாளிகளாகக் கருதுகின்றனர். இதே நிலை நீடித்தால் அவர்களது கொட்டத்தை அடக்க இங்கிருந்து கேரளாவிற்குச் செல்லும் அனைத்துப் பொருட்களையும் தடுத்து நிறுத்தவும்,அணை இருக்கும் பகுதிகளை மீண்டும் தாய்த் தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தையும் அதிவிரைவில் நடத்த நாம் தமிழர் கட்சி தயங்காது என எச்சரிக்கிறோம்.