Monday, December 29, 2008

புத்தாண்டு -2009


புல‌ர்ந்து கிட‌க்கிற‌து
புத்தாண்டு ஒரு ப‌க்க‌த்தில்
இற‌ந்து போய்க்கிட‌க்கிற‌து
ச‌ந்தோச‌ம் இத‌ய‌த்தில்...
இரண்டாயிர‌த்து எட்டின்
சிற‌கை உடைத்து
இரண்டாயிர‌த்து ஒன்ப‌தின்
சிற‌கைக் க‌ட்டி
ப‌ற‌க்க‌ வ‌ந்து இருக்கும்
ஆண்டு புத்த‌க‌மே...
நீ எழுத‌ப் போவ‌து
எந்த‌ அத்தியாய‌ங்க‌ளோ?
வ‌றுமையும் போருமே
உன் க‌ருவானால்
தெருவெங்கும் வீசும்
பிண‌வாடைக‌ள் தான்
உன‌க்கும் சுவாசிக்க‌ கிடைக்கும்...
ஓயாத‌ யுத்த‌ம் , காயாத‌ இர‌த்த‌ம்
த‌மிழ் ஈழ‌த்தில்
இவைக‌ளை
ஒழிக்க‌ச் சொல்லி
க‌ட‌ந்த‌ புத்தாண்டுக‌ளில்
என் ஆத்மாக்க‌ள்
அலுத்துவிட்ட‌ன‌...
வ‌றுமை நீங்கி
ஜாதி,ம‌த‌ங்க‌ள் ஒழிந்தும்
வெடிக்கும் போர் ஓய்ந்து
என்றைக்கு அமைதியாகுமோ
அன்றைக்குப் பின் வ‌ரும்
புத்தாண்டுக‌ளே
ந‌ம‌க்கு ந‌ல்ல‌ ஆண்டுக‌ள்
அதுவ‌ரை
புத்தாண்டெல்லாம்
புத்தெழுச்சியில்லா
ஆண்டுக‌ள்தான்...
- எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்

ந‌ன்றி : அதிகாலை.கொம்

Friday, December 26, 2008

ஈழ‌ப்பிர‌ச்ச‌னையில் சில‌ ப‌த்திரிக்கைக‌ளின் ப‌ச்சை துரோக‌ம்

இவ்வுல‌க‌த்தில் பேனாமுனைக்கு உள்ள‌ வ‌லிமை வேறெதுவுக்குமில்லை.அவ்வ‌லிமையினால் சாதித்த‌வ‌ர்க‌ள், சாதித்துக்கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள் ப‌ல‌பேர். இச்சூழ்நிலையில் ப‌ண‌த்துக்காக‌ எழுதுவ‌தும்,ப‌த்திரிக்கை ந‌ட‌த்துவ‌தும் ந‌ல்ல‌ எழுத்தாள‌ர்க‌ளுக்கும் ப‌த்திரிக்கைக‌ளுக்கும் த‌லைகுனிவையே ஏற்ப‌டுத்தும் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை.

சென்னை அம்பேத்கர் ச‌ட்ட‌க்க‌ல்லூரியில் ந‌ட‌ந்த‌ க‌ல‌வ‌ர‌த்தில் த‌டுக்க‌ தைரிய‌மில்லாத‌ நீங்க‌ள் உயிரை காப்பாற்றிக்கொள்ள‌ த‌ட்டு தடுமாறிக்கொண்டு போகும் ஒருவ‌ரை போட்டி போட்டுக்கொண்டு புகைப்ப‌ட‌ம் எடுத்து த‌லையங்க‌த்தில் நேற்று ந‌ட‌ந்த‌ க‌ல‌வ‌ர‌த்தை நேரில் க‌ண்ட‌ ந‌ம‌து நிருப‌ரின் பேட்டி என‌ ப‌ல‌ கோண‌ங்க‌ளில் புகைப்ப‌டத்துட‌ன் போட்டு, இந்தியாவில் அமைதி பூங்காவாய் இருக்கும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளை பீதிக்குள்ளாக்கினீர்க‌ள். இச்சூழ்நிலையில் தொப்புள்கொடி உற‌வுள்ள‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னையில் த‌மிழ்நாட்டிலுள்ள‌ த‌மிழ் இன‌ உண‌ர்வாள‌ர்க‌ள் கொதித்தெழுந்து ப‌ல‌ முனை போர‌ட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்தின‌ர்.உங்க‌ளுக்கு நாங்க‌ள் துணையாக‌ இருப்போம் என்று போராட்ட‌ம் ந‌ட‌த்தின‌ர்.நாளையும் ந‌ட‌க்கும்.த‌மிழீழ‌ம் கிடைக்கும் வ‌ரை ந‌ட‌ந்து கொண்டேயிருக்கும் என்ப‌தில் மாற்றுக் க‌ருத்தில்லை. நாங்க‌ள் த‌டாவையும் பொடாவையும் க‌ண்டு பய‌ப்ப‌டாத‌வ‌ர்க‌ள்.இற‌ப்ப‌து ஒருமுறைதான் எப்ப‌டி இற‌ந்தோம் என்ப‌தை விட‌ எத‌ற்காக‌ இற‌ந்தோம் என்ப‌தை இந்நாடே நாளைய‌ வ‌ர‌லாற்றில் சொல்லும‌ள‌வுக்கு போராட்ட‌ம் தீவிர‌ம‌டைந்துள்ள‌து. இன‌த்துக்கு துரோக‌ம் செய்யும் சில‌ பேரின் த‌மிழீழ போராட்ட‌துக்கு எதிரான‌ பேட்டியை ம‌ட்டும் கொட்டை எழுத்தில் போட்டு அவ‌ருட‌ன் சேர்ந்து நீங்க‌ளும் கொக்க‌றிப்ப‌தை நிறுத்தி கொள்ளுங்க‌ள்.

இல‌ங்கையில் ந‌ட‌ப்ப‌து த‌மிழின‌ மீட்பு போராட்ட‌ம் அங்கே சிர‌ம‌ப்ப‌டும் ம‌க்க‌ளுக்காக‌ உயிரையும் துச்ச‌மென‌ நினைத்து போராடிக்கொண்டிருக்கும் விடுத‌லைபுலிக‌ளுக்கு ஆத‌ரவாக‌ எழுத‌ சொல்லவில்லை.அங்கே ந‌ட‌க்கின்ற‌ உண்மை ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ம‌ட்டும் தெரிந்தால் எழுதுங்க‌ள் இல்ல‌விட்டால் அதை ப‌ற்றி எழுதாமல் விட்டுவிடுங்க‌ள். ஒன்று ம‌ட்டும் ந‌ன்றாக‌ புரிந்து கொள்ளுங்க‌ள் ஈழ‌த்தில் ந‌ட‌க்கும் இன‌ப்போரில் வீர‌ம‌ர‌ண‌ம‌டையும் புலிவீர‌ர்க‌ளின் உட‌ல் புதைக்க‌ப்ப‌ட‌வில்லை.அம்ம‌ண்ணில் விதைக்க‌ப்ப‌டுகிறார்க‌ள். ஒரு விதை விதைக்க‌ப்ப‌ட்டால் நாளை அது ப‌ல‌ம‌ர‌ங்க‌ளை உருவாக்குகின்ற‌ பாட‌ம் ப‌டித்திருப்பீர்க‌ள். ஒரு நாட்டு இராணுவ‌த்தையே த‌லைகுனிய‌ வைத்த‌ வீர‌த்தியாகிக‌ள் அவ‌ர்க‌ள்.இழ‌ப்ப‌த‌ற்கு இனி இவ‌ர்க‌ளிட‌ம் ஒன்றும் இல்லை என்று ஆன‌பின்புதான் அவ‌ர்க‌ள் ஆயுத‌மேந்தி போராடுகிறார்க‌ள்.இவ‌ர்க‌ள் கேட்ப‌து எல்லாம் சுத‌ந்திர‌மாய் த‌மிழ‌ன் த‌மிழ‌னாய் த‌லைநிமிர்ந்து வாழ‌வேண்டும் என்ப‌துதான்.

30ஆண்டுக‌ளில் பல‌ போராட்ட‌ங்க‌ள் ந‌ட‌ந்தேறின‌ அவ‌ர்க‌ள் இழ‌ந்த‌து ஏராள‌ம்.த‌மிழீழ‌ம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கின்றது. சில‌ குள்ள‌ந‌ரிக‌ளின் சுய‌ந‌ல‌ பேச்சை கேட்டு ஒன்றை பத்தாய் திரித்து எழுதி ஈழ‌ மக்க‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ளை சிறையில் அடைத்துவிட்டோம் என்று இறுமாப்பு கொண்டிருந்த‌ வேளையில் அவ‌ர்க‌ள் விடுத‌லையாகி வெளியே வ‌ந்த‌ போது அவ‌ர்க‌ளை வர‌வேற்க‌ திர‌ண்டிருந்த‌ கூட்ட‌த்தின‌ரை க‌ண்டு கூனிக் குறுகிப்போனீர்க‌ள் என்ப‌துதான் உண்மை.இவ‌ர்க‌ளை ஆத‌ரித்து எழுத‌ முடியாவிட்டாலும் இந்நிக‌ழ்வினை அணைக்க‌ முய‌ல‌வேண்டாம்.

பிற்கால‌த்தில் இதுக்கெல்லாம் நீங்க‌ள் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌ கால‌ம் வெகுதூர‌த்திலில்லை. ந‌டிகை ஒருத்திக்கு நான்குநாள் காய்ச்ச‌ல் நாடே ச‌ல‌ச‌ல‌க்கிற‌து என்று எழுதும் நீங்க‌ள் எத்த‌னை முதியோர்க‌ள் இங்கேயும் ஈழ‌த்திலும் உண்ண‌ உண‌வுமின்றி உடுக்க‌ உடையுமின்றி காடு ம‌லைக‌ளில் கொட்டும் ப‌னியிலிலும் கொளுத்தும் வெயிலிலும் இருக்க‌ இட‌மில்லாது வாழ்கின்றார்க‌ள் என்பதை நீங்க‌ள் அறிய‌வில்லையா? ந‌டிகைக‌ளின் அங்க‌ங்க‌ளை ப‌ற்றியே எழுதிக்கொண்டிருக்கும் உங்க‌ளுக்கு வீர‌போராட்ட‌தின் விலைம‌திப்பு எங்கே தெரியப்போகிற‌து.

ப‌ட்டினிப்போரில் பாழும் ஈழ‌த்தில் பாலில்லாம‌ல் ப‌ரித‌விக்கும் குழ‌ந்தைக‌ள் இருக்கையில் ப‌ல‌ ஆயிர‌ம் லிட்ட‌ரில் க‌ட‌வுளுக்கு பாலபிசேக‌ம் செய்து பாலையும் வீண‌டித்த‌தை எழுதும் உங்க‌ளை என்ன‌ சொல்வ‌து? இத‌னால் யாருக்கு என்ன‌ ப‌ய‌ன் என்று உங்க‌ளால் சொல்ல‌ முடியுமா? ப‌ள்ளிக்கு செல்ல‌வேண்டிய‌ ப‌ச்சிள‌ங்குழ‌ந்தைக‌ள் ப‌துங்கு குழிக்குள் அடைப்ப‌ட்டு கிட‌க்கின்ற‌ன‌ர்.அங்கு ந‌ம் தமிழ‌ர்க‌ள் வாழ்க்கையே போராட்ட‌மாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்க‌ள்.அவ‌ர்க‌ள் சாக‌ப்பிற‌ந்த‌வ‌ர்க‌ள் இல்லை த‌மிழீழ‌த்தை ஆள‌ப்பிற‌ந்த‌வர்க‌ள். நாளை ம‌ல‌ர‌போகும் த‌னி ஈழ‌த்தின் ச‌ரித்திர‌த்தையும் ச‌ரித்திர‌ நாய‌ர்க‌ளை ப‌ற்றியும் நீங்க‌ள் எழுதும் கால‌ம் வெகுவிரைவில் இல்லை.

ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ எதையும் செய்ய‌ துணிந்த சில‌ இய‌க்க‌ங்க‌ள் த‌மிழீழ‌ம் தான் தீர்வு என்றும், த‌னி ஈழ‌ம் கிடைக்கும் வ‌ரை அவர்க‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ போராடுவோமென்று போராடிகொண்டிருப்ப‌வ‌ர்க‌ளை ப‌ற்றி வாழ்த்தி எழுத‌ ம‌ன‌மில்லை என்றாலும் அவ‌ர்க‌ளை ப‌ற்றி அவ‌தூர‌க‌ எழுதுவ‌தை நிறுத்துங்க‌ள். எப்போதும் இல்லாத‌ அள‌வுக்கு த‌மிழ்நாடே ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ கொதித்தெழுந்திருப்ப‌தை ச‌கிக்க‌ முடியாவிட்டால் இந்த‌ தொழிலை விட்டுவிட்டு வேறு ப‌ண‌ம் ச‌ம்பாதிக்கும் தொழில் எத்த‌னையோ இருக்கு அதையாவ‌து செய்யுங்க‌ள்.

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன் துபாய்.

Monday, December 15, 2008

க‌ரும்புலிக‌ள்




க‌ரும்புலிக‌ள்

பெற்ற‌ தாய் நாட்டையும்

பேசும் த‌மிழ் மொழியையும்

ப‌ற்றுட‌ன் ம‌தித்து

ம‌ன‌தில் உறுதியும்

கொள்கையும் கொண்டு

க‌ட‌ற்புலியாக‌வும்

க‌ள‌ப்புலியாக‌வும்

சாத‌னை ப‌டைக்கும்

க‌ரும்புலி வீர‌ரே

உமை நாம் வ‌ண‌ங்குகிறோம்...

நேர‌ம் குறித்து வைத்து

சாவைத் தோள் மீது தாங்கி

ப‌ட்ட‌ப் ப‌க‌லிலும் கார் இருளிலும்

எதிரியை சித‌ற‌டித்து

வெந்து உட‌ல் க‌ருகி

வெற்றிக‌ளை ஈட்டித‌ரும்

வேங்கைய‌ல்லவா நீங்க‌ள்...

ம‌ண் மீது ப‌டை எடுத்த‌

மாற்றானின் முக‌ம் க‌ண்டு

ப‌ல்லைக் க‌டித்துக்கொண்டு

நெஞ்ச‌ம‌தில் வீர‌த்துட‌ன்

மெய்த‌னிலே வெடி குண்டைச் சும‌ந்து

வெடித்து சித‌றிய‌ வேங்கைக‌ள் நீங்க‌ள்...

வேத‌னைக் க‌ட‌லில் மூழ்கிய் போதும்

சோத‌னை புய‌லில் சிக்கிய‌ போதும்

சாத‌னை புரிந்த‌ ச‌ரித்திர‌

நாய‌கர்க‌ள் நீங்க‌ள்...
விடுதலைவீரபத்திரன்
துபாய்

Thursday, December 11, 2008

பிரிவு




என்னையே சொல்லி

அழுது கொண்டிருப்பாய் அம்மா

கையாலாகாத‌ ம‌க‌ன் க‌விதை

எழுதிக்கொண்டிருக்கிறேன்

க‌ண்காணாத‌ தூர‌த்தில்...

முட்டிப்போன‌ என் வ‌யிற்றை

தொட்டுப்பார்க்கிறேன் அம்மா

ஒட்டி உல‌ர்ந்து போன‌

உன் வ‌யிறு ஞாப‌க‌ம் வ‌ருகிற‌து...

வெள்ளைக்காரில்

வ‌ழுக்கிச்செல்லும் போதெல்லாம் அம்மா

வெறும் காலுட‌ன்

நீ ந‌ட‌ந்த‌ தூர‌ம்

நினைவுக்கு வ‌ரும்...

விழிக‌ளுக்கும் உத‌டுக‌ளுக்கும்

இனி வேலையில்லை அம்மா

காகித‌ங்க‌ளே க‌வ‌லை சும‌க்கும்

க‌ண்ணீர் சும‌க்கும்

அன்பு வ‌ள‌ர்க்கும் ஆத‌ர‌வு தேடும்...

வ‌யிற்றுக்காய் வாழ்வு வ‌ள‌ர்த்து

வாழ்வுக்காய் வ‌யிறு வ‌ள‌ர்த்து

ஆனால்

அன்புக்காக‌ ம‌ட்டும்

அன்பு வ‌ள‌ர்த்த‌து

என் அம்மா ம‌ட்டும்தான்...

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்

ம‌ன‌ம்




ம‌ன‌ம் ஒரு குர‌ங்குதான்

அது எங்கெங்கோ

தாவித்திரிகிற‌து...

சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில்

குழ‌ந்தை போன்று

அட‌ம் பிடிக்கிற‌து...

ம‌ற‌க்க‌ நினைப்ப‌வ‌ற்றை

ம‌ற‌க்க‌ முடியாது

த‌த்த‌ளிக்கிற‌து...

அள‌வில்லா

ச‌ந்தோச‌த்தில் ஆர்ப்ப‌ரிகின்ற‌து...

தாங்க‌ முடியாத‌

துக்க‌த்தினால்

துவ‌ண்டு போகின்ற‌து...

அடைய‌ முடியாத‌வ‌ற்றை

எண்ணி ஏங்குகின்ற‌து

இருப்ப‌தைக்கொண்டு

திருப்திய‌டைய‌

ம‌றுக்கின்ற‌து...

இருப்பினும்

ம‌ன‌ம்மென்ப‌து

எதுவென்று

வ‌ரைய‌றுக்க‌

முடியாதிருக்கின்ற‌து....

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்



--
விடுதலைவீரபத்திரன்
துபாய்

த‌னிமை




அத்துவான‌க் க‌ட்டில்

வெந்து காய்ந்தும்

ந‌னைந்து குளிர்ந்தும்

த‌லைவிரித்து

நின்று கொண்டிருக்கும்

ஒற்றைப் ப‌னைம‌ர‌த்தின்

துக்க‌ங்க‌ளோடு

ஒளிபுக‌ முடியா கால‌வெளிக்க‌ப்பால்

அட‌ர்ந்த‌ காட்டில்

துள்ளி குதித்து

வீழ்ந்து கொண்டிருக்கும்

அருவியின்

ச‌ந்தோச‌ங்க‌ளோடும்

ஆயிர‌மாயிர‌ம்

ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளுக்கூடாய்

எதிலும் ஒட்டாது

வ‌ள‌ர்ந்து தேய்ந்தும்

தேய்ந்து வ‌ள‌ர்ந்தும்

காய்ந்து கொண்டிருக்கிற‌து

என் த‌னிமை நில‌வு...



க‌ண்ணாடி ம‌னித‌ன்

நான் அப்ப‌டியே நானாக‌த் தெரிவேன்

நான் நானாக‌த் தெரிந்தாலும்

க‌ண்ணாடி ம‌னித‌னுக்கு இல்லை

என்னைப் போல‌ நிறைய‌ முக‌ங்க‌ள்



எட்டுப்புலிக்காடு

ரெ.வீர‌ப‌த்திர‌ன் துபாய்

ஜ‌ன‌நாய‌க‌ சாமியார்க‌ள்

எங்க‌ளை விட‌

எங்க‌ள் நாட்டு

சாமியார்க‌ள் தான்

ஜ‌ன‌நாய‌கத்தை சரியாக‌

புரிந்து கொண்டிருக்கிறார்க‌ள்...

அத‌னால்தான்

இங்கு சில‌ த‌ந்திர‌சாமிக‌ளின்

ம‌ந்திர‌ வ‌லைக‌ளில்

எங்க‌ள் மந்திரிமார்க‌ள்

ம‌ய‌ங்கி கிட‌க்கிறார்க‌ள்...

சாமியார் ம‌ட‌ங்க‌ளின்

சாய்வு மேசையில் எங்க‌ள்

ச‌ட்ட‌ வ‌ர‌வுக‌ள்

ச‌ரி செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌...

அர‌சிய‌ல் வாதிக‌ளை விட‌

ஆசிர‌மவாசிக‌ள் தான்

அதிக‌மாய் அதிகார‌ம்

செலுத்துகிறார்க‌ள்...

ஆட்சியாள‌ர்க‌ள் மாற‌லாம்

ஆனால் ஆசியாள‌ர்க‌ள்

மாறுவ‌தில்லை...

என‌வே தான் இங்கு

ஆட்சியாள‌ர்க‌ளை விட‌

ஆசிர‌மவாசிக‌ளுக்கு

அதிக‌ ம‌ரியாதை...

ஒன்று ம‌ட்டும் புரிந்த‌து

எதையும் புரிந்து கொள்ளாத‌

இந்திய‌னைத்தான்

இவ‌ர்க‌ள் எதிர்பார்க்கிறார்க‌ள்...

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்