Thursday, April 15, 2010

என் நெஞ்சோடு கலந்திடு...



ஒரு யுக
சோகத்தின் கண்ணீர்
உனக்குள்ளே ஆர்ப்பரிக்கிறது.

உன் மனதில்
அடிக்கடி புகுந்து
ஆழமாய் வாட்ட
உனக்கு அப்படி என்ன
சோகத்தின் கீறல்கள்?

ஊமையின் கனவுகளாய்
உன் சோகங்களையும்
பூட்டி வைத்துத் துவளாதே!

இமை வரை முட்டி மோதி
முத்து முத்தாய்
விழும் துளிகளை
நீயும் ஏன் சேமிக்கத் துடிக்கிறாய்?

காலையில் உதிக்கும்
அந்த சூரியன்
மாலையில் அஸ்தமிப்பதாய்
உன் உள்ளத்தில் உதித்த
அந்த சோகங்களை கூட
இன்றே அஸ்தமித்துப் போகட்டும்...

விடியாத வானம் இல்லை
வடியாத வெள்ளம் இல்லை
நாளை பொழுதும்
புதிதாய் மலரட்டும்..

எப்போதும்
தனிமையாய் வெறுமையாய்
இருண்ட அறையினில்
நீயும் மௌனமாய் கரைகின்றாய்...

இந்த உலகில்
உனக்காய் யாருமில்லை என்று
இல்லாத ஓர் வேலியை
உன்னைச் சுற்றிப் போடுகிறாய்...

போதும் போதும்
நீ போட்ட வேலியை
தகர்த்து எறிந்து விடு.

கல்லில் விழுந்த
சிறு ஆலம் விதைகூட
முழைத்து பாறையை பிளப்பதை
நீ பார்க்கவில்லையா?

வாழும் காலம் வரை
வசந்தமாய் வாழ்ந்திடலாம்
வா இப்போதே
உன்னோடு நானும்
உறுதியான நட்புடன்...

உன் உள்ளத்தில் நிறைந்து
வலி சுமக்கும்
சோகத்தின் சுமைகளை
கண்ணீர் ஊறிய
உன் கடந்த காலத் தடயங்களை
புதிய இலட்சியங்களின் புழுதியினால்
தூர்த்து விடச் செய்கிறேன்...

அழுதிடும் போது
உன் சோகம் பகிர்ந்து
உன் விழி துடைப்பதற்கு
உண்மையான நட்புடன் நான்...

நீ சிரித்திடும் போது
நீ சிந்தும் சந்தோசக் கண்ணீரில்
உன்னுடன் சேர்ந்து
நானும் நனைவதற்கு
உறுதியான நட்புடன் நான்...

வா இப்போதே
என் நெஞ்சோடு கலந்திடு
இனிய உறவாக....

Monday, April 12, 2010

மறைக்கப்பட்ட இனப்படுகொலை : இலங்கையின் போர்குற்றம்

இந்திய தலைநகர் டெல்லியில் “Unspoken Genocide: War crimes in Sri lanka” (மறைக்கப்பட்ட இனப்படுகொலை : இலங்கையின் போர்குற்றம்) என்ற தலைப்பில் வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி டெல்லி பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால், dublin மக்கள் தீர்ப்பாயத்தோடு இணைந்து மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றத்தை உலகிற்கு அம்பலபடுத்திய Dublin மக்கள் தீர்ப்பாயத்தில் பங்காற்றும் முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜிந்தர் சச்சார், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் கிருஷ்ணையர், அனைத்துலக மனித உரிமை கழகத்தின் விராஜ் மென்டிஸ்,முன்னாள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்நாடு PUCL தலைவர் சுரேஷ், PUCL முன்னாள் தலைவர் கண்ணபிரான், முன்னாள் சண்டிகர் நீதிபதி அஜித் சிங் பைன்ஸ்,புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தை சார்ந்த கவிஞர் வரவர ராவ்,அரசியல் கைதிகள் விடுதலை குழுவை சார்ந்த பேராசிரியர் கிலானி,காஸ்மீர் அனைத்து கட்சி ஹுரியத் குழுவை சார்ந்த சையத் அலிஷா கிலானி, உலக சீக்கிய செய்திகள் (world sikh news) ஆசிரியர் ஜக்மோகன் சிங், அனைத்துலக மக்கள் போராட்ட லீகின் துணை தலைவர் சாய் பாபா, மார்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சார்ந்த கவிதா கிருஷ்ணன் போன்ற தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்..

இந்நிகழ்வு நமது மீனகம் தளத்தில் ஏப்ரல் 15 மதியம் 2 மணி முதல் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறவுகள் அனைவரும் கட்டாயம் காணவேண்டிய நிகழ்வு இது...

Saturday, April 10, 2010

தமிழ்த் தேசியம் பேசுவோரால் தமிழ்த் தேசியத்துக்கு ஆப்பு!

இலங்கைத் தீவில் வரலாற்றுக் காலம் முதல் தொடர்ச் சியாக நிலை நிறுத்தப்பட்டு வரும் தமிழ்த் தேசியம், தற் போதும் சிதைந்துவிடாமல் ஈழத்தமிழர் தாயகத்தில் நிலை நிறுத்தப்பட்டு பேணப்படவேண்டும் எனக் கருதும் தமிழ் ஆர்வலர்களுக்கு நடந்து முடிந்த, பொதுத் தேர்தலின் முடிவுகள் பேரிடியாய் வந்திறங்கியிருக்கின்றன என்று கூறினால் அது மிகையாகாது.

தமிழ்த் தேசியத்தை நிலைநாட்டுவதில் முழு ஈடு பாடு கொண்டுள்ள கட்சி அல்லது அணி எனத் தன்னைக் இனங்காட்டிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் கணிசமான ஆசனங்களைப் பெற்று வடக்கு, கிழக்கில் தமிழர் தாயகத்தில் தனது தனித்துவமான இடத்தை நிரூபித்துள்ளபோதிலும், அதுகூட இம்முறை பெரும்பின்னடைவைச் சந்தித்து இருக்கின்றது என்ப தும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய உண்மையே.
கடந்த பொதுத் தேர்தலில் தமிழரின் ஏக ஜனநாயக சக்தியாக உயர்ந்து இருபத்தியிரண்டு நாடாளுமன்ற ஆச னங்களை ஈட்டிய அக்கட்சிக்கு இம்முறை பதினான்கு ஆசனங்களை மட்டுமே பெறமுடிந்திருக்கின்றது.

அதேசமயம், தமிழ்க் கூட்டமைப்பைப் பிளந்து, தனித்து நின்று தமிழ்த் தேசியம் பேசிய அகில இலங் கையின் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன் அணிசேர்ந்து தமிழர் தனித்துவம் பேசிய சிவாஜிலிங்கம் ஸ்ரீகாந்தா கூட்டு போன்றவையும் ஒரேயடியாக மண் கவ்வியிருக்கின்றன. இந்த அணிகள் தமிழ் மக்களால் ஒரேயடியாக நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன.

இதில் இன்னொரு விடயமும் கவனிக்கத்தக்கது.
கடந்த தடவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகி, இம்முறை தமிழ்க் கூட்டமைப்புக்கு வெளியே நின்று தேர்தலை சந்தித்த அனைவரும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டிருக்கி றார்கள்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந் திரன், பத்மினி சிதம்பரநாதன், என்.ஸ்ரீகாந்தா, சிவாஜி லிங்கம், சிவநாதன் கிஷோர், கனகரட்ணம், தங்கேஸ்வரி ஆகியோர் இப்போது தோல்வியடைந்துள்ளனர்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கடந்த முறை தெரிவாகி, இந்தத் தடவையும் அதேகூட்டமைப் பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெரும்பாலும் மீண் டும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள் அம்பாறை மாவட்டத்தில் மட்டும் ஒரு சிறிது வேறுபாடு உள்ளது.
கடந்த தடவை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஓர் ஆசனம் கூட்டமைப்புக்குக் கிடைத்தது. அந்த இடத் துக்கு தெரிவான பத்மநாதன் இயற்கை மரணம் அடைய பின்னர் அப்பதவிக்கு டாக்டர் தோமஸ் தெரிவானார். அதேசமயம் கடந்த தடவை அமரர் ஜோசப் பரராஜசிங் கத்தின் இடத்திற்கு தேசியப்பட்டியல் எம்.பியாக நியமிக் கப்பட்ட சந்திரகாந்தனும் அம்பாறை மாவட்டத்தில் இம்முறை டாக்டர் தோமதாஸுடன் சேர்ந்து தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டார். கடந்த தடவை போல இம்முறையும் அம்பாறையில் ஓர் ஆசனத்தை கூட் டமைப்புத் தக்கவைத்துக் கொண்டது. ஆனால் விருப்பு வாக்குகளின் படி சந்திரகாந்தனுக்கோ, டாக்டர் தோமதா ஸுக்கோ எம்பியாகும் வாய்ப்பு கிட்டவில்லை. மாறாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட பியசேன என்ற தமிழ் ஆர்வலர் இந்த இடத்துக்கு எம்பி யாகி இருக்கின்றார். இவர் விடுதலைப் புலிகளின் காலத் தில் ஆலையடி வேம்பு பிரதேச சபை தேர்தலுக்கு தமிழ ரசுக் கட்சியால் கடந்த தடவை நிறுத்தப்பட்டு, ஐயாயிரத் துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று, அந்த தமிழர் பிரதேசத்தின் பிரதேசசபைத் தலைவரானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஆகவே, அம்பாறையில் தமிழ் தேசியக் கூட்டமைப் பின் சார்பில் போட்டியிட்ட அதன் முன்னாள் எம்பிக்கள் இருவர் இம்முறை அங்கிருந்து தெரிவாகவில்லை என் பது தமிழ்க் கூட்டமைப்புக்கு ஒரு தோல்வியே அல்ல.

ஆனால் கடந்த தடவை தமிழ்க் கூட்டமைப்பு சார்பில் எம்பியாக இருந்து விட்டு இம்முறை அதற்கு மாறான தரப்புகளில் போட்டியிட்ட அனைவருமே தோல்வி கண் டுள்ளனர் என்பதும்
கடந்த தடவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட்டு வெற்றியை எட்ட முடியாமல் வாய்ப்பிழந்த அப்பாத்துரை விநாயகமூர்த்தி, இந்தத் தடவை இதுவரை தாம் அங்கம் வகித்த ஒரேஒரு கட்சி யான அகிலஇலங்கைத் தமிழ்க் காங்கிரசையும் அதன் தலைமைத்துவத்தையும் கைவிட்டு தமிழரசுக்கட்சிச் சின் னத்தில் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வெற்றியை யீட்டியுள்ளார் என்பதும் இந்தத் தேர்தலை ஒட்டி தமிழர் தரப்பில் இதுவரை குதர்க்கம் பேசிக், குழப்பிவந்த அரசியல் பிரமுகர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.

இப்படித் தமிழர் தரப்பில் தேசியம் பேசுபவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டு தமிழ்க் கூட்டமைப்பு மீது தமிழர்கள் வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்க்கச் செய் யும் எத்தனங்களில் ஈடுபட்ட எட்டப்பர் கூட்டங்கள் அதன் மூலம் தேர்தலில் தாங்களும் மண் கவ்வித்தோற்று ஓடியதுடன் தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான சக்திகள் மேலும் உறுதிபெறவும் வழி சமைத்துச் சென்றிருக்கின்றன.

இனியாவது இவ்வாறு குழப்பம் விளைவிக்கும் குசும் புத்தனத்தை நிறுத்திவிட்டு தமிழ்ச் சமூகத்திற்கு நீதி நியாயத்துடன் செயலாற்ற இவர்கள் முன்வர வேண்டும்.
முன்வருவார்களா .....?

Friday, April 9, 2010

கோடியில் இருவர்



சாலையில் கடுமையான வெயிலில் நடக்கும் போதெல்லாம், ஓரமாய், அமைதியாய் நிழலைப் பொழியும் மரம் தாயின் மடிபோல் சுகமாய் அரவணைத்துக் கொள்ளும். ஒரு போதும் நினைத்துப் பார்ப்பதில்லை, இந்த மரத்திற்கு விதையிட்டு, நீரூற்றி வளர்த்தது யார், இந்த மரத்தின் வரலாறு என்னவாக இருக்கும் என்று.

மரம் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில்லாத துரதிருஷ்டம், அந்த இரண்டு நபர்களைச் சந்தித்த போது தகர்ந்து போனது. மரத்தின் மேல கணக்கிலடங்கா காதலும் வெறியும் மனதில் வேரூன்றியது... ஈரோடு மாவட்டம் இந்த இரண்டு நபர்களைப் பெற என்ன தவம் செய்ததோ!!!?

கோடியில் ஓருவர் – 1
ஈரோடு அருகே உள்ள ஒரு மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்து “ஏனுங்க இந்த மரம் நடுவாரே” என்று கேட்க ஆரம்பிக்கும் போதே “அட நாகாராஜண்ணன கேக்றீங்களா, அந்த வழியாப் போங்க” என்று பெருமிதத்தோடும், நம்மை பார்ப்பதில் கொஞ்சம் வெட்கத்தோடும் வழி காட்டுகிறார்கள்.


தன்னுடைய வீட்டிலேயே கைத்தறி துண்டு நெசவு செய்வதை தொழிலாகக் கொண்டிருக்கிறார் 56 வயதான திரு. நாகராஜன் (04294-314752 / 94865-20483) அவர்கள். மிக மிகச் சாதாரணமான ஓட்டு வீடு. எங்களுக்கு நாற்காலிகளை எடுத்துப் போட்டு விட்டு மிகுந்த சினேகமாக சிரிக்கிறார்.


இந்த மாமனிதர் தனது 17வது வயதிலிருந்து கடந்த 39 வருடங்களாக விதைகளை தெரிவு செய்து, முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை நான்கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி இன்று வரை மரமாக வளர்த்தெடுத்திருப்பது ஒன்றல்ல இரண்டல்ல..... பத்தாயிரத்திற்கும் அதிகம்.

ஆரம்பத்தில் தன் செயல்களைக் கண்டு பைத்தியகாரன் என்று ஊரே சொன்னது எனச் சொல்லி சிரிக்கிறார். பள்ளிக்கூடம் அருகே தான் வளர்த்து ஆளாக்கிய மரத்தில் மாலை வேளைகளில் பல்லாயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள் கீச்கீச்சென கத்துகிறது என்று சொல்லும் போது அவரது முகம் மகிழ்ச்சியில் திழைக்கிறது.

பேச்சினிடையே, எவ்வளவோ மறுத்தும் சமையலறைக்குச் சென்று அரிவாள்மனையில் எலுமிச்சம் பழத்தை அரிந்து, சர்பத் தயாரித்துக்கொடுத்து உபசரிக்கிறார். மகள் வயிற்றுப் பேரன் இவரோடு வளர்கிறார், அதோடு அந்தச் சிறுவனும் தற்சமயம் நான்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.

தினமும் காலையிலும், மாலையிலும் மரம் நடுவதையும், அதனைப் பராமரிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பவருக்கு வந்த சவால்கள் பல. சாலையோரம் நட்ட மரங்களை, விவசாய நிலத்தில் நிழலடிக்கிறது என்று விவசாயிகள் வெட்டிய சோகமும், சாலைப் பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் என அவ்வப்போது பல சில்லறை காரணங்களைச் சொல்லி மரங்களை சர்வசாதாரணமாக வெட்டி வீசுகிறார்கள் எனக்கூறும் போது அவருடைய மனதில் உணரும் வலி அப்படியே முகத்தில் வந்து படிகிறது. குறிப்பாக மரத்தின் கிளையை ஒரு நாள் சரக்குக்கும், பரோட்டாவிற்கும் விறகாக மாற்றும் அற்ப மனிதர்களும் இருக்கிறார்கள் என அறியும் போது நமக்கே மனது வெம்புகிறது.

ஒவ்வொரு மரத்தையும் தன் குழந்தையாகவே பாவிக்கிறார். ஆல், அரசன், புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை என வகை வகையாய் எட்டு திசையிலும் வளர்த்தெடுத்திருக்கிறார். கடும் கோடையிலும் கூட மரக்கன்றுகளைச் சுற்றி தேங்காய் நார் தூவி, அருகில் உள்ள விவசாயிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி நீர் பெற்று தண்ணீர் தெளித்து செடிகளை காப்பாற்றியிருக்கிறார்.

காஞ்சிக்கோவில் அருகில் இருக்கும் ஒரு மலைக்கோவிலைச் சுற்றி விதவிதமான மரக்கன்றுகளை நடவு செய்து அந்த மலைமேல் இருக்கும் பாறைகளுக்கிடையே தேங்கியிருக்கும் தண்ணீரை குடத்தில் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி, அதைக் காப்பாற்றி, இன்று அந்த மலையைச் சுற்றி அற்புதமாக மரங்களை வளர்த்து அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.


மிகுந்த ஆச்சரியமாக, நெகிழ்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா என்று.

கோடியில் ஒருவர் – 2
சத்தியமங்களத்திலிருந்து பங்களாபுதூர் வரும் வழியில் இருக்கிறது ஏழூர். ஏழூரிலிருந்து வடக்குத் திசையில் திரும்பி ஒரு மைல் கடந்தால் வருகிறது வேட்டுவன் புதூர். முதலில் வரவேற்கிறது மிகச்சிறிய ஒரு கடை. வெளியூர் ஆட்கள என்று தெரிந்ததுமே தானாகவே கேட்கிறார்கள “அய்யாச்சாமி அண்ணன தேடி வந்தீங்களா!”...


“இந்த மரம் வளர்த்துறாரே” என்று இழுக்க, “அட அய்யாச்சாமியண்ணந்தான்.... இந்த அப்பிடி போங்க.. அந்த ஓட்டு வீடுதான்”


ஏழூர் சென்று அவரைச் சந்திக்கிறோம் என்ற தகவலைச் சொன்னபோதே காஞ்சிக்கோவில் நாகராஜன் நம்முடம் கிளம்பிவிட்டார். திரு. அய்யாசாமி பற்றி முரளிகுமார் பத்மநாபன் வலைப்பக்கத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன்.

கொளுத்தும் வெயிலில் அந்த வீட்டை அடைந்தோம். ஏழடி நீளத்தில் பதினைந்தடி நீளத்தில் ஒரு ஓட்டு வீடு. குனிந்து உள்ளே எட்டிப் பார்க்கிறோம். இரண்டு கயிற்று கட்டில்களில் இளைத்த உடம்போடு ஒரு தம்பதி, சத்தம் கேட்டு எழுந்து வாங்க என்று வரவேற்கிறார்.

எலும்பு தோலுமாய் காட்சியளிக்கும் பெரியவர் திரு. அய்யாசாமி (80120-26994) 74 வயதை தாண்டிக்கொண்டிருக்கிறார். சின்ன வயதிலிருந்தே இவருடைய தந்தை மரங்களின் மேல் கொண்டிருந்த காதல் இவருக்கும் தொத்திக் கொள்கிறது. விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இவர், ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள். திட்டம் தீட்டி சமூக விரோதிகள் கொள்ளையடித்தது போக இன்று மிஞ்சியிருப்பது சுமார் 3000 மரங்கள். சிறு செடி முதல் முப்பது, முப்பத்தைந்து வயது வரை இருக்கும் வேப்ப மரங்களை பார்க்கும் போது உடலும், மனதும் சிலிர்க்கிறது.


சுவாரசியமான தகவல், கடும் கோடையில் வீட்டிலிருந்த தண்ணீரைக் கூட எடுத்துச் சென்று செடிகளுக்கு ஊற்றியிருக்கிறார். “ஊட்டுல தண்ணியில்லைனா ஒரு நா சண்ட போடுவாங்க, இல்லன சோறு ஊத்த மாட்டாங்க, ஆனா செடி செத்துப்போச்சுன்னா என்ன பண்றதுங்க” என்ற போது, அருகில் எலும்பும் தோலுமாய் நின்ற அவரது மனைவி வெட்கத்தில் சிரிக்கிறார்.


அதிசயம், இந்த தள்ளாத வயதிலும் பெரியவர் அய்யாசாமி வீட்டில் பத்துப் பதினைந்து மரக்கன்றுகள் தயாராக இருக்கின்றது. பேசி, நெகிழ்ந்து, மனது கனத்து, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பும் போது “அந்த பள்ளத்தோரம் போனிங்கனா, மரங்களைப் பார்க்கலாம்” என்று சொல்கிறார்.


கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம் பள்ளம் முழுதும் கனத்துக் கிடக்கிறது அழகான வேம்பு. பார்க்க பார்க்க வெயிலில் வெம்பிய உடல், மனதோடு சேர்ந்து குளிர்கிறது. அவருக்கு உதவியாக இருக்கும் திரு. விஜயகுமார் (98423-44399) நம்மோடு வந்திருந்து சுற்றிக் காட்டுகிறார். எல்லாம் முடிந்து கிளம்பும் போது, வேட்டுவன் புதூரில் முதலில் நாம் பார்த்த அந்த சிறிய மளிகை கடையில் பெரியவர் திரு. அய்யாசாமி நமக்காக காத்திருக்கிறார். விடைபெற்றுக் கிளம்புபோது ஒரு குளிர்பான பாக்கெட்டை கட்டாயப்படுத்தி கையில் திணிக்கிறார். வாகனத்தை இயக்கியபடி அந்த பாக்கெட்டை வாயில் கடித்து உறிஞ்சுகிறேன், இதுவரை அறியாத ஒரு சுவையை அதில் உணர்கிறேன்.


இந்த மாமனிதர்களின் தியாகங்களை நினைத்து, மனதிற்குள் அலையடிக்கிறது. யாரோ சிலரின் தியாகங்களால் தானே இந்த உலகம் யாரால் இயங்குகிறது. யாரோ போட்ட பாதையில் தானே நாம் எளிதாய் பயணிக்கிறோம், ஏதோ பறவையின் எச்சத்தில் விழுந்த மரம் வெளியிடும் ஆக்சிசனைத் தானே சுவாசிக்கிறோம்.


ஒரு ஏமாற்று சாமியாருக்கு, திரையில் மினுக்கும் ஒரு நடிகனுக்கு, மட்டையை சுழற்றி கோடியில் கொழிக்கும் விளையாட்டுக்காரனுக்கு கிடைத்த கவனம், இந்த மாமனிதர்களுக்கு கிடைக்க வில்லையென்பதை நினைக்கும் போது நிறைய அவமானமாக இருந்தது. ஒரு மரம் தன் வாழ்நாளில் நாம் சுவாசிக்க கொடுக்கு சுத்தமான காற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாம். வறுமையின் பிடிக்குள் இன்னும் சிக்கித்தவிக்கும் இந்த மனிதர்கள் இந்த பூமிக்கு அர்பணித்தது பலாயிரம் கோடிகள் என்றால் மிகையாகது. விருதுகளும், கவனமும் இவர்களை அங்கீகரிக்க வில்லையென்றால், அந்த விருதுக்குத்தான் கேவலமேயொழிய இந்த மாமனிதர்களுக்கில்லை, ஏனெனில் இவர்கள், எதையும் எதிர்நோக்கி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை.


இந்த மனிதர்களை வரும் காலத்தில் உலகம் மறக்காமல் இருக்க ஆவணப்படுத்த வேண்டும் என்ற வேட்கை மனதில் உருவானது. அவர்களிடம் அனுமதியோடு, எப்பாடுபட்டேயானும் அவர்களின் தியாகம் குறித்து ஒரு ஆவணப் படத்தை எடுத்து வரும் காலத்திற்கு பதிவு செய்துவிட்டுப் போக வேண்டும். அடுத்து அவர்களைப் பற்றிய செய்திகளை இன்னும் எதிர்மறை எண்ணம் அதிகம படியாத மாணவர்களிடம் எப்படியாவது எடுத்துச் சென்று அவர்களின் மனதில் நிரப்பிடவேண்டும்.


முதல் கட்டமாக அவர்களை ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் வரும் ஏப்ரல் 15ம் தேதி என் மனம் கவர்ந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. உ. சகாயம் இ.ஆ.ப அவர்களை சிறப்பு விருந்தினராக வைத்து ஒரு பாராட்டு விழாவை நடத்த இருக்கிறது. அடுத்து, வரும் ஜூலை மாதம் பதவியேற்கும் எங்கள் அரிமா சங்க புதிய தலைவர் அரிமா. வீ.குருசாமி (94429-83559) அவர்கள், வரும் ஆண்டில் மரக்கன்றுகள் நடுவதை முக்கியத் திட்டமாக மனதில் வைத்துள்ளார். மழைக்காலத்தை மிகச் சரியாக பயன்படுத்தி மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டு வருகிறோம்.


எல்லாம் ஒரு சிறுபுள்ளியில் தானே ஆரம்பித்திருக்கும், இதோ ஒரு சிறுபுள்ளியில் பசுமைக்கான ஒரு பயணம் ஆரம்பமாகிறது.


நன்றி - ஈரோடு கதிர்

Tuesday, April 6, 2010

தென்னையப் பெத்தா இளநீரு.. பிள்ளையப் பெத்தா கண்ணீரு



தென்னையப் பெத்தா இளநீரு.. பிள்ளையப் பெத்தா கண்ணீரு...
இந்தப் பாடலை கருணாநிதி பாடி வருவதாகவும், யாரிடம் புலம்புவது என்று கூட தெரியாமல் தனக்குத் தானே புலம்பும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருணாநிதிக்கு மிக நெருக்கமாக அறியப்படும், பத்திரிக்கையாளர் “நக்கீரன் காமராஜிடம்“ கருணாநிதி தனக்கு குடும்பத்தினரால் ஏற்பட்டு வரும் நெருக்கடிகளை பற்றி அங்கலாய்ப்பதாகவும் அறியப் படுகிறது.


தனது மகள் செல்வி வீட்டில் ஒரு வாரம் ஓய்வு எடுப்பதற்காக பெங்களூருக்கு நேற்று இரவு கருணாநிதி புறப்பட்டுச் சென்றுள்ளார். கருணாநிதியுடன், அவரது இரண்டாவது மனைவி தயாளு அம்மாள், அவரின் நிழல் சண்முகநாதன், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெகு சிலர் மட்டும் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதியின் பெங்களூர் பயணம் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகளை பெங்களூரில் இருந்தபடியே மேற்பார்வை இடுவதற்கும், தனது அடுத்த இரண்டு திரைப்படங்கள் “பொன்னர் சங்கர்“ மற்றும் “பெண் சிங்கம்“ ஆகிய படங்களுக்கான திரைக்கதையையும் வசனங்களையும் எழுதி முடிக்கத் தான் இந்த ஒரு வார ஓய்வு என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஒரு பொறுப்பு வாய்ந்த முதலமைச்சர் அலுவலகப் பணிகளையும், மக்கள் பணியையும் பார்க்காமல், இப்படி பெங்களூர் சென்று அமர்ந்து கொண்டு, திரைக்கதை வசனம் எழுதுவது சரியா ? என்ற கேள்விகளை நீங்கள் எழுப்பினால், உங்களை பதர்கள், புல்லுருவிகள், என்று வசைபாடுவார் கருணாநிதி. ஆகையால், இந்தக் கேள்விகளை மனதுக்குள்ளேயே புதைத்துக் கொள்ளுங்கள்.


அப்படி திரைக்கதை வசனம் எழுதி இந்தப் படங்கள் என்ன வசூலை வாரிக்குவிக்க போகின்றதா, இல்லை இந்தியாவுக்கு ஆஸ்கார் விருதை பெற்றுத் தரப்போகிறதா என்பது போன்ற அதிகப்பிரசங்கித் தனமான கேள்விகள் தடை செய்யப் பட்டுள்ளதால், இது போன்ற கேள்விகளை கேட்காதீர்கள்.


கருணாநிதி பெங்களூர் செல்வதற்கு சொல்லப் படும் காரணங்களில் உண்மை இல்லை என்றும், பின்னணியில் பல விஷயங்கள் உள்ளன என்றும் சவுக்குக்கு தகவல்கள் வந்துள்ளன.


அரசியலை விட்டும், பதவியை விட்டும் ஓய்வு பெற்று மக்களோடு மக்களாக இணையப் போகிறேன் என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டாலும் கருணாநிதிக்கு, பதவி ஆசையும், அதிகார போதையும், சற்றும் தணியவில்லை என்பதை தொடர்ந்து கருணாநிதிக்கு எடுக்கப் பட்டு வரும் பாராட்டு விழாக்களும், அதில் கருணாநிதியின் பேச்சும் உணர்த்தும்.


திடீர் ஓய்வு அறிவிப்பு வெளியிட்ட பிறகு நடந்த ஒரு விழாவில் பேசிய கருணாநிதி “சில பேர் ஓய்வு பற்றி வெளியிட்ட அறிவிப்பு என்ன ஆனது என்று கேட்கக் கூடும், அந்த அறிவிப்பு அப்படியேதான் இருக்கிறது“ என்று பேசியுள்ளார். புதிய தலைமைச் செயலக கட்டிடம் திறந்த பிறகும், அண்ணா நினைவு நூலகக் கட்டிடம் திறந்த பிறகும் செம்மொழி மாநாடு முடிந்த பிறகும் அரசியலை விட்டு ஓய்வு, என்று அறிவித்துள்ளார் கருணாநிதி.

அரசியலை விட்டு ஓய்வு பெற்ற பின், தலைமைச் செயலக திறப்பு விழாவுக்கோ, செம்மொழி மாநாட்டுக்கோ கருணாநிதியை அழைக்க மாட்டார்களா என்ன ? கண்டிப்பாக அழைப்பார்கள். பிறகு ஏன் 6 மாதம் கழித்து ஓய்வு, ஒரு வருடம் கழித்து ஓய்வு என்று "அல்வா" கொடுத்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி ?


ஆனால், கருணாநிதி வரலாறு படித்தவர். வரலாற்றுப் புதினங்களை எழுதியவர். மொகலாய வரலாறு அறியாதவரா என்ன ?


ஜனவரி 9 1628ல் ஜகாங்கீரின் மறைவுக்குப் பிறகு மொகாலாய சாம்ராஜ்யத்தின் மன்னராக ஷாஜஹான் பதவியேற்றார் ஷாஜஹான்.


மன்னர் ஷாஜஹான்


1658ல் ஷாஜஹான் நோய்வாய்ப் பட்டபின் அவரின் நான்கு மகன்களான தாரா ஷிகோ, மூரத், அவுரங்கசீப் மற்றும் ஷுஜா ஆகியோருக்கிடையே கடும் பதவிப் போட்டி தொடங்கியது. நான்கு மகன்களில் மிதவாதியாகிய தாரா ஷிகோ பதவிக்கு வர வேண்டும் என்று ஷாஜஹான் விரும்பினார்.



மன்னர் அவுரங்கசீப்


இதை அறிந்த அவுரங்கசீப், தனது மூன்று சகோதரர்களையும், நயவஞ்சகமாக கொன்றார். 1658 ஜுன் 8ல் அவுரங்கசீப் தனது தந்தை ஷாஜஹானை கைது செய்து, சிறையிலடைத்தார்.

ஷாஜஹான் கட்டிய தாஜ்மகாலை ஜன்னல் வழியே பார்க்கும் வசதியோடு ஒரு சிறையைக் கட்டி, அதில் ஷாஜஹானை சிறை வைத்த அவுரங்கசீப், மன்னராக பதவியேற்றுக் கொண்டார்.

ஷாஜஹான் சிறையிலேயே நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார்.


இந்த வரலாறு அறிந்த கருணாநிதி, மன்னர் ஷாஜஹானுக்கு ஏற்பட்ட அதே நிலை தனக்கும் ஏற்படும் என்பதை அறிந்துள்ளார். அதனால்தான், இன்னும் பதவியை விடாமல் உடும்புப் பிடி பிடித்துள்ளார் கருணாநிதி.


கருணாநிதி பதவியை விட்டுத் தரமாட்டார் என்பதை அவரது மகன்கள் ஸ்டாலினும் அழகிரியும் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர். அதனால்தான் ஸ்டாலின் உடனடியாக முதலமைச்சர் பதவி வேண்டும் என்று கருணாநிதிக்கு கடும் நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போல், இடைத் தேர்தல்களில் திமுகவுக்கு பெரும் வெற்றியை ஈட்டித் தந்த அழகிரி கட்சித் தலைமைப் பதவியை கைப்பற்ற கருணாநிதிக்கு நெருக்கடி தந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நடந்த திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி இடைத்தேர்தல்களில் கூட, முந்தைய தேர்தல்களில் காட்டிய உற்சாகத்தை காட்டாமல் ஆரம்பத்தில் சுணக்கம் காட்டியதாகவும், பிறகு, இத்தேர்தல்களில் பெரும் வெற்றியை ஈட்டி இதன் மூலம் கட்சித் தலைமைப் பதவியை கைப்பற்ற கருணாநிதிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டதாகவும் அத்திட்டத்தின் படியே திருச்செந்தூர் மற்றும் பெரும் வெற்றியை பெற்றுக் காட்டியுள்ளார் அழகிரி.


இடைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சிக்குள் அழகிரியின் செல்வாக்கு பெரும் அளவில் வளர்ந்திருப்பதாகவும், கட்சியில் மூத்த தலைவர்களே அரண்டு போயுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும், கட்சியில் மூத்த தலைவர்களின் செல்வாக்கு ஏறக்குறைய அற்றுப் போய்விட்ட நிலையில், குடும்பத்தினரின் செல்வாக்கால் அதிகாரப் போட்டி உச்ச நிலையை அடைந்து விட்டதாகவும் இதை சமாளிக்க முடியாமல் கருணாநிதி திணறுவதாகவும் சொல்லப் படுகிறது.


இந்த நிலையில் தான் கருணாநிதி, குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு தீர்வு காணவே பெங்களூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும், அங்கே தனது மகள் செல்வி வீட்டில் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சமாதானப் படுத்த முயற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, எகிப்து நாட்டில் இன்பச் சுற்றுலா சென்றுள்ள, இந்தியாவின் “பரம ஏழைகளான“ மாறன் குடும்பத்தினரையும், உடனடியாக பெங்களூர் வரச் சொல்லி கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப் படுகிறது.


கருணாநிதி எதிர்ப்பார்ப்பது போல, பெங்களூரில் சமாதானம் ஏற்படுமா, சக்கரவர்த்தியின் தீர்ப்பை இளவரசர்களும், இளவரசிகளும் ஏற்றுக் கொள்வார்களா, “திருக்குவளை சாம்ராஜ்யம்“ ஆக உருவெடுத்துள்ள தமிழ்நாட்டை அனைவருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் பங்கீடு செய்யப் படுமா என்று ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்று கூறலாம் என்றால், மஞ்சல் துண்டு மடாதிபதிக்கு ஆள்வதற்குத் தான் பிடிக்கும், ஆண்டவனை பிடிக்காது என்பதால், காலம் பதில் சொல்லும் என்று முடிக்கப் படுகிறது.


அது வரை கருணாநிதி தினம் பாட வேண்டிய பாடல்

“தென்னையப் பெத்தா இளநீரு….
பிள்ளையப் பெத்தா கண்ணீரு….

Sunday, April 4, 2010

நிம்மதியின் சந்நிதி...

சோகத்தின் சொந்தக்காரனே
கவலைகளின் கைதியே
ஏமாற்றங்களின் விலாசமே
இடிந்து கிடக்கும் இதயமே...

முனுமுனுப்புகளில்
மூச்சை கரைத்தது போதும்
என் சிந்தனை தேரில் வந்தமர்...

ஓர் ஞான யாத்திரை நடத்தி பார்ப்போம்!
உன் உயிர்
உன்னை கேட்டுக உண்டானதில்லை
உன் உடல்
உன் உடன்பாட்டோடு உருவானதில்லை..

உன்
அழகோ அழகின்மையோ
ஏழ்மையோ செல்வமோ
எதுவாயினும்
அவை பிறப்பால் திணிக்கப்பட்ட
இயற்கை பிடிவாதங்கள்!

வாழ்க்கை என்பது
செலவளித்தே தீர்க்க வேண்டிய செல்வம்
நொடி நொடியாக
பிறப்பிலிருந்து இறப்பை நோக்கி
நகரும் பயணம்!
இதில் எல்லாமுள்ளவனும்
ஏதுமில்லாதவனும்
என்றுமே இருந்ததில்லை...

நீ
ஆட்டக்காய் என்கிறது இறையுணர்வு
ஆட்டக்காரன் என்கிறது பகுத்தறிவு.

இதுவோ அதுவோ
இங்கே
கேட்டதெல்லாம் கிடைப்பதில்லை
கிடைத்ததெல்லாம் கேட்டதில்லை.

எதிர்பார்ப்பு காற்றில்
இலவசமாய் பறந்து
ஏமாந்து கணங்களில்
இரும்பாகி போக
எது காரணம்?

மனம்
மனம்
மனம்!!!

இங்கே
மனமிருக்கும் வரை
நினைவிருக்கும்
நினைவிருக்கும் வரை
கனவிருக்கும்
கனவிருக்கும் வரை
துயரிருக்கும்....

இப்போதெல்லாம் மனதை
ஒதுக்கி வைத்து ஓடமுடியாது!

சட்டையில்லா உடம்பின் மேல்
சாட்டையால் அடித்து கொண்டு
பிச்சை கேட்பவர் போல்

ஆசை என்னும் சாட்டையால்
ஆனமாவை வதைத்து கொள்ளும்
அவலத்தை கொல்...

உள்ளத்தில் நினைத்த ஒருத்தி
உடன்பட்டு விட்டால்
இன்னொன்று ஈர்க்காமல் விட்டுவிடுமா?
கூடை கூடையாய்
ஆடைகள் குவிந்தாலும்
போதும் என்ற நிறைவு பூத்துவிடுமா?
வகை வகையாய்
வடித்து தின்றாலும்
சுவையுணர்ச்சி சுருங்கி விடுமா?

வீடு கிடைத்தால் ஊரின் மேலும்
ஊர் கிடைத்தால் நகரின் மேலும்
நகர் கிடைத்தால் நாட்டின் மேலும்
பெருகி கொண்டே போகும்...

ஆசைக்கு அளவென்பதில்லை!

தாய் பூச்சியை கொல்லும் வரை
கரையான் புற்று மறையாது
ஆசை பூச்சியை கொல்லும் வரை
சோக சுமைகள் குறியாது...

உடம்பை களைப்பாற்ற
உறங்குகின்ற மனிதனே
மனதை இளப்பாற்ற
மறந்து விட்டதேன்?

பசுமையும் வரட்சியும்
மழையை சார்ந்தது
இன்பமும் துன்பமும்
மனதை சார்ந்தது!

அலைகின்ற மனது
தீப்புன்னாய் எரியும்
அசையாத மனமோ
இன்ப தேன் சொரியும்

நீ
நியாயமான இலக்குகளை
நியாயமாக தேடு
பேராசை வித்துக்களை
விவேகத்தால் சாடு.

ஏனெனில்
ஆர்ப்பாட்ட அனுபவங்களை விட
அமைதி அளிக்கும் ஆனந்தம்
அதிகமானது!

என் பாட்டோடு பயணித்த
தோழனே,
பொருப்பின்றி ஒடுக்குவது
புத்தியின் சுருக்கம்
வெறி கொண்டு திரிவது
துன்பத்தை பெருக்கும்.

இருப்பதில் மகிழ்வது தான்
ஞானத்தின் துவக்கம்!
சுகங்களை அடைவது நிம்மதியா
நிம்மதியை அடைவது சுகமா

நீயே தேர்ந்தெடுத்துக்கொள்!!!