Saturday, August 14, 2010

நீ பிறந்த நாள்தான் எம் மக்களுக்கு துக்க நாள்..சுதந்திர தினம்

இந்திய சுதந்திரத்திற்கு
பிறந்த நாளாம்
இந்தியாவே
நீ பிறந்த நாள்தான்
எம் மக்களுக்கு துக்க நாள்…..
இந்தியர்களின் ரத்தம்
கொதிக்கலாம் இன்னும்
எத்தனை டிகிரி வேண்டுமானாலும்
கொதிக்கட்டும் மானத்தை
இழந்து கொதிக்கும் ‘ரத்தம்’ சுடுமா என்ன?…….
எரிவதை பிடுங்கினால்
கொதிப்பது அடங்குமாம்
ஆனால் இங்கு
நடப்பதே வேறு
மனிதத்தை,சுயமரியாதையை
பிடுங்கியதால் தான் இவ்வளவு பிரகாசமாய்
கொதிக்கிறதோ இந்தியம் ….

ஆயிரம் செண்ட் அடித்தாலும்
துரோகத்தின் ரத்த கவுச்சி
போவதில்லை – உழைக்கும் மக்களின்
ரத்தத்தை நக்கிக்கொண்டே
உரக்க பாடுங்கள் ஜெய்ய்ய்ய்ய்ய் ஹிந்த்த்த்……..
பிறந்த நாள் சரி
பிறக்காமலே இறந்து
போன கதை தெரியுமா?

ஒன்பது மாதம் இருட்டுச்சிறையில்
நாளை வெளியுலகம்
பார்க்க ஆவலாயிருந்ததாம்
கரு
மருத்துவச்சியாய் ஆட்லெறி
குண்டுகள் மாற
தாயும் சிசுவும் பரந்த வெளியில்
சிதிலங்களாய்
பிணதிண்ணியாய்
இந்திய மேலாதிக்கம்…..
ஆகத்து 15

எம் உரிமைகள் நசுக்கப்பட்ட நாள்
எம்மினங்களின் கழுத்து நெறிக்கப்பட்ட நாள்

ஈழத்தில் பிறந்த நாளை
இறந்த நாளாய் திருத்தம் செய்யும்
சித்திர குப்தன் தரகு முதலாளிக்கும்
அன்று தான் பிறந்த நாள்

அவன் கதை முடிக்க
ஆண்டாண்டு கால கணக்கு தீர்க்க
பறையடித்து சொல்லுவோம்
ஆகத்து 15 ஒரு கருப்பு நாளென்று
--
நா.முத்துக்குமார்

Friday, August 13, 2010

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா

“இலங்கைக் கடற்படைக்குள் எல்லை மீறிப் போகும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியாது” என்று அறிக்கை விட்டிருக்கிறார் இலங்கை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. ஒரு நாட்டுக்குப் போய் அங்க குடிமகன்களாகவே ஆகிப் போன சீக்கியர்கள் டர்பன் கட்டுவதற்கு ஃப்ரான்ஸ் நாடு போட்ட சட்டம் தடை போட்டுவிடுமோ என்று இந்தியப் பிரதமரே போய் ஃப்ரான்ஸ் பிரதமரைப் பார்த்து பேசி விட்டு வருவாராம். இங்கே கண்மண் தெரியாமல் சுட்டுக் கொன்றுகொண்டிருக்கிறான் சிங்களன். அவனைக் கேள்வி இல்லை, ஒரு கோரிக்கை கூட விடுக்காமல் கை கழுவி விடுவதுதான் வெளியுறவுத்துறை அமைச்சரின் பணியா? இவரெல்லாம் பதவியிலிருப்பதற்கு அழகிரி சும்மா இருப்பதே பரவாயில்லை போல.

இவருக்கு மேல் ஒருவர், இந்திய உள்துறை அமைச்சர். இவ்வளவு நாள் ரூம் போட்டு யோசித்திருப்பார் போல. இன்று பேசியிருக்கிறார், யூனியன் கார்பைடு சேர்மன் ஆண்டர்சன் தப்பிப் போனதற்கு அப்போதைய உள்துறை அமைச்சர் நரசிம்மராவ்தான் காரணமாம். யாரெல்லாம் அப்போது அமைச்சர்களாக இருந்தார்கள், அதில் யாரெல்லாம் இப்போது உயிரோடு இல்லை என்று உளவுத்துறையிடம் (இதுக்குத்தான இருக்கு) கணக்குக் கேட்டிருப்பார்கள் போல. ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் என்று பதில் வந்திருக்கும். ராஜீவின் மீது புகார் சொல்ல முடியுமா (அதிலும் சிதம்பரம் தமிழர்)? அதனால் நரசிம்மராவின் மீது விடிந்து விட்டது.

இதில் பெரிய காமெடி அப்போதைய பிரதமருக்கே தெரியாதாம், ஆண்டர்சன் வெளியேறியது. முழுப் பொறுப்பும் நரசிம்மராவினுடையதாம்.

மேலும் போபால் வழக்கு தீவிரப்படுத்தப் படாததற்கு 1984-இல் இருந்து மத்தியில் ஆட்சியில் இருந்த அரசுகளின் மெத்தனமே காரணமாம். 26 வருடங்களில் காங்கிரஸ் மட்டும் 16 வருடங்களுக்கும் மேலாக ஆட்சியில் இருந்திருக்கிறது என்பதை மறந்து விட்டார் போல. சரி மற்றவர்கள் செய்திருக்க வேண்டாம், இவர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக உள்துறை அமைச்சராக இருந்திருக்கிறாரே. இவர் என்ன கிழித்து விட்டார். பேசாமல் இவர் கலைஞரிடம் முழுசாக ட்ரெயினிங் எடுத்திருக்கலாம். செர்னோபில்லில் விபத்து நடந்த போது இத்தனை பேர் உயிரிழந்தார்கள், கைஷ்டிமில் இத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்றெல்லாம் புள்ளிவிபரம் கொடுத்திருக்கலாம்.

பேசுவது என்றதும் நேற்றைய வீடியோவில் என் குரலைக் கேட்டுவிட்டு நண்பர் பின்னோக்கி எனக்கு கமாண்டிங் வாய்ஸ் என்று பின்னூட்டம் போட்டது நினைவுக்கு வருகிறது (நாங்க மட்டும் வாசகர் கடிதம் மாதிரி சொல்ல மாட்டோமா?). எனக்கு மேடையில் பேசுவது என்றாலே மிகவும் பிடிக்கும். ஒருமுறை எங்கள் கல்லூரியில் ஜூனியர்களுக்குக் கொடுத்த வரவேற்பு விழாவில் “மதங்கள் - தோற்றமும் மூடநம்பிக்கைகளும்” என்ற தலைப்பில் பேசினேன். பல புத்தகங்களையும் செய்திகளையும் படித்து தகவல்தொகுத்து வழங்கினேன். மூட நம்பிக்கைகளில் சாமியார்களை அல்லது கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றுபவர்களைப் பற்றிப் பேசும்போது இந்து மத சாமியார்கள் இருவரையும், கிறிஸ்தவ மதப் பிரசாரகர் ஒருவரையும் உதாரணம் காட்டிப் பேசினேன்.

நான் பேசி முடித்து கீழே இறங்கியதும் என்னுடைய தோழிகளில் இருவர் என்னிடம் கடுமையாகச் சண்டை போட்டார்கள் - “உனக்கு பைபிளையும் கிறிஸ்டியானிட்டியையும் பற்றி என்ன தெரியும்? நீ எப்படி அவரை பற்றி அப்படியெல்லாம் பேசலாம்”. நான் சொன்னேன். “என் தலையெழுத்து பிறப்பால் இந்துவாகிப் போனேன். என் அப்பா அம்மா மட்டும் கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால் நீங்கள் என்னிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டீர்கள்.”

நல்ல வேளை பெரியார் பிறந்த தமிழகத்தில் நானும் பிறந்தேன். இல்லையென்றால் அன்றைக்கு நான் மேடையிலிருந்து இறங்கியிருக்கவே முடியாது.

மேடைப் பேச்சு என்றது நினைவுக்கு வரும் இன்னொரு விசயம். நான் எஸ்.எஃப்.ஐயில் தீவிரமாகப் பங்கு கொண்டிருந்த போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சி.ஐ.டி.யூ போன்ற அமைப்புகளுடன் ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறேன். அப்போது அருப்புக்கோட்டை கோமதி தியேட்டர் முன்பு நான் வீர உரை(ம்க்கும்)யாற்றிக் கொண்டிருந்ததைக் கேட்ட என் தந்தையின் நண்பர் அவரிடம் போய் “உங்க பையன் நல்லா பேசறான் சார்” என்று சொல்லிவிட்டார். அதிலிருந்து என் தந்தைக்கு பெருமை பிடிபடவில்லை. நல்ல அப்பா.

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் எழுதிய செட்டிநாடு ஓட்டலும் ஆயாக்கடை இட்டிலியும், பொதுவாகப் பார்த்தால் பொதுவுடமைக் கொள்கைகளுக்கு எதிரானதாகத் தெரிந்திருக்கும். ரஜினி/ஷங்கரின் ரசிகர்களுக்கு வேறு மாதிரி தெரிந்திருக்கும். நான் இரண்டாவதான ஒரு பார்வையிலிருந்தே எழுதினேன். எழுதி வாசித்ததும் என்னுள் இருந்த முதலாமவன் விழித்துக்கொண்டான். தவறாகப் பட்டுவிடுமே என்று அந்த இடுகையை நீக்கிவிட்டேன். வானம்பாடி பாலா சார் சும்மா போடுங்க என்று சொன்னதால் போட்டேன். நான் பயந்த மாதிரியே ராஜசுந்தரராஜன் ஐயாவும், கார்த்திகைப் பாண்டியனும் இன்னும் பலரும் உங்கள் கருத்தோடு ஒத்துப் போகவில்லை என்று சொல்லியிருந்தார்கள்.

நான் சொல்ல வந்தது இதுதான் - ஷங்கர் படம் - செட்டிநாடு ஓட்டலின் மட்டன் பிரியாணி. சத்யஜித் ரேயின் படம் ஆயா கடை இட்டிலி. எல்லோராலும் ஆயா கடை இட்டிலியைச் சாப்பிட்டு விட முடியாது. எல்லோருக்கும் மட்டன் பிரியாணி செரித்து விடாது. அதே போல செட்டி நாட்டு ஓட்டல் குக்கிற்கு ஆயாவைப்போல் மல்லிகைப்பூ இட்டிலி சுடத் தெரியாது. ஆயாவுக்கு செட்டிநாட்டு ஸ்டைலில் மட்டன் பிரியாணி செய்யத் தெரியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவருடைய பாணி. அதில் இதைச் செய்யாதவன் முட்டாள் அதைச் செய்பவன் மேதை என்று சொல்வது ஹி ஹி ஹி..

அதே போல சேட்டு வீட்டில் வந்து பிறந்ததைத் தவிர அந்த குதிரை மீது வரும் மாப்பிள்ளை செய்த தவறென்ன? இல்லை அந்த நாய் குலைத்ததால் தான் அவன் குதிரையிலிருந்து கீழே விழுந்துவிடப் போகிறானா? இது யாரைச் சொல்கிறேன் என்று புரியாவிட்டால் நீங்கள் இதுவரை என்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.

ஒரு க்ளூ வேண்டுமானால் கொடுக்கிறேன். முதல் எழுத்து ர கடைசி எழுத்து னி. என்னது நடு எழுத்தா? என்னஜி இதுக்கு மேலயும் க்ளூ கேக்குறீங்க?

என்னவோ போடா மாதவா (நன்றி விதூஷ்).
--

சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்!

கடந்த 26/07/2010 அன்று சௌதிகெஜட் நாளிதழில் முதல் பக்கத்தில் பெரிய எழுத்துகளில் ஒரு செய்தி வந்திருந்தது, “கடத்தப்பட்ட குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது” என்று. வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணால் கடத்தப்பட்டு பின்னர் ஒரு பல்பொருள் அங்காடியில் விட்டுச் செல்லப்பட்டிருந்தது அந்த இரண்டரை வயதுக் குழந்தை. குழந்தையின் தந்தை குழந்தையை மீட்க பணம் தரவேண்டும் என்று தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அந்தச் செய்தியிலேயே (அதே நகரில்) கடந்த ஆண்டும் இதே போல் குழந்தைக் கடத்தல் ஒன்று நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்படி நடைபெறும் குழந்தைக் கடத்தல் நிகழ்வுகளை பணத்துக்காக நிகழ்த்தப்படுபவைகள் என்று பொதுமைப்படுத்திவிடவோ ஒதுக்கிவிடவோமுடியாது. ஏனென்றால் இவைகள் பணத்துக்காக நடைபெறுவதைப்போல் காட்டப்படுபவை. அதிகரித்து வரும் இதுபோன்ற சம்பவங்களை உற்றுநோக்கினாலே தெரியும் இவைகளில் பணம் வினையூக்கியாகச் செயல்பட்டிருக்கமுடியாது என்பது.

இந்தக் கடத்தலைச் செய்வது அந்தந்த வீடுகளில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணிப்பெண்கள்.
இந்தக் கடத்தலில் அவர்கள் பணம் பெறுவதும் இல்லை, காவல்துறை கடத்தப்பட்டவர்களை மீட்பதும் இல்லை. ஏனென்றால் அதே நாளோ அல்லது மறுநாளோ எங்காவது பொது இடத்தில்
விட்டுச்செல்வதுதான் நடந்திருக்கிறது.
இக்கடத்தலை திட்டமிட்டோ சிலருடன் இணைந்தோ செய்வதில்லை
இது போன்ற காரணங்கள் அந்தக் கடத்தல்கள் பணத்துக்காக நடைபெறுவதில்லை என்பதை நிரூபிக்கின்றன. என்றால் அதன் உண்மையான காரணம் என்ன?

சௌதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்வது என்பதை ஒரே வார்த்தையில் உச்சரிக்க வேண்டுமென்றால் ‘நரகம்’ என்பதுதான் பொருத்தமாக இருக்கும். அதிகாலையில் எழுந்து வீட்டை கழுவித் துடைத்து, காலை உணவுக்கான தயாரிப்புகளைச் செய்து, குழந்தைகளை எழுப்பி கவனித்துக் கொண்டு சற்று பெரிய குழந்தைகளென்றால் பள்ளிக்கூடத்திற்காக ஆயத்தப்படுத்தி, கடந்த நாளின் அழுக்கடைந்த ஆடைகளை துவைத்து உலர்த்தி தேய்த்து, மதிய உணவை தயாரித்து வழங்கி சுத்தப்படுத்தி, குழந்தைகள் பெற்றோரை தொந்தரவு செய்துவிடாமல் கவனித்துக்கொண்டு, இடையிடையே சௌதிகளின் தேவையறிந்து அவற்றில் உதவி, மாலையில் சௌதிப் பெண்களின் கடைவீதி உலாவுக்கு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு பின்சென்று அல்லது வேண்டிய பொருட்களை சுமந்து வருவதற்காக பின்சென்று பின் இரவுச் சாப்பாடு குழந்தைகளைத் தூங்கவைப்பது என்று பின்னிரவு வரை தன்னைத்தானே ஒரு இயந்திரமாய் மாற்றிக் கொள்ளவேண்டியதிருக்கும். வேலை நேரம் ஒழிவு நேரம் என்று தனித்தனியாக கொள்வதற்கு இடம்இருப்பதில்லை. இடையில் கிடைத்தால் சில நிமிடங்களை ஓய்வாக கொள்ளவேண்டியதுதான். இதில் நேர்ந்து விடும் தவறுகளுக்காக திட்டுக்கள் முதல் அடிஉதை வரை அனைத்தும் கிடைக்கும்.

வீடுகளில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலையின் சிரமங்கள் அவர்களை ஒரு இயந்திரத்தைப் போல் உணரவைக்கிறது என்றால், நிலவும் சூழல் அவர்களை இயந்திரமாகவே ஆக்கும். வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதியில்லை, குப்பைகளை கொட்டுவதற்குச் சென்றால்கூட அனுமதியின்றி செல்லமுடியாது. தனியாக செல்லிடப்பேசி வைத்துக் கொள்வதற்கோ, யாருடனும் தொலைபேசியில் பேசுவதற்கோ முடியாது. நாட்டில் பெற்றோர்களிடமோ, உறவினர்களிடமோ பேசுவதற்கு மட்டும் அனுமதிப்பார்கள். சம்பளப் பணத்தை ஊருக்கு அனுப்புவதற்குக்கூட சௌதிதான் வங்கிக்கு சென்று அனுப்புவான். இப்படி ஒழிவின்றி வேலை செய்வதாலும், தங்களின் மனக் குறைகளை பகிர்ந்து கொள்ள வழியின்றி கூண்டுக்குள் அடைபட்ட விலங்கைப் போன்ற சூழலாலும் அவர்கள் சிதைக்கப்படுகிறார்கள்.

பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதில் சௌதியில் வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்களின் நிலை சொல்லும் தரமன்று. வேலை செய்யும் வீடு பெரிய பணக்கார வீடாக இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட பணிப்பெண்கள் இருந்தால் வேலையில் ஆறுதலுக்கும், பாலியல் கொடுமைகளிலிருந்து சிறிது தப்பித்தலுக்கும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனால் தனியாக மாட்டிக் கொள்ளும் பெண்களுக்கோ சொல்வதற்கும் யாருமின்றி, செல்வதற்கும் வழியுமின்றி அந்த பாலியல் வதைகளை சகித்துக் கொள்வதைத் தவிர வேறு கதியில்லை.

அண்மையில் விமான நிலையத்தில் 40 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க இலங்கையைச் சேர்ந்த ஒரு பணிப்பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவர் கூறியதைக் கேட்டால் பணிப்பெண்கள் எத்தகைய நிலையில் அங்கு பணிபுரிய வேண்டியதிருக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். “பிறந்ததிலிருந்து நான் தூக்கி வளர்த்த பிள்ளை, கொஞ்சம் விபரம் தெரிந்ததும் என் மாரிலேயே கைவைக்கிறான்” என்று கூறி உடைந்த போது அவர் கண்களிலிருந்து வழிந்தது இரத்தமாக தெரிந்தது.

“பணிப்பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எங்களிடம் தெரிவித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்” என்கிறது காவல்துறை. ஆனால் புகார் கொடுக்கும் அளவுக்கான சூழலை ஏற்படுத்தாமல், புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்பது எந்த விதத்தில் சரியானது? ஒரு பணிப்பெண் தனக்கு நேரும் பாலியல்கொடுமைகளுக்கோ, வதைகளுக்கோ தொலைபேசி மூலம் காவல்துறைக்கு புகார் கொடுக்கிறாள் என்று கொள்வோம். என்ன நடக்கும்?

சௌதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. முதல் கட்டமாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை என வீட்டிலுள்ள அனைவரும் விசாரணைக்காக வரும் காவல்துறையினரிடம் கூறுவர். அப்படி ஒன்று நடந்தது என்று பாதிக்கப்பட்ட பெண்ணே நிரூபிக்க வேண்டியதிருக்கும். அப்படி நிரூபித்தாலும் குற்ற நடவடிக்கை எடுக்காமல் சமரசம் பேசி ஏதாவது இழப்பீட்டுத் தொகை வாங்கி சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதுதான் காவல்துறை செய்யும் அதிகபட்ச நடவடிக்கை. அன்றி கொடுமை நடைபெற்றதை நிரூபிக்க முடியாமல் போனால், இழப்பீடோ, பரிவுத் தொகையோ எதுவுமின்றி சொந்தநாடு திரும்ப வேண்டியதிருக்கும். ஏனென்றால், தொடர்ந்து அந்த வீட்டில் வேலை செய்தால் அது தற்கொலை முயற்சியாகத்தான் இருக்கும்.

முன்னிலும் அதிக சித்திரவதைகளுடனும், நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளுடனும் வேலை செய்ய முடியுமா? புகார் கொடுத்து நிரூபிக்க முடியாத நிலையிலுள்ள பணிப்பெண்களை வேறு இடத்திலிலோ, வேறு வேலையிலோ சேர்த்துவிட காவல்துறை முயலாது. ஏனென்றால் சட்டத்தில் அதற்கு அனுமதியில்லை. வெளிநாட்டிலிருந்து ஒரு பெண்ணை வேலைக்காக தருவிக்கும் சௌதி அப்பெண்ணுக்கு வேலைவழங்குனர் மட்டுமல்ல, பாதுகாவலரும்தான்.

பாலியல் கொடுமைகளைச் செய்வது ஆண்கள்தான், வீட்டிலுள்ள பெண்களிடம் அவர்கள் முறையிடலாமே என நினைப்பதும் கொடுமையான அனுபவமாகவே அமையும். அதன்பிறகு பழிவாங்கும் நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதோடு பொருளாதார ரீதியிலும் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். ஏனென்றால் சம்பளம் கொடுப்பது அதை பணிப்பெண்ணின் வீட்டுக்கு அனுப்பி வைப்பது போன்றவற்றைச் செய்வது சௌதி ஆண்தான்.

நடக்கும் இவைகளுக்கு எதிராக முறித்துக் கொண்டு நாடு திரும்பும் நிலையில் இங்கு வரும் பணிப்பெண்களில் பெரும்பாலானோர் இருப்பதில்லை. வாங்கி வந்த கடனும், வீட்டுச்செலவுகளும், தேவைகளும் அவர்களின் முன் பூதாகரமாக அச்சுறுத்துகின்றன. வறுமைக்குப் பயந்து, குடும்பத்தையும் குழந்தைகளையும் பிரியச் சம்மதிக்கும் பெண்கள் வந்த இடத்தில் எதிர்கொள்ளும் கொடுமைகளால், அதற்கு வடிகாலில்லாத நிர்ப்பந்தங்களால் நொறுங்கிப் போகிறார்கள். வேறுவழி தெரியாததால் பலபெண்கள் சம்மதித்து சகித்துப் போகிறார்கள். சிலர் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதமாக குழந்தைகளை துன்புறுத்துவதையும், கடத்திச் செல்வதையும், ஏதாவது வழியில் பழிவாங்க முடியாதா? எனும் எண்ணங்களுக்கு ஆளாகிப் போகிறார்கள்.

கடந்த சில வருடங்களாகவே சௌதி அரசு உள்ளே வரும் அனைத்து வெளிநாட்டவர்களையும், புகைப்படமும், கைரேகையையும் விமான நிலையத்திலேயே எடுத்து பதிவு செய்து ஆவணமாக்கி வருகிறது. விடுப்பில் செல்லும், இகாமா (இருப்பிடஅனுமதி) புதுப்பிக்கும் யாரும் கைரேகையை பதிவு செய்யாமல் முடியாது எனும் அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஒரு குழந்தையை கடத்திச் சென்று அதன் மூலம் பொருளாதார பலன்களை அடைந்துவிட முடியும் என்பது நடக்க முடியாத ஒன்று. பெண்கள் வெளியேறிச் சென்று தனியாக எங்கும் வேலை செய்து விடவோ, ஊர் சென்று விடவோ முடியாத சூழலை ஏற்படுத்தி வரும் இந்நிலையில் வீட்டில் வேலை செய்யும் பெண் தன்னுடைய பொறுப்பில் இருக்கும் குழந்தையை கடத்தி பணம் கேட்கிறாள் என்று கூறுவது அதன் பின்னணியில் தொழிற்படும் காரணங்களை மறைப்பதற்காகத்தானேயன்றி வேறொன்றுமில்லை.

இத்தகைய கொடுமைகள், பாலியல் வதைகள் குறித்து ஒரு சௌதி என்ன விதமான கருத்துகொண்டிருக்கிறான் என்பது இதில் இன்றியமையாத ஒன்றாகிறது. ஒரு சௌதிப் பெண் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்படும்போது ஒரு சௌதி ஆணுக்கு ஏற்படும் அதிர்வலைகள், ஒரு வெளிநாட்டு பணிப்பெண் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்பட்டாள் எனும் போது ஏற்படுவதில்லை, அது ஒரு சாதாரண செய்தியாகவேபடுகிறது. இதை சொந்த நாட்டுப் பெண்ணுக்கும் அந்நிய நாட்டுப் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என எடுத்துக் கொள்ள முடியுமா? நிச்சயம் இல்லை. சௌதியின் உளவியலிலே இத்தகைய வித்தியாசங்கள் இருக்கிறது. இதை புரிந்து கொள்ள நாம் குரானிலிருந்து தொடங்கவேண்டும்.

சௌதி ஆணின் பாலியல் தேவைகளை பொருத்தவரை மதகலாச்சாரரீதியாக சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. கட்டற்ற பாலியல் சுதந்திரத்திற்கு சில வரம்புகளை மட்டுமே நிர்ணயம் செய்திருப்பதன் மூலம் ஆணின் பாலியல் சுதந்திரத்தை பேணப்படுகிறது.

அனாதைகள் விசயத்தில் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள். நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடமையாக உள்ள அடிமைப் பெண்களை. இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. குரான் 4:3
சட்டபூர்வமாக நான்கு மனைவிகள் அல்லாது எத்தனை அடிமைப் பெண்களையும் பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ள ஆணுக்கு அது அனுமதியளிக்கிறது. பரிகாரம் எனும் அடிப்படையில் அடிமைகளின் விடுதலை குறித்து குரான் பேசினாலும், அடிமையை வைத்திருப்பதும், அவர்களை பாலியல் ரீதியில் பயன்படுத்துவதும் மத அடிப்படையில் குற்றச் செயலல்ல. இந்த அடிப்படையிலிருந்து எழுந்து வருவதுதான் இப்போதைய சௌதிகளின் மனோபாவம். 1962ல் சட்டபூர்வமாக சௌதியில் அடிமையை வைத்திருப்பது தடை செய்யப்பட்ட பிறகும் இந்த மனோபாவம் தொடர்கிறது.வெளிநாட்டிலிருந்து வீட்டு வேலைக்கு வரும் பெண்களை பாலியல் அடிமைகளாய் வைத்திருப்பது குற்றமல்ல எனும் உளவியல்தான் அவர்களின் செயல்களில் பிரதிபலிக்கிறது.

வேலை செய்ய வரும் வெளிநாட்டு ஆண்களையும் சௌதிகள் இந்த மனோபாவத்துடனே அணுகுகிறார்கள் என்பதற்கு அனேக எடுத்துக்காட்டுகளைத் தரமுடியும். ஆனால், ஆண்களுக்கு இருக்கும் வாய்ப்பும், வேறு வேலை தேடிக்கொள்வதற்கான வசதிகளும், பணம் செலுத்தி தன் பாதுகாவலரை மாற்றிக் கொள்ள முடிகிற நிலையும் அவர்களை அடிமையாக நடத்துவதினின்றும் ஓரளவு பாதுகாக்கிறது. இதேபோல் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களும் கூட இத்தகைய கொடுமைகளை சந்திப்பதில்லை. வீட்டு பணிப்பெண்களுக்கு அதில் அழுந்திக் கிடப்பதைத் தவிர வேறுவழியில்லை எனும் சூழல் இருப்பதால் ஆணாதிக்கத் திமிரில் அடிமையாக நடத்துவதும் தொடர்கிறது.

அடுத்து பெரும் சொத்தாய் குவிந்திருக்கும் எண்ணெய் பணத்தின் மூலம் சௌதிகள் சாதாரண வேலைகள் எதனையும் செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் வேலையாட்களை வைத்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் வீட்டு வேலைகளுக்கான பெண்களும் அழைத்து வரப்படுகிறார்கள். வர்க்க ரீதியில் இருக்கும் இந்த மேட்டிமைத்தனமான மனோபாவமும் வீட்டு பணிப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு காரணமாக இருக்கிறது. வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும் வெள்ளைக்காரர்களிடம் நாகரீகமாகப் பழகும் சௌதிகள் ஆசிய நாட்டவரைக் கண்டால் ஆண்டைகள் போலத்தான் நடத்துவார்கள். இதன்படி பணிப்பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்துவது குறித்து அவர்கள் குற்ற உணர்வு ஏதும் கொள்வதில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பன்ஸ் நாட்டைச் சேர்ந்த சாரா எனும் இளம் பெண் தன்னை பாலியல் வன்முறை செய்ய வந்த ஒரு கிழட்டு ஷேக்கை குத்திக் கொன்றாள். அதற்காக அவளுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை எதிர்த்து முழு உலகும் போராட வேண்டியிருந்தது. காதல், கள்ளக் காதல், விபச்சாரம் போன்ற குற்றச்சாட்டுகளை வைத்தும் சௌதியில் இருக்கும் ஆசிய நாடுகளின் பெண்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது. இத்துடன் ஒப்பிடும் போது சௌதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை மிகவும் குறைவு.

சௌதிகளின் இருப்பை மதம் ஆளுமை செய்து கொண்டிருப்பது வரை அவர்களை இந்த மனோநிலையிலிருந்து மாற்றுவது கடினம். அதேநேரம் வெளியிலிருந்து வருபவர்களும் இவை குற்றம் எனும் நிலையை உணராது மத அடிப்படியில் ஆதரித்து நிற்பது வேதனை. காயம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட பிறகுதான் மருந்திடுவது குறித்து சிந்திக்க முடியும். அந்த வகையில் இதுபோன்ற நிகழ்வுகளை வெளியில் கொண்டு வருவதும், வெளிப்படையாக விவாதிப்பதும் அந்த அடிமைத்தனத்தைக் களைவதற்கான முதற்படியாகும்.

அரசியல், பொருளாதார ரீதியில் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் சௌதி ஷேக்குகள் உள்நாட்டு மக்களை ஒடுக்குவதற்கு மட்டும் இசுலாத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். மதச் சட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்கள் முன்னிலையில் தலையை வெட்டுவது, சவுக்கால் அடிப்பது முதலான கொடூரமான தண்டனைகளை அமல்படுத்தி வரும் ஷேக்குகள் அவர்களது சொந்த வாழ்வில் எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்துதான் வருகிறார்கள். இவர்களை எதிர்த்து ஜனநாயக உரிமைக்கான போராட்டங்கள் எழாத வரைக்கும் இந்த வீட்டுப் பணிப்பெண்களுக்கு விடுதலை இல்லை.

உங்கள் பார்வைக்கு சிலஆதாரச் செய்திகள்

http://www.bbc.co.uk/sinhala/news/story/2007/07/070704_saudifeature.shtml
http://archive.arabnews.com/?page=1§ion=0&article=131847&d=26&m=1&y=2010
http://archive.arabnews.com/?page=1§ion=0&article=130001&d=22&m=12&y=2009
http://archive.arabnews.com/?page=1§ion=0&article=128343&d=11&m=11&y=2009
http://archive.arabnews.com/?page=1§ion=0&article=122151&d=3&m=5&y=2009
http://archive.arabnews.com/?page=1§ion=0&article=117683&d=31&m=12&y=2008
http://archive.arabnews.com/?page=1§ion=0&article=113798&d=3&m=11&y=2008
http://archive.arabnews.com/?page=1§ion=0&article=113929&d=6&m=9&y=2008
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=2010072679168

நன்றி
http://www.vinavu.com/2010/08/13/saudi-women-labours/

Thursday, August 12, 2010

குமரன் பத்மநாதன் என்று அறியப்பட்ட கே.பி. அவர்களுக்கு...

உங்கள் நலம் விசாரிக்க வேண்டிய நிலையில் நீங்கள் இல்லை என்பதாலும், எங்கள் நலம் குறித்து சொல்வதற்கு எதுவும் இல்லாத நிலையிலும் பரஸ்பர விசாரிப்புக்கள் தேவையற்ற நிலையில் இந்த மடலைப் பகிரங்கமாகவே உங்களுக்கு வரைகின்றேன்.

ஈழத் தமிழினத்தின் அவலங்களைத் தரிசித்த காரணத்தாலும், சிங்களத்தின் மாறாத இனவாத சிந்தனையைப் புரிந்து கொண்ட காரணத்தாலும் தமிழீழ விடுதலைக்கான பயணத்தில் நாங்கள் தடம் மாறாத பயணத்தை மேற்கொண்டு வருவது, தற்போதைய உங்கள் அட்டகாசமான இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதால், எங்கள் சிந்தனைகளும், எழுத்துக்களும், நியாயங்களும் கூட உங்களுக்கு கோபத்தைத் தரலாம். கட்டாயம் கோபம் வந்தேயாகவேண்டும்.

ஆனாலும் உங்களால் புலம்பெயர் தமிழர்களான எங்களை எதுவும் செய்ய முடியாது. எதுவும் செய்ய முடியாது என்பது, எங்கள் மமதையின் உச்சரிப்பு அல்ல. கொண்ட இலட்சியத்தின் திமிர். உங்களால் எங்களில் சிலரை வீழ்த்த முடிந்தாலும் கூட, அது எங்கள் இலட்சியத்தை இன்னமும் கொழுந்து விட்டு எரியச் செய்யும். அது உங்களது முடி சூட்டுதலுக்கு இசைவானதாக அமையப் போவதில்லை.

'ஒருவனை அறிந்து கொள்ள வேண்டுமானால், அவனது நண்பனைத் தெரிந்து கொள்ளுங்கள்' என்பார்கள். இப்போது உங்கள் அணிக்கு டி.பி.எஸ். ஜெயராஜும் வந்துவிட்டார். சபாஷ்...! சரியான தெரிவுகளோடுதான் நீங்களும் களத்தில் நிற்கிறீர்கள். ஆனால், திறமை மிகுந்த ஊடகவியலாளரான டி.பி.எஸ். ஜெயராஜ் அவர்களது எழுத்துக்களுக்கு தமிழர்களிடையே ரசிகர்கள் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையே.

இத்தனை காலம் விடுதலைப் புலிகளுடன் இணைந்து? பணியாற்றிய உங்கள் தரப்பு நியாயங்களை எழுத தேசிய ஊடகவியலாளன் எவரும் கிடைக்கவில்லை என்பதிலிருந்தே நீங்கள் இப்போதே தோற்றுப்போய் விட்டீர்கள் என்பதை நீங்களும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். உங்கள் குறித்த வீடியோப் பதிவுகளில் உங்களைத் தரிசித்தேன்.


அப்பாடா...! முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் இவ்வளவு சந்தோசமான ஒரு மனிதரை எங்குமே பார்த்ததில்லைப் போங்கள்... எந்தவொரு துக்கமோ, எந்தவொரு இழப்போ, எந்தவொரு சஞ்சலமோ, எந்தவொரு அழுத்தமோ நெருங்காத ஒரு தமிழரின் முகத்தைத் தேடிக் களைத்த என் விழிகளுக்கு அற்புதமான காட்சியாக இருந்தது.

எப்படி ஐயா உங்களால் மட்டும் இத்தனை மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றது? உங்கள் மனம் போல, உங்கள் விருப்பம் போல உங்கள் வாழ்வு அமைந்ததனால் வந்த பூரிப்பை உங்கள் முகத்திலும் பேச்சிலும் தரிசித்தேன். சிங்கள தேசத்தில் இப்போது உயிரோடு பிழைத்துள்ள தமிழர்கள் பாக்கியவான்கள். நீங்கள் அதை விடவும் மேலாக, எதிரியின் சிம்மாசன நிழலில் அல்லவா விளையாடுகின்றீர்கள்.

வீரத் தமிழ் மன்னன் எல்லாளனைக் காட்டிக் கொடுத்த அவன் தளபதியும் துட்ட கைமுனுவுடன் தாயம் விளையாடி மகிழ்ந்தானாமே... நானும் படித்திருக்கிறேன். பாவம், எல்லாளன் தமிழனாகப் பிறந்தது அவன் செய்த பாவம் அல்லவா...? நீங்களும், நானும் அதற்கு என்ன செய்யமுடியும்? அன்றும் நீங்கள் இருந்து, எல்லாளன் உங்கள் பேச்சைக் கேட்டிருந்தால் அவனும் உயிர் பிழைத்திருப்பான். உங்களால் அப்போது பிறந்திருக்க முடியவில்லை, அது ஆண்டவன் செய்த சதி. விட்டுவிடுங்கள், சரித்திரம் திரும்பியா வரப்போகின்றது?


சிங்களத்தால் அடித்து நொருக்கி, துவைத்துக் காயப்போட்டு, உயிரோடு விட்டு வைத்துள்ள தமிழர்களுக்கு உதவப் போகிறீர்களாமே...? அதுவும், புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பெற்று புனர்வாழ்வு கொடுக்கப் போகின்றீர்களாமே...? என்ன அற்புதமான சிந்தனை.... பகவத் கீதையில் கண்ணன் சொன்னதை நீங்கள்தான் சரியாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள்.

'எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது... எதற்காக அழுகிறாய்? எதை நீ கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு...' எதற்காகத் தமிழர்கள் அழ வேண்டும்? 'கொன்றவன் கண்ணன்..... கொல்பவன் கண்ணன்....' என்று கீதையே சொல்லும்போது, அந்தக் கண்ணன்தான் ராஜபக்ஷக்கள் என்று நீங்கள் சொல்வதைத் பாவித் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா...?

வர... வரத் தமிழர்களுக்கு விதி மீது நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது... பெரிய மீனைச் சின்ன மீன் சாப்பிடுவதை என்றாவது நிறுத்தியிருக்கிறதா...? அதற்காகச் சின்ன மீன்கள் பெரிய மீன்களோடு சண்டை போட்டுக்கொண்டா இருக்கின்றன...? பெரிய மீன்கள் வாழும் கடலில்த்தான் சின்ன மீன்களும் வாழ வேண்டியிருப்பதால், பெரிய மீன்களை சின்ன மீன்கள் அனுசரித்துத்தான் போக வேண்டும் என்ற உங்கள் தத்துவத்தை ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும்.

பெரிய மீன்கள் பசி எடுக்கும்போது, சின்ன மீன்கள் இரையாக வேண்டியது சின்ன மீன்களுக்கு விதிக்கப்பட்ட விதி என்பது போல், சிங்களம் திமிர் எடுக்கும் காலங்களில் எல்லாம் தமிழர்கள் கொல்லப்படுவதும், எரிக்கப்படுவதும், அடிக்கப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் விதியாகத் தொடர்வதைத் தவிர்க்க முடியாது என்ற உங்கள் தத்துவத்தை ஏனோ தமிழர்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்.

ஈழத் தமிழர்களின் வாழ்வும், வழமும், மாண்பும், நலமும், மானமும் என எல்லாமே சிங்களத்தால் சூறையாடப்பட்டது தவிர்க்க முடியாதது. எல்லாவற்றையும் துடைத்துவிட்டு, மீண்டும் உங்கள் கரங்களை ஊன்றி எழுவதற்கு முயற்சி செய்யுங்கள்... நீங்கள் எதுவும் கேட்காதவர்களாக இருக்கும்வரை எங்களால் எந்தத் தொல்லையும் இருக்காது என்று சிங்களம் தரும் நல்வாய்ப்பை இந்தத் தமிழர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லையே என்ற உங்கள் ஆதங்கம் எங்களுக்குப் புரியாமல் இல்லை.

இழப்பதற்கு எதுவுமே இல்லை என்ற நிலைக்கு வந்த பின்னர், தமிழர்களாய் இருப்பதற்கு எதற்காக மானம்? என்ற உங்களது நியாயம் அவர்களுக்கு விழங்குவதாய் இல்லை. அதுவும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு விழங்குவதாக இல்லை. அதனால்தான், நீங்கள் உங்கள் உயிர்த் தோழர்கள் கோத்தபாயவுடனும், ஹெந்த விதாரணவுடனும் மூளையைக் கசக்கி, தமிழீழம் எங்கும் சிங்களக் குடியிருப்புக்களை நிறுவி, ஈழத் தமிழர்கள் தலை நிமிர்ந்து கேள்வி கேட்டு, மீண்டும் சிங்களத்திற்குக் கோபம் மூட்டாமல், அழிவிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் திட்டத்தை அரங்கேற்றி வருவதை இந்தத் தமிழ் ஜென்மங்கள் உணர்வதாய் தெரியவில்லை.

உயிர் வாழ்தல் என்பது ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் வாங்கிக் கொடுக்கும் வரமாகவே உள்ளது. அதை விடவும் எது வேண்டும் அவர்களுக்கு...? 'நான் உயிர்வாழ்தலுக்கான சமரசத்தைச் செய்து கொண்டதனால், சந்தோசமாக இல்லையா...?' என்று கேட்கும் உங்களைப் புரிந்து கொள்கிறார்கள் இல்லையே...! நீங்கள் புத்தரைக் கும்பிட்டதால், கோத்தபாயா குளிர்ந்துபோய் உங்களை ஆரத் தழுவினாராமே... அதற்காகத்தானே தமிழீழம் எங்கும் புத்த விகாரைகளை சிங்களம் விதைத்து வருகின்றது என்பதை இந்தத் தமிழ் மர மண்டைகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனவே...

உங்களால் வரவழைக்கப்பட்டு, கோத்தபாயவுடன் விருந்துண்ண வைக்கப்பட்டவர்களை, புலம்பெயர் தமிழர்கள் துரோகிகள் என்கிறார்களே... 'துரோகி' என்ற வார்த்தைக்கு இந்தத் தமிழர்களுக்கு எப்போதுமே அர்த்தம் புரிவதில்லை. நீங்கள் விடுதலைப் புலிகள் பக்கத்தில் இருக்கும்போது, சிங்கள அரச தரப்புடன் இணைந்து செயற்பட்டால் மட்டுமே 'துரோகி' என்பதை எப்படி இவர்களுக்குப் புரிய வைப்பது?

டி.பி.எஸ். ஜெயராஜ் சொல்கிறார், நீங்கள் வடக்கு - கிழக்கில் விரைவான மீள் குடியேற்றம் செய்யப் போகிறீர்களாம், தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை விரைவாக விடுதலை செய்யப் போகின்றீர்களாம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்குப் பகுதிகளில் பொருளாதார அபிவிருத்தி செய்யப் போகிறீர்களாம்... கேட்கச் சந்தோசமாக இருக்கின்றது... இராமன் கால்கள் பட்டு அகலிகை சாபம் நீங்கியது போல், ஒங்கள் கால்கள் பட்டு தமிழீழம் சாபம் நீங்கட்டுமே என்று இந்தத் தமிழர்கள் உங்களை நம்புகிறார்கள் இல்லையே...

ஆனாலும் ஒரு கேள்வி, தமிழீழத்தின் வளமான பகுதிகள் எல்லாம், இராணுவக் குடியிருப்புக்களாக மாற்றப்பட்டு வரும் நிலையில், பாவம் அந்த அப்பாவித் தமிழர்களை எங்கே குடியிருத்த உத்தேசித்துள்ளீர்கள்? அப்படிக் குடியெற்றப்பட்டாலும் அவர்களது உயிர்வாழ்தலுக்கு என்ன உத்தரவாதம்? சிங்களம் திருந்திவிட்டது என்று சத்தியம் செய்கிறீர்களா, அல்லது 'அந்தச் சிங்கங்கள் பசித்தாலும் இப்போது புல்லு மட்டும்தான் தின்னும்' என்று சமாதானம் சொல்லப் போகின்றீர்களா? பிடிப்பதும், அடிப்பதும், அடைப்பதும், விடுவதும் அவன் செயல் என்றே நாங்கள் வாழாவிருக்க..., புலம்பெயர் தேசங்களில் நாங்கள் தூங்கிக்கொண்டு இருக்க..., தமிழீழத்தைக் காவு கொடுத்து சிங்களத்திடம் இரஞ்சி விடுதலை பெற்றுக் கொடுக்கும் உங்கள் தியாகத்திற்கு ஈடு எதுவுமே ஆகாது....

விடுதலைப்புலி என்ற சந்தேகத்தில் நிரூபிக்கப்பட முடியாத குற்றச்சாட்டுடன், அல்லது உங்களைப் போலவே சிங்களத்திற்கு ஊழியம் செய்யத் தயாரான ஒரு சில நூறு போராளிகளின் விடுதலைக்காகவா விடுதலை வேள்வியை விலை பேசி விற்கிறீர்கள்? என்று புரியாத தமிழர்கள் உங்களைத் திட்டுவதும் எங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கின்றது.

நீங்கள் ஆயுதம் கொடுத்தீர்கள், போராடினார்கள். நீங்கள் சயனைற் கொடுத்தீர்கள், குப்பி கடித்தார்கள். நீங்கள் ஜக்கெற் கொடுத்தீர்கள், அவர்கள் வெடித்துச் சிதறினார்கள். அது அவர்கள் தலைவிதி. இப்போது நீங்கள் உயிர் வாழ்வதற்காய் இந்தத் தமிழர்களிடம் பெரிதாய் என்ன கேட்டுவிட்டீர்கள்? மானத்தையும், வீரத்தையும், சுயமரியாதையையும் மட்டும்தானே கேட்கிறீர்கள். இது ஏன் இவர்களுக்குப் புரியவில்லை?

நீங்கள் யுத்தத்திற்காகக் காசு கேட்டீர்கள், அள்ளிக் கொடுத்தோம். நீங்கள் அங்காங்கே, சில முதலீடுகள் செய்ததை எப்படிப் பிழை என்று சொல்ல முடியும்? உங்கள் பெயரிலா கனடாவில் நகைக்கடைகள் இருக்கின்றன? உங்கள் பெயரிலேயா தொலைக்காட்சி இருக்கின்றது? உங்கள் பெயரிலேயா கட்டடங்கள் இருக்கின்றன? ஹோட்டல்கள் இருக்கின்றன? உங்கள் பெயரிலேயா கப்பல்கள் ஓடுகின்றன? எல்லாமே பினாமி பெயரில் அல்லவா இயங்குகின்றன.

இதையெல்லாம் உங்கள்மீது குற்றச்சாட்டாக வைத்தால், உலகம் தாங்குமா...? இப்போது, உங்கள் உதவியோடு அழிக்கப்பட்ட தமிழீழத்தைப் புனரமைக்க உங்களிடம் வாரி வழங்குவதுதானே முறை? அதை ஏன் இவர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை...? சிங்களப் படையிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் எவரும் உயிரோடு இல்லையாமே...? வெள்ளைக் கொடியோடு சரணடையச் சென்ற அரசியல் போராளிகளும், தலைவர்களும் கோத்தபாயாவின் உத்தரவோடு சுட்டுக் கொல்லப்பட்டதில் என்ன தவறு இருக்க முடியும்...? அவர்கள் உங்களைப்போல் சமரசம் செய்து கொள்வார்கள் என்று எப்படி நம்ப முடியும்...?

சமாதான காலத்தில், உங்களைப் போல் அவர்களும் ஏதாவது ஏற்பாடு பண்ணியிருந்தால் பிளைத்துத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு அரசியல் புரியவில்லை. அது அவர்களுடைய தப்பு. ஆனால், உயிரோடு சரணடைந்த பாலகுமாரனும், யோகியும், புதுவை இரத்தினதுரையும் இன்னும் பல அற்புதமான மனிதர்களும் என்னவானார்கள்...? அவர்களும் உங்களைப்போல் சமரசம் செய்து கொள்ள மறுத்துவிட்டதால், உங்கள் நண்பர் அழிக்கச் சொல்லி ஆணையிட்டு விட்டாரா? கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்...

அவர்களது உறவுகள் இறுதிக்கடனுக்காவது அழுது தொலைக்கட்டுமே.... போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புனர்வாழ்வும், போருக்குள் சிதைந்துபோன சிறுவர்களுக்குக் கல்வியுங்கூட வழங்குகிறீர்களாம்... கண்ணா... உன் கருணைக்கு அளவே கிடையாதா...? கொல்பவனும் நீ, கொல்லச் சொல்பவனும் நீ, காப்பாற்றுபவனும் நீ, உயிர் வாழ வைப்பவனும் நீயாகவே எங்கள் கண்ணுக்குக் காட்சி தருகின்றாயே...

பத்மநாபனே...

உன் கருணை வெள்ளத்தால் அழிந்துபோயுள்ள எங்கள் தமிழீழம் அழிழ்ந்து போக வேண்டாம்... உன்னால் முடிந்தால், உன் ஆருயிர் நண்பன் கோத்தபாயா மூலம் எங்கள் மக்களைத் திறந்து விடச் சொல்லு, எங்கள் மக்களை நாங்களே வாழ வைக்க எங்களுக்கு உள்ள தடையை நீக்கச் சொல்லு... நாங்கள் அவர்களை சொர்க்கத்தில் வாழ வைக்கின்றோம்... உனக்கு ஏன் கண்ணா வீண் சிரமம்...? எங்களிடம் யாசித்து எங்களுக்கே அவல் கொடுக்கிறாயே...

தொடரும்...அறிவன்

Tuesday, August 10, 2010

பத்திரிக்கையாளர் அருணபாரதி மீது தாக்குதல்

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மாத இதழின் ஆசிரியரும், இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான க.அருணபாரதி நேற்று இரவு தாக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
’’சென்னை தியாகராய நகர் முத்துரங்கம் சாலையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மாத இதழின் தலைமை அலுவலகம் இயங்கி வருகின்றது.

நேற்றிரவு(10.8.2010) அவ்விதழின் சுவரொட்டியை ஒட்டச் சென்ற இதழ் பணியாளர்கள் 2 பேர் மற்றும் அவர்களுடன் சென்ற இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், இதழின் ஆசிரியர் குழு உறுப்பினருமான க.அருணபாரதி ஆகியோர் மீது தி.மு.கவினர் தாக்குதல் நடத்தினர்.


“செம்மொழி மாநாடு செய்தது என்ன?” என்ற தலைப்பில் செம்மொழி மாநாடு குறித்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளரும், அவ்விதழின் ஆசிரியருமான பெ.மணியரசன் எழுதிய கட்டுரை,

”இந்தியாவே வெளியேறு” என்ற தலைப்பில் காசுமீர் மக்களின் போராட்டத்தை விவரித்து, க.அருணபாரதி எழுதிய கட்டுரை உள்ளிட்ட கட்டுரைகளின் தலைப்புகள் அவ்விளம்பர சுவரொட்டியில் இருந்தன.

10.08.2010 அன்று இரவு பத்திரிக்கை அலுவலகம் இயங்கி வந்த சாலையில், சுமார் 10.45 மணியளவில் இவ்விளம்பர சுவரொட்டியை இதழின் பணியாளர்கள் பாலா, நாகராஜ் ஆகியோர் ஒட்டிக் கொண்டிருக்க, அருணபாரதி உடன் சென்றிருந்தார்.

அப்போது அங்கு குடிபோதையில் வந்திருந்த சிலர், அவ்விளம்பர சுவரொட்டியை ஒட்டக் கூடாது என தகராறு செய்தனர்.

“செம்மொழி மாநாடு செய்தது என்ன?” என்ற தலைப்பை படித்து விட்டு ஒருவர், “எங்க தலைவன் மாநாடு நடத்துறார்.. நீங்க யாருடா கேள்வி கேட்க... உங்க வீட்டுல கலர் டி.வி. இருக்கா?

இந்தியாவையே வெளியே போக சொல்றியா...” என்றபடி நாகராஜை தாக்க வந்தார். அதனை தடுக்க சென்ற அருணபாரதி, பாலா ஆகியோரை முதுகிலும், கழுத்திலும் அடித்தது அந்த கும்பல்.

சுவரொட்டி ஒட்டுவதற்காக தோழர்கள் கொண்டு சென்றிருந்த மிதிவண்டியை அக்கும்பல் வெறி கொண்டு தூக்கிக் கடாசியது. குடிபோதையில் இருந்த அந்தக் கும்பலில் ஒருவன் நிதானமிழந்து, அங்கு சாலையோரம் குழி வெட்டிக் கொண்டு பணிபுரிந்து கொண்டிருந்தவரிடம் மண்வெட்டியை பிடுங்கி நாகராஜை வெட்ட வந்தார்.

அருணபாரதி அதனை தடுத்த பின், சுவரொட்டிகளை அங்கேயே கிழித்தெறிந்து, பத்திரிக்கை அலுவலகம் நோக்கி அக்கும்பல் சென்றது. அலுவலகம் அந்நேரத்தில் மூடப்பட்டிருந்தது.

தி.மு.கவினரின் இத்தாக்குதலை எதிர் கொண்ட தோழர்கள், இச்சம்பவம் நிகழ்ந்தவுடன், இரவு 11.30 மணியளவில் மாம்பலம் R1 காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தனர்.

இதழாசிரியர் பெ.மணியரசன், காவல் ஆய்வாளரிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டார். புகாரை பெற்ற காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த நாட்டு மக்களின் மரணத்தை புறந்தள்ளி, அமெரிக்க முதலாளியை காப்பாற்றத் துடித்த ராஜீவ்காந்தி, தேச பக்தரா?

இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் குண்டுவீசப்பட்டதுபோல் போபால் நகரம் காட்சியளித்தபோது, செத்து பிணங்களாக வீழ்ந்துக் கொண்டிருந்த மக்களைக் காப்பாற்று வதற்கு, நச்சுவை முறியடிக்கக்கூடிய சிகிச்சை அவசரமாக அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்காக மருத்துவர்கள் போபாலில் வெளி யேறிய நச்சு வாயுவில் அடங்கியுள்ள பொருள்கள் என்ன என்பதை போபால் நிறுவனத்திடம் கேட்டபோது, அதை வெளிப்படுத்த நிர்வாகம் மறுத்துவிட்டது. அதன் அமெரிக்க தலைமையகம், இந்த வாயுவில் (எம்.அய்.சி.) அடங்கியுள்ள மூலப் பொருள் களையும், ஆபத்து நேர்ந்தால் முறியடிப் பதற்கான மாற்று வேதிப் பொருள் என்ன என்பதையும் ரகசியமாகவே வைத்திருந்தது.

சம்பவம் நடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சு வாயுவில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி ஆராய்ந்து அறிக்கை தந்த 'இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு', இந்த நச்சை முறியடிக்கக் கூடிய மருந்து 'சோடியம் தையோ சல்பேட்' என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்த முறிப்பு மருந்தை, அப்போதே பாதிக்கப்பட்டோருக்கு தந்திருந்தால் ஏராளமான உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என்றும் அந்த அறிக்கை கூறியது.

இந்திய மருத்துவத் துறையிடம் இந்த முக்கியமான உண்மையை கார்பைடு நிர்வாகம் திட்டமிட்டு மறைத்தது மிகப் பெரும் கிரிமினல் குற்றம். ஆனால், கார்பைடு நிறுவனத்துக்கு எதிராக வழக்கை நடத்திய சி.பி.அய். புலனாய்வு நிறுவனம், இந்த முக்கியமான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் வலியுறுத்தவே இல்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட வாதம் தான் விசித்திர மானது. வெளியேறிய வாயு மிகவும் நச்சுத் தன்மை கொண்டவை என்பதும் உயிருக்கு ஆபத்தானது என்பதும் உண்மைதான். ஆனால், இப்போது நடந்த விபத்துக்கு, நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? இது கடவுளின் செயல். எந்த மனிதரை யும் கடவுளின் செயலுக்கு பொறுப்பாக்க முடியாது (It was an act of god for which no human being was responsible) என்று நீதிமன்றத் தில் கடவுளை துணைக் கழைத்தார்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

1985 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் போபால் நச்சு வாயு பேரழிவுச் சட்டம் என்ற சட்டம் ஒன்றை இயற்றியது. இச் சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட் டவர்கள் தங்களுக்கு இழப்பீடு கோரி நேரடியாக நீதிமன்றம் போவதை அரசு தடுத்து நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக, இழப்பீடு கோரும் உரிமையை அரசு எடுத்துக் கொண்டது.

முதலில் ரூ.3900 கோடி இழப்பீடாகத் தர வேண்டும் என்று இந்திய அரசு அமெரிக்கா விலுள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தின்மீது வழக்கு தொடர்ந்தது. வழக்கு அமெரிக்காவில் நடத்தப்பட்டிருந்தால், இழப்பீட்டுத் தொகை அதிகமாக தரவேண்டி இருக்கும் என்பதால், வழக்கு சூழ்ச்சியாக இந்தியாவுக்கே போபால் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே இந்தியப் பார்ப்பன ஆட்சி, யூனியடன் கார்பைடு நிறுவனத் துடன் ரகசியமாக பேச்சு நடத்தி வந்தது.

போபால் மாவட்ட நீதிபதி இடைக்கால நிவாரணமாக, ரூ.350 கோடி தருவதற்கு உத்தர விட்டார். யூனியன் கார்பைடு நிறுவனம் இந்தத் தொகையை ஏற்க மறுத்து, ம.பி. உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது, உச்சநீதிமன்றமோ, நீதிமன்றத்துக்கு வெளியே இரு தரப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்ளு மாறு உத்தரவிட்டு, எல்லா மனுக்களையும் தள்ளுபடி செய்துவிட்டது. அமெரிக்காவி லிருந்து வரும் அன்னிய முதலீடுகள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, சொந்த நாட்டு குடி மக்களின் 'பிணங்களை' பணயமாக வைத்தது, இந்திய அரசு.

330 கோடி டாலருக்கு பதிலாக ரூ.173 கோடி இழப்பிட்டுத் தொகைக்கு இந்திய அரசு ஒப்புக் கொண்டது. இதைவிடக் கொடுமை பாதிக்கப்பட்ட மக்களிடம் இது பற்றி எந்தக் கருத்தையும் இந்திய அரசு கேட்கவில்லை என்பதுதான்!

பாதிக்கப்பட்டவர்கள் - இறந்தவர்கள் -இழப் பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு கடுமையான சான்றுகளைக் கேட்டது, இந்திய அரசு. இறந்து போனவர் என்பதை நிரூபிப்பதற்கு இறுதி ஊர்வலத்தில் போனவர்கள் சான்று தர வேண்டும் என்றார்கள். நியாயமான பல விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்பட்டன. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் செலவை குறைக்க அரசு அவ்வளவு கவலை எடுத்துக் கொண்டது. இறந்தவர், பாதிக்கப்பட்டவர் பற்றி துல்லியமான கணக்கெடுப்பு நடத்துவதில், மத்திய பிரதேச அரசோ, இந்திய அரசோ, எந்த அக்கறையும் காட்டவில்லை. இறந்தவர்கள் 3000 பேர் என்றும், இறந்தவர்கள் உட்பட பாதிக்கப் பட்டவர்கள் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் என்றும், அவர்களே கணக்கிட்டுக் கொண் டார்கள். இழப்பீடு கோரி விண்ணப்பித்த 10 லட்சம் பேரில் 5,74,367 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. உண்மையாக பாதிப்புக்குள்ளான வர்களாக 5,74,367 பேர் என்று இந்திய அரசு ஏற்றுக் கொண்டாலும், 1 லட்சத்து 5 ஆயிரத்து 500 பேர் மட்டுமே பாதிப்புக்குரியவர்கள் என்ற அடிப்படையில், கார்பைடு நிறுவனம் வழங்க முன்வந்த ரூ.173 கோடியை மட்டும், இந்தியா பெற்றுக் கொண்டது.

இதனால் சராசரியாக பாதிக்கப்பட்ட ஒருவருக்குக் கிடைத்தது ரூ.1500க்கும் குறைவு! பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவ செலவுக்குக் கூட பணமின்றி மரண மடைந்தனர். நச்சு வாயு வின் தாக்கம் மறையா மல், மக்களைத் தொடர்ந்து பாதிப்புக் குள்ளாக்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான அமைப்புகள் நீதி கேட்டு, இடை விடாமல் போராடின. 1989 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி உருவான உடன்பாட்டை எதிர்த்து, பாதிக்கப்பட்டோருக்கான அமைப்புகள் மீண்டும் உச்சநீதி மன்றத்தின் கதவைத் தட்டின. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி மீண்டும் போபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில்தான் கடந்த 7.6.2010 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தியாவின் நீதித்துறை, மத்திய புலனாய்வு நிறுவனம், இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் அதிகார சக்திகள் அத்தனையுமே அமெரிக்கக் குற்றவாளியைத் தபிக்க வைப்பதில் ஆர்வம் காட்டி செயல்பட்டதற்கான ஏராளமான அதிர்ச்சியூட்டும் சான்றுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

1989 இல் நீதித் துறையும் இந்திய அரசும் இணைந்து அமெரிக்க நிறுவனத்துக்கு எதிரான அத்தனை வழக்குகளையும் கைவிட்டு, குற்றவாளிகள் தப்பிக்கச் செய்த பிறகும் மக்கள் எழுச்சியால் மீண்டும் 1991 இல் வழக்கு, தோண்டி எடுக்கப்படும் நிலை வந்தது. ஆனாலும் என்ன பயன்? 1991 இல் குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான கடுமையான குற்றப் பிரிவுகள் மாற்றப்பட்டன. தண்டனைச் சட்டப் பிரிவு 304-11 என்பதிலிருந்து 304-ஏ பிரிவுக்கு மாற்றி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்காமல் பாதுகாப்பை ஏற்படுத்தித் தந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.அகமத், எஸ்.பி. மஜீம்தார் ஆகியோர் ஆவர். அப்போது மத்திய புலனாய்வுத் துறையும், இந்த துரோகத்துக்கு உடந்தையாக செயல்பட்டதை ஏற்கனவே சுட்டிக் காட்டி யிருந்தோம். இந்த உத்தரவை எதிர்த்து மறு ஆய்வுசெய்யக் கோரும் மனுவை தாக்கல் செய்யாதது மட்டுமல்ல; மற்றொரு துரோகத்தை யும் சி.பி.அய். செய்தது. சி.பி.அய். தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை மட்டுமே உச்சநீதி மன்றத்தின் பார்வைக்கு வைத்ததேதவிர, தற்போது போபால் விசாரணை நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட விரிவான சாட்சி ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் சி.பி.அய். தாக்கல் செய்யவில்லை. இப்போது வெளிவந்துள்ள நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பரிசீலிக்க - ம.பி. மாநில அரசு நியமித்துள்ள நான்கு உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் தலைவர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விவேக் டென்ககா இந்த அதிர்ச்சியான தகவலைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிறுவனத்தைக் காப்பாற்ற மற்றொரு பேருதவியையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அகமதியா எஸ்.பி.மஜிம்தார் அடங்கிய அமர்வும் செய்தது. அமெரிக்காவில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனம், இந்தியாவிலுள்ள அதன் கிளையான யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத்தில் நேரடியாக முதலீடு செய்திருந்த 51 சதவீத பங்குகளை பறிமுதல் செய்ய போபால் நீதிபதி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்புகள் தாக்கல் செய்த மனு மீது நீதி மன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. உடனடியாக யூனியன் கார்பைடு நிறுவனம் ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி, அந்த அறக் கட்டளைக்கு பங்குகளை மாற்றித் தருமாறு மனு போட்டது. உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.அகமதி, எஸ்.எம். மஜீம்தார் அமர்வு, இதற்கு ஒப்புதல் அளித்து விட்டது. (1994, பிப்.14). வழக்குதொடர்ந்த பாதுகாக்கப் பட்ட மக்களுக்கான அமைப்பின் கருத்து களைக் கேட்கவும் உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

இப்படி - அமெரிக்க நிறுவனத்துக்காக நீதித் துறையை வளைத்து அதற்காக பதவி ஓய்வுக்குப் பிறகு அந்நிறுவனத்தில் பல கோடி மதிப்புள்ள அறக்கட்டளைக்கான தலைவர் பதவியையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி ஏ.எம். அகமதி இப்போது உச்சநீதிமன்றமே அப்பதவியை ஏற்குமாறு தன்னைப் பணித்ததாகக் குறிப்பிடுகிறார்.

பாதிக்கப்பட்டோருக்காக அமைக்கப்பட்ட மறுவாழ்வு மீட்பு மய்யத்தின் வேண்டுகோளை ஏற்று, "டாட்டா சமூகவியல் ஆய்வு நிறுவனம்", சம்பவம் நடந்த இரு வாரங்களில் 25,259 பாதிக்கப்பட்டோர் இல்லங்களுக்குச் சென்று பாதிப்புகளை நேரடியாக பதிவு செய்தது. பாதிப்புகள் குறித்த ஒரே நேரடியான பதிவு இது மட்டும்தான். கடுமையான பாதிப்புகளை வெளிக்கொண்டு வந்த இந்தக் கள ஆய்வுக்கான விவரங்களை ஒரு லாரி நிறைய ஏற்றி, மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்து. அத்தனையும் திட்டமிட்டு, அழிக்கப்பட்டன. இந்த ஆவணங் களின் கதி என்னவாயிற்று என்றே தெரியவில்லை.

1997 இல் யூனியன் கார்பைடு நிறுவனத்தை அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனமான 'டொவ் கெமிக்கல்ஸ்' (னுடிற ஊhநஅiஉயடள) விலைக்கு வாங்கியது. போபால் ஆலையில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டுப் போனது யூனியன் கார்பைடு; விலைக்கு வாங்கிய புதிய நிறுவனம், அதை சரி செய்ய வேண்டும் என்று பாதிக்கப் பட்டோர் நல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதற்காக ரூ.100 கோடியை 'டவ் கெமிக்கல்' அரசிடம் வைப்பு நிதியாக வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் கோரியது. ஆனால் 'டவ் கெமிக்கல்' நிறு வனத்துக்காக வாதாட காங்கிரசுக்குள்ளேயே புதிய 'தேச பக்தர்கள்' புறப்பட்டார்கள்.

மன்மோகன் அமைச்சரவையில் 2006-07 இல் வர்த்தக அமைச்சராக இருந்த கமல்நாத் அந்த நிறுவனத்தின் மீது எந்தக் கடுமையான கட்டுப்பாடுகளையும் திணிக்கக் கூடாது என்றார். இப்போது காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளராக உள்ள அபிஷேக்சிங் கிங்வி - டவ் செமிக்கல்ஸ் நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இருந்து கொழுத்த ஊதியம் பெற்றவர். நச்சு வாயுவால் ஏற்பட்ட பாதிப்புக்கு இந்நிறு வனத்தைப் பொறுப்பாக்கக் கூடாது என்று மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். டாட்டா போன்ற தொழிலதிபர்கள், டவ் நிறுவனத்திடம் ரூ.100 கோடி வைப்புத் தொகையாகக் கேட்பதை கைவிட வேண்டும் என்றும், இப்படிக் கேட்டால், அன்னிய முதலீடு குறைந்துவிடும் என்றும், நச்சத் தன்மைகளை அகற்ற தனியே ஒரு நிதியம் அமைக்கலாம் என்றும் யோசனை தெரிவித்ததை, அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஏற்றுக் கொண்டு, அதையே தமது அலுவலகக் கோப்பிலும் குறிப்பு எழுதி வைத்தார். மாண்டேக் அலுவாலியா அமைச்சரவை செயலாளர் பி.கே. சதுர்வேதி, அமெரிக் காவுக்கான இந்திய தூதர் ரேனன்சென், பிரதமரின் முதன்மை செயலாளர் டி.கே.நாயர், இப்படி அதிகார செல்வாக்கு மிக்க ஒரு பெரும் குழு, 'டவ்' நிறுவனம் ரூ.100 கோடி செலுத்த வேண்டாம் என்று அரசிடம் வற்புறுத்தி வெற்றி பெற்றது. பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. படுகொலைக்குக் காரணமான 'யூனியன் கார்பைடு' 'டவ் கெமிக்கல்' என்று பெயர் மாற்றம் செய்து கொண்டுவந்த போது, அதற்கு பட்டுக் கம்பளம் விரித்த மக்கள் துரோகிகளாகவே இவர்கள் செயல் பட்டனர். இதே ப.சிதம்பரம்தான் இப் போதும் மன்மோகன் நியமித்த குழுவில் இடம் பெற்று போபால் மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் வழங்குவது பற்றி அறிக்கை தந்திருக்கிறார்.

யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கிய டவ் கெமிக்கல் நிறுவனம், மீண்டும் இந்தியாவில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய 'தர்ஸ்பான்' என்ற பூச்சிக் கொல்லி மருந்தை தயாரித்தது. இதற்காக இந்தியா வில் உள்ள அதிகாரிகளுக்கு அந் நிறுவனம் ரூ.80 லட்சம் லஞ்சம் கொடுத்தற்காக இந்நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் இரு வழக்குகள் பதிவாயின. இப்படி லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக அமெரிக்காவின் சட்டப்படி அந்த நிறுவனம், அந்நாட்டுக்கு அபராதம் செலுத்த வேண்டி யிருந்தது. இதுபற்றி சி.பி.அய். விசாரணைக்கு ஏற்பாடு செய்வதாக மார்க்சிஸ்ட் உறுப்பினர் பிருந்தாகாரத் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு சார்பில் மாநிலங்களவையில் பதிலளிக்கப் பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.

யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சன், விபத்து நடந்த அடுத்த சில நாட்களில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி இந்தியா வந்தார். அவர் பத்திரமாக வந்து திரும்புவதற்கான உறுதியை இந்திய அரசு வழங்கியது. அப்போது பிரதமராகவும் அயல் துறை அமைச்சராகவும் இருந்தவர் ராஜிவ் காந்தி. ஆண்டர்சன் போபால் வருகை, ம.பி. மாநில முதல்வராக இருந்த அர்ஜூன் சிங்கிற்கும் தெரியாது; மாநில காவல் துறை, ஆண்டர்சனை சட்டப்படி கைது செய்து நடவடிக்கை எடுத்தது. அதற்குப் பிறகு டெல்லியிலிருந்து அர்ஜூன் சிங்கிற்கு, ஒரு தொலைபேசி வந்தது. ஆண்டர்சனை பத்திரமாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று தொலைபேசியில் பேசியவர் உத்தரவிடுகிறார். மாநில அரசுக்குச் சொந்தமான தனி விமானத்தில் பத்திரமாக ஆண்டர்சன் டெல்லிக்கு அனுப்பி வைக்கப் பட்டார். விமானத்தை ஓட்டிச் சென்ற கேப்டன் எஸ்.ஹசன், விமானத்தில் பயணித்த நபர் யார் என்பதே தமக்குத் தெரியாது என்று கூறுகிறார்.

இப்போது 'இந்துஸ்தான் டைம்ஸ்' நாளேட் டுக்கு அளித்த பேட்டியில் மூத்த காங்கிரஸ் தலைவரான அர்ஜூன் சிங் இது பற்றி தனக்கென்று எந்த நிலைப்பாடும் இல்லை என்றும், அப்போது மத்தியில் இருந்த ராஜிவ் தலைமை யிலான காங்கிரஸ் அரசு தான், இதற்குக் காரணம் என்றும் கூறிவிட்டார். "It was the Central Government decision to provide safe passage to Anderson" (Sunday Express, June 20, 2011) ராஜிவ் காந்தியின் முதன்மைச் செயலாளராக அப்போது இருந்த பி.சி. அலெக்சாண்டர் "பிரதமர் ராஜிவும் முதலவர் அர்ஜூன் சிங்கும் தொடர்பில் இருந் தனர். போபால் நச்சுவாயுக் கசிவுக்குப் பின்னர் யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் இந்தியாவை விட்டு தப்பித்துச் செல்ல அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி அனுமதி அளித்திருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

ஆண்டர்சன், இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகுதான், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு தெரிவிக்கப்பட்டது என்று காங்கிரசார் செய்து வரும் பொய்ப் பிரச்சாரம், இப்போது ஆதாரங் களுடன் அம்பலமாகி வருகிறது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி 'இந்து' ஏட்டின் டெல்லி செய்தியாளர் ஜி.கே. ரெட்டி, அந்த ஏட்டின் முதல் பக்கத்தில் எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடப்பட் டிருந்தது: "பிரதமரின் முதன்மை செயலாளர் பி.சி. அலெக்சாண்டர், பிரதமர் ராஜீவ்காந்தி யின் கவனத்துக்கு இன்று (டிசம். 7, 1984) இத் தகவல்களைக் கொண்டு வந்தார். ஆண்டர்சனை விடுதலை செய்து, தனி விமானத்தில் பத்திரமாக திருப்பி அனுப்புவதற்கு முன்பே, ராஜீவ் காந்தியிடம், இவை தெரிவிக்கப் பட்டன."

அடுத்த நாள் டிசம்பர் 8 ஆம் தேதி 'இந்து'வில் ஜி.கே. ரெட்டி இதுபற்றி எழுதியுள்ள மற்றொரு செய்திக் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட் டுள்ளது.

"நேற்று (டிசம்பர் 7 ஆம் தேதி) ராஜீவ் காந்தி, ம.பி. மாநிலத்திலுள்ள சாகர் எனும் இடத்தில் தான் இருந்தார். எனவே அர்ஜூன்சிங், ஆண்டர்சனை பிணையில் விடுதலைசெய்து பத்திரமாக அனுப்பிய செய்தியை பிரதமர் ராஜீவிடம் கலந்து பேச வில்லை என்று நம்புவதற்கு வாய்ப்பே இல்லை. ராஜீவ் வேறு மாநிலங்களில் இருந் திருந்தால்கூட அவர்கள் கலந்து பேச முடியாமல் போவதற்கு வாய்ப்புகள் இருந்திருக்கலாம். ம.பி. மாநிலத் திலேயே ராஜீவ் இருந்திருக்கும்போது எப்படி கலந்து பேசாமல், அர்ஜூன் சிங் முடிவெடுத் திருக்க முடியும்?" என்று அந்த செய்தி கூறுகிறது. ('இந்து' ஏடே இப்போது அதை வெளியிட்டு, ராஜிவுக்கு தெரிந்தே நடந்த சம்பவம்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.) ஆண்டர்சனின் இந்திய வருகையை வெளி நாட்டுத் துறை அமைச்சகப் பதிவில் திட்டமிட்டு மறைக்கப்பட்டது.

அமெரிக்காவின் உளவுத் துறையான 'சி.அய்.ஏ.' இது பற்றி அப்போது தனது ரகசிய அறிக்கை யில், "இந்தியாவின் ராஜீவ்காந்தி அரசாங்கத்தின் தலையீடு காரணமாகவே ம.பி. மாநில ஆட்சி, ஆண்டர்சனை பத்திரமாக திருப்பி அனுப்பியது" என்று குறிப்பிட்டிருப்பதை 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேடு எடுத்துக் காட்டியுள்ளது. (ஜூன் 12, 2010)

ஆண்டர்சன் அமெரிக்காவில் நியூயார்க் நகரின் அருகில் தமது பண்ணை வீட்டில் சொகுசாக இருப்பது இந்திய அரசுக்கு தெரியும். ஆனாலும் அவர் தேடப்படுகிற குற்றவாளியாக அறிவிக்கப் பட்டுவிட்டார். அவரை, இந்தியாவுக்குக் கொண்டு வரும் எந்த முயற்சியையும் இந்தியா வில் பா.ஜ.க. ஆட்சியானாலும், காங்கிரஸ் ஆட்சியானா லும் எடுக்கவே இல்லை. 1995 பிப். 9 ஆம் தேதி இந்திய அரசின் செயலாளர்கள் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப் பட்டது. ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோரினால், அமெரிக்கா இந்தியாவுடனான நட்புறவு பாதிக்கும். எனவே அதை வலியுறுத்த வேண்டாம்" என்று முடிவு செய்யப் பட்டது. அந்தக் கூட்டத்தில் உள்துறை செயலாளர் கே. பத்மநாபய்யா, நிதித் துறை செயலாளர் கே.கே.மாத்தூர், ரசாயனம் மற்றும் பெட்ரோலியத் துறை செயலாளர் ஏ.என்.வர்மா உள்ளிட்ட உயர் பார்ப்பன அதிகார வர்க்கம் கலந்து கொண்டது. 2001 இல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் சோலி சோப் ராஜி, ஆண்டர்சனை இந்தி யாவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்" என்று அரசுக்கு பரிந் துரைத்தார். ஆனாலும், மக்கள் தந்த அழுத்தத்தின் காரண மாக, 2003 ஆம் ஆண்டு இந்திய அரசு உரிய ஆதாரங்களை, ஆவணங்களை முன் வைக்காமல், அமெரிக்காவிடம், இந்தக் கோரிக்கையை கண்துடைப்புக்காக வைத்தது. அமெரிக்கா உறுதி யாக ஆண்டர்சனை அனுப்ப மறுத்துவிட்டது.

அணு உலைகள் விபத்து தொடர்பாக நாடாளு மன்றத்தில் சட்டம் ஒன்றைக் கொண்டு வரும் முயற்சிகளில் மன்மோகன்சிங் ஆட்சி தீவிரம் காட்டி வருகிறது. அணுவிபத்து ஏற்பட்டால், அணு உலைகளை வழங்கும் அமெரிக்க நிறுவனங்கள் ரூ.500 கோடி டாலர்களை இழப்பீடாக அளித்தால் போதும் என்று அந்த சட்டம் கூறுகிறது; இதை நிறைவேற்றும் நிலை யில் போபால் வழக்கின் தீர்ப்பு வந்துவிட்டதால், இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்ற இயலாத நெருக்கடிக்கு மன்மோகன்சிங் ஆட்சி தள்ளப் பட்டுள்ளது. எனவேதான் பாதிக்கப்பட் டோருக்கு இழப்பீடு தருவதில் தீவிரம் காட்டுவது போன்ற நடவடிக்கைகளில் மன்மோகன்சிங் ஆட்சி இறங்கியுள்ளது.

அமெரிக்காவின் மெக்சிக்கோ கடற்கரைப் பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத் தின் கிணறு ஒன்றிலிருந்து எண்ணெய் வெடித்து வெளியேறியதால், கடல் தாவரங்கள், கடல் உயிரினங்கள் பெருமளவில் உயிரிழந்தன. மனித உயிரிழப்பு எதுவும் இல்லை. என்றாலும், அமெரிக்க அதிபர் ஒபாமா, கடந்த மே மாதம் 27 ஆம் தேதி சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு, ஆத்திரப்பட்டு, பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறு வனத்தைக் கடுமையாக சாடி 500 கோடி டாலர் இழப்பீட்டுத் தொகையைக் கேட்டுள்ளார். ஆனால், இந்தியாவின் ராஜீவ்காந்தியும் அவரது ஆட்சியும், பல்லாயிரம் மக்கள் பிணமான உலகின் மிக மோசமான "போபால்ஷிமா"வைப் பற்றிக் கவலைப்படாமல், குற்றவாளிகளை தப்பச் செய்வதிலும், நாட்டு மக்கள் மரணத்தைவிட அமெரிக்காவிடம் நேசக்கரம் நீட்டுவதிலேயே துடிப்புடன் செயல்பட்டனர்.

இந்திய பார்ப்பன அதிகார பார்ப்பன வர்க்கம், இந்திய பார்ப்பன நீதிமன்றம், இந்திய பார்ப்பனிய உளவுத்துறை, இந்தியப் பார்ப்பன காங்கிரஸ், இந்தியப் பார்ப்பனியத் தலைமை ராஜீவ், இந்திய பார்ப்பன பனியா சுரண்டல் கும்பல், பன்னாட்டு நிறுவனங்கள், இந்துத்துவ பா.ஜ.க. பார்ப்பன ஆட்சி - என்று அனைத்து ஆளும் வர்க்கங்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே நிற்கின்றன.

போபாலை போல் ஒரு நிகழ்வு உலகில் எந்த ஒரு நாட்டிலும் நிகழ்ந் திருந்தாலும், அதை மக்கள் மன்றம் இந்த நாட்டு மக்களைப் போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா?

ராஜீவ்காந்தி கொலைக்காக கசிந்துருகும் காங்கிரஸ்காரர்களே! ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரனை ஈழத்திலிருந்து தமிழ்நாடு கொண்டுவர வேண்டும் என்று கூக்குரல் போடும் "தேசபக்தர்களே!"

22000 மக்களைப் பிணமாக்கிய ஒரு கோரப் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகள் மீது நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? அவர்களை, இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தாதது ஏன்?

இந்திய ராணுவத்தை ஈழத்துக்கு அனுப்பி, 2000 மக்களைக் கொன்று குவித்த ராஜீவுக்கு, கண்ணீர் வடிக்கும் தேசிய திலகங்களே!

இதோ, இன்றைக்கும் ஊனத்தை வாழ்வாக்கிக் கொண்டிருக்கும் இந்த போபால் மக்களுக்கு, நீங்கள் வழங்கிய நீதி என்ன?

குற்றவாளிகளை தப்பிக்க விட்டது தானா?

பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டையும் வழங்காமல், அவர்களுக்கு பட்டை நாமம் சாத்துவது தானா?

சொந்த நாட்டு மக்களின் பிணங்கள் மீது அமெரிக்க பன்னாட்டு நிறு வனத்துக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தரும் நீங்கள், இந்தியாவின் தேச பக்தர்களா? அமெரிக்காவின் தேச பக்தர்களா? பதில் சொல்லுங்கள்!

(புதுவை - ஆத்தூர் கூட்டங்களில் பெரியார் தி க பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கம்)

Sunday, August 8, 2010

எலுமிச்சம் பழத்தை நசுக்கி வாகனம் புறப்பட்டால் விபத்தும் நடக்காதா?

எலுமிச்சம் பழத்தை நசுக்கி வாகனம் புறப்பட்டால்விபத்தும் நடக்காதா?

மதச் சார்பின்மை படும் பாடு

இந்திய அரசியல் அமைப்புச் சாசனம் எடுத்த எடுப்பிலேயே தன்னை மதச்சார்பற்ற
அரசு என்று பிரகடனப்படுத்தி விட்டது.

அத்தோடு நிற்கவில்லை; அடிப்படைக் கடமைகள் என்ற பகுதியில் (51ஏ) விஞ்ஞான
அணுகுமுறை, மனிதாபிமானம், ஆராய்ச்சிக்கு ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை
வளர்த்தெடுப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், அரசு ஊழியர்கள், அலுவலர்கள் எப்படியெல்லாம் நடந்துகொண்டு
வருகிறார்கள் என்பது பெரிதும் வெட்கக்கேடானது.

சாதாரண மக்கள் மட்டுமல்லர்; விஞ்ஞானிகள் என்று கருதப்படக் கூடியவர்கள்கூட
அவர்களின் படிப்புக்கும், பார்க்கும் உத்தியோகத்துக்கும் சற்றும்
சம்பந்தமில்லாமல், பாமரத்தன்மைக்கும் கீழாக அருவருக்கத்தக்க வகையில், மூட
நம்பிக்கைச் சேற்றை முகத்தில் அப்பிக் கொள்பவர்களாகக் காட்சி
அளிக்கிறார்களே, இது எவ்வளவுப் பெரிய வெட்கக்கேடு!

கிழக்கு மண்டல இந்தியக் கடலோரக் காவல் படைக்கு வழங்கப்பட்டுள்ள சட்டக்
சி.ஜி820 புதிய ஹெலிகாப்டரைக் கடலோர காவல் படைக் காவல்துறைத் தலைவர்
(அய்.ஜி.) ஜெனரல் ராஜசேகர் மாலை அணிவித்துத் தொடங்கி வைத்தார். புதிய
வாகனங்களுக்குப் பூஜை போடும்போது டயருக்கு அடியில் எலுமிச்சம் பழத்தை
வைத்து நசுக்குவதுபோல ஹெலிகாப்டர் சக்கரத்தின்கீழ் எலுமிச்சம் பழங்கள்
வைக்கப்பட்டு, விமானத்தை இழுத்து நசுக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் இவர்கள் தெரிவிப்பது என்ன? எலுமிச்சம் பழத்தை நசுக்கி புதிய
வாகனம் புறப்பட்டால் எந்தவித விபத்தும் நடக்காது என்றுதானே சொல்ல
வருகிறார்கள்?

இதுவரை இவ்வாறு செய்து வந்துள்ளனரே விபத்துகள் நடக்காமல் இருந்தனவா? சாலை
விபத்துகள் மட்டுமல்ல, விமான விபத்துகள்பற்றி நாள்தோறும் செய்திகள்
வந்தவண்ணமாகத்தானே உள்ளன. விலை மதிக்கப்பட முடியாத மனித உயிர்கள்
பலியாகின்றனவே இதற்கெல்லாம் என்ன சமாதானம்?

எலுமிச்சம் பழம் வைத்து நசுக்காத விமானங்கள் தான் விபத்துக்கு ஆளாகின
என்று சொல்லப் போகிறார்களா?

இதைவிட இன்னொரு வெட்கக்கேடு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்
(இஸ்ரோ) செயல்பாடுகள்.

புதிதாக ராதாகிருஷ்ணன் என்பவர் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டு
இருக்கிறார். இவர் பதவியேற்றவுடன் அவசர அவசரமாக குருவாயூரப்பன்
கோயிலுக்குச் சென்று எடைக்கு எடை சர்க்கரை கொடுத்தார்.

அதன்பின் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி.பி3 ராக்கெட் விண்ணில்
ஏவப்படுவதாக இருந்தது. அதற்குமுன் இஸ்ரோவின் புதிய தலைவரான ராதாகிருஷ்ணன்
என்ன செய்தார்? தமது குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையானைத்
தரிசித்தார். ஜி.எஸ்.எல்.வி. பி3 ராக்கெட்டுக்கான திட்ட அறிக்கையை
ஏழுமலையான் பாதத்தில் வைத்து வேண்டிக்கொண்டார்.

திருப்பதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ராக்கெட் வெற்றிகரமாக
ஏவப்படுவதற்காக ஏழுமலையானைத் தரிசிக்க வந்ததாகக் கூறினார்.

முடிவு என்ன? குறிப்பிட்ட தேதியில் ஏவப்பட்ட அந்த ராக்கெட் இஸ்ரோவின்
கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது.

இதற்கு இஸ்ரோ தலைவர் என்ன சொன்னார்?

ராக்கெட்டின் கிரையோஜெனிக் எந்திரத்தில் தீப்பொறி ஏற்பட்டதா, இல்லையா
என்பது உறுதியாகத் தெரியவில்லை. ராக்கெட் திசை மாறியதற்கான காரணம் ஓரிரு
நாள்களில் கண்டு அறியப்படும் என்றுதான் சொன்னாரே தவிர, ஏழுமலையானைத்
தரிசித்துப் பயன் இல்லை என்று அறிவு நாணயத்துடன் ஒப்புக்கொள்ள
முன்வரவில்லை.

அந்த ராக்கெட் மற்றும் ஜிசாட்4 செயற்கைக்கோளின் மதிப்பு எவ்வளவு
தெரியுமா? ரூ.420 கோடியாகும். இதில் ராக்கெட்டின் மதிப்பு மட்டும் ரூ.170
கோடியாகும்.

மக்கள் பணம் இதுபோன்ற மதவாதிகளால் நட்டப்பட்டதற்கு யார் பொறுப்பு?

இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மைக்கு விரோதமாக நடந்துகொண்டது; போதுமான
திறமையும், பொறுப்பும் இல்லாததால் ஏற்பட்ட நட்டம் இவைகளுக்காக
சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதுதான் சரியான முடிவாக
இருக்கமுடியும்.


விடுதலை” தலையங்கம் 29-7-2010