Wednesday, September 8, 2010

நிலக்கொள்ளையால் நெருங்கும் உணவுப்பஞ்சம்



‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்திணை அழித்திடுவோம்’ என்று பாரதி பாடி ஒரு நூற்றாண்டு முடியவில்லை; அதற்குள் தனிமனிதர்கள் சிலர் சேர்ந்து ஜகத்தினை பட்டினியால் அழிக்கும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். மக்களைப் பட்டினி போடும் அரசுகளைக் கொண்ட நாடுகள், லட்சக்கணக்கான ஹெக்டேர் விளைநிலத்தை அடிமாட்டு விலைக்கு அன்னியரிடம் விற்று செயற்கையாக பஞ்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் மடியப் போவது உறுதியாகத் தெரிந்தும் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அந்நாடுகளிலுள்ள விளை நிலங்களை வாங்கிக் குவித்து வருகின்றன ‘பன்னாட்டுக் கம்பெனிகள்’ எனப்படும் பிணந்தின்னிக் கழுகுகள். அப்படியாவது பிற நாடுகளில் சென்று விளைநிலம் வாங்க வேண்டிய அவசியமென்ன? சொந்த நாட்டு மக்களை பட்டினியிலிருந்து காப்பாற்றப் போகிறார்களாம்!

இந்த ‘மனிதநேயர்கள்’ ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவிலும் மட்டுமே இருப்பதாக தவறாக எண்ணிவிடக் கூடாது. ஜப்பான், அரபு நாடுகள் ஒன்றியம், சவூதி அரேபியா, தென் கொரியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் நில அபகரிப்புப் போட்டியில் முன்னணியில் உள்ளன. எந்த நாடு உலகின் எப்பகுதியில் எவ்வளவு நிலத்தை அபகரித்துள்ளது என்பதை கீழே தரப்பட்டுள்ள பட்டியலில் பார்க்கலாம்.

நீண்டதோர் பட்டியலின் ஒரு சிறு பகுதியே இது. இந்தியா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் எந்தளவுக்கு நில அபகரிப்பில் இறங்கியுள்ளன என்பதைக் காட்டவே இந்தப் பட்டியல் இங்கு இடம்பெறுகிறது.

தெற்காசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களில் உள்ள நாடுகளின் விளை நிலங்களை அதிவேகமாக வாங்கிக் குவித்து வருகின்றன பல பன்னாட்டுக் கம்பெனிகள். ஏற்கெனவே நாட்டு மக்களைக் கூட்டங்கூட்டமாக பட்டினியால் சாகவிடும் அரசுகள், ரகசியமாக காதும் காதும் வைத்தாற்போல பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டு வருகின்றன. இவ்வாறு விளைநிலங்கள் பன்னாட்டு முதலாளிகள் வசமாகி எதிர்காலத்தில் உணவு என்பதே சாமானிய மனிதருக்கு எட்டாத கனியாகி விடும் அபாயம் நெருங்குகிறது. வெளிநாடுகளில் உணவை உற்பத்தி செய்து உள்நாட்டில் பெரும் லாபத்திற்கு விற்கும் உரிமை கார்ப்பரேட் நிறுவனங்களின் வசமாவதால் உலகில் என்னென்ன கேடுகள் விளையும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

நிலஅபகரிப்புப் போட்டியினால் உடனடியாக பெருமளவு பாதிப்பைச் சந்திக்கப் போவது ஆப்பிரிக்க நாடுகளே. ஏற்கெனவே எத்தியோப்பியாவில் ஆயிரக் கணக்கில் மக்கள் பஞ்சத்தில் மடிந்து வருவது அனைவரும் அறிந்த செய்தி. அந்த நிலையில், ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என பல நாடுகள் போட்டி போட்டு எத்தியோப்பிய விளைநிலங்களை அபகரித்து வருகின்றன.

எத்தியோப்பியாவில் 6 லட்சம் ஹெக்டேர் நிலம் அபகரிக்கப் பட்டுள்ளது.ஒரு ஹெக்டேருக்கு ரூ.150 லிருந்து ரூ.500 வரை விலை தரப்பட்டுள்ளது. அங்கு சராசரியாக ஒரு குடும்பத்திற்கு 2 ஹெக்டேர் நிலம் உளளது. இந்த நில அபகரிப்பால் ஏறக்குறைய 3லட்சம் குடும்பங்கள் நிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அபகரிக்கப்பட்ட நிலங்க ளில் இயந்திரங்களைக் கொண்டு விவசாயம் செய்யப் படுவதால், வெறும் 20000 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.

நிலப்பறிப்புப் போட்டியில் முதலிடம் வகிப்பது இந்தியா.

கருதூரி குளோபல் லிமி டெட் என்ற பெங்களூர் கம்பெனி ஒன்று மட்டுமே 3,50,000 ஹெக்டேர் நிலத்தை அபகரித்துள்ளது. இந்திய அரசின் கடனுதவியோடு இதுவரை 30,000 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யப்பட்டிருக்கிறது. உணவு தானியங்கள், கரும்பு, பாம் ஆயில் போன்றவற்றை விளைவித்து அவற்றை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்போவதாக அறிவித்துள்ள கருதூரி குளோபல் கம்பெனி, ‘உலகிலேயே பெரிய விவசாய நிலப்பரப்பு’ தன்னிடம் உள்ளதாக மார்தட்டிக் கொள்கிறது. உணவுப் பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமென்ற நிபந்தனையோடு இதுவரை எத்தியோப்பியாவுக்கு இந்திய அரசு 50 கோடி பவுண்ட் கடனுதவி அளித்துள்ளது.

எத்தியோப்பியாவில் மட்டு மே 80 இந்திய கம்பெனிகள் நில அபகரிப்புப் போட்டியில் இறங்கி யுள்ளன. எத்தியோப்பியாவில் மட்டுமின்றி கானா, மாலி, மட காஸ்கர், மொசாம்பிக், சூடான், டான்சானியா ஆகிய நாடுகளிலும் இந்திய கம்பெனிகள் விளை நிலங் களைப் பறித்து வருகின்றன.

ஆப்பிரிக்க விளை நிலங்களை அபகரித்து, புதியமுறை காலனியாதிக்கத்திற்கு இந்தியா வழிகோலியுள்ளது என்ற குற்றச் சாட்டை வேளாண் அமைச்சர் சரத் பவார் மறுத்துள்ளார். “சில கம்பெ னிகள் சர்க்கரை உற்பத்திக் கென விளை நிலங்களை வாங்கி, விளைச் சலை சர்வதேசச் சந்தையில் விற்கப் போகின்றன - அவ்வளவு தான்” என்கிறார் அவர்.

இந்தியாவில் விளையும் பாசுமதி அரிசியை மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும். எனவே, பிறவகை அரிசியை சர்வதேசச் சந்தையில் விற்பனை செய்ய ஏதுவாக ஆப்பிரிக்க விளை நிலங்களில் முதலீடு செய்யுமாறு இந்தியாவின் ‘யெஸ் பேங்க்’ முதலாளிகளுக்கு அறிவுரை வழங்குகிறது.

அதேபோல தற்போது இந்தியாவில் மாமிச உணவுக்கான தேவை அதிகரித்துள்ள போதிலும் மாட்டுத் தீவனமாக மக்காச்சோளம் விளைவிக்க இந்திய அரசு உதவி ஏதும் செய்யவில்லை. ஆனால், ஆப்பிரிக்காவில் சோளம் விளை விக்க இந்திய கம்பெனிகளுக்கு இந்திய அரசின் கடனுதவி அளிக்கிறது. எத்தியோப்பியாவில் மட்டுமே இதுவரை இந்தியா 430 கோடி ரூபாய் முதலீடு செய் துள்ளது. விரைவில் இத்தொகை ஆயிரம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற அநியாயமான நில பறிப்பால் எத்தியோப்பியாவில் ஏற்கெனவே பட்டினியால் செத்துக் கொண்டி ருக்கும் மக்களின் நிலை என்ன வாகும்? எத்தியோப் பியாவின் கிழக்கு, தெற்கு பகுதி களில் மட்டு மே 52 லட்சம் மக்கள் உணவுக்காக சர்வதேச சமூகத்தின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக் கிறார்கள். அது மட்டுமல்ல - ஏற்கெனவே சர்வதேச சமூகத்தின் உதவியால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலைத்திட்டம் தான் பட்டினியால் சாகும் அபாயமுள்ள 80 லட்சம் கிராமப்புற மக்களை காப்பாற்றி வருகிறது. கோடிக் கணக்கான மக்களை பட்டினியில் சாகவிட்டுவிட்டு விளைச்சலை அந்நிய முதலாளிகளிடம் விற்பதை என்னவென்று சொல்வது?

பனை எண்ணெய்க்காகவும், தாவர டீசல் எண்ணெய் உற்பத்திக் காகவும் பர்மா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் விளைநிலங்கள் காவு கொடுக்கப் பட்டதால் ஏற்பட்டுள்ள நாசத்தை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

அடுத்தபடியாக நில அப கரிப்பு காரணமாக சூழலியல் பாதிப்புக்கு இரையாகப் போவது அண்டை நாடான பாகிஸ்தான். கத்தார் நாடு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் 16 லட்சம் ஹெக்டேரில் உணவு உற்பத்தியைத் தொடங்க விருக்கிறது. இதனால் 25,000 கிராமங்களில் மக்கள் தங்கள் விளைநிலங்களையும் வாழ் விடங்களையும் விட்டு துரத்தப் படுவார்கள். சவூதி அரேபியாவும் பாகிஸ்தானில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. பாகிஸ்தானின் வேளாண் நிலங் களை கம்பெனிகளுக்கு வாரி வழங்கும் படலம் முஷரப் ஜனாதிபதியாக பொறுப்பிலிருந்த காலத்தில் வேக மெடுத்தது. அதற்கு முன்பே பாகிஸ்தானில் விவசாயம் மிக மோசமான நிலையில் தான் இருந்து வந்தது.

1967இலேயே பாகிஸ்தான் மெக்சிகோவிலிருந்து 47,000 டன் குட்டைரக கோதுமை யின் ‘உயர் தரமான’ விதைகளை இறக்குமதி செய்திருந்தது. (அதற்கு முன் 1966இல் இந்தியா மெக்சிகோ விலிருந்து 18,000 டன் கோதுமை விதையை இறக்குமதி செய்துதான் பசுமைப் ‘புரட்சியை’(!) தொடங்கி யிருந்தது). விவசாயத்தை தாராளச் சந்தை அழிப்பது ஏன், எவ்வாறு என்று ஆராய வேண்டுமானால், அதற்குச் சரியான இடம் பாகிஸ்தான் என்று அந்நாட்டின் பொருளாதார வல்லுனர்களே கூறுகின்றனர்.

தனிநாடுகளின் இந்த நிலைமை தொடர்ந்தால் உலகம் முழுவதிலுமுள்ள நாடுகள் பலவும் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் அபாயநிலை ஏற்படும். இதனைத் தடுக்க சர்வதேச அமைப்புகள் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளன?

உலகெங்கிமுள்ள 16 சர்வ தேச வேளாண் ஆராய்ச்சி நிலை யங்களின் நிர்வாக அமைப்புதான் ‘சர்வதேச வேளாண் ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு’. முதலில் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிலையம் நில அபகரிப்பு நடவடிக்கையில் கம்பெனிகளுக்கு நடைமுறை விதிகளை ஏற்படுத்துவது குறித்துப் பேசியது. இப்போது சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையம் அதிகமாக அரிசி விளைவிப்பதற்காக சவூதி அரேபியாவின் கம்பெனிகளுடன் பல ஒப்பந்தங்களை செய்திருக்கிறது! சர்வதேச வேளாண் ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு சிறு விவசாயிகளுக்கு உதவும் கடமையைக் கைவிட்டு நீண்டகாலமாகி விட்டது. தற்போது பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அமைப்பு உள்ளிட்ட பெருங் குழும முதலாளிகளுக்கு எந்தெந்த நாடுகளில் நிலங்களைப் பறித்து விவசாய உற்பத்தி செய்யலாம் என்று அறிவுரை வழங்கி வருகிறது.

ஒருபுறம் வங்கிகளும், காப்பீட்டுக் கழகங்களும் பெரு முதலாளிகளின் நில அபகரிப்புக்கு எவ்வித உத்தரவாதமும் பெறாமல் கடனுதவி அளிப்பதற்காக சாதாரண மக்களின் சேமிப்புகளை வீணாக்கி வருகையில், மறுபுறம் ஆராய்ச்சி நிறுவனங்கள் அனைத்தும் புவி வெப்பமாதல் பற்றியும் உணவு உற்பத்திப் பெருக்கம் பற்றியும் ஓயாமல் பேசி வருகின்றன. “எதிர்வரும் அபாயத்தை நாம் உணருமுன்பே நம் காலடியில் உள்ள நிலம் கைமாறிப் போயிருக்கும்! எனவே இந்த உணவுக் கொள்ளையர் களிடம் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும்” என்கிறார் உணவுக் கொள்கை ஆய்வாளரான தேவீந்தர் சர்மா.

உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜாக்வெஸ் தியோஃப், “உள்நாட்டின் உணவு மற்றும் பிற வேளாண் பொருட்களின் உற்பத்திக்காக அந்நிய நாடுகளில் நிலம் வாங்கினால் கச்சாப் பொருட்களுக்கான விலையும், அவற்றின் உற்பத்தியாளர்களுக்கான கூலியும் அநியாயமாகக் குறைந்து புதுக் காலனி ஆதிக்கம் ஏற்பட ஏதுவாகும்” என்று கூறினார்.

ஆனால் இதற்கு எதிராக உணவுப் பொருள் வணிகத்துக்கு ஆதரவாக வாஷிங்கடனிலுள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹொவாச்சிம் வான் பிரவுன் பின்வரும் பதிலைக் கூறினார்:

“சர்வதேசச் சந்தையை அண்டியிருப்பதால் இறக்குமதி செய்யும் நாடுகள் விலை உயர்வால் மட்டுமின்றி முக்கியமாக - பொருட் களின் வரத்து தடைப் படுவதாலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அந்நாடுகள் தடையற்ற உணவுப் பொருள் வரத்துக்கு உத்தரவாதம் இருக்க வேண்டுமெனக் கருது கின்றன”.

மேற்கூறியவற்றைப் பார்க் கும்போது, உள்நாட்டு மக்களுக்கான உணவை உற்பத்தி செய்வதற்காக அந்நிய மண்ணில் உற்பத்தி செய்வது ஏற்கெனவே பட்டினிக்கு ஆளான மக்கள் வாழும் ஏழை நாடுகளை மேலும் சுரண்டுவதுதான் என்பது தெளிவாக விளங்கும். நிலங்களைக் கையகப்படுத்தும் பன்னாட்டுக் கம்பெனிகள் வேளாண் உற்பத்தி யை பெரும் லாபத்திற்கு வேறு நாட்டில் விற்பனை செய்வதால், உள்நாட்டில் மக்கள் உணவுக்குப் போதுமான நிலம் இல்லாமல் பஞ்சத்தில் மாள்வதை அறிந்தே இந்த நிலக் கொள்ளைக்கு சுரண்டல்வாத அரசுகள் வழிய மைத்துக் கொடுக் கின்றன. அது மட்டுமின்றி விளை நிலங்களை பன்னாட்டுக் கம்பெனி களுக்கு விற்பனை செய்வது, “வேளாண் உற்பத்தியில் தனியார் முதலீட்டை அதிகளவில் ஊக்கு விக்கும்” என்றும், “பொறுப் புள்ள சர்வதேச வேளாண் முத லீட்டை நல்ல முறையில் ஊக்குவிக்க நடைமுறை விதிகளை உருவாக்க வேண்டும்” என்றும் ஐ.நா. சபையும் உலக வங்கியும் இதற்கு சப்பைக் கட்டு கட்டுகின்றன.

2008ஆம் ஆண்டு வட அமெரிக்காவில் தொடங்கி உல கெங்கும் பாதிப்புகளை ஏற் படுத்திய பொருளாதார நெருக்கடி யின் மோசமான விளைவு களை இன்றுவரை அனுபவித்து வருகி றோம். விளை நிலங்களின் பரப்பளவு குறைவதால் உலகெங்கும் உணவுப் பற்றாக்குறையும் அதி கரித்து வருகிறது. முதலாளிகளுக்கு இந்த இரண்டு பற்றாக்குறைகளும் சேர்ந்து புதியதோர் லாபகரமான தொழிலுக்கு வழியமைத்துள்ளன. பொருளாதார நெருக்கடியால் மலி வாகிவிட்ட விளைநிலம், குறைந்த கூலியில் கிடைக்கும் உழைப்பு, அதிக விலைக்கு விற்கக்கூடிய உணவை விளைவிக்கும் நிலத்தை வாங்கக் கிடைக்கும் கடனுதவி - இவையாவும் பெருமுதலாளிகளை நிலக் கொள்ளைத் தொழிலை நோக்கி கவர்ந்திழுக்கின்றன.

உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், மறுகட்டமைப்புக்கும் வளர்ச்சிக்குமான ஐரோப்பிய வங்கி போன்ற பகாசுர நிதி நிறுவனங்கள் நில அபகரிப்புக்கு பெரும் தொகை களை கடனாக அளிக் கின்றன. இதற்காக அரசுகளை நில உரிமைக் கொள்கைகளை மாற்றியமைக்கு மாறு வற்புறுத்தி வருகின்றன. (அண்மையில் இந்திய அரசு அயல் நாட்டவர் இந்தியாவில் விளைநிலம் வாங்கலாம் என்ற சட்டத்தை முன் வைத்ததும், அதனை எதிர்த்து வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் தஞ்சையில் ஏப்ரல் 17 அன்று தாளாண்மை உழவர் இயக்கம், தமிழக உழவர் முன்னணி, த.தே.பொ.க., மனித நேய மக்கள் கட்சி, இந்திய பொதுவுடைமைக் கட்சி, தஞ்சையிலுள்ள பல்வேறு உழவர் சங்கங்கள் இவை யாவும் ஒன்றிணைந்து தஞ்சையில் எதிர்ப்பு மாநாடு நடத்தியது நினை விருக்கலாம்).

நிலப் பறிப்பில் உலக வங்கி போன்ற கொள்ளை லாபம் ஈட்டும் நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, 2008 பொருளாதார நெருக்கடியில் திவாலாகி, பின்பு வட அமெரிக்க அரசின் நிதி உதவியால் பிழைத்துப் போன மார்கன் ஸ்டான்லி, டாயிச் வங்கி, கோல்ட் மேன் சாக்ஸ் ஆகியவை பெருமளவு முதலீடு செய்துள்ளன. மக்களின் இயல்பான உரிமையாக இல்லாமல் பொருள் படைத்தவரின் தனியுரிமை யாக உணவை மாற்றும் சூதாட் டத்தில் கொழுத்த லாபம் அடை வதற்காக உலகெங்கிலும் விளை நிலங்களை இந்நிறுவனங்கள் அபகரித்துள்ளன.

பஞ்சம் தலைவிரித்தாடும் நாடுகளில் மட்டுமின்றி, தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், அர்ஹென்தினா, உருகுவாய், பராகு வாய் ஆகியவற்றிலும் விளை நிலங்களை வாங்க இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் போட்டியில் இறங்கியுள்ளன. தென் அமெரிக்கா வில் விளை நிலங்களை வாங்குமாறு இந்திய அரசு இந்திய முதலாளிகளை ஊக்குவித்து வருகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நாட்டின் ஏழை விவசாயிகளின் வாழ்வாதா ரமான சிறுதுண்டு நிலங்களை யெல்லாம் பிடுங்கி பெருமுதலாளி களின் வசம் ஒப்படைக்கும் இந்திய அரசு, அதே மக்களின் உணவுத் தேவை யை நிறைவேற்ற வெளி நாடு களில் நிலம் வாங்கும்படி முதலாளிகளை ஊக்குவிக்கிறது. ஒட்டுமொத்த நாட்டின் உணவு உற்பத்தியை நாட்டை ஆளும் பெருமுதலாளி களுக்கு வாங்கித் தரும் தரகு வேலையைத்தான் இந்திய அரசு முழு வேகத்தில் செய்து வருகிறது.

டாட்டாவிற்கு நிலத்தை தாரைவார்க்க சிங்கூரில் மக்களை வேட்டையாடிய மேற்கு வங்க அரசும், அதே டாட்டாவிற்கு தூத்துக்குடியில் நிலத்தை விற்க முயன்ற தமிழ்நாட்டின் அரசும், பீஹார், ஒரிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங் களுக்கு விற்று கமிசனை அள்ளும் இந்திய அரசும், நமது “மக்கள் பிரதிநிதிகள்” தரகு வேலையில் கைதேர்ந்தவர்கள் என்பதையே பறைசாற்றுகின்றன. நாட்டை ஆள்வது காங்கிரஸ் கட்சி அல்ல - கம்பெனிகளே என்றும் உறுதி செய்கின்றன.

தூத்துக்குடியில் டைட் டானியம் ஆக்ஸைட் அகழ்ந் தெடுக்கும் டாட்டாவின் திட்டம் பொதுமக்களின் போராட்டத்தால் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ரகசிய மாக பல பகுதிகளில் ஓசைப் படாமல் நிலம் கையகப் படுத்தப் பட்டு வருவதால் நாட்டி லேயே அதிகமான சிறப்புப் பொரு ளாதார மண்டலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் கீழுள்ள சிங்கூரில் போலீசும் துணை ராணுவப் படைகளும் மக்களை வேட்டை யாடின. தற்போது வடமா நிலங்களில் ராணுவமும் போலீசும் பழங்குடி மக்களை ஒரேயடியாக ஒழித்துக் கட்டிவிட்டு, கனிமங்களை கொள்ளையடிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களை வாரி வழங்க முற்படுகின்றன.

வருகின்ற 10-15 வருடங்க ளில் பருப்பு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற அறிவிப்போடு அரியானா முதலமைச்சர் தலைமை யிலான செயற்குழு ஒன்று அமைக்கப் பட்டது. இக்குழு ஜூன் 6ஆம் நாள் ஒரு வரைவு அறிக்கையை அளித் துள்ளது. இக்குழுவில் மேற்குவங்க முதல்வர், பீகார் முதல்வர், பஞ்சாப் முதல்வர் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வறிக்கை கனடா, அர்ஹென்தினா, ஆஸ்திரேலியா, பர்மா ஆகிய நாடுகளில் நிலம் வாங்கி பருப்பு விளைவிக்க இந்தியக் கம்பெனிகளை ஊக்குவிக்க வேண்டும் என பரிந்துரை செய் கிறது. இதே அறிக்கை எண் ணெய் வித்துகளின் உற்பத்தி யை அதிகரிக்க ஆசிய நாடுகளில் நிலம் அபகரிக்க அறிவுறுத்துகிறது .

நிலப்பறிப்பு அரசியல் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க அரசும் சேர்ந்திருப்பது சீரழிவின் புதிய நிலை; ஆபத்தின் புதிய வளர்ச்சி.

மிகப்பெரும் ஜனநாயக நாடு, வளரும் நாடு என்ற நிலையிலிருந்து வல்லரசாக மாறி சர்வதேச அரங்கில் அந்நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக வல்லரசுகள் மேற்கொள்ளும் அனைத்துவித மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது இந்திய அரசு.

உணவை உற்பத்தி செய்யும் விளைநிலங்களை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரை வார்த்துக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்தாவிட்டால், மண்ணைத் தின்று வாழும் ஹைத்தி மக்களைப் போல, எத்தியோப்பிய மக்களைப் போல நாமும் பட்டினியால் கூட்டங் கூட்டமாக மடியும் நாள் வெகு தூரத்திலில்லை.

எனவே இந்திய விளை நிலங்களை பன்னாட்டு கம்பெனி களுக்கு விற்பனை செய் வதையும், வெளிநாடுகளில் இந்திய கம்பெனி கள் விளை நிலங்களை வாங்கிக் குவிப்பதையும், எதிர்த்து தொடர் போராட்டங்களை முன் னெடுப்பது நமது அவசரமான, அவசியமான கடமை.

ஏனெனில் இவை ஒரே பிரச்சினையின் இரண்டு கூறுகள். வேளாண் வல்லாதிக்கத்தின் இரண்டு முனைகள்.

ஆதாரங்கள்:

1. Food pirates are extending their reach: Africa is an easy target – Devinder Sharma, June 2009.

2. Govt. wants Indians to buy land in South America – Jayenth Jacob, Hindustan Times, May 18, 2010.

3. FAO and World Bank back Food Pirates – Devinder Sharma, Nov 18, 2009.

4. The New Landlords – Indrani Bagchi, Times of India, 26 Sept, 2009.

5. Food Pirates are extending their Tentacles – Pakistan an easy Target – Devinder Sharma, Sept 24, 2009.

6. India joins ‘Neocolonial’ rush for Africa’s Land & Labour – Dean Nelson, The Daily Telegraph, London.

7. Firms buy up African Farms to raise crops that will be ‘sold’ to India – Dinesh C.Sharma, Mail Today, June 25, 2009.

8. Grain Briefing, October 2008: Seized! The 2008 land grab for food and financial security – www.grain.org.

எத்தனை பட்டங்கள் கிடைத்த போதிலும் வெள்ளை சேலையும், சாதாரண பாதனிகளையும் அணிந்து கொண்டிருந்த அன்னை தெரேசா



கருணையின் வடிவம் என்று போற்றப்படும் அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் கொல்கத்தாவில் மிஸனரிஸ் ஒப் செரிட்டி (Missionaries of Charity) தலைமையகத்தில், ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளின் சிறப்பு வழிபாட்டுடன் ஆகஸ்ட் 26. 2010ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று செப்டம்பர் மாதம் 5ம் திகதி அன்னை தெரெசாவின் 13 வது சிரார்த்த தினமாகும்.

“அன்னை தெரெசா இறைவனால் அளிக்கப்பட்ட மதிப்பிட முடியாத ஒரு கொடை. இறைவனால் வழங்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அன்பளிப்புக்காக மனித குலம் இறைவனுக்கு நன்றி சொல்லும் ஒரு ஆண்டாகவே இந்த நூற்றாண்டு விழா அமையும் என தான் நம்புவதாகவும், தனது வாழ்நாள் முழுவதும் அன்போடு மக்களுக்கு அயராத உழைப்பை அன்னை மேற்கொண்டார்", எனவும் புனித பாப் ஆண்டவர் பெனடிக்ட் அவர்கள் அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா ஆரம்பம் குறித்து வெளியிட்டுள்ள தனது செய்தியில் தெரிவித்திருந்தார்.

“அவரது வாழ்வும், மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகளும், தொடர்ந்து இளைஞர்கள், முதியவர்கள், ஏழை, பணக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தும்" என, அன்னை தெரெசாவால் ஏற்படுத்தப்பட்ட மிஸனரிஸ் ஒப் செரிட்டி அமைப்பின் தற்போதைய தலைவியான அருட்சகோதரி நிர்மலா ஜோசி
தெரிவித்திருந்தார்.

அன்னை தெரெசா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய மத்திய அரசு அவரது உருவம் பொறித்த ரூபாய் 5 பெறுமதிமிக்க நாணயத்தை வெளியிட்டுள்ளது.

“ஏழை மக்களுக்கு தொண்டாற்றுவதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர் அன்னை தெரெசா" என்று நாணயத்தை வெளியிட்டு பேசுகையில் இந்திய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். மேலும் ஏழைகளுக்குத் தொண்டாற்ற ஆரம்பித்தபோது தெரெசாவின் கையில் இருந்தது 5 ரூபாய் மட்டுமே. இதை நினைவுகூரும் வகையில் ஐந்து ரூபாய் நாணயத்தில் அவரது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் முகர்ஜி குறிப்பிட்டார்.

அன்னை தெரெசா குறித்த நூற்றாண்டு மலரின் முதல் பிரதியை குடியரசு ஜனாதிபதி பிரதிபா பாட்டேலிடம் முகர்ஜி கையளித்தார். “அன்னை என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர். கடவுள் அனைத்து இடங்களிலும் இருக்க முடியாது. எனவேதான் அன்னை தெரெசா போன்ற கருணை உள்ளம் கொண்டவர்களை படைத்தார். நீல கறை கொண்ட வெள்ளைப் புடவை அணிந்த அவர் மற்றும் கிறிஸ்தவ அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் பல அனாதைகளுக்கும், முதியோர்களுக்கும், வேலையில்லாதவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் நம்பிக்கை அளிப்பவர்களாக திகழ்ந்தனர். அன்னை தெரெசாவின் சிறப்பான சேவைக்காக அவருக்கு 124 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் பாரத ரத்னா விருதும் அடங்கும்" என்று குடியரசு ஜனாதிபதி பிரதிபா பாட்டேல் புகழாரம் சு10ட்டினார்.

மேலும் அன்னை தெரெசாவின் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட அமெரிக்கா அரசு தீர்மானித்துள்ளது. செப்டெம்பர் 5. 2010ம் திகதி இந்த தபால் தலை வெளியிடப்படுமென அமெரிக்காவின் தொடர்பாடல் அமைச்சு அறிவித்திருந்தது. அதேநேரம் உயிருடன் இருந்தபோதே இந்திய தபால் முத்திரையில் உருவம் பதிக்கப்பட்ட முதலாவது நபரும் இவரேயாவார்.

1910 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ஆம் தேதி, மாசிடோனியா Republic of Macedonia நாட்டின் தலைநகராக இருக்கும் ஸ்கோப் Skopje நகரில் அவர் பிறந்தார். அவரது இயற்பெயர் அக்னஸ் கோன்ஜா போயாக்யூ, Agnes Gonxha Bojaxhiu (கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் “ரோஜா அரும்பு" என்று பொருள்) அவர் பிறந்த போது ஸ்கோப் நகரம் அல்பேனியாவில் இருந்தது. 1929 ஆம் ஆண்டு அன்னை தெரெசா இந்தியாவுக்கு வந்தார். பின்பு இந்திய குடியுரிமை பெற்றார். மேற்கு வங்கத்தில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய இவர் செப்டம்பர் 5. 1997இல் (வெள்ளிக்கிழமை) கொல்கத்தாவில் காலமானார். அன்னை தெரெசா இறைவனடிசேரும் போது அன்னாருக்கு வயது 87.

முதுமைப் பருவத்தில் அடிக்கடி நோய்வாய்பட்ட அன்னை அவர்கள் இனி தன்னால் இத்தனைப் பெரிய பொறுப்பை ஏற்று நடத்த முடியாது என்பதை உணர்ந்தார். இளம் வயதில் அன்னையின் அன்பால் கவரப்பட்டு மதம் மாறி அவருடைய கன்னியர் சபையில் சேர்ந்த நேபாளத்தைச் சேர்ந்த அருட்சகோதரி நிர்மலா ஜோசி அவர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்து சபையின் பொறுப்புகள் முழுவதையும் அவரிடம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றின் வழியாக ஒப்படைத்தார். அவர் உருவாக்கிய மிஷனரிஸ் ஒப் செரிட்டியின் தலைமையகத்திலேயே அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவருக்கு புனிதர் பட்டம் வழங்கும் நடவடிக்கையை மறைந்த போப் இரண்டாவது ஜான் பால் 2003 ஆம் ஆண்டில் முன்னெடுத்தார். அக்டோபர் 19, 2003 ல் அன்னை தெரேசாவிற்கு "அருளாளர் பட்டம்" அளிக்கப்பட்டது.

ஸ்கோப் நகரில் நிக்கல் - டிரானா போயாக்யூ தம்பதியரின் இளைய புத்திரியே அக்னஸ். இவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார். 1919 இல், அரசியலிலிருந்து விலகிய அவர் நோய்வாய்ப்பட்டு, அக்னஸ{க்கு எட்டு வயதாயிருக்கும் போது காலமானார். தந்தையின் மரணத்திற்குப் பின், தாயார் அவரை ரோமன் கத்தோலிக்கராக வளர்த்து வந்தார்.

“ஜோன் கிராப்"ஸின் வரலாற்றுக் குறிப்புகளின்படி குழந்தைப் பருவத்தில் அக்னஸ் மதப்போதனையினாலும் சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதில் இறைபணியில் தன்னை அர்ப்பணிப்பதற்குத் தீர்மானித்தார். பன்னிரண்டு வயதில் இறைபணியில் தன் கனவை முன் வைத்த போது "சின்னவள் நீ, பக்குவமற்றவள்" என்று தாய் வழிகாட்டியுள்ளார்.

தனது பதினெட்டாம் வயதில் அவர் வீட்டை விட்டு வெளியேறி, லொரேட்டோ சகோதரிகளின் சபையில் மத பிரசாரகராக தன்னை இணைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு தனது தாயையோ அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தியாவின் பள்ளிக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க லொரேட்டோ சகோதரிகள் பிரயோகிக்கும் மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்காக, அயர்லாந்தின் ரத்ஃபர்ன்ஹாமில் உள்ள லொரேட்டோ கன்னியர் மடத்திற்கு முதலில் சென்றார்.

1929 ஆம் ஆண்டு அவர் இந்தியா சென்று, இமய மலை அருகே உள்ள டார்லிங்கில் தனது கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்தார். மே 24.1931 இல் “வாக்குத்தத்தம்" எடுத்துக் கொண்டு அருட்சகோதரியானார். அவ்வமயம் மதபிரசாரகர்களின் காவல் புனிதரான ‘தெரேசா டி லிசியு"வின் பெயரைத் தனக்குத் தெரேசா எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். கிழக்குக் கொல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது இறைபணியை ஆரம்பித்தார். கிழக்குக் கொல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது அர்ப்பணிப்பு பிரமாணங்களை 1937 மே 14 ஆம் தேதி எடுத்துக் கொண்டார்

சுதந்திரம் பெறும் முயற்சியில் தீவிரமாக வெள்ளையர்களுடன் இந்தியர்கள் போராடி வந்த காலகட்டத்தில் நாளாந்த உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கும், விதவைகளுக்கும் பராமரிப்பின்றி தத்தளிப்பவர்களையும், நோயால் வாடுகின்றவர்களையும் நேசிக்க ஆரம்பித்தார் அன்னை தெரேசா. இந்திய நாட்டிற்கு அளப்பரிய சேவையாற்றியமைக்காக 1948 ஆம் ஆண்டு இந்தியா அரசு குடியுரிமை வழங்கியது.

பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிப்பதை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சு10ழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமதிகமாய் கலங்கச் செய்தது. 1948 இல் ஏழைகளுடனான தனது ஊழியத்தை ஆரம்பித்தார். பாரம்பரிய லொரேட்டோவின் அங்கியைக் களைந்து, நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் நடமாடினார்.

தொடக்கத்தில் மோதிஜில்லில் பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர், பட்டினியால் வாடுவோர் போன்றவர்களின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அவரது முயற்சிகள் விரைவிலேயே இந்தியப் பிரதமர் உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதலைப் பெற்றுத்தந்தன.

தெரேசா தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் கஸ்டங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் சௌகர்யத்திற்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் எழுதியிருந்தார்.

1950 அக்டோபர் 7 ஆம் தேதி அன்னை தெரெசாவின் தலைமையில் மிஸனரிஸ் ஒப் செரிட்டி இல்லம் (Missionaries of Charity) ஸ்தாபிக்கப்பட்டது. தூய்மையான பணிக்கு எடுத்துக் காட்டாக நீல நிறக்கரையுடன் கூடிய வெள்ளை கைத்தறிச் சேலையை அணிந்தார். அன்னையுடன் முதன் முறையாக இணைந்து கொண்ட சுபாஸினிக்கு தனது இயற்பெயரைச் சு10ட்டினார். இந்தியாவின் கொல்கத்தாவில் ஏழை மக்களுக்கும், சிறார்களுக்கும் பெரும் உதவி புரிந்த அன்னை தெரெசா அங்கு ஆசிரமம் ஒன்றையும் அமைத்து செயற்பட்டார். இதில் நோயாளிகளுக்குத் தன்னாலான தொண்டுப் பணிகளை முன்னெடுத்தார்.

மிஸனரிஸ் ஒப் செரிட்டி இல்லம் (Missionaries of Charity) பிற்காலத்தில் உருவெடுக்கப் போகும் பங்குக் குழுமத்தை ஆரம்பிக்க தெரெசாவுக்கு வத்திக்கானின் அனுமதி கிடைத்தது. செரிட்டியின் கடமையாக அன்னை கூறியது, "உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள், வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், தொழு நோயாளிகள் போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும், கவனிக்கப் படாதவர்களெனவும் எண்ணிக்கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப் பட்டவர்களையும் கவனித்தலே ஆகும்." கல்கத்தாவில் 13 உறுப்பினர்களைக் கொண்ட சிறியதொரு அமைப்பாகவே இது ஆரம்பிக்கப்பட்டது. இன்று 4000க்கும் மேலான அருட்சகோதிரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்களையும், எய்ட்ஸ் நல்வாழ்வு மையங்களையும், தர்ம ஸ்தாபனங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்காக வியாபித்துக் காணப்படுகிறது.

கத்தோலிக்க கன்னியாஸ்திரியான அன்னை தெரெசா நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டே, முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஸனரிஸ் ஒப் செரிட்டியை விஸ்தரித்தார்.

50 ஆண்டுகள் ஏழை - எளியவர்களுக்குத் தொண்டுப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். அன்னை தெரேசாவின் அன்பின் பணியாளர் சபை, அவர் மரணத்த வேளை, 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக் கொண்டிருந்தது. இதில் எச் ஐ வி/எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள் மற்றும் இல்லங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் அடங்கும்.

1970 களுக்குள் இவர் சிறந்த பரோபகாரி எனவும் ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்று உலகம் முழுவதும் புகழப்பட மேல்கம் முக்கெரிட்ஜ் இன் “சம்திங்க் பியுடிஃபுல் ஃபார் காட்" என்ற விளக்கப்படமும் ஒரு காரணமாகும் எனப்படுகிறது. அன்னையின் தொண்டூழியம் அனைத்து எல்லைகளையும் கடந்து செரிந்தது, சிறந்தது. அதனால் அவர் உலகப் பிரஜையாக உன்னத ரதத்தில் பவனி வந்தார். அவரைப் பாராட்டாத நாடுகளில்லை, தலைவர்கள் இல்லை. அவர் பெறாத விருதுகளில்லை. அன்னை தெரெசாவின் சிறப்பான சேவைக்காக அவருக்கு சுமார் 124 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் பெற்ற சில விருதுகளும் பரிசுகளும் பின்வருமாறு:

1962-ல், பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்ஸின் “ரமோன் மேக்சேசே” விருது.

1964-ல், மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்திருந்த போப்பாண்டவர் தாம் பயன் படுத்திய வெண்ணிறக் காரை அன்னைக்கு பரிசாக அளித்தார். அன்னை அதை ஏலத்தில் விட்டு கிடைத்த பணத்தில் கொல்கொத்தா சாந்தி நகரில் தொழுநோயாளிகளுக்கென மருத்துவ மனை ஒன்றைக் கட்டினார்.

1971-ல், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ‘Good Samaritan’ விருதும், ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் மனிதாபிமானத்திற்கான டாக்டர் விருதும்.

1971-ல், அருட் தந்தை ஆறாம் சின்னப்பர், சமாதானத்துக்கான முதல் அருட் தந்தை 23 ம் அருளப்பர் பரிசை, அவரது ஏழை எளியோர் சேவையையும் கிறிஸ்துவ தர்ம பறைசாற்றலையும், சமாதான முயற்சியையும் பாராட்டி அவருக்கு அளித்தார்.

1972-ல், அமைதி விருதான "நேரு" விருது

1976-ல், விசுவ பாரதி பல்கலைக் கழகத்தின் ‘தேசி கோத்தமா" விருது

1978-ல் இங்கிலாந்து அரசின் ‘தலை சிறந்த குடிமகன்' விருது

1979-ல் நோபல் பரிசு
அன்னை தெரேசா சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார். சமாதானத்தின் அச்சுறுத்தல்களாக விளங்கும், ஏழ்மையையும், துயரத்தையும் வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக அவ்விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற நோபல் பரிசு பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய விழா விருந்தை மறுத்த அவர் தனது பரிசுத்தொகையான 192,000 பவுண் நிதியை இந்தியாவின் ஏழைகளுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அவர் கொடுத்த காரணம் "இவ்வுலக விருதுகள் உலகத்தின் ஏழைகளுக்கு உதவ வழிகோலும் பட்சத்தில் மட்டுமே முக்கியமானதாகக் கருதப்படும்" என்பதே. அன்னை தெரேசா பரிசை பெற்ற பொழுது அவரிடம், "உலக சாமாதானத்தை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?", என்றுக் கேட்டனர். அதற்கு அவர், "வீட்டிற்கு போய் உங்கள் குடும்பத்தை அன்பு செய்யுங்கள்" என்று கூறினார். இக்கருத்தை வலியுறுத்தி தனது நோபல் நன்றியுரையில் . "உலகம் முழுவதும் ஏழை நாடுகளில் மட்டுமல்ல, மேற்க்கத்திய நாடுகளிலும் கூட ஏழ்மையானது அகற்றுவதற்கு மிகக் கடினமானதாகவே இருக்கிறது" என்றுரைத்தார். "தெருவில் பசித்திருக்கும் மனிதன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனுக்கு ஒரு தட்டு சாதமோ, ஒரு ரொட்டித்துண்டையோ கொடுத்து நான் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். அவனது பசியைத் நான் தீர்த்து விட்டேன். ஆனால் வெளியேற்றப்பட்ட ஒரு மனிதன், யாருக்கும் தேவையற்றவனாக, அன்பு செய்யப்படாதவனாக, கலங்கியவனாக, சமுதாயத்தை விட்டு ஒதுக்கப்பட்டவனாக இருக்கும் போது அத்தகையதொரு ஏழ்மையே என்னை அதிகம் பாதிக்கிறது. அதையே நான் மிகக் கடினமாக உணர்கிறேன்."

1980-ல், மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் மிக உயர்ந்த விருதான இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான “பாரத் ரத்னா" விருது

1981-ல், ஹெய்டி ஆட்சியாளரான ஜியாண்-குளோட் டவலியரினால் “லெஜென் டி ஹொனர்" (Legion d’Honneur) என்ற விருது.

1982-ல், ஆஸ்திரேலியாவின் “கௌரவ தோழர்" விருது.

1983-ல், BART MARANCH THE ORDER OF MERIT என்ற பிரிட்டிஸ் அரசி எலிசபெத்திடம் இருந்து பெற்ற விருது

1985-ல், அமெரிக்க ஜனாதிபதி ரோனல்ட் ரீகன் அன்னை தெரெசாவுக்கு சுதந்திரத்துக்கான ஜனாதிபதியின், பதக்கத்தை வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் வழங்கி கௌரவித்தார்.

1991-ல், குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனிடம் இருந்து பெற்ற “பாரதிய வித்யா பவன்" விருது

1992-ல், “பாரதத்தின் தவப் புதல்வி" விருது மற்றும் “பாரத சிரோமணி" விருது

1993-ல், ரஷ்ய அரசின் உலகப் புகழ் பெற்ற ‘லியோ டால்ஸ்டாய்" விருது

1994-ல், அல்பேனிய நாடு அவருக்கு தேசத்தின் தங்க மரியாதையை அளித்து கௌரவப்படுத்திய தோடல்லாமல், 1991-ல் குடியுரிமையும் அளித்திருந்தது.

1995-ல், கொல்கொத்தாவின் “நேதாஜி விருது" மற்றும் “தயாவதி மோடி" அறக்கட்டளை விருது

1996-ல், ‘அனைத்துலக நம்பிக்கை ஒற்றுமை' விருது.

1996-ல், நவம்பர் 16, அன்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டன் அமெரிக்க கௌரவ பிரஜா உரிமையை வழங்கினார்.

1997-ல், அமெரிக்க காங்கிரஸ் “தங்கப்பதக்கம்" வழங்கியது.

2003-ல், அக்டோபர் 19ம்திகதி "அருளாளர் பட்டம்" திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வத்திக்கான் நகரில் அறிவித்தார்.

அவரது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992 ல் வெளியிடப்பட்டது.

எத்தனை பட்டங்கள் கிடைத்த போதிலும் வெள்ளை சேலையும், சாதாரண பாதனிகளையும் அணிந்து கொண்டிருந்த அன்னை தெரேசா தன்னை புகழ்வோரிடமெல்லாமல் எப்போதும் சொல்லும் வார்த்தை, ‘I am nothing. I am just a tool in the hands of God!’ என்பதுதான்.

புன்னியாமீன்

Monday, September 6, 2010

வேடிக்கையாகும் அரசின் சலுகை - குவாட்டர் கட்டிங்



இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு சலுகை இருப்பதாக‌த் தெ‌ரியவில்லை. ஒட்டுமொத்த பூலோகத்திலும் இப்படியொரு புரட்சி நடந்ததாக கேள்வியில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வ‌ரி விலக்கு என்ற வேடிக்கையான சலுகை நடைமுறையில் உள்ளது.

மேலோட்டமாகப் பார்த்தால் தமிழை வளர்க்க அரசு எடுத்துக் கொண்ட அபாரமான முயற்சி இது என்று தோன்றும். அப்படி தோன்றும் என்பதாலேயே கொடுக்கப்பட்ட சலுகைதான் இது என்பதையும் இங்கு நினைவுகூர வேண்டும்.

இந்தச் சலுகையால் படம் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு எவ்வித பலனும் இல்லை. அதாவது வ‌ரிச்சலுகை நீங்கள் வாங்கும் டிக்கெட் கட்டணத்தில் பிரதிபலிக்காது. மாறாக அந்த‌ச் சலுகையின் முழுப் பயனையும் திரையரங்க உ‌ரிமையாளரே அனுபவிப்பார். இது பற்றி சாச்சை கிளம்பிய போது, இல்லையில்லை தயா‌ரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் கூட இதில் பங்குண்டு என்று சொல்லப்பட்டது. யாருக்கு பங்கு இருப்பினும் பெரும்பான்மையான பொது மக்களுக்கு அதாவது படம் பார்க்க வரும் ரசிகனுக்கு இதனால் ஒரு பயனும் இல்லை.

இந்த பாரபட்ச சலுகை சில மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தி வருகிறது. ஒருவர் தனது படைப்புக்கு எந்த‌ப் பெயரை தேர்வு செய்வது என்பது அவரது தனிமனித சுதந்திரம் தொடர்பானது. சன் பிக்சர்ஸ், கிளவுட் நைன் என்றெல்லாம் பெயர் வைப்பது போல் ஒருவர் தனது திரைப்படத்துக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க விரும்பினால் அதனை இந்தச் சலுகையை அனுபவித்து வருகிறவர்கள் கறாராக மறுத்துவிடுகின்றனர். அதேநேரம் சலுகையின் பயன் ரசிகனுக்கு கிடைக்கும்படி செய்திருந்தால் ஒரு கலைஞனின் பெயர் வைக்கும் உ‌ரிமை பேணப்பட்டிருக்கும். காரணம் அதிகபடியான கட்டணத்தை ரசிகனே தந்துவிடுவான். திரையரங்க உ‌ரிமையாளர்கள் பாதிப்படைய மாட்டார்கள்.

அரசின் இந்தச் சலுகையால் அருமையான பல தமிழ்ப் பெயர்களை நாம் பார்க்க முடிகிறது. குட்லக், லேடீஸ், பாய்ஸ் என்றெல்லாம் அந்நிய மொழி மோகத்தில் பெயர் வைப்பது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதனை சலுகையின் வழியாகதான் உருவாக்க முடியுமா என்பதுதான் கேள்வி. சென்னை மாநக‌ரில் உள்ள அனைத்து வியாபார நிறுவனங்களின் பெயர்களும் - மல்டிநேஷனல் கம்பெனிகளுக்கு இதிலும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக கேள்வி - தமிழில் மாற்றப்பட்டுள்ளன. காபி ஸ்டால் என்பதை கொட்டை வடிநீர் நிலையம் என்றுவரை தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு சலுகை எதுவும் அளிக்கவில்லை. கறாரான ஒரு ஆணையின் மூலம் இதனை சாத்தியமாக்கியிருக்கிறார்கள். ஒரு ஆணை மூலம் சாத்தியமாகக் கூடிய விஷயத்திற்கு சலுகை என்ற பெய‌ரில் அரசு வருமானம் மடை மாற்றப்பட்டிருக்கிறது.

தமிழில் வைக்கப்படும் பெயர்களின் அரசியல் இன்னொரு வகை. இலக்கணப் பிழை என்றொரு படம். அற்புதமான தமிழ்ப் பெயர். ஆனால் படத்தின் கதையும், நோக்கமும் சதையை பிரதானப்படுத்துபவை. வித்தியாசமான கதை, வித்தியாசமான முயற்சி என்றெல்லாம் சினிமாக்காரர்கள் வித்தியாசத்தை விதவிதமாகப் பிழிந்தெடுத்து, வித்தியாசம் என்ற சொல்லையே ஒரு கெட்டவார்த்தை ஆக்கியது போல, நல்ல பல தமிழ்ப் பெயர்களும் இவர்களின் கதை காரணமாக சாயம் இழந்து போகின்றன. அது எப்படி சாயம் இழந்து போகும் என்று சிலர் கேட்கலாம். ஷகிலா என்பது அருமையான பெயர். ஆனால் அதனை தங்கள் குழந்தைக்கு வைக்க தமிழக தாய்மார்கள் யோசிக்கிறார்களே... அதுபோலதான் இதுவும்.

இந்த‌ச் சலுகையை கேலி செய்வதுபோல் படத்தின் பெயருக்கு கீழேயே சப் டைட்டில் என்ற ஒன்று வைக்கப்படுகிறது. இந்த சப் டைட்டில்கள் என்பவை சட்டம் எதுவும் போடாமலே தனி ஆங்கிலத்தில்தான் வைக்கப்படுகிறது. தி பாஸ், சர்வைவல் ஆஃப் பிட்டஸ்ட், ஒன் மேன் ஆர்மி, காட் ஒன்லி ஜட்‌ஜ் ஹிம்... சொல்லிக் கொண்டே போகலாம்.

முன்பு சப் டைட்டில்கள் கடுகு அளவில் இருந்தன. பிறகு படத்தின் பெயர் அளவுக்கு பெ‌ரிதாக வைத்தார்கள். இப்போது சப் டைட்டில்தான் பிரதானம். படத்தின் பெயர் கடுகு அளவுக்கு சிறுத்துவிட்டது. இந்த மோசடியை யாரும் கண்டு கொண்டதாக‌த் தெ‌ரியவில்லை.

கிளவுட் நைன் நிறுவனமும், ஒய் நாட் நிறுவனமும் (ஆகா, என்ன அருமையான தமிழ்ப் பெயர்கள்?) இணைந்து ஒரு படத்தை தயா‌ரித்துள்ளன. இந்தப் படத்தின் விளம்பரங்களில் குவாட்டர் பாட்டிலும் குவாட்டர் கட்டிங் என்ற எழுத்துக்களுமே பிரதானமாக தெ‌ரிகின்றன. ஆனால் இந்தப் படத்தின் பெயர் குவாட்டர் கட்டிங் இல்லையாம். பிறகு? வ என்று ஓரெழுத்தை போனால் போகிறது என்று ஓரமாக போடுகிறார்கள். அதுதான் படத்தின் பெயராம். சலுகைக்கு வ, சந்தோஷத்துக்கு குவாட்டர் கட்டிங்.

ஆங்கில பெயர்களுக்கோ, ஆங்கிலத்தில் வைக்கப்படும் துணைப் பெயர்களுக்கோ, அரசின் தமிழ்ப் பெயர் மீதான க‌ரிசனத்துக்கோ... ஏன் குவாட்டர் கட்டிங்குக்கோ கூட நாம் எதி‌ரியல்ல. ஆனால் அரசின் சலுகை எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதன் அவுட் லைன்... அதுதான் வேடிக்கை.
http://www.tamilnetwork.info/2010/09/tamil-cinema-title-vs-tax-exemption-hot.html

Sunday, September 5, 2010

கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி



போன ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி அன்று பிரசுரித்தேன். இப்போதும் அதே காரணத்திற்காகத்தான் மீண்டும் பிரசுரிக்கிறேன்
பெரியாரும் பெரியார் இயக்கத்தவர்களும், “கடவுள் பயல்களிலேயே களவானிப்பய கண்ணன்தான்” என்று பலமுறை அவனது லீலைகளை அம்பலப்படுத்தியப் பிறகும் கூட பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாத பக்தக் கோடிகளும் தங்களின் மூடநம்பிக்கைகளின் மீது மிகுந்த ‘நம்பிக்கை’யாக இருக்கிறார்கள்.

சில தமிழ்தேசியவாதிகளும், பார்ப்பனரல்லாத கடவுள்களின் நம்பிக்கையாளர்களுமான சில ‘நாத்திகர்களும்’ ஈவ்டீசிங் பேர்வழியான கண்ணனை ‘யாதவர்’ என்றும் அவன் ‘பார்ப்பனர் கிடையாது அதனால்தான் அவன் கருப்பாக இருக்கிறான். மாகாகவி பாரதிகூட அதன் காரணத்தால்தான் கண்ணனை சிலாகித்தான்’, என்றும் ‘கோனார்’ உரை எழுதுகிறார்கள்.

கண்ணன் அல்லது கிருஷ்ணன் பார்ப்பானோ இல்லை பார்ப்பனரல்லாதவனோ, அவன் தூக்கி நிறுத்தியது பார்ப்பனியத்தை. அதனால்தான் அவனை பார்ப்பனர்களும் கொண்டாடுகிறார்கள். ‘நானே நாலு வர்ணத்தை உண்டாக்கியவன்’ என்று ஒரு அசிங்கத்தை அதிகாரத்தோடு சொன்ன காரணத்திற்காகத்தான், அய்யங்கார் அல்லது வைணவ கடவுள் கண்ணனை, அய்யர் பாரதியும் கொஞ்சி குலாவுகிறார். பெருமாளை வணங்காத அயயர்கள்கூட கண்ணணை வணங்கும் ரகசியமும் அதுவே.

ஒருவேளை பார்ப்பனரல்லாத அறிஞர் பெருமக்கள், தங்களின் கூர்மையான அறிவினால் துப்பறிந்து, ‘கண்ணன் பிறப்பால் பார்ப்பனரல்லாதவன்தான், அதுவும் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்’ என்று நிரூபித்தாலும்கூட, இல்லை அதுவே உண்மையாக இருந்தாலும்கூட அதனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சமூகத்திற்கும் என்ன பயன்? அவமானம்தான்.

அவன் பிறப்பால் என்னவாகப் பிறந்தானோ? ஆனால் தன் செயலால் அவன் பார்ப்பானராகவே உயர்ந்து நிற்பதால், நிச்சயம் அவன் பார்ப்பனர்தான்.

அன்றைக்கு சத்ரியனாக அவதரித்த ராமன், பார்ப்பன நலனுக்காக பாடுபட்டதினால்தான் இன்றைக்கும் பார்ப்பனர்கள் ராமனை கடவுளாக போற்றுகிறர்கள்.

இன்றைக்கு பார்ப்பனர்களின் இந்திய கதாநாயர்கள் யார் தெரியுமா?

பார்ப்பனரல்லாத மோடியும், அத்வானியும்தான்.

***

களவானித்தனம் மற்றும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டாலும், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக்கொ யாத தொல்லை’ என்று கடவுள் கண்ணனின் பொறுக்கித் தனத்தை பாடல் எழுதி பெருமைபட்டுக் கொண்ட பாரதி போன்ற பக்தர்களுக்கு பச்சைக் குழந்தையாகவே காட்சியளிக்கிற, பார்ப்பனர் பார்ப்பனரல்லாதவர்களின் கவர்ச்சிகக் கடவுளான கிருஷ்ணனை பற்றி டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார்:

“கிருஷ்ணன் என்ற பெயரில் நான்கு பேர் இருக்கிறர்கள். ஒரு கிருஷ்ணன், சத்யவதியின் மகன். திரிதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகியோரின் தந்தை. இரண்டாவது கிருஷ்ணன், சுபத்ராவின் சகோதரன், அர்ஜுனனின் நண்பன். மூன்றாவது கிருஷ்ணன், வசுதேவர், தேவகி ஆகியோரின் மகன், மதுராவில் வசித்தவர். நான்காவது கிருஷ்ணன் கோகுலத்தில் நந்தனாலும் யசோதாவாலும் வளர்க்கப்படடவர்; இவர்தான் சிசுபாலனை கொன்றவர்.”

“பிரமா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் வழிபாட்டுடன் ஒப்பிடும்போது கிருஷ்ணன் வழிபாட்டில் ஒரு செயற்கைத் தன்மை காணப்படுகிறது. பிரமா, விஷ்ணு, மகேஸ்வரன் கடவுள்களாகவே பிறந்தவர்கள். கிருஷ்ணன் மனிதனாகப் பிறந்து கடவுளாக உயர்த்தப்பட்டவர்.”

“கிருஷ்ணனின் தொடக்க நிலை இப்படி அடக்கமானதாயிருந்தாலும், அவர் எல்லோருக்கும் மேலாக உயர்ந்த கடவுள் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டவர் ஆனார்.”

“எனவே பகவத் கீதையைப் பொறுத்த மட்டில் கிருஷ்ணனைவிடப் பெரிய கடவுள் யாரும் இல்லை என்பது தெளிவாகிறது. அவர் அல்லா ஹு அக்பர். அவர் மற்ற எல்லாக் கடவுள்களையும் விடப் பெரியவர்”

இப்படி ஹாலிவுட் மேக்கப் மேனின் உதவியே இல்லாமல் பல வேடங்களில் வந்து கமல்ஹசனையே தூக்கிச் சாப்பிடுகிற கிருஷ்ணனின் யோக்யதை எப்படிப்பட்டது? என்பதை டாக்டர் அம்பேத்கர் விவரிக்கிறார்:

“கிருஷ்ணனுடைய அநாகரிகமான அநேக காரியங்களுள் மிகக் கேவலமானது என்னவெனில் அவன் இராதா என்ற கோபியருடன் கொண்ட முறைகெட்ட வாழ்க்கையாகும். கிருஷ்ணன் இராதாவுடன் கொண்டிருந்த தொடர்பினைப் பற்றிப் பிரம்ம வர்த்த புராணத்தில் வருணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.”

“இராதாவோ ஏற்கனவே மணமானவள். முறைப்படி மணந்த ருக்மணியை கைவிட்டுவிட்டு வேறொருத்தன் மனைவியான இராதாவுடன் கிருஷ்ணன் வாழ்க்கை நடத்துகிறான்.”

“கிருஷ்ணன் மாவீரன் மாத்திரமல்ல; இளம்வயது முதலே மிகச் சிறந்த அரசியல் வித்தகன் எனவும் சொல்லப்படுகிறது. போர் வீரனாகவோ அல்ல அரசியல் வாதியாகவோ அவன் செய்த ஒவ்வொரு காரியமும் அறத்திற்கு மாறானவை. அந்த வகையில் அவன் செய்த முதற்காரியம் தன் சொந்த தாய்மாமனான கம்சனைக் கொன்றதாகும். அப்போது கிருஷ்ணனுக்கு வயது பன்னிரெண்டுதானாம்”

“கிருஷ்ணன் கம்சனைப் போர்க்களத்திலோ அல்லது தனிப்பட்ட முறையில் சண்டையிட்டோ கொன்றிடவில்லை.”

“மதுராபுரியை வந்தடைந்தவுடன் (கம்சனை கொல்வதற்கு) தாம் அணிந்திருந்த சாதாரண ஆயர் உடையை மாற்றிச் சற்று நாகரிகமான உயைணிந்து கொள்ள கிருஷ்ணனும் அவனுடைய சகோதரர்களும் விரும்பினர். அவ்வழியே வீதியில் வந்த கம்சனனின் சலவைக்காரரிடம் மிரட்டித் துணி கேட்டனர். அவன் திமிரா நடந்து கொண்டதால் அவனைக் கொலை செய்துவிட்டு, அவன் சுமந்துவந்த துணி மூட்டையிலிருந்து தாம் விரும்பிய துணிகளை எடுத்துக் கொண்டனர்.

பிறகு கம்சனுக்கு வாசனைத் திரவியங்களைப் பூசும் குப்ஜா என்ற பெண்ணைச் சந்திக்கின்றனர். குப்ஜா ஒரு கூனி. அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க அவள் மணங்கமழும் சந்தனக் குழம்பைப் பூசி விட்டாள். பதிலுக்கு கிருஷ்ணன் கூன் விழுந்த குப்ஜாவின் முதுகை குணப்படுத்தினானாம்.

வேறோர் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணன் குப்ஜாவைச் சந்திக்க நேர்ந்தபோது வழக்கம் போல தகாத முறையில் குப்ஜாவுடன் உடலுறவு கொண்டதாகப் பாகவதம் சொல்கிறது. (பன்னிரெண்டு வயசு பையன் பண்ணற வேலைய பாத்திங்களா?-வே. மதிமாறன்) இருப்பினும் இந்தச் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் குப்ஜா வாசனைத் திரவியங்களைப் பூசினாள்.”

“ருக்மணியைத் தொடர்ந்து பெரும் மந்தையே கிருஷணனின் மனைவிக் கூட்டமானது. கிருஷ்ணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை பதினாறாயிரத்து ஒரு நூற்றெட்டு பேர்கள். அவனுடைய குழந்தைகளின் எண்ணிக்கையோ ஒரு லட்சத்து எண்பாதாயிரம் பேர்கள்.”

நிர்வாணமாக்கி ஊர் பெண்கள் மானத்தை எல்லாம் வாங்கிய கிருஷ்ணன், மகாபாரதத்தில் பாஞ்சாலியின் மானம் காக்க உடைகொடுத்ததானம்! பாஞ்சாலியின் மானம் காத்தது இருக்கட்டும், இங்கே டாக்டர் அம்பேத்கரின் வாதத்திறமையின் முன்னால் அவன் மானம் போகிறேதே என்ன அவதாரம் எடுத்து ‘தன் மானத்தை’ காப்பற்ற முயற்சிப்பான், கிருஷ்ணன். என்ன பதில் சொல்லி கிருஷ்ணனின் ‘மானம்’ காப்பார்கள் பக்தர்கள்.

விசித்திரமானது இந்து மதம். வேடிக்கையாக இருக்கிறது இந்துக்களின் இறைநம்பிக்கை.

‘ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுக்கமாக வாழ்ந்தான் ராமன் அதற்காகத்தான் அவனை வணங்குகிறோம்’ என்கிறார்கள் இந்துக்கள். அவர்களேதான், பாலியல் நோய் வந்து பாதிக்கப்பட்டிருக்க வேண்டிய அளவிற்கு சகமேட்டுமேனிக்கு பல பெண்களோடு உறவு கொண்ட, கொலைபோன்ற கிரிமனல் குற்றங்களுக்காக சிறுவர் சீர்திருத்த்தப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டிய கிருஷ்ணனையும் தெய்வமாக தொழுகிறார்கள்.

ஒழுக்கம் குறித்து தனிவாழ்க்கையில் அதிகம் பேசுகிற இந்துக்கள், தங்களின் கடவுள் பொறுக்கியாக இருந்தாலும் அதனை பூரிப்போடு ஏற்றுக் கொள்கிறார்கள்.

இந்துக்களின் இறைவழிபாட்டில் இருக்கிற இந்த முரண்பாட்டை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை. டாக்டர் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் புரியவைத்தால் அதை புரிந்து கொண்ட பின் அதற்காக அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை. இந்து மதம் இந்துக்களை சுயமரியாதையும், சுயஅறிவும் அற்றவர்களாகவே உருவாக்கி வைத்திருக்கிறது.

இந்துக்களாக அடையாளப்படுத்தப்பட்டு, முட்டாள்களாக, சூத்திரர்களாக நடத்தப்படுகிற, அவமரியாதைக்குள்ளாகிற பிற்படுத்தப்பட்டவர்களின் சுயமரியாதைக்காக பார்ப்பனிய தந்துவங்களோடு நேருக்கு நேர் மோதிய டாக்டர் அம்பேகத்ரை, அவமதிக்கிறார்கள், சுயமரியாதையற்ற சூத்திரர்கள்.

‘நான் யாருக்கும் அடிமையில்லை

எனக்கடிமை யாருமில்லை’


என்ற நூலிலிருந்து…….

ஆசிரியர் வே. மதிமாறன்

விலை ரூ. 45

கிடைக்குமிடம்:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 337384

--

Saturday, September 4, 2010

டி.ஆர்.பாலு சிங்களவர்: கவிஞர் தாமரை



டி.ஆர்.பாலு தமிழரோ, இந்தியரோ அல்ல, அசல் சிங்களவர் என்பதைத்தான் அவர் அளித்துள்ள பேட்டி வெளிப்படுத்துகிறது என, கவிஞர் தாமரை கூறியுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் இதழுக்கு, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அளித்துள்ள பேட்டி குறித்து, கவிஞர் தாமரை கூறியிருப்பதாவது,

தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தமிழரா, இந்தியரா என்ற குழப்பம் அவருக்கே இருக்கும். இதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை. அவர் தமிழரோ, இந்தியரோ அல்லர், அசல் சிங்களவர் என்பதைத்தான் அவர் அளித்துள்ள பேட்டி வெளிப்படுத்துகிறது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு இந்தியா வழங்கும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரனாக இந்தியா செயல்பட முடியாது என்றும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள இராணுவ குடியிருப்புகள் அமைப்பது தொடர்பாக ஆதாரமில்லாமல் குறைசொல்ல முடியாது என்றும் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.


அவரது இந்த பேட்டி நமக்கு மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் தி.மு.க. தலைமைக்கே வியப்பை அளித்திருக்கக் கூடும். அப்படி இல்லையென்றால் எல்லோரும் சேர்ந்து நாடகமாடுகிறார்கள் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும். இந்திய உதவிகளை கண்காணிக்க சிறப்பு தூதரை அனுப்பவேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்துகிறார். ஆனால் இது போலீஸ்காரன் வேலை என டி.ஆர்.பாலு சொல்கிறார்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவ குடியிருப்புக்கள் அமைக்கப்படுவதை நடுநிலையாளர்கள் பலரும் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழர் பகுதிகளில் புதிய புதிய ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதையோ, பழைய உயர் பாதுகாப்பு வலயங்கள் நீடித்து வருவதையோ சிங்கள

அரசே மறுக்கவில்லை. ஆனால் டி.ஆர்.பாலு இதற்கு ஆதாரம் வேண்டுமென்று கேட்கிறார். இவரும்

இவரது குழுவினரும் ராஜபக்சேவிருந்தாளிகளாக இலங்கை சென்றபோது போய்ப் பார்த்திருந்தால் ஆதாரங்கள் கிடைத்திருக்குமே?

இப்போதும் கூட சுயேச்சையான ஒரு ஊடகவியலாளர் குழுவை எவ்வித தடையும், தணிக்கையுமின்றி தமிழர் பகுதிகளை சுற்றிப் பார்க்க அனுமதி வாங்கித் தரட்டுமே... அப்படி அனுமதி வாங்கித் தந்தால், நானே நேரில் சென்று உண்மைகளைக் கண்டறிந்து மக்களுக்கு சொல்ல தயாராக இருக்கிறேன்.

டி.ஆர்.பாலுவின் கருத்தின்படி இந்தியாவால் போலீஸ்காரனாக செயல்பட முடியாது என்றால், கொலைகாரனாக மட்டும்தான் செயல்பட முடியுமா? என்று கூறியுள்ளார்.

Thursday, September 2, 2010

"ஜனவரி 29" ஈகி முத்துக்குமாரின் ஆவணப்படம் வெளியீட்டு விழா




உயிராயுதம் ஏந்தி தமிழ் பற்றை, தமிழின பற்றை உலக தமிழர்களுக்கு உணரவைத்த முத்து குமரனின் வாழ்கையை சித்தரிக்கும் ஆவணப்படம் "ஜனவரி 29" என்ற பெயரில் குறுந்தகடு 28-08-2010 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள பிலிம் சேம்பரில் வெளியிடப்பட்டது.

குறுந்தகடை திரு தமிழர் சத்யராஜ், இயக்குனர் அமீர் அவர்கள் சேர்ந்து வெளியிட ஈகி முத்துககுமாரின் தந்தை குமரேசன் ஐயா மற்றும் ரோட்டரி தலைவர் ஒளிவாணனும் பெற்று கொண்டனர். கடுமையான போராட்டங்களுக்கிடையே அரங்கு அனுமதியை தயாரிப்பாளர் பெற்று இருந்த போதும் நிற்பதற்கு கூட இடமில்லாமல் அரங்கம் நிரம்பி வழிந்தனர் தமிழின உணர்வாளர்கள்.

நிகழ்வு ஈகி முத்துகுமாரின் படத்திற்கு ஒளியேற்றி, மௌன அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது. முதலில் பேசிய இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் முத்துகுமாரின் தியாகம் தமிழக இளைஞர்களை மட்டுமல்லாமல் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளைஞர்களையும் தட்டி எழுப்பி போராட வைத்த பெருமை முத்துகுமரனுக்கே சேரும் என்றார். முத்துகுமாரின் தியாகம் வெற்றி பெற நாம் கடமையாற்ற வேண்டும் என்றார்.

இயக்குனர் அமீர் அவர்கள் பேசும்பொழுது இங்குள்ள ஒவ்வொரு தமிழனும் தன்னால் முடிந்த உதவிகளை பொருளாகவோ, உழைப்பாகவோ அல்லது அவர்களது அறிவை இந்த தமிழ் சமுதாயத்திற்கு பயன்படுத்தினாலே போதும் நாம் தமிழீழத்தை பெற்று விடலாம் என்றார். சன் தொலைகாட்சி போன்ற ஊடகங்கள் இனப்பற்றுள்ள தமிழர்களிடம் இருந்திருந்தால் நம் இனத்தை நாம் காப்பாற்றி இருக்கலாம் எனவே அனைத்து அறிவு சார்ந்த தொழில்களிலும் தமிழர்கள் இருக்க வேண்டும், தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றார். அடுக்கு மொழியில் பேசி ஆட்சி நடத்தும் காலம் முடிந்து விட்டது இது தமிழர்கள் விழித்தெழும் காலம் மறத் தமிழன் ஆளும் காலம் என்றார். மேலும் அவர் பேசுகையில் விரைவில் சிறையிலிருந்து சீமான் வெளியில் வருவார் என்றார். ஒடுக்குமுறையை முறியடித்து தனது போராட்டத்தை தொடர்வார் என்றார் அமீர்.


குறுந்தகடை வெளியிட்டு சத்யராஜ் அவர்கள் பேசும் பொழுது முத்துகுமாரின் இந்த குறும் படத்தை காணும் போதுதான் எவ்வளவு திறமைகளை தன்னுள் அடக்கி கொண்டு இனத்திற்காக தன் உயிரை கொடுத்திருக்கிறான் என்பது புரிகிறது. ஒரு எழுத்தாளனாய் இயக்குனராய் கணிபொறி அறிவு சார்ந்த அனைத்து திறமைகளையும் கொண்டிருந்த முத்துகுமரனின் இறப்பு அவரது பெற்றோர்களுக்கு பேரிழப்பு என்பதை மறுக்க முடியாது.

அவர்கள் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு உரிமையுடன் உதவிகளை கேட்கலாம் என்றார், முத்துகுமாரின் வரலாற்றை தாங்கிய இந்த ஆவண படத்தை ஒவ்வொரு தமிழனிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த குறுந்தகடை இந்துக்கள் பகவத் கீதை பக்கத்திலும்,கிருத்துவர்கள் பைபிள் பக்கத்திலும், முசுலீம்கள் குரானுக்கு பக்கத்திலும் வைக்கலாம் தவறில்லை என்றார் .மேலும் அவர் பேசுகையில் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசும் இந்த சத்தியராஜ், செந்தமிழன் சீமானிடம் பேசும் போது மட்டும் தானாகவே சுத்த தமிழில் பேசிவிடுவேன். இல்லை என்றால் அவர் பதில் என்னவாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். முத்துகுமரனின் தியாகமும், தம்பி சீமான் சிறையில் இருந்து அவர் படும் துன்பங்களுக்கும் விரைவில் ஒரு முடிவு வந்து விடும். சீமானை போன்று தன் வாழ்கையை மக்களுக்காக அற்பணிப்பவர்களே இப்பொழுது நம் இனத்திற்கு தேவை என்றார்.


இயக்குனர் சிபிச்சந்திரன் பேசும் பொழுது முத்து குமரன் ஏற்றி வைத்த தீ தமிழர்களின் ஒவ்வொருவர் எண்ணத்திலும் இருக்க வேண்டும், அந்த தீயை அணையாமல் சீமான் பார்த்து கொள்வார். தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தமிழன் என்ற இன பற்றோடு நாம் தமிழராய் ஒற்றுமையாக செயல் பட்டாலே போதும் நாம் வென்று விடலாம் இந்த தமிழின எதிர்ப்பு அரசுகளிடமிருந்து விடுதலை பெற்று விடலாம் என்று கூறினார்.

குறம் பட தயாரிப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை அவர்கள் பேசும் பொழுது முத்துகுமாரின் இந்த குறும்படத்தை நாங்கள் வருமான நோக்கிற்காக தயாரிக்கவில்லை. கடுமையான நிதி நெருக்கடியிலும் இந்த பணியை சிறப்பாக செய்து முடித்திருக்கிறோம். இந்த குறுந்தகடை ஒவ்வொரு தமிழன் வீட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும் அந்த பணியை தமிழ் உணர்வாளர்கள் செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்குண்டு என்று கூறினார். இந்த குறும்படத்தை தயாரிக்க நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பக்க துணையாக இருந்து ஆலோசனை வழங்கி இந்த நிகழ்வு எந்த வித அரசியல் கட்சியை சாராமல் தமிழ் பற்றை, தமிழின பற்றை அடிபடையாக கொண்டு மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவரது கூற்றே, இந்த நிகழ்ச்சி இவ்வளவு சிறப்பாக அமைய காரணமாக இருந்தது என்பதை நன்றியுடன் குறிப்பிட்டார்.


பிலிம் சேம்பரில் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பே அரங்கு நிரம்பிவிட்டது. 70 நிமிடம் ஓடும் இந்த குறும்படம், உயர் தர ஒளி ஓலி அமைப்போடு (DTS)நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பெட்டியில், முத்து குமாரின் கடைசி கடிதம் அவருடன் எரிந்து போன காகிதம் போல் வடிவமைக்கப் பட்டிருந்தது. ஆவணப்படம் ஓடிய 70 நிமிடங்களும் அரங்கம் அமைதியிலும் உள்ளம் தாங்க முடியா குமுறலிலும் நிலைத்து இருந்தநது. ஈழ மக்களின் மரண ஓலங்கள் கடினமான மனதுடையவனையும் கரைய வைத்து விடும், குறும்படத்தின் காட்சிகள் நம் கண்களை விட்டு அகல மறுக்கின்றன, முத்துகுமாரின் வாழ்வும் தியாகமும் நம் கண் முன்னே கொண்டு சேர்த்தது நேர்த்தியான ஒளிபதிவு.


மனதை நெகிழ வைக்கும் இசை கனத்த மனதுடனும் ஈழ மக்களுக்கு நாம் எதுவும் செய்ய முடியவிலையே என்ற குற்ற உணர்வோடும் ஒவ்வொருவரும் கலைந்து சென்றனர். உலகில் உள்ள ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய இந்த குறுந்தகட்டின் விலை 50 ரூபாய்.


இனத்தின் விடியலை நோக்கிய பயணத்தில், தன்னையே திரியாக்கி நமது பயண பாதைக்கு சுடர் ஏத்திய ஈகியின் தாகத்தை வரலாற்றில் பதிவு செய்து, அணைத்து உலக தமிழர்களிடத்தும் கொண்டு செல்வதே தயாரிப்பாளர்களின் நோக்கம்.


குறுந்தகடு வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

திரு நல்லதுரை

வடக்கு தெரு ,

கல்லபெரம்பூர்தஞ்சாவூர் வட்டம் -613603

அலைபேசி எண்:9442317631

email:cm.selva@gmail.coma

தமிழனுக்கொரு நீதி!



ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பூட்டா சிங் இருந்தபோது,​​ நாடாளுமன்றத்தின் ​ மாநிலங்களவையில் அ.தி.மு.க.வின் தலைவராக இருந்த ஆலடி அருணா,​​ தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்காதது பற்றி குறிப்பிடுகையில் இந்தியா பல மொழிகளையும்,​​ பல கலாசாரங்களையும்,​​ பல மதங்களையும்,​​ பல தேசிய இனங்களையும் கொண்ட ஒரு நாடு என்று அவருக்கே உரிய திராவிட பாணியில் அழுத்தமாகக் கூறினார்.​ ​​ பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு என்று அவர் கூறியதும் அவையில் இருந்த பூட்டா சிங் ஏவுகணைபோல் எழும்பி இது மிகுந்த வெட்கத்துக்குரியது என்றார்.​ வெட்கப்படுவது உங்கள் உரிமை என்று கடைஉதட்டுப் புன்னகையோடு கூறிவிட்டு ஆலடி அருணா தன் பேச்சைத் தொடர்ந்தார்.​ இது நடந்து இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன.​

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் இன்றும் தொடர்கிறது.​ சிந்துபாத் கதைபோல் நாடாளுமன்றத்தில் விவாதங்களும் தொடர்கின்றன.​ ​ ​​ சென்ற ஜூலை 7-ம் தேதி கடல் மாதாவின் மடியில் மரணத்தைத் தழுவிய வேதாரண்யத்தைச் சார்ந்த மீனவர் செல்லப்பனோடு,​​ இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் 100-க்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.​ நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகளும் வலைகளும் நாசம் செய்யப்பட்டிருக்கின்றன.​ பலநூறு மீனவர்கள் உடல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர்.​ ​​ மானத்தோடு வாழ்வதற்கு பஞ்சபூதங்களோடு அன்றாடம் போராடும் மீனவர்களைப்போல் திக்கற்ற ஒரு வர்க்கம் வேறில்லை என்றே கூறலாம்.​ விவசாயக் கூலிகளுக்கு இருக்கிற பேரம் பேசுகிற சக்திகூட இல்லாமல்,​​ வறுமை அரக்கனின் வாய்க்குள் நொறுங்கிப்போகின்றவர்களாகத்தான் மீனவர்கள் இருக்கிறார்கள்.​

தமிழன் என்பதால்தான் இவர்களின் துயரம் தொடர்கதையாக இருக்கிறதோ என்ற எண்ணம் நாளுக்குநாள் மேலோங்குவதைக் கண்டுகொள்ளாமல் மத்திய அரசும் மெüனம் காக்கிறது.​ ​​ பனிப்பிரதேசத்தையும் பாறைப் பகுதிகளையும் பாகிஸ்தானிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் காக்க போர் பல புரிந்து இன்றளவும் போராடி வருகிற இந்தியா,​​ தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான கடலுக்குள் கருவூலம் போன்ற கச்சத்தீவை இலங்கைக்கு ஏன் தாரை வார்த்தது என்பதற்கான விடை இதுவரை கிடைக்கவில்லை.​ ​

​​ வங்கதேசம் தம் நாட்டின் இருபகுதிகளையும் இணைக்க இந்தியாவிடம் நடைபாதை கேட்டபோது மேற்கு வங்கத்தில் அதற்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.​ ஒருவழியாக 1974-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் கூச்-பிகார் பகுதியில் தீன்பிகா என்ற 178 மீட்டர் நீளமும் 85 மீட்டர் அகலமும் உள்ள நடைபாதையைக் கொடுப்பதற்கு ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.​ அந்த ஒப்பந்தத்தின்கீழ் தீன்பிகாவின் இறையாண்மை இந்தியாவிடமும்,​​ அதைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் குத்தகை உரிமை மட்டும் வங்கதேசத்திடமும் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.​ எக்காரணம் கொண்டும் அத்தீவை வங்கதேச ராணுவத்தளமாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் முடிவானது.​ இன்றும் அதேநிலைதான் தொடர்கிறது.​ ​​ மேற்கு வங்கத்துக்குச் சொந்தமான தீன்பிகா என்னும் சாலை போன்ற நடைபாதையை வங்கதேசத்துக்குக் குத்தகைக்கு விடும்போது எடுத்துக்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கையும் அக்கறையும் ஏன் கச்சத்தீவைத் தாரை வார்க்கும்போது எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று தமிழன் கேட்டால்,​​ நீ இந்தியனா என்ற எதிர்க்கேள்வியே ஈட்டிபோல் பாய்கிறது.​

தமிழர்கள் பிரச்னை என்றால் தேசிய நீரோட்டம் வடவேங்கடத்தோடு நின்றுபோகும் மர்மம்தான் என்ன?​ ​ ​​ கச்சத்தீவு ஒப்பந்தத்தை மதிக்காமல் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை நிராகரித்து இலங்கைக் கடற்படை அவர்களைத் தொடர்ந்து தாக்கிவரும்போது,​​ அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு கச்சத்தீவை மீட்டு எடுத்துக்கொள்கிற வல்லமை இந்தியாவுக்கு இல்லையா?​ அதே வங்கக் கடலில் ரோந்து செல்கிற இந்தியக் கடற்படையும் கடலோரக் ​ காவல் படையும் தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கைக் கடற்படைமீது ஒருமுறையேனும் திருப்பிச் சுட்டிருந்தால்,​​ "தாய் மண்ணே வணக்கம்' என்று தமிழன் உணர்ச்சிப்பிழம்பாகி இருப்பானே!​ இந்திய ராணுவத்தின் பீரங்கி தமிழனுக்காக ஒருமுறையாவது ஒலிக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சால் இதயம் கனத்துப்போகிறது.​ கடற்கரையில் காத்துக் கிடக்கிற பெண்டுபிள்ளைகளின் பசியைத் தணிக்க வாய்க்கரிசி போட்டுக்கொண்டு கடலுக்குச் செல்கிற மீனவனை நடுக்கடலில் சிங்களவன் நிர்வாணப்படுத்துகிறபோது,​​ துச்சாதனனைப் போன்று இந்திய தேசத்தையல்லவா அவன் துகிலுரிகிறான்.​ இந்தச் செயலைக் கேட்ட மாத்திரத்தில் தில்லி ஆதிக்கபுரியினருக்கு ரத்தம் கொதிக்க வேண்டுமல்லவா? ரத்தம் சூடேறியதாகக்கூட இதுவரை தகவல் இல்லாதது தேசிய உணர்வை நீர்த்துப்போகச் செய்வது இயற்கைதானே.​ ​​ 1988-ம் ஆண்டு எங்கோ இருக்கிற மாலத்தீவு என்னும் நாட்டைக் கூலிப்படையினர் கைப்பற்றிக் கொண்டபோது,​​ இந்திய அரசின் இரும்புக் கரங்கள் இந்துமாக் கடல் வரை நீண்டு ஜனாதிபதி அப்துல் கயூமை மீண்டும் அரியணையில் அமர்த்தியது நினைவில் சுழலத்தானே செய்கிறது.​

அன்னிய நாட்டவனுக்குக் காட்டப்படுகிற அந்தப் பரிவு,​​ "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே' என்று குதூகலித்த மகாகவி பாரதி வழிநின்று மீன்பிடி படகிலேகூட மூவண்ணத்தைத் தீட்டிக்கொள்கிற திக்கற்ற மீனவனுக்குக் காட்டப்படாதது ஏன்?​ ​​ ஆசியக் கண்டத்தில் பிலிப்பின்ஸ் நாட்டுக்கு அருகில் இருக்கிற பால்மஸ் தீவு தமக்குச் சொந்தமென்று,​​ ஐரோப்பா கண்டத்தின் வடக்கு அட்லாண்டிக் கடல்பகுதியில் ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிற நெதர்லாந்து உரிமை கொண்டாடியது.சர்வதேச போலீஸ்காரன் என்று தம்பட்டமடித்துக்கொள்ளும் அமெரிக்காவின் பிடியில் இருந்த அந்த 3 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள தீவை சர்வதேச நீதிமன்றத்தில் நெதர்லாந்து வழக்காடித் திரும்பப் பெற்றது.​ ஆனால்,​​ ராமேசுவரத்திலிருந்து 18 கி.மீ.​ தொலைவில் சர்வதேச நடைமுறைகளின்படி இந்தியக் கடல் எல்லைப் பகுதியில் உள்ள கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டு இன்று தமிழக மீனவர்கள் சூறாவளியில் சிக்கிய பாய்மரக் கப்பலாய் சீரழிந்து கிடக்கிறார்கள்.​ ​ சென்னைக்கு வடக்கே பழவேற்காட்டில் தொடங்கி கன்னியாகுமரி வரை சுமார் 1,062 கிலோ மீட்டர் நீளமான கிழக்குக் கடற்கரையோரத்தில் வாழும் மீனவ சமுதாயத்தினர்,​​ சுனாமி வந்து சுருட்டிப்போட்டாலும் கடல்மாதாவே கதி என்று கடலை அண்டியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.மனித நாகரிகம் தொடங்கிய நாளிலிருந்து மீனவர்களின் ஜீவாதாரமாக இருந்துவரும் கடல்,​​ மத்திய அரசின் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தின்கீழ் மீனவமக்களிடமிருந்து பறிக்கப்பட்டு மெல்ல மெல்ல தனியார் வசமாகிவிடும் சூழல் நிலவுகிறது.​ நடுக்கடலுக்கும் செல்ல முடிவதில்லை,​​ இனி கடற்கரையை ஒட்டியும் மீன்பிடிக்க இயலாது.​

தமிழனுக்கு இது போதாத காலம் போலும்.​ தமிழ்நிலத்தின் உயிர்நாடியான காவிரியில் காலங்காலமாய்ப் பாய்ந்தோடிய தண்ணீரைக் கன்னடர்கள் மறுக்கிறார்கள்,​​ உபரிநீர் அரபிக்கடலில் கலந்தாலும் பரவாயில்லை;​ தமிழகத்துக்குத் தர முடியாது என்று கேரளத்தவர்கள் முரண்டுபிடிக்கிறார்கள்.​ சென்னை மக்களுக்கு கிருஷ்ணா நதிநீர் கிடைக்க ஆந்திரத்திடம் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது.​ கடலை நம்பியே காலந்தள்ளிவந்த தமிழக மீனவர்கள் நிர்கதியாக நிற்கிறார்கள்.​ தமிழக மீனவர்களைப் பாதுகாக்கக் கோரி கடந்த கால் நூற்றாண்டாக தமிழக அரசு மத்திய அரசுக்கு மாறிமாறி அனுப்பிய கடிதக் குவியல்கள் விரைவில் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தாலும் வியப்பில்லை.​ இந்தி நடிகர் ஷாருக்கான் கடந்த ஆண்டு அமெரிக்க விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்கு உள்படுத்தப்பட்ட சம்பவம் இந்திய ஊடகங்களில் ஒருவாரம் கொழுந்துவிட்டெரிந்தது.​ அந்த நிகழ்வு தில்லி ஆட்சி பீடத்தையே உலுக்கியது.​ விளக்கங்கள்,​​ மறுப்புகள்,​​ பேட்டிகள் என்று அதிகார மையங்கள் ஆடிப்போயின.​ ஆனால்,​​ தமிழக மீனவர்களின் உயிர் ஒன்று,​​ இரண்டு...​ நூறு...​ என்ற கூட்டல் கணக்கோடு முடிந்துபோகிறது.​ ​​ இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காப்போம் என்ற முழக்கம் வெறும் நிலப்பரப்பைக் காப்பதென்ற தவறான புரிதலில் ஆட்சியாளர்கள் இருப்பது மாபெரும் கருத்துப்பிழை.​ மக்களின் உணர்வை மதித்துக் கொள்கை முடிவெடுக்கிற தலைவர்களைக் கொண்ட தேசம்தான் காலமுகடுகளைக் கடந்து கற்பக விருட்சமாய் வியாபித்து நிற்கும்.​ ​
தமிழா, நீ பேசுவது தமிழா?

தில்லை நாகசாமி