Monday, February 28, 2011

தினமணி தலையங்கம்: துணிவுமில்லை, மனமுமில்லை

எந்தவொரு நாடும் உலக அரங்கில் மதிக்கப்படுவது அதன் ராணுவ பலத்தாலோ,பொருளாதார பலத்தாலோ, மக்கள்தொகை அல்லது நிலப்பரப்பின் அடிப்படையிலோ மட்டுமல்ல. அந்த நாடு தனது குடிமக்களை எந்த அளவுக்குப் பாதுகாக்கிறது, அவர்களது உரிமைகளை மதிக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் ஒரு நாடும் அதன் தலைமையும் மதிக்கப்படுகிறது, மரியாதை பெறுகிறது. சமீபகாலமாக நிகழும் சில சம்பவங்கள் இந்தியாவை ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சீன சரக்குப் படகு ஜப்பானியக் கடலோரக் காவல்படையின் ரோந்துப் படகின்மீது மோதிவிட்டது. ஜப்பானியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் அந்தச் சீனப் படகின் கேப்டனைக் கைது செய்துவிட்டனர்.

சீனா கொதித்தெழுந்துவிட்டது. இது நமது நாட்டின் தன்மானத்துக்கே இழுக்கு என்று கருதி, அதை ஒரு தேசியப் பிரச்னையாக்கிவிட்டது. எல்லா விதத்திலும் ஜப்பானுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது சீனா.

முதலில், அனைத்து மட்டங்களிலுமான ஜப்பானியத் தொடர்புகளை நிறுத்தி வைத்தது. நிலக்கரி மற்றும் எரிவாயு கண்டுபிடிப்புக்கான
கூட்டுமுயற்சிக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஜப்பானிய எலெக்ட்ரானிக் தொழிலுக்குத் தேவைப்படும் முக்கியமான சில
தாதுப்பொருள்களின் ஏற்றுமதியை நிறுத்திவிட்டது.

பயந்துபோய், நமக்கேன் வம்பு என்று ஜப்பான் அந்தப் படகின் கேப்டனை நிபந்தனையின்றி விடுவித்து, சீனாவுடன் சமாதானம் செய்துகொண்டது. ஏதோ ஒரு தனியார் படகின் கேப்டன் என்று பாராமல், ஒரு சீனக் குடிமகன் என்கிற கண்ணோட்டத்துடன்தான் பிரச்னையை அணுகியது அந்த அரசு.

ரெய்மண்ட் டேவிஸ் ஓர் அமெரிக்கப் பிரஜை. இவர் ஓர் அமெரிக்க ஒற்றர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதற்கான தெளிவான ஆதாரம் எதுவும் கிடையாது. பாகிஸ்தான் சென்றிருந்த இவரை இரண்டு பாகிஸ்தானியர்கள் பின்தொடர்ந்ததாகவும், அவர்கள் பாகிஸ்தானிய உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யைச் சேர்ந்தவர்கள் என்றும், வரம்புமீறி ரெய்மண்ட் டேவிஸ் துப்பறிந்துவிடக் கூடாது என்பதற்காக அவரை அந்த இருவரும் பின்தொடர்ந்தனர் என்றும் கூறப்படுகிறது. சிலர், அந்த இரண்டு பாகிஸ்தானியர்களும் சமூகவிரோதிகள் என்றும், ரெய்மண்ட் டேவிஸின் பர்சையும், கைப்பேசியையும் பறிப்பதற்குத்தான் பின்தொடர்ந்தார்கள் என்றும் கூறுகின்றனர்.

ரெய்மண்ட் டேவிஸ் தன்னைப் பின்தொடர்ந்த அந்த இருவரையும் குருவியைச் சுட்டுத் தள்ளுவதுபோல சுட்டுக் கொன்றுவிட்டார். ரெய்மண்ட் டேவிஸ் கைது செய்யப்பட்டு, அவர்மீது கொலைக் குற்றமும் சாட்டப்பட்டிருக்கிறது. கொலைக் குற்றத்துக்கான எல்லா ஆதாரங்களும் பாகிஸ்தானிடம் இருக்கிறது. ஆனால், அமெரிக்கா தனது நாட்டுக் குடிமகன் ஒருவரை பாகிஸ்தான் கைது செய்திருப்பதை ஏற்றுக்கொள்கிறதா என்றால், இல்லை.

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவரும் நிதி உதவி முற்றிலுமாக முடக்கப்படும் என்று அச்சுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு விட்டன. ரெய்மண்ட் டேவிஸ் விஷயத்தில் பாகிஸ்தான் நடந்து கொள்வதைப் பொறுத்துத்தான் அமெரிக்க - பாகிஸ்தானிய உறவு இருக்கும் என்று அழுத்தம்திருத்தமாகப் பாகிஸ்தானிடம் தெளிவுபடுத்தி விட்டிருக்கிறது அமெரிக்க அரசு.

தனது நாட்டு ஒற்றருக்காக, தனது நாட்டுக் குடிமகனுக்காக எதுவும் செய்யத் தயாராக இருக்கிறது அமெரிக்கா. இது அந்த நாட்டின் சுயமரியாதைப் பிரச்னை. அமெரிக்க உதவியால் மட்டுமே உயிர் வாழும் நாடாக இருந்தாலும், கொலையுண்ட தனது நாட்டுக் குடிமக்கள் இருவருக்காகப் போராடுகிறது பாகிஸ்தான். இது பாகிஸ்தானின் தன்மானப் பிரச்னை என்றும், வெளிநாட்டவர் ஒருவர் தங்களது நாட்டில், தங்கள் நாட்டுப் பிரஜைகளை சுட்டுக்கொல்வதைச் சகித்துக்கொள்ள முடியாது என்றும் கூறுகிறது பாகிஸ்தான்.

முடிவில், அமெரிக்காவிடம் சரணாகதி அடையும் என்றாலும் முடிந்தவரை தனது நாட்டுப் பிரஜைகளுக்காகப் போராடுகிறது பாகிஸ்தான்.

இனி நமது இந்திய அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள்மீது காரணமே இல்லாமல் நிறவெறித் தாக்குதல்கள் நடைபெற்றன, நடைபெறுகின்றன. இதுவரை நமது இந்திய மாணவர்களைத் தாக்கிய ஒருவரைக்கூட ஆஸ்திரேலிய நீதிமன்றம் தண்டித்ததாகத் தெரியவில்லை. இந்திய அரசும் அதைப்பற்றிக் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. இதுதான் ஓர் இந்தியக் குடிமகனுக்கு நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு தரும் மரியாதை!

அமெரிக்காவில், வனவிலங்குகளின் புள்ளிவிவரக் கணக்கு எடுக்கக் கட்டிவிடப்படும் கழுத்துப் பட்டைகளைப்போல, பல லட்சம் ரூபாய் செலவழித்துப் படிக்கப்போன இந்திய மாணவர்களுக்கு "ரேடியோ டாக்' அணிவித்து மகிழ்கிறதுஅமெரிக்க அரசு. நமது அரசு அதற்கு உரத்த குரலில் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடத் தயங்குகிறது. கேட்டால், அந்நிய முதலீடு பாதிக்கப்படும், அமெரிக்க உறவு சிதைந்துவிடும் என்று வியாக்கியானம் கூறுகிறார்கள். ஓர் இந்தியக் குடிமகனின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் விடவா, அந்நிய முதலீடு பெரியது? இதற்காகவா சுதந்திரம் பெற்றோம்?

பக்கத்தில் இருக்கும் "கண்ணீர்த் துளி' அளவிலான நாடு இலங்கை. இந்தியாவையே கேலிசெய்வதுபோல சர்வசாதாரணமாக நமது மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்கிறது அந்நாட்டு ராணுவம். நாம் பேச்சுவார்த்தை நடத்தத் துடிக்கிறோமே தவிர, நமது தன்மான ரத்தம் துடிக்கவில்லை. இதுவே, ஒரு சீன அல்லது அமெரிக்க மீனவருக்கு இலங்கை ராணுவத்தால் அப்படி ஏற்பட்டிருக்குமேயானால், இப்போது
இலங்கை என்கிற ஒரு தீவே இருந்திருக்காது.

அதெல்லாம் போகட்டும். ஈழப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் புனர்வாழ்வுக்காக, இந்தியாவிலிருந்து நமது வரிப்பணத்திலிருந்து, நம்மால் அனுப்பப்பட்ட 500 டிராக்டர்கள், இலங்கை அரசால் தென்னைமர வளர்ச்சிக் கழகத்துக்கும், முந்திரி கார்ப்பரேஷனுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 50,000 வீடுகள் கட்ட நமது வரிப்பணத்திலிருந்து இந்திய அரசு அளித்த நிதியுதவி வெறும் 1,000 பேருக்குத்தான் சென்றடைந்திருக்கிறது. இதை மேற்பார்வை இடவோ, கேள்வி கேட்கவோ நமது இந்திய அரசுக்குத் துணிவும் இல்லை,
மனமும் இல்லை.

நன்றி: தினமணி

தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கு! HRPC வழக்கு!!

*
இந்திய அரசே, தமிழக மீனவர்களுக்குத் துப்பாக்கி வழங்கு !
*
கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை உறுதி செய் !

மதுரை உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கு!

சட்டம் யாருக்கு, எந்த வர்க்க நலனுக்கு சாதகமாக இருக்கிறது என்பது மீண்டும் அம்பலமாகியிருக்கிறது.

உலகிலுள்ள எந்த நாடும் கடல் எல்லை தாண்டும் மீனவர்களை சுட்டுக் கொல்வதில்லை. பாகிஸ்தான் கூட எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதே வழக்கமாக இருந்திருக்கிறது. காரணம், சர்வதேசகடல் சட்டம் சரத்து 73, மீனவர்களை கடலில் சுடுவதை தடைசெய்திருக்கிறது. இச்சட்டத்தில் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் கையொப்பம் இட்டுள்ளன. இதில், இந்தியாவும், இலங்கையும் கூட அடக்கம்.

ஆனால், இச்சட்டத்தை இலங்கை அரசு இதுவரை மதித்து நடந்ததில்லை. இந்திய அரசும் இதை தட்டிக் கேட்டதில்லை. பதிலாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை குருவிகள் போல சுட்டுத் தள்ளுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. இதுவரை 500 க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் இப்படி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மீது 600க்கும் மேலான முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டு விசாரணையின்றி கடலோர மாவட்டங்களில் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் கொலை, கொலை முயற்சி மற்றும் ஆயுத சட்டப்படியான கடுமையான குற்றங்கள். இக்குற்றவாளிகளை இந்திய நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த இந்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 12.01.2011 மற்றும் 22.01.2011 ஆகிய தேதிகளில் வீரபாண்டியன், ஜெயக்குமார் ஆகிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொடூரமாக சுடப்பட்டு, கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ளனர். இது சர்வதேச கடல்சட்டங்களை மீறிய செயலாகும். 2008ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி வெளியிடப்பட்ட இந்திய – இலங்கை கூட்டறிக்கைப்படி இந்திய மீன் பிடி படகுகளை சுடக்கூடாதென ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசு இதையும் நடைமுறைப்படுத்தவில்லை.

இந்திய அரசியல் சட்டம் சரத்து 19 (1) ( g) ன் படி மீன்பிடி உரிமை, தமிழக மீனவர்களின் அடிப்படை உரிமையாகும். அதே போல் இந்திய அரசியல் சட்டம் சரத்து 21ன்படி மீனவர்களூக்கு வாழ்வுரிமையும் அடிப்படை உரிமையாகும். தனது குடிமக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டியது அரசியல் சட்டப்படி அரசின் கடமையாகும். இப்படி தனது குடிமக்களின் அடிப்படை உரிமைகளான தொழில் உரிமை, வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய இந்திய அரசு அக்கடமையிலிருந்து தவறியிருக்கிறது.

அத்துடன் இலங்கையில் தனது மேலாண்மையை நிலைநாட்டுவதற்க்காக தனது சொந்த நாட்டு மக்களின் நலன்களைப் பலியிட்டு வெறுமனே ராஜதந்திர நாடகங்களை நடத்தி வருகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் பணக்கார மாணவர்கள் சிலர் பாதிக்கப்பட்ட போதும், மும்பையில் தாஜ் ஓட்டல் தாக்கப் பட்டபோதும், சிலிர்த்து எழுந்தது. தேசபக்தி நாடகமாடி மக்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பியது. குஜராத் தொழிலதிபர்களின் கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சோமாலியா கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு ஒரு உயிர் கூட சேதமடையாத நிலையில் இந்திய கடற்படையை விரைந்து அனுப்பி நடவடிக்கை எடுத்தது.

இப்படி ஆளும் வர்க்க நலனுக்காக மட்டுமே செயல்படும் இந்திய அரசு, தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. இதனால் தமிழக மீனவர்கள் இந்திய அரசு தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார்கள். ஆகவே மீனவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கி லைசென்சும், இலவசமாகத் துப்பாக்கியும் இந்திய அரசு வழங்க வேண்டும். இத் தற்காப்புரிமை இந்திய தண்டணைச் சட்டம் பிரிவுகள் 96 – 100; வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதி 3 ஆகியவற்றின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படை செய்துள்ள குற்றங்கள், அது தொடர்பான வழக்குகள், வழக்குகள் மீதான இந்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து ஒரு நீதிபதியை நியமித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ் நாடு அமைப்பின் மதுரைக் கிளை துணைச் செயலரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சே.வாஞ்சி நாதன், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

அதேபோல் மற்றொரு வழக்கில் ராமேசுவரம் மன்னார் வளைகுடாப் பகுதியானது, பல்வேறு அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் நிரம்பிய பகுதி என்பதால் இந்திய அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சீசன் நேரங்களில் மீனவர்கள் இப்பகுதியில் மீன் பிடிப்பார்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4 லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது.

இந்திய – இலங்கை ஒப்பந்தங்கள் 1974, 1976 ன் படி கச்சத் தீவுப்பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்பந்தங்களின்படி நேரடியாக கச்சத்தீவை இந்தியா, இலங்கைக்கு அளித்தால் அரசியல் சட்ட திருத்தம் தேவைப்படும் என்பதால் சூழ்ச்சியாக கடல் எல்லையை வரையறுப்பது என்ற அடிப்படையில், கச்சத்தீவிலிருந்து இந்திய கடல் எல்லையை வரையறுக்காமல் திட்டமிட்டே, கச்சத்தீவு இலங்கை கடற்பகுதியில் வருமாறு மாற்றி வரையறுக்கப்பட்டு தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. எனவே கச்சத்தீவை மையப்படுத்தி தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்தியாவின் கடல் எல்லையை இந்திய அரசு புதிதாக வரையறுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

மேற்படி வழக்குகள் 15.02.2011 ல் நீதிபதிகள் பால்வசந்தகுமார், சுப்பையா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜராகி வாதிட்டார். இதனையடுத்து கச்சத் தீவு மற்றும் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மற்றும் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது..

இந்த வழக்கு தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிக முக்கியமான வழக்காகும். இதில் எழுப்பட்டுள்ள கேள்விகளுக்கு உயர்நீதிமன்றம் என்ன விடை தரும், வழக்கை தள்ளுபடி செய்யுமா என்றெல்லாம் வாசகருக்கு கேள்வி எழலாம்.

எனினும் சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற வக்கில்லாத அரசின் கீழ் வாழும் இந்த மீனவர்கள் தங்களது பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்தும் உரிமையை கோருவது சட்டப்படியும், அரசியல்ரீதியாகவும் சரியானதே. நீதிமன்றம் இதற்கு முகங்கொடுக்காமல் போனால் நாம் மக்கள் மன்றத்தில் இந்த கோரிக்கையை வைத்து போராடுவதே சரியாக இருக்கும்.

_________________________________________________________

தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

Wednesday, February 23, 2011

ஊழலை ஒழிப்போம் ! நாடாளுமன்றத்தில் அனைவரையும் சிரிக்க வைத்த ஜனாதிபதி...

21.02.11 அன்று நமது நாட்டின் முதல் குடிமக்களான பிரதிபா பாட்டில் பாராளுமன்ற இரு அவைகள் இணைந்த கூட்டத்தில் ஐம்பது நிமிடங்கள் அவர் பேசியதின் சாரம்சம் இதுதான்.

- பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை.
- விலை உயர்வால் பாதிக்காத வகையில் ஏழை மக்களுக்குப் பாதுகாப்பு.
- பொது வாழ்க்கையில் ஊழலைத் தடுக்க உரிய நடவடிக்கை.
- பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் ஏழை மக்களைச் சென்றடைய நடவடிக்கை.
- உள்கட்டமைப்பு துறையில் ரூ. 20 லட்சம் கோடி முதலீடு.
- உள்நாட்டு, வெளிநாட்டு தீய சக்திகளால் அச்சுறுத்தல் ஏற்படா வண்ணம் நாட்டின் பாதுகாப்புக்கு உறுதி.
- இந்தியாவின் நலனைக் காக்கும் வகையில் வெளியுறவுக் கொள்கை வடிவமைப்பு.
- விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைக்க உரிய நடவடிக்கை. விரைவில் உணவு பாதுகாப்புச் சட்டம்.
- ஊழலைத் தடுக்க புதிய வழிமுறைகளை உருவாக்கவும் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை நிலைநிறுத்தவும் அமைச்சர் குழு அமைப்பு.
- அரசு அதிகாரிகள் ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார் விசாரணையை விரைவுபடுத்த நடவடிக்கை.
- தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்த குழு அமைப்பு.
- மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா விரைவில் நிறைவேற நடவடிக்
- பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த நிபந்தனை.

மிகவும் நகைச்சுவை உணர்வுடன் அவர் கிழ்வருமாறு கூறினார் : "வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் விவகாரம் அரசுக்கு கவலையளிக்கிறது. இந்தப் பணம் ஊழல் மூலமாகவோ, வரி ஏய்ப்பு மூலமாகவோ பெறப்பட்டதாக இருக்கலாம். இந்தப் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் சட்ட அமலாக்க அமைப்புகளின் ஒத்துழைப்பு அவசியம். இந்தப் பிரச்னை தொடர்பாக வலுவான சட்ட நெறிமுறையை உருவாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு ஏற்கெனவே எடுத்திருக்கிறது." இதை அவர் கொள்ளும் பொது பிரதமர் உள்ளிட்ட ஆளும்கட்சியினர் பக்கம் மறந்தும் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உரையில் மக்களுக்கு இருக்கும் ஆப்பு என்னவெனில் காங்கிரஸ் அரசு பொருளாதார சிர்த்திருத்தத்தை தொடர்ந்து அமலாக்கம் செய்யும் என்பதுதான். இதன் விளைவு என்னவெனில் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட ஒன்னரை லட்சம் விவசாயிகளுடன் இன்னும் இரண்டு லட்சம் சடலங்கள் சேரும் என்பதுதான். கிராமப்புற வேலைவாய்ப்பு குறித்தோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்தோ மறந்தும் வாயை திறக்கவில்லை என்பதையும் அறிக.

வழக்கம் போல உப்பில்லாமல் உணவருந்த சொல்லும் ஒரு உரை.

Sunday, February 20, 2011

Saturday, February 19, 2011

தேசத்தின் அன்னை பார்வதியம்மாள் மரணித்தார் : கண்ணீரில் தமிழர்கள்

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் எய்தினார். கடந்த பல ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, இலங்கை இராணுவத்தின் சிறையில் சிக்கித் தவித்து நோய்வாய்பாட்டு இருந்த தமிழீழ தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 6.30 மணியளவில் இறையடி எய்தியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வன்னிப் போரின் பின்னர் நலன்புரி முகாம் ஒன்றில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பார்வதி அம்மையார் கடும் நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டிருந்தார்.

தடுப்புக்காவலில் இருந்த கணவர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் 06-01-2010 அன்று உயிரிழந்ததை அடுத்து அவரது உடலம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது பார்வதி அம்மையாரையும் இலங்கை அரசு விடுதலை செய்திருந்தது. சிகிச்சைக்காக மலேசியா சென்றிருந்த அவர் அங்கிருந்து இந்தியா செல்வதற்கான அனுமதியினை இந்திய அரசு வழங்காது இழுத்தடித்ததை அடுத்து மீண்டும் தாயகம் திரும்பியிருந்தார்.

சிகிச்சைக்காக யாழ்.வடமராட்சி மந்திகை மருத்துவமனை, யாழ்.போதனா வைத்தியசாலை என்பவற்றில் அனுமதிக்கப்பட்டு இறுதியாக வல்வெட்டித்துறை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதமாக சுயநினைவினை இழந்திருந்த அவர் இன்று காலை 06 மணியளவில் காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி : செய்தி.காம்

Friday, February 18, 2011

கடலில் கலக்கும் ரத்தம்!




இரவுக் குளிரில் நடுங்கிய நாய் ஒன்று, 'காலையில எழுந்ததும் முதல் வேலையா... போத்திக்க ஒரு போர்வை வாங்கணும்’ என்று யோசிக்குமாம். விடிந்ததும் வெயில் அடிக்க, 'போர்வை எல்லாம் இனி எதுக்கு?’ என்று போய்விடுமாம். அன்றைய இரவும் குளிர் நடுக்கும். போர்வை வாங்க நினைக்கும். மீண்டும் வெயில் காயும். போர்வை வேண்டாம் என்று நினைக்கும். இதற்கும் இன்றைய நடப்புக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதுதான் வேதனை!

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவது மீண்டும் மீண்டும் தொடர்கிறது. இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்புவார். அவர் இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டனம் தெரிவிப்பார். இந்தத் தகவல் கொழும்புக்குக் கொண்டு செல்லப்படும் என 'உருளைக்கிழங்கு’ விளையாட்டு அரை நூற்றாண்டாக நடக்கிறது.

முள்ளி வாய்க்கால் முற்றுகையின் மூலமாக ஈழத் தமிழினத்துக்கு முற்றுப்புள்ளிவைத்த மகிந்தா ராஜபக்ஷேவுக்கு 'மகா வீர’ என்ற பட்டத்தை சிங்கள இனவாதிகள், கொழும்பில் பல்வேறு கொண்டாட்டங்களுடன் வழங்கினார்கள். தமிழக மீனவனது சந்ததிக்கும் அதேபோன்று முற்றுப்புள்ளி வைத்து, 'மகா சூர’ என்ற பட்டத்தை மகிந்தா பெற்றுக்கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை. கடந்த வாரத்தில் கடல் நடுவே மீன் பிடிக்கப் போனபோது, இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட பாண்டியனது மரணம், தமிழ் நாட்டுக்கு இதைத்தான் சங்கு ஊதிச் சொல்கிறது!

கடலே நம் காவல்!

இந்தியாவைப் பாதுகாப்பான பூமி என்பார்கள். முப்புறமும் கடலும் தலைப் பகுதியில் மலையுமாக இயற்கையே நமக்கு நான்கு பக்கமும் அரணாக அமைந்தது. மற்ற மாநிலங்களுக்கு இல்லாத இந்த வளம் தமிழகத்துக்கு உண்டு. வடக்கிலும் மேற்கிலும் மட்டும்தான் ஆந்திராவும் கேரளாவும் உள்ளன. தெற்கே இந்தியப் பெருங்கடலும், கிழக்கே வங்காள விரிகுடாவுமாக தமிழகம் தண்ணீர் சூழ்ந்த மாநிலம். சென்னை, வேலூர், காஞ்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகியவற்றை வடக்குக் கடற்கரை மாவட்டங்கள் என்றும்... சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகியவற்றைத் தெற்குக் கடற்கரை மாவட்டங்கள் என்றும் சொல்வார்கள். 1,125 கி.மீ பரப்புள்ள கடற்கரை நமக்கு இருக்கிறது. கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையுமாக 10 லட்சம் மீனவர்கள் வாழ்கிறார்கள். கடலுக்குள் சென்று மீன் பிடிப்பதை மட்டுமே தொழிலாகக்கொண்டவர்கள் இதில் கால்வாசிப் பேர். இந்தியாவின் கடல்சார் வளத்துக்குப் பெரும் பங்களிப்பைத் தமிழக மீனவர்கள் செய்து வருகிறார்கள். லட்சக்கணக்கிலான மதிப்புள்ள மீன்களை இவர்கள் பிடித்தாலும், அன்றாட சாப்பாட்டுக்குக் கஷ்டப்படும் வாழ்க்கை. நாட்டுப் படகும், கட்டு மரங்களும் புழங்கிய கடலில், இன்று விசைப் படகுகளின் ராஜ்யம். கடலையே திருப்பிப் போடும் காற்று வீசினாலும் ஊரையே உருமாற்றும் புயல் வீசினாலும் கடல் பயணத்தை எந்தச் சூழ்நிலையிலும் நிறுத்தாதவர்களின் வாழ்க்கைக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலே, இலங்கைக் கடற்படைதான்!

கடலில் ரத்தம் கலந்தது எப்போது?

இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு, வெட்டுக் குத்துக் கொலைகள் அதிகமாகிப்போன 70-களின் தொடக்கம்தான் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கும் தொல்லை தொடங்கியது. இலங்கை அரசுக்கு எதிராக அணி திரளும் தமிழ் இளைஞர்களுக்கு கடலுக்கு அப்பால் இருக்கிற தமிழ்நாடுதான் மறைமுகமாக உதவி செய்கிறது என்ற எண்ணம் அந்த நாட்டு அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. அதுவரையில் ராமேஸ்வரம் மீனவர்கள், பருத்தித்துறை, யாழ்ப்பாணம் வரைக்கும் மீன் பிடித்து நிம்மதியாகத் திரும்பி வந்த காலம் எல்லாம் உண்டு. இந்த சந்தேகம் வந்த பிறகு, இலங்கையை ஒட்டியுள்ள பகுதிக்கு வரும் அத்தனை மீனவர்களையும் தடுத்தார்கள். கைது செய்து சிலரைக் கொண்டுபோனார்கள். பின்னர் விடுவித்தார்கள். அங்கு போராட்டம் தீவிரம் அடைய... விடுதலைப் புலிகள் மீது காட்ட முடியாத கோபத்தை அப்பாவித் தமிழ் மீனவர்கள் மீது காட்டினார்கள். கைது செய்யும் சம்பிரதாயத்தை விலக்கி, கண்ணில் பட்டதும் சுட ஆரம்பித்தார்கள்.

''1983 முதல் 1991 வரை தமிழக மீனவர் மீது இலங்கைக் கடற்படையினர் 236 தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர். 3,003 படகுகளைத் தாக்கினார்கள். 51 படகுகளை முற்றாக அழித்தனர். 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துபோனார்கள். 136 மீனவர்கள் காயம் அடைந்தனர்'' என்று ஓர் அறிவிப்பு 1991-ம் ஆண்டு வந்தது. இது முழுமையான புள்ளிவிவரம் இல்லை. அதற்குப் பிறகு எந்தக் கணக்கும் எடுக்கப்படவில்லை. ''கடந்த 30 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டனர்'' என்று ராமேஸ்வரம் மீனவர்கள் சொல்கிறார்கள்!

என்ன காரணம் சொல்வார்கள்?

ஒரு காலத்தில் 'கடத்தல்காரர்கள்’ என்று சொல்லித் தாக்கினார்கள். புலிகளுக்கு தமிழக மீனவர்கள்தான் உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றைக் கடத்திக்கொண்டு போய்த் தருகிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தாக்கினார்கள். அதன் பிறகு தமிழர்களை, 'கள்ளத் தோணிகள்’ என்றார்கள். போராளி இயக்கங்கள் வலுவடைந்த பிறகு, 'புலிகள்’ என்றார்கள். 2001-ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்த காலத்திலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிற்கவில்லை. மகிந்தா ராஜபக்ஷே அதிபராக ஆன பிறகு, புலிகள் மீதான தாக்குதல் கடுமையாக்கப்பட்ட பிறகு, தமிழக மீனவர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். மீனவர்களைக் கொல்வதும், அடித்து விரட்டுவதும், தூரத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டுப் பயமுறுத்துவதும் அதிகமாகின. ''தமிழக மீனவர்கள் நம்முடைய எல்லையைத் தாண்டிப் போவதால்தான் இலங்கைக் கடற்படை சுடுகிறது'' என்று இலங்கை அரசு சொன்ன காரணத்தையே, நம்முடைய மத்திய அரசாங்கமும் ஆமோதித்தது.

இந்தியக் கடல் எல்லைக்குள், பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்து மீனவர்கள் உள்ளே நுழைந்துவிடுகிறார்கள். இந்திய அரசாங்கம் அவர்களைக் கைது செய்கிறது. அந்த நாட்டுக்குத் தகவல் தருகிறது. அதன் பிறகு நல்லெண்ணத்தின் அடிப்படையில் விடுதலை செய்கிறது. இந்த மனோபாவம் இலங்கை அரசுக்கு ஏன் வரவில்லை? அதை இந்திய அரசாங்கத்தால் ஏன் தட்டிக்கேட்க முடியவில்லை. சிங்களக் கடற்படை தமிழ் மீனவர்களைத் தாக்கும்போது, இந்தியக் கடற்படைக்கு அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு வேண்டாமா? மீனவர்களின் கேள்விகளுக்கு இதுவரை அரசாங்கம் பதில் சொல்லவே இல்லை. பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் வந்து ஒரு முஸ்லிம் சுட்டால், 'இந்தியாவுக்கு ஆபத்து’ என்று பூதாகாரமாக்குபவர்கள், ராமேஸ்வரத்துக்குள் வந்து 600 பேரைச் சுட்ட பிறகும், அமைதியாக இருப்பது சகிக்கவே முடியாதது!

கச்சத் தீவு வந்தால் அழுகை நிற்கும்!

ராமேஸ்வரத்தில் இருந்து 12 கி.மீ தூரத்தில் இருக்கும் அழகான தீவு கச்சத் தீவு. கச்சம் என்றால் ஆமை என்று அர்த்தமாம். ஆமைகள் அதிகம் உள்ள இடம் என்பதால், இப்படி ஒரு பெயர் வந்ததாம். ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலம் காலமாக மீன் பிடித்து வந்த பகுதி அது. சேதுபதி மன்னனுக்குச் சொந்தமான எட்டுத் தீவுகளில் இதுவும் ஒன்று. பிரிட்டிஷார் ஆட்சியின்போது அவர்களது எல்லைக்கு உட்பட்ட அரசு புறம்போக்காகச் சொல்லப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, கச்சத் தீவு எங்களுக்குத்தான் சொந்தம் என்றார்கள். ஆனால், அதற்கு முந்தைய 300 ஆண்டு கால இலங்கை வரைபடத்தில் கச்சத் தீவைச் சேர்த்தது இல்லை. இலங்கையின் இந்தக் கோரிக்கை சாத்தியமானது அல்ல என்று அன்றைய பிரதமர் நேரு மறுத்தார். ஆனால், காலப் போக்கில் இலங்கைக்குக் கச்சத் தீவைத் தாரை வார்க்கும் மனநிலைக்கு பிரதமர் இந்திரா வந்தார். அமெரிக்காவை, இலங்கை அரசாங்கம் அதிகமாக நம்புகிறது, அமெரிக்காவின் காலடி இலங்கையில் பதியாமல் தடுக்க, இலங்கைக்கு ஏதாவது கைமாற்றாகக் கொடுக்கலாம் என்று நினைத்து இந்திரா, கச்சத் தீவை 1974-ம் ஆண்டு தூக்கிக் கொடுத்தார்.

அதுவரை நிம்மதியாகப் போய் மீன் பிடித்து வந்த மீனவர்களைத் தைரியமாக அடிக்க ஆரம்பித்த சிங்களக் கடற்படை, இன்று வரை நிறுத்தவில்லை. அந்த ஒப்பந்தத்தில்கூட இந்திய மீனவர்கள் கச்சத் தீவு வரை வந்து இளைப்பாறவும், தங்களது வலைகளைக் காயவைக்கவும் உரிமை உண்டு என்றும், அங்குள்ள அந்தோணியார் கோயில் விழாவுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் வந்து வணங்கிச் செல்லவும் தடை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பிரதமர் ராஜீவ் போட்ட ஒப்பந்தமும் இந்த ஷரத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆனால், மீனவர்களை அந்தப் பக்கம் நெருங்க முடியாத அளவுக்கு அடிக்கிறார்கள் என்றால், தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்துக்குத்தான் இருக்கிறது.

'கச்சத் தீவைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டவர் ஜெயலலிதா. 2007-ம் ஆண்டு ஒரு மீனவர் கொல்லப்பட்டபோது, 'கச்சத் தீவை மீட்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது’ என்று சொன்னவர் கருணாநிதி. இவர்கள் இருவரும் சொன்னதைச் செய்தால் மட்டும்தான், கடலோரத்தில் ரத்தக் கசிவு நிற்கும்!

மீனவர்கள் என்ன செய்யலாம்?

''எங்களுக்குக் கடல் எல்லை தெரியவில்லை. அதனால்தான், தாண்டிவிடுகிறோம். கரைக்கு அருகே மீன் வளம் குறைந்ததால்தான் உள்ளே தூரமாகச் செல்ல நேர்கிறது'' என்று யதார்த்தமான காரணத்தைச் சொல்கிறார்கள் மீனவர்கள். இந்தக் காரணத்தை பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணனே ஒருமுறை ஒப்புக்கொண்டார். ''இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பது முறையற்றதுதான். ஆனாலும், கடலுக்குப் புறப்படும் எந்த மீனவனும் மீன் வளம் எங்கே இருக்கிறதோ, அங்கேதான் போவார்கள். எனவே, இந்திய, இலங்கை எல்லைக்கோட்டைத் தாண்டி மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவரைத் தடுக்க முடியுமா? அப்படி அவர்கள் சென்றால், அவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுடலாமா? துப்பாக்கியால் சுடாதீர்கள், இந்திய மீனவர்களைக் கொல்லாதீர்கள் என்று இலங்கை அரசிடம் சொல்லியுள்ளோம். ஒத்துழைப்பதாக இலங்கை அரசும் உறுதி அளித்துள்ளது'' என்று சொன்னவர் எம்.கே.நாராயணன்.

அதையும் மீறித்தான் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. இதைத் தடுப்பதற்கான வழிமுறையை மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் முதல்வர் கருணாநிதியே சொன்னார், ''இது தொடர்ந்தால், எங்கள் மீனவர் கை, மீனை மட்டுமே பிடித்துக்கொண்டு இருக்காது!''

ஆனால், அது அவருக்கே இப்போது நினைவில் இருக்குமோ, என்னவோ?

ஆனந்த விகடன் 26-ஜனவரி-2011

Tuesday, February 15, 2011

ஊழல் கரை படிந்துள்ள இஸ்ரோ!



இந்திய விண்வெளி ஆய்வு மையம் சுருக்கமாக இஸ்ரோ 1969 சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்டது. இந்தியாவின் விண்வெளி தந்தை என அழைக்கப்படும் விக்ரம் சாராபாய் அவர்களால் உருவாக்கப்பட்டது.

நிலவில் நீர் உள்ளதா?, சந்திரனில் காற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்ய ராக்கெட் ஏவுவது முதல், விமானம் பறக்க ரூட் போட்டு தருவது, விமானங்களை கண்காணிப்பது, சேட்டிலைட் தொலைக்காட்சிகளுக்கு சிக்னல்கள் தருவது, மொபைல் போன்களுக்கு சிக்னல்கள் தருவது, விண்வெளியில் இருந்தபடி பக்கத்து நாட்டை உளவு பார்க்க சாட்டிலைட் ஏவுவது போன்றவை இஸ்ரோவின் பணியாகும். பெங்களுர், ஐதராபாத், திருவனந்தபுரம், சத்திஸ்கர் என நாட்டில் 16 இடங்களில் மையங்களை கொண்டு செயல்படும் இஸ்ரோவில் தற்போது 20 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். தற்போதைய தலைவர் ராதாகிருஷ்ணன். இவ்வமைப்பை கட்டுப்படுத்தும் பொறுப்பு நாட்டின் பிரதமர் கையில் உள்ளது. மத்திய அமைச்சரவைக்கு பதில் மட்டுமே சொல்ல கடமை பட்டவர்கள்.

இஸ்ரோவின் செலவுக்கு தேவைப்படும் போதுயெல்லாம் பணத்தை வாரி வழங்கி வருகிறது இந்தியரசு. எல்லாமே ஆயிரம் கோடி, 5 ஆயிரம் கோடி, 10 ஆயிரம் கோடி என்ற அளவில் தான் இதற்க்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த மையம் எப்போதாவது ராக்கெட் ஏவுகிறோம், செயற்கை கோள் ஏவுகிறோம் என்பார்கள். அன்றைய தினம் மட்டும் தலைப்பு செய்தியில் இடம் பிடிக்கும் மற்றப்படி இந்த அமைப்பின் செயல்பாடுகள் சுத்தமாக வெளியே வராது. தற்போது இந்த அமைப்பின் வணிக பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் 2 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் சிக்கியுள்ளது. இஸ்ரோவில் உள்ள அறிவியல் ஆய்வகத்தின் முன்னால் செயலாளரான சந்திரசேகர், 2004 ஆம் ஆண்டு தேவாஸ் மல்டி மீடியா என்ற நிறுவனத்தை தொடங்குகிறார். இந்த நிறுவனம் இணைய தள சேவையில் மட்டுமே தற்போது உள்ளது என தெரியவருகிறது. அப்படிப்பட்ட நிறுவனத்தில் 73 சதவித பங்குகளை வெளிநாட்டை சார்ந்த 4 நிறுவனங்கள் கையில் உள்ளது. இந்த நிறுவனத்தின் 17 சதவித பங்கின் விலை 74 மில்லியன் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிறுவனம் தொடங்கிய வேகத்தில் இஸ்ரோவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறது. அதன்படி இஸ்ரோ ஜிசட்6, ஜிசட்6ஏ என்ற பெயரில் இரண்டு செயற்கை கோளை விண்ணில் ஏவும். அதில் எஸ் பாண்டு எனப்படும் நான்காம் தலைமுறைக்கான அலைவரிசையின் 70 மெகாஹிட்ஸ் காற்றளவு கொண்ட அலைவரிசையை இந்த நிறுவனம் பயன்படுத்தும். 20 ஆண்டுகளுக்கு இந்நிறுவனத்திற்க்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அலைவரிசை வழங்கப்படும். ஜிசட் செயற்கோலை ஏவ தற்போதைய நிலையில் இஸ்ரோவுக்கு சுமார் 2500 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான செலவில் 170 கோடி ருபாய் இஸ்ரோவுக்கு தேவாஸ் நிறுவனம் வழங்கும், செயற்கைகோல் செயல்பாட்டுக்கு வந்தபின் வாடகையாக 1200 கோடி வழங்கப்படும் இதுதான் ஒப்பந்தம்.

இந்த அலைக்கற்றை மூலம் மொபைல் சேவை, பிராட்பேண்ட் இண்டர்நெட் சேவை அதி அதி வேகமாக அளிக்க முடியுமாம். அதோடு இது நான்காம் தலைமுறைக்கான அலைவரிசை என தெரியவருகிறது. அப்படிப்பட்ட அலைவரிசையை அரசு நிறுவனமாக பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் போன்ற நிறுவனங்கள் 13 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளது. ஆனால் ஒரு தனியார் நிறுவனத்திற்க்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் மிக மிக குறைந்த விலைக்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை வெளிக்கொண்டு வந்துள்ள மத்திய தணிக்கை துறை அதிகாரி உலகின் பல நிறுவனங்கள் போட்டி போடும் நான்காம் தலைமுறைக்கான அலைவரிசை ஒதுக்கீட்டில் இஸ்ரோ ஏன் ஏல முறையை பின்பற்றவில்லை, இதை ஏன் பிரதமர் அலுவலகத்திற்க்கு தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது.

இஸ்ரோ நிறுவனம் மிகப்பெரிய அறிவு ஜீவிகளான விஞ்ஞானிகளை உள்ளடக்கிய நிறுவனம். நாட்டின் விண்வெளி பாதுகாப்பில் இவர்களின் பங்கு மிக மிக அதிகம். மக்கள் அதிகமாக நம்பிக்கை வைத்துள்ள இந்த அமைப்பு தனியார் நிறுவனத்திற்க்கு சாதமாக அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை பார்க்கும் போது ஒன்று மட்டும் உண்மையாக உணர்வது, அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல ஆட்சி அதிகாரத்தை வழி நடத்தும், நாட்டின் பாதுகாப்பு துறையில் உள்ள அதிகாரிகளுக்கும் நாட்டின் மீது பற்றில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

எதிர்க்கட்சிகளான பி.ஜே.பி, கம்யூனிஸ்ட் போன்றவை, பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரோவில் 2 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது என குற்றசம் சாட்டியுள்ளது. இதற்க்கு பதிலளித்த பிரதமரும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும், எங்களுக்கு எதுவும் தெரியாது என அறிவித்துள்ளார்கள். கடந்த ஆண்டு கூட 10 ஆயிரம் கோடிக்கு மேல் முழுங்கியுள்ள இஸ்ரோ பற்றி தெரியாது என்பது கேவலமான வெட்ககேடான விஷயம்.

இதையெல்லாம் கவனிப்பதை விட்டுவிட்டு வேறு என்ன வேலை செய்கிறார் இந்தியாவின் பிரதமரான பொருளாதார மேதை. தெரியாது என அவர் சொல்வது விவகாரத்தை மறைக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்கிறார். பின் பல்டியடித்து ஊழலே நடக்கவில்லை என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. எப்போவுமே பிரதமர் அலுவலகம் அப்படித்தான் அறிவிக்கும். இந்த விவகாரத்தை நேர்மையாக விசாரித்தால் இன்னும் பல ஊழல் பூதங்கள் வெளி வர வாய்ப்புண்டு.

நடக்குமா?.