Saturday, May 25, 2013

மலையாளத்திற்கும் செம்மொழி - தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம்

கருணாநிதி இழைத்த ஒரு தவற்றால் மலையாளம் உள்பட ஒவ்வொரு மொழிக்கும் செமமொழி அளிக்கும் தகுதி வந்து விட்டது என்று தமிழ்க்காப்புக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்துத் தமிழ்க்காப்புக் கழகத்தலைவர் இலக்குவனார் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது : - செம்மொழித்தகுதி மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மலையாள மொழிக்கும் செம்மொழித் தகுதி வழங்குவதாக முடிவு எடுக்கப்பட்டு அறிவித்துள்ளனர். மூத்த வழக்குரைஞர் காந்தி அவர்கள் செம்மொழி வரையறைக்காக மத்திய அரசு அமைத்த குழுவிற்கு எதிராக வழக்குகள் தொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் செம்மொழிக்காலத்தை 1.500 ஆண்டு என வரையறுப்பதும் அதன் அடிப்படையில் பிற மொழிகளுக்குச் செம்மொழித் தகுதி ஏற்று அறிவிப்பதும் தவறு என்றாகிறது. ஆனால், மத்திய அரசு, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுதே 2008 இல் செம்மொழித் தகுதி வழங்கியது. பொதுவாக வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது தீர்ப்பிற்கு உட்பட்டு ஆணை பிறப்பிப்பது வழக்கம் என்றாலும், அவ்வாறில்லாமல் வழக்கைத் திரும்பப் பெறச் செய்யப் போவதாகக் கூறியது. மத்தியக் கன்னடப்பல்கலைக்கழகம் அமைத்தல், செம்மொழிக் கன்னட நிறுவனம், செம்மொழித் தெலுங்கு நிறுவனம் நிறுவுதல் முதலான தொடர் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இனி,தொடர்ச்சியாக வங்காளம் முலான பிற மொழிகளுக்கும் வழங்க உள்ளது. தமிழின் சேய் மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழிகள் செம்மொழித் தகுதி பெறுகின்றன என்றால் தமிழுக்குப் பெருமைதானே என எண்ணலாம். ஆனால், வீண் பெருமையால் பயனில்லை. செம்மொழித் தகுதிக்குரிய தொன்மை, முதன்மை, தாய்மை முதலான தகுதிகளற்ற மொழிகளுக்கு அவ்வாறு தகுதியை வழங்குவது முறையல்ல. முத்தான மணியான தமிழ்ப்பேராசிரியர்கள் சிலரே, சேரநாட்டுத் தமிழ் இலக்கியங்களை எல்லாம் பழமலையாளம் எனக்காட்டி உதவியுள்ளனர் என்பதுதான் வேதனையானஉண்மை. வரலாற்றுப் புகழ் தமிழ் தனக்குரிய செம்மொழித் தகுதிக்கான ஏற்பிசைவைப் பெறுவதற்காகப் பல போராட்டக் களங்களைச் சந்தித்துள்ளது. இதனால் பொறாமையுற்ற பிற மொழியினர் மத்திய அரசில் செல்வாக்கைச் செலுத்தி எளிதில் செம்மொழித் தகுதியைப் பெற்று வருகின்றனர். சமசுகிருதத்தைவிடவும் மூத்த மொழியாகவும் சிறந்த தனித்தியங்கும் மொழியாகவும் தமிழ் உள்ளது. ஆனால் சமசுகிருத்திற்கு இணையான உதவியைத் தமிழுக்கு அளிக்க மத்திய அரசு விரும்பவில்லை. எனவேதான் இந்திய மாநில மொழிகள் என்பது போன்று செம்மொழிப்பட்டியலை உருவாக்கி வருகின்றது. அவ்வரிசையில் இன்று மலையாளம் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறான வரலாற்றுப் பிழைகளுக்குக் காரணம் என்ன? இதற்கு வழி விட்டவர் யார்? இக்கேள்விக்கு வருத்தத்துடன் கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டி உள்ளது. செம்மொழிக்கான கால வரைறையை 2000 ஆண்டு என வரையறுக்கப்பட இருந்ததை 1000 என மத்திய அரசு மாற்றியது. மூவாயிரம் ஆக்க வேண்டும், கி.மு. என அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் அறிஞர்கள் குரல் கொடுத்தனர். மலேசியாவில், செம்மொழி அகவைத் திருத்த ஆய்வுக் குழு என முனைவர் ஆறு.நாகப்பன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அதன் சார்பில் மாநாடு நடத்தி, அங்கு அக்டோபர் 27, 2010 அன்று வந்த இந்தியத் தலைமை யமைச்சரிடம் மூவாயிரம் ஆண்டுக் கால வரையறை வேண்டி முறையீடும் அளித்துள்ளனர். முதல்வராக இருந்த பொழுது கலைஞர் அவர்கள், முதலில் ஆயிரம் ஆண்டு வரையறைக்கு ஒப்புக் கொண்டு வலுத்த எதிர்ப்பினால், 1500 ஆண்டு என மாற்றினார். ‘’உன் மொழிக்குத் தகுதி கிடைத்து விட்டது. அடுத்தமொழிக்குக் கிடைப்பதாக இருந்தால் உனக்கு என்ன’’ என்ற தொனியில் நேரில் எதிர்ப்பு தெரிவித்தவர்களிடமும் சொல்லி உள்ளார். முதல் வகுப்பு படிப்பவனையும் முனைவர் பட்டம் பெற்றவரையும் சமமாகக் கருத இயலுமா என அவர் எண்ணவில்லை. காலவரையறைக் குறைப்பிற்கு உடன்படாமல் ஒதுக்கி யிருந்தார் என்றால் இன்றைக்கு இந்த நிலை வந்திருக்காது.மத்திய அரசின் சதி என்பதை உணர்ந்து கால வரையறையை மாற்றாமல் இருக்க வகை செய்திருந்தார் எனில் இவ்வாறு அடுக்கடுக்காக ஒவ்வொரு மொழிக்காகச் செம்மொழித் தகுதி அளித்து உயர்தனிச் செம்மொழியான தமிழைத் தாழ்வு படுத்தும் நிலை வந்திருக்காது. தமிழுக்குத் தலைமை சமசுகிருதத்திற்கும் இநதிக்கும் பிற மொழிகளுக்குச் செலவிடும் மொத்தத் தொகையையும் விடக் கூடுதலாகச் செலவிடும் மத்திய அரசு தமிழுக்கு நிதி ஒதுக்க மனமின்றியும் தமிழின் சிறப்பு வளர்ந்தோங்கக் கூடாது என்பதற்காகவும் இவ்வாறு செய்கின்றது. இனி நாம் என்ன செய்ய வேண்டும்? தமிழக அரசே மூத்த வழக்குரைஞைர் காந்தி அவர்கள் தொடுத்த வழக்கை விரைந்து முடிக்க ஆவன செய்வதுடன் தானும் வழக்கு தொடுக்க வேண்டும். உயர்தனிச் செம்மொழி என்பது தமிழ் ஒன்றே என அறிவிக்கச் செய்து அதன் அடிப்படையில் உலகெங்கும் தமிழைப் பரப்புவம் தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமை கிடைக்கவும் வழி வகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நன்றி : மாலை முரசு

No comments: