Tuesday, November 26, 2013

மனதில் உறுதி வேண்டும் தலைவரின் வழி செல்வோம் மலரட்டும் தமிழீழம்

சில சந்தர்ப்பங்களில் குழப்பமான சூழலில் சிக்குண்டு வாழும் நிலை எமக்கு விதிக்கப் பட்டு விடுகின்றது. எம்மை மீறிய செயல்ப்பாடுகள்… எம்மால் சுமக்க முடியாத சுமைகள் எம் மீது சுமத்தப்படும் போது அவை எம்மை திக்குமுக்காடச் செய்து விடுகின்றுது. எதையும் சமாளிக்க முடியாது என்ற ஒரு சூழலில் தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றோம். anna-thalaiஇங்குதான் முடிவுகள் எடுப்பதில் சிக்கல்கள் உருவாகின்றது. சில சமயங்களில் வாழ்வதை விட இறப்பது சிறப்பானது என்ற முடிவுக்கு வருபவர்களும் உண்டு. ஏன்டா இந்த இனத்தில் வந்து பிறந்தோம் என்று எண்ணவும் தோன்றும. நான் தமிழனாக பிறந்ததனால்தான் என் தலைவனை தலைவனாக பெறும் பாக்கியம் கிடைத்தது. வரலாற்று நாயகர்களுடன் பழகும் பெரும் பாக்கியம் கிட்டியது. தமிழின் தொன்மையான சிறப்பு ஒரு புறம். ஆழகிய மொழியை வளர்க்கப் பாடுபடும் வாய்ப்பும் கிடைத்தது என்ற மகிழ்ச்சி இன்னொருபுறம். பிற மொழிகளும் பல சோக வரலாற்றை கண்டுதான் வளர்ந்துள்ளது. எனவே தமிழானாக பிறந்து தமிழனாக வாழ்வதில் எனக்கு பெருமைதான். உழைப்பில் ஆசையுள்ளவன் தொழிலை வெறுக்கமாட்டான். தாய் மீது அன்பு கொண்டவன் தாய்மொழியை சிறுமையடைய விடமாட்டான். நோக்கம் தெளிவானதாக இருக்குமானால் முடிவுகள் சுலபமானதாக இருக்கும். பிரிவை வகுத்த பின்பு பயந்தென்ன இலாபம்.. என்ற கண்ணதாசன் வரிகள் நடைமுறைச் சிக்கல்கல்களை கண்டு பயப்படாது உங்கள் இலட்சிய பயணத்தை தொடருங்கள் என்று சொல்லுகின்றது.. இதுபோன்று எத்தனை பாடல் வரிகள் உள்ளன. நடைமுறைச் சிக்கல் இடத்துக்கு இடம் வேறுபடுகின்றது. நாம் அதை சரியாக பகுத்து அறியாமல் விடை காண அவதிப்படுகின்றோம். உதாரணமாக சிறிய வயதில் சில பிரச்சனைகள் எங்களை பயமுறுத்தியுள்ளன. அவற்றை இலகுவாக வெல்லும் ஆற்றல் அப்பொழுது எம்மிடம் இருக்கவில்லை. அன்றைய சூழலில் எமது அறிவும் வசதியும் அச் சிக்கலைக் கையாள போதுமானதாக இருக்கவில்லை எனலாம். மிகவும் சுலபமாக கையாளக் கூடிய விடயங்கள் அன்று பூதாகாரமான தோற்றத்தை கொண்டு பயமுறுத்தியுள்ளது. இன்று அதை நினைக்கும்போது நாம் வாழ்ந்த வாழ்க்கை முறையின் குறைகளை விளங்க இவ்வளவு ஆண்டுகள் சென்றுள்ளது என எண்ணத் தோன்றுகின்றது. காலம் பதில் சொல்லும் என்பதை நாம் புரிந்துகொள்ள இது நல்ல உதாரணமாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன். ஒரு காலத்தில் முடியாத விடயம் இன்னொரு காலத்தில் இலகுவானதாகி விடுகிறது நாங்கள் ஒரு சிறுவட்டத்துக்குள் இருந்துகொண்டு சிலவற்றை சிந்திக்கின்றேம். எங்கள் ஊருக்குள் மட்டும் நாங்கள் வாழ்ந்தபோது நாங்கள் பெற்ற அறிவும் வாய்ப்புக்களும் போதுமானதாக இருந்ததில்லை. இந்த உலக ஊரெல்லாம் திரிந்து நாம் பெற்ற அறிவும் வளமும் எவ்வளவு வேறுபாடானது என்பதை இன்று உணருகின்றோம். சிந்திக்கும் வளம் கற்றலினால் தோன்றுகின்றது. அனுபவக் கல்வியை மிஞ்சிய கல்வி ஏதும் இல்லை என்பார் கற்றவர்.. எமது அனுபவமின்மை எப்பொழுதும் சில முடிவுகளை எடுக்கத் தடையாக உள்ளது. சில சமயங்களில் மற்றவருடன் முரண்படவும் வழிவகுத்து விடுகின்றது. நோக்கம் ஒன்றாக இருப்பினும் அடைவதற்கான வழிகளில் வேறுபாடுகள் உருவாகின்றது. நோக்கம் ஒன்றாக இருப்பினும் பல மார்க்கங்களான சமயங்கள் தோன்றுவதற்கு வெவ்வேறு அனுபவங்கள்தான் காரணமாகின்றன. மற்றவருடைய அனுபவத்துக்கும் மதிப்புக் கொடுக்கும்போது இலகுவாக புரிந்துணர்வு ஏற்பட்டு விடுகின்றது. இஸ்லாமியரின் கலாச்சாரம் பாலைவன சூழலில் உருவாகியது. கொடும் மணல் புயலிலிருந்து தம்மையும் குழந்தைகளையும் பாதுகாக்க பெண்கள் முழவதும் மூடிய ஆடைகளை அணியவேண்டிய அவசியம் தோன்றியது. ஆதுவே காலப் போக்கில் இஸ்லாமிய பண்படாக வலுவடைந்து விட்டது இறைவனை நம்புகின்றவருக்குள் எத்தனை பிரிவுகள் என்றாலும் நோக்கம் இறைபதம் அடைவதுதான். இந்த நடைமுறை வேறுபாடுகள் தோன்றக் காரணமான மொழி சமய பழக்கவழக்கங்கள் புவியியல் அமைப்பு பிராந்திய சமூக பொருளாதார அமைப்பு என்று பல்வேறுவிதமான சூழல் குழம்பு காரணிகளாக அமைந்துவிடுகின்றன. பன்னெடுங்காலம் சில பழக்க வழக்கங்களோடு வாழ்ந்தவரிடம் புதிய மாற்றங்களை இலகுவாக கண்டுவிட முடியாது. எனவேதான் உன்னைப்போல் உன் அயலவனையும் நேசி என்று யேசுபிதா சொன்னார். எமது தமிழ்ச் சமுதாயத்தின் சிக்கலான பழக்க வழக்கங்களை நாம் நன்றாக அறிந்திருந்தாலும் இச் சமுதாயத்தின் சிறப்பான குணங்கள் அதைவிட அதிகமானதாக காணப்படுகின்றது. தோல்லியைக் கண்டு துவண்டு விழும் தமிழன் ஒரு வெற்றிச் செய்தியை கேட்டதும் துணிந்து எழுந்துவிடுவான். சில சமயங்களில் வெற்றிகரமான பின்வாங்கல் எதிர்கால வெற்றியை வலுப்படுத்த அத்தியாவசியமாகின்றது. இச் செயல் எதிரிக்கு இன அழிப்பு செய்ய வழிவகுத்து விடுகின்றது. பாரதூரமன விளைவுகளை ஏற்படுத்தி அழிவுகளைச் செய்ய எதிரிக்கு வாய்ப்பாகி விடுகின்றது. விடுதலைப் போரை நசுக்குவதற்கு எதிரி போராடும் இனத்தை கொடுமையான சித்திரவதைக்குள் உட்படுத்துவான். இக் கொடுஞ் செயலுக்கு காரணம் போராடும் குணம் என்று அடிமைப் படுத்துவான். இங்குதான் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். பொறுமையாக விடயங்களை அலசிப்பார்க்க வேண்டும்.. நிதானமாக எமது இலக்கு நோக்கிய பயணத்தை வலுப்படுத்த தேவையான வழிவகைகளை ஆராய்ந்து செயல்படவேண்டும். என்று மாசேதுங் கூறியுள்ளார் தன் பலம் பிறர் பலம் அறிந்து செயல்பட வள்ளுவனார் போதித்த திருக்குறள் தமிழனை ஈராயிரம் ஆண்டுகளாக வழிமுறை செய்து வருகின்றது. சின்ன பாம்பை அடிப்பதானாலும் பெரிய தடியால் அடிக்கவேண்டும் என்றும் தேசிய தலைவர் கூறுவதும் நாம் அவதானமாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும். எமது தேசிய விடுதலை பல முட்டுக்கட்டைகளை கொண்டிருந்தமை 1977க்கு முன்னதாகவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்தியாவின் கொடும் பிடிக்குள் எமது தாயகம் இருப்பதை தேசியத் தலைவர் தெளிவாக புரிந்து வைத்திருந்தார். இலங்கை பேரினவாதிகளுடன் போரிட்டு வெல்வது மட்டுமன்றி இந்திய கூட்டு மாநில ஆட்சியாளரையும் வெல்ல வேண்டும் என்றும் அவர்களை வெல்வதுதான் சிரமமானது என்று தெளிவுபடுத்தியிருந்தார். இந்த அடிப்படையில்தான் இந்திய சதித்திட்டத்துககுள் அகப்படாமல் தமிழீழ விடுதலைப் புலிகளையும் மக்களையும் வழிநடத்தி எமது போராட்டத்ததை உலக அரங்குவரை கொண்டு வந்துள்ளார் எமது தேசியத் தலைவர். ஓரு மிகப் பெரிய நாடு என தன்னைச் சொல்லிக் கொள்ளும் இந்தியாவின் கூட்டு மாநில ஆட்சி முறைக்கு அசாமின் காஸ்மீரின் விடுதலைப் போராட்டங்கள் எவ்வளவு அச்சுறுத்தலோ அவ்வளவு அச்சுறத்தலாக எமது போராட்டமும் அமைந்து விடும் என்ற கருத்தை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மிக உறுதியாக கையிலெடுத்துளளார்கள். எந்த விலைகொடுத்தும் தமிழீழம் அமைவதைத் தடுப்பது தான் அவர்களின் நோக்கமாக இருக்கின்றது. ஈழ மக்கள் பாமரர் என்ற வகையில் இந்தியா தனது திட்டத்தை 1983க்கு முற்பட்ட காலங்களில் கையாண்டது. தேசிய தலைவர் தவிர்ந்த ஏனைய போராட்டக் குழு தலைவர்கள் இந்தியாவின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டு தாம் இழைத்த பிழையை தேசிய தலைவர் மீது சுமத்தி தம்மை நியாயப்படுத்த முனைந்து தோல்வி கண்டனர். தமிழீழ மக்களின் விவேகத்தின் மிது நம்பிக்கை கொண்டு தேசியத் தலைவர் போராட்டத்தை விரைவுபடுத்த தொடங்கிய காலத்தில் 1987 ல் சிங்கள இராணுவம் மாபெரும் பின்னடைவை சந்திக்கும் போது தமிழீழம் விடுதலை அடையும் சூழலும் உருவாகிக் கொண்டிருந்தது. தமிழீழத்தின் பொது நிர்வாக அலகுகள் தமிழரின் கைக்கு வரத் தொடங்கியிருப்பதை கண்டு டெல்லி அரசு அதிர்ந்தது. நாம் வேண்டாத போது தனது படையை எம்மண்ணில் நேரடியாக இறக்கி. புல சூழ்ச்சிகளை செய்து எமது தேசிய விடுதலைப் போரை நசுக்க இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சொல்லணா கொடுமைகளை எம்மீது திணித்து பயனற்று இழப்புடன் நாடு மீண்டது. தனது திட்டம் சிறு பயனைக் கொடுத்தது என்ற நிறைவு இந்தியாவுக்கு இருந்தாலும் அது பூரணமான விளைவை ஏற்படுத்த வில்லை. அதி உயர் விலையை கொடுத்தாயினும் தமிழீழ விடுதைலப் புலிகளின் சர்வதேச செல்வாக்கை குலைத்துவிடும் திட்டங்கள் 1990ல் இந்தியாவினால் வகுக்கப்பட்டன. புலம் பெயர் நாடுகளில் பல கூலித்தமிழரும் இந்தியாவின் திட்டத்தை வழிநடத்த தயாராக இருந்தனர். இவர்களுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இலங்கை இ.ந்திய கூட்டுச் சதியாக போதைவஸ்து கடத்தும் நாடகம் அரங்கேறியது. பிடிபடும் அனைவரும் தம்மை விடுதலைப் புலிகள் என்று சொல்வதனூடாக அனுதாபத்தை பெற்று வெளிநாடடு சுங்கப்பிரிவு அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்கும் அளவுக்கு விடுதலைப் புலிகள் மீதான அனுதாபமும் பிரமிப்பும் வெளிநாட்டவரிடையே பரவி இருந்தது. தொடர்ச்சியான இச்சதியால் விடுதலைப் புலிகளின் நற்பெயர் பாதிப்புக்குள்ளானது. தமது முயற்சியில் ஓரளவு வெற்றியை கண்ட இந்திய இலங்கை கூட்டுச் சதியாளர். துமது அடுத்த கட்ட நடவடிக்கையாக சிறர்களை படையில் இணைக்கும் விடையத்தை கையிலெடுத்தனர். தமது அதிகாரத்தையும் அரசியல் செல்வாக்கு நிதி வசதி என்பவற்றை பயன்படுத்தி பல செய்தி நிறுவனங்களை தம் வசமாக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளை மிக இலகுவாக பரப்பினர். ராஜீவ் காந்தி முதல் கதிர்காமர் வரை பல கொலைகள் மிக இலகுவாக நடத்தப்பட்டன. இவற்றை தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டு நடத்தியதாக மின்னல் வேக பரப்புரைகள் நடந்தேறின. சிங்கள கிரமங்கள் மீதான பல தாக்குதல்களும் பள்ளிவாசலகள் மீதான தாக்குதல்களும் கூட விடுதலைப் புலிகளின் பெயரில் நடத்தப்பட்டன. இவை உலக அரங்கில் மிக கொடுமையாக எடுத்துக் காட்டப்பட்ட போது பலரும் அதை நம்ப வேண்டிய சூழல் உருவாகியது. இதுவே விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலுக்குள் சில நாடுகள் சேர்த்துக் கொள்ள போதுமானதாக இருந்தது. தேசியத் தலைவரை நன்கு தெரிந்திருந்த இந்திய ஆட்சியாளா தலைவரின் தன்நலமற்ற சமூக நலத்திட்டங்களைக் கண்டு மிரண்டு போயினர். மகாத்மா காந்தியை நாவளவில் வைத்துக் கொண்டு மிக மோசமான ஆட்சியை நடத்துபவர் மத்தியில் மகாத்மா காந்தியின் சிந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு ஒரு அழகான நாட்டை கட்டிய பெருமை தேசியத்தலைவருக்கு உரியது. தெற்காசியாவின் புரையோடிப் போன வறுமையும் பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறையும் சாதிக் கொடுமையும் தமிழீழத்தில் துடைத்து ஒழிக்கப்பட்டது. இந்த பிராந்தியத்தின் ஆட்சியாளர்களிடையே தங்களை தங்கள் நாட்டு மக்கள் இழிவுபடுத்த தமிழீழம் வழி வகுத்துவிடும் என்ற பயமும் இருக்கின்றது. ஏறக் குறைய மூன்றில் ஒரு பங்கு தமிழீழ மக்கள் வெளிநாடுகளில் வசதியாக வாழ்வதால் தமிழீழம் மேற்குலகின் கொள்கையை தனது கொள்கை வகுப்புக்குள் செல்வாக்கானதாக ஆக்கிவிடும் என்ற பயமும் இந்தியாவுக்கு உண்டு. சாக்கடைப் பெருச்சாளிகள் போன்று குப்பத்து மக்கள் இல்லாத வளமான நாடாக தமிழீழம் அமைந்து விடுவது இந்திய அரசியலில் பல குழப்பங்களளை உருவாக்கிவிடும் என்ற பயமும் இந்தியாவுக்கு உண்டு. இதை விட சிங்கள தேசமும் தனது கையை விட்டு சென்றுவிடும் என்ற பயமும் இந்தியாவுக்கு உண்டு. ஈழப் பிரச்சினை ஒன்றுதான் சிங்கள தேசத்தை இந்தியாவின் கைக்குள் வைத்திருக்க உதவுகின்றது. ஈழப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்த இந்தியா எப்பொழுதும் முயற்சி செய்யும். வுலுவுள்ள ஒரு நாடாக பாகிஸ்தான் போன்று சிங்கள தேசம் வளரும்போது வங்காளதேசம் அமைந்ததுபோல் ஈழம் அமையலாம். ஆனாலும் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. தமிழ் நாடு பிரிந்து விடும் என்ற பயம் இந்தியாவுக்கு நிறையவே உண்டு. அதனால்தான் சிங்கள தேசத்துடனாக சீனாவின் பாகிஸ்தானின் சிநேகத்தையும் இந்தியா விரும்புவதில்லை. தமிழர்களாகிய எங்கள்மீது பல அவதூறான பொய்யான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. தெரிந்தோ தெரியாமலோ உங்கள் செயல்கள் எம் இனத்தின் நற்பெயரைக் கெடுக்காமல் பார்த்துக் கொண்டாலே அது நீங்கள் எம் இனத்துக்கு செய்யும் பெரும் நற்செயலாகும். அதை விட ஒரு படிமேலாக எங்கள் போராட்டம் பற்றிய விளக்கத்தையும் உண்மை நிலையையும் உலகத்தாருக்கு எடுத்துச் சொல்வதனூடாக நீங்களும் தேசிய உணர்வாளராக தேசிய தலைவரால் தமிழீழத்தில் மதிப்பளிக்கப்படுவீர்கள் அன்புத் தமிழ் மக்களே நாம் எத்தகைய சிக்கலில் உள்ளோம் என்பதை தலைவர் மிகத் தெளிவாக உங்களுக்கு பல கோணங்களில் தெளிவு படுத்தியுள்ளார். எம்மைச் சூழ பல நடைமுறைச் சிக்கல்கள் காணப்பட்டடாலும் போராடும் தன்மையை இழக்காமல் காய் நகர்த்தலை மேற் கொள்ள தலைவர் படும் துயரம் நெருப்புள் வாழ்வதை விடக் கொடியது. எங்கள் இனத்துக்காக முப்பதாயிரத்துக்கும் அதிகமான மாவீரரும் நூற்றைம்பது ஆயிரத்துக்கும் அதிகமான தன்மானத் தமிழரும் தற்கொடை ஆகியுள்ளனர். இவர்களின் தியாகம் எமது மன உறுதியை வளர்த்துள்ளது. உலக நாடுகளிடம் எங்கள் நியாயங்களை இடை விடாது எடுத்துச் சொல்வதனூடாக எங்கள் தாயகத்தை மீடகும் தார்மீக கடமை புலம் பெயர்ந்து வாழும் எம்மிடம் தேசியத் தலைவரால் ஓப்படைக்கப்பட்டுள்ளது.. யார் எதைச் சொன்னாலும் சொல்லிவிடடுப் போகட்டும்.. எவர் வேண்டுமானாலும் அறிக்கைளை விடட்டும். எமது தலைவரின் சிந்தனை எது என்று உங்களுக்கு தெரியும். தலைவர் வெளிப்படும்வரை பொறுமையாக நிதானமாக உறுதியோடு செயல்ப்படுங்கள். இந்திய வல்லாதிக்கம் இலங்கை இனவாதிகளின் சதி வலைக்குள் தானாக சிக்கித் தவிக்கின்றது. இலங்கை இனவாதமும் சீர்குலைந்து நாசவழியை தேடிக்கொண்டு தவிக்கிறது. நீங்கள் புத்திஜீவிகளாக வாழ்கின்றீர்கள். எதையும் பகுத்தறிந்து செயற்படக் கூடியவர்களாக இருக்கின்றீர்கள்;. இன்றும் உங்கள் இதயத்துள் ஆறாத வடுக்களாக பல துயரங்கள் இருக்கின்றன. இவை எல்லாம் எப்படி நடந்தேறின என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்துள்ளீர்கள். நாங்கள் நீதியின் பக்கம் நின்று இவ் உலகிடம் நீதி கேட்கின்றோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எமது பாதை எது என்பதும் தேசியத்தலைவரின் வழிநடத்தலும் எம்மிடம் நிலைத்திருக்கும். தமிழ் தேசத்தின் சிற்பம் செதுக்கப்பட்டு பாதி வேலை முடிந்த நிலையில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சகல சர்வதேச தடைகளையும் தகர்த்து எம் இனிவரும் சந்ததிக்கு நல்லதொரு வாழ்வைக் காட்ட இப்புலம் பெயர் நாட்டின் வாழ்க்கை வாய்ப்பபை பயன் படுத்துவோம். நாம் புலம் பெயர்ந்தது அகதியாக வாழ்ந்து மடிவதற்காக இல்லை நம் நாடு காணும் இறுதிப் பணி ஏற்று விடிவு காண்பதற்காக. காலம் இட்ட கட்டளை உன்னையும் என்னையும் புலம்பெயரச் செய்துள்ளது. தேசப் பணியாற்ற விரைந்து வா. மனதில் உறுதி வேண்டும் தலைவரின் வழி செல்வோம் மலரட்டும் தமிழீழம்

Saturday, November 23, 2013

தமிழீழ மாவீரர் வாரம் கார்த்திகை 21 - 27

தமிழீழ மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகிறது,எங்கள் மண்ணின் விடுதலைக்காய் விதையாகிப் போன இந்த எங்கள் விடுதலை வீரர்கள் கனவுகள் அரியவை, பெரியவை, போற்றத்தக்கவை. சிங்களதேசத்தில் தமிழர்கள் வகைதொகையின்றி அழிக்கப்பட்டனர். உடைமைகள், சொத்துகள் களவாடப்பட்டது. காணாமல் போதல் கைதுகள் என எண்ணற்ற கொடுமைகள் அரங்கேற்றப்பட்டது. இந்நிலைலேயே எம் தன்னிலை மாறாத் தலைவன் ஈழ விடுதலையை தீவிரமாக்கினார். பல்லாயிரம் சங்கர்களும், மாலதிகளும், மில்லர்களும் ஏன் அங்கயற்கண்ணிகளும் விடுதலை வேள்வியில் ஆகுதியாயினர். அழிக்கப்பட்டதாய் சொல்லப்படும் எம் போராட்டம் தமிழீழம் என்ற எம் மாவீரர் கனவுகளால் எட்டப்படும், அவர்கள் துக்கமின்றி உழைத்த கனவுகள் எப்படி வீண் போகலாம்? வெறும் மாவீரர் எழுர்சியை அனுட்டிப்பதில் பயனில்லை மாவீரர் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் திறனும் ஆற்றலும் புலம்பெயர் தமிழர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எத்தனை துரோகங்களிலும், தடைகளிலும் அதை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டில் நாமிருக்கிறோம். தமிழீழ விடுதலை என்பது வெறும் கனவல்ல என்று உலகமும், சிங்களமும் ஒருநாளில் அறிந்து கொள்ளட்டும். தியாகங்களால் எம் மாவீரர்கள் விடுதலை பயணத்தை உச்சத்தில் வைத்தனர். எதையும் முடிக்கும் வல்லமை காட்டினர். தமிழரின் வீரம் பிறப்பிலென்று பறை சாற்றினர். காலங்காலமாய் எமது விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளை எங்கள் மாவீரர்களே உடைத்து வெற்றி கொண்டனர். தியாகத்தின் எல்லையை தொட்டு நின்றனர். "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள்! உயர்ந்தவர்கள்! நானும் உண்மையானவனல்லன்." என தேசிய தலைவர் சொல்லுவார். சிறிதாய் சொல்லப்போனால் அந்தந்த வயதில் கிடைக்கவேண்டியதை விடுத்து, அந்த மாவீரர்கள் செய்ததெல்லாம் தமிழரின் விடுதலைக்காகவன்றி வேறெதற்காய்? அந்த வீரர்களின் தியாகத்துக்காய் இந்த வாரம் நாம் சிந்தும் கண்ணீரே நாம் அவர்களுக்கு செய்யும் மிகச் சிறிய நன்றிக்கடன் என கொள்வீர். நம் கோவில்களான கல்லறைகளை உடைத்து விடுவதால் எங்கள் மனங்களின் தொழுகைகளை நிறுத்த முடியாது, ஏழு நாட்டகள் எமக்கு எந்த ஆடம்பர நிகழ்வுகளும் வேண்டாம், சொந்த குருதி வடியும்போது சந்தோசம் வருமா எங்கிருந்தாவது? தமிழராக முன்பு மனிதனாக வேண்டும். கார்த்திகையில் வானம் கூட அழுது தொழும் எம் செம்மனச்செல்வங்களை, கார்ர்த்திகைப் பூவும் பூத்து வணங்கிக்கொள்ளும், விதையானவர் தமிழீழம் மலரவென்பதால் இயற்கை வணக்கம் செய்யும். "சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்து சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதி எடுத்துக்கொள்வோமாக" என்ற தேசிய தலைவரின் கூற்றுக்கிணங்க, வரலாறு தந்த வீரர்களை நினைவுகொள்வோம், அவர் பாதையில் நடந்து இலட்சியம் வெல்வோம்.

Friday, November 8, 2013

தமிழ் இந்துவே! தமிழ் அழிப்பு வேலையை நிறுத்து! இல்லையேல் உன் இதழை நிறுத்து!

இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம் ஒருங்கிணைப்பாளர், இலக்குவனார் இலக்கிய இணையம், அமைப்பாளர், தமிழ்க்கூட்டமைப்புகள் இந்து நிறுவனத்தார் தமிழ் முறைக்கு மாறான முறையில் பெயரைச் சூட்டிக் கொண்டு தமிழில் நாளிதழ் நடத்துகின்றனர். இதன் நோக்கம், தமிழ் வளர்ச்சியல்ல; தமிழ்வாசகர்கள் மூலம் பணம் பெருக்குவதே! ஆனால், அதே நேரம் தமிழ் வாசகர்களுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுவருவதுதான் கண்டனத்திற்கு உரியதாக உள்ளது. ஆங்கிலப் பெயர் கொண்ட தமிழ் நாளிதழில் பல்துறைக் கட்டுரைகள் வெளிவந்தாலும், அவற்றின் நடை தமிழைச் சிதைப்பாகவே உள்ளன. இவ்வாறு தான் நடத்தும் ஆங்கில இதழில் ஆங்கில நடையைச் சிதைத்து எழுத முன்வருமா இவ்விதழ்? வராது! அங்கே, நல்ல ஆங்கிலத்தில் புதிய புதிய சொற்களைப் பயன்படுத்தி ஆங்கிலக் காவலராக விளங்குவதிலேயே பெருமை கொள்கிறது. இதே அளவுகோலைப் பயன்படுத்தித் தமிழ்க்காவலராகவும் விளங்கலாமே! ஏன், அவ்வாறு விளங்காமல் தமிழ் அழிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது? மக்களால் விரட்டியடிக்கப்படும்வரை மோதிப்பார்ப்போம் என்கிறதா? இத்தகைய இதன் தமிழ் அழிப்புப் பணிகளில் ஒன்றுதான் தமிழறிவற்ற கதையாளர் ஒருவரைக் கொண்டு, “ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?” என வந்துள்ள கட்டுரை. கட்டுரைப் பிதற்றலில் உள்ள சில வரிகள் பற்றிப் பார்ப்போம்! “தாய்மொழியைத் தேர்வுகளில் எளிதாக வெல்வதற்கு மட்டுமே தட்டுத்தடுமாறி வாசிக்கவும் ஓரளவு எழுதவும் கற்கின்றனர். . . . கல்விக்கு உதவாமல் வெறுமே மொழியறிவுக்காக மட்டுமே கற்கப்படும் இரண்டாம் மொழியை விட்டுவிடுகிறார்கள்” என்கிறார் இவர். தாய்மொழி மட்டுமல்ல, எல்லாப் பாடங்களுமே தேர்வு நோக்கில் கற்கும் வகையில்தான் நம் கல்விமுறை உள்ளது. மாற்ற வேண்டியது கல்வி முறையைத்தான். தாய்மொழிக்கல்வியை அல்ல! தமிழ்வழியில் அனைத்துக் கல்வியும் அமைந்தால் தமிழ் நிலைக்கத்தானே செய்யும்! “மொழிக்கும் எழுத்துருவுக்குமான உறவு என்பது ஒரு மனப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். . . . . குழந்தைகள் மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றன” என்பது மற்றோர் உளறல். இந்த மனப்பயிற்சி என்பது ஆங்கிலத்திற்கும் பொருந்தும் அல்லவா? அயல் மொழியில் மேற்கொள்ள வேண்டிய கடினமான பயிற்சியைவிடத் தாய்மொழியில் எளிதில் பயிற்சி மேற்கொண்டால் போதுமல்லவா? “மலாய் போன்ற பல மொழிகள் இன்று ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதப்படுகின்றன. அந்த மக்கள் ஆங்கிலம் கற்பது எளிதாகிறது” எனக் கதை சொல்வது மிகவும் தவறான வாதம். மலாய் மக்களில் பொது இடங்களில் பணியாற்றுபவர்களுக்குக்கூடப் பேருந்து எண்கள், நேரங்கள், கட்டண விவரங்கள், உணவுப் பொருள்கள் விலைகள், பிற பொருள்களின் விலைகள், முதலான பயணத்திற்குத் தேவையான எவ்விவரத்தையும் ஆங்கிலத்தில் சொல்லத் தெரியவில்லை. (ஆங்கிலம் தெரிந்திருந்தால்தானே இவற்றைப் புரியவும் சொல்லவும் முடியும்.) எனவே, ஒரு வரிவடிவில் மற்றொரு மொழியைப் படிப்பதால் அம் மொழியையும் அறிந்தவர் ஆவோம் என்பது அறியாமையே! “இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் ஆங்கில எழுத்துருக்களில் எழுதப்பட்டால் பெரும்பாலான மொழிகளை மிகச் சில நாட்களிலேயே வாசித்துப் புரிந்துகொள்ள முடியும்” எனச் சரடு விடுகிறார். வரிவடிம்தான் மொழியின் அடையாளம். அவ்வாறிருக்க ஆங்கில எழுத்துரு எனச் சொல்லப்படும் உரோமன் எழுத்தில் படிக்கும் பொழுது, எந்த மொழி என எவ்வாறு அறிய இயலும்? மேய்ச்சலைக்குறிக்கும் ‘மேய்’ என்பதை ஆங்கில எழுத்தில் எழுதினால், அதனை மே மாதம் என்றாவது ஆங்கிலத்தில் உள்ள துணை வினை என்றாவது அறிவார்களே தவிர, தமிழ்ச்சொல் என எங்ஙனம் உணர்வார்கள்? தமிழே தெரியாமல் தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்தில் படித்தால் எங்ஙனம் தமிழ் எனப் புரிந்து கொள்வார்கள்? தமிழ் எழுத்துகள் அறிவியல் முறையில் அமைந்தவை. தமிழ் உயிர்மெய்யெழுத்துகள் எளிதில் சொற்களைப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் உதவுவன. ‘த’, ‘மி’, ‘ழ்’ என மூன்றெழுத்தைச் சேர்த்தால் தமிழ் என வாசித்து விடலாம். ஆனால், ஆங்கிலத்தில் எழுதினால், ‘டி’, ‘எச்’, ‘ஏ’ - த, ‘எம்’, ‘ஐ’ - மி, ‘இசட்’, ‘எச்’ - ழ் > தமிழ் என எழுத்துக் கூட்டிவரும் எழுத்துகளைச் சேர்த்து வாசிக்க வேண்டும். தேவையற்ற உழைப்பும் நேரமும் இதில் செலவாகாதா? “மொழிக்கு அடிப்படை ஒலியே என்றும் வரிவடிவம் மாறுவதால் மொழி அழியாது என்றும் சிலர் கூறி வரி வடிவத்தைச் சிதைப்பதற்கு ஆதரவு திரட்டுகின்றனர். எழுத்தாகிய உடல் இல்லையேல் மொழியாகிய உயிர் அழியும் எனப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தெளிவுபடுத்தியுள்ளார். எழுத்தாகிய உடல் சிதைந்தமையால், மொழியாகிய உயிர் தங்குவதற்கு இடமின்றி அழிந்துள்ளதை வரலாறு காட்டுகின்றது. பரதகண்டம் முழுமையும் வழங்கி வந்த தமிழ் மொழி, புதிய புதிய வரி வடிவங்களுக்கு இடம் அளித்ததால்தான் பிறமொழிச் சொற்களும் உள்ளே புகுந்து இக் கண்டம் முழுவதும் புதுப்புது மொழிகள் தோன்றின. எனவே, இப்பொழுது மேற்கொள்ளும் எழுத்துச்சிதைவு முயற்சி எஞ்சியுள்ள தமிழ்நிலத்தையும் இல்லாதாக்குவதற்கான முயற்சியே அன்றி வேறு இல்லை.” (எழுத்தைக் காப்போம் ! இனத்தைக் காப்போம்!- பக்கம் 6) “எழுத்துருக்கள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல” என்று வரிவடிவ அழிப்பிற்குச் சப்பைக்கட்டு கட்டுகின்றார். இதற்குப் பின் வரும் குறிப்புகளைக் கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன். “கல்விக்கு அடிப்படையாய் அமைவன எண்ணும் எழுத்துமாய குறியீடுகள் என்பதை உணர்த்தவே எண்ணையும் எழுத்தையும் கண்களாகக் கூறுகிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். இதனை நன்குணர்ந்த நம் முன்னோர் எண் எழுத்து உருக்களைப் பேணி வந்துள்ளனர். கல்வெட்டுகளில் உள்ள மாற்றங்களுக்கும் தமிழ் மொழி எழுத்து வளர்ச்சிக்கும் தொடர்பில்லை என்பதை உணர்ந்தால் தமிழ் எழுத்து மாறா வடிவுடன் நிலைத்து வருவதை உணரலாம். எனவேதான் “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என்கிறது நன்னூல். அதனை, அதற்கு 1000 ஆண்டுகளுக்குப் பின் வந்த இலக்கண விளக்கமும் வழி மொழிகின்றது. (நன்னூல்: எழுத்ததிகாரம்: 5.உருவம்: நூற்பா 98 - இலக்கண விளக்கம்: எழுத்தியல்: நூற்பா 23) அஃதாவது எல்லா எழுத்துமே மிகத் தொன்மையான காலத்தில் இருந்துமாறாமல் வருகின்றன என இலக்கண நூல்கள் கூறுகின்றன. காலந்தோறும் சிலர் எழுத்து வடிவங்களில் குறை கண்டு மாற்ற வேண்டும் என்று துடித்ததால்தான் “எண்ணெழுத்து இகழேல்” (ஆத்திச்சூடி 7) என்று ஔவையார் தெளிவாகவே கூறிச் சென்றுள்ளார். எண், எழுத்து வடிவங்களில் சிதைவு உண்டானால் அவை வெளிப்படுத்தும் அறிவு வளத்திலும் சிதைவு ஏற்படும் என்பதை உணர்ந்தே இவற்றை நம் முன்னோர் போற்றி உள்ளனர். மொழி வழித் தேசிய இனம் அழியாமல் இருக்க மொழி அழியாமல் காக்கப்படவேண்டும்; மொழி காக்கப்பட அதன் இலக்கியங்கள் பேணப்பட வேண்டும்; இலக்கியங்கள் போற்றப்பட மொழியின் எண்ணும் எழுத்தும் காப்பாற்றப்பட வேண்டும். இஃது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். இந்திய அரசியல் யாப்பும் (Constitution of India: பிரிவு 29(1)) இதை உணர்ந்தே எழுத்து வடிவங்கள் காக்கப்பட வேண்டும் என விதி வகுத்துள்ளது. ஆனால், நடைமுறையில் தேவநாகரியையும் கிரந்தத்தையும் புகுத்திப் பிற தேசிய மொழிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. (எழுத்தைக் காப்போம் - இலக்குவனார் திருவள்ளுவன், நட்பு இதழ்) 1950 இல் உரோமன் எழுத்துகளில் தமிழை எழுத வேண்டும் என ஆங்கில நாளிதழ் ஒன்றின் வழிச் சிலர் முயன்றனர். பேராசிரியர் சி.இலக்குவனார் முதலானவர்கள் முயற்சியால் அதற்கு முடிவுரை கட்டப்பட்டது. இப்பொழுது மீண்டும் அம் முயற்சியில் 'இந்து' இதழ் இறங்கி மூக்குடைபடுவது தேவைதானா? எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே! மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே! இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே! என்னும் பாவேந்தர் பாரதிதாசன் முழக்கங்களை ஏற்று நம் தமிழ் மொழியின் எண்ணையும் எழுத்தையும் காக்கப் பெரும்திரளாய்த் தமிழன்பர்கள் உள்ளனர். எனவே, தமிழ் இந்துவே, மொழிக் கொலையை நிறுத்திக்கொள்! தமிழ் அழிப்பு முயற்சிக்கான கட்டுரையை இணையப் பக்கத்தில் இருந்து எடுத்துவிடு! தமிழால் பெட்டியை நிரப்பும் இந்துவே! தமிழைக்காக்காவிட்டாலும் தமிழ் அழிப்பு முயற்சியில் ஈடுபடாதே! அல்லது உன் தமிழ்ப்பதிப்பை நிறுத்திவிடு! நிறுத்திவிடு! நிறுத்திவிடு! மக்களெல்லாம் தாய்மொழியைக் கற்பதற்கு மடத்தனமாய்க் கற்பிக்கும் முறையை மாற்றிச் சிக்கலின்றித் தெளிவாக உணருவதற்குச் செம்மைநிலை காணாத ஆங்கிலத்தால் தக்கஒரு தகுதியினைப் பெற்றாற் போன்று தமக்குள்தாம் பெரியார் என எண்ணிக்கொண்டு தக்கைகளாய்த் தலைநிமிர்ந்து ஆடல்வேண்டா (- பாவேந்தர் பாரதிதாசன்)

Monday, November 4, 2013

தமிழக தமிழின போராளிகளை பயங்கரவாதியா

தமிழக தமிழின போராளிகளை பயங்கரவாதியாக சித்தரிக்க முயலும் ஆரிய திராவிட அரசிற்கு உங்கள் கண்டனத்தை பதியுங்கள்! தமிழக அரசு ஈழ மக்களுக்கு ஆதரவாக சட்ட மன்ற தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு அவர்களுக்காக போராடும் தமிழின போராளிகள் மீது முதன் முறை யாக “தேசியப் பாதுகாப்பு சட்டம்” என்ற கடுமையான போக்கை கையாண்டு தனது இரட்டை நிலையை வெளிப் படுத்தியுள்ளது. ''தமிழக அரசின் தீர்மானத்தை அவமதிக்கும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய அரசே, தமிழர்களின் உணர்வை அவமதிக்காதே. சல்மான் குர்ஷித்தே, மன்மோகன்சிங்கே இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாதே...சட்டமன்ற தீர்மானத்தை இழிவுப்படுத்திய இலங்கை தூதர் கரியவாசகமே, இந்தியாவை விட்டு வெளியேறு. மத்திய அரசே... தமிழர்களின் கோரிக்கையை அவமதித்து, இந்தியா உடைவதற்கு வழி வகுக்காதே''.. என்ற கோரிக்கைகள் அடங்கிய துண்டரிக்கைளை பரவ லாக கொடுத்து அதன் அடிப்படையில் மயிலாப்பூர் மற்றும் சேலம் அஞ்சல் நிலையத்தின் மீது “திராவிடர் விடுதலை கழகம்” தமிழர்கள் 4 பேர் தாக்குதல் நடத் தியதற்காக அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், மற்றும் அவர்களை தூண்டியதாக அண்ணன் கொளத் தூர் மணி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதற்கு முன் இதே தோழர்கள் அயோத்திய மண்டப தாக்குதல், காவிரி சிக்கலில் ஆளுநர் மாளிகை உணவக தாக்குல், 2009ல் ஈழ ஆதரவு சிடிக்களை பரப்பியது, புத்த மடாலய தாகுதல், தினமலர் தாக்குதல், எ.ஸ்.வீ. சேகர் இல்ல தாக்குதல், காஷ்மீர் சிக்கலுக்காக போராடி யதற்காகவும் காவல் துறையின் அடக்குமுறையினால் சிறை பட்டிருக்கிறார்கள். மேலும் தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன் அவர்களும் தேடப்படும் குற்றவாளியாக இதில் சேர்க்கப் பட்டுள்ளார். இன்று சிறைப்பட்டிருக்கும் தோழர்கள் நால்வரும் தங்களின் முகம் காட்டாமல் உழைத்த சாமானிய உழைப்பாளிகள். கூலித் தொழிலாளிகள், நாள்தோறும் தங்களின் உழைப்பால் ஈட்டும் கூலியால் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை ஓட்டியவர்கள், சொந்த வீடு இல்லாமல் சாலையோர வீடுகளில் வாழ்பவர்கள் . எதிர் வினையா ற்றினால் என்ன சேதாரங்களை சந்திப்போம் என்று உணர்ந்து செயலாற்றியவர்கள்.. அவர்களுக்கு துணை நிற்போம்.. பொருளாதார முறையிலான உதவிகளை செய்திட விழைவோம். திராவிட இயக்க எதிர்ப்பு என்பது நம்மிடையே பரவி இருந்தாலும் தமிழின சிந்தனை அடிப்படையில் இப் போராளிகளுக்கு உதவுவது ஒவ்வொரு தமிழ் தேசிய வாதிகளின் கடமையாக கருதுவோம். தமிழ்போராளிகளை ீவிரவாதிகளாக,பயங்கரவாதியாக காண்பிக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு உங்கள் கண்டனத்தை பதியுங்கள் . முகநூல் தொகுப்பு