Sunday, October 31, 2010

இந்தியா புலிகளை அழித்து தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டது.போர் முடிந்த பின்னர் நீங்க|ள் சொல்வதனையே நாம் செய்வோமென டில்லிக்கு தமாஸ் காட்டினார் மஹிந்த டில்லியும் போர் முடியட்டும் இப்போ புலிகள் அழிவதுதான் எமது இலக்கு என பேசாமல் இருந்தது. ஆனால் புலிகளை முடித்த பின்னர் தம் அடுத்த திட்டமான இலங்கையினை கையிற்குள் போடும் திட்டம் தடம்புரண்டு போவதனை டில்லி பார்த்துக்கொண்டே பதறுகின்றது.

போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து டில்லி முன்னெடுத்து வந்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் தேக்க நிலையை அடைந்துள்ளனவாம். புதுடில்லியின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகிறது. இதனாலேயே அவை தேக்கத்தை அடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அடுத்த மாதம் இலங்கைக்கு மேற்கொள்ள இருந்த பயணம் இழுபறி நிலையை அடைந்துள்ளதாகப் புதுடில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் அழிந்தார்கள் என்ற கையோடு இந்தியாவும் அமெரிக்க பாணியில் வாக்குறுதிகளை அள்ளி வீசியது, ஒப்பந்தகாரர்களை இலங்கைக்கு அனுப்பியது எல்லாமே இலங்கையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முதலீடாகவே பார்த்தது. ஆனால் இந்தியா புலிகளை அளித்ததைதவிர வேறெதனையும் இன்னமும் சாதிக்க முடியவில்லை.

தமிழ் மக்களைஏமாற்றி உள்வாங்கலாம் என இந்தியா அவசர உதவிகளை வழங்கியது. குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களுக்கான அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டன. அத்தோடு 500 கோடி இந்திய ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்ட உதவிகளையும் புதுடில்லி அறிவித்தது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடை யில் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களையும் விரைவாகச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
ஆனால் இப்போது இந்தத் திட்டங்கள் தேக்க நிலையை அடைந்துள்ளன இவ்வாறு புதுடில்லிசொல்கின்றது.

உண்மையில் தமிழர்களை உள்வாங்கவோ அல்லது தமிழர் இடங்கள் மீது இந்தியா ஆதிக்கம் செலுத்தவோ இப்போ இருக்கின்ற தமிழர்கள் பிரதி நிதிகள் விரும்பினாலும் ஏன் தமிழ் மக்கள் விரும்பினாலும் சிங்களம் விடாது. இதுவே உண்மை.ஆனால் இந்தியா இந்த உண்மையினை மறந்து தமது ஆதிக்கத்திற்கு புலிகள் மற்றும் தமிழீழ கொள்கைதான் தடையாக இருந்ததாக இந்தியா நினைத்து தமிழர் போராட்டத்தினை அழித்து தமிழர்களின் எதிரிகளாக மாறியது.

இந்த விடயத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நரி தந்திரத்தினை ஒத்ததாகவே மஹிந்தவின் திட்டமும் அமைந்திருந்தது. அதாவது இலங்கை தமிழர்களின் நண்பனாக இந்தியா இருக்க கூடாது என்பது சிங்கள ஏகாதிபத்தியத்தின் நீண்டகால திட்டம். ஆனால் தமிழர் போராட்டத்தினை பொறுத்தவரை இந்தியாவை நிரந்தரமாக எதிரியாக பார்க்கும் எண்ணம் இருந்திருக்கவில்லை.

இந்தியா தாம் தமிழர்களுக்கு ஏற்படுத்திய காயத்தை போக்கவும் கூடவே தம் ஆதிக்கத்தை நிலை நாட்டவும் சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு அமைத்துக் கொடுக்கும் என அறிவித்த 50,000 வீட்டுத் திட்டம், வடக்குக்கான ரயில் பாதை புனரமைப்புத் திட்டம், சம்பூர் மின் நிலையத் திட்டம், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம், பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டம் என்பன தற்போது தேக்க நிலையை எட்டி உள்ளதாக அதிகாரிகள் புலம்ப தொடங்கியுள்ளனர்.

இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர இணக்கம் காணப்பட்டிருந்தது. எனினும் இப்போது இலங்கை அரசு புதிதாக நிபந்தனைகளை விதிக்கின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் காணப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் இந்தத் திட்டங்களை இந்திய அரசு தானே முன்னெடுக்க இருந்தது. ஆனால், இரு நாடுகளும் இந்தத் திட்டங்களில் பங்காளிகளாக இருக்க வேண்டும் என்று இப்போது இலங்கை அரசு புதிய நிபந்தனைகளை விதிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான ஒப்பந்தகாரர்களைத் தெரிவு செய்தல், வேலையாள்களைத் தெரிவு செய்தல், மூலப் பொருள் கொள்வனவுகள், திட்டப் பயனாளிகளைத் தெரிவு செய்தல் போன்றவற்றில் தானே முடிவுகளை எடுக்க வேண்டும் எனக் கொழும்பு இப்போது வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்டுள்ள இழுபறி நிலையைத் தொடர்ந்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இது சீனர்களின் ஆலோசனையே என கூறப்படுகின்றது.

ஆனால்

இலங்கையில் சீனா முன்னெடுக்கும் இதுபோன்ற அபிவிருத்தித் திட்டங்களில் இவ்வாறான விடயங்களில் சுதந்திரமாகச் செயற்பட அதனால் முடிகின்றது
அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், நுரைச்சோலை அனல் மின் நிலையத் திட்டம், இராணுவம் மற்றும் பொலிஸாருக்கான வீடமைப்புத் திட்டம் போன்றவற்றில் சீனத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதற்கும், சீன நிறுவனங்களின் இயந்திர சாதனங்களைப் பயன்படுத்துவதற்கும் அனுமதித்துள்ள இலங்கை அரசு அதேபோன்ற வசதிகளை இந்தியாவுக்கு வழங்குவதற்குப் பின்னடிப்பதாக புதுடில்லி வட்டாரங்கள் இப்போ குமுறுகின்றன.

இலங்கையின் நிபந்தனைகளை கடிந்து கொள்வதற்காகவே இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கை வரவுள்ளதாக கூறப்பட்டது ஆனால் இந்த மாதம் வருகை தர இருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பயணம் பிற்போடப்பட்டுள்ளது. மஹிந்தவிற்கு நேரம் இல்லையாம் என கொழும்பு சொல்லிக்கொண்டே இருக்கின்றது.

உண்மையில் விடயம் இதுதான் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்களுடன் இந்தியா தம் உறவுகளை வைத்திருக்க வேண்டுமாயின் அல்லது இலங்கையில் இந்தியா தம் செல்வாக்கினை செலுத்த வேண்டுமாயின் அல்லது தமது பாதுகாப்பிற்கு இலங்கை அச்சுறுத்தலாக இருக்க கூடாது எனின் அது தமிழர்களால்தான் முடியும். சிங்களம் என்றுமே இதற்கு இடம் அளிக்க போவதில்லை.

சிங்களத்தின் உறவு ஊடாக இந்தியா தமது செல்வாக்கை செலுத்த முடியாது. சுருக்கமாக சொல்வதாயின் இந்தியா தனது அரிய சந்தர்ப்பத்தை ( புலிகளுடனான உறவை) தானாகவே அழித்துக்கொண்டது என்றே கூறவேண்டும். ஆக கடைசியாக 2002 மற்றும் போரின் இறுதி காலமான 2009 இலும் இந்தியாவிற்கு புலிகள் சந்தர்ப்பம் கொடுத்தார்கள்.

இங்கு இந்தியா புலிகளை அழித்தார்கள் என்பதனைவிட தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டார்கள் என்பதே பொருத்தமானது.

நன்றி : ஈழநாதம்

Saturday, October 30, 2010

கந்தலாகும் இந்திய இராசதந்திரம் -செண்பகத்தா

இந்திய தற்காப்புக் கற்கைகள் மற்றும் பகுப்பாய்வுக்கான கழகத்தின் முன்னாள் இயக்குநர் கே.சுப்பிரமணியம் இந்திய பாதுகாப்பு விவகாரங்கள் பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார் . இவற்றில் அவருடைய முக்கிய ஆதங்கம் வெளிப்படுகிறது.

இந்தியாவின் மேன்மை எம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம் இதை ஏற்பதற்கு அயல் நாடுகள் மறுக்கின்றன. சீனாவைப் பெரும் வல்லரசாக எற்றுக் கொள்ளும் இந்தியாவின் அயல் நாடுகள் தமக்குச் சமதையான நாடாகவே இந்தியாவைக் கருதுகின்றன. சுப்பிரமணியத்தாரின் இந்தப் புலம்பல் நிரந்தரமான உண்மையை வெளிப்படுத்துகிறது. இந்தியா தன்னைக் கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழியாகத் தான் காட்ட முடிகிறேதே தவிரச் சீனாவை போல் உலகத் தர வல்லரசாக வர முடியவில்லை.

இன்னொரு கட்டுரையில் இந்தச் சுப்பிரமணியம் என்ன சொல்கிறார் என்றால் ‘வலு என்பது செய்யும் திறன், ஆக்கும் திறன், மாற்றங்களை ஏற்படுத்தும் திறன், உருவமாற்றத்திறன் என்பதோடு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன். இந்திய நாட்டின் சக்திக் கோட்பாட்டில் இவை அடங்குகின்றன.’ இந்த முக்கிய செய்தி கேந்திரப் பகுப்பாய்வுச் சஞ்சிகை ஏப்பரல் 1987 பக்கம் 04ல் காணப்படுகிறது. (Strategic Analysis, April 1987, Page 4 Author K. Subrahmaniyam).

சொன்னதைச் செய்ய முடியாத கட்டம் வரும் போது தனது சொற்களை மென்று விழுங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. சுப்பிரமணியம் கூறும் இந்திய வலு அல்லது சக்தி எங்கே போய்விட்டது. அவர் பட்டியலிடும் திறன்களில் ஒன்றையாவது ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவால் நடைமுறைப் படுத்த முடிந்ததா..?

உள்நாட்டு பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் எப்படி ஈழத் தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க இயலும். புரையோடிப் போயுள்ள காஷ்மீர் பிரச்சினையை இனப் படுகொலை மூலம் எதிர்கொள்ள முடிகிறதே தவிர, ஆக்கபூர்வமான தீர்வை வழங்கும் திறன் இந்தியாவிடம் இல்லை. தொடர் கதையாகி வரும் தமிழக மீனவர்கள் மீதான சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதல் கிட்டத் தட்ட இந்தியா மீது சிறிலங்கா தொடுத்துள்ள மறைமுகப் போராகக் கருதப்படுகிறது .

09 யூலை 2010ம் நாள் நாகை மாவட்ட மீனவர் செல்லப்பன் படுகொலை செய்யப்பட்டார் . இது தொடர்பாகத் தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்திற்கு அவர் பதில் கூறவில்லை. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்பமிட்ட நாலு வரிப் பதில் கருணாநிதிக்கு அனுப்பப்பட்டது. பதில் என்ன சொன்னது..? தங்கள் கடிதம் தொடர்பாகப் பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோருக்கு விரிவாக எடுத்துரைத்துள்ளேன் இந்திய வெளிவிவகார அமைச்சகம் சிறிலங்கா அரசுடன் பேசி இந்தப் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்கும்.

தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போதெல்லாம் தமிழக முதல்வர் எழுதும் கடிதங்களுக்கு இது போலத் தான் இந்திய நடுவண் அரசு பதிலளிக்கும். முதல்வர் கருணாநிதி இது பற்றி அலட்டிக் கொள்வதில்லை. சிறிலங்காத் து£தரை வெளிவிவகார அமைச்சகத்திற்கு அழைத்து சிறிலங்கா அரசைக் கண்டிக்க வேண்டியது தான் இராசதந்திர நடைமுறை. இது உலகம் முழுவதும் ஏற்றுள்ள பாரம்பரிய நடைமுறை. நியூசிலாந்து நாட்டின் செய்தி வாசிப்பாளர் போல் வெறன்றி என்பவர் புது டில்லி மாநில முதல்வர் ஷீலா டிக்ஷிற் அவர்களின் பெயரை உச்சரிக்க முடியாதவர் போல் நையாண்டி செய்தபோது கடுஞ்சினம் கொண்ட இந்திய அரசு மேற்கூறிய பாரம்பரிய நடைமுறையைப் பின்பற்றியது.

அதாவது நியூசிலாந்து து£தரை வெளிவிவகார அமைச்சகத்திற்கு அழைத்து இந்திய அரசு கடும் அதிருப்தியைத் தெரிவித்தது. இதற்கு அந்தத் து£தர் மன்னிப்புக் கேட்டார். போல் வெறன்றியின் வேலையும் போய்விட்டது. அவுஸ்திரேலியா தொடர்பாகவும் து£தரை வெளிவிவகார அமைச்சகத்திற்கு அழைக்கும் நிகழ்ச்சி ஒக்ரோபர் 09ல் நடந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களும், இந்திய வம்சாவழி அவுஸ்திரேலியர்களும் மர்மக் கும்பல்களால் அண்மைக் காலமாகத் தாக்கப்படுவது உலகறிந்த விடயம்.

ஒரு இந்தியன் மின்சாரம் செலுத்தப்பட்டுக் கொல்லப்படும் காட்சியின் வீடியோப் பிரதிகளை மின் அஞ்சல் மூலம் அவுஸ்திரேலியப் பொலிசார் விநியோகித்தும். இன்ரர்நெற்றில் பதிவேற்றம் செய்தும் உள்ளனர். அத்தோடு இனவாதத்தைத் து£ண்டும் கருத்துக்களையும் வெளியிட்டனர். 09 ஒக்டோபர் 2010ம் நாள் இந்திய நடுவண் அரசு இது பற்றி அவுஸ்திரேலிய அரசிடம் விளக்கம் கோரியுள்ளது. அத்தோடு நிற்காமல் புது டில்லிக்கான அவஸ்திரேலியத் து£தர் பீற்றர் வர்கீஸ் அவர்களை வெளிவிவகார அமைச்சகத்திற்கு அழைத்து கடும் அதிருப்தியை இந்தியா தெரிவித்துள்ளது.

நடுவண் அரச அமைச்சர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் இந்தியர்கள் எங்காவது தாக்கப்பட்டால் அதற்கு இந்தியா கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார். இது வரை 534 வரையிலான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் இவர்கள் இந்தியர்கள் இல்லையா..? காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்ச்சிகளின் போது போர்க் குற்றவாளியான மகிந்த ராஐபக்சவை எலிசபத் மகாராணியின் பிரதிநிதி எட்வேட் இளவரசரின் பக்கத்தில் அமர வைத்திருக்கும் இந்தியா, அரச குடும்பத்திற்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது .

இது பற்றிச் சர்வதேச ஊடகங்கள் கண்டனம் தெரிவித்தாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இந்திய அதிகாரிகளின் காதில் வீழ்ந்துள்ளது. முறைப்படி பார்த்தால் 77 தங்கப் பதக்கங்கள் உட்பட 177 பதக்கங்களை வென்ற அவுஸ்திரேலியாவின் பிரதமர் யூலியா கெயிலார்ட் அவர்களை அல்லவா விசேட விருந்தினராக அழைத்துக் கௌரவித்திருக்க வேண்டும். இந்த நாகரிகம் பக்குவம் இந்தியாவுக்கு இன்னும் வரவில்லை . இந்தியர்கள் பற்றி சராசரி அவுஸ்திரேலியர்கள் மட்டமாக நினைப்பதில் என்ன தவறு.

விக்கிரமாதித்தன் கதையில் வரும் மீண்டும் மீண்டும் முருங்க மரத்தில் ஏறும் வேதாளம் போல் முதல்வர் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்குச் சம உரிமை வழங்கும்படி சோனியாவிடம் கடிதமூலம் கேட்டிருக்கிறார். வாழ்வுரிமையே மறுக்கப்பட்டிருக்கிறது சம உரிமையாவது, சம உரிமையாவது கிடைக்குமா என்ன..? சட்டசபைத் தேர்தல் நெருங்கி விட்டது ªஐயலலிதாவின் அட்டகாசம் எல்லை கடந்து விட்டது. இருக்கிறது ஈழத்தமிழர் உரிமைப் பிரச்சனை விடுவாரா கருணாநிதி .

1956ல் சிதம்பரத்தில் நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் அவர் ஈழத்தமிழர் உரிமை பற்றிப் பேசினார் என்று சொல்கிறார்கள் . நம்புவது கடினமாகத்தான் இருக்கிறது அசல் சந்தர்ப்பவாதியான கருணாநிதி உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசுவதில் வல்லவராயிற்றே. அது சரி பெரியவரே சகோதர யுத்தத்தை மறைவாய் நின்று து£ண்டியவர்கள் யார் தெரியுமா? உங்களுக்கு தெரியாமலாபோகும்.

இன்று வரை இந்திய அரசியலில் பின்னணிச் சக்தியாக விளங்கும் றோ உளவமைப்புத் தான் போராளிக் குழுக்களை இணைந்து செயற்பட விடாமல் பிளவு கோல் செருகியவர்களும் இவர்கள் தான். பரஸ்பர சந்தேகங்களை உருவாக்கி விரிசலைப் பெரிதாக்கியவர்கள் றோப் புண்ணியவான்கள் தான். சகோதர யுத்தம் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. நாவலர் நெடுஞ் செழியனை ஓரங்கட்ட நீங்கள் செய்த சூழ்ச்சி, சகோதர யுத்தம் இல்லாமல் வேறென்ன. உங்கள்? வீட்டுக்குள் வரப்போகுது, வட்டியும் முதலுமாக கொடுக்கப் போகிறீர்கள்.

கருணாநிதியை பற்றிய கவலையை விடுங்கள் அந்த ஆளின் பிறவிக் குணம் மாறாது. இப்போது சுப்பிமணியத்தார் சொன்ன இந்தியாவின் வலுவைப் பற்றிப் பார்ப்போம். புது டில்லியில் இருந்து து£ரப் பார்வை இந்தியாவின் எதிர் காலத்திட்ட வரைபடம் என்ற புதிய நு£லைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அட்மிரல் ராஐ£ மேனன் என்ற இந்திய கடற்
படை அதிகாரியும், டாக்டர் ராவ் குமார் என்ற பாதுகாப்பு விவகாரப் பகுப்பாய்வு நிபுணரும் இணைந்து இந்நு£லை எழுதியிருக்கிறார்கள். இதில் சொல்லப்பட்ட விடையங்கள் சுப்பிரமணியத்தாரின் வலுத் திறன் கோட்பாட்டுடன் ஒத்துப் போவது போல் தென்பட்டாலும் அடிப்படையில் முரண்பட்டே காணப்படுகின்றன .

மிகச் சுருக்கமாகக் கூறுவதாயின் இராணுவ பொருளாதார வலுப்பெற்ற சீனாவின் எழுச்சி இந்தியாவுக்கு மிகப் பெரிய அசசுறுத்தலாக அமையும். இந்திய சீன எல்லைகளில் பதற்றம் நிலவும். அவற்றை சுமூகமாகத் தீர்க்கும் வலுவோ தந்திரமோ 2030 வரை இந்தியாவிடம் கிடையாது . இது தான் நு£லின் ஆதாரச் செய்தி சீனா - பாகிஸ்தான் நட்புறவு இராணுவ, பாதுகாப்பு, இராசதந்திர அடிப்படையில் நீடிக்கும் இது இந்தியாவுக்குத் தீராத தலைவலியாக இருக்கும் .

உலக வல்லரசாக வளரும் இந்தியாவின் இலட்சியம் சீனா - பாகிஸ்தான் நெருக்க உறவுகளால் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். இவை அடுத்து வரும் செய்திகள். தெற்கு ஆசிய நாடுகளுக்குச் சீனா வழங்கும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவிகள் இந்தியா எதிர்பார்க்கும் நட்பு சக்திகளை சீனா பக்கம் இழுத்துச் செல்லும். இதனால் இந்தியா இந்தப் பிராந்தியத்தில் தனிமைப் படுத்தப்பட நிறைய வாய்ப்பு உண்டு.

சீனாவின் பலத்துக்கு நிகராக இந்தியா எழுச்சி பெற 2030 வரை காத்திருக்க வேண்டும் அதற்கிடையில் உலக மாற்றங்கள் மதிப்பிட முடியாதளவுக்கு நிகழ்ந்து விடும். இந்த நு£லை எழுதிய அட்மிரல் ராஐ£ மேனனும் பாதுகாப்பு ஆய்வாளர் டாக்டர் ராவ் குமாரும் சில நியாயப் படுத்த முடியாத எதிர்வு கூறல்களை வெளியிட்டுள்ளனர். இது முக்கியமான கனவு நு£ல் என்ற விமர்சனம் நியாயமானது.

அமெரிக்கா, மத்திய ஆசியநாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் சீனாவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இந்திய நட்புறவை எதிர்காலத்தில் நாடலாம் என்பது தான் கனவுகளின் உச்சக் கட்டம். வியட்நாம் 2020ம் வருடத்தில் ஒரு பலமான இராணுவ நாடாக வளர்ச்சி பெறுவதோடு, சீனாவுக்கு எதிரான இந்திய நட்பு நாடாக இடம் பெறும். இந்தோனேசியாவும் பலம் பெற்று இந்திய நட்பு நாடாக மாறுவதோடு தனது துறைமுகங்களை இந்தியக் கடற்படையின் பாவனைக்கு வழங்கும்.

கனவுலகில் சஞ்சரிப்போர் யதார்த்தத்தை இழந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். 2030ல் சீனாவுக்கு சமனான வளர்ச்சி காண்போம் என்ற கனவு இந்தியா என்ற நாடு இருந்தால் தான் பலிதமாகும் ஈழத் தமிழர்களை அழித்த இந்தியாவின் கனவுகள் மிதப்பாகத் தான் இருக்கின்றன.

Friday, October 29, 2010

மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா?பட்டினியோடு போராடி வரும் ஏழைகளுக்கு அரசின் தானியக் கிடங்குகளில் கெட்டுப் போகக்கூடிய நிலையிலுள்ள உணவு தானியங்களை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ மைய அரசு வழங்க வேண்டும் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைக் கேட்டு பிரதமர் மன்மோகன் சிங் கொதித்துப் போய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். உணவு மானியம் உள்ளிட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் அனைத்து மானியங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக ஒழித்துக்கட்டி வரும் மன்மோகன் சிங்கிற்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின் மீது ஏற்பட்ட வெறுப்பு புரிந்துகொள்ளத்தக்கதுதான். “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” எனக் கூறி, நீதிபதிகளின் அத்துமீறலை இடித்துக் காட்டினார் மன்மோகன் சிங்.

‘‘நாயும் பன்றியும் தெருவில் சுற்றலாம்; ஆனால், பஞ்சமன் தெருவில் நுழையக் கூடாது” என்ற பார்ப்பன நீதியைப் போல, ஒரு உணவுக் கொள்கையை வைத்துக் கொண்டிருக்கிறார், மன்மோகன் சிங். “உணவுக் கிடங்குகளில் நிரம்பி வழியும் தானியங்களை இந்திய எலிகளும் ஐரோப்பிய மாடுகளும் தின்னத் தருவோமே தவிர, பசியால் வாடும் இந்திய ஏழைமக்களுக்கு அதிலிருந்து ஒரு பிடிகூட எடுத்துத் தரமாட்டோம்” என்பதுதான் அவரது கொள்கை.

மன்மோகன் சிங் சொல்லாமல் விட்டுவிட்ட இந்தக் கொள்கையை அவரது உணவு அமைச்சர் சரத் பவார் வெளிப்படையாகக் கூறினார். “அரசு ஏற்கெனவே உணவு மானியமாக 66,000 கோடி ரூபாயைக் கொடுத்து வருகிறது. இதற்கு மேல் எப்படி இலவசமாகத் தரமுடியும்?” இந்த உணவு மானியத்தை இந்திய எலிகளும் கடத்தல்காரப் பெருச்சாளிகளும் பங்கு போட்டுக் கொள்ளும் கதையைப் பிறகு பார்ப்போம். ஆனால், மன்மோகன் சிங் கும்பலைப் பொருத்தவரை தற்பொழுது கொடுக்கப்படும் உணவு மானியமே அதிகம் என்பதும், இதை வெட்ட வேண்டும் என்பதும்தான் கொள்கை.

மைய அரசிடம் தற்பொழுது 6 கோடி டன்னுக்கும் அதிகமாக அரிசியும், கோதுமையும் கையிருப்பில் இருக்கிறது. “இது வழக்கமாக அரசிடம் இருக்க வேண்டிய கையிருப்பைவிட இரண்டு மடங்கு அதிகம் என்றும், இதில் 1 கோடி டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் கெட்டுப்போய்க் கிடப்பதாகவும்” சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்திய உணவுக் கழகத்திடம் போதிய கிடங்குகள் இல்லாததால்தான், வெறும் 55,000 டன் உணவு தானியங்கள் மட்டுமே கெட்டுப் போயிருப்பதாக அரசு உச்ச நீதிமன்றத்திடம் கூறியிருக்கிறது.

எவ்வளவு டன் உணவு கெட்டுப் போயிருக்கக்கூடும் என்ற வாதப்பிரதிவாதம் ஒருபுறமிருக்கட்டும். யானையை வாங்கியவன் அதனை அடக்க அங்குசத்தை வாங்க மறந்துவிட்ட கதையாக, 6 கோடி டன் அளவிற்குக் கொள்முதலை நடத்தியிருக்கும் அரசு, அதனைச் சேமித்து வைக்க இந்திய உணவுக் கழகத்திடம் கிடங்குகள் இல்லை எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. இப்பொழுது இதற்குத் தீர்வாக, இந்த அபரிதமான கையிருப்பைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கத் தனியார் கிடங்குகளை வாடகைக்கு எடுக்கப் போவதாக மைய அரசு கூறியிருக்கிறது.

உணவு மானியத்தைக் குறைப்பதற்காக, தானியக் கொள்முதல் செய்வதிலிருந்தும் கிடங்குகளைக் கட்டுவதிலிருந்தும் அரசு விலகிக் கொள்வது; அரசுக்குப் பதிலாக இந்நடவடிக்கைகளில் தனியாரை அனுமதிப்பது என உலக வங்கி இந்தியாவில் தனியார்மயம் புகுத்தப்பட்ட காலத்தில் இருந்தே கட்டளையிட்டு வருகிறது. ஓட்டுப் பொறுக்கும் அரசியல் காரணங்களுக்காகத் தானியக் கொள்முதலை முழுவதும் கைவிடாத அரசு, சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே தானிய சேமிப்புக் கிடங்குகளைக் கட்டுவதைக் கைவிட்டதோடு, அதனைத் தனியாரிடமும் ஒப்படைத்தது. இன்று 1 கோடி டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் கெட்டுப் போய்விட்டதாகக் கூறப்படுதவற்கு இந்த உலக வங்கியின் கட்டளையும், அதனைச் சிரமேற்கொண்டு செயல்படுத்திய ஆளும் கும்பலும்தான் காரணம்.

திறந்த வெளியில் கொட்டிக் கிடக்கும் உணவு தானியத்தைப் பசியோடு போராடும் ஏழைகளுக்கு ரேசன் கடைகளின் மூலம் வழங்குவது வீண் செலவாம்; அதே சமயம், ஏழை மக்களுக்குப் பயன்படாத இந்தக் கையிருப்பைத் தனியார் கிடங்குகளில் சேமித்து வைக்க – பதுக்கி வைக்க என்றும் சொல்லலாம் – வாடகையைக் கொட்டி அழுவது ஆக்கபூர்வமான பொருளாதார நடவடிக்கையாம்!

இப்படிப்பட்ட நிலைமை வரக்கூடும் என முன்னறிந்துதான் என்னவோ, மன்மோகன் சிங் அரசு மார்ச் மாதம் போட்ட பட்ஜெட்டிலேயே, தனியார் கிடங்கு களுக்கான குத்தகை கால வரம்பை உயர்த்தும் கொள்கை முடிவைத் தீர்க்க தரிசனத்துடன் எடுத்திருக்கிறது.

இந்த அபரிமிதமான கையிருப்பை, நாயிடம் சிக்கிய தேங்காயைப் போல மன்மோகன் சிங் தனியார் கிடங்குகளில் வைத்து ஏன் பாதுகாக்க வேண்டும்? இந்தக் கையிருப்பை முன்னரே விநியோகித்திருந்தால், அதைப் பாதுகாப்பதற்குச் செலவான பணமும் அரசுக்கு மிச்சமாகியிருக்கும்; தானியங்களும் கெட்டுப் போயிருக்காது என்ற சாதாரண உண்மை பொருளாதார அறிஞரான மன்மோகனுக்குத் தெரியாமலா போய்விட்டது?

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் செங்குத்தாக உயர்ந்துகொண்டே செல்லும் இத்தருணத்தில், மன்மோகன் சிங் தன்னிடம் உள்ள கையிருப்பை ரேசன் கடைகளின் மூலமோ அல்லது வெளிச் சந்தையின் மூலமோ புழக்கத்துக்குக் கொண்டு வந்திருந்தால், விலைவாசி உயர்வு ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கும். ஆனால், அரசு இப்படி சந்தையில் தலையிட்டு விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவதை மன்மோகன் சிங் விரும்புவதில்லை. தமக்கு ஓட்டுப் போட்ட ஏழை மக்கள் இவ்விலையேற்றத்தால் பாதிக்கப்படுவார்களே என்பது பற்றியெல்லாம் அக்கறையில்லாமல், விலைவாசி உயர்வு அவசியமானது என்றுதான் திமிர்த்தனமாக அறிக்கை விட்டுவருகிறார், அவர்.

அரசு சந்தையில் தலையிட்டால், மளிகைப் பொருட்கள் வியாபாரத்தில் நுழைந்துள்ள ரிலையன்ஸ், பிர்லா போன்ற தரகு முதலாளிகளின் நிறுவனங்கள் விலைவாசி உயர்வைப் பயன்படுத்திக் கொண்டு அடித்துவரும் கொள்ளை இலாபம் படுத்துவிடும் என்பதாலேயே, அவரது அரசு சந்தையில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவை அவர் புறக்கணிப்பதற்கும் இதுதான் காரணம். விலைவாசியை உயர்த்துவதற்காக வியாபாரிகள் சட்டவிரோதமான பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்றால், மன்மோகன் சிங் அரசோ உணவுக் கொள்முதல்/சேமிப்பு என்ற பெயரில் சட்டபூர்வமாகப் பதுக்கலை நடத்தி, வர்த்தகச் சூதாடிகளுக்கு உதவி வருகிறது.

உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியுள்ள உத்தரவில், “வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்பவர் என முத்திரை குத்தப்பட்டுள்ள குடும்ப அட்டைகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும்; அல்லது அவற்றின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும் வண்ணம் வருமான வரம்பு நிர்ணயிக்க வேண்டும்” என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது. வெளித் தோற்றத்தில் பட்டினி கிடக்கும் ஏழைகளுக்கு ஆதரவாகப் பேசுவது போலத் தெரியும் இந்த உத்தரவு, உண்மையில் உணவு வழங்கல் கொள்கையில் உலக வங்கியின் கட்டளைகளை விரைவாக நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கு இந்த ஆலோசனையே சாட்சி. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிலுள்ள இந்த ஆலோசனையை டாக்டர் மன்மோகன் சிங் புறக்கணிக்க மாட்டார் என்று அடித்துக் கூறலாம்.

வறுமைக் கோட்டுக்கு மேலே என்ற முத்திரை குத்தப்பட்ட குடும்ப அட்டைகள் டாடா, அம்பானி குடும்பங்களுக்கா கொடுக்கப்பட்டுள்ளது? இந்தியாவிலேயே மிகப் பெரிய நகர்ப்புறச் சேரியான மும்பையில் உள்ள தாராவியில் விரல்விட்டு எண்ணக்கூடிய குடும்பங்கள் தவிர, அங்கே வசித்து வரும் பிற பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழுவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகளை இப்படிப் பிரிப்பது ஏழைகளைக் காவு கொள்ளும் திட்டம் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

திட்ட கமிசனும் தேசிய ஆலோசனை கவுன்சிலும் இணைந்து சமீபத்தில் நடத்திய கூட்டத்தில், “வறுமைக் கோட்டுக்குக் கீழே/மேலே என்ற பிரிவினையின்றி அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், அரசுக்கு ஆண்டுதோறும் 1,40,000 கோடி ரூபாய் உணவு மானியமாகச் செலவாகும்; அதனால், அது நடைமுறை சாத்தியமற்றது. மேலும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்குக்கூட மாதமொன்றுக்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமையைத் தவிர, வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் எதையும் வழங்க முடியாது” எனத் திட்ட கமிசன் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

அதாவது, அரசு தனது கையிருப்பிலுள்ள தேவைக்கும் அதிகமான உணவு தானியத்தை மானிய விலையில் ஏழைகளுக்கு வழங்காது என்பது உறுதியாகிவிட்டது. பூதம் புதையலைக் காத்த கதையாக மன்மோகன் சிங் இந்தக் கையிருப்பைப் பாதுகாத்துக் கொண்டிருக்கப் போகிறாரா அல்லது முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, அவரது ஆட்சியில் மக்கள் பட்டினி கிடந்த போதும் 2.8 கோடி டன் உணவுப் பொருட்களை ஐரோப்பிய மாடுகள் தின்பதற்காக ஏற்றமதி செய்தாரே, அதைப் போலச் செய்வாரா என்ற கேள்விக்கு எதிர்காலம் பதில் சொல்லக்கூடும்.

ஏழைகள் பட்டினி கிடக்கும்பொழுது அரசு அவர்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்ற அறநெறியெல்லாம் மன்மோகன் சிங்கிடம் கிஞ்சித்தும் கிடையாது. இரண்டு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதையே அலட்சியப்படுத்தி வரும் அவர், ஏழைகள் பட்டினி கிடப்பதையா ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வார்?

2010-11 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் உணவு மானியத்தில் 450 கோடி ரூபாயை வெட்டிய அவரது அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் 5,00,000 கோடி ரூபாயை வரிச் சலுகையாக வாரி வழங்கியது. இது பாமரனுக்கு ஓரவஞ்சனையாகத் தெரியலாம். ஆனால், மன்மோகன் சிங் – மாண்டேக் சிங் அலுவாலியா – ப.சிதம்பரம் கும்பலைப் பொருத்தவரை, இந்தப் பாதையில் சென்றால்தான் இந்தியா உலகத் தரத்தை அடைய முடியும் என்று கருதுகிறார்கள்.

அவர்கள் தமக்கு வாக்களித்த கோடிக்கணக்கான ஏழை – எளிய மற்றும் நடுத்தர மக்களின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி நடத்தவில்லை. பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகள், புதுப் பணக்கார மேட்டுக்குடிக் கும்பலின் பிரதிநிதியாகத்தான் மன்மோகன் சிங் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்.

சொல்லிக் கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் இந்தக் கும்பலின் நலனை முன்னிறுத்தித்தான் போடப்படுகின்றன. அவ்‘வளர்ச்சி’த் திட்டங்கள் அடித்தட்டு மக்களின் வாழ்வை மேலும் மேலும் நாசப்படுத்தி வருவதை யாரேனும் கண்டித்தால், எதிர்த்துப் போராடினால், அவர்கள் அனைவரையும் “வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’’, “மாவோயிசத் தீவிரவாதிகள்” என முத்திரை குத்தி ஒடுக்கி வருகிறார், மன்மோகன் சிங். இப்படிப்பட்ட கும்பலிடம் உணவு மானியத்தை வெட்டக்கூடாது, ஏழை மக்களுக்கு கூடுதலாக உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என ஆலோசனை கூறுவதெல்லாம், செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடியும்!

__________________நன்றி- வினவு______________

Thursday, October 28, 2010

தீபாவளி தத்துவமும் இரகசியமும்! – சித்திரன் புத்திரன்தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!

வளவன் – சரி இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன், கோவிச்சுக்காதே.

ராம் – சரி கேள்.

வளவன் – வராகம் என்பது பன்றி அது ஒரு மிருக ரூபம் சரிதான்?

ராம் – சரி.

வளவன் – இது இரண்டும் எப்படி கலவி புரியும்? எப்படி கருத்தரிக்கும்?

ராம் – பாத்தியா பாத்தியா இதுதான் போக்கிரித்தனமான கேள்வி என்பது. கடவுள் பார்த்து எப்படி வேண்டுமானாலும் செய்யுமல்லவா?

வளவன் – என்னப்பா இராமானுஜம் பாத்தியா பாத்தியா என்று சாய்பு மாதிரி பாத்தியா கொடுக்கிறே. இது ஒரு பெரிய செக்சுவல் சையன்சு சங்கதி இதைக் கேட்டால் போக்கிரித்தனமான கேள்வி என்கிறாய். சரி! இதைப்பற்றி பிரின்ஸ்பாலைக் கேட்கலாம். அப்புறம் அந்தப் பிள்ளை என்ன ஆச்சுது?

ராம் – அந்தப் பிள்ளைதான் நரகாசூரன்.

வளவன் – இந்தப் பெயர் அதற்கு யார் இட்டார்கள் தாய் தந்தையர்களா?

ராம் – யாரோ அன்னக்காவடிகள்! இட்டார்கள்? அதைப் பற்றி என்ன பிரமாதமாய் கேட்கிறாய்? எனக்கு அவசரம் நான் போகவேண்டும். என்னை விடு.

வளவன் – சரி போகலாம், சீக்கிரம் முடி அப்புறம்?

ராம் – அந்த நரகாசூரன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான் அவனை மகாவிஷ்ணு கொன்றார்.

வளவன் – அட பாவி! கடவுளுக்குப் பிறந்தவனா, தேவர்களுக்குத்

தொல்லை கொடுத்தான்? அப்படியென்றால் தேவர்கள் என்ன அவ்வளவு அயோக்கியர்களா?

ராம் – இல்லேப்பா, இந்த நரகாசூரனின் பொல்லாத வேளை தேவர்கள்கிட்டே இவன் வாலாட்டினான். அவர்கள் சும்மா விட்டுவிடுவார்களா?

வளவன் – அதற்கு ஆக தகப்பன் மகனுக்கு புத்தி சொல்லாமல் ஒரே அடியாகக் கொன்று விடுவதா?

ராம் – அது அவர் இஷ்டம் அதைக் கேட்க நாம் யார்? தேவரனையர் கயவர் அவரும் தாம் மேவன செய்தொழுகலான் என்று நாயனார் சொல்லி இருக்கிறார். ஆதலால் நாம், அது ஏன் இது ஏன் என்று கேள்வி கேட்கலாமா?

வளவன் – சரி கொன்றார். அதற்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்?

ராம் – அதைக் கொண்டாட வேண் டிய அவசியம் ஏன் என்றால் இனிமேல் எவனும் தேவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என்பதற்காக, அதை ஞாபகத்தில் வைப்பதற்கு அதை நினைவூட்டுவதற்கு நாம் அடிக்கடி கொண்டாட வேண்டியது.

வளவன் – தேவர்கள் எங்கிருக்கிறார்கள்?

ராம் – வான் தேவர்கள் வானத்தில் (மேல் லோகத்தில்) இருக்கிறார்கள், பூதேவர்கள் இந்தப் பூமியில் இருக்கிறார்கள்!

வளவன் – இந்த பூமியில் இருக்கும் தேவர்கள் யார்?

ராம் – அட முட்டாள்! அது கூடவா தெரியாது. அதுதான் பிராமணர்கள், பிராமணர்கள் என்றாலே பூதேவர்கள் தானே அகராதியைப்பார்.

வளவன் – பிராமணர்கள் என்பவர்கள் என்ன வகுப்பு.

ராம் – என்ன வகுப்பு? நாங்கள் தான்?

வளவன் – நீங்கள் என்றால், நீ அய்யங்கார் நீங்களா?

ராம் – நாங்கள் மாத்திரம் அல்ல அப்பா, நாங்களும் அய்யர், ஆச்சார், சாஸ்திரி சர்மா தீட்சதர் முதலியவர்கள்.

வளவன் – அப்படி என்றால் பார்ப்பனர்கள் யாவரும் பூதேவர் என்கிறாய்.

ராம் – ஆமா! ஆமா!! கல்லாட்டமா ஆமா!!!

வளவன் – சரி, தொலைந்து போகட்டும், நீங்கள் தேவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். உங்களுக்குத் தொல்லை கொடுக்க அசுரர், இராட்சதர் ஒருவரும் இந்த உலகத்தில் இல்லையே? இங்கிருப்பவர்களை எதற்கு ஆக பயப்படுத்த தீபாவளி கொண்டாட வேண்டும்?

ராம் – இங்கேயே அசுரர் இராட்சதர் இல்லை என்கிறாய், இந்த கருப்புச்சட்டைக்காரர்கள் சு.மக்குகள், திராவிட கழகத்தார்கள் இவர்கள் எல்லாம் யார்? பிராமணர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறவர்கள். அவர்களைப் போல் வாழ வேண்டுமென்பவர்கள். வேத சாஸ்திர புராண இதிகாசங்களைப் பகுத்தறிவில் ஆராய்ச்சி செய்கிறவர்கள் முதலிய இவர்கள் எல்லோரும் இராக்கதப் பதர்கள். இரக்கமே இல்லாத அரக்கர்கள் தெரிந்ததா? அவர்களுக்கு பாபம் உண்டாக்குவதற்கு ஆக தேவர்களுக்கு இடையூறு செய்தால் நாசமாய்ப் போய் விடுவாய் என்று அறிவுறுத்துவதற்கு ஆகத்தான் தீபாவளி கொண்டாடுவதாகும் இதுதான் இரகசியம். மற்றபடி கதை எப்படி இருந்தால் என்ன?

வளவன் – அப்படியா? நீங்கள் 100-க்கு 3- பேர். நீங்கள் அல்லாதவர்கள் 100-க்கு 97- பேர் எப்படி எத்தனை நாளைக்கு இப்படி மிரட்ட முடியும்?

ராம் – அதைப் பற்றிக் கவலைப் படாதே! காங்கிரஸ் ஸ்தாபனம் இருக்கிறது. அந்தத் தொண்ணூறு பேர்களில் ஒரு பகுதி விபீஷணர்களாக அனுமார்களாக இருந்து பிராமண தொண்டாற்றவும், எதிரிகளை ஒழிக்கவும் பயன்படுத்துவதற்கு மற்றும் பண்டிதர் கூட்டம் படித்து விட்டு உத்தியோகத்துக்குக் காத்துகிடக்கும் கூட்டம், கோவில் மடம், தர்மஸ்தாபனத்தில் இருக்கும் கூட்டம், பூசாரிக் கூட்டம், பிரபுக்கூட்டம், பாதிரிக் கூட்டம், மேற்பதவி வகிக்கும் உத்தியோகஸ்தர் கூட்டம், நாடகைப் பிழைப்புக் கூட்டம், கலை வித்துவான்கள் கூட்டம், அரசியல் பிழைப்புக்காரர் கூட்டம், தேசபக்தர்கள், தியாகிகள் கூட்டம் இப்படியாக இடறிவிழும்படி சர்வம் பிராமண அடிமையாம் என்பது போல் இருக்கும் போது 100-க்கு 3, 100-க்கு 97- என்ற கணக்கு முட்டாள்தனமான கணக்கு ஆகும்.

வளவன் – ஓஹோ! அப்படியா? சரி சரி தீபாவளி என்பதன் தத்துவமும், இரகசியமும் தெரிந்து கொண்டேன், நன்றி வணக்கம்.

ராம் – சரி நமஸ்தே, ஜெய்ஹிந்த்!

* சித்திரபுத்திரன் என்ற புனை பெயரில் தந்தை பெரியார் எழுதியது.

Monday, October 25, 2010

தமிழர்களே இந்த தமிழனை பாருங்கள்...மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை. இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!
யார் இந்த கிருஷ்ணன்...?!!
சமையல்கலை படிப்பு படித்து தங்க பதக்கம் வாங்கியவர் இவர்....பல விருதுகளையும் பெற்ற இவர் சில காலம் பெங்களூரில் பிரபல ஹோட்டலில் வேலை பார்த்தார், பின்னர் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்து அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த சமயம்......தனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் விடை பெறுவதற்காக மதுரை செல்கிறார் கிருஷ்ணன்.
அங்கே கோவிலுக்குச் செல்வதற்க்காக சைக்கிளில் சென்றவர், யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். அது இந்த உலகின்/நாட்டின் சாபக்கேடுகளான பலவற்றுள் ஒன்றான புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்கான சன்மானம், அந்த முதியவரின் பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞரின் கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது!
நம்மவர்கள் ஹோட்டல் சென்றாலும் அதிக பணம் கொடுத்து வாங்கிய உணவையும் நாகரீகம் என்ற பேரில் பட்டும் படாமல் சிறிது சாப்பிட்டு.... குப்பைக்கும் போகும் அந்த மீத உணவுகள்....?!! கல்யாண விருந்து போடுகிறேன் என்று சிலர் தன் கௌரவத்தை காட்டுவதற்காக இலையில் இடம் போதாமல் உணவு வகைகளை நிரப்புவார்கள்..... சாப்பிட அமர்ந்த கனவான்களோ பணக்கார நோய்களின் நிர்பந்தத்தால் ஏனோ தானோவென்று கொறித்துவிட்டு செல்வார்கள்......இங்கும் அந்த உணவுகள் போகும் குப்பைக்கு.........?!! இப்படிப்பட்ட ஒரு நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்து செழிப்பாய் பணம் சம்பாதிப்பதை விட இந்த மாதிரி மக்களுக்கு நாம ஏன் உணவளிக்ககூடாது....? கண்டிப்பாய் செய்வேன் என்று உறுதி பூணுகிறார்...

இந்த மாதிரி புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்காக உதவணும் என்று இவர் முடிவு செய்த போது இவரது வயது வெறும் 21

இப்போது 29 வயதாகும் கிருஷ்ணன் அவர்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலை உணவையும் கிட்டத்தட்ட 400 புத்திசுவாதீனம் இல்லாதவர்களுக்கு தினம் அளிக்கிறார் .... !! இத்துடன் முடிவது இல்லை இவரது வேலை....அந்த மக்களில் சிலருக்கு முடிவெட்டுவது, நகம் வெட்டுவது தொடங்கி அவர்கள் இறந்து விட்டால் கொல்லி போடுவது வரை இவரது தொண்டு நீள்கிறது.......!!வெற்றிகரமாக இன்றும் தன் பணியை தொடரும் கிருஷ்ணன், அக்ஷ்யா என்னும் தொண்டு நிறுவனத்தை தொடங்கி தினமும் 400 பேருக்கு உணவளிக்கும் மக்கள்சேவை/மகேசன் சேவையை செய்துவருகிறார்!
இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது!

சி.என்.என். தேர்வு பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.....!

இந்த வாக்கெடுப்பில் அவர் முதலிடம் பெற இணையவாசிகளான நாம் உதவி செய்யலாமே......இந்த உதவியை தான் நான் உங்களிடம் கேட்கிறேன்.....

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் சென்று அவருக்கு வோட் பண்ணுங்கள்....

http://heroes.cnn.com/vote.aspx

மற்றும் பிற பதிவர்களும் தங்கள் தளத்தில் இந்த செய்தியை வெளியிட்டால் மகிழ்வேன்...

நாம் நேரடியாக உதவி செய்ய இயலாவிட்டாலும் இந்த மாதிரியான நல்ல மனித நேயருக்கு இந்த சிறு உதவியை செய்வோமே.....

பதிவுலக தோழர்களும், சகோதர சகோதரிகளும் உதவுவீகள் என்று உறுதியாக நம்புகிறேன்.

உயிர்க் கொடை தந்த உத்தமர்(முத்துக்குமார்) பெயர் வைப்போம்! – பெருங்காஞ்சி வே.செல்லன்ஒரு முறை பெங்களூருக்கு தாமதமாக சென்று கொண்டிருந்த ரயிலில் ஒருவர், ‘நல்லவேளை இராஜீவ் காந்தி ரயில் பாதையில் கொல்லப்படவில்லை. அப்படி நடந்திருந்தால்….. நடந்த இடத்திலேயே நினைவுச் சின்னம் எழுப்பி, இருக்கும் ரயில்பாதையை தள்ளிப்போட்டிருப்பார்கள். இன்னும் கொஞ்ச நேரம் கூட தாமதமாகி இருக்கும்‘ என்றார். அதைக் கேட்டதும் முதலில் கோபம்தான் வந்தது. கொல்லப்பட்ட தலைவர் ஒருவர் குறித்து இப்படி கொச்சையாகப் பேசுகிறாரே என்று. அப்புறம் மெல்ல யோசித்தபோது அவர் சொன்னதில் வெறும் கிண்டல் மட்டுமல்ல ஒரு ஆதங்கமும் இருப்பதைப் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஒரு தலைவர் இறந்தால் அந்த இடத்தில் நினைவுச் சின்னம் அமைப்பது அரசியலில் இன்று தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆம் அதனை அரசியல்வாதிகள் தவிர்க்க விடுவதில்லை. அதுவும் இறந்தவரின் வாரிசுகள் அல்லது அவரது கட்சி செல்வாக்காக ஆட்சியில் இருந்தால் அந்தத் தலைவர் மீது தவிர்க்க முடியாத பாசம் வந்துவிடும்.

இப்படித்தான் ஆந்திராவில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி நல்லமலை காட்டுக்குள் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த இராஜசேகர ரெட்டிக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று கொடி பிடித்தனர். அதுவும் எங்கே தெரியுமா – ஆள் போக முடியாத அடர்ந்த காட்டுக்குள், அங்கிருக்கும் வளங்களை, விலங்குகளை எல்லாம் அழித்து கட்ட வேண்டுமாம். அதேநிலைமைதான் ராஜீவ் காந்தி இறந்த திருப்பெரும்புதூருக்கும். அங்கு கோவில் நிலத்தை கையகப்படுத்தி டெல்லியில் இருக்கும் நினைவுச் சின்னத்தை விட பெரிய நினைவுச் சின்னத்தை ஏக்கர் கணக்கில் அமைத்துள்ளனர்.

அதுமட்டுமல்ல ராஜீவ் காந்தி பெயரில் இளைஞர் மேம்பாட்டு கல்வி நிறுவனம் வேறு. இதற்கும் ஏக்கர் கணக்கில் கோவில் நிலமும், பொதுமக்களின் விவசாய நிலமும் கையகப்படுத்தப்பட்டன. இதெல்லாம் திருப்பெரும்புதூரின் புகழை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுமாம்; திருப்பெரும்புதூர் வளர்கிறதாம். ஆனால் நிஜத்தில் பார்த்தால் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட இடம் என்பதால் திருப்பெரும்புதூரில் அந்த ஊர் மக்களே வாழ முடியாத அளவிற்கு வெளிநாட்டுத் தொழிற்சாலைகளைக் கொண்டு வந்து அங்கிருக்கும் வளங்களையும், மக்களையும் அழிக்க வேண்டும் என்ற இலக்குடன் அதிகாரவர்க்கம் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

அது எந்த அளவுக்குத் தெரியுமா? அந்தத் தொகுதியின் பேராயக் கட்சி சட்டப் பேரவை உறுப்பினர் யசோதா அதுவும் சட்டப்பேரவையில், ‘இனி திருப்பெரும்புதூர் தொகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டாம். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அமையுங்கள். எங்கள் தொகுதியில் விவசாயநிலங்களையும், நீர்நிலைகளையும் மிச்சம் வையுங்கள்’ என்று கெஞ்சும் அளவுக்கு.

ஆனால் திருப்பெரும்புதூரை உண்டு இல்லை என்று ஆக்க நினைக்கும் அதிகார வர்க்கத்துக்கு இது பொறுக்குமா? அங்கு பசுமைத் தள விமானத்தளம் அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். அப்போதுதான் திரு.ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு நேரிடையாக விமானத்தில் வந்து இறங்கி அஞ்சலி செலுத்த முடியும். அதுமட்டுமல்ல அவரின் பிறந்தநாளுக்கு யாரும் திருப்பெரும்புதூர் நினைவிடத்திற்கு வராமல் போய்விட்டார்களே என்று குற்றம் சாட்ட முடியாதல்லாவா. அதற்கு வசதியாகத்தான் இந்த விமானத்தளம். திரு.ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட திருப்பெரும்புதூரில் இந்த விமானநிலையம் அமைந்தால் அதற்கும் அவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று போராடுவார்கள் இல்லையில்லை மிரட்டுவார்கள்.

பிறந்தநாளுக்குக் கூட எட்டிப்பார்க்க முடியாத பேராயக் கட்சிக்காரர்கள் தங்கள் தலைவரின் பெயரைப் பார்க்கும் இடங்களுக்கெல்லாம், பார் புகழ்பெற்ற இடங்களுக்கெல்லாம் வைக்க வேண்டும் என்று அல்லாடுகின்றனர். இங்கு ஆள்பவர்கள் ‘அப்படிக் கிடையாது’ என்று சொல்லிவிட்டாலும் மாநில அரசின் குடுமியை தன் கைக்குள் வைத்திருக்கும் பேராயக் கட்சிக்காரர்கள் தாங்கள் சொன்னபடியெல்லாம் ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கின்றனர். அதனால்தான் பழைய மாமல்லபுரம் சாலை – அவர்கள் உத்தரவிட்டதால் ‘தகவல் தொடர்புப் பாதை’ என்று அழைக்கப்பட்டதையும் மீறி – ‘இராஜீவ்காந்தி சாலை’ என்று பெயரிடப்பட்டது. சொல்வதற்கெல்லாம் இந்த அரசு தலையாட்டும் என்று தெரிந்ததால் ராதாபுரம் பேருந்து நிலையம், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தங்கள் தலைவர்களின் பெயர்கள் வைக்க அடம் பிடிக்க ஆரம்பித்தனர்.

ராதாபுரத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு கருணாநிதியின் பெற்றோர் பெயர் வைத்ததை எப்படி நியாயப்படுத்த முடியாதோ…. அப்படித்தான் அந்த பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்கச் சொன்னதும். காரணம், பெருந்தலைவர் என்று போற்றப்பட்ட அவரை ஏதோ சாதிக் கட்சித் தலைவர் போலவே நடத்த பேராயக்கட்சியும் துள்ளிக் குதிப்பதுதான். தமிழ்நாட்டில் இதற்கு முன்பு எந்த பேருந்து நிலையத்திற்கும் காமராஜர் பெயரே வைக்காததைப் போன்று அந்த ஊர் பேராயக் கட்சிக்காரர்கள் அடம் பிடித்தனர். போதாதற்கு சென்னையிலும் நிதானம் தவறிப் பேசும் தலைவர்களும் துள்ளிக் குதித்தனர்.

காரணம் சாதி வாக்குகள்தான். ஆனால் இவர்களுக்குத் தெரியாது அந்த சாதியினரே இல்லாத வட, மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மையான பேருந்து நிலையங்களுக்கு காமராஜர் பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது என்பது. அதை வசதியாக மறந்து விட்டதால் தொடர் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் பேராயக்கட்சியின் மிரட்டலை சமாளிக்க முடியாமல் பணிந்த கருணாநிதி தனது பெற்றோரின் பெயரை மாற்றி காமராஜர் பெயரை வைத்து விட்டார்.

இந்த வெற்றியுடன் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ்காந்தியின் பெயரை வைக்க கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டனர். தொடர்ந்து உண்ணாவிரதம். அதில் பேசிய நிதானம் தவறிப்பேசும் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஏகப்பட்ட மிரட்டல்களை மாநில அரசுக்கு விட்டார். முதல்வர் கருணாநிதியும் யோசிக்க ஆரம்பித்து விட்டார். தேர்தலைக் குறி வைத்தே அரசியல் நடத்திவரும் அவர் பேராயக்கட்சியின் கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்யத் தயாராகிவிடுவார்.

அரசு பொது மருத்துவமனைக்கு இராஜீவ்காந்தி பெயர் வைக்க அவர்கள் சொல்லும் காரணம். திருப்பெரும்புதூரில் கொல்லப்பட்டவரின் உடல் அந்த மருத்துவமனையில்தான் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இப்படி உடற்கூறாய்வு செய்ததால் அந்த மருத்துவமனைக்கு அவரது பெயர் சூட்ட வேண்டுமாம். ‘சூட்டாவிட்டால் அவ்வளவுதான்’ என்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

இடையில் தி.க. உரிமையாளர் கி.வீரமணி, ‘ஈவே.ராமசாமி பெரியார் வைக்க வேண்டும் என ஏற்கனவே கோரியுள்ளோம்’ என்கிறார். இதை அவராகவே நினைவுபடுத்துகிறாரா இல்லை யாராவது சொல்லி நினைவுப்படுத்துகிறாரா என்பது தெரியவில்லை. தன் கோரிக்கைக்கான காரணத்தை சொல்லவில்லை. ஒருவேளை தமிழகத்தின் பெரிய மருத்துவமனை என்பதால் பெரியார் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறாரோ என்னவோ.

ஆனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘இப்போதாவது பெரியார் நினைவு வீரமணிக்கு வந்ததே’ என்று கிண்டல் செய்கிறார். அதேநேரத்தில் தாத்தா பெயர் வைக்காவிட்டாலும் ராஜீவ் பெயர் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அது நியாயமா? உடற்கூறாய்வு செய்ததற்காக எல்லாம் ஒரு மருத்துவமனைக்கு பெயர் சூட்ட வேண்டும் என்றால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சில்க் சுமிதாவில் இருந்து மோனல் வரை எத்தனை பெயர் வைக்க முடியும்? அவர்களின் ரசிகர்கள் போராட்டத்தில் இறங்கினால் தமிழ்நாடு தாங்குமா? பேராயக்கட்சியின் உறுப்பினர்களை விட ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்றே! அரசு பொது மருத்துவனையிலும் எத்தனை பெரிய தலைவர்கள், சுதந்திர போராட்டத் தியாகிகள், அறிவியல் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் எல்லாம் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். இப்போதுதான் அரசியல்வாதிகளின் செல்வாக்கின் அடையாளம் அப்பல்லோ மருத்துவமனை. அதற்குமுன் அரசு பொது மருத்துவமனைதானே. இப்படி சிகிச்சை பெற்றவர்கள் இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகளாக ஏராளமானவர்கள். இவர்களில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள்? விபத்தில் சிக்கியதால் எத்தனை தலைவர்களுக்கு உடற்கூறாய்வு செய்திருப்பார்கள்?

இப்படி 1664ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 350 ஆண்டுகால அரசு பொதுமருத்துவமனை வரலாற்றில் இராஜீவ் ஒருவர்தான் தலைவரா? இந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்கு எத்தனை பேர் பாடுபட்டிருப்பார்கள்? ஆரம்பித்த வெள்ளைக்காரர்கள் கூட தங்கள் பெயரை வைத்துக் கொள்ளவில்லையே?

புனித ஜார்ஜ் கோட்டைக்குள் வெள்ளைக்கார வீரர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவனையை மேம்படுத்திய கிழக்கிந்திய நிறுவனத்தின் முகவர் சர்.எட்வர்ட் வின்டர் கூட தன் பெயரை வைத்துக் கொள்ளவில்லை. இன்னொரு விஷயம் தெரியுமா? இந்த மருத்துவமனையை இடம் மாற்றி தொழில் மருத்துவமனையாக மாற்றியவர் அன்றைய ஆளுநர் சர்.எலிகு யேல். இவர்தான் உலகம் அறிந்த யேல் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தார். அவர் கூட தன் பெயரை இந்த மருத்துவமனைக்கு வைக்கவில்லை. அதுமட்டுமல்ல 1722ல் நிரந்தரமான இடத்திற்கு இடம் மாறிய பிறகும் கூட யாரும் அதற்கு பெயர் மாற்றவில்லை. அதன் முதன் கண்காணிப்பாளரான மருத்துவர்.டி. மோர்டிமர் பெயரும் வைக்கப்படவில்லை.

மருத்துவனையுடன் மருத்துவப்பள்ளி 1835ம் ஆண்டு ஆரம்பித்தபோது மெட்ராஸ் மருத்துவப் பள்ளி என்றும், பின்னர் 1850ல் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி என்றே அழைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என்று மாறிய பிறகும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி என்றே தொடர்கிறது. காரணம் அது உலகமறிந்த பெயர் என்பதால்தான்.

ஆனால் இதையெல்லாம் உணராமல் தங்கள் ஆதரவில் ஆளும் அரசை ஆட்டிப்படைக்கவும், கட்சி மேலிடத்தை மனநிறைவு கொள்ளச் செய்யவும், வரும் தேர்தலில் தங்கள் இடத்தை உறுதி செய்து கொள்ளவும் சிலர் நிதானம் இழந்து பேசுகின்றனர். பேராயக் கட்சியில் நேரு குடும்பத்தைத் தவிர வேறு தலைவர்களே இல்லையா? தமிழ்நாட்டில் யாரும் பேராயக்கட்சிக்காக பாடுபடவில்லையா?

பொது இடத்திற்கு வைக்கப்படும் பெயர்கள் அந்த மக்களின் பண்பாட்டை, அடையாளத்தை அழிக்கும் விதத்தில் இருக்கக் கூடாது. அப்படி மீறி அதிகாரத்தால் வைத்தால் அது நிரந்தரமாக இருக்காது என்பதை பல வரலாறுகள் உணர்த்தியுள்ளன. அவர்களும் உணரவேண்டும். இப்படி சொல்வது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று பேராயக்கட்சியினர் சொல்லலாம். அதற்கு ஆளும் தரப்பும் ‘ஆமாம்’ போடலாம். அது நடக்க வாய்ப்பு அதிகம். அதனால் எஞ்சிய அடையாளங்களையாவது காக்க வேண்டியது நமது கடமை. பெயர் வைப்பது நியாயம் என்று கருதினால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு – தமிழினத்திற்காக உயிர்க் கொடை தந்த தியாகி திரு.முத்துகுமார் பெயரைச் சூட்ட வேண்டும். உலகில் வாழும் தமிழர்களையெல்லாம் தன் உயிரால் இணைத்த தமிழர். அவர் உயிருடன் இருந்தபோதே அந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். தலைவர்கள், காவலர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் அங்கு அவரிடம் பேசியுள்ளனர். வாக்குமூலம் தந்துள்ளார். அவரது உயிரும் அந்த மருத்துவமனையில் மாவீரர்களைத் தேடிப் பறந்தது.

எனவே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தமிழருக்காக உயிர்க்கொடை தந்த உத்தமர் தியாகி. முத்துகுமார் பெயர் சூட்ட இந்த நியாயமான காரணங்கள் போதும். ஈழத்திற்கு அமைதிப்படையை அனுப்பி சுமார் 5000 தமிழர்களைக் கொன்று குவித்த – போபர்ஸ் ஊழல் புகழ் ராஜீவ் காந்தியின் பெயரை அரசு பொது மருத்துவமனைக்கு வைப்பதைவிட, தமிழர்களை ஒருங்கிணைப்பதற்காக உயிர் துறந்த முத்துக்குமார் பெயரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வைப்பது மேலானது. பேராயக் கட்சியினரை விட ஓங்கி இந்தக் கோரிக்கையை நாம் எழுப்புவோம். இந்தக் கோரிக்கை நியாயம் என்று தோன்றினால், இது இன்று முதல் குறுஞ்செய்திகளாகவும், மின்னஞ்சல்களாகவும், பதாகைகளாவும், சுவரொட்டிகளாகவும், மனுக்களாகவும் மாறட்டும்.

- பெருங்காஞ்சி வே.செல்லன்

Sunday, October 24, 2010

பழ.நெடுமாறன்: போராளிகளை பிளவுபடுத்தியதே கருணாநிதிதான்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திடீரென ஈழத் தமிழர் பிரச்னை குறித்து நெடியஅறிக்கை ஒன்றை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். புலிகள் மீதான குற்றச்சாட்டில் தொடங்கும் இந்த அறிக்கை, ராஜபக்ஷே கொடுத்த ஒரு வேண்டுகோளுடன்முடிவது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் புதிய கொந்தளிப் பைக் கிளப்பி உள்ளது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறனிடம் பேசினோம்.

”போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழரின் மறுவாழ்வு பற்றி முதல்வர் கருணாநிதி மீண்டும் முக்கியத்துவம் கொடுத்துப் பேசி இருக்கிறாரே?”

”இலங்கையில் தமிழர்களின் பேரழிவுக்கு காங்கிரஸ§ம் தி.மு.க-வும்தான் பொறுப்பு! ஒரு லட்சம் அப்பாவித் தமிழர்களைப் பதை பதைக்கப் படுகொலை செய்ய சிங்கள அரசுக்கு, இந்திய அரசு ஆயுதம் தந்தது. மத்திய அரசில் ஓர் அங்கமாக இருந்தும், தமிழர் அழிவைத் தடுக்க தி.மு.க. எதுவுமே செய்யவில்லை. மாறாக, தமிழக மக்களை ஏமாற்ற வரிசையாக நாடகங்களை மட்டும் அரங்கேற்றியது. முள்வேலி முகாமில் இருந்து மூன்று லட்சம் தமிழ் மக்களை விடுவிக்குமாறு தமிழகமே கொதித்துப் போராடியபோது, சர்வ கட்சிக் குழுவை அனுப்புமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால், கருணாநிதி தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி எம்.பி-க்களை மட்டும் அங்கு அனுப்பிவைத்தார். அவர்கள் திரும்பி வந்த பிறகு அவரே ஓர் அறிக்கை தந்தார். முகாம்களில் உள்ள மக்கள் மூன்று மாதங்களில் அவரவர் ஊர்களில் குடியேற்றப்படுவார்கள் என்று ராஜபக்ஷே உறுதி தந்துவிட்டார் என்றும் மக்களுக்குச் செய்யப்படும் உதவிகள் ஓரளவு திருப்தி தருவதாகவும் கூறினார் கருணாநிதி. ஆனால், இன்னமும் அந்த மக்கள் பெரும் துன்பத்தில்தான் இருக்கிறார்கள்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தியா உதவ வேண்டும் என இப்போது அவரே கூறுகிறார். காங்கிரஸ§க்கும் தி.மு.க-வுக்கும் உள்ள உறவில் நெருடல் ஏற்படும்போது, ஈழத் தமிழர் பிரச்னையைக் கையில் எடுப்பதும்… திராவிடம்பற்றிப் பேசுவதும் அவரது அரசியல் தந்திரங்கள். உறவு இணக்கமாக இருக்கும்போது, அதைப்பற்றி மூச்சுகூட விட மாட்டார்!”

”போர் மேகங்கள் சூழத் தொடங்கியதில் இருந்தே, மத்திய அரசு தலையிட்டுத் தடுக்க வேண்டும் என முதல்வர் தொடர்ந்து கூறிக்கொண்டுதானே இருந்தார்?”

”மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்ற 2004-ம் ஆண்டு முதல் 2009 வரை சிங்கள ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்தது. சிங்கள ராணுவத்தில் 63 சதவிகிதம் பேர் இப்படி இந்தியாவில் பயிற்சி பெற்றனர். 2008-09 ஆண்டுகளில் விடுதலைப் புலிகளுக்கு உதவிப் பொருள்கள், ஆயுதங்கள் கொண்டுவந்த 13-க்கும் மேற்பட்ட கப்பல்களை இந்தியக் கடற்படையின் உதவியுடன் சிங்களக் கடற்படை அழித்தது. வெளியில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு எந்த வித ஆயுத உதவியும் வராதவாறு, இந்தியக் கடற்படை தடுத்தது. இந்திய ராணுவத்தின் முன்னாள் லெஃப்டினென்ட் ஜெனரல் சதீஷ் சந்திரா நம்பியார், இலங்கை ராணுவத்துக்கு ஆலோசகராகப் பணியாற்றி னார். உச்சகட்டமாக… ஏவுகணைகள், ராடார்களுடன் அவற்றை இயக்க ராணுவப் பொறியாளர்களையும் டெல்லி அரசு அனுப்பி வைத்தது.

இவை எல்லாம் நடந்தபோதும் மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. இவர்கள் தயவில்தான் காங்கிரஸ் அரசு உயிர் பிழைத்தது. உண்மையிலேயே ஈழத் தமிழர்கள் மீது கருணாநிதிக்கு அக்கறை இருந்தால்… மத்திய அரசுக்கான ஆதரவை அப்போதே விலக்கி இருக்க வேண்டும்; அப்படிச் செய்து இருந்தால், காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருக்கும்; அதே சமயம், காங்கிரஸ் உதவியால் தமிழ்நாட்டில் பதவியில் இருக்கும் தி.மு.க. அரசையும் காங்கிரஸ் கவிழ்த்து இருக்கும். எனவே, தனது அரசைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை கருணாநிதி பலிகொடுத்தார் என்பதுதான் உண்மை!”

”போர் நிறுத்த முயற்சிபற்றி எம்.கே.நாராயணனும் சிவசங்கர் மேனனும் அவ்வப்போது பேசிவிட்டுச் சென்றதாக முதல்வர் கூறினாரே?”

”இலங்கையில் போர் முடிந்தவுடன் மகிந்தா ராஜபக்ஷேவின் தம்பி பசில் ராஜபக்ஷே சில உண்மைகளை வெளியிட்டார். ‘போர் நெருக்கடியான நேரத்தில் இந்திய – இலங்கை அரசுகள் இணைந்து செயல்படுவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தியத் தரப்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், உள்துறைச் செயலாளரும் இலங்கைத் தரப்பில் பசில், கோத்தபய ராஜபக்ஷே, வெளியுறவுச் செயலாளரும் இடம்பெற்றனர். அந்தக் காலகட்டத்தில் இலங்கை ராணுவத்துக்கு என்னென்ன உதவிகள் வேண்டும் என இந்தக் குழு கூடிப் பேசி, அதன்படி இந்திய அரசு உதவிகளைச் செய்தது. இதற்காகவே நாராயணனும் சிவசங்கர் மேனனும் அடிக்கடி கொழும்பு வந்து சென்றனர்’ என்பது பசில் ராஜபக்ஷேவின் ஒப்புதல் வாக்குமூலம். ஆனால், போர் நிறுத்தம் குறித்து ராஜபக்ஷேவிடம் வலியுறுத்துவதற்காகவே எம்.கே.நாராயணனும் சிவசங்கர் மேனனும் கொழும்பு சென்றதாக கருணாநிதி உண்மையைத் திரித்துக் கூறி, தமிழக மக்களை ஏமாற்றினார்!”

”போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படத்தான் செய்வார்கள் எனப் பேசிய ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, ஈழத் தமிழ்ப் பற்றாளர்கள் குரல் உயர்த்தி பிரசாரம் செய்வதாக கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறாரே?”

”ஜெயலலிதா, அவ்வாறு பேசியது மன்னிக்க முடியாத தவறு. ஆனால், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கருணாநிதி என்ன செய்தார் என்பதுதான் முக்கியம்! ஈழத் தமிழர் பிரச்னை ஒரு புறம் இருக்க, தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படை வேட்டையாடுவதைத் தடுத்து நிறுத்த இவர் என்ன செய்தார்? தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் இருந்துகொண்டு தன் குடிமக்களைப் பாதுகாக்க முடியாதவர், மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கான அருகதையை இழந்துவிட்டார். ராஜபக்ஷேவைப் பாதுகாப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ… அதை எல்லாம் இன்னமும் தவறாது செய்கிறார் கருணாநிதி!”

”இலங்கையில் சகோதர யுத்தம் நடக்காமல் இருந்திருந்தால், வரலாறு வேறு வடிவம் பெற்றிருக்கும் என முதல்வர் ஆதங்கப்படுவதிலும் உண்மை இருக்கிறதே..?”

”சரியாகச் சொன்னால், 1986 மே மாதத்தில் மதுரையில் ‘டெசோ’ மாநாடு முடிந்த பிறகு, ஈழத்தில் போராளிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்தியஅரசின் ‘ரா’ உளவுத் துறைதான் அதற்குக் காரணம். ‘டெலோ’ இயக்கத்துக்கு ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து, புலிகளுடன் மோதும்படி தூண்டிவிட்டது ‘ரா’. அதன்படி, அவர்கள் ஆங்காங்கே விடுதலைப் புலிகளை சுட்டார்கள். சிலரைப் பிடித்துக்கொண்டு போனார்கள். அப்போது விடுதலைப் புலிகளின் சார்பில் இது குறித்து ‘டெலோ’ தலைவர் சிறீசபாரத்தினத்துடன் பேச்சு நடத்த கேப்டன் லிங்கம் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த லிங்கத்தின் இரு கண்களையும் தோண்டி எடுத்து, அவரைக் கொடூரமாகக் கொலை செய்தார் சிறீசபாரத்தினம். இதற்கு பதிலடியாகத்தான் புலிகளின் தாக்குதல் நடந்தது. போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு உண்மையான காரணம் ‘ரா’ உளவுத் துறைதான் என்பதை கருணாநிதி ஆரம்பம் முதலே மறைத்துப் பேசுகிறார்.

தமிழகத்தில் அனைத்துப் போராளி இயக்கங்களும் இயங்கியபோதுகூட அவர்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்த முயன்றது கருணாநிதிதான். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது 1983 ஜூலையில் எல்லா போராளிக் குழுக்களின் தலைவர்களையும் அழைத்து ஒற்றுமையை உண்டாக்க முனைந்தார். இந்தத் தகவலை அறிந்ததும், அது வரை போராளிக் குழுவினரை சந்திப்பதைத் தவிர்த்துவந்த கருணாநிதி, எம்.ஜி.ஆரை சந்திப்பதற்கு முந்தைய நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு போராளித் தலைவர்களை அழைத்தார். அவரது அழைப்பை ஏற்று, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் குழுவினர் சென்றனர். அந்த சந்திப்பைப்பற்றி பத்திரிகைகளுக்கு அறிவித்து விளம்பரமும் தேடிக்கொண்டார் கருணாநிதி. ஆனால், முதலில் அழைத்த எம்.ஜி.ஆரை புலிகள் மட்டுமே திட்டமிட்டபடி சந்தித்தனர்.

ஆக, தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையிலான போட்டா போட்டியில் போராளி இயக்கங்களைப் பிளவுபடுத்தியவர் கருணாநிதிதான். பல முறை தனது கட்சிக் கண்ணோட்டத்தில் ஈழத் தமிழர்களைப் பிளவுபடுத்தியவரும் இவரேதான். தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காகப் போலியான காரணங்களை இப்போது தேடிப் பிடிக்கிறார் அவர். போராளிகளின் சகோதரச் சண்டையை ஒரு குற்றமாகவும் காரணமாகவும் சொல்லும் இவர், முதலில் தன் குடும்பத்தில் நடக்கும் சகோதரச் சண்டையை நிறுத்திக் காட்டட்டுமே!’

- இரா. தமிழ்க்கனல்

– நன்றி விகடன்

பேரறிவாளன் – துயரக் காற்றில் அலையும் தீபம் – மணி.செந்தில்

மனித நாகரிக சமூகம் மேம்பட தனக்குள் வரைந்து கொண்ட அறக்கோடுகள் விழைந்த ஓவியமாய் திகழும் பேரறிவாளன் தூக்குக் கொட்டடியில்.. மரணக் கயிற்றின் நிழலில் நிற்பது நாம் வாழ்க்கையின் மீது அமைத்துக் கொண்டுள்ள அனைத்து சமன்பாடுகளையும் கலைத்துப் போடுகிறது. மனித மாண்புகளின் மீது கட்டப்பட்டுள்ள எளிய மனித வாழ்வின் இருப்பினை பேரறிவாளன் தலைக்கு மேல் ஊசலாடும் தூக்குக் கயிறு சிதைத்துப் போடுகிறது .

மரணத்தின் நிழல் தரும் மன வலி மிக கொடுமையானது. வாழ்வதற்கான பற்றை வைத்துதான் மனித சமூகமே கட்டமைக்கப்பட்டுள்ளது. மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தாயெவ்ஸ்கி சைபீரிய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது ஒரு மரணத்தின் வாயில் வரை சென்று திரும்பியதை ‘குற்றமும் தண்டனையும்’ என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். நாஸி வதை முகாமில் இருந்து தப்பி வந்த யூத இளைஞன் ஒருவரான எலீ வீஸல் என்பவர் தனது அனுபவங்களை எழுதியுள்ள இரவு என்ற சுயசரிதை நாவலும் (தமிழில் வெளிவந்துள்ளது. யூனிடெட் ரைட்டர்ஸ் வெளியீடு ) வாழ்வின் மீது மனிதன் கொண்டுள்ள மாறாப் பற்றை விளக்குகிறது. சிறை வாழ்க்கை குறித்து தோழர் .தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரங்களும் இத்தகையதுதான்.

உயிர் வாழும் வேட்கை தரும் உணர்வில் தான் மனித சமூகத்தின் இயக்கமே நடைபெறுகிறது. ஒரு மனிதனின் உயிரை எடுப்பதற்கான உரிமை எவருக்கும் ,எதற்கும் இல்லை என உலகச் சட்டங்கள் அனைத்தும் உரத்த குரலில் கூறுகின்றன. ஆனால் சட்டங்களை அமல் படுத்தும் நீதிமன்றங்களுக்கு மட்டும் தண்டனை என்ற பெயரில் ஒரு உயிரைக் கொல்வதற்கு உரிமை இருக்கிறதென்றால் எத்தகைய முரண்பாடு ?

இறுக்கி கட்டப்பட்ட கட்டிடங்களுக்குள் அமர்ந்து கொண்டு ..சட்டப் புத்தகங்களின் காற்புள்ளி, அரைப்புள்ளிக்கெல்லாம் அர்த்தம் தேடுவதுதான் நீதிமன்றத்தின் பணியா என்றால் இல்லை. மாறாக தனி மனித விழுமியங்கள் மேல் கவிழும் இருட்டினை துடைக்கும் வெளிச்ச தெறிப்பாக சட்டங்களும், நீதிமன்றங்களும் மாறி இருந்திருக்க வேண்டும். இன்றளவும் சர்ச்சைகள் நீங்காத வழக்கொன்றின் முடிவு தவறொன்றும் செய்யாத ஒரு எளிய மனிதனின் மரணத்தில் தான் விளையும் என்பது வெட்கக்கேடானது. துயரமானது. பேரறிவாளன் தனது முறையீட்டு மடல்களில் முன் வைத்திருக்கும் எந்த கேள்விக்கும் எந்த அமைப்பிடமிருந்து பதிலில்லை. மூர்க்கமும் , அவசரமும் நிரம்பிய நம் நாட்டு அதிகார கட்டமைப்புகளின் துயரமான விளைவாக மாறி நிற்கிறது பேரறிவாளனின் உயிர்.

அமெரிக்க விடுதலைப் போராட்டக் காலத்தில் அங்கு குடியேறிவர்களுக்காக ஆதரவு குரல் கொடுத்து விடுதலையை ஆதரித்த குற்றத்திற்காக பிரிட்டிஷ் கவிஞர் தெல்வால் (THELWALL) சிறையிலடைக்கப்பட்டார். அப்போது அவர் தன் வழக்கறிஞருக்கு எழுதிய கடிதத்தில் “ என் வழக்கினை நானே உரைக்காவிடில் எனக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும்” என எழுதி இருந்தார். அதற்கு அவரது வழக்கறிஞர் எழுதிய பதிலில் “ உங்களின் வழக்கினை நீங்களே உரைத்தாலும் தூக்குத் தண்டனை கிடைக்கும்” என கூறியிருந்தார் – இந்த உரையாடல்களில் இருந்து உருவான சொற்றொடர்தான் “ நான் செய்தால் தூக்கிலிடப்படுவேன், செய்யாவிடில் தூக்கிலிடப்படுவேன் “(I’ll be hanged if I do and hanged if I don’t ). அதிகார வல்லாதிக்கத்தின் உச்சக் கட்ட அவல காட்சியின் வடிவம் இந்த சொற்றொடர்தான் அமெரிக்க பெரு நிலத்தின் வல்லாதிக்க அரசாட்சியை வீழ்த்துவதற்கான ஆயுதமாக ,ஆவேசம் மிகுந்த முழக்கமாக அமெரிக்க வீதிகளில் எழுந்தது.

உயர்ந்த மதிற்சுவர்களுக்கு மத்தியில் நாள், கிழமை, மாத வருடம் பேதம் அறியாமல் சிறை அறைகளில் எப்போதும் தேங்கி இருக்கும் வற்றா இருட்டில் ..துளித்துளியாய் கசிகிற வெளிச்சத் துளிகளை கண்களுக்குள் உள்வாங்கி ..வாழ்வின் ஏதோ ஒரு முனையில் திரும்பி விட மாட்டோமா…அதிசயம் நிகழ்ந்து விடாதா என்றெல்லாம் நினைத்துக் கொண்டு கண்கள் பனிக்க காத்திருப்பதன் வலியை பேரறிவாளன் எத்தனை நாள் சுமப்பார்?.. ஒரு ஆயுள் தண்டனைக்கும் அதிகமான நாட்களும் கடந்து..இயல்பான வாழ்க்கையின் எவ்வித சுகங்களையும் அறியாமல் ..அடைப்பட்டு கிடக்கும் பேரறிவாளன் மீதுள்ள குற்றச்சாட்டு – ஒரு கொலைக் குற்றத்திற்கு உதவி செய்ததாக . ராஜீவ் காந்தியின் படுகொலையை ஒரு தனி நபர் படுகொலையாகத்தான் கருதப்பட வேண்டும் என உச்சநீதிமன்றமே முடிவு செய்து விட்ட நிலையில்.. வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் சூழ்ந்துக் கிடக்கிற மரணத்தின் இருட்டில் தான் கழிக்க வேண்டும் என்ற தண்டனை ஒரு நொடியில் தொண்டையை இறுக்கி..கண்களை பிதுக்கி உயிரை கக்குகிற மரண தண்டனையைக் காட்டிலும்…கொடுமையானது.

தனது 19 ஆவது வயதில் சிறை புகுந்த பேரறிவாளனுக்கு இன்று 35 வயது ஆகிறது. தனிமைச் சிறையும், மரண வாசலின் முன்னே ஊசலாடும் தன்மையும் தந்த பரிசினால் கடுமையான உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் என்ற அவரது நூலின் தலைப்பில் உள்ள மடலில் பேரறிவாளன் நெஞ்சுருக்கும் சொற்களோடு தன் பக்கம் உள்ள அனைத்து நியாயங்களையும் ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போல எடுத்து முன் வைக்கிறார். பக்கங்கள் புரள புரள உண்மைகளும், உண்மைகளை புறந்தள்ளி ஒரு குற்றமற்றவனை பலியிடும் தன்மைகளும் வெளிவந்து நம்மை கண்கலங்க செய்கின்றன. ஒரு எளிய மனிதன் வெகு சுலபமாக கொல்லப்படும் அவலம் நிறைந்த சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்ற உணர்வு நம்மை மிகுந்த அச்சத்தில் கிடத்துகிறது. இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் புலனாய்வுத் துறையினரும், ஆளும் வர்க்கத்தினரும், உளவுத்துறையினரும், ஊடக தாக்குதல்களும் சூறையாடிய ஒரு அப்பாவி இளைஞனின் ரத்தக்கறை படிந்திருக்கிறது.

பேரறிவாளன் மீது அரசுத் தரப்பில் வைத்துள்ள குற்றச்சாட்டுக்களில் முக்கிய மாபெரும் குற்றச்சாட்டு என்னவெனில் ராஜீவ் காந்தி கொலையாளி தனுவிற்கு பெல்ட் பாம் செய்ய மின்கலம்(பேட்டரி) அதாவது சாதாரண பெட்டிக் கடைகளில் கிடைக்கும் 9 வோல்ட் பேட்டரி வாங்கிக் கொடுத்து குண்டு தயாரிக்க உதவியது.

ராஜீவ்காந்தி கொலையை விசாரித்த புலனாய்வு குழுவின் தலைமை அதிகாரியாக இருந்து ஒய்வுப்பெற்ற ரகோத்தமன் 10-08-2005 தேதியிட்ட குமுதம் வார இதழிலும்., 31-07-2005 தேதியிட்ட ஜீனியர் விகடன் இதழிலும் “தனு தன் இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்டை செய்து கொடுத்தவர் யார் என்று இது நாள் வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை “ என மிக மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

இது நாள் வரை கண்டுபிடிக்கப்படாத ஒரு காரணிக்காக பேரறிவாளன் தலையின் மேல் தூக்குக் கயிறு தொங்குகிறது என்பது எவ்வளவு மோசமான சமூகத்தில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் நாம் வாழ்கிறோம் என்பதற்கு உதாரணம். ஆள்பவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் நினைத்தால் அப்பாவியான ஒரு எளிய மனிதனை தன் அதிகார கரங்கள் கொண்டு கொன்று விட முடியும் என்கிற நிலையில் தான் நாமெல்லாம் வாழ்கிறோம்.

ராஜீவ்காந்தி கொலைக்கு பிறகு 20-06-1991 ஆம் தேதியில் வெளிவந்த இந்தியா டுடே நாளிதழ் வெளியிட்ட “ராஜீவ் படுகொலை – சதி திட்டம்” தீட்டப்பட்டது எப்படி என்ற கட்டுரையில் பேரறிவாளன் வெடிகுண்டு நிபுணர் எனவும், ராஜீவை கொன்ற தனு கட்டியிருந்த வெடிகுண்டை செய்தவர் என்றும் சித்தரித்து எழுதப்பட்டிருந்தது. புலனாய்வு குழுவினரும், உளவுத் துறையினரும் திட்டம் போட்டு ஊடகங்களில் பரப்பி விட்ட பொய்யான கதைகளால் பேரறிவாளன் குற்றவாளியாக்கப்பட்டு தூக்குத் தண்டனை கைதியாக இன்று மரணக் கொட்டடியில் வாடிக் கொண்டிருக்கிறார். பிறகு இதே இந்தியா டுடே இதழ் 1996 ஆண்டு “துப்பில் துவாரங்கள்” என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில் இது நாள் வரை வெடிகுண்டு குறித்து எந்த புலனாய்வும் செய்யவில்லை என கட்டுரை வெளியிட, அதை எதிர்த்து புலனாய்வு துறையினர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது வேறு கதை.

அரசு தரப்பு சாட்சிய ஆவணம். 392 என்ற 7-05-1991 ல் பெறப்பட்டதாக கம்பியில்லா தந்தியில்
( சிவராசன் சென்னையிலிருந்து இலங்கையிலிருக்கும் பொட்டுஅம்மானுக்கு கம்பியில்லாத் தந்தி வழியாக அனுப்பியதாக சொல்லப்படும் சங்கேதச் செய்தியை இடைமறித்து ஆராய்ந்து பார்த்து உருவாக்கிய ஆவணம்) கொலைச்சதி சிவராசன், தனு,சுபா ஆகிய மூவருக்கு மட்டும்தான் தெரியும் என பதிவாகி உள்ளது. இந்த கூற்றை வழக்கினை விசாரித்த நீதிபதிகளும் ஒத்துக்கொண்டுள்ளார்கள். எனவே கொலைச்சதி பற்றி பேரறிவாளனுக்கு எதுவும் தெரியாது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருக்கிறது. “குற்றமனமில்லா செயல் குற்றமென ஆவதில்லை “(actus non facit reum nisi mens sit rea- The intent and the act must both concur to constitute the crime –The act itself does not make a man guilty unless his intention were so –An act does not make one guilty unlees the mind is also guilty) என்ற சட்ட முதுமொழிகேற்ப பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சட்டகோட்பாடுகளின் மீதும், இயற்கை நீதியின் மீதும் அரசியலும், அதிகாரமும் நிகழ்த்திய வன்முறையாக பேரறிவாளனின் வாதங்கள் யாராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புரை (Pachan singh vs State of Punjab) பேரறிவாளன் வழக்கில் பின்னுக்கு தள்ளப்பட்டதில் இருந்து நியாயமும், நீதியும் மட்டுமே தண்டனையையும், விடுதலையையும் முடிவு செய்வன அல்ல என்பது முடிவாகி இருக்கிறது.

பேரறிவாளனுக்கு கிடைத்திருக்கும் தூக்குத் தண்டனை என்பது தடா சட்டத்தின் அடிப்படையில் பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்டது ஆகும். தடா சட்டம் மிகக் கொடுமையான ஒன்று என்பதிலும், அது அரசியலைப்பு சட்டத்திற்கே முரணானது என்பதிலும் யாருக்கும் இருவேறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியாது. இக்கருத்தினை அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி சவாண் தடாச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என பாரளுமன்றத்திலேயே ஒத்துக் கொண்டார். (19-08-1994 மாநிலங்களவையில்). போலீஸ் அதிகாரிகளிடம் கொடுக்கப்படும் வாக்குமூலம் சாதாரண சட்டங்களின் படி நீதிமன்ற சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடாது. (A confession made to a police officer is irrelevant-sec 25 Indian Evidence Act 1872 ) ஆனால் தடா என்ற ஆட்தூக்கி சட்டத்தின் வாயிலாக( பிரிவு 15 தடா சட்டம்) போலீஸ் அதிகாரிகளிடம் பேரறிவாளன் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் அவருக்கு எதிராக நீதிமன்ற சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தான் நிரபாரதி என்பதற்கு அனைத்து விதமான காரணங்களையும் தன் முறையீட்டு மடல்களில் பட்டியலிடுகிறார் பேரறிவாளன். ஆனால் ஒரு எளிய மனிதனின் நியாயங்களை கேட்பதற்கும், அவரது துன்பச் சூழல்களையும் போக்குவதற்கும், நெடிய சிறை தந்த காயங்களை ஆற்றுவதற்கும் ஆள்வோருக்கு விருப்பமில்லை. அண்ணா நூற்றாண்டு விழாவினை ஒட்டி தன்னை விடுவிக்க கோரி தமிழக முதல்வருக்கு எழுதியிருக்கின்ற முறையீட்டு மடலில் பேரறிவாளனின் ஆழமான புரையோடிப் போன காயத்தின் வலி தெரிகிறது. தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் தானும் தன் குடும்பமும் அனுபவித்து வரும் சொல்லவியலா துன்பத்தினை வடித்து இருக்கிறார் அறிவு. அந்த மடலில் தனக்கென கொள்கை பின்னணி இருந்ததே ஒழிய அரசியல் பின்னணி- செல்வாக்கு ஏதுமில்லை என குறிப்பிடுகிறார். உண்மைதான். பட்டப்பகலில் பத்திரிக்கை அலுவலகத்தினை தாக்கி 3 பேரை கொன்று விட்டு வரும் நபர்களுக்கு கூட மிக எளிதாக விடுதலை கிடைத்து விடும் இந்த நாட்டில் எந்த குற்றமும் செய்யாமல் 15 வருடமாய் சிறையில் வாடும் எளிய நிரபாரதிக்கு நியாயம் கிடைத்து விடுமா ..என்ன.?

பேரறிவாளன் தனது முறையீட்டு மடலில் தன்னை மொழி, இனப் பற்றாளன் என்றும், தொப்புள் கொடி உறவான தமிழீழ மக்கள் படும் இன்னல்களை போக்க உலகத் தமிழர்கள் போல தன்னால் இயன்றதை செய்பவன் எனவும் அடையாளம் காட்டியுள்ளார். இவ்வாறு பிறந்து வாழ்ந்ததுதான் பேரறிவாளன் செய்த ஒற்றை குற்றம். உண்மையான மொழி, இனப்பற்றாளர்கள் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் கொலைகாரன் ,கொள்ளைக்காரன் என பட்டங்கள் சூட்டி கொல்லப்படுவார்கள். இல்லையெனில் தீவிரவாதி என சிறைப்படுத்தப்படுவார்கள். அதுவும் இல்லையென்றால் அண்ட சராசரங்களையும் ஆட்டிப்படைக்கிற வல்லாதிக்க நாடாக வளர்ந்து வருகிற இந்திய திரு நாட்டின் இறையாண்மை ஒரு எளிய கிராமத்தில் பிறந்து, வளர்ந்து போராடி ஒரு இயக்குனராக உயர்ந்து ..காலத்தின் கோலமாய் இனம் அழிந்த சோகத்தில் இனி அழியாமல் இருக்க ஒரு அமைப்பினை கட்டி.. இளைஞர்களை சேகரித்து ..களமாடி வருகிற செந்தமிழன் சீமானின் தன் சகோதரன் கொல்லப்படுகிறானே என்ற வேதனையில் உதிர்த்த சொற்களில் இருக்கிறது என கூறி சிறையில் போடுவார்கள். வேதனை.

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அவர்களை நாம் தமிழர் கட்சி நிகழ்வுகளிலும், உணர்வாளர்களின் திருமணங்களிலும் நான் சந்தித்திருக்கிறேன். கண்களில் நிரந்தரமாக தங்கிவிட்ட சோக நிழலினை காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்புடன் பழகும் அற்புத தாய் அவர்கள். வயதான அந்த தாய் தன்னுடைய நிரபாரதியான மகனுக்காக இன்றளவும் ஒரு நெடிய போராட்டத்தினை மேற்கொண்டு வருகிறார். தன்னுடைய மகன் தலையின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் தூக்குக் கயிற்றின் நிழலினை அகற்றிட ஒய்வு எடுக்க வேண்டிய வயதில் போராடிக் கொண்டிருக்கிறார் .ஒரு நாள் அவர் என்னிடம் சொன்ன “ ரொம்ப அலைஞ்ச்சிட்டேன்பா” என்ற சொற்கள் என்னை இன்றளவும் தூங்க விடாமல் அலைகழிக்கின்றன. கடுமையான மன உளைச்சலும், நெடிய சிறைவாசம் தந்த சோர்விலும் இருந்தாலும் பேரறிவாளன் சிறையில் ஒரு நன்னடத்தை உடைய மனிதனாக வாழ்ந்து இளநிலை கணி செயல்முறையியல் (B.C.A) படிப்பினை இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைகழகத்தின் மூலம் 3 ஆண்டுகள் படித்து முடித்து பட்டம் பெற்றுள்ளார். அத்தோடு 5 க்கும் மேற்பட்ட சான்றிதழ் கல்வியையும் இந்த துயர் மிகுந்த இடைப்பட்ட காலத்தில் முடித்துள்ளார். பேரறிவாளன் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது அரசு இறுதித் தேர்வில் பள்ளியின் இரண்டாவது மாணவனாக வந்திருந்து ஜேசிஸ் சங்க விருது பெற்றிருக்கிறார். N.C.C என்ற தேசிய மாணவர் படையில் இணைந்திருந்து உயர்நற்சான்றிதழ்களை பெற்றிருக்கிறார். இன்றளவும் சிறை வாழ்க்கையில் சிறையில் உள்ள நூலகத்தினை பராமரித்து வருகிறார். அங்கு வந்திருக்கும் அனைத்து புத்தகங்களையும் வாசித்து விட்டு குறிப்பு எடுத்து வைத்திருக்கிறார். சிறை வாழ்க்கையில் சக கைதிகளுக்கு சான்றான நபராக இருப்பதோடு..சக மனிதர்களின் மீட்சிக்காகவும் உழைத்து வருகிறார். அப்பழுக்கில்லாத அந்த மாமனிதனின் விடுதலையை கோர வேண்டியது மனசாட்சி உள்ள மானுட கடமையாக இருக்கின்றது.

குற்றம் செய்யாத ஒரு எளிய மனிதனை, அவரது வயதான தாயை அலைகழிப்பதும், மரணத்தின் பெயரைச் சொல்லி மிரட்டுவதும்தான் உயர்ந்த மாண்புகள் பெற்றிருக்கும் ஒரு ஜனநாயக நாட்டின் நீதி என்றால் நாம் வாழும் நாடு நாடல்ல என்பதனை நாம் உணர வேண்டும் . தூக்குத் தண்டனையை உலகத்தில் பெரும்பாலான நாடுகள் அகற்றி மனித உரிமைகள் மீதான தங்களது அக்கறையை வெளிப்படுத்தி கொண்டிருக்கும் இவ்வேளையில் இன்றளவும் தூக்குத் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கும் மூர்க்கத்தனமான ,பிற்போக்கு அம்சங்கள் உடைய நீதி பரிபாலன கட்டமைப்பை நாம் பெற்றிருக்கிறோம் என்பது மிகவும் சிந்திக்க வேண்டியது. மரண தண்டனையை ஒழிக்கும் போராட்டத்தின் மிக முக்கியப் புள்ளியாக பேரறிவாளனின் இந்த நூலை கொள்ளலாம்.

தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் என்ற நூலில் மனித உரிமைகள் மீது மிகுந்த அக்கறை காட்டும் நீதியரசர் டி. ஆர்.கிருஷ்ணய்யர் , நீதியரசர் எச்.சுரேஷ் உள்ளீட்ட பல அறிஞர் பெருமக்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்கள். அணிந்துரைகளின் வாயிலாக வலியுறுத்தப்படும் கருத்துக்கள் மனித உரிமைகள் மீதும், அதன் விழுமியங்கள் மீது ஆர்வம் உள்ளோர் மிகவும் ஆழமாக கற்க வேண்டியவை ஆகும். பல்வேறு சமயங்களில் பேரறிவாளன் எழுதியுள்ள முறையீட்டு மடல்கள், விண்ணப்பங்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் தான் சிக்குண்ட விதம் குறித்தும், எவ்வாறெல்லாம் விசாரணை என்ற பெயரில் தான் கொடுமைப்படுத்தப்பட்ட விபரங்களையும் இந்த மடல்களில் அறிவு மிக விளக்கமாக எடுத்தியம்பி உள்ளார். அவரது முறையீட்டு மடல்களும், விண்ணப்பங்களும் கெஞ்சல்களும், புலம்பல்களும் நிறைந்த இரங்கத் தக்க மனுக்களாக இல்லை. மாறாக இந்த உலகத்தில் தான் வாழ்வதற்கான உரிமை கோரும் ஒரு மனிதனின் நேர்மையான கோரலாக இருக்கிறது. இந்த நூல் தனிப்பட்ட ஒருவர் தூக்குத் தண்டனையில் இருந்து தப்பி செல்வதற்கான வழியாக விரியவில்லை. மாறாக ஒழிக்கப்பட வேண்டிய மரணதண்டனையை எதிர்க்கவல்ல இயக்கமாகவும் இந்த நூல் விளங்குவது சிறப்பு. இந்த நூல் ஆகாயம் வரை உயர்திருந்து பளபளக்கும் இந்தியாவின் நீதிமன்றங்கள் போற்றும் மாட்சிமை நிறைந்த நீதி பரிபாலனத்தின் மனசாட்சியில் வடுவாக நிலைத்திருக்கிறது.

நூல் முழுக்க அரசு தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் ஆதாரப்பூர்வமாக பதில் அளித்து, சட்டத்தின் முன்பாகவும், இந்த சமூகத்தின் முன்பாகவும் வினாக்களை வைத்து காத்திருக்கிறார் பேரறிவாளன். அவரது விளக்கங்களைப் படித்து இந்திய நீதிமன்றங்களின் இரண்டு புகழ்ப் பெற்ற நீதியரசர்கள் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்கள். இந்த ஒற்றை நூலை படித்தால் போதுமானது. பேரறிவாளனின் விடுதலை என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறியலாம். தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் படித்து..உணர வேண்டிய உணர்ச்சியாக.. அவரவர் உள் மனச் சான்றினை உலுக்கி எடுக்கும் வினாவாக இந்த நூல் அமைந்திருக்கிறது.

இனத்தின் மேலும், இந்த மொழியின் மீதும் பற்று வைத்து ஒரு முற்போக்கு குடும்பத்தின் மகனாய் பிறந்து தான் எந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டோம் என்று இன்றளவும் யோசித்துக் கொண்டிருக்கிற துயரோடு வாழும் பேரறிவாளனின் ஆன்மா நீதிபதி கிருஷ்ணய்யர் சொன்னது போல உயர்வானது. பேரறிவாளனின் துயர் மிகுந்த இருட்டில் உலக வெளிச்சம் பட வேண்டும் . உலகமெங்கும் இயங்கும் மனித உரிமை அமைப்புகளுக்கு பேரறிவாளனின் துயர் சேர வேண்டும். இந்த புனிதக் கடமையை உலகத் தமிழர்கள் தாங்களாக முன் வந்து செய்ய வேண்டும்.இந்த நூல் ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டு கிடைக்கிறது.

ஒரு மனித உயிரை பறிக்க நம் நாட்டு சட்டங்களும், நீதிமன்றங்களும் வைத்திருக்கும் அளவு கோல்கள் மிகவும் அபாயகரமானவை. பெரும்பாலான சமயங்களில் குற்றமற்றவர்களே சிக்கிக் கொள்ளும் வகையில் தூக்குமேடையின் உயரம் மிக அருகில் இருக்கிறது. இதனால் தான் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. மரணவாசல் அருகே வரை சென்று விட்டு இன்று தமிழ்த் தேசிய அறிவுலகின் ஆளுமையாக திகழ்ந்து வரும் தோழர். தியாகு இதற்கு மிகச் சரியான உதாரணம். கண்டிப்பாக பேரறிவாளனுக்கு சீர்க்கெட்டு கிடக்கும் தமிழ் உலக சூழலில் தேவை இருக்கிறது. நிச்சயமாக பேரறிவாளன் எங்களுக்கும் , எம் தமிழ்ச் சமூகத்திற்கும் அவசியத்தேவையாக இருக்கிறார். அனைத்திற்கும் மேலாக நீதியின் மேலும் ,இந்த தமிழ்ச் சமூகத்தின் மேலும் நம்பிக்கை வைத்து வயது முதிர்ந்த நிலையி்லும் எப்படியாவது குற்றம் செய்யாத தன் மகன் விடுதலை ஆகி விடுவான் என்ற எண்ணத்தின் உச்சியில் கனவை சுமந்து நிற்கும் எங்கள் தாய் அற்புதம் அவர்களுக்காகவது…

சிதிலமடைந்த உச்சியில்
சுழற்றி அடிக்கும் சூறைக்காற்றில்
அலைந்தெரியும் தீபம்.
பேரறிவாளன் திரு.

(தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் – அ.ஞா.பேரறிவாளன். வெளியீடு: திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம். விலை.ரூ.60. மேலதிக தகவல்களுக்கு : அற்புதம் குயில் தாசன் 11,கே.கே.தங்கவேல் தெரு,பெரியார் நகர்,சோலையார் பேட்டை-635851 .www.hang-hanging.com,perarivalan.blogspot.com)

Friday, October 22, 2010

கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்று தான்.. - தாமரை - விகடன்'காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடிப் பிடிப்பது உந்தன் முகமே' என்று
பாடல் வரிகளில் பனியின் இதம், 'கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ் சாபம்' என்று இந்திய அரசைச் சாடும் கவிதையில் வெடிகுண்டு வீரியம்... நெருப்பும் மழையும் நிரம்பியவை தாமரையின் எழுத்துக்கள். கவிஞர், பாடலாசிரியர், பெண்ணியவாதி, மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் மனித உரிமைப் போராளி என இந்தத் தாமரைக்கு இதழ்கள் பல!
"எனக்கு இலக்கியம் எப்படி முக்கியமோ... அரசியல் அதைவிட முக்கியம்!" என்கிறார்.

"சினிமா என்பதே ஆணாதிக்கம் நிறைந்த சூழல்தான். பெண்ணியம் பேசும் உங்களால், சுதந்திரமாக இயங்க முடிகிறதா? பெண்ணாக நீங்கள் ஏதேனும் அவதிகளைச் சந்தித்தது உண்டா?"

"திரைப்படத் துறை மட்டும்தான் ஆணாதிக்கம் நிறைந்ததா? அரசாங்கம், நிர்வாகம், பத்திரிகை, பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட துறைகள் எல்லாம் 'சரிநிகர் சமானமாக' இயங்குகின்றனவா? வீட்டுச் சமையல் அறையில் ஆரம்பித்து, வான்வெளிப் பயணம் வரை ஆணாதிக்கம் இல்லாத இடமே கிடையாது என்பதைப் புரிந்துகொண்டால், இந்த சிக்கலைச் சமாளிக்கலாம். 'ஆண்கள் எல்லோரும் எதிரிகள், அவர்களை விலக்கிவிட்டு இயங்க வேண்டும்' என்ற வறட்டுப் பெண்ணியம் அல்ல என்னு டையது. 'பெண்ணும் ஒரு மனித உயிரே' என் பதைப் புரியவைத்து, ஆண்களை வென்றெ டுப்பதில் (Winning over) அடங்கி இருக்கிறது வெற்றியின் சூட்சுமம்! எனக்கென்று வரையறைகள், நிலைப்பாடுகள் உண்டு. அவற்றில் சமரசம் செய்துகொள்வது கிடையாது. எந்தத் துறையைக் காட்டிலும் திரைத் துறையில் எனக்கு அதிக மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. என்னுடைய புரிதலும் அணுகுமுறையும் முதன்மையான காரணங்கள் எனச் சொல்லலாம்!"

"நளினியை விடுதலை செய்வது குறித்து நீங்கள் எடுத்த முயற்சிகள், உங்களுக்கு என்ன மாதிரியான அனுபவங்களைத் தந்தது?"

"நளினி, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரே தவிர, அவர் கொலையாளி அல்ல. நடக்கப்போகும் விபரீ தத்தைத் திருப்பெரும்புதூர் சென்றடையும் வரை நளினி அறிந்திருக்கவில்லை என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதி தாமஸ் தன் தீர்ப்பிலேயே குறிப்பிட்டார். சந்தர்ப்ப சூழ்நிலையில் குற்றவாளியாக்கப் பட்ட ஒரு பெண்ணை, அவர் இத்தனை ஆண்டுகள் சீரிய முறையில் சிறையில் கழித்த பிறகும் விடுதலை செய்ய மறுப்பது, மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற அடிப்படையில்தான் நளினி விடுதலைக்கான 'கையெழுத்து இயக்கம்' தொடங்கினோம். முதல்வரிடம் விண்ணப்பத்தைக் கையளித்தபோது, அவரும் நளினி விடுதலையையே விரும்புவதாகக் கூறினார். பிறகு, நடந்தவற்றை நாடறியும். நளினி விடுதலையை மறுப்பதற்குப் பின்னணியில், மிகப் பெரிய அரசியல் இருப்பது புரிகிறது. இப்போதும் அரசிடம் நாங்கள் வேண்டுவது, மனித உரிமைகளின் பெயரால் நளினியை விடுதலை செய்யுங்கள் என்பதே!"

"பொதுவாக, எல்லா சினிமாப் பாடலாசிரியர்களும் பாராட்டுக் கவிஞர்களாக மாறிவிட, நீங்கள் மட்டும் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து இயங்குவது எப்படி?"

"அரசுக்கு எதிராக இயங்க வேண்டும் என்று எனக்கு 'வேண்டுதல்' ஒன்றும் இல்லை. நான் மக்களில் ஒருத்தி. மக்களுக்கு எதிராக அரசு மாறும்போது, அரசுக்கு எதிராக நான் மாறுகிறேன். இந்த அரசு மட்டுமல்ல; வேறு எந்த அரசு வந்தாலும் இதே நிலைப்பாடுதான். அரசு, தமிழினத்துக்கும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும் கேடு செய்யும்போது, எதிர்த்துக் குரல் கொடுக்கிறேன். அது ஒரு படைப்பாளியாக என்னுடைய கடமை. அதுவே தமிழினத்துக்கு நல்லது செய்தால் பாராட்டத் தயங்க மாட்டேன்.

தமிழ்நாட்டில் மரண தண்டனையை ஒழிக்கட்டும். பாராட்டுகிறேன்; அனைவருக்கும் தமிழில் கல்வி கிடைக்கச் செய்யட்டும். பாராட்டுகிறேன். நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்யட்டும். பாராட்டுகிறேன். மதுவை ஒழிக்கட்டும். பாராட்டுகிறேன். ராஜபக்ஷே கும்பலைப் போர்க் குற்றவாளிகள் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றட்டும்... பாராட்டுப் பத்திரமே வாசித்து விடுகிறேன்!"

"ஈழப் பிரச்னைக்காகப் போராடியவர்களில் ஒருவர் நீங்கள். மே 18-க்குப் பிறகு, 'இந்த எல்லாப் போராட்டங்களும் வீண்' என்ற அயர்ச்சி ஏற்பட்டதா?"

"போரோடு முடிந்துவிடவில்லையே ஈழத்துக் கொடுமைகள். முள்வேலி முகாம் கொடுமைகள், சரண் அடைந்தவர்கள் சித்ரவதை, பாலியல் வதை, கொடூரக் கொலைகள், தமிழர் நிலம் சிங்களமயமாக்கல் என்று இன்னமும் தொடர்கின்றனவே. புண் பட்டுக்கிடந்தால் வேலைக்கு ஆகாது என்று துள்ளி எழுந்து, இலங்கைப் புறக்கணிப்பு, போர்க் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவது தொடர்பாக முன்னிலும் அதிகமாகவே வேலை செய்கிறேன். ஈழம்... என் நெஞ்சில் ஆறாத, மாறாத காயம்!"

"இன்றைய இந்திய காங்கிரஸ் அரசின் போக்கு குறித்து?"

"இந்திய காங்கிரஸ் அரசு யாருக்காக எப்படி எல்லாம் செயல்படுகிறது, எப்படிப் பெருங் குழுமங்களுக்கு ஏவல் செய்கிறது என்பதை அருந்ததி ராய் போன்ற எழுத்தாளர்கள் பிட்டுப் பிட்டுவைத்துள்ளார்கள். நான் புதி தாகச் சொல்ல வேண்டியது ஏதும் இல்லை. என்னைப் பொறுத்தவரை, இது தமிழினத் தைக் கருவறுக்கப் புறப்பட்ட அரசு. தமிழி னம் வாழ வேண்டும் எனில், தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸை அடியோடு ஒழித்தாக வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு ஒரு செல்வாக்கு இருக்கும் வரையில்தான், இரு பெரும் கழகங்களும் மாறி மாறி அதைத் தோளில் சுமக்கவும், அதற்காகத் தமிழனைக் காட்டிக்கொடுக்கவும் போட்டியிடும். தமிழர் நலன், தமிழ்நாட்டின் உரிமைகள் இவற்றை முன்னிறுத்தினால் மட்டுமே, தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையைத் தோற்றுவிப்பது நம் கையில் உள்ளது. அதற்கு முதல் வேலை, காங்கிரஸை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறிவதுதான். நல்ல வாய்ப்பாக சட்டப் பேரவைத் தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெல்லக் கூடாது என்பதை மனதில்கொள்வோம்!"

"ஈழப் பிரச்னையில் கருணாநிதி - ஜெயலலிதா இருவரின் நிலைப்பாடு குறித்த உங்கள் கருத்து என்ன?"

"ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, பிணக் குவியல்களின் மீது ஏறி வெறியாட்டம் போட்ட காங்கிரஸின் குருதிக் கறை படிந்த கையை இறுகப் பற்றி, அதை இழந்துவிடக் கூடாதெனத் துடிப்பவர் கருணாநிதி. அந்தக் கையை எப்படியாவது கைப்பற்றத் துடிப்பவர் ஜெயலலிதா. 'ஆமாண்டா, அப்படித்தான் செய்வேன், உன்னால முடிஞ்சதைப் பாரு' என்று தெனாவெட்டாகக் காட்டிக்கொடுப் பார் ஒருவர். 'ஐயகோ, என் செய்வேன், அழிகிறதே என் தமிழினமே!' என்று அழுது கொண்டே காட்டிக்கொடுப்பவர் இன்னொ ருவர். இருவருக்கும் இடையே என்ன பெரிய வேறுபாடு? சாயலில் வேறுபட்டாலும், சாரத்தில் இருவரும் ஒன்றுதான்!"

"'ஈழப் போராட்டத்தின் தோல்வி (அ) பின்னடை வுக்கு எது அல்லது, யார் காரணம் என்று கருதுகிறீர்கள்?"

"சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்து, ஆதரவு கொடுத்து, உலக நாடுகள் தலையிட்டுக் காப்பாற்றி விடாமல் தடுத்து, வேவு பார்த்து, வழிகாட்டிக் கூட்டுச் சதி செய்து, இனப் படுகொலைப் போரைப் பின்னால் இருந்து நடத்திய இந்திய அரசே முதற்பெரும் காரணம்! எப்பாடுபட்டேனும் இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பைக் கை கழுவிவிட்டு, கபட நாடகங்கள் நடத்தி, இனப் படுகொலைக்குத் துணைபோன தமிழக அரசு, இரண்டாவது காரணம்! இதை வெளிச்சம் போட்டுக் காட்டி, வீதிக்கு வந்து போராடி இனப் படுகொலையைத் தடுக்காமல், 'போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்று அருட்பெரும் பொன் மொழியை உதிர்த்துவிட்டு, உறங்கப் போய் விட்ட எதிர்க் கட்சித் தலைவி ஜெயலலிதா, மூன்றாவது காரணம்! இந்த நாடகங்களை எல்லாம் ஒரு கட்டத்தில் அறிந்துகொண்ட பிறகு, கொதித்தெழுந்து போராடித் தம் தொப்புள் கொடி உறவுகளைக் காப்பாற்றா மல், கையைப் பிசைந்து முகத்தைத் திருப்பிக்கொண்டதோடு முடித்துக்கொண்ட தமிழக மக்கள், நான்காவது காரணம்!"

Thursday, October 21, 2010

ஒருபுறம் இலவசம், மறுபுறம் அடக்குமுறை! கொட்டமடிக்கும் கருணாநிதி ஆட்சி
வினவு!
Skip to content

* Home
* அறிமுகம்
* வினவை ஆதரியுங்கள்!
* அங்காடி
* நூல்கள்

ஒருபுறம் இலவசம், மறுபுறம் அடக்குமுறை! கொட்டமடிக்கும் கருணாநிதி ஆட்சி

14/14
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

தன்னுடைய சாதனைகளையும் தகுதியையும் இந்த தேசம் நியாயமாக மதிப்பிட்டுப் பார்த்திருக்கும் பட்சத்தில், காந்தி – நேரு வரிசையில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தேசியத் தலைவராகத் தான் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் என்பது கருணாநிதியின் கருத்து. இலவசத் திட்டங்களால் கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் தன்னைப் போற்றிப் புகழ்வதாக அவர் கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற திமிர் பிடித்த காங்கிரசுக்காரர்களால் அவ்வப்போது தான் விமரிசிக்கப்படுவதை அவரால் சகித்துக் கொள்ள முடிகிறது. பிள்ளைகளின் வாரிசுரிமைத் தகராறில் முச்சந்தியில் வைத்து அவரது வேட்டி இழுபடுவதைக்கூட அவர் பெருந்தன்மையுடன் பொறுத்துக் கொள்கிறார். அவற்றுக்கெல்லாம் ஒரு நியாயம் இருக்கிறது என்று அவர் கருதுகிறார். ஆனால் சத்துணவு ஊழியர்கள் போன்ற சாமானியர்கள் அவரது கவுரவத்தில் குறுக்கிடும்போது, அவரால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. நெற்றிக் கண்ணைத் திறந்து பாசிச ஜெயலலிதாவின் வழியில் அடக்குமுறையை ஏவத் தொடங்கிவிட்டார்.

கனவைக் கலைத்த சாமானியர்களின் போராட்டம் !!

தமிழகத்தின் 12 இலட்சம் அரசு ஊழியர்களில் 5 லட்சம் பேர் மதிப்பூதியம், தொகுப்பூதியம் என்ற பெயரில் மாதம் ரூ.300 முதல் ரூ.4500 வரை ஊதியம் பெறுகின்றனர். இவர்களில் 1.23 இலட்சம் பேர் சத்துணவு ஊழியர்கள். இவர்களுக்கு மைய அரசின் 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்ததைவிடக் குறைவாக, ஒரு புதிய சிறப்புக் காலமுறை ஊதியத்தைக் (ரூ.3780 முதல் ரூ.4694 வரை) கண்டுபிடித்து வழங்கி வருகிறது,கருணாநிதி அரசு. அற்ப ஊதியத்துடன் பணியாற்றிவிட்டு, பணிமூப்படைந்து ஓய்வுபெறும் சத்துணவுப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.400 முதல் ரூ.600 வரைதான் ஓய்வூதியமாகத் தரப்படுகிறது. ஆனால், தமிழகப் போலீசுத் துறையில் 6,7 ஆண்டுகளில் ஓய்வு கொடுக்கப்படும் மோப்ப நாய்களைப் பராமரிக்க, அதன் வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.1500 வழங்கப்படுகிறது

கடந்த 25 ஆண்டுகளாக, அற்ப ஊதியத்துடன் அடுப்படியில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் சி.பி.எம். கட்சியின் தலைமையிலான சங்கத்தில் கணிசமாக அணிதிரண்டு காலமுறை ஊதியம் வழங்கப்படவேண்டும், சட்டரீதியான ஓய்வூதியம் வேண்டும், கல்வித்தகுதிக்கேற்ப பதவி உயர்வு வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பலமுறை போராடியும் அரசு அசைந்து கொடுக்காததால், கடந்த ஆகஸ்ட் 30 அன்று தலைமைச் செயலகத்தை (கோட்டையை) முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர். உடனே கருணாநிதிக்கு ஆத்திரம் பொங்கியது. சத்துணவு ஊழியர்களின் நியாயமான போராட்டத்தை ஆட்சிக்கு எதிரான போராட்டமாகவும் அதனைக் கம்யூனிஸ்டுகள் தூண்டிவிடுவதாகவும் பாயத் தொடங்கினார்.

கோட்டை முற்றுகைப் போராட்டத்தையொட்டி, பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துகளிலும் வேன்களிலும் சென்னைக்கு வந்த சத்துணவு ஊழியர்கள் 3,500க்கும் மேற்பட்டோர் எல்லையிலேயே தடுக்கப்பட்டு இரவோடிரவாகக் கைது செய்யப்பட்டனர். இந்த அடக்குமுறைக் கெடுபிடிகளைத் தாண்டி தலைமைச் செயலக வாயிலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். தமிழகம் முழுவதும் முன்னணியாளர்கள் ஏறத்தாழ 30,000 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை வாழ்த்தச் சென்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்களின் சங்கத்தைச் சேர்ந்த 27 மாநில நிர்வாகிகள் வேலைநீக்கம் செய்யப்பட்டு, 42 பேர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்போராட்டத்துக்குச் சற்று முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த டாஸ்மாக் ஊழியர் போராட்டமும் இதே முறையில் கடுமையாக ஒடுக்கப்பட்டது. தமிழகத்தின் அரசு சாராயக் கடைகளில் (டாஸ்மாக்) பணியாற்றும் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குக் கடந்த 7 ஆண்டுகளாக ரூ.2100 முதல் 2800 வரைதான் ஊதியம் வழங்கப்படுகிறது. பலமுறை அரசிடம் முறையிட்டும் அசைந்து கொடுக்காததால் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் சட்டமுறைப்படி வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன. முன்னணியாளர்களைப் போராட்டத்தில் பங்கேற்கவோ அணிதிரட்டவோ விடாமல் பிடித்து வைத்துக் கொண்டும், இதர பணியாளர்களை மிரட்டி கட்டாயமாகக் கடையைத் திறக்க வைத்தும், போலீசு பாதுகாப்புடன் சரக்கு விற்பனை செய்யப்பட்டு அப்போராட்டம் ஒடுக்கப்பட்டது.

கோட்டையை முற்றுகையிடுவது குற்றமா?

“கம்யூனிஸ்டுகள் நடத்தும் கிளர்ச்சி எதுவாயினும் அதற்கு ஒரு போர்க்கள முத்திரை குத்தாமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பார்கள். பிறகு கண்டன ஆர்ப்பாட்டம் என்பார்கள். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலக முற்றுகை என்பார்கள். அவர்கள் வைத்த கொள்ளிதான் சில மாநிலங்களில் மாவோயிஸ்டு தாக்குதல், அராஜகம், உயிர்ப்பலிகள் என்ற அளவுக்குக் கொழுந்துவிட்டு எரிகிற காட்சியைப் பார்க்கிறோம். அரசுக்குச் சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகப் போர்முனைக்கு வாருங்கள் என்று தி.மு.க.வோ தி.க.வோ ஒருபோதும் மக்களைத் திரட்டியதில்லை. எந்தப் பிரச்சினைக்காகப் போராட்டம் நடத்தினாலும், அதற்கான கிளர்ச்சியை அமைதியான முறையில், அறவழியில் நடத்திப் பழக்கப்பட்டவர்கள் நாங்கள்” என்கிறார் கருணாநிதி.

‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி மதுரையில் நடத்தும் கட்டப்பஞ்சாயத்துக்கள் எல்லாம் அறவழிதானா? தி.மு.க. மூத்த தலைவரான தா.கிருட்டிணன் வெட்டிக் கொல்லப்பட்டாரே, அது அமைதி வழியா? மதுரையில் தினகரன் நாளேட்டின் அலுவலகத்தில் போலீசு அதிகாரிகள் முன்னிலையில் அட்டாக் பாண்டி தாக்குதல் நடத்தி 3 ஊழியர்களைக் கொன்றொழித்ததும்கூட அறவழியா? அதனால்தான் நீதிமன்றம் அந்த ‘மகாத்மா’வை விடுதலை செய்துவிட்டதா?

பதவிப் பட்டியலைக் கையிலே வைத்துக் கொண்டு குடும்பத்தோடு டெல்லிக்குப் படையெடுத்து முற்றுகையிட்டாரே, கருணாநிதி? பணி நிரந்தரம் கேட்டுக் கோட்டையைச் சத்துணவுப் பணியாளர்கள் முற்றுகையிடுவதுதான் குற்றமா? சன் டிவி, கலைஞர் டிவி, கேபிள் தொலைக்காட்சி, திரையரங்குகள், சினிமா தயாரிப்புக் கம்பெனிகள், சிமெண்டு – சாராயக் கம்பெனிகள், வீட்டுமனைத் தொழில், இத்தனையும் போதாதென அமைச்சர் பதவிகள் – எனத் தமிழகத்தையே கருணாநிதியின் வம்சம் முற்றுகையிட்டிருக்கிறது. சத்துணவுப் பணியாளர்கள் கோட்டையை முற்றுகையிடுவதுதான் குற்றமாம்!

நாடாளுமன்றத்தில் வாய்திறந்து பேசாத அழகிரிக்கு முழுச் சம்பளம். ஏனென்றால், அவர் முழுநேரப் பணியாளர்! நாள் முழுக்க புகை மூட்டத்தின் நடுவே அடுப்பு ஊதும் சத்துணவுப் பணியாளருக்கு அரைச் சம்பளம், தொகுப்பூதியம். ஏனென்றால், இவர்கள் பகுதிநேரப் பணியாளர்கள்!

போராடினாலும் குற்றம் வாய்திறந்தாலும் குற்றம்

இத்தகைய சாமானிய மக்கள், தி.மு.க.வின் பொற்கால ஆட்சியில் சென்னை நகரிலிருந்து விரட்டப்படுகிறார்கள். சிங்காரச் சென்னையை மேலும் அழகுபடுத்துவது என்ற பெயரில், கூவம் – அடையாறு கரையோரக் குடிசைகள் இடித்துத் தள்ளப்படுகின்றன. இதை எதிர்த்து வாய் திறக்கக்கூடாதாம். ஏனென்றால், இது தமிழகத்தின் வளர்ச்சிக்கானதாம்.

சொத்துக்களை ஆக்கிரமித்தல், காலி செய்யுமாறு மிரட்டுதல், ஆட்களைக் கடத்திப் பணம் பறித்தல், கட்டப் பஞ்சாயத்து முதலான பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் – போலீசுத்துறை உயரதிகாரிகள் மாநாட்டில் ஆணையிடுகிறார், கருணாநிதி.

ஆனால், மலைகளையே மொட்டையடிக்கும் கிரானைட் குத்தகைதாரர்கள் அடிக்கும் கொள்ளையைத் தனது விரலசைவில் வைத்துப் பாகம் பிரித்துக் கொள்கிற ‘அஞ்சாநெஞ்சன்’ அழகிரியை மதுரையிலேயே அம்பலப்படுத்திய “தினபூமி” நாளேட்டின் ஆசிரியரையும் அவரது மகனையும் கைது செய்து பொவழக்குப் போட்டு மிரட்டுகிறது, தி.மு.க. அரசு.

குடியாத்தம் நகரில் மேல் ஆலத்தூர் ரோடு, பாட்டை புறம்போக்கில் நூறாண்டு காலமாகக் குடியிருந்து வரும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் இஸ்லாமியர் என 36 குடும்பங்களின் வீடுகளை கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆளும் கட்சி ரியல் எஸ்டேட் கும்பல் சமூக விரோதிகளுடன் வந்து சட்டவிரோதமாக இடித்துத் தள்ளி, குடியிருப்பவர்களைக் கடுமையாகத் தாக்கி, அந்த இடத்தை வளைத்து வேலி போட்டுக் கொண்டுள்ளது.

இந்த அநியாயத்தை எதிர்த்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சி.பி.எம். கட்சி தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தியபோது, இப்போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும் முன்னணியாளர்களையும் தாக்கி, கைது செய்து சிறையிலடைத்துள்ளது, கருணாநிதி அரசு. சி.பி.எம். கட்சியின் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினரான லதா, மொசைக் செல்வம் என்ற ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி 20 இலட்ச ரூபாய் கேட்டதாகப் பொப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

கருணாநிதியின் ஆட்சியில் அநியாயத்துக்கு எதிராகப் போராடினாலும் வாய்திறந்தாலும்கூடக் குற்றம். கருணாநிதி அரசை விமர்சித்த தா.பாண்டியன், பழ.கருப்பையா வீடுகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் சிங்கள இனவெறி அரசின் அட்டூழியத்தைக் கண்டித்துப் பேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரான இயக்குநர் சீமான், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பிணையில் வெளிவர இயலாத சிறைத் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசுக்கு எதிராகப் பேசினால், சட்டம்-ஒழுங்கு தன் கடமையைச் செய்யும் என்று தி.மு.க. அமைச்சர் எச்சரிக்கிறார்.

அருகதையற்ற மார்க்சிஸ்டுகளின் ஆகாத வழி

“மே.வங்கத்தில் சத்துணவுப் பணியாளர்களை நிரந்தரம் செய்யாமல் இங்கே மட்டும் நிரந்தரம் செய்யக் கோருவது ஏன்? அங்கே சத்துணவு, ரேஷன் கடைகளைத் தனியாரிடம் கொடுத்துவிட்டு, இங்கு போராட்டத்தைத் தூண்டுவது ஏன்?” என்று மார்க்சிஸ்டுகளை மடக்குகிறார் கருணாநிதி. “ஜெயலலிதாவின் நில ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்கள், இப்போது வாய்மூடி கிடப்பது ஏன்? சிறுதாவூர் சீமாட்டியை முதல்வராக்குவதுதான் உங்கள் நோக்கம்” என்று மார்க்சிஸ்டுகளுக்கு இப்போராட்டங்களைத் தலைமையேற்று நடத்த அருகதையில்லை என்று சாடுகிறார்.

ஓட்டுக்கும் சீட்டுக்கும் பாசிச ஜெயலலிதாவின் காலடியில் கிடப்பதாலும், தாங்கள் ஆளும் மே.வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில் தனியார்மய-தாராளமயமாக்கலை விசுவாசமாகச் செயல்படுத்தி வருவதாலும் கருணாநிதியின் இந்தக் கேள்விகளுக்கு மார்க்சிஸ்டுகளால் வாய்திறக்க முடியவில்லை. மாவோயிஸ்டுகளுக்கு எதிராகத் தாங்கள் போராடி வருவதாகவும், சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தைத் திசைதிருப்ப வேண்டாம் என்றும் சி.பி.எம். கட்சி அறிக்கை விட்டு அடங்கி விட்டது. இதுதான் கருணாநிதியின் கேள்விகளுக்கு மார்க்சிஸ்டுகளின் பதிலடி. கருணாநிதி உபதேசிக்கும் அறவழிக்கு மாற்றாக சி.பி.எம். வைக்கும் ஆகாத வழி இதுதான். மார்க்சிஸ்டுகளை நம்பி போராட்டத்தில் இறங்கிய சத்துணவு ஊழியர்களோ அடக்குமுறைக்கும் பழிவாங்கலுக்கும் ஆளாகி அவமானத்தால் துடிக்கிறார்கள்.

தி.மு.க. அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத அடக்குமுறைகள் அடுத்தடுத்து அம்பலமாகியுள்ள போதிலும், பிழைப்புவாதத்திலும் சந்தர்ப்பவாதத்திலும் மூழ்கிக் கிடப்பதால் போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் இவற்றுக்கு எதிராக மக்களைத் திரட்டி எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் நடத்த முடியவில்லை. கண்டன அறிக்கைகள், அடையாள எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மேல் அவை முன்னேறுவதுமில்லை. எதிர்க்கட்சிகளின் செயலற்ற தன்மையால், ஒருபுறம் இலவசத் திட்டங்கள் மறுபுறம் அடக்குமுறை என கருணாநிதியின் குடும்ப ஆட்சி கேள்விமுறையற்று ஆதிக்கத்தை நிறுவிக் கொட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

நன்றி-வினவு

Tuesday, October 19, 2010

இன்றோடு ஆறு ஆண்டுகள் - சவுக்குஇன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா ? சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகின்றன.

வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்டு நிலமும் பெற்று இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன.

ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரால், வன்புணர்ச்சி செய்யப் பட்ட பெண்களும், இட்லரின் நாஜிப் படையை விட மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளான ஆண்களும், பெண்களும், இன்றும் மவுன சாட்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தச் சித்திரவதைகளை செய்தவர்களும், செய்யத் தூண்டியவர்களும், இன்று பதவி மெத்தைகளிலும், அதிகார அரியணைகளிலும், அமர்ந்திருக்கிறார்கள்.

வீரப்பனால் பெயரைக் கூறி பத்திரிக்கை விற்பனையை பெருக்கியும், வீரப்பனுக்கு தருகிறேன் என்று கூறி, கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்தவர்களும், அன்று ஆட்சி பீடத்தில் உள்ளவர்களுக்கு, நெருக்கமாக, கும்மியடித்துக் கொண்டு, ஆட்சியாளர்கள் அடிக்கும் கொள்ளைகளுக்கு ஒத்து ஊதிக் கொண்டு உள்ளார்கள்.

வீரப்பனை கொன்று விட்டோம் என்ற மார்தட்டிக் கொண்டு, ஆறு ஆண்டுகள் கழித்து, இன்றைய நிலைமை என்ன என்று பார்த்தால், வருத்தமும், ஏமாற்றமும், வீரப்பன் இல்லையே என்ற ஏக்கமும் ஏற்படுகிறது.

வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒகெனக்கலை சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா ? தமிழகத்தில் கால் வைக்க வாட்டாள் நாகராஜுக்கு தைரியம் இருக்குமா ?

வீரப்பன் தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றான், மரங்களை வெட்டினான் என்றெல்லாம் பல்வேறு குற்றச் சாட்டுகளைச் சொன்னாலும், வீரப்பன் என்ற ஒரு நபர் இல்லாத இந்தியாவின் பல்வேறு இடங்களில் சந்தனமும் ரோஸ்வுட் மரமும், தேக்கும் மற்றும் பல்வேறு உயர்வகை மரங்களும் மிக மிக மோசமாக கொள்ளையடிக்கப் பட்டுத்தானே வருகின்றன ? இந்தியாவில் வனங்கள் இருக்கும் பகுதிகளில், மரக்கொள்ளையர்கள் இன்று வரை மரங்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடித்துத் தானே வருகின்றனர் ?

ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு, விரப்பன் யானைகளை கொல்வதை நிறுத்தி விட்டார் என்பதுதான் உண்மை. ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரில், மலைவாழ் மக்களை, கர்நாடக காவல்துறையும், தமிழக காவல்துறையும் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சோளகர் தொட்டி படித்துப் பாருங்கள்… !

வீரப்பன் இருந்த காலத்தில், காட்டுக்குள் வந்து வேட்டையாட பயந்த மரக் கொள்ளையர்கள் வீரப்பன் இருந்த பக்கமே வரமாட்டார்கள் என்றும், வனத்துறையினர் மீது துளியும் பயம் இல்லை என்றும், வீரப்பன் என்றால் அவ்வளவு அச்சம் என்றும், சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கிறார்.

வீரப்பன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப் பட்டார் என்ற செய்தி டிவியில் வந்ததும் அறிந்திருப்பீர்கள். ஆனால், அந்த என்கவுண்டரில் முக்கியப் பங்கு வகித்த ஒரு ஆய்வாளர் யார் தெரியுமா ? என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் வெள்ளைத் துரை. ஆறு ஆண்டுகளுக்கு முன், என்கவுண்டர் நடந்ததாக சொல்லப் படும் 18.10.2004ம் ஆண்டு, வெள்ளைத் துரை சங்கம் தியேட்டர் எதிரில் இருக்கும் உதவி ஆய்வாளர்கள் குடியிருப்பில் குடியிருக்கிறார். 17.10.2004 அன்று இரவு, தன்னுடைய குடியிருப்பில் இருக்கும் குழந்தைகளோடு, தரைத் தளத்தில் வண்டி நிறுத்தும் இடம் அருகே வெள்ளைத் துரை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தது, அந்த குடியிருப்புக்கே தெரியும். மறுநாள் டிவியைப் பார்த்தால், வெள்ளைத் துரை போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

வீரம் என்பது என்ன தெரியுமா ? மோரில் விஷம் வைத்து ஒருவனை கொன்று விட்டு, பிணத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு, அந்தப் பிணத்தோடு போஸ் கொடுப்பதல்ல. .. 34 ஆண்டு காலம், இரண்டு மாநில காவல்துறைக்கும், மத்திய ரிசர்வ் காவல் படைக்கும், சிம்ம சொப்பனமாக விளங்கி மலைவாழ் மக்களின் கதாநாயகனாக வாழ்ந்தது தான் வீரம். கடற்கரையின் இருட்டில் உட்கார்ந்திருந்தவனை பேசப் போவது போல் சென்று, கொன்று விட்டு அயோத்திக் குப்பம் வீரமணியை நான்தான் கொன்றேன் என்று மார்தட்டிக் கொள்வது வீரமல்ல….

வீரப்பன் இல்லாத நிலையில், இன்று கேரள எல்லையில், தொடர்ந்து சந்தன மரங்கள் கடத்தப் படுவதாக தகவல்கள் கூறுகின்றன. வீரப்பன் இருந்த வரை, யானைகளையும் வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடக் கூட, வனத்துறையினர் அஞ்சி நடுங்கியதாகவும், இப்போது, பழைய ராஜாக்கள் காலம் போல, வனத்துறையினர், மான்களையும், மற்ற வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வீரப்பனுக்கு, உணவு கொடுத்தோம், உதவி செய்தோம் என்ற காரணத்துக்காக, பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான மலைவாழ் மக்கள் கூட, இன்று வீரப்பன் இல்லாததை நினைத்து வருந்துவதாக தகவல்கள் கூறுகின்றன.

வீரப்பன் என்ற ஒருவன் குற்றவாளியாக இருக்கலாம். வனச் சொத்துக்களை அழித்தான் என்று அவன் மீது குற்றஞ்சாட்டலாம். வீரப்பன் வனச் சொத்துக்களை அழித்தான் என்றால், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும், மலையின் இயற்கை வளத்தையும், நீராதாரத்தையும் அழித்துச் சுரங்கம் தோண்டும் வேதாந்தா குற்றவாளி இல்லையா ? அதன் இயக்குநர்களில் ஒருவராக இருந்த ப.சிதம்பரம் குற்றவாளி இல்லையா ? மலைவாழ் மக்களுக்கு எதிராகவும், வேதாந்தாவுக்கு ஆதராவகவும் தீர்ப்பு அளித்த இந்திய தலைமை நீதிபதி கபாடியா குற்றவாளி இல்லையா ?

இயற்கை வளங்களை யார் அழிக்கவில்லை ? காட்டில் அழித்தால் மட்டும் தான் இயற்கை வளமா ? நகரத்தில் உள்ள ஏரிகளை தூர்த்து, அதன் மீது, பிளாட் போட்டு விற்று, கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளும், ரியல் எஸ்டேட் காரர்களும் அழிப்பதற்கு பெயர் இயற்கை வளம் இல்லையா ?

வீரப்பன் என்ற மாவீரன் இல்லாததால் தமிழகம் இழந்ததே அதிகம். வீரப்பன் இருந்திருந்தால், வாலாட்டும் வாட்டாள் நாகராஜின் வாலை நறுக்கியிருப்பார்

Monday, October 18, 2010

அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள அத்தனைக் கோயில்களையும் அகற்றுக! உச்சநீதி மன்றத்தின் வரவேற்கத்தக்க ஆணை

நடைபாதைக் கோயில்கள், பொது இடங்களில் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள அனைத்து மத வழிபாட்டுக் கோயில்களையும், சின்னங்களையும் உடனடியாக அகற்றுமாறு உச்சநீதிமன்றம் செப் 14 அன்று ஆணையிட்டுள்ளது.

நாடெங்கும் அனுமதி பெறாது போக்குவரத்துக்கு இடை யூறாகவும், பலருடைய தனி வருவாய்க்கு வழி செய்யவும் பல நூற்றுக்கணக்கான நடைபாதைக் கோயில்களைக் கட்டியிருக் கிறார்கள்;

இதேபோல வேறு மத வழிபாட்டுச் சின்னங்களும்கூட தோன்றியுள்ளன; (இவை விகிதாச்சாரத்தில் மிகவும் குறைவு தான்) இவைகளை அகற்றவேண்டும் - இது பொதுமக்களின் வசதிக்கு மிகப்பெரிய இடையூறு என்பதை பலமுறை சுட்டிக் காட்டப்பட்டது பகுத்தறிவாளர்களால், திராவிடர் கழகத்தவர்களால், மதச்சார்பின்மையாளர்களால் (Secularists).

அனுமதியின்றி இந்தத் திடீர்க் கோயில்கள் அரசு அலுவலக வளாகங்களில், அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கோயில்கள் கட்டப்படுகின்றன. பல மதத்தவர் மத நம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்கள் உள்ள பொது அரசுப் பணிமனைகளில், பொது இடங்களில் பலர் வேண்டுமென்றே மற்ற மதத்தவர்களை வம்புக்கு இழுப்பதற்கோ அல்லது மதவெறியைப் பரப்புவதற்கோ உள்நோக்கத்துடன் கட்டப்பட்டவைகளும் உண்டு.

இதை எதிர்த்து நாகர்கோவில் முதல் சென்னை, திருத்தணி எல்லைவரை உள்ள பல ஊர்களில் சென்னை மாநகரம் உள்பட - கட்டப்படும் கோயில்களை, வழிபாட்டு நிலையங்களை (தனியா ருக்கு வருவாய் மூலங்களும் ஆகும்) எதிர்த்து திராவிடர் கழகத்தவர்கள் போட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தஞ்சை, திருச்சி போன்ற பெருநகரங்களில் - தஞ்சை, திருச்சி மருத்துவக் கல்லூரி வளாகங்களில் கட்டப்பட்ட கோயில்களை இடிக்க நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பின்னரும்கூட, ஆங்காங்குள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களோ, மற்ற அதிகாரிகளோ, அவைகளை இடித்து அப்புறப்படுத்துவதை ஏனோ ஏதேதோ சாக்குக் கூறி காலந்தாழ்த்தி வருகின்றனர்!

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ஆணைக்குப் பிறகும் காலந்தாழ்த்தக்கூடாது.

திருச்சி, மதுரை போன்ற பல மாவட்டங்களில் உள்ளவற்றை அகற்ற மதுரை உயர்நீதிமன்றத்தால் சில ஆண்டுகளுக்குமுன் தீர்ப்பு வழங்கப்பட்டு, அகற்ற ஆணை பிறப்பித்த நிலையில்கூட, சில ஊர்களில் இடித்தனர்; பிறகு மெத்தனமாகக் கிடப்பில் போடப்பட்டு-விட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த முற்போக்குக் கருத்துள்ள தீர்ப்பு, காலத்தால் கிடைத்த அருமையான பாராட்டி வரவேற்கவேண்டிய தீர்ப்பு!

இத்தீர்ப்பினை உடனடியாக அமல்படுத்தத் தவறிய மாநிலங்களின் அரசு தலைமைச் செயலாளர்களை நேரில் வருமாறு அழைப்போம்; விளக்கம் கேட்போம் என்று கூறியுள்ளது மிகச் சரியானதே!

தீர்ப்பை அமல்படுத்த, வற்புறுத்திட காலக் கெடுவுடன்கூடிய (Time Bound) அகற்றல் நடவடிக்கைக்குச் சரியான ஆணை மிகவும் தேவை.

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்-பட்டுள்ள சில தகவல்கள் எவரையும் வியப்பில் ஆழ்த்தக் கூடியதாக உள்ளன.

தமிழ்நாட்டில் - பெரியார் பிறந்த மண்ணில் - பகுத்தறிவாளர் ஆளும் இம்மாநிலத்தில் உள்ள நடைபாதைக் கோயில்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாம்!

கிழக்கே உள்ள அருணாச்சல பிரதேசத்தை உச்சநீதிமன்றம் பாராட்டி உள்ளது. அங்குதான் அனுமதியற்ற ஒரு வழிபாட்டு நிலையம்கூட இல்லை என்பதற்காக!

மத்திய அரசு, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் (பாண்டிச்சேரி, டில்லி போன்றவைகள்) இத்தகைய அனுமதியற்று எழுப்பப்படும் வழிபாட்டு நிலையங்களை அகற்றிட, ஒரு கொள்கை திட்டத்தை உருவாக்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு இதில் உடனடியாக அக்கறை செலுத்தி, தயவு தாட்சண்யமின்றி இடித்து அகற்றிடவேண்டும்.

ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அகற்றிட முன்வருதல் போலவே, அரசு, மாநகராட்சி, காவல்துறை உதவியுடன் செய்யவேண்டும்.

திராவிடர் கழகத்தவர்கள், பகுத்தறிவாளர்-கள் ஆங்காங்கே உடனடியாக இதனைச் சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமலாக்க உதவிகரமாக இருக்கவேண்டும்; இருப்பார்கள் என்பது உறுதி.

தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் இதில் கவனம் செலுத்திட முன்வரவேண்டும்.

அவசரம் - அவசியம்.

Friday, October 15, 2010

ஆயுத பூஜை?தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமலதாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பவன் பிஜப்பூர் சுல்தானின் படைத்தலைவன் வெங்காஜி என்பவனை வேண்டினான்.

வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டுதலின் பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படையெடுத்து வந்த சமயமானது ஆயுத பூஜை சமயமாகும். படை வீரர்களின் படைக் கலங்கள் எல்லாம் ஆயுத பூஜைக்காக கொலுவில் வைக்கப்பட்டிருந்தன.

மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மனக்கலக்கம் அடைந்தவனாய் பார்ப்பன அமைச்சர்களையும், பார்ப்பன குருமார்களையும் அழைத்து ஆலோசனை கேட்டான். அதற்கு அந்தப் பார்ப்பனர்கள், மன்னர் மன்னா! கவலைப்படாதீர்கள்! ஆயுத பூஜையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை எடுத்தால் சாஸ்திர விரோதம். நம் நாட்டின்மீது படையெடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படையெடுத்து வருபவன் அவனது தளபதியான வெங்காஜியாவான். அவனோ ஓர் இந்து. மேலும் பரம வைணவன். ஆகவே, திருமாலுக்கு மிகவும் உகந்த திருத்துழாய்களை (துளசிச் செடிகளை) நமது நகரின் எல்லையில் தூவிவிட்டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக் கொண்டு வரமாட்டான் என்று சொன்னார்கள்.

மன்னனும், அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச் செடிகளை நகரின் எல்லையில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தானும் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ஹரி பசனைச் செய்துகொண்டு இருந்தான். வெங்காஜியின் படைகளின் குதிரை களோ, குவிந்திருந்த துளசிச் செடிகளைப் புல்லென எண்ணி, அதிவிரைவாகவும், அனாயசமாகவும் வாயில் கல்விக் கொண்டு நகருக்குள் புகுந்தன.

இதனைக் கேள்வியுற்ற மன்னன் செங்கமலதாசன், வெங்காஜி சத்தியம் கெட்டவன், திருமாலின் திருத்துழாயினை மதிக்கவில்லை. ஆகவே, அவனுடன் போர் செய்தல் கூடாது என்று கூறி, யாரும் அறியாமல் எங்கோ ஓடி ஒளிந்து விட்டான்.

வெங்காஜியின் படைகள் செங்குருதி சிந்தாமலும், வாளை எடுக்காமலும், வேலைத் தூக்காமலும் எளிதில் தஞ்சையினைக் கைப்பற்றின.

ஆயுத பூஜை கொண்டாடும் பக்தர்களும், வணிகர்களும், பொது மக்களும் இதற்குப் பிறகும் ஆயுத பூஜை கொண்டாடுவார்களேயானால், வரலாற்றின் பாடத்தைக் கற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்றுதான் பொருள்.

இந்து மதக் கடவுள்களின் கைகளில் கூட ஆயுதங்கள் இருக்கத்தான் செய்தன. அவையெல்லாம் கொலைக்குப் பயன்படும் கருவிகள்தாம். இருந்தும் என்ன பயன்? கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகளையே தூக்கிக் கொண்டு போய் வெளிநாட்டில் விற்று விடுகிறார்கள்.

உருவமற்ற கடவுள்கள் என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டு, கற்பனைக்குத் தகுந்த உருவங்களைப் படைத்து அவற்றின் கைகளில் ஆயுதங்களைக் கொடுப்பதெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டு அல்லவா! ஆன்மிகப் பொய்கையில் குளித்து எழுந்த வடலூர் இராமலிங்க அடிகளார் இந்தப் பொய்யுரைக்கும், கற்பனைகளைச் சாடவில்லையா?

கடவுளை நம்புபவர்கள்கூட சிந்திக்க வேண் டியவை பல உள்ளன. கருணைக்கடல் கடவுள் என்று கூறிக்கொண்டு சூலாயுதம், வேலாயுதங்களைக் கடவுள் கைகளில் கொடுத்திருக்கிறார்களே என்று சிந்திக்கவேண்டாமா?

தொழில் அபிவிருத்திக்காக ஆயுதங்களுக்கு நன்றி என்பதுகூட அறிவுக்குப் பொருத்தமாகாது. காலுக்கு செருப்பு அவசியம்தான் - அதற்காக அதற்குப் பூஜை போட முடியுமா?

எத்தனை ஆயிரம் ஆண்டுகாலமாக ஆயுதங்களுக்குப் பூஜை போடுகிறோம்? பூஜை போடும் நாட்டைச் சேர்ந்தவர்கள் உருப்படியாகக் கண்டு பிடித்த கருவிகள், ஆயுதங்கள் என்ன? விரலை மடக்க முடியுமா?

புதுப்புது உருவத்தில் கடவுள்களை உருவாக்கியதைத் தவிர நாம் சாதித்ததுதான் என்ன?

பக்தர்கள் சிந்திப்பார்களாக!

------------------ "விடுதலை” தலையங்கம் 14-10-2010

Wednesday, October 13, 2010

தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல்!: டேபிள் டென்னிசில் அசத்தல்காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் சரத் கமல் மற்றும் சுபாஜித் சகா ஜோடி இணைந்து இந்தியாவுக்கு தங்கம் பெற்று தந்தது.டில்லியில், 19வது காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் பைனலில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல், சுபாஜித் சகா ஜோடி, சிங்கப்பூரின் நிங் கயோ, ஜி யங் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான போட்டியின் முதல் செட்டை சிங்கப்பூர் ஜோடி 11-9 என கைப்பற்றியது. பின்னர் எழுச்சி கண்ட இந்திய ஜோடி அடுத்த இரண்டு செட்டை 12-10, 11-4 என தன்வசப்படுத்தியது. இதற்கு சிங்கப்பூர் ஜோடி 11-5 என 4வது செட்டில் பதிலடி கொடுத்தது.

 இதனால் போட்டி 2-2 என சமநிலை அடைந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 11-8 என கைப்பற்றியது. இறுதியில் சரத்-சகா ஜோடி 9-11, 12-10, 11-4, 5-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றது.

Tuesday, October 12, 2010

தமிழர்கள் இந்தியக் குடிமக்களே இல்லையா? – வைகோ
மும்பையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் இந்தியர்கள் கொல்லப் பட்டதற்கு, பாகிஸ் தானோடு போர் தொடுப்போம் என்று, அன்றைய வெளி விவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மிரட்டல் விடுத்தார். ஆனால், தாய்த்தமிழத்து மீனவர்கள், நமது கடலிலேயே இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், சுட்டுக்கொல்லப் படுவதும் அன்றாடச் சம்ப வங்கள் ஆகிவிட்டன. அப்படியானால், தமிழர்கள் இந்தியக் குடிமக்களே இல்லையா? என்று வைகோ கேட்டுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

71 நாடுகள் கலந்து கொள்ளும் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள், தலைநகர் டெல்லியில், 70,000 கோடி செலவில் நடத்தப்படு கின்றன.

விழாவைக் கோலாகலமாகத் தொடங்கிவைக்க, இங்கிலாந்து அரசு குடும்பத்தின் பிரதிநிதியாக, இளவரசர் சார்லஸ் இந்திய அரசால் அழைக்கப்பட்டு, அவரும் பங்கேற்றுத் தொடங்கி வைத்தார்.

நாளை மறுநாள், இந்தப்போட்டிகளின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தின ராகப்பங்கேற்று முடித்து வைக்க, ராஜபக்சேக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஈழத்தமிழர்களை இனப்படுகொலைக்கு ஆளாக்கிய ராஜபக்சே அரசின் குற்றங்களை ஆய்வு செய்ய, ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் மூவர் குழுவை அமைத்து உள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் கூடிய, பன்னாட்டு நீதிமான்களின் தீர்ப்பாயம், சிங்கள அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்து உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்காக, வரிச்சலுகைகளை ரத்து செய்தது. அனைத்து உலக நாடுகளின் சிங்கள அரசு செய்த இனக்கொலை பற்றிய, விழிப்புணர்வு வேகமாக ஏற்பட்டு வருகிறது. எனவே மகிந்த ராஜபக்சேயைப் பாது காப்பதற்காகவே, இந்த துரோகத்தில் இந்திய அரசு ஈடுபட்டு உள்ளது.

தாங்கள் விரும்பியவாறு போரை நடத்திய, இலங்கை அரசுக்கு, உதவ வேண்டியே, இந்திய அரசு ராஜபக்சேயை, இந்தியாவுக்கு அழைத்து வந்து, நான்கு நாட்கள் அரசு விருந்தாளியாக ஏற்கனவே உபசரித்தது. அந்த இந்திய அரசே ராஜபக்சேயை, காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியை முடித்து வைக்கின்ற கவுரவத்தைக் கொடுத்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கு சிங்கள அரசு, கொடுமை செய்யவில்லை என்ற எண் ணத்தை, உலக நாடுகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்ப தற்காகவே, இதை இந்திய அரசு செய்கிறது.

நியூசிலாந்து நாட்டின் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் டெல்லி மாநில முதல் வரை அவமதித்து விட்டதாகக் கூறி, இந்திய அரசு கண்டனம் தெரிவித்ததற்கு நியூசிலாந்து அரசு வருத்தம் தெரிவிக்க நேரிட்டது.

மும்பையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் இந்தியர்கள் கொல்லப் பட்டதற்கு, பாகிஸ் தானோடு போர் தொடுப்போம் என்று, அன்றைய வெளி விவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மிரட்டல் விடுத்தார். ஆனால், தாய்த்தமிழத்து மீனவர்கள், நமது கடலிலேயே இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், சுட்டுக்கொல்லப் படுவதும் அன்றாடச் சம்ப வங்கள் ஆகிவிட்டன. அப்படியானால், தமிழர்கள் இந்தியக் குடிமக்களே இல்லையா?

வேல் பாய்ந்த இருதயத்துக்குள்ளே சூட்டுக்கோலைத் திணிப்பதுபோல, தற்போது, ராஜபக்சேக்கு, காமன்வெல்த் போட்டிகளை முடித்து வைக்கின்ற மரியாதையை வழங்கி உள்ளதற்கு பிரதமர் மன்மோகன்சிங் அரசும், அதனை இயக்குகின்ற தலைமையும், அந்த அரசில் அங்கம்வகிக்கும் கட்சிகளும், பொறுப்பாளிகள் ஆவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

--