Friday, November 26, 2010

மாவீரர்க‌ளே...மான‌முள்ள‌ த‌மிழ்த் தியாகிக‌ளே

த‌மிழ் ம‌ண்ணின் விடிவிற்காய்

இன்னுயிரை ம‌ண்னுக்காய் அற்பணித்த‌

மாவீரர்க‌ளே...

நீங்க‌ள் சாக‌வில்லை - எம் ம‌ண்ணில்

விதைக‌ளாக‌ விதைக்க‌ப் ப‌ட்டிருக்கிறீர்க‌ள்

நாளை ம‌ல‌ர‌ப் போகும் ந‌ம் தேச‌த்தில்

நீங்க‌ள் மாபெரும் ப‌டிக்க‌ற்க‌ளே...

ஈழ‌ ம‌ண்ணின் ம‌டியிலே உங்க‌ள்

பாத‌ சுவ‌டுக‌ள் ம‌ங்காம‌ல் ப‌டிகின்ற‌து

ஆண்ட‌ ப‌ர‌ம்ப‌ரைதான் நாம்

அற‌த்த‌மிழின‌ம் - மீண்டும்

ஆழ‌ நினைப்ப‌தில் த‌வ‌றில்லை...

வாய்மை த‌வ‌றாம‌ல்

வ‌லிமையுட‌ன் போராடும் என் ம‌ற‌வர்க்கு

வைய‌க‌த்தில் நிச்ச‌ய‌ம் ஓர் வ‌ர‌லாறுண்டு

ம‌ண்ணிற்காய் தியாகித்த‌ - உங்க‌ள்

நினைவுக‌ள் நாளை ந‌ன‌வாகும்...

ம‌ண்ணில் நீங்க‌ள் சாய்ந்தாலும் - உங்க‌ள்

க‌ர‌ங்க‌ள் ஏந்திய‌ துப்பாக்கிக‌ள் சாய‌வில்லை

நெஞ்சில் வீர‌ங்கொண்ட‌ த‌மிழ்

வேங்கைக‌ள் தன் மான‌த்துட‌ன்

த‌லை நிமிர்ந்து தூக்கி நிற்க்கின்ற‌ன‌ர்

உங்க‌ள் க‌ர‌ங்க‌ள் தாங்கிய‌ துப்பாக்கிக‌ளை...

தானை தலைவ‌ன் ஆனைப்ப‌டி

த‌லை நிமிர்ந்து போராடும் ந‌ம்

தேச‌ வீரர்க‌ள் நாளை

வெற்றி வாகை சூடுவ‌ர்

எம் தாய் ம‌ண்ணை மீட்டெடுத்து

த‌னிநாடு த‌னை அமைத்து

தேச‌க் கொடியை ஏற்றி வைத்து

சுத‌ந்திர‌மாக‌ நாளை நாம்

சொந்த‌ ம‌ண்ணில் சுவாசிப்போம்

உல‌க‌ம் எங்கும் உம‌க்கு

ஒரு வ‌ர‌லாறு உண்டு த‌மிழ் உள்ள‌வ‌ரை

உங்க‌ள் புக‌ழ் ம‌ங்காம‌ல்

மாட்சிமையுட‌ன் நிலைத்து வாழும்

உங்க‌ள் க‌ன‌வுக‌ள் நாளை ந‌ன‌வாகும்....

Thursday, November 25, 2010

தேசிய தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...நாய்கள் குரைக்கட்டும்! வண்டிகள் நகரும் ! இது ஒரு ஆங்கில பழமொழியின் வடிவம் . எங்கள் அண்ணன்மார் அன்று நடந்தார் ! கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் உறுதியாக நடந்தான் ! முதல் எதிரி சிங்களவன் அல்ல தமிழன் தான் ! தமிழ் போலிஸ் அதிகாரிகள் தான் எங்கள் போரை இளையோரை காட்டி கொடுத்ததும் சித்திரவதை செய்தும் சிங்கள பேரினவாத அரசின் பிச்சை காசுக்காக அன்னை மண்ணை அடிமை ஆக்கினார் !

அன்று சுதந்திர போராட்டத்தின் தடை கற்கள் இந்த சிங்கள அரசின் கூலிக்காக மாரடித்த போலீஸ் வேலை பார்த்த சில தலைவர்கள் ! பின்னர் வந்தது சில அரசியல் வாதிகள் ! வாக்குக்காக இளையோரை சூடேற்றி தூக்கு மேடை பஞ்சு மேதை என்று உரக்க கூறியவர் , அதை இளையோர் நிஜமாக்கி ஆயுதம் எடுக்க ஓடி ஒளித்தார் சிங்கள குகையில் சிலர் ! அதன் பின் இந்தியாவின் கூலி படைகளாக போராளிகள் மாற தேசிய தலைவர் முடிவு எடுத்து எல்லாரையும் தடை செய்து , ஒட்டு மொத்த தமிழ் இனத்தை ஒன்று படுத்த எடுத்த முயற்சி கொஞ்சம் பிரச்சைனக்கு உரிய விடயம் என்றாலும் சரியோ தவறோ உறுதியாக தலைவர் நின்றதானால் சைக்கிள் இலிருந்து விமானம் வரை வளர்த்தெடுக்க முடிந்தது. அவர் போராட்டத்தை வளர்த்தெடுக்க அதே நேரம் உலகின் பல அரசுகளுக்கு கைகூலிகளாக புலிகளின் எதிர்பு தமிழர் கைகொடுக்க தலைவர் கடும் சவால்களை சந்திக்க நேர்ந்தது . சிங்கள அரசின் பக்கம் தாவிய பலர் தமிழ் ஈழ போராட்டத்திற்கு சவாலாக வளர , கடைசியில் சொந்த இயக்கத்துக்கு உள்ளேயே பல கிருமிகள் .

நான் தலைவனை தனித்து பார்கிறேன் , அய்யா ...எங்கள் தெய்வமே , உள்ளத்தில் நல்ல உள்ளமாய் கர்ணனை வென்ற எங்கள் வல்லை முருகா ! உனது அல்ல ஒட்டு மொத்த தமிழினத்தின் பாவம் தான் இந்த தோல்வி !. ஆனாலும் உனது ஒருத்தியான பயணம் பலர் நெஞ்சை தொட்டு நிற்கிறது ! துரோகம் செய்த கருணா இன்று தண்ணி அடித்து தன்னை தினம் தினம் மாய்த்து கொள்கிறான் ! பிள்ளையான் உள்ளுக்குள்ளே நொந்து நொந்து அழிவான். இன்னும் பலர் நெஞ்சின் அடிமனதை தொட்டு இன்று உலக தமிழர் நெஞ்சில் எல்லாம் தெய்வமாய் , என்று வருவாய் என்று ஏக்கத்தோடு உன் வழி பார்த்து நிற்கும் மாபெரும் சூரிய தேவனை நிமிர்ந்து நிற்கிறான் என் தலைவன் !

இதற்கேல்லாம் இந்த வெற்றி பயணத்திற்கு எல்லாம் எது காரணம் ? தலைவனின் உறுதி ! கொண்ட கொள்கை மேல் கைவிடாத உறுதி ! அண்ணனின் கட்டளையில் வேலை பார்த்த கருணாவுக்கு வரலாற்று பெருமை மிக்க சிங்கள கட்சியின் உப தலைவர் பதவி என்றால் , பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி என்றால் , எந்த பிச்சை போட்டாலும் கை ஏந்தி வாங்க தயாராக நிற்கும் டக்ளசுக்கு அமைச்சர் பதவி என்றால் , என் தலைவன் ஓம் என்றால் இலங்கை ஜனாதிபதி பதவி கூட கொடுத்து இருப்பார். இல்லை என் தலைவனுக்கு உலக தமிழர் எல்லாம் இணைந்து கோயில் கட்டி அமெரிக்காவில் அல்லது ஐரோப்பாவில் வைத்து இருப்போம் ! அவ்வளவுக்கு என் தலைவனுக்கு ஆதரவும் அன்பும், மதிப்பும் உண்டு !

அப்படி பல வழிகள் இருந்தும் தலைவன் கொள்கை மாறாதவன் ! கொஞ்சம் கூட இறங்க மறுப்பவனை "இவன் பிரபாகரன் மாதிரி " என்று புது உவமானம் வரையும் அளவுக்கு தலைவன் உள்ளத்தில் உறைந்து நிற்கிறான் ! அவன் புகழ் பாடுவதோடு நாங்கள் நிற்கலாமா ?

ஒருவன் அமைதியானால் ஓராயிரம் பேர் பிரபாகரனாய் மாறவேண்டாமா ? இதைதான் இன்று எங்கள் முன் நிற்கும் தமிழீழ அரசின் பிரதிநிதிகளுக்கு முன வைக்கிறேன் ! இன்றைக்கு எங்கள் சாப கேடு தலைவனின் பாசறையில் வளர்ந்த சிலரே எங்கள் எதிரி ஆகி விட்டாலும் நாங்கள் அடங்கலாமா ?
ஒவ்வொரு தமிழீழ அரசின் உறுப்பினரும் பிரபாகரன் வழி நிற்கட்டும் ! தமிழீழ கொள்கையை நிலை நிறுத்தி தங்கள் சுய பதவி வெறிக்காக இந்த அரசை சிதைப்பவரை ஒதுக்கி , வீறு நடை போடுவீராக ! இவர்கள் சில இணைய தளங்களில் குரைப்பது எத்தனை நாளைக்கு ? இவர்கள் எழுதும் கட்டுரைகளை பார்த்தாலே இவர்களின் தரம் புரிகிறதே ! அதை விட இவர்கள் ஏன் உள்ளுக்குள் பேசி தீர்க்க படவேண்டிய விடயங்களை இப்படி எழுதி தள்ளுகிறார் ? இவர்களை பொறுத்த வரை இவர்கள் எதிரி உருத்திரகுமாரன் ஆனால் சிங்கள பேரினவாதிகளும் உருதிரகுமாரனை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்று சகல வழிகளிலும் முயல்கின்றனர். அதே போல் நெடியவனையும் பிடிக்க பலத்த முயற்சி நடை பெறுகிறது ! இப்படி சிங்கள தேசம் இருவரையும் பிரிக்க அலைகையில் , இங்கேயோ வேறு பிரச்சினை !

இன்றைக்கு மக்கள் முன்னாள் உலகின் முன்னால் நிமிர்ந்து நின்ற னிகள் அதனை பெரும் பெருமைக்கு உரியவர்களே ! தமிழீழ தேசிய அரசில் போட்டியிட்ட அனைவரும் வீர மகான்களே ! தமிழீழ தேர்தல் நடாத்திய அத்தனை உள்ளங்களும் பெரியவர்களும் வணக்கத்துக்கு உரியவரே ! தமிழ் ஈழ அரசின் தேர்தல் நடாத்தும் பொது ஒரு மூதாட்டியை வாக்களிப்பு நிலையத்தில் சந்தித்தேன் ! சில நிமிடம் உரையாடிய பொது அவர் கூறினார் " தம்பி இது எல்லாம் கனவு போல இருக்கு ! நான் பிறந்தது 1934 இல் , எவ்வளவு காலம் போச்சு ! எத்தினை பேரை கண்டாச்சு ! கடைசியில பிரபாகரன் தான் முடிச்சு வைப்பான் என்று பார்த்த எல்லாம் போச்சு ! இப்ப இந்த தேர்தலை பார்க்க எனக்கு கனவு மாதிரி கிடக்கு ! விடப்படாது ! ஆனால் நான் நினைக்கிறான் இதில நிற்கிற எல்லா வேட்பாளரையும் சேர்த்து முதலில ஒரு அராங்கம் செய்ய வேணும் ! பிறகு தமிழீழ அரசாங்கம் அமைகேக்க நாங்கள் தெரிவு செயலாம் " என்று கூறினார் ! நினைத்து பார்த்தேன் உண்மைதான் ! இது மக்கள் போர் ! தமிழீழ அரசின் தேர்தல் என்றவுடன் தலை நிமிர்ந்து நானும் போட்டியிடுவேன் வெல்வேன் ! தமிழீழ அரசை அமைப்பேன் என்று கூறிய அத்தனை மனிதர்களும் போற்றபடவேண்டியவரே !

அதனால் இத்தனை வீர தமிழர்களையும் தாண்டி போட்டியில் வெற்றி பெற்று நிற்கும் தமிழீழ அரசின் பிரதிநிதிகள் இனி பிரபாகரன் வழி நின்று தடைகளை உடைக்க வேண்டும் ! கல்லெறிபவர் எறியட்டும் ! குரைப்பவர் குரைக்கட்டும் ! தமிழீழ பயணம் தொடரும் என சூளுரைக்கட்டும் ! எதிர்ப்புகள் உடைத்து முன்னேறும் பொது , இந்த பதவிக்காக அலையும் சிலரும் வேறு வழியின்றி இணைய கூடும் ! மக்கள் சரியான பாதை இது என்று இணையும் பொது , தலைவரின் பின்னால் மக்கள் இணைந்தது போன்று தமிழீழ அரசின் பின்னால் இணைவர் என்பது உறுதி ! இங்கே தலைவரின் பயணத்தை பார்த்து கற்க வேண்டும் ! எங்களுக்குள் தான் முதிலில் எதிரிகள் உருவாகுவர் ! இவர்கள் ஒன்றும் தமிழீழ கொள்கைக்காக சண்டை பிடிக்கவில்லை , நீங்கள் யார் எங்கள் தமிழ் ஈழத்துக்கு போராட என்று கேட்பவர்கள் ! இது உங்கள் மட்டுமல்ல எங்களதும் தான் என்றால் இல்லை இது எங்கள் தனிப்பட்ட சொத்து என்கிறார் ! முதலில் நாங்கள் இணைந்து உருத்திரகுமாரன் பின்னால் நிற்கும் பெரும் சக்தி மிக்க தகுந்த உணர்வும் அறிவும் கொண்ட அந்த சமூகத்தை பலபடுதுவோம் ! இது சர்வ தேச அரங்கம் ! இங்கே சதுரங்க காய்கள் சரியாக நகர்த்த படவேண்டும் ! வீரம் மட்டும் போதும் என நம்பி ஒருமுறை தோற்று நிற்கிறோம் ! செல்வத்தை இறைத்து சவால் விட்டோம் , பெரும் செல்வந்தன் பெரும் ஆயுத பலத்துடன் நசுக்கி விட்டான் ! நாங்கள் சரியாக செயாதது அந்த அறிவு! அரசியல் ! ஒரு கதிர்காமர் கெடுத்து போனது இன்றுவரை தொடர்கிறது ! வீரம் என்றால் என்ன என்று தெரியாத சிங்கள இராணுவம் இரண்டு லட்சம் படைகளையும் கொண்டு என்ன சாதித்தது ? ஓயாத அலைகளில் ஓடவில்லையா ? முல்லைத்தீவை கண்டால் நடுங்க வில்லையா ? எப்படி தோற்றோம் ? சீனாவிடம் தோற்றோம் ! ஏன் ? அரசியல் செய்யவில்லை ! இந்தியாவிடம் செய்யவில்லை ! ஓடிய சிங்களவன் என்ன செய்தான் ! அரசியல் செய்தான்! சீனாவிடம் தன மண்ணை விற்றான் தமிழ் மண்ணை வென்றான் !

இனி நாங்கள் அரசியல் செய்ய வேண்டும் ! அமெரிக்காவிடம் செய்வோம் ! பிரித்தானியாவில் செய்வோம் ! அதுதானே சிங்களவன் தானாக போய் சீனாவிடம் மாட்டி கொண்டான் ? இனி நாங்கள் தேவை படுவோம் ! இதுவரை எங்களை தடை செய்தவர் எல்லாருக்கும் நாங்கள் தேவை படுவோம் ! அண்ணல் தடை செய்த ஒரு அமைப்பை மீண்டும் ஏற்று கொள்ள இவர்களால் முடிவதில்லை ! அதனால் தமிழீழ அரசு போன்ற அமைப்பை இவர்கள் ஏற்று கொள்வர் ! அரசியல் இது ! இங்கே ஒரு புலிகளின் தளபதியை முன்னிறுத்தினால் பல பிரச்சினை வரலாம் ! சிறீ லங்கா அரசு எப்படி தடை செய்யலாம் என்று பார்க்கும் பொது நாமாக மாட்டி கொள்ளலாமா ? அதனால் புது முகங்கள் ! ஜனநாயக தலைவர்கள் ! சமூக தலைவர்கள் ! சேவை செய்தோர் என்று பலரும் உறுப்பினராகும் ஒரு அமைப்பாக தமிழீழ அரசு வளர்க்கப்பட வேண்டும் ! புலிகளின் தலைவர்கள் பின்னால் இருந்து ஆக்கமும் ஊக்கமும் தரவேண்டும் ! மக்கள் புரட்சியாய் தமிழீழ அரசு முளைக்கும் ! நடை போடும் !

தமிழீழ அரசின் பிரதிநிதிகள் உறுதியோடு தமிழ் ஈழ பயணத்தை முன்னெடுக்கும் பொது மக்கள் இந்த அரசை பலபடுத்தும் பொது நிச்சயம் வெல்வோம் ! இங்கே வெல்வது நானோ உருதிரகுமாரனோ தமிழீழ அரசோ அல்ல ! தமிழீழ மண் என்பதை உள்ளத்தில் நிறுத்துவோம் ! தமிழீழ அரசை பல படுத்துவோம் !

Sunday, November 21, 2010

தாலி இல்லையா, இனி வீட்டுப் பக்கமே வராதே...அன்புத் தோழிக்கு,

நலம்,நலம் அரிய ஆவல். நீ வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சியான செய்தியொன்றை கூறவே இக்கடிதத்தை எழுதுகிறேன். ஆம் நீ நினைத்தது சரி தான். என்னுடைய மகளுக்கு திருமணம் ஏற்பாடாகியுள்ளது. நாங்கள் எதிர்பார்த்தது போலவே அவரும் சாதி,தாலி,வரதட்சிணை போன்ற பிற்போக்குத்தனங்களில் உடன்பாடில்லாதவர். ஆம், இது ஒரு புரட்சிகர திருமணம் தான்.

எங்களுடைய பெண்ணுக்கு இப்படி ஒருவரை கண்டடைய நாங்கள் பல மன உளைச்சல்களை எதிர் கொள்ள‌‌ வேண்டியிருந்தது. சிறுவயதிலிருந்தே எனது மகளை ஆணாதிக்கத்தை எதிர்ப்பவளாகவும், ஆணுக்கு பெண்ணை நுகர்வுப்பொருளாக்கும் ஆபரணங்களை சுமக்காத‌‌வளாகவும் தான் நாங்கள் வளர்த்தெடுத்தோம் என்பதை நீயும் அறிவாய். அவள் சிறுமியாக இருந்த போது எழாத பல்வேறு பிரச்சினைகளை அவளுடைய‌ பதின் பருவத்தின் போதும் அதன் பின்னரும் நாங்கள் எதிர்கொண்டோம்.

உறவினர் வீடுகளில் ஏதேனும் விசேசம் என்றால்,அக்கரை உள்ளவர்களை போல அனைவரும் எங்களை சுற்றி நின்று கொண்டு “பொட்டுக்கு கூட‌ நகை போடாம மொட்டக்கட்டையா இருக்காளே, இவளுக்கு எப்படிங்க‌ மாப்பிள்ளை தேடப்போறீங்க ? பொண்ணு இப்படி இருந்தா எவன் கட்டிக்குவான் ? மூட்டை தூக்குறவ‌ன் கூட 10 பவுன் நகை கேக்குற காலத்துல இப்படி புரட்சி கிரட்சின்னு பேசிக்கிட்டு இருக்க பொண்ண போய் எவன் கட்டிக்குவான் ? சரி நகையா போடலைன்னாலும் கூட பரவாயில்லை சொத்தாவாவது குடுங்க, பொண்ணு பேர்லயே கூட‌ டெபாசிட் பண்ணுங்க நாங்க மாப்ளை பார்க்கிறோம்” என்று பலவாறாக‌ யோசனை சொன்னவர்கள் பலர்.

வேறு சிலரோ “என்னது சாதி விட்டு சாதியா ! அப்படினா உன்னால‌ ஒரு கீழ்சாதி பையனை உன் பெண்ணுக்கு கல்யாண‌ம் பண்ணி வைக்க முடியுமா ?” என்றார்கள். பிற்போக்குதனங்களை எதிர்க்கக்கூடிய‌ யாராக இருந்தாலும் என் பெண்ணை அவருக்கு சந்தோஷமா கல்யாணம் செய்து வைப்போம்னு சொன்னேன்.

‘இந்த காலத்துக்கு இதெல்லாம் சரிப்படாது. கடைசில நீங்க எப்படி கல்யாணம் பன்னப்போறீங்கன்னு நாங்களும் பார்க்கத்தானே போறோம்’ என்று ஏளனம் செய்தார்கள். அதாவது எப்ப விழுவோம், கையை தட்டலாம் என்று காத்துக்கொண்டிருந்தார்கள். இது வர்க்கப்போராட்டத்தின் மற்றொரு வடிவமான‌ பிற்போக்கு கலாச்சாரத்திற்கெதிரான போராட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம் எனவே தான் இந்த போராட்டத்தின் ஒரு பக்கம் துன்பமானதாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு அதன் மறுபக்கமான‌ மகிழ்ச்சியை எங்களால் அடைய முடிந்தது.

சரியான வயது வந்ததும் எனது மகளின் விருப்பத்தை அறிந்து அவளுக்கேற்ற வாழ்க்கைத் துணையைத் தேடத் துவங்கினோம். சமூக ஆதரவு சக்திகளிடமும் சொல்லி வைப்போம் என்று சொல்லி வைத்தோம். ‘முற்போக்கு சிந்தனையாளர்கள்’ என்று அறியப்படுகிற‌‌ தி.க ‘தோழர்’களுக்கும் தகவல் தெரிவித்தோம். எதிர்பார்க்காதபடி அங்கிருந்தும் கூட‌ வந்தார்கள். வந்தவர்கள், ‘ உங்களுடைய கருத்துக்களில் எங்களுக்கு முழு உடன்பாடு தான் ஆனாலும் நீங்க சொல்ற மாதிரி எந்த மாற்றமும் இல்லாம‌ அப்படியே செய்யிறதுலயும் கொஞ்சம் பிரச்சினை இருக்கு. எங்களுக்கும் கவுரவம்னு ஒன்னு இருக்குல்லீங்களா ? குறைந்தப்பட்சம் மாப்பிள்ளையோடு வெளிய‌ போகும் போதாவ‌து பெண்னு நகைன்னு ஒன்ன போட்டுக்கிறது தானேங்க சரியா இருக்கும் ? அதுக்கு மட்டும் ஓக்கேன்னு சொல்லிட்டீங்கன்னா உடனே பேசி முடிச்சிடலாம் என்றார்கள்.

பெண்ணடிமைத்தனத்தை உணர்ந்து எனது இளம்பருவத்தில் நான் எனது தாலியையும், நகைகளையும் கழட்டி எறிந்த போது ‘என்னோட கவுரவத்துக்கு இழுக்கா இருக்கு இனிமே என் வீட்டுப்பக்கமே வராதே’ என்று என்னுடைய அப்பா கூறியதை நினைத்துக்கொண்டேன். ஆக எத்தனை தலைமுறை தாண்டினாலும் எல்லா ஆண்களும் தங்களுடைய‌ கவுரவத்தை பெண்களின் கழுத்தில் தான் தேடுகிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டோம். எங்களால் உங்களுடைய‌ கவுரவம் கெட வேண்டாம் நாங்கள் அதற்கானவர்களும் அல்ல எங்களுக்கு எங்களுடைய கொள்கை தான் முக்கியம் என்று ஒதுங்கிக்கொண்டோம்.

அதற்கடுத்து குடியையும், முதல் திருமணத்தையும் மறைத்துக் கொண்டு சம்பந்தம் பேச‌ வந்தார்கள். நாங்கள் இதை அறிந்து கேட்ட போது. ‘சமூகத்துல இதெல்லாம் சகஜம்தானேங்க’‌ என்றார்கள். ‘எங்களுக்கு இதெல்லாம் சகஜமில்லைங்க‌ என்று கூறி ஒதுங்கிக்கொண்டோம். ஒரு ஆண் எப்படிப்பட்டவனாகவும் இடுக்கலாம், குடிகாரனாக இருக்கலாம், பொம்பளை பொறுக்கியாக இருக்கலாம், முதல் திருமணத்தை மறைத்து பெண் தேடுபவனாக இருக்கலாம். ஆனால் ஒரு பெண் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் அடிமைத்தனத்தை எதிர்ப்பவளாய், சுயமாக சிந்திப்பவளாய் இருக்கக்கூடாது அப்படி இயல்பாய் இருந்தால் இவர்களுக்கு அது விசித்திரமாய் இருக்கும்.

இவ்வாறு பல்வேறு காரணங்களால் மாப்பிள்ளை கிடைக்காமல் காலதாமதம் ஆக ஆக உறவினர் கூட்டம் உற்சாகமடைந்தது. ‘நாங்க தான் அப்பவே சொன்னோம்ல இதெல்லாம் நடக்காதுன்னு’ கேட்க மாட்டோம்னீங்க. சரி சரி அவளை நகைய போடச் சொல்லு, அவுக அவுக சொத்து பத்த வித்து கூட பிள்ளைக கல்யாணத்தை நடத்திகிட்டு இருக்காக, இந்தா அங்க மாப்பிள்ளை இருக்கு இங்க மாப்பிள்ளை இருக்குன்னு அக்கறைப்பட்டாங்க,கண்ணில் சோகமும்,கடைசியில எங்க பிடிக்கு வந்துட்டீங்க‌ல்லங்ற கெக்கலிப்போடவும் உதவிக்கரம் நீட்டினார்கள். ச்சீ,ச்சீ நம்முடைய‌ பலவீனத்தை இவங்க பயன்படுத்திக்க பார்க்கிறாங்க. நாம் அரசியல் ரீதியாக‌ உறுதியோடு நிற்க‌ வேண்டிய தருணமிது என்பதை உணர்ந்து அனைத்து ‘உதவி’களையும் புறந்தள்ளினோம். கரிசனம் காட்டிக் கொண்டே எங்க பார்ப்போம், உன் பேருக்கு பின்னாடி சாதி போட்டுக்கிறயா இல்ல தோழரா நிக்கிறியான்னு பார்க்கலாமே என்று மார்தட்டினார்கள்.

இறுதியில் எங்களுடைய போராட்டத்திற்கு வெற்றி கிட்டியது ! எங்களுடைய பெண்ணுக்கு நாங்கள் எதிர்பார்த்தபடியே நல்ல‌ மாப்பிள்ளை கிடைத்தார். எங்களுடைய இக்கட்டான சூழலை பயன்படுத்திக் கொண்டு எப்படியாவது எங்களை பிற்போக்கின் பக்கம் தள்ளிவிட எங்களோடு‌ மல்லுக்கட்டிக்கொண்டிருந்த உறவினர்களிடம் இன்னார்தான் எங்களுடைய‌ மருமகன் என்று நாங்கள் பெருமிதத்துடன் அறிவித்த போது அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா ? எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சோமோ அது நடந்துரும் போல இருக்கே என்று எண்ணியவர்களாக பேச வார்த்தைகளின்றி இறுகிக் கொண்டார்கள். முகத்தை திருப்பிக் கொண்டார்கள். ‘என்னமோ செய்ங்க’ என்று கூறி எட்டி நின்று கொண்டார்கள்.

உறவினர்களின் துக்கத்திலும் சந்தோசத்திலும் மனதார பங்கெடுத்துக் கொண்டவர்கள் நாங்கள் ஆனால் எங்களுடைய‌‌ மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள உறவினர்கள் யாருமே முன்வரவில்லை. சரி இதுவும் ஒருவகை போராட்டம் தான் என்பதை உணர்ந்துகொண்டோம். பிற்போக்குத்தனங்களை எதிர்க்கும் போது அதை தாங்கி நிற்கும் உறவுகள் மட்டும் நீடிக்குமா என்ன ? அவற்றையும் இழக்கத்தான் வேண்டும். போராட்டத்தில் மலரும் புதிய உறவுகள் தான் மகிழ்ச்சி என்பதையும் அறிந்து கொண்டோம் எனவே எது வந்தாலும் எதிர்கொள்வோம் என ஆதரவு தந்த சமூக நண்பர்கள், அமைப்பு தோழர்களின் உதவியோடு திருமண ஏற்பாடுகளில் தீவிரமானோம்.

ஒரு நண்பர் சொன்னார், கரடு முரடான மலையில் ஏற முதலில் பாதை அமைப்பவர்கள் கற்களையும் வலிகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும், அதன் பிறகு பயணிப்பவர்களுக்கு அந்த‌ வலிகள் குறைவாக இருக்கும் இதெல்லாம் புதிய வழிக்கான விலைகள் என்றார். நாங்களும் அவ்வாறே எண்ணினோம் நாம் கூட இதில் பயணிப்போர் தான். நமக்கு முன் வீச்சரிவாளையும் வெந்தணலையும், கரைக்கின்ற கண்ணீரையும் கடந்து இதில் பாதை சமைத்தவர்கள் தான் எத்த‌னை எத்த‌னை பேர். எனவே இதுவெல்லாம் பெரிய வலியல்ல‌ சாதாரணமானது தான் என்று உணர்ந்து முன்னேறினோம்.

தன்னுடைய கடைசிகால‌ சேமிப்பு வரை வீணாக்கி, கடன் வாங்கி மீதி காலம் பூராவும் கஷ்டப்பட்டு சாதி,கவுரவம்,அந்தஸ்து என போலியான வாழ்க்கைக்குள் எங்களுடைய மகளை தள்ளிவிட நாங்கள் என்றுமே நினைத்துகூட பார்த்ததில்லை எவ்வளவு புறக்கணிப்புகள் வந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி ஒரு சரியான வாழ்க்கைக்காக‌ போராடுவோம் என்று மனஉறுதியோடு தயாரானோம். கண்ணுக்கு தெரியாமல் வலி தரும் காயம் கன்ணீருக்கும், புறக்கணிப்புக்கும் உண்டு. இது யாரையும் சற்று அசைத்துப் பார்க்கும். தான் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும், தூக்கியெறிய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்த சுமையை, நம் மீதும் சுமத்த முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் அவர்களுக்கு.

ஆனால் இன்று எண்ணற்ற இளைஞர்கள் இவர்களின் கண்ணீர் ஆயுதங்களை எதிகொள்ளும் மனத்துணிவோடு முன்வருகிறார்கள். த‌ங்களை பினைத்துள்ள மாயச்சங்கிலிகளிலிருந்து விடுபட்டு வெளிவர பெண்களும் தயாராக உள்ளனர். இது பெருகும்.வளரும். தடைகள் என்றும் தாண்டுவத‌ற்கே. அந்நேரத்திற்கு அது வலி தரும் அனுபவம் என்றாலும் ஒரு சரியான வாழ்க்கை பாதைக்கான அடித்தளம் அதுவே. என்னுடைய‌ அனுபவத்தை உன்னிடம் பகிர்ந்து கொண்டது எனக்கு மன நிறைவை தருகிறது. இத்துடன் மண‌விழா அழைப்பிதழை அனுப்பியுள்ளேன். அவசியம் திருமணத்தில் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும், உன்னுடைய‌ வரவை எதிர்பார்த்திருப்பேன்.

அன்புத்தோழி
விஜி
http://www.vinavu.com/2010/11/22/progressive-women/

Saturday, November 20, 2010

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு ..பல்லக்கிலிருந்து இறக்கிவிடப்பட்ட பார்ப்பனியம் போலீசு பாதுகாப்புடன் நடையை கட்டுகிறது

திருச்சி திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோவிலில் 1993ஆம் ஆண்டு ம.க.இ.க நடத்திய கருவறை நுழைவுப் போராட்டத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதே கோவில் முன்பு பெரியார் சிலை இடிக்கப்பட்ட போது ராமனது படத்தை எரித்த போராட்டமும் நடைபெற்றிருக்கிறது. தற்போது இந்தக் கோவிலில் மேலும் ஒரு பார்ப்பன ஆதிக்கத்தை தோழர்கள் முறியடித்திருக்கின்றனர்.

கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களின் போது 3 நாட்கள் பிரம்ம ரத மரியாதை என்ற ஒரு கேவலம் நடக்கும். இதன்படி வேதவியாசபட்டர், பராசர பட்டர் மற்றும் அரையர் குடும்பத்தை சேர்ந்த அர்ச்சக அய்யங்கார் பட்டர்களை, யானை முன்னே செல்ல மாலை குடை தீப்பந்தம் ஆகியவற்றுடன் பல்லக்கில் அமர வைத்து மனிதர்களே தூக்கிச்செல்வதுதான் பிரம்ம ரத மரியாதை. பொங்கலும், அக்கார அடிசலுமாக வெளுத்துக் கட்டும் இந்த மாமிச மலைகளை சூத்திர தமிழர்கள் தமது தோளில் சுமந்து ஊர் முழுக்க சுற்றி வந்து வீட்டில் கொண்டு விட வேண்டும். தூக்கும் வேலையை செய்யும் மனிதர்களை பாதந்தாங்கிகள் என்று அழைப்பார்கள். இந்த பெயர் ஒன்றே இதன் இழிவை சொல்வதற்கு போதுமானது.

இந்த அவலத்தை சகிக்க முடியாமல் பல்லக்கு சவாரியை சுமக்கும் ‘பாதந்தாங்கிகள்’ (கோவில் ஊழியர்கள்) எதிர்ப்பு தெரிவித்தனர். “கை ரிக்சா ஒழிக்கப்பட்ட காலத்தில் மனிதனை மனிதன் சுமப்பது தவிர்க்கப்பட வேண்டும். கோவிலின் சார்பாக கோவில் ஊழியர்கள் பல்லக்கை தூக்க மாட்டார்கள். கோவிலுக்கு வெளியே பட்டர்கள் அவர்களின் சொந்த பல்லக்கில் ஆள் வைத்து தூக்கிச் செல்லலாம், இதைத் தவிர்த்த மற்ற மரியாதைகள் உண்டு” என்றும் கோவிலின் அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் உத்தரவு பிறப்பித்தார்.

இதை பொறுக்க முடியாத லட்சுமி நரசிம்ம பட்டர் உள்ளிட்ட பார்ப்பன பட்டர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் இணை ஆணையர் உத்திரவுக்கு தடை ஆணை கோரி எதிர் வழக்கு தொடுத்தனர். மேலும் 15 இலட்சம் நஷ்ட ஈடு கேட்டு ஆணையர் மீது வ்ழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தனர். இப்பிரச்சினையை அறிந்த ம.க.இ.க உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் இந்த பார்ப்பனக் கொழுப்பை வன்மையாக கண்டித்தனர்.

கோவில் ஊழியர்களுக்கு சட்ட ரீதியாக உதவிட வேண்டியும், “இவ்வழக்கில் தங்களையும் இணைத்து கொண்டு பட்டருக்கு எதிராக வாதாட அனுமதிக்க வேண்டும்” என்று நீதி மன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் வாதாடினர்.

வழக்கு நிலுவையிலிருக்கும் நிலையில் கைசிக ஏகாதேசியான கடந்த வியாழக்கிழமையன்று (17/11/2010) கோவில் வளாகத்துக்கு உள்ளேயும், வெளியிலும் பல்லக்கில் தூக்கிச்செல்ல பாதுகாப்பு தரக்கோரி காவல்துறையிடம் பார்ப்பன பட்டர்கள் அனுமதி கோரினர். இந்த மனுதர்ம கோரிக்கைக்கு இந்துமதவெறி அமைப்பு வானரங்கள் பலவும் கும்பல் சேர்த்துக் கொண்டு ஆதரவளித்தன.

இவ்விசயத்தில் கோவில் பிரகாரத்தில் பல்லக்கு தூக்க தடை விதித்து வெளியில் சொந்தமாக தூக்கிச்செல்லலாம் என காவல் உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

“மனிதனை மனிதன் சுமப்பது கோவிலில் மட்டுமல்ல, எவ்விடமாக இருந்தாலும் சமூக குற்றமே! எனவே கோவிலுக்கு உள்ளே மட்டுமல்ல கோவிலுக்கு வெளியிலும் பல்லக்கு தூக்க அனுமதிக்க முடியாது. இது மனுதர்ம விதிப்படி மனிதர்களை விட தான் உயர்வானவன் என பார்ப்பனர்கள் காட்டிக்கொள்ள முனைவதை அனுமதிக்க முடியாது எனவும் எச்சரித்து, மீறினால் தடுத்து நிறுத்துவோம்!”, என மனித உரிமை பாதுகாப்பு மைய செயலர் தோழர் ஆதிநாராயணமூர்த்தி மற்றும் ம.க.இ.க திருச்சி மாவட்ட செயலர் ராஜா உள்ளிட்ட தோழர்கள் பட்டர்கள் மற்றும் காவல்துறையினரை எச்சரித்தனர்.

இந்நிலையில் திருவரங்க கோவில் ரெங்கா கோபுரம் முன்பாக தோழர்கள் குவிய துவங்கினர். இதை கண்டவுடன் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் பட்டரின் வேண்டுகோளுக்கிணங்க கோவிலுக்கு வெளியில் பிரம்ம ரத ஊர்வலம் நட்த்த ஏதுவாக நூற்றுக்கணக்கான காவலர்களை இறக்கி, மனித உரிமை பதுகாப்பு மைய தோழர் வழக்குரைஞர் போஜகுமார் மற்றும் ம.க.இ.க தோழர்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து போராட்ட்த்தை தடுக்க காவல் துறை முயன்றது.

வழக்கமாக கவுசிகப் புராணம் பாடிய பின் அதிகாலை 5.20க்கு கோவில் முன் வாசல் வழியாக சொந்த காசைப் போட்டு தயாரித்த பல்லக்கில் பவனி வருவதற்க்கு ஏற்ப்பாட்டுடன் இருந்த நரசிம்ம பட்டர், ம.க.இ.க தோழர்களால் தான் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்து அஞ்சி நடுங்கி கோவில் நிர்வாகம் அளித்த மாலை,சந்தன,குடை மரியாதைகளை ஏற்க மனமில்லாமல் பின் வாசல் வழியாக(வடக்கு வாசல்) காவல்துறை உதவியுடன் தப்பி ஓடினார். இதைக்கண்ட பொதுமக்கள் ஆச்சரியமும் நகைப்புடன் அதிசயத்தும் போயினர்.


என்னா லுக்கு !

பல நூற்றாண்டுகளாக கடவுள் உண்டென்றும் அந்த கடவுளுக்கு நிகரானவன் தான் என்றும் ஆணவத்துடன் இருக்கும் பார்ப்பனக் கொழுப்புக்கும், ஆதிக்கத்துக்கும் பெயர் போன திருவரங்கத்தில் “சூத்திர, பஞ்சம, பெண்கள், குழந்தைகளை உள்ளிட்ட மக்களை அணிதிரட்டி ம.க.இ.க தோழர்கள் 1993ல் நடத்திய “கருவறை நுழைவு போராட்டத்தின்” வெற்றியை தொடர்ந்து இன்று மனிதனை மனிதன் சுமப்பது கோவிலில் மட்டுமல்ல, வெளியிலும் தடுத்து நிறுத்தப்பட்டு பட்டர்களின் பிரம்ம ரத மரியாதை எனும் அவமரியாதை முடிவுக்கு வந்தது.

இவ்வெற்றி நிகழ்வினை மகிழ்ச்சியோடு பட்டாசு வெடித்து, திருவரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு (இந்த சிலை இந்து மத வெறியர்களால் சிதைக்கப்பட்டபோது உடனடியாக மக்களை திரட்டி தேசிய நாயகன் என்று இந்து வெறியர்களால் அழைக்கப்படும் ராமன் படத்தை செருப்பால் அடித்தும், படத்தை கொளுத்தியும் ம.க.இ.க போராடிய பின் மீண்டும் நிறுவப்பட்டது) மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,

“தமிழகத்தை பார்ப்பனியத்தின் கல்லறையாக்குவோம்!
பெரியாரின் வாரிசுகள் என்பதை நிலைநாட்டுவோம்!”

என விண்ணதிர முழக்கமிட்டு கொண்டாடினர்.

இவ்விசயத்தில் கோவில் ஆணையரின் உத்தரவை அமுல்படுத்துவதற்க்கு ஆதரவாக தி.க,மற்றும் சமூக ஆர்வலர்கள் பத்திரிக்கை மற்றும் சுவரொட்டிகளின் வாயிலாக ஆதரவு கருத்து வெளியிட்டிருந்தனர். ஆனால் காவல்துறை உதவியுடன் நடக்க இருந்த பட்டர்களின் பிரம்ம ரத நிகழ்ச்சியை தடுப்பதற்க்கு கோவிலின் நான்கு வாசல்களிலும் களத்தில் நின்று முறியடித்தனர் ம.க.இ.க மற்றும் மனித உரிமை பதுகாப்பு மைய தோழர்கள்.

ஆனால் ம.க.இ.க. தோழர்களின் போராட்டம், கைது பற்றிய உண்மையை எழுதாமல் வடிவேலுவின் ’கைப்புள்ள கதைபோல்’ ’கழக போராட்ட அறிவிப்பாலும் விடுதலை செய்தியின் எதிரொலியாலும் பட்டர் பின் வாசல் வழியாக ஓட்டம்!’ என வழக்கம் போல் தி.க வின் வெற்றியாக விடுதலை பத்திரிக்கையின் தலையங்கத்தில் எழுதியுள்ளனர். ஏற்கனவே கருவறை நுழைவு போராட்டத்தை வன்முறை என்று எதிர்த்த வீரமணி கும்பல் இன்று வெறும் சட்டவாதம் பேசும் புரோக்கர் கும்பலாக சீரழிந்து போயிருக்கிறது.

அடுத்தவர் உழைப்பை கூச்சமில்லாமல் அபகரிப்பதற்கு இந்த தில்லாலங்கடி தி.க கும்பல் எந்தவித கூச்ச நாச்சமும் அடைவதில்லை. அயோத்தி தீர்ப்பு தொடர்பாக வினவில் வந்த கார்ட்டூன்களை நன்றியோ, எங்கிருந்து சுட்டோம் என்ற அறிவிப்போ இன்றி விடுதலையில் வெளியிட்டிருந்தார்கள். அதுவும் கருணாநிதியை அம்பலப்படுத்தும் கார்ட்டூனை மட்டும் ஒளித்து விட்டு மற்றவற்றை வெளியிட்டிருந்தார்கள்.

பைனான்சு கம்பெனியாக தொழில் நடத்தும் இந்த கருப்பு பார்ப்பனக் கும்பல் இனி உண்மையான பார்ப்பன எதிர்ப்புக்கு வராது என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல்களை எமது தோழர்கள் களத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் போது, இவர்கள் அறிக்கை விட்டு சாதித்ததாக வீரம் பேசுகிறார்கள்.

எது எப்படியோ அரங்கநாதனது புரோக்கர்கள் என்பதற்காக தங்களையும் கடவுள் ரேஞ்சில் சித்தரித்து சூத்திர தோள்களில் உலாவந்த பார்ப்பன கொழுப்பு இப்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மதுரை உயர்நீதிமன்றமும் பட்டர்களின் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. ஒருவேளை உச்சநீதிமன்றம் சென்று பட்டர்கள் வெற்றிபெற்றாலும் அதை அமல்படுத்த முடியாது. ஏனெனில் இது “அயோத்தி அல்ல”, தமிழகம் என்பதை இந்து மதவெறியர்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.

போராடிய தோழர்களுக்கு வினவின் வாழ்த்துக்கள்!
http://www.vinavu.com/2010/11/20/srirangam-pallaku-battar/

தலைவர் பிறந்த நாள் தமிழர் தலைநிமிர்ந்த நாள்

Saturday, November 13, 2010

தங்கபாலுவின் ஜாமீன் பயணங்கள் -கடலூரில் தொடங்கி திண்டிவனத்தில் முடிந்த கதை? - டாக்டர் மாசிலாமணியின் காட்டமான அறிக்கை .தங்கபாலுவின் ஜாமீன் பயணங்கள் -கடலூரில் தொடங்கி திண்டிவனத்தில் முடிந்த கதை? - டாக்டர் மாசிலாமணியின் காட்டமான அறிக்கை .

மதிமுக பொருளாளரும், திண்டிவனம் பிரபல மருத்துவரும் ஆன, மாசிலாமணி தங்கபாலுவை பற்றி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதன் விவரங்கள் வருமாறு :

இலங்கையில் நடந்தது தமிழின அழிப்பு. இதனைப் போர் என்று குறிப்பிடுவது மிகப்பெரும் இழுக்கு. உலகில் பல நாடுகள் சிங்கள ராணுவத்தின் தமிழின அழிப்பை மனித உயிர்களாகக் கூட கருதாமல் கொன்று குவித்த கொடிய செயலைக் கண்டித்து வருகின்றன. இராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி மனித நேய அமைப்புகள் உலகம் முழுவதும் குரல் கொடத்தும் வருகின்றன.

இத்தகைய கொடிய செயலுக்கு உதவியதே இந்தியாதான் என்று இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் நன்கு அறிவார்கள். ஆயுதங்களையும், அதனை இயக்கும் தொழில் வல்லுநர்களையும் தமிழரகளை கொன்று குவிக்க சிங்கள இராணுவத்திற்கு உதவியாக அனுப்பியது இந்திய அரசு என்பதை உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் அம்பலப்படுத்தின.

இந்த நிலையில் திருமதி சோனியாவும், தமிழத்தின் இன்றைய முதல்வர் கருணாநிதியும் நடத்திக் கொண்ட கடிதப் போக்குவரத்து தொலைபேசி உரையாடல் எதற்காக என்பதை மட்டுமல்ல முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் மகாத்மா காந்தியடிகளின் அகிம்சை போராட்டத்தை அவமானமடையச் செய்தது என்பதை உண்மையான காந்தியின் காங்கிரஸ் வழி வந்தவர்கள் அறிவார்கள்.

ஜனநாயக மீட்புக்காக மிசாவில் இலங்கைத் தமிழர் நலனுக்காக கருத்துரிமை காத்திட தடா, பொடா என்றும், தமிழகத்தின் வாழ்வு ஆதாரங்களை காக்கும் போராட்டங்கள் பலவற்றிலும் மக்கள் நலனுக்காக பலமுறை கைது செய்யப்பட்டு நீண்ட நாள் சிறைவாசம் செய்தவர் கழகப் பொதுச்செயலாளர் வைகோ. அது மட்டுமல்ல, சிங்கள் வெறியர்களால் தாக்கப்பட்டு கை, கால்கள் ஊனமாகி வந்த தமிழர்களுக்கு மருத்துவ சிகிச்சையளித்த மனித நேய செயலுக்காக கழகப் பொதுச் செயலாளரின் தம்பி இரவிச்சந்திரன் தடாவில் இருந்ததும் நாட்டு மக்கள் அறிவார்கள்.

இந்திய வரலாற்றில் இத்தகைய பெருமை பண்டிதர் ஜவஹர்லால் நேருவிற்குப் பிறகு அரசியல் காரணங்களுக்காக அதிக நாள் சிறைவாசம் செய்தவர் என்கிற வரலாற்றுப் பெருமை வைகோ அவர்களுக்கு மட்டுமே உண்டு.

தமிழர் நலுனுக்காக இலங்கையில் அன்றாடம் சாகும் தமிழரின் வாழ்வுரிமையை காப்பாற்றிட வேண்டுமென்றபதற்காக தனது அரசியல் பயணத்தில் தொடக்கக் காலம் முதல் இன்று வரை எவ்வித சமரசமுமின்றி தியாகத்துடன் பயணிப்பவர் வைகோ. சமீபத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கக் கோரி தீர்ப்பாயத்தின் முன்பு வழக்கறிஞராக வாதாடி உலகத் தமிழர்களின் முன்பு தலைநிமிர்ந்து நிற்கும் உண்மைத் தமிழன் வைகோ என்பதை நாடறியும், உலகத் தமிழர்கள் அறிவார்கள்.

மக்களையும் சந்திக்காமல், மக்கள் நலனுக்காகப் போராடாமல் குளுகுளு அறையில் அமர்ந்து கொண்டு குறுக்கு வழியில் பதவி நாற்காலியில் தங்கபாலு போன்றவர்கள் கசங்காத கதர் சட்டையுடன் காலத்தைக் கழிக்கின்ற நபர்களுக்கு வைகோ என்ற பெயரைக் கூட உச்சரிக்கும் தகுதி கிடையாது.

வெற்றி வரும், போகும். ஆனால், இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் போனால் வருமா? என்பதைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் இழப்பு பற்றிக் கூறிடும் தங்கபாலு காங்கிரஸ் கட்சிக்காக இழந்தது என்ன? அதன் வளர்ச்சிக்காக செய்த தியாகம் என்ன? என்று அவரது கட்சியினரே அன்றாடம் கேள்வி கேட்டு வரும் நிலையில் பதவிக்காக இன்றுவரை ஆசைப்படாத ஒரே தமிழினத் தலைவர் வைகோ அவர்களை விட்டால் வேறு யாரைக் குறிப்பிட முடியும்?

தமிழர்களைக் கொன்று அழிக்கும் சிங்கள இன வெறியர்களின் பஞ்சமா பாதகச் செயலுக்கு உதவியர்களின் வரிசையில் இராஜ பக்சேவும் திருமதி சோனியாவும் வரலாற்றில் இடம் பெறும்போது அதில் தமிழகத்தின் இன்றைய முதல்வரும் இருப்பார். ஆனால், இதே முதல்வர்தான் அமைதிப் படை இலங்கையில் எங்கள் தமிழர்களைக் கொன்ற படை; அதை வரவேற்க மாட்டேன் என்றார். திருமதி சோனியா காந்தி இப்போது சிங்களத் தமிழர்கள் செய்த உதவிக்கும், இவரது கணவர் அப்போது செய்த உதவிக்கும் வித்தியாசம் என்ன? என்று தமிழக முதல்வர்தான் பதில் கூற வேண்டும். திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் மிகுந்த தொலைநோக்கில் அன்று தமிழர்களுக்காகச் செய்த உதவியும் வரலாற்றில் உள்ளது.

தங்கபாலுவுக்கு வேண்டுமானால் வரலாற்றின் சங்கதிகள் மறந்து இருக்கலாம். இப்போது அவர் பதவி நாற்காலியில் எப்படி உட்கார்ந்திருக்கிறார் என்பதை அவரது கட்சியினரே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கடலூரில் தொடங்கி திண்டிவனத்தில் முடிந்த இவரது ஜாமீன் கதை பற்றி அதே கட்சியின் தலைவர்களில் ஒருவரான இளங்கோவனே பேசுகிறார்.

திண்டிவனத்தில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வேண்டுமானால் மறைந்து போயிருக்கலாம். அவர் மூலம் தங்கபாலு ஜாமீன் பெற்ற கதை மறந்து போகவில்லை. அன்றைய தங்கபாலுவுக்கும், இன்றைய தங்கபாலுவுக்கும் வித்தியாசம் நிறைய உண்டு. அரசியலில் வந்தது இழப்புக்காகவா? பிழைப்புக்காகவா? என்பதை தங்கபாலுவின் தொலைக்காட்சி, கிரானைட், கல்லூரி என்று வளர்ச்சியை அறிந்தவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.

கழகப் பொதுச் செயலாளரின் இன மான உணர்வு, தமிழர் வளர்ச்சிக்காக அவர் குரலெழுப்பி வருவது உலகத் தமிழர்களும் - தமிழகத்தின் மக்களும் நன்கு அறிவார்கள்.

பதவியைப் பற்றிக் கவலைப்படாத பரிசுத்தமான தமிழர் தலைவர் வைகோ அவர்கள் விரும்பியிருந்தால் வாஜ்பாய் அரசில் நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் என்று பெரிய பதவியையே வகித்திருப்பார். வருவாயைப் பற்றியே சிந்திக்கும் தங்கபாலுக்கள் வரப்போவது சட்டமன்றத் தேர்தல் என்பதால் பூச்சாண்டி காட்டி வருகிறார்கள். இதுவே நாடாளுமன்றத் தேர்தல் எனில் இவர்கள் ஊழல் ராஜாக்களின் கூஜாக்களாக மாறி கோபாலபுரத்தில் மண்டியிட்டுக் கிடந்திருப்பார்கள். பதவிக்காக நடக்கும் கதர் சட்டைக் கிழிப்புகள் பற்றி சத்தியமூர்த்தி பவனில் இருந்து வரும் பத்திரிகைகளில் செய்தி வராத நாளே இல்லை.

தமிழக மக்களுக்குக் காங்கிரசைப் பற்றியும் தெரியும்; தங்கபாலுக்களைப் பற்றியும் தெரியும். முதலில் தங்கபாலுவுக்கு அவரது கட்சியில் அவருக்கென்ன கருதி உள்ளதென்பதைப் புரிந்து கொள்ளட்டும். கழகப் பொதுச் செயலாளர் வைகோவின் தகுதி பற்றித் தமிழகத்தில் உள்ளவர்கள் அனைவரும் அறிவார்கள். இதனை தங்கபாலு போன்ற பதவிப் பிரியர்களின் கூட்டம் தெரிந்திருக்க முடியாது. ஆனால், உலகத் தமிழர்களின் இதயத்தில் இமயம்போல் உயர்ந்து நிற்பவர் வைகோ என்பதை தங்கபாலு போன்றவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Friday, November 12, 2010

வீர தமிழ் மறவனே,,
வீர தமிழ் மறவனே
தம்பி மதிவாணா .....
செந்தமிழன் சீமான் கண்டெடுத்த
மான தமிழா ....
மரணம் உன் அருகில் இருந்தபோதும்
சூட்டினால் வழியும் குருதி என்று
சாதாரணமாக எடுத்துக்கொண்டு
சளைக்காமல் இனத்துக்கு உழைத்த மாவீரனே
ஒரு கலந்துரையாடலில்
உன் உணர்ச்சி மிகு கருத்தை கேட்டுதானடா
என் உணர்ச்சியின் வேகத்தை நான் அதிகப்படுத்தினேன்
பட்டி தொட்டியெங்கும் பரப்புரை
செய்யுங்கள் என்றாய்
கிராமங்களில் கட்சியை வளர்க்க சொன்னாய்
அடித்தட்டு மக்களின் அவலங்களை
ஆழமாய் பதிவு பண்ணசொன்னாய்...
ஆரிய திராவிட விஷக்கரங்களில்
சிக்கிகொண்ட நம் மொழியை
நம் இனத்தை நம் கலாச்சாரத்தை
மீட்டெடுக்கும் வரை
சீமானோடு நிற்போம் அண்ணா என்று
எனக்கு சொல்லிவிட்டு ....
நீ எங்கோ சென்று விட்டாயே ...
உன் உருவத்தை பார்த்து உன்னை
குறைத்து மதிப்பிட்டவர்கள் கூட
உன் தமிழையும் உன் வீரத்தையும்
உன் கருத்தையும் உன் சிந்தனையையும்
உன் இனபற்றையும் பார்த்து
உன்னை அண்ணாந்து பார்த்தார்களே ...
வியந்து பார்க்க வைத்துவிட்டு
விழிகளை மூடி கொண்டாயே ...ஏனடா
தம்பிகளை கேட்டதாக சொல்லடா
அண்ணன் சொல்லி அனுப்பினான்
அதை சொல்லதானடா வந்தேன் ...
மருத்துவர்கள் கை விட்டு விட்டதாக
ராசீவ்காந்தியும் ஆவலும் அழகிரியும்
அழுது புரண்டார்கள் ...
கை விடுவதுதானே கைக்கு பழக்கம் ...
ஆனாலும் நாங்கள் விடபோவதில்லை என்று
ராசா அரி நெல்லை சிவா அதியமான்
குமார் சுகுமார் தம்பிகள் எல்லோரும்
போராடி போராடி பார்த்தார்கள் ..மதி
போராடினால் வெற்றி உறுதி என்று
நீதானே சொன்னாய் ..
நாங்கள் உன்னை மீட்கதானே போராடினோம்
எங்களை தோல்வியை தழுவ செய்துவிட்டு ..நீ
ஏனடா சாவை தழுவினாய்
பொய் வழக்கை பொசுக்கி எரிந்து விட்டு
சிறை கதவுகளை உடைத்து சீறி வரும்
சீமானின் கண்கள் கூட்டத்தில் உன்னை தேடுமே
என்ன பதில் சொல்வது ....
அண்ணனின் விடுதலைக்கு உழைத்தவனே-உன்
உயிருக்கு ஏனடா விடுதலை கொடுத்தாய் ....
போய் வாடா விடுதலை மகனே-உன்
கனவை சுமந்து கொண்டு நாங்கள் பயணிக்கிறோம்
தமிழை வாழவைப்போம்
தமிழனை ஆளவைபோம்...என்று
சூளுரைத்த உன் லட்சிய பாதையில்
அண்ணன் சீமானின் பின்னால் அணிவகுக்கிறோம்
மீட்டு எடுப்போம் தமிழர் உரிமைகளை
கட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை ...
மதிவாணா நீ மரணிக்க வில்லை -எங்கள்
மனதுக்குள் வாழ்கிறாய் ......

சிபி சந்தர்
திரைப்பட இயக்குனர்

நாம் தமிழர் வழக்கறிஞர் மதிவாணன் மறைவு. வீரவணக்கம் செலுத்த வாரீர்வீர வணக்கம்

நாம் தமிழர் கட்சியின் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.மதிவாணன் அவர்கள் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கடந்த நான்கு நாட்களாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தினமும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும் நாம் தமிழர் கட்சியினரும் அவரது உடல்நிலையில் கவலைகொண்டு மருத்துவமனையில் இரவுபகலாக இருந்தனர்.

இப்போது திரு.மதிவாணன் அவர்களது உடல் மதுராந்தகத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போன்தூர் கிராமத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது. அவரது உடல் மாலை 4 மணிக்கு இறுதி மரியாதை மற்றும் தகனம் செய்யப்படும்.

திரு.மதிவாணன் அவர்கள் சிறந்த மனிதஉரிமை போராளி. அவரது மறைவு தமிழ் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பு.

தமிழர்கள் அனைவரும் திரு.மதிவாணன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வாரீர்.

மேலும் அவருக்கு ஏற்ப்பட்ட மருத்துவ செலவிற்கும் அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உதவி செய்ய கீழ் உள்ள நாம் தமிழர் கட்சி வங்கி கணக்கில் செலுத்துக.வங்கி : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank)

கணக்கு பெயர் : NAAM TAMIZHAR KATCHE

(A/C NAME)

கணக்கு எண் : 067302000002501.

(A/C NO)

IFSC எண் : IOBA0000673

(IFS Code)

SHIFT MESSAGE

CENTRAL OFFICE : IOBAINBB001, dealer : IOBAINBB876

கிளை : ராயபுரம். சென்னை. தமிழ்நாடு.

Branch : Royapuram, Chennai, Tamilnadu.

மற்ற மேலதிக விவரங்களுக்கு தொடர்புகொள்க:

மின்னஞ்சல் : donate@naamtamilar.org

தொலைபேசி : ராஜா +91 9380 888 111, ராசீவ்காந்தி + 91 9842 521 338

Tuesday, November 9, 2010

தினமலர்-பதிவுலகம் இணைந்து வழங்கும் “இதுதாண்டா போலீஸ்” ரீலோடட் !

Elangovan - kuwait,குவைத்
2010-11-09 13:35:48 IST
நல்ல தீர்வு, சட்டம் ஒரு இருட்டறை குற்றவாளியை அதன் முன்னால் நிறுத்தினால் குளிர்காய்ந்து கொண்டிருப்பான் என்பதை உணர்ந்து செயல்பட்ட திரு சைலேந்திரபாபு அவர்களுக்கு நம் நாட்டு மக்கள் எல்லோர் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சட்டங்கள் கடுமையாக்க பட வேண்டும்….
BALAMURUGAN - johor,மலேஷியா
2010-11-09 13:35:11 IST
… (இவனையெல்லாம் அப்படியே உயிரோடு வைத்து சித்திரவதை செய்து, அந்த குழந்தைகள் பட்ட துன்ப வேதனைகளையெல்லாம் இவன் அனுபவிக்காமல் ஒரே encounter லே போய்ட்டான் என்கிற ஆதங்கம் தான் வருது)…
சிவா - சென்னை,இந்தியா
2010-11-09 13:29:54 IST
இது போல கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு குழந்தைய ஒரு பொண்ணு கொன்னு போட்ட அவ பேரு புவிழலி’ன்னு நினைகரன். அவளையும் இப்படி போட்டு தள்ள முடியுமா???????? அப்படி போட்டு தள்ள ஆண்டவனை வேண்டுகிறேன். கோவை போலீஸ்’கு என்னுடைய ஆயிரம் நன்றிகள்….
selva - coimbatore,இந்தியா
2010-11-09 13:28:49 IST
ஆல் தமிழன்ஸ் ஒன்று சேர்வோம். எழுதுங்கள் சீப் மினிஸ்டருக்கு கோயம்புத்தூர் போலிசை பாராட்டி கமிஷ்நேர் சைலேந்திர பாபு தனது திறமையால் மக்கள் மனதை கவர்ந்து விட்டார் ஹாட்ஸ் ஆப் சார்…
சுரேஷ்குமார் - coimbatore,இந்தியா
2010-11-09 13:22:10 IST
அரசன் அன்றே கொல்வான். போலீஸ் (தெய்வம்) நின்று கொள்ளும். நன்றி. கோவை மக்களுக்கு தீபாவளி 5 ம் தேதி அல்ல. இன்று தான் உண்மையான தீபாவளி….
Raga - சென்னை,இந்தியா
2010-11-09 12:36:26 IST
To Coimbatore Police comissioner: Thanks for saving our Tax payers money and saving time of our judicial system for this kind of criminal activities. அவனை விவேக் ஒரு படத்தில் மைனர் குஞ்சுவை சுட்டது போல் சுட்டிருக்க வேன்டும்! இது மாதிரி விரைந்து தீர்ப்பு அளித்தால் நாட்டில் இது மாதிரியான குற்றங்கள் குறையும்! ஊழல், அக்கிரமும் செய்யும் அரசியல் வாதிக்களுக்கும், அரசாங்க வேலை யாட்ட்களுக்கும் இது மாதிரி உடனடி தண்டனை குடுத்தால் மிகவும் நல்லா இருக்கும்!!…
தமிழன் - சென்னை,இந்தியா
2010-11-09 12:35:03 IST
இது போன்ற நிகழ்வுகளில் மக்களின் ஒற்றுமையான உணர்வுகளின் வெளிபாடு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. வெல்க நியாயம் வளர்க மக்களின் ஒற்றுமை ஓங்குக நமது காவல்துறையின் பணி. சிறப்பான இந்த காரியத்தை செய்து முடித்த நமது காவல்துறைக்கும், நமது முதல்வர் மு.க அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி……..
ஷபீர் - manama,பஹ்ரைன்
2010-11-09 12:33:03 IST
தமிழக அரசு , திரு.சைலேந்திர பாபு மற்றும் அவருடன் சேர்ந்து இம்முடிவினை எடுத்த அவரது சகாக்கள், என்கௌண்டர் செய்ய உதவி புரிந்த போலீசார் அனைவருக்கும் என் மணமாந்த வாழ்த்துக்கள்!!!. எது எதுக்கோ பரிசு வழங்குகிறார்கள். இந்த வீரர்களுக்கு பாரத ரத்னா போன்ற விருந்துகள் வழங்க வேண்டும்….
Krishnas - nj,யூ.எஸ்.ஏ
2010-11-09 12:28:42 IST
“போலிசே தண்டனை கொடுத்தால் சட்டம் என்ன ஊறுகாய் போடவா இருக்கிறது” இது சில மேதாவிகளின் கேள்வி இங்கு. இந்த மாதிரி குழந்தைகளை கடத்துவது, கொல்வது, கற்பழிப்பது போன்ற கொடூர செயல்களில் ஈடுபடும் மிருகங்களுக்கு எதற்கு சட்ட உதவி. நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி இந்திய மக்களின் வரிப்பணம் ஏன் வீணாகவேண்டும். அந்த மிருகங்களை குற்றவாளி என்று நிரூபணம் ஆனவுடன் அந்த இடத்திலயே கொன்று விடவேண்டும்…..
Kumaran - chennai,இந்தியா
2010-11-09 12:18:27 IST
இது மாதிரி சீன் விஜயகாந்த், அர்ஜுன் படத்தில ஏற்கனவே வந்துவிட்டது. இதை தான் நாங்களும் ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தோம். ஆனாலும் ஒரு பண்ணி உயிரோட இருக்கு…தயவு செய்து அவனுக்கும் ஒரு பிளான் போடுங்க.. என் அருமை மனித உரிமை கமிஷன் தலைவர்களே கொஞ்சம் கண்ண மூடிக்கோங்க…. அடி பட்ட போலீஸ் சிங்கங்களுக்கு என் ஆறுதல்கள் அண்ட் வாழ்த்துக்கள்…….
Sankaran - chennai,இந்தியா
2010-11-09 12:18:17 IST
அது தான் ஐநூறு பேர் போலிசை பாராட்டியிருக்கிரார்களே என்று கருத்து எழுதாமல் இருக்காதீர்கள். ஐந்தாயிரம் பேர் எழுதினாலும் குறைவு தான். வெள்ளைக்காரனின் துருப்பிடித்த சட்டங்களை கட்டிக்கொண்டு அழும் அறிவுஜீவிகளுக்கு சாதா இந்தியனின் ஆத்திரமும் குமுறலும் என்று தான் புரியுமோ? கசாபுக்கும் இந்த முடிவு எப்போது என்று ஏங்கும் கோடானு கோடி இந்தியர்களின் சார்பாக,…
____________________________________________________________

இவை தினமலருக்கு வந்துள்ள 1000 க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களில் சில. கோவை முழுவதும் மார்வாடி சேட்டுகள் இனிப்பை வழங்கி பட்டாசுகளையும் அள்ளி தருகிறார்கள். சேட்டுகளின் தயவில் கோவையே சமூக தீபாவளியை கொண்டாடி வருகிறது. தமிழ் பதிவுலகிலும் அதே மனநிலைதான்.

இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், கொல்லப்பட்ட மோகன்ராஜ் போலீசை சுட்டுக்கொல்ல முயன்றதாகவும், தற்காப்புக்காக போலீசு சுட்டதில் மோகன்ராஜ் செத்துப்போய்விட்டதாகவும் போலீசு கொடுத்துள்ள செய்தி கடைந்தெடுத்த பொய் என்பதை 1000 பின்னூட்டக்காரர்களும் அடித்துச் சொல்கிறார்கள். இருந்தபோதிலும் “பொய் வாழ்க, போலீசு வாழ்க, கொலை வாழ்க! ஜெய்ஹிந்த்!” என்று கருத்துக் கூறி முடித்திருக்கிறார்கள்.

வாசகர்களுடைய தர்ம ஆவேசம் தாங்க முடியவில்லை. இப்படி அறவுணர்ச்சி பொங்கி வழியும் தமிழகத்திலா லஞ்ச ஊழல் தாண்டவமாடுகிறது, பொதுச்சொத்துக்கள் கொள்ளை போகின்றன? இந்த தமிழ்நாட்டில்தானா சில போலீசுகாரர்கள் டூட்டி முடிந்தபின் மப்டியில் வந்து திருடுகிறார்கள், பல போலீஸ்காரர்கள் யூனிபார்மிலேயே திருடுகிறார்கள்..? நம்பமுடியவில்லை.

இருந்தாலும் ஒரு கேள்வி. ஒருவேளை… ஒருவேளை மட்டும்தான், மோகன்ராஜ் என்ற நபர் அப்பாவியாக இருந்து, உண்மையிலேயே அந்தக் குழந்தைகளைக் கடத்திக் கொன்றவர்கள் சேட்டுடைய சொந்தக்காரப் பையன்கள் என்ற சேதி கொஞ்சநாளைக்குப் பின்னர் வெளிவந்தால்? சில நாட்களுக்கு முன் சென்னையில் சிறுவனைக் கடத்தியதாக கைது செய்யப்பட்டிருப்பவர்கள் அவனது சொந்தக்கார இளைஞர்கள், ஹை டெக் கிரிமினல்கள். கேட்ட பணத்தைக் கொடுப்பது போலக் கொடுத்து பின்னர் அவர்களை மடக்கிப் பிடித்தது போலீசு என்ற செய்தியைப் படித்திருப்பீர்கள். அதனால்தான் ஒரு சந்தேகமும் வருகிறது.

“இப்படி பணத்தைக் கொடுத்து குற்றவாளியைப் பிடித்திருப்பது போலீசு துறைக்கே அவமானம்” என்றும், “மைனாரிட்டி திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் யோக்கியதை இதுதான்” என்றும் மறுநாள் ஜெயலலிதா விட்ட அறிக்கையையும் படித்திருப்பீர்கள்.

சட்டமன்றம் வேறு கூடவிருப்பதால், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை” என்று ஆத்தாளுக்கும் மக்களுக்கும் நிரூபிக்கும் விதத்தில், உடனே “கிடா வெட்டி பொங்கல் வைக்குமாறு” போலீசுக்கு உத்தரவிடப்பட்டதாகவும், கோவை போலீசுதான் “சேச்சே.. அப்படியெல்லாம் உடனே சுட்டுக்கொல்வது ஐ.பி.எஸ் பதவிக்கு அழகு இல்லீங்கய்யா, ரெண்டு நாளாவது போகட்டும்” என்று கூறி, கிடாவெட்டினை தள்ளி வைத்து நிறைவேற்றியதாகவும் ஒரு செய்தி உலவுகிறது. எப்படியோ, மோகன்ராஜ் என்ற நபருக்கு “எமன்” ஜெயலலிதா உருவில் வந்திருக்கிறான்.

ஜெயலலிதா மட்டும்தான் எமன் என்று சொல்லிவிட முடியாது. தேர்தல் நெருங்கும் வரை திமுகவின் காலை நக்கிப் பிழைத்துவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் தங்கள் “வலிமை”யை கருணாநிதிக்குப் போட்டுக் காட்டும் பத்திரிகைகளும், கருணாநிதி என்னதான் அள்ளிக் கொடுத்தாலும் “தானாடாவிட்டாலும் தசையாடும்” என்று இனப்பாசத்துடன் அம்மாவின் அறிக்கைகளை 5 ஆம் பக்கத்திலிருந்து முதல் பக்கத்துக்கு கொண்டுவந்திருக்கும் பார்ப்பன நாளேடுகளும் கூடத்தான் இந்த என்கவுன்டரில் பங்கேற்றிருக்கின்றன. இவர்கள் உருவாக்கிய தர்மாவேசம்தான், இந்தக் கொலையை ஒரு திருவிழாவாக கொண்டாடும் மனநிலைக்கு வாசகர்களைத் தயார்படுத்தியிருக்கிறது.

கும்பலோடு சேர்ந்து கொண்டு தர்ம அடி போடும் “வீரர்கள்” அடிவாங்குபவன் நல்லவனா, கெட்டவனா என்று தெரிந்து கொள்ள எப்போதுமே விரும்புவதில்லை. சொந்த முறையில் நேருக்கு நேர் எந்த அநீதியையும் தட்டிக் கேட்கும் துணிவோ, நேர்மையோ இல்லாத கோழைகள்தான் தரும அடி வீரர்களாக தினமலர் பின்னூட்டங்களில் அவதரிக்கிறார்கள்.

“பாலியல் வன்முறை நடந்திருப்பதாக பிரேத பரிசோதனை கூறுகிறது” என்று போலீசு சொல்கிறது. ஆனால் குழந்தைகளை கடத்தியவர்கள் “பணத்துக்காகத்தான் கடத்தினார்கள்” என்பது கூட இதுவரை உறுதியானதாகத் தெரியவில்லை. பணத்துக்கு கடத்தினார்களோ, பழி வாங்குவதற்காக கடத்தினார்களோ, எதற்காகக் கடத்தியிருந்தாலும் குற்றம்தான். அதில் சந்தேகமில்லை.

ஆனால் அந்தக் கொலை ஆதாயத்துக்காக செய்யப்பட்ட கொலையா (murder for gain), ஆத்திரத்தில் செய்யப்பட்ட கொலையா, அவசரத்தில் செய்யப்பட்ட கொலையா என்பதைப் பொறுத்து குற்றவாளிகளுக்கான தண்டனை ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை அதிகரித்துச் செல்லும். “எதற்காக கொன்றார்கள் என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவையா, கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல், கொலைக்கு கொலை… ” என்று முழங்குகிறார்கள் தினமலர் பின்னூட்டக்காரர்கள்.

அதுதான் நீதி என்றால், இதே போன்றதொரு என்கவுன்டரில் ஜெயேந்திரரை அன்று ஆந்திரா பார்டரில் வைத்தே போட்டுத் தள்ளியிருக்கலாமே! அந்தக் கிரிமினலின் கையால் வழங்கப்பட்ட ஒண்ணரை கிலோ எடையிலான தங்க கிரீடத்தை தலையில் சுமக்கும் துர்ப்பாக்கிய நிலையநிலிருந்து வெங்கடாஜலபதி பெருமாளும் தப்பியிருப்பாரே! கோவை என்கவுன்டரை ஆதரிப்பவர்கள் அப்படி ஒரு ஆந்திரா என்கவுன்டர் நடந்திருந்தால் அதனை ஆதரித்திருப்பார்களா?

அன்று “ஹ்யூமன் ரைட் வயலேஷன், மிஸ்யூஸ் ஆஃப் பவர், ஹாரஸ்மென்ட்” என்று பல மாமாக்களும் மாமிகளும் டிவிக்களில் பேட்டி கொடுத்தார்களே! “இந்த அநீதியைப் பொறுக்க முடியாமல்தான் சுனாமியே வந்தது” என்று கூட சென்னை அயோத்தியா மண்டபத்தின் பக்கம் பேசிக்கொண்டார்களே! அன்று சென்னை உயர்நீதி மன்றம் விடுமுறை நாளில் சங்கராச்சாரியின் பெயில் பெட்டிசனை விசாரித்ததே, பெரியவாளை ஜெயிலுக்கு அனுப்பாமல் ஜட்ஜ் பங்களாவிலேயே ரிமாண்டு பண்ண முடியுமா என்று ஒரு மாட்சிமை தங்கிய நீதிபதி அரசு வக்கீலிடம் கேட்டாரே அதெல்லாம் நினைவிருக்கிறதா?

“இன்றைக்குத்தான் எங்களுக்கு தீபாவளி” என்று பேட்டி கொடுத்திருக்கிறார்கள் அந்தப் பிள்ளைகளின் பெற்றோரான சேட்டுகள். வரதராஜப் பெருமாள் சந்நிதியில் சங்கரராமனை ஆள் வைத்துப் போட்டுத்தள்ளியதாக குற்றம் சாட்டப்பட்ட பெரியவாளையும் அன்றைக்கே போட்டுத்தள்ளியிருந்தால், சங்கரராமனின் மனைவியும் அன்று தீபாவளி கொண்டாடியிருப்பாரே! பாண்டிச்சேரிக்கு கேசை மாற்றி, இழுத்தடித்ததனால்தானே இன்றைக்கு சங்கரராமனின் ஆவியைத் தவிர எல்லா சாட்சிகளும் பல்டியடித்து விட்டார்கள்?

இது ஒரு உதாரணம் மட்டும்தான். இதே கோவை நகரில் போலீசுக்காரர் செல்வராஜ் கொலையைத் தொடர்ந்து இந்து முன்னணிக் காலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம் மக்களில் ஒருவருக்கு கூட இன்று வரை நீதி கிடைக்கவில்லை. ஆனால், பதிலுக்கு குண்டு வைத்த அல்உம்மாக் காரர்கள் மட்டுமின்றி பல அப்பாவிகளும் ஆயுள்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

“குஜராத் படுகொலையை எப்படி நடத்தினோம், எப்படி வன்புணர்ச்சி செய்தோம்” என்று ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் வீடியோவையே தெகல்கா வெளியிட்டதே.. அதன் பிறகு எத்தனை ஆர்.எஸ்.எஸ் காலிகள் என்கவுன்டரில் போட்டுத்தள்ளப்பட்டார்கள்? ரதயாத்திரையில் தொடங்கி மும்பை படுகொலை வரை கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கான முஸ்லிம் உயிர்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? தற்போது ஆஜ்மீர் முதலான பல குண்டுவெடிப்புகளை நடத்தியவர்களே சங்க பரிவாரத்தினர்தான் என்று குட்டு உடைந்தவுடன், “அரசியல் பழிவாங்கல்” என்று அவர்கள் ஏன் அலறுகிறார்கள்? அதைக் கேட்டு நமக்கு ஏன் கோபம் வரவில்லை?

“இப்படித்தான் கசாப்பையும் போட்டுத்தள்ளவேண்டும்” என்று பின்னூட்டம் போடுகிறவர், “ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தையும் இப்படித்தான் போட்டுத்தள்ளவேண்டும்” என்று ஏன் சொல்ல மறுக்கிறார்? அலகாபாத் தீர்ப்பு வந்தவுடன், “கடந்த காலக் கசப்புகளையெல்லாம் மறந்து விடுங்கள்” என்று முஸ்லிம்களுக்கு அறிவுரை சொல்கிறாரே பகவத், அதை பெருந்தன்மை என்று பாராட்டுகின்றனவே பத்திரிகைகள், அதையெல்லாம் எப்படி இயல்பாக எடுத்துக் கொள்ள முடிகிறது? அதே மாதிரி ஒரு அறிவுரையை சொல்லும் உரிமை கசாப்புக்கு கிடையாதா? மோகன்ராஜுக்கோ மனோகரனுக்கோ கிடையாதா?

1984 இல் டெல்லியில் கொல்லப்பட்ட சீக்கியர்களுக்காக “விதவை விகார்” என்று குடியிருப்பே கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறதே, அந்த விதவைகள் என்றைக்கு தீபாவளி கொண்டாடுவது? தண்டகாரண்யாவிலும் காஷ்மீரிலும் நடக்காத பாலியல் வன்முறையா, படுகொலையா? “இந்தியாவிலிருந்து விடுதலை” என்று காஷ்மீரே இன்று கையில் கல்லை எடுத்துக்கொண்டு நிற்கிறதே இந்த நிலையை ஏற்படுத்தியது யார்? இந்திய இராணுவமல்லவா?

“போலி என்கவுண்டரில் தங்களை பிள்ளைகளை போட்டுத் தள்ளிய இந்திய இராணுவத்தினரை பதிலுக்கு என்கவுன்டரில் போட்டுத்தள்ள வேண்டும்” என்று காஷ்மீர் மக்கள் கோரவில்லை. மனித உரிமை அமைப்புகளும் கோரவில்லை. “எல்லோரையும் போல அவர்களையும் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும்” என்பதுதான் காஷ்மீர் மக்களின் கோரிக்கை. “எத்தனை கொலை செய்தாலும், வன்புணர்ச்சி செய்தாலும் எங்களை நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடாது” என்று இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரிகள்தான் மிரட்டுகிறார்கள். இந்த அதிகாரத்துக்குப் பெயர்தான் “ஆர்ம்டு போர்சஸ் ஸ்பெசன் பவர் ஆக்ட்”. கொல்லவும், வல்லுறவு கொள்ளவுமான “ஸ்பெஷல் பவர்”!

“இராணுவத்திற்கு கொடுத்திருக்கும் அப்படிப்பட்ட ஸ்பெஷல் பவரை எங்களுக்கும் கொடுங்கள்” என்பதுதான் போலீசின் கோரிக்கை. அதைத்தான் தினமலரின் பின்னூட்டக்காரர்கள் வழிமொழிகிறார்கள். வழக்குகளோ வாய்தாக்களோ இல்லாமல் வாச்சாத்தி, பத்மினி, ரீட்டா மேரி, அந்தியூர் விஜயா .. என்று லாக் அப்பை லாட்ஜாகவும், தூக்குமேடையாகவும் மாற்றிக் கொள்ளும் அதிகாரத்தைத்தான் போலீசு கேட்கிறது. ஏற்கெனவே நடப்பில் இருக்கும் அந்த அதிகாரத்தை, அதிகார பூர்வமாக, சட்டப்படியே வழங்க வேண்டும் என்பதுதான் போலிசின் கோரிக்கை.

தா.கிருஷ்ணனைக் கொன்ற கொலைகாரர்கள், மதுரை தினகரன் ஊழியர்கள் மூவரைக் கொன்ற கொலைகாரர்கள் இவர்களையெல்லாம் போட்டுத் தள்ளுவதற்காகவா இந்த அதிகாரத்தைக் கேட்கிறது போலீசு?

சென்னையில் ஒரு சரிகா ஷா என்ற பெண் ஈவ் டீசிங்கிற்கு பலியானவுடன் மீடியாவும் அரசும் கொந்தளித்தன. உடனே ஈவ் டீசிங்கிற்கு சட்டமெல்லாம் வந்துவிட்டது. இப்போது கோவை கடத்தல் கொலை நடந்தவுடனே என்கவுன்டரைச் சட்டமாக்கச் சொல்கிறார்கள் தினமலர் ரசிகர்கள். பணக்காரனும், பார்ப்பன மேட்டுக்குடியும், சேட்டுகளும் பாதிக்கப்பட்டால்தான் இவர்களிடம் மனிதாபிமானம் கொப்புளித்து எழும் போலும்!

மேலவளவு படுகொலை நடந்தபோது இப்படியொரு தார்மீக ஆவேசத்தை நாம் மீடியாக்களில் பார்க்கவில்லையே! அந்த வழக்கில் “விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பலரும் கொலைக்குற்றத்துக்காக தண்டிக்கப்படவேண்டியவர்களே” என்று சென்னை உயர்நீதி மன்றம் கூறிய பின்னரும், அவர்களை தண்டிப்பதற்கு திமுக, அதிமுக அரசுகள் முயலவில்லையே, அதையெல்லாம் யாரும் கேட்டதாக நினைவில்லையே! தற்போது பெண்ணாடம் மாணவன் பாரத் கொலை பற்றியும் வினவு தளத்தில் எழுதியிருக்கிறோம். அதனைப் படித்து வாசகர்களோ, பதிவுலகமோ பொங்கி எழவில்லையே!

சின்ன கவுண்டர், பெரிய கவுண்டர் என்று கூறிக்கொண்டு தலித் மக்களுக்கு எதிரான சாதிவெறிக் குற்றங்களையும் பாலியல் வன்முறைகளையும் கொலைகளையும் நடத்திக் கொண்டிருக்கும் கொங்கு மண்ணில்தான் இன்று தரும ஆவேசம் தலைவிரித்து ஆடுகிறது. என்கவுண்டருக்கு ஆதரவாக வெடி வெடிக்கிறார்கள். “என்” கவுண்டரோ, “உன்” கவுண்டரோ, யாராயிருந்தாலும் “நம்” கவுண்டர்தானே என்றுகூட அவர்கள் புரிந்து கொண்டிருக்கக் கூடும்.

கோவை என்கவுன்டரை பாராட்டும் ரசிகர்களே, பதிவர்களே உங்கள் முகத்தைக் கண்ணாடியில் ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனிதாபிமான வேடம் உங்களுக்கே அருவெறுப்பாகத் தெரியவில்லையா?

தினமலர் தினகரன் போன்ற பத்திரிகைகளுக்கு பாலியல் குற்றங்களைப் பற்றி எழுதும் அருகதை உண்டா? இந்தக் குற்றங்களின் தோற்றுவாயே அவர்கள்தானே! “முதலிரவு காட்சியை லைவ் ஆகப் பார்ப்பதற்கான இணையதளம் இதுதான்” என்று லிங்க் கொடுத்த பத்திரிகை அல்லவா அது? அதன் உரிமையாளர் குடும்பத்தை சேர்ந்த அந்துமணி ரமேசின் மீதே பாலியல் குற்றத்துக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கவில்லையா? வாரமலரில் பா.கே.ப வில் வரும் சேதிகள் பலவற்றின் நிறம் நீலமில்லையா?

பலான படங்களைக் காட்டியே ஹிட்ஸை அதிகரித்துக் கொள்ளும் தினகரன் வெப்சைட் பாலியல் குற்றம் பற்றி மூச்சு விடலாமா? அல்லது தங்கள் திருக்குவளை குடும்பத் தகராறுக்கு “தினகரன் குடும்பத்தை” சேர்ந்த ஊழியர்கள் மூன்று பேரை காவு கொடுத்துவிட்டு, அப்புறம் மாமாவும் மச்சானும் சமரசமாகி, மந்திரியாகிக் கொண்ட கும்பலுக்கு மனிதாபிமானம் பற்றிப் பேசும் அருகதை உண்டா?

பதிவுலகத்தையே எடுத்துக் கொள்வோம். கோவை சிறுவர்கள் கொலைக்காக இணைய உலகில் ஓடிய கண்ணீரை வைத்து சென்னை நகருக்கே ஒருநாள் தண்ணீர் சப்ளை செய்து விடலாம். ஏ ஜோக்குகள், அரை நிர்வாணப் படங்கள், 18+ பதிவுகள் போட்டு தமது ஹிட்ஸை கூட்டிக்கொள்ளும் பதிவர்களும், அவர்களது ரசிகர்களும் இப்போது மோகன்ராஜின் பாலியல் குற்றம் கண்டு கொதித்து எழுகிறார்கள். மெய் குற்றத்துக்கு என்கவுன்டர், மெய் நிகர் குற்றத்துக்கு?

கேட்டால், “நாங்கள் எல்லா என்கவுன்டரையும் ஆதரிக்கவில்லை. சின்னஞ்சிறுவர்களைக் கொலை செய்த கொலைகாரர்கள் என்பதனால், இந்த என்கவுன்டரை மட்டும்தான் ஆதரிக்கிறோம்” என்று ஜகா வாங்குவார்கள். சீரியலுக்கு அழுவது, இந்திரா காந்தி செத்தால் ராஜீவ் காந்திக்கு ஓட்டுப் போடுவது, ராஜீவ் காந்தி செத்தால் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடுவது, ஜெசிகா லாலுக்கு மெழுகுவர்த்தி கொளுத்துவது ஆகியவை அனைத்தும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவைதான். இந்த விசயத்தில் படித்தவனும் பாமரனும் ஒன்றுதான்.

“உணவுக்கிடங்குகளில் மக்கிமடிந்தாலும் அந்த தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாகத் தரமாட்டேன்” என்று கூறும் பிரதமரின் இரக்கமின்மையையும், கோவைக் கொலைகாரனின் இரக்கமின்மையையும் நாம் ஒப்பிட்டுப் பேசினால் அதை இந்தப் படித்தவர்களின் மனம் ஒப்புமா? நிச்சயம் ஒப்பதாது. “அதெல்லாம் குதர்க்கவாதம். மன்மோகன்சிங் சொல்வது ‘மாக்ரோ’ பாலிசி டெசிஷன். இது ‘மைக்ரோ’ அச்சாசினேஷன். ரெண்டும் எப்படி ஒண்ணாகும்?” என்று கேள்வி எழுப்புவார்கள்.

கொலையில் கூட பணக்காரன் ஏழை வித்தியாசம் பார்ப்பது வக்கிரமானது என்று சாடுவார்கள். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று வசை பாடுவார்கள். அப்படி வித்தியாசம் பார்த்து ஏழைக் குழந்தைகளின் சாவை அலட்சியப்படுத்துவதும், பணக்காரக் குழந்தைகளின் சாவுக்கு குடம் குடமாய் கண்ணீர் விடுவதும் யார் என்பதை அவர்கள்தான் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தலித், முஸ்லிம் மக்கள் மீதான படுகொலைகள், காஷ்மீர் படுகொலைகள், பட்டினிச்சாவுகள் போன்றவற்றுக்காக நாம் “இயல்பாக“ இத்தனை கோபத்துடன் குமுறி எழுந்திருக்கிறோமா, அவையெல்லாம் தமக்கு நேர்ந்தவை போலக் கருதி கண்ணீர் விட்டிருக்கிறோமா என்று அவர்களே சிந்தித்துப் பார்க்கவேண்டும். அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது மட்டும் நமக்கு வருகிறதே, அவ்வாறாயின் நமது “இயல்பு“ என்ன என்பதையும் அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.

மோகன்ராஜ் என்பவன் கேடியா, கிரிமினலா எங்களுக்குத் தெரியாது. அவன் எவனாக வேண்டுமானால் இருக்கட்டும். நீதிக்காகவும், வாழ்க்கைக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காக்கை குருவிகளைப் போல சுட்டு வீழ்த்தப்படுகிறார்களே, பட்டினியால் செத்து மடிகிறார்களே அது குறித்துத்தான் நாம் முதன்மையாக கவலைப்படவேண்டும். இப்படி எவனோ ஒருவன் சாவது குறித்து எங்களுக்கு விசேடக் கவலை ஒன்றும் இல்லை.

இப்பிரச்சினையில் கவலைக்குரிய விசயம் ஒன்றுதான். கோவை சம்பவத்தை முன்வைத்து தற்போது தமிழகத்தில் ஓடிக்கொண்டிருப்பது, 1980 களில் வெளிவந்த “இதுதாண்டா போலீசு” என்ற திரைப்படத்தின் ரீ மிக்ஸ். ஏற்கெனவே தட்டிக்கேட்க ஆளில்லாமல் தறிகெட்டு அலையும் போலீசுக்கு, “விசாரணையே இல்லாமல் சுட்டுத்தள்ளும் அதிகாரத்தையும் வழங்கவேண்டும்” என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வாசகப் பெருங்குடி மக்களும், பதிவுலக மேதைகளும் ஒரே ஒரு இரவை போலீசு லாக் அப்பில் கழிக்கும் பாக்கியத்தை இறைவன் வழங்க வேண்டும் என்பது மட்டும்தான் “எல்லாம் வல்ல எம்பெருமானிடம்” நாங்கள் செய்து கொள்ளும் பிரார்த்தனை.

மற்றப்படி இந்த மோகன்ராஜ் என்கவுன்டரின் விளைவாகத் தனது “கனவு கலைந்து” போன ஒரு ஜீவன் போயஸ் தோட்டத்தில் வருந்திக் கொண்டிருக்கிறது. அந்த தாயுள்ளத்துக்கு மட்டும் எங்கள் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி வினவு
http://www.vinavu.com/2010/11/10/kovai-encounter/

Monday, November 8, 2010

நவம்பர் -27 தமிழீழ மாவீரர் நாள்.

தமிழீழத் தேசியத் தலைமையின் வழிகாட்டலைத் தமிழினம்

ஏற்றுக் கொண்டது உண்மையானால்- அவரது சொல்லுக்குக்
கட்டுப்பட்டது உண்மையானால்……………….?

நவம்பர் -27 தமிழீழ மாவீரர் நாள்.

1989இல் தொடங்கிய இந்த மாவீரர்களைப் பூசிக்கின்ற வரலாறு
என்றென்றும் நீடிக்க வேண்டும்.

இதுவே தேசியத் தலைவரின் விருப்பம்- ஆணை.

முப்பதாண்டு காலப் போராட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான
மாவீரர்களைத் தமிழீழ மண் இழந்திருக்கிறது.

இவர்களின் இழப்பு தேசக் கட்டுமானத்துக்கான விதைப்பாகவே நாம்
கருதி வந்துள்ளோம்.

முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்காக இந்த
மாவீரர்கள் பட்ட துன்பங்கள்,துயரங்களை எவராலும் இலகுவில் புரிந்து
கொள்ள முடியாதவை. தெரிந்து கொள்ள முடியாதவை.

மரணத்தை எதிர்கொண்டு வாழ்ந்த பண்பும்- மரணத்துக்குச் சவால்
விட்டு இலக்கைத் தேடிய பண்பும் இவர்களுடையது.

தமிழ்மக்களின் விடுதலைக்காக உயிர் துறந்த இந்த மாவீரர்களைக்
காலம் காலமாக நினைவு கூர்ந்து பூசிக்க வேண்டியது தமிழீழத்தில் பிறந்த
அனைவரினதும் கடமை.

ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழ்மக்களைப் பாதுகாத்தும்-
அவர்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்தும்- எத்தனையோ விதங்களில்
அவர்கள் செய்து விட்டுப் போன பணிகளுக்காக நன்றிக் கடனைச் செலுத்தும்
நாள் தான் இந்த மாவீரர் நாள்.

வருடத்தில் ஒரு நாள் அவர்களை நாம் நினைவு கூர்ந்து- மணியெழுப்பி-
அவர்களுக்காக விளக்கேற்றி அஞ்சலிப்பது தான் எமது கடன்.

ஆனால் அந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்றத் தமிழினம் தவறிப்
போகுமோ என்ற அச்சம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது.

முள்ளிவாய்க்காலில் கடந்த வருடம் மே 19ம் திகதி நிகழ்ந்து விட்ட
அந்த வரலாற்றுச் சோகம் தமிழ் மக்களை திக்குத்திசை தெரியாமல் அலைய
விட்டுள்ளது.

தேசியத் தலைவரின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள இரண்டு
பட்ட நிலையின் காரணமாக மாவீரர் நாளை எப்படி நாம் நினைவு கூரப்
போகிறோம் என்ற கேள்வி எழுகின்றது.

தாயகத்தில் மாவீரர்களின் எந்தவொரு அடையாளச் சின்னத்தையும்
இல்லாமல் செய்து விடுவதில் சிங்களப் பேரினவாதம் வெற்றி கண்டுள்ளது.

தாயகத்தில் இருந்த அத்தனை மாவீரர்களின் நினைவாலயங்களும்
அழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக்கப்பட்டு விட்டன.

அங்கு மாவீரர்களை நினைவு கூருவதற்கு சிங்களப் பேரினவாத அரசு
ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.

இந்தக் கட்டத்தில் மாவீரர்களை நினைவு கூரும் பொறுப்பு
முழுவதும் புலம்பெயர் மக்களிடம் தான் உள்ளது.

மாவீரர்களின் வரலாற்றைக் கட்டிக் காப்பது தொடக்கம் மாவீரர் நாள்
பாரம்பரியங்களை அழிந்து விடாமல் காக்கும் பொறுப்பும் அவர்களுடையதே.

இதற்கு ஒன்றுபட்ட வேலைத்திட்டங்களே அவசியம்.

ஏட்டிக்குப் போட்டியான செயற்பாடுகள், அறிக்கைகளின் ஊடாக,
நாம் இதைச் சாதிக்க முடியாது- மாவீரர் நாளுக்குரிய பாரம்பரியத்தையும்
புனிதத்தையும் எம்மால் கட்டிக் காக்கவும் முடியாது.

இது வருடத்தில் ஒருமுறை வருகின்ற தேசியத் திருநாள்.

அதை அனைத்து புலம்பெயர் மக்களும் ஒன்றுபட்டு அனுஷ்டிக்க
வேண்டும் என்பதே முக்கியமான விடயம்.

இரண்டுபட்டு நின்று அறிக்கைகளை விட்டு மக்களைக் குழப்பும்
முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்குமேயானால்- அது மாவீரர்களைக்
களங்கப்படுத்த உதவுமே தவிர, மாவீரர்நாள் நிகழ்வுகளைச் சிறப்புற
நடத்துவதற்கு வழிசெய்யாது.

ஏற்கனவே தியாகதீபம் திலீபனின் நினைவு நாள், மாலதி நினைவு
நாள்,கடந்த வருட மாவீரர் நாள் போன்றவற்றின் போது பலதரப்பில் இருந்தும்
அறிக்கைகள் வெளியாகின.

இவை மக்களைக் குழப்பியதன்மூலம் மாவீரர்களை நினைவு கூரும்
புனித நிகழ்வுகளை கேலிக்குரியதாக்கவே உதவின.

இன்னமும் மாவீரர் நாளுக்கு மூன்று வாரங்கள் தான் உள்ளன.

இந்த நிலையில் புலம்பெயர் மக்களும் அவர்களை வழிநடத்தும்
தரப்பினரும் ஒன்றுபட்டு ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

மாவீரர் நாளை எப்படி யார் நடத்துவது என்று ஒரு தீர்மானத்துக்கு
வரவேண்டியது அவசியம்.

இங்கு பிரிந்து நின்று மோதிக் கொள்வதோ அல்லது மறைந்து
நின்று தாக்கிக் கொள்வதோ மாவீரர்களை ஒருபோதும் புனிதப்படுத்தாது.
அவர்களைக் அது களங்கப்படுத்தவே உதவும்.

அனைவரும் ஒன்றிணைந்து மாவீரர் நாளை அதற்குரிய சிறப்புடனும்
பாரம்பரியத்துடனும் நடந்தேற வழிசெய்வது தான் மாவீரர்களின் வழியில்
நடப்பதாகக் கூறிக் கொள்ளும் ஒவ்வொருவரினதும் வரலாற்றுக் கடமை.

தேசியத் தலைமையின் வழிகாட்டலைத் தமிழினம் ஏற்றுக் கொண்டது
உண்மையானால்- அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டது உண்மையானால்
இந்தமுறையில் இருந்தாவது மாவீரர் நாளை ஒன்றிணைந்து நடத்துவதற்கு
ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

பிளவுபட்டு நின்று மோதிக் கொள்வதன் மூலம் மாவீரர்களின்
அடையாளங்களைச் சிதைத்து விடாமல் பாதுகாக்க முடியாது.

அவர்களின் புனிதத்தைப் பேணும்வகையில் இந்த முறையில் இருந்து
ஒற்றுமையுடன் செயற்பட்டு மாவீரர்களை நினைவு கூர முன்வர வேண்டும்.

இதுதான் தமிழீழ மக்களின் விருப்பம்.

அதுமட்டுமன்றி தாயக மண்ணுக்காக தம்முயிர்களைக் கொடுத்த
ஆயிரமாயிரம் மாவீரர்களின் விருப்பமும் அதுவாகத் தான் இருக்க முடியும்.

தொல்காப்பியன்

Sunday, November 7, 2010

தமிழை காக்க கோரி - மத்திய அமைச்சர் ராஜாவுக்கு கருணாநிதி ஆங்கிலத்தில் கையெழுத்திட்ட கடிதம்தமிழ் நாட்டு முதல்வர் ஆங்கிலத்தில் கையொப்பம் இட்டு இருக்கிறார். தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முதல்வரே மதிக்கவில்லை என்றால்...

Saturday, November 6, 2010

கருணாநிதியை துரோகி என்று தமிழர்கள் அனைவரும் பச்சை குத்தி கொண்டனர்.ஒரு ஈழத்தமிழனாகிய நான் சிங்களவன் செய்த கொடுமைகளையும் தமிழினத்தின் வெளிப்படையான சில எதிரிகளையும் தேசத் துரோகிகளையும் நன்கு அறிவேன்.

மேலும் நான் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதாலாய் உங்களைப்பற்றியும் உங்கள் அரசியல் கட்டமைப்பு பற்றியும் செய்திகளிலும் தொலைக்காட்சிகளிலும்பார்ப்பதுண்டு.
இதுதவிர ஈழவிடுதலைப்பற்றி யாராவது தமிழகத்தில் குரல் கொடுத்தால் என்ன நடக்கும் என்று நன்கு அறிவேன்.

தமிழினத்தின் தலைவன் நான் என்று நீங்கள் தான் பிதற்றிக்கொள்கிறீர்களேதவிர யாரும் அதை ஏற்றுக்கொண்டதுபோல தெரியவில்லை அய்யா,,,,,,, வயோதிபரே தமிழீழம்
மலர்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால் அதை வெளிப்படையாய் சொல்லிவிடுங்கள்.

என் வெளிப்படையான எதிரி என நீங்கள் மார்பில் பாச்சும் வாளை தாங்கிக்கொள்ளும் சக்திஎனக்குண்டு. வாடா என் உறவே என வாயார வரவேற்று முதுகில் அல்லவா
அடிக்கிறீர்கள்நீங்கள் நினைத்திருந்தால் இவ்வளவு இழப்பை நாம் இழந்திருப்போமா ? என் தாயகம் தான் வீழ்ந்துபோயிருக்குமா??அப்படி என்னதான் செய்தான் ஈழத்தமிழன்.
பதவிக்காய் நாடகங்கள் பல ஆடி உண்ணாவிதரம் என்று எம்மை மடையனாக்கி, ஏன்?ஏன் ? இந்த கபட வேலை?? தள்ளாடும் வயதினில் பதவிக்காய் எவ்வளவு நாடகங்கள்அத்தனையும்
நாமறிவோம். நெஞ்சம் வலிக்கிறது நினைத்துப் பார்க்கும்போது.

வரலாறு நாளை காறித்துப்பாதா? பட்டமும் பதவியும் எத்தனை நாளைக்கு ? சற்று சிந்தித்து பார்த்து செல்லும்பாதையை மாற்றுங்கள். சோனியா அம்மையுடன் சேர்ந்து
என் இனத்தின் அழிவுக்கு அஸ்திவாரம் இட்டதுநீங்கள்தான். இதை மறுக்க எவராலும் முடியாது. உங்களை தமிழினத்தின் துரோகி என்று பாதிக்கப்பட்ட தமிழன்பச்சைகூட
குத்திவிட்டான் அவன் நெஞ்சினில். வரலாற்று தவறல்லவா செய்துள்ளீர்கள்.

பரவாயில்லை, ஆனால் ஈழவிடுதலையும் ஈழத்தமிழினமும் உங்களுக்கு பிடிக்காவிடின் அதை வெளிப்படையாக சொல்லிவிட்டு என் இனத்துக்கு எதிரியாகவே இருங்கள். நாங்கள் உங்களை
குறை கூறமாட்டோம். ஆனால்தேர்தல் காலங்களில் தமிழீழமே தமிழரின் தீர்வு, தேசியத்தலைவர் வே.பிரபாகரன் என் நெருங்கியநண்பர் எனகூறிவிட்டு மறுநாள் வந்து
எதிர்முனையாய் பேசுவதும் அவ்வப்போது தமிழக உணர்வாளர்கள் கொடுக்கும்அழுத்தங்களை சகிக்காது ஈழம் பற்றி சில அறிக்கைகளை விடுவதுமாய் வித்தைகளை காட்டுகிறீர்கள்

தயவு செய்து இவ்வாறான அறிக்கைகள் விடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் மிகவும் வேதனையாக உள்ளது.வெந்தபுண்ணில் வேலைப்பாய்ச்சாதீர்கள். ஈழம் என்ற அந்த புனிதமான
சொல் உங்கள் வாயிலிருந்து இனி வருவதை நான் விரும்பவில்லை. காரணம் உங்களை இனி என் சாதி நம்பாது. உங்கள் முகமூடி கிளித்து எறியப்பட்டுள்ளது

ஓர் அன்பான வேண்டுகோள். நீங்கள் துரோகி என்று வரலாற்றில் பதிவாகி வருடங்கள் ஆகிவிட்டது. இனிவரும்தேர்தல் காலங்களில் ஈழம் பற்றி பேசாதீர்கள். அது எம்மை
காயப்படுத்துவது மட்டுமல்லாது என் தாய்த்தமிழ் உறவுகளைமுட்டாளாக்கிவிடும்.

மேலும் நாங்கள் ஈழத்தில் பிறந்ததால் சிங்களவன் முற்றுகையில் பல உயிர்களை காவுகொடுத்து பல இழப்புகளையும் சந்தித்துவருகிறோம். ஆனால் என் தாய் தமிழகத்தின்
உறவுகள் ஏன் அடங்கி ஒடுங்கி வாழவேண்டும்.நட்டநடுக்கடலில் நாயைப்போல சிங்களகாடையர் என் உறவுகளை சுட்டுத்தள்ளியும் நீங்கள் பேசாதிருக்க காரணம்என்ன?
எங்கே என் பதவி போய்விடுமோ என்றா?

உங்கள் பதவியை தக்கவைக்க பச்சைத்தமிழனை இரையாக்காதீர்கள். செம்மொழி மாநாடு எல்லாம்நடத்தினீர்கள். அம் மொழியை பேசுவதற்கு கொஞ்சத் தமிழனையாவது
விட்டுவையுங்கள்.

தவிர உங்கள் தயவிலும் உங்கள் பெயரிலும் சில தொலைக்காட்சிகள் என் தாய் தமிழை கொண்று கலாச்சாரத்தையும்சீர்கெடுத்து வருகின்றன. இதைப்பற்றி எல்லாம் உங்களுக்கு
கவலை இல்லை. உங்கள் வங்கிக்கணக்கு நிரம்பிவிட்டால் போதும்.பாடசாலை வாயிலில் ஒட்டுப்பாவாடையுடன் ஒலிவாங்கியை கையில் ஏந்தியபடி புதிதாக வெளிவந்த
திரைப்படம்பற்றி விமர்சனம் கேட்பதை பார்க்கும்போது எதிர்காலம் என்னாகுமோ என வேதனையாய் உள்ளது.

இது எல்லாவற்றையும் வீட்டில் இருந்தபடி வேடிக்கை பார்க்கிறீர்கள். காவரியில் துடுப்பாட்டம் நடக்கிறது,வாயைத்திறக்க மறுக்கிறீர்கள். குடிநீரைக்கூட கொடுக்காத
நீங்கள் எங்கே தமிழனுக்கு விடிவைக்காட்டுவீர்கள்.தமிழக எதிர்காலம் அரசியல் சினிமா என்ற இரண்டு சாக்கடைகளில் மூழ்கிக்கிடக்கிறது. இதற்கு முழுப்பொறுப்பும்
நீங்கள்தான். தயவுசெய்து என் தமிழை வாழவிடுங்கள். எதிர்கால சந்ததிக்கு நல்ல வழியைக்காட்டுங்கள்.

மேலும் உங்களிடம் ஒரு கேள்வி. இந்திய இறையாண்மை என்றால் என்ன??அண்மையில் இயக்குனர் சீமானை கைதுசெய்தீர்கள். இதற்கான காரணம் என்ன? அப்படி என்னதான் அவர்
பேசினார்?தமிழக மீனவரை சிங்களவன் சுட்டால், சிங்களவன் யாரும் நலமாக இங்கிருந்து திரும்பி செல்ல முடியாது. மானமுள்ள மனிதனுக்கு வரும் யதார்த்தமான கோபமிது.
இதிலும் வேற்றுநாட்டவனைத்தான் குறிப்பிட்டு சொன்னார் சீமான்.

இதில் எப்படி உங்கள் இறையாண்மை கெட்டுவிடும். கறையான் பிடித்த உங்கள் இறையான்மை தமிழனைகொல்லும்போது கெட்டுவிடாதது ஏன் ? ஏன் இந்த கபடநாடகம் ?? தள்ளாத வயதில்
பதவிக்கும் பணத்திற்கும் இவ்வளவுபோராசையா??

நீங்கள் தாய்ப்பால் குடிக்கவில்லையா?? தாய் மண்மீது தடுக்கி விழுந்து முத்தமிடவில்லையா??நீங்கள் தமிழனா ?? இவை அனைத்தும் புரியாத புதிராக உள்ளது
எனக்கு.

அய்யா வயோதிபரே, எட்டிப்பாக்கும் அளவு எமன் உங்களை நெருங்கிவிட்டான். எனவே இன்று முதல் ஒரு தமிழனாய்இருங்கள். தமிழை வாழவிடுங்கள். கூண் விழுந்த தமிழ்
முதுகை நிமிரவிடுங்கள். கலைந்துபோன கலாச்சாரத்தைகாப்பாற்றுங்கள். கதறி அழும் ஏழைகளை காப்பாற்றுங்கள் .

ஈழ விடுதலை பற்றி அவ்வப்போது விடும் அறிக்கைகள் எம்மை காயப்படித்திய வண்ணமே உள்ளன. மானமுள்ள தமிழன்உங்கள் முன் மண்டியிட்டு நிற்கமாட்டான். இனிவரும்
காலங்கள் கட்டாயம் பதில் சொல்லும். உங்கள் கல்லறை மீது கூடகறையான் புற்றிருக்கும். அதிலும் கருநாகம் குடிகொள்ளும்.

கரிகாலன் சேனைகள் களமிறங்கும் காலம் வெகு விரைவில் !
இப்படிக்கு,
ஈழத்தாய் மைந்தன்
சங்கிலியன்

நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்...நவம்பர் புரட்சி! மகிழ்ச்சி!
சரி…. நாம் என்ன செய்யப் போகிறோம்?

தொழிலாளர் வர்க்கத்தின் துயரங்களுக்காக
அழாத விழிகள்….
தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றிக்காக
சிரிக்காத உதடுகள்…
தொழிலாளர் வர்க்க விடுதலைக்காக
இயங்காத இதயங்கள்…
இருந்தாலும் இறந்தனவே!

பிறப்பின் உருவத்தை
உன் கருப்பை தீர்மானிக்கலாம்
பிறப்பின் உணர்ச்சியை… இலட்சியத்தை
உன் கருத்துதான் தீர்மானிக்கிறது…
மனிதனாக வேண்டுமா? வா!
பாட்டாளி வர்க்க பக்கம்!

புரட்சியின் மகிழ்ச்சியை
துய்த்திட வேண்டுமெனில்,
புரட்சியின் வலிதனை உணர்ந்திட வேண்டும்!
புரட்சியின் வழிதனில் துணிந்திட வேண்டும்!

நீரலை எதிர்த்து… ஓர் இலைப்பற்றி
தன்னந்தனியாய் போராடிப் போராடி
கரைசேரும் சிற்றெறும்பின்
விடாப்பிடி வேண்டும்!

இடையில் ஆயிரம் இன்னல்கள் தாண்டி…
இல்லற முரண்களின் சுயநலம் தாண்டி…
உடன்வரும் தோழர்கள் அன்பினில் தோய்ந்து
முரண்படும் தோழமை இயங்கியல் அறிந்து
முற்றிலும் புரட்சியே சரியென உணர்ந்து
பற்றிடும் உணர்ச்சியில் பாதம் அழுந்து!
புரட்சியின் வேகத்திற்கு நீ பொருந்து! பொருந்து!
பார்! புரட்சியின் இனிமை புரியும் உனக்கு.

என்வேலை… என் சூழல்…
இனிய காதலி… மனைவி, மக்கள்
என தன்நிலை பார்த்து
வேலை செய்வதல்ல புரட்சி,
மக்கள் நிலையைப் பார்த்து
இப்போதே மாறவேண்டும் சமூகம் என
தன்னிரக்கம் தகர்த்து
வேலை செய்வதே புரட்சி!

அய்வகை நிலமும், செய்தொழில் அனைத்தும்
உன் கண்ணெதிரே அழிகிறது!
அந்நிய மூலதனத்தின் நச்சுச்சூழலில்
நம் அன்னையின் மார்பில் சுரக்கிறது,
குரோமியமும், காரியமும்.
மான்சான்டோ மலட்டு விதைகளால்
இந்தியத் தாய்களின் கருப்பையும்
இனி தரிசாக…
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்…. வெண்டைக்காய்…
மன்மோகன்சிங்…. ப.சிதம்பரம்…
இந்த வரிசையில் உன்னையும் சேர்க்க சம்மதமா?

நவம்பர் புரட்சியோடு அடையாளப்படுத்திக்கொள்ளும்
உன்னையே நம்புகிறது ஊர், உலகம்.
உறியப்பட்ட இயற்கை வளங்களின்
அரசியல் புரியாமல்…
ஒரு வாய் தண்ணீருக்காக
உன் வாசல் வந்து கத்துகிறது மாடு!

ஓசையற்ற தறிக்கட்டைகளின்
உள்சோகம் நீ உணராவிட்டால்,
கடைசியில் உன் இதயமும்
செல்லரித்துப் போகலாம்!

கயர்லாஞ்சியிலோ… கடலூர் பக்கத்திலோ
சிதைக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின்
‍போராட்ட உணர்ச்சியோடு பொருந்தாதவருக்கு
நவம்பர் புரட்சியின் நல்லிசை சொந்தமில்லை!

குறுஞ்செய்தி… பரிமாற்றம்…. மகிழ்ச்சி…
விழா இரைச்சலுக்கிடையே… விட்டுவிடாதே!
‘நோக்கியா கட்டிங் மிசினில்’ பணிக்கொலையான
தொழிலாளி அம்பிகாவின் துடிதுடித்த குரல்
உனக்கு கேட்கிறதா?
நச்சரிக்கும் அந்தத் தோழியின் குரல்
இந்த நவம்பர் புரட்சியில் உன்னிடம் வேண்டுவது,
முதலாளித்துவக் கொலைக்களங்களுக்கு எதிராக
ஏதாவது செய் என்பதல்ல…
புரட்சிக்குக் குறைவாக
வேறெதுவும் வேண்டாம் என்பதே!

விழா மகிழ்ச்சியில்…
இந்த வேண்டுகோளை விட்டுவிடாதே,
செய்… வேலை நிறைய இருக்கிறது…
புரிந்துகொள்!
புரட்சியின் பணிச்சுமை ஏற்பவர் எவரோ?
புரட்சியின் மகிழ்ச்சிக்கு
உரியவர் அவரே!

—துரை.சண்முகம்

மாவீரர் பாடல்-தாயக கனவுடன் சாவினை தழுவிய...

Friday, November 5, 2010

'சுத்தம் சுகம் தரும்'-வழிகாட்டும் யுஏஇ தமிழ்ச் சங்கம்!தூய்மை எனும் நம் தமிழ் சொல் தன்னை அழகு, அமைதி, ஆரோக்கியம் என பல வகைகளில் மெருகேற்றுகிறது. சுத்தத்தின் அவசியம் அறிந்து, நமது யுஏஇ தமிழ்ச்சங்கம் ஆற்றிய ஒரு நிகழ்வின் பதிவே இது.

துபாய் முனிசிபாலிட்டி, யுஏஇ தமிழ்ச் சங்கம், மற்றும் மலையாள சங்கமும் இனைந்து அக்டோபர் மாதம் 29ம் தேதி மிக பிரம்மாண்டமான CLEAN UP THE WORLD CAMPAIGN 2010 என்ற நிகழ்ச்சியை வெகு சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடித்தன.

காலை 8.30 மணிக்கு துவங்கி மதியம் 12:00 மணிக்கு முடிவடைந்த்து. இதில் சுமார் 15,000 மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

யுஏஇ தமிழ்ச்சங்கம் சார்பாக சுமார் 400 க்கும் மேற்ப்பட்டோர் நடந்த Clean up the World Campaign 2010 ல் கலந்து கொண்டது மிக சிறப்பாகவும், பெருமையாகவும் இருந்தது.

மேலும் அன்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில் வந்த மக்களில் அதிக குடும்பமாக வந்தது யுஏஇ தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்கள் தான் என்பதில் யுஏஇ தமிழ்ச்சங்கம் மிகவும் பெருமை அடைகிறது.

நிகழ்ச்சியில் 2 மாத மழலையும் (ஜொனார்தன் பிராஸ்பர்) கலந்து கொண்டது நெகிழ்ச்சியின் உயரம்.

பங்கு பெற்ற அனைவருக்கும் துபாய் முனிசிபாலிட்டி T-Shirt, Cap, Gloves வழங்கியது.

துபாய் முனிசிபாலிட்டி நிகழ்ச்சி ஆலோசகர் யுஏஇ தழிழ்ச் சங்கத்தின் பங்கு அளிப்பை பாராட்டி ஒரு நினைவு பரிசையும் வழங்கி, கலந்து கொண்ட அத்துனை குடும்பத்திற்க்கும், குழந்தைகளுக்கும் நன்றி பாராட்டினார்.

இத்தகைய சீரிய பணியை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் மேலும் வருகின்ற துபாய் முனிசிபாலிட்டி நடத்தும் எல்லா நிகழ்ச்சியிலும் யுஏஇ தமிழ்ச்சங்கத்திற்க்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார்.

ஒரு கை தட்டினால் ஓசை வருமா, இத்தகைய பெருமையும் வெற்றியும் வாய்த்தது நம் இணைந்த கைகளால். வாரத்தில் ஒரு தினம் மட்டும் (வெள்ளிக்கிழமை) விடுமுறை கிடைக்கின்ற போதும் அந்த வெள்ளிக்கிழமையில் உங்களுடைய எல்லா நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்துவிட்டு துபாய் முனிசிபாலிட்டியும், யுஏஇ தமிழ்ச்சங்கமும் இனைந்து நடத்திய Clean up the World Campaign 2010க்கு எங்களுடைய அழைப்பை ஏற்று வந்த ஒவ்வொருவருக்கும் மிக்க நன்றி.

Wednesday, November 3, 2010

பூமியை பாயாக சுருட்டிய அசுரன் அழிந்த நாளே தீபாவளி -அது தமிழர் விழாவா? புறக்கணியுங்கள் கொண்டாடுபவர்கள் படு முட்டாள்கள்

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள்.

என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்! இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள். அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை – விரதம், நோன்பு – உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள். இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி – யார் – எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்? நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் – பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்? தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது) 1.

ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்

. 2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள். 9.

இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது? பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்? இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது.

இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்? இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காஸ்நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும்

, நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது? சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

-தந்தை பெரியார்

Tuesday, November 2, 2010

தீபாவளி கொண்டாடும் தமிழர்களின் சிந்தனைக்கு.இவ் வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப்போகின்றீர்கள்? “அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை” என்று சொல்லி விடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையைக் கொண்டாடப்போகின்றீர்களா? என்பது தான் “நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்” என்று கேட்பதின் தத்துவமாகும்.

நண்பர்களே! சிறிதும் யோசனை இன்றி யோக்கியப் பொறுப்பின்றி உண்மைத் தத்துவமின்றி சுயமரியாதை உணர்ச்சி இன்றி சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல் மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரசாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே யல்லாமல் மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும், ஜீவனற்ற தன்மையான “பழய வழக்கம்” “பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம்” என்கின்றதான வியாதிக்கு இடம் கொடுத்துக் கொண்டு கட்டிப்போடப்பட்ட கைதிகளைப்போல் துடிக்கின்றீர்களே யல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்தரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்க தயாராயிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் பகுத்தறிவைச் சிறிது கூட பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பனரல்லாதார்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராணப் புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று மானமற்று கால்வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றேன்.

புராண கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள்; அதன் ஊழலை எடுத்துச்சொன்னால் காதுகளைப் பொத்திக்கொள்ளுகின்றீர்கள். “எல்லாருக்கும் தெரிந்தது தானே; அதையேன் அடிக்கடி கிளறுகின்றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா?” என்று கேட்கின்றீர்கள். ஆனால் காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி, மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர் களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்? எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும், நேரச்செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப்புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய் கோபிப்பதில் என்ன பிரயோஜனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச்சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? “நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்” என்றால் அதற்கு “நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்” என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?

அன்பர்களே! சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப்பண்டிகையை பார்ப்பனரல்லாத மக்களாகிய நீங்கள் 1000க்கு 999 பேர்களுக்கு மேலாகவே எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள். துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்து துணிவாங்குவது என்பது ஒன்று; மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுவுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்த மற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்மந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பார்ப்பனர் உள்பட பலர் இனாம் பிச்சை என்று வீடு வீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம்வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும், செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது ஐந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச்செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும் வீணாக்குவதும் ஆறு; இந்தச் செலவுகளுக்காகக் கடன் படுவது ஏழு.

மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காக கடன்பட வேண்டியிருக்கின்றது என்பதும் பட்டாசு வெடி மருந்து ஆகியவைகளால் அபாயம் நேரிட்டு பல குழந்தைகள் சாவதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும் தீபாவளி பண்டிகை என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்கின்ற தான விஷயங்களுக்கு சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

ஏனெனில் அது எப்படிப்பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம் இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய் யென்று ஒப்புக்கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தீபாவளிப்பண்டிகையின் கதையில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது அல்லது இவர்கள் சம்மந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்தமாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதார்கள், தங்களை ஒரு பெரிய சமூகக்காரர்களென்றும் கலைகளிலும் ஞானங்களிலும் நாகரீகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப்பேச ஆளில்லாவிடங்களில் சண்டப்பிரசண்டமாய்ப் பேசி விட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ “காளை மாடு கன்றுப் போட்டிருக்கின்றது” என்றால் உடனே “கொட்டத்தில் கட்டி பால் கறந்து கொண்டுவா” என்று பாத்திரம் எடுத்துக்கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும் பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கின்றோமே ஒழிய “காளைமாடு எப்படி கன்றுப் போடும்” என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களை விட பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத்தனமாகவும் பட்டணங்களில் இருப்பவர்களை விட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூட சிகாமணிகளாகவும் இருந்து வருவதை பார்க்கின்றோம்.

உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூஜை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, கிர்த்திகை முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்திரங்களை விட நகரங்களில் அதிகமாகவும் மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக, ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாதவர்களாகவேயிருக்கின்றார்கள். சாதாரணமாக மூட பக்தியாலும், குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ் நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில் இன்றைய தினம் சென்னையில் எங்கு போய் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத்திண்ணையிலும் சரீரமில்லாத ஒருதலை உருவத்தை மாத்திரம் வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயணக் காலக்ஷேபங்களும், பெரிய புராண திருவிளையாடல் புராணக் காலக்ஷேபங்களும் பொது ஸ்தாபனங்கள் தோறும் சதா காலக்ஷேபங்களும் நடை பெறுவதையும் இவற்றில் தமிழ் படித்த பண்டிதர்கள், ஆங்கிலம் படித்த பட்டதாரிகள், கௌரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம்.

பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார்கள் தான் “ஆரியர் வேறு தமிழர் வேறு” என்பாரும் “புராணங் களுக்கும் திராவிடர்களுக்கும் சம்மந்தமில்லை” என்பாரும் தீபாவளி வைணவப் பண்டிகை ஆனதால் சைவனுக்கு அதில் சம்பந்தமில்லை என்பாரும் பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு “நாங்கள் தான் பிரதிநிதிகள்” என்பாரும் மற்றும் “திராவிடர்களின் பழைய நாகரீகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு” மென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே இது போன்ற “படித்த” கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்மந்தமான காரியங்களை எதிர்பார்ப்பதைவிட, உலக அறிவுடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதும், பிரசாரம் செய்வதும் பயன் தரத்தக்கதாகும்.

உதாரணமாக, ராமேஸ்வர தேவஸ்தானக் கமிட்டியாரின் ஒரு ரிபோர்ட் டில் மக்கள் ராமேஸ்வரத்திற்கு முந்திய வழக்கம் போல் இப்போது யாத்திரைக்கு வருவதில்லை என்றும் அதனால் வரும்படி குறைந்து விட்ட தென்றும், அதுபோலவே திருப்பதி மகந்து அவர்களின் ஒரு வருஷாந்திர ரிப்போர்ட்டில் அவ்வருஷம் திருப்பதிக்கு யாத்திரைக்காரர்கள் மிகக் குறைந்து போய் அதனால் கோவிலுக்கு முந்திய வருஷங்களைவிட பகுதி வரும்படிகூட எதிர்பார்க்க முடியாததாய் இருப்பதாகவும் குறிப்பிடப் பட்டிருப்பதனாலும், சங்கராச்சாரியார், ஜீயர் முதலிய மடாதிபதிகள் செல்லுகின்ற பக்கங்களில் எல்லாம் முன்போல் வரவேற்பு ஆடம்பரங்களும் வரும்படியும் இல்லாமல் சீக்கிரம் சீக்கிரமாக சஞ்சாரத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்புவதிலிருந்தும் பிராமண மகாநாடுகளும் சமயப் பத்திரிகைகளும் மூட்டை கட்டப்படுவதிலிருந்தும் ஒரு விதத்தில் பாமர மக்களிடை உண்மை உணர்ச்சி பரவி இருக்கின்றதென்பதை உணர முடிந்தாலும், வழிகாட்டிகளென்றும் தலைவர்களென்றும் பொது ஜனங்களின் தர்மகர்த்தாக்களென்றும் படிப்பாளிகள் என்றும் தங்களை சொல்லிக் கொள்ளுபவர்களுள் அநேகமாக சிறிது உணர்ச்சிகூடக் காணாமலிருப்பதால் அவர்களைப்பற்றி நாம் வருந்தாமல் இருக்க முடியவில்லை.

எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகிறேன்.

அன்றியும் இத்தீபாவளிக் கதை எவ்வளவு பரிகாசத்திற்கு இடமா யிருக்கிறதென்பதையுணரும் பொருட்டு அதனையும் கீழே தருகிறேன்.

தீபாவளியின் கதைச் சுருக்கம்

ஆதிகாலத்தில் நரகாசூரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். அவன் வராக அவதாரத் திருமாலுக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். அவன் தேவர்களை யெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம். தேவர்கள் இதைப்பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம். உடனே திருமால் நரகாசூரனைக் கொல்லுவதாக வாக்களித்தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும் பூமி தேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்து நரகாசூரனைக் கொன்று விட்டார்களாம். நரகாசூரன் சாகும்போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாடவேண்டுமென்று கேட்டுக் கொண்டானாம். கிருஷ்ணன் அப்படியே ஆகட்டுமென்று வாக்களித்தாராம். அதற்காகவேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்படி கடவுள் செய்து விட்டாராம். ஆதலால் நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டுமாம். இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்ப்போம்.

முதலாவது இந்தக் கதை உண்மையாய் இருக்கமுடியுமா? “எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான்முகனைப் பெற்றவரும், உலகங்களையெல்லாம் காத்து வருபவரும் தேவர்கள் தலைவருமாகிய திருமாலு”க்கும் பூமி “தேவி”க்கும் (எப்படி குழந்தை பிறக்கும்? பூமி “தேவி” என்றால் உலகம் அல்லவா? அப்படித்தான் பிறந்தவன்) அவன் எப்படி அசுரன் ஆனான்? அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச் செய்தான்? அப்படித்தான் செய்தாலும் அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்? அப்படியிருந்தாலும் தானே வந்துதான் கொல்லவேண்டுமோ? மேற்படி நரகாசுரனைக் கொன்றபோது அவன் தாயாகிய பூமிதேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது.

என்னே தாயின் கருணை! இவள்தான் உலகத்தை யெல்லாம் காப்பாற்றுகிறாளாம்! உலக மக்கள் செய்யும் பாவங்களை யெல்லாம் பொறுத்துக் கொள்ளுகின்றாளாம்! “பொறுமையில் பூமிதேவிபோல்” என்று உதாரணத்திற்குக் கூட பண்டிதரும் பாமரரும் இந்த “அம்மையாரை” உதாரணமாகக் கூறி வருகின்றனரே! இத்தகைய பூமி தேவியார் தனது மகனைக் கொல்லும்போது தானும் உடனிருக்கவேண்டுமென்று திருமாலைக் கேட்டுக் கொண்டாராம்! என்னே தாயின் கருணை!!

தமிழர்களாகிய நம்மையே அசுரர்களென்றும் ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர்களென்றும் கற்பித்துக் கதை கட்டியிருக்கிற தேவஅசுரப் போராட்டத்தோடு சம்மந்தப்பட்டிருக்கிற இந்தக்கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம்! அந்தோ என் செய்வது? நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர் கட்டுக்கதையை உண்மையென நம்பி நாமே கொண்டாடி வீண் செலவு செய்வதென்றால் நமது சுயமரியாதையை என்னென்பது? நமது பகுத்தறிவை என்னென்று சொல்லுவது?

புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக்கொண்டு தமது பகுத்தறிவையிழந்து இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது?

சென்றது போக, இனிமேல் கொண்டாவது தீபாவளியை அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக்கொள்ளும் செயலைக்குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிஷ நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

————————

- ஈ.வெ.ரா.

குடி அரசு கட்டுரை 01.11.1936

பிரான்சில் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் சிலை திறப்புபிரான்சு நாட்டு மக்களுக்கு முக்கியமாக கருதப்படும் புனிதர் அனைவரின் பெருவிழா நாளான நவம்பர் 1 அன்று பிரான்சில் தமிழ்மக்கள் அதிகமாக வாழ்கின்ற இடங்களில் ஒன்றான லாக்கூர்னோவ் என்னும் இடத்தில் தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சிலை திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

லாக்கூர்னோவ் மாநகரசபை வளாகத்தின் அருகமையில் 01.11.2010 திங்கட்கிழமை மதியம் 13.00 மணிக்கு மாவீரர் பிரிகேடியர் தமிச்செல்வனுக்கும், அவருடன் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டன. ஈகைச்சுடரினை தமிழ்ச்செல்வனின் சிறியதாயார் ஏற்றி வைக்க தமிழே உயிரே வணக்கப்பாடல் நடனம் நடைபெற்றது அதனைத்தொடர்ந்து தமிழ்ச்செல்வன் பற்றியும் சமாதானத்தின் புறாவாக சர்வதேசமெங்கும் திரிந்ததையும் சர்வதேச ராஐதந்திரிகள் உட்பட அரசியல்வாதிகள் பலவற்றை சந்தித்தது பற்றியும் தமிழீழத்தின் நிலவரங்கள், தமிழ்மக்களின் அரசியல் நிலைப்பாடுகள் பற்றியும் தெரிவித்திருந்ததையும் மாபெரும் இனவழிப்பை நடாத்த சிங்கள அரசு தயாரிப்பில் ஈடுபட்டுவருதும் பல்லாயிரக்கணக்கான் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்படப்போகின்றார்கள் என்பதையும் எடுத்துக்கூறிவந்ததையும் அவர் கூறியது போன்று இன்று எமது மண்ணில் மாபெரும் இனப்படுகொலை நடந்தேறியதையும் இதற்கான தயாரிப்பில் ஒரு நடவடிக்கையே தமிழ்ச்செல்வன் வீமானக்குண்டு வீச்சால் கொல்லப்பட்டதும். 2007 ம் இதே காலப்பகுதியில் தமிழ்ச்செல்வன் இங்கு வருகை தர இருந்ததையும் தெரிவிக்கப்பட்டது.

தமிழில் லாக்கூர்னோவ் தமிழ்ச்சங்க தலைவர் உரையாற்றியதும், பிரெஞ்சு மொழியிலும் இன்னும் சற்று விரிவாக உரையாற்றப்பட்டது. திறான்சி, தமிழ்ச்சங்க மாணவியர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் மாவீரர்களின் நினைவுப்பாடலுக்கு நடனம் வழங்கிய போது பல மக்களின் கண்கள் குழமாகிப்போனதும், கண்ணீர்விட்ட காட்சி மக்கள் நெஞ்சில் இவர்களின் நினைவு எவ்வளவு தூரம் உள்ளது என்பதை காணக்கூடியதொரு காட்சியாக இருந்தது.

இத்துடன் சிலையை வடித்து தந்த பிரஞ்சுப்பெண்மணி தமிழ்ச்செல்வனின் படத்தை மட்டும் வைத்து அல்லாமல் நண்பர்கள் அவர் பற்றி கூறிய செய்திகள் குணாதியங்கள் பற்றி கூறியதையும் வைத்தே தான் மனதில் ஒரு கற்பனையை அவர்பற்றி வளர்த்துக்கொண்டதாகவும் அதன் வடிவமே இது என்று கூறினார்.

லாக்கூர்னோவ் மற்றும் ஒபவில்லியே என்ற அயல்கிராமத்தை சேர்ந்த உதவி முதல்வர்கள் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர். இன்னும் பல்வேறு நாட்டைச்சேர்ந்தவர்களும் உரையாற்றியிருந்தனர். அவர்களின் கருத்துக்கள் சமாதானமும், அமைதியும், எவ்வளவோ முக்கியமானது என்றும் அதே நேரத்தில் அடிமைநிலையற்ற சுதந்திரமான வாழ்வும் ஒவ்வொரு மனிதனுக்கும், இனத்திற்கும் முக்கியமானது என்றும், அல்ஐpரியா நாட்டு நண்பர் ஒருவர் உரையாற்றும் பொழுது தம்முடைய மண்ணிலும் இவ்வாறானதொரு நிகழ்வு நடைபெற்றது என்றும் தாமும் எத்தனையோ இழப்புகளின் பின்பே சுதந்திரமடைந்துள்ள இனமாக உள்ளோம் என்றும் இவ்வாறானதொரு நிகழ்வில் கலந்து கொள்வதானது தனக்கு பெருமை தருகின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் பிற்பாடு பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் சிலையை அவரை இரண்டு தடவை தாயகத்திலும், பின்னர் பேச்சுவார்த்தையின் போது சந்தித்து கொண்டவரும் லாக்கூர்னோவ் நகரசபை உறுப்பினரும், தமிழ்மக்களின் நண்பருமாகிய திரு. அந்தோனியோ ருசெல் அவர்கள் பலத்த கரகோசத்திற்கு மத்தியில் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து பலநூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையாக நின்று மாவீரர்சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தினர். அரசியல்வாதிகள் பலர் கட்சிபேதமின்றி கலந்து கொண்டதோடு இதுவொரு அரசியல் பிரச்சாரமாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு மனிதநேய நடிவடிக்கை என்றும் கூறினர். நந்தியார் தமிழ்சங்க மாணவியர்கள் எழுச்சி நடனங்கள் வழங்கியிருந்தனர்.

சிலை செய்த பிரெஞ்சுப்பெண்மணிக்கு தமிழ்ச்சங்கம் நடராஐர் சிலை கொடுத்து மதிப்பளித்தனர். இந்த சிலை திறப்பிற்கு பொருளாதரா உதவி செய்த அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றியை சங்கத்தினர் தெரிவித்தனர். மாலை 17. 00 மணிவரை மக்கள் இந்த நிகழ்வுக்கு வந்துகொண்டிருந்தனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ்மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளருக்கு சிலை வைக்கும் நிகழ்வை தடுப்பதற்கு பல்வேறான நடவடிக்கையை சிறீலங்கா அரசானது தனது தூதரகத்தின் ஊடாக பிரான்சு நாட்டிற்கு கொடுத்திருந்ததும் இதற்கு சில கோடாலிகாப்புகள் துணைபோயிருந்ததும், சிங்களவர் சிலர் அடாவடித்தனங்களை மேற்கொண்டிருந்த போதும் இன்று உயிர் ஈந்த சமாதானப்புறாவுக்கு சிலை எழுப்பியும், தாயகத்தில் மனிநேயமற்ற கொடிய அரசாட்சியில் எமது மாவீரர்கள் துயிலும் இல்லமும், அவர்கள் உடல்களும் அழிக்கப்படும் வேளை புலம்பெயர் மண்ணில் மனிதநேயமிக்கவர்களால் அந்த மாவீரர்களுக்கு சிலையும், நினைவுச்சின்னங்களும் வைக்கபடுவது பெருமை கொள்கின்ற அதேவேளை பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் வரலாற்றில் மீண்டும் மற்றொரு பதிவையும் இன்று பதிவாக்கிக் கொண்டுள்ளனர்.

Monday, November 1, 2010

அண்ணா நீ சிரித்தே மறைந்தாய்... உன்னை நினைக்கையில் எல்லாம் எங்களை அழவிட்டு...பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன்
பிறப்பு 1967
இறப்பு நவம்பர் 2, 2007
கிளிநொச்சி
வேறு பெயர்கள் தினேஸ்
அறியப்படுவது அரசியல்
தொழில் புலிகளின் போராளி, அரசியற் துறைப் பொறுப்பாளர்
சு. ப. தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்து இறப்பின் போது புலிகளின் தலைமையின் உள்வட்டத்தின் ஒருவராக செயற்பட்டார்.

1987 இல் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராகவும் 1991 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார். 1993 இல் கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் இலங்கை இராணுவத் தளம் மீதமான தவளைப் பாய்ச்சல் என்கிற விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கையில் போரில் காலில் காயமடைந்ததைத் தொடர்ந்து அரசியற் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்; 2007 நவம்பர் இலங்கை வான்படையின் தாக்குதலில் கொல்லப்படும் வரை அப்பதவியில் இருந்தார். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் பகிரங்க முகமாக செயற்பட்டு இராணுவ இயக்கமாக இருந்த புலிகள் இயக்கத்தில் அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்தி வந்த்தார். புலிகளின் சமாதானப் பேச்சுவாத்தைகளில் பங்கேற்று வந்த இவர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். 23 ஆண்டுக் கால இயக்க வாழ்வைக் கொண்ட இவரின் இறப்பு புலிகளால் ஈடு செய்யப்பட முடியாது என பிபிசி கருத்து வெளியிட்டுள்ளது.

வாழ்க்கைச் சுருக்கம்

தமிழ்ச்செல்வன் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரியில் பிறந்தார். இவர் தனது கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் பயின்றார். 1984 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து இந்தியாவில் ஆயதப் பயற்சி பெற்றார்.

1993 இலிருந்து இறக்கும் வரை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்டார். நோர்வே அனுசரணையில் இலங்கை அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் அதியுயர் அரசியற் தலைவரானார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரிகேடியர் தரத்துக்கு அவர் நிலையுயர்த்தப்பட்டுள்ளார்.

அரசியற் செயற்பாடுகள்

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப்பெற்று தமிழகத்தில் வே. பிரபாகரனின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.
1986 இல் வே.பிரபாகரன் தமிழகத்திலிருந்து ஈழம் வருவதற்கு முன் ஈழத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் வே. பிரபாகரனுடன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.

தமிழகத்திலிருந்து திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.
1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.
1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.
1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.
2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.

படைத்துறைச் செயற்பாடுகள்

1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கை
1992 இல் சிறிலங்கா படையினரின் "பலவேகய - 02" எதிர்ச்சமரிலும்
தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்
காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்
1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.
ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் காயமடைந்தார்.
பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் காயமடைந்தார்.
ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.
மறைவு

2007, நவம்பர் 2 காலை ஆறு மணியளவில் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஐந்து விடுதலைப் புலிகளுடன் கிளிநொச்சியில் இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.[3]. தமிழ்ச்செல்வனுக்கு, அவரது மனைவி, எட்டு வயது மகள், மற்றும் நான்கு வயது மகன் ஆகியோர் இருக்கின்றனர்.[1]

சு. ப. தமிழ்ச்செல்வனின் இறுதி உரை

“ தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றோம். ”
நன்றி:விக்கிபீடியா