Saturday, November 13, 2010

தங்கபாலுவின் ஜாமீன் பயணங்கள் -கடலூரில் தொடங்கி திண்டிவனத்தில் முடிந்த கதை? - டாக்டர் மாசிலாமணியின் காட்டமான அறிக்கை .



தங்கபாலுவின் ஜாமீன் பயணங்கள் -கடலூரில் தொடங்கி திண்டிவனத்தில் முடிந்த கதை? - டாக்டர் மாசிலாமணியின் காட்டமான அறிக்கை .

மதிமுக பொருளாளரும், திண்டிவனம் பிரபல மருத்துவரும் ஆன, மாசிலாமணி தங்கபாலுவை பற்றி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதன் விவரங்கள் வருமாறு :

இலங்கையில் நடந்தது தமிழின அழிப்பு. இதனைப் போர் என்று குறிப்பிடுவது மிகப்பெரும் இழுக்கு. உலகில் பல நாடுகள் சிங்கள ராணுவத்தின் தமிழின அழிப்பை மனித உயிர்களாகக் கூட கருதாமல் கொன்று குவித்த கொடிய செயலைக் கண்டித்து வருகின்றன. இராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி மனித நேய அமைப்புகள் உலகம் முழுவதும் குரல் கொடத்தும் வருகின்றன.

இத்தகைய கொடிய செயலுக்கு உதவியதே இந்தியாதான் என்று இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் நன்கு அறிவார்கள். ஆயுதங்களையும், அதனை இயக்கும் தொழில் வல்லுநர்களையும் தமிழரகளை கொன்று குவிக்க சிங்கள இராணுவத்திற்கு உதவியாக அனுப்பியது இந்திய அரசு என்பதை உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் அம்பலப்படுத்தின.

இந்த நிலையில் திருமதி சோனியாவும், தமிழத்தின் இன்றைய முதல்வர் கருணாநிதியும் நடத்திக் கொண்ட கடிதப் போக்குவரத்து தொலைபேசி உரையாடல் எதற்காக என்பதை மட்டுமல்ல முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் மகாத்மா காந்தியடிகளின் அகிம்சை போராட்டத்தை அவமானமடையச் செய்தது என்பதை உண்மையான காந்தியின் காங்கிரஸ் வழி வந்தவர்கள் அறிவார்கள்.

ஜனநாயக மீட்புக்காக மிசாவில் இலங்கைத் தமிழர் நலனுக்காக கருத்துரிமை காத்திட தடா, பொடா என்றும், தமிழகத்தின் வாழ்வு ஆதாரங்களை காக்கும் போராட்டங்கள் பலவற்றிலும் மக்கள் நலனுக்காக பலமுறை கைது செய்யப்பட்டு நீண்ட நாள் சிறைவாசம் செய்தவர் கழகப் பொதுச்செயலாளர் வைகோ. அது மட்டுமல்ல, சிங்கள் வெறியர்களால் தாக்கப்பட்டு கை, கால்கள் ஊனமாகி வந்த தமிழர்களுக்கு மருத்துவ சிகிச்சையளித்த மனித நேய செயலுக்காக கழகப் பொதுச் செயலாளரின் தம்பி இரவிச்சந்திரன் தடாவில் இருந்ததும் நாட்டு மக்கள் அறிவார்கள்.

இந்திய வரலாற்றில் இத்தகைய பெருமை பண்டிதர் ஜவஹர்லால் நேருவிற்குப் பிறகு அரசியல் காரணங்களுக்காக அதிக நாள் சிறைவாசம் செய்தவர் என்கிற வரலாற்றுப் பெருமை வைகோ அவர்களுக்கு மட்டுமே உண்டு.

தமிழர் நலுனுக்காக இலங்கையில் அன்றாடம் சாகும் தமிழரின் வாழ்வுரிமையை காப்பாற்றிட வேண்டுமென்றபதற்காக தனது அரசியல் பயணத்தில் தொடக்கக் காலம் முதல் இன்று வரை எவ்வித சமரசமுமின்றி தியாகத்துடன் பயணிப்பவர் வைகோ. சமீபத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கக் கோரி தீர்ப்பாயத்தின் முன்பு வழக்கறிஞராக வாதாடி உலகத் தமிழர்களின் முன்பு தலைநிமிர்ந்து நிற்கும் உண்மைத் தமிழன் வைகோ என்பதை நாடறியும், உலகத் தமிழர்கள் அறிவார்கள்.

மக்களையும் சந்திக்காமல், மக்கள் நலனுக்காகப் போராடாமல் குளுகுளு அறையில் அமர்ந்து கொண்டு குறுக்கு வழியில் பதவி நாற்காலியில் தங்கபாலு போன்றவர்கள் கசங்காத கதர் சட்டையுடன் காலத்தைக் கழிக்கின்ற நபர்களுக்கு வைகோ என்ற பெயரைக் கூட உச்சரிக்கும் தகுதி கிடையாது.

வெற்றி வரும், போகும். ஆனால், இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் போனால் வருமா? என்பதைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் இழப்பு பற்றிக் கூறிடும் தங்கபாலு காங்கிரஸ் கட்சிக்காக இழந்தது என்ன? அதன் வளர்ச்சிக்காக செய்த தியாகம் என்ன? என்று அவரது கட்சியினரே அன்றாடம் கேள்வி கேட்டு வரும் நிலையில் பதவிக்காக இன்றுவரை ஆசைப்படாத ஒரே தமிழினத் தலைவர் வைகோ அவர்களை விட்டால் வேறு யாரைக் குறிப்பிட முடியும்?

தமிழர்களைக் கொன்று அழிக்கும் சிங்கள இன வெறியர்களின் பஞ்சமா பாதகச் செயலுக்கு உதவியர்களின் வரிசையில் இராஜ பக்சேவும் திருமதி சோனியாவும் வரலாற்றில் இடம் பெறும்போது அதில் தமிழகத்தின் இன்றைய முதல்வரும் இருப்பார். ஆனால், இதே முதல்வர்தான் அமைதிப் படை இலங்கையில் எங்கள் தமிழர்களைக் கொன்ற படை; அதை வரவேற்க மாட்டேன் என்றார். திருமதி சோனியா காந்தி இப்போது சிங்களத் தமிழர்கள் செய்த உதவிக்கும், இவரது கணவர் அப்போது செய்த உதவிக்கும் வித்தியாசம் என்ன? என்று தமிழக முதல்வர்தான் பதில் கூற வேண்டும். திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் மிகுந்த தொலைநோக்கில் அன்று தமிழர்களுக்காகச் செய்த உதவியும் வரலாற்றில் உள்ளது.

தங்கபாலுவுக்கு வேண்டுமானால் வரலாற்றின் சங்கதிகள் மறந்து இருக்கலாம். இப்போது அவர் பதவி நாற்காலியில் எப்படி உட்கார்ந்திருக்கிறார் என்பதை அவரது கட்சியினரே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கடலூரில் தொடங்கி திண்டிவனத்தில் முடிந்த இவரது ஜாமீன் கதை பற்றி அதே கட்சியின் தலைவர்களில் ஒருவரான இளங்கோவனே பேசுகிறார்.

திண்டிவனத்தில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வேண்டுமானால் மறைந்து போயிருக்கலாம். அவர் மூலம் தங்கபாலு ஜாமீன் பெற்ற கதை மறந்து போகவில்லை. அன்றைய தங்கபாலுவுக்கும், இன்றைய தங்கபாலுவுக்கும் வித்தியாசம் நிறைய உண்டு. அரசியலில் வந்தது இழப்புக்காகவா? பிழைப்புக்காகவா? என்பதை தங்கபாலுவின் தொலைக்காட்சி, கிரானைட், கல்லூரி என்று வளர்ச்சியை அறிந்தவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.

கழகப் பொதுச் செயலாளரின் இன மான உணர்வு, தமிழர் வளர்ச்சிக்காக அவர் குரலெழுப்பி வருவது உலகத் தமிழர்களும் - தமிழகத்தின் மக்களும் நன்கு அறிவார்கள்.

பதவியைப் பற்றிக் கவலைப்படாத பரிசுத்தமான தமிழர் தலைவர் வைகோ அவர்கள் விரும்பியிருந்தால் வாஜ்பாய் அரசில் நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் என்று பெரிய பதவியையே வகித்திருப்பார். வருவாயைப் பற்றியே சிந்திக்கும் தங்கபாலுக்கள் வரப்போவது சட்டமன்றத் தேர்தல் என்பதால் பூச்சாண்டி காட்டி வருகிறார்கள். இதுவே நாடாளுமன்றத் தேர்தல் எனில் இவர்கள் ஊழல் ராஜாக்களின் கூஜாக்களாக மாறி கோபாலபுரத்தில் மண்டியிட்டுக் கிடந்திருப்பார்கள். பதவிக்காக நடக்கும் கதர் சட்டைக் கிழிப்புகள் பற்றி சத்தியமூர்த்தி பவனில் இருந்து வரும் பத்திரிகைகளில் செய்தி வராத நாளே இல்லை.

தமிழக மக்களுக்குக் காங்கிரசைப் பற்றியும் தெரியும்; தங்கபாலுக்களைப் பற்றியும் தெரியும். முதலில் தங்கபாலுவுக்கு அவரது கட்சியில் அவருக்கென்ன கருதி உள்ளதென்பதைப் புரிந்து கொள்ளட்டும். கழகப் பொதுச் செயலாளர் வைகோவின் தகுதி பற்றித் தமிழகத்தில் உள்ளவர்கள் அனைவரும் அறிவார்கள். இதனை தங்கபாலு போன்ற பதவிப் பிரியர்களின் கூட்டம் தெரிந்திருக்க முடியாது. ஆனால், உலகத் தமிழர்களின் இதயத்தில் இமயம்போல் உயர்ந்து நிற்பவர் வைகோ என்பதை தங்கபாலு போன்றவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments: