Saturday, November 20, 2010

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு ..



பல்லக்கிலிருந்து இறக்கிவிடப்பட்ட பார்ப்பனியம் போலீசு பாதுகாப்புடன் நடையை கட்டுகிறது

திருச்சி திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோவிலில் 1993ஆம் ஆண்டு ம.க.இ.க நடத்திய கருவறை நுழைவுப் போராட்டத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதே கோவில் முன்பு பெரியார் சிலை இடிக்கப்பட்ட போது ராமனது படத்தை எரித்த போராட்டமும் நடைபெற்றிருக்கிறது. தற்போது இந்தக் கோவிலில் மேலும் ஒரு பார்ப்பன ஆதிக்கத்தை தோழர்கள் முறியடித்திருக்கின்றனர்.

கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களின் போது 3 நாட்கள் பிரம்ம ரத மரியாதை என்ற ஒரு கேவலம் நடக்கும். இதன்படி வேதவியாசபட்டர், பராசர பட்டர் மற்றும் அரையர் குடும்பத்தை சேர்ந்த அர்ச்சக அய்யங்கார் பட்டர்களை, யானை முன்னே செல்ல மாலை குடை தீப்பந்தம் ஆகியவற்றுடன் பல்லக்கில் அமர வைத்து மனிதர்களே தூக்கிச்செல்வதுதான் பிரம்ம ரத மரியாதை. பொங்கலும், அக்கார அடிசலுமாக வெளுத்துக் கட்டும் இந்த மாமிச மலைகளை சூத்திர தமிழர்கள் தமது தோளில் சுமந்து ஊர் முழுக்க சுற்றி வந்து வீட்டில் கொண்டு விட வேண்டும். தூக்கும் வேலையை செய்யும் மனிதர்களை பாதந்தாங்கிகள் என்று அழைப்பார்கள். இந்த பெயர் ஒன்றே இதன் இழிவை சொல்வதற்கு போதுமானது.

இந்த அவலத்தை சகிக்க முடியாமல் பல்லக்கு சவாரியை சுமக்கும் ‘பாதந்தாங்கிகள்’ (கோவில் ஊழியர்கள்) எதிர்ப்பு தெரிவித்தனர். “கை ரிக்சா ஒழிக்கப்பட்ட காலத்தில் மனிதனை மனிதன் சுமப்பது தவிர்க்கப்பட வேண்டும். கோவிலின் சார்பாக கோவில் ஊழியர்கள் பல்லக்கை தூக்க மாட்டார்கள். கோவிலுக்கு வெளியே பட்டர்கள் அவர்களின் சொந்த பல்லக்கில் ஆள் வைத்து தூக்கிச் செல்லலாம், இதைத் தவிர்த்த மற்ற மரியாதைகள் உண்டு” என்றும் கோவிலின் அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் உத்தரவு பிறப்பித்தார்.

இதை பொறுக்க முடியாத லட்சுமி நரசிம்ம பட்டர் உள்ளிட்ட பார்ப்பன பட்டர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் இணை ஆணையர் உத்திரவுக்கு தடை ஆணை கோரி எதிர் வழக்கு தொடுத்தனர். மேலும் 15 இலட்சம் நஷ்ட ஈடு கேட்டு ஆணையர் மீது வ்ழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தனர். இப்பிரச்சினையை அறிந்த ம.க.இ.க உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் இந்த பார்ப்பனக் கொழுப்பை வன்மையாக கண்டித்தனர்.

கோவில் ஊழியர்களுக்கு சட்ட ரீதியாக உதவிட வேண்டியும், “இவ்வழக்கில் தங்களையும் இணைத்து கொண்டு பட்டருக்கு எதிராக வாதாட அனுமதிக்க வேண்டும்” என்று நீதி மன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் வாதாடினர்.

வழக்கு நிலுவையிலிருக்கும் நிலையில் கைசிக ஏகாதேசியான கடந்த வியாழக்கிழமையன்று (17/11/2010) கோவில் வளாகத்துக்கு உள்ளேயும், வெளியிலும் பல்லக்கில் தூக்கிச்செல்ல பாதுகாப்பு தரக்கோரி காவல்துறையிடம் பார்ப்பன பட்டர்கள் அனுமதி கோரினர். இந்த மனுதர்ம கோரிக்கைக்கு இந்துமதவெறி அமைப்பு வானரங்கள் பலவும் கும்பல் சேர்த்துக் கொண்டு ஆதரவளித்தன.

இவ்விசயத்தில் கோவில் பிரகாரத்தில் பல்லக்கு தூக்க தடை விதித்து வெளியில் சொந்தமாக தூக்கிச்செல்லலாம் என காவல் உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

“மனிதனை மனிதன் சுமப்பது கோவிலில் மட்டுமல்ல, எவ்விடமாக இருந்தாலும் சமூக குற்றமே! எனவே கோவிலுக்கு உள்ளே மட்டுமல்ல கோவிலுக்கு வெளியிலும் பல்லக்கு தூக்க அனுமதிக்க முடியாது. இது மனுதர்ம விதிப்படி மனிதர்களை விட தான் உயர்வானவன் என பார்ப்பனர்கள் காட்டிக்கொள்ள முனைவதை அனுமதிக்க முடியாது எனவும் எச்சரித்து, மீறினால் தடுத்து நிறுத்துவோம்!”, என மனித உரிமை பாதுகாப்பு மைய செயலர் தோழர் ஆதிநாராயணமூர்த்தி மற்றும் ம.க.இ.க திருச்சி மாவட்ட செயலர் ராஜா உள்ளிட்ட தோழர்கள் பட்டர்கள் மற்றும் காவல்துறையினரை எச்சரித்தனர்.

இந்நிலையில் திருவரங்க கோவில் ரெங்கா கோபுரம் முன்பாக தோழர்கள் குவிய துவங்கினர். இதை கண்டவுடன் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் பட்டரின் வேண்டுகோளுக்கிணங்க கோவிலுக்கு வெளியில் பிரம்ம ரத ஊர்வலம் நட்த்த ஏதுவாக நூற்றுக்கணக்கான காவலர்களை இறக்கி, மனித உரிமை பதுகாப்பு மைய தோழர் வழக்குரைஞர் போஜகுமார் மற்றும் ம.க.இ.க தோழர்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து போராட்ட்த்தை தடுக்க காவல் துறை முயன்றது.

வழக்கமாக கவுசிகப் புராணம் பாடிய பின் அதிகாலை 5.20க்கு கோவில் முன் வாசல் வழியாக சொந்த காசைப் போட்டு தயாரித்த பல்லக்கில் பவனி வருவதற்க்கு ஏற்ப்பாட்டுடன் இருந்த நரசிம்ம பட்டர், ம.க.இ.க தோழர்களால் தான் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்து அஞ்சி நடுங்கி கோவில் நிர்வாகம் அளித்த மாலை,சந்தன,குடை மரியாதைகளை ஏற்க மனமில்லாமல் பின் வாசல் வழியாக(வடக்கு வாசல்) காவல்துறை உதவியுடன் தப்பி ஓடினார். இதைக்கண்ட பொதுமக்கள் ஆச்சரியமும் நகைப்புடன் அதிசயத்தும் போயினர்.


என்னா லுக்கு !

பல நூற்றாண்டுகளாக கடவுள் உண்டென்றும் அந்த கடவுளுக்கு நிகரானவன் தான் என்றும் ஆணவத்துடன் இருக்கும் பார்ப்பனக் கொழுப்புக்கும், ஆதிக்கத்துக்கும் பெயர் போன திருவரங்கத்தில் “சூத்திர, பஞ்சம, பெண்கள், குழந்தைகளை உள்ளிட்ட மக்களை அணிதிரட்டி ம.க.இ.க தோழர்கள் 1993ல் நடத்திய “கருவறை நுழைவு போராட்டத்தின்” வெற்றியை தொடர்ந்து இன்று மனிதனை மனிதன் சுமப்பது கோவிலில் மட்டுமல்ல, வெளியிலும் தடுத்து நிறுத்தப்பட்டு பட்டர்களின் பிரம்ம ரத மரியாதை எனும் அவமரியாதை முடிவுக்கு வந்தது.

இவ்வெற்றி நிகழ்வினை மகிழ்ச்சியோடு பட்டாசு வெடித்து, திருவரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு (இந்த சிலை இந்து மத வெறியர்களால் சிதைக்கப்பட்டபோது உடனடியாக மக்களை திரட்டி தேசிய நாயகன் என்று இந்து வெறியர்களால் அழைக்கப்படும் ராமன் படத்தை செருப்பால் அடித்தும், படத்தை கொளுத்தியும் ம.க.இ.க போராடிய பின் மீண்டும் நிறுவப்பட்டது) மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,

“தமிழகத்தை பார்ப்பனியத்தின் கல்லறையாக்குவோம்!
பெரியாரின் வாரிசுகள் என்பதை நிலைநாட்டுவோம்!”

என விண்ணதிர முழக்கமிட்டு கொண்டாடினர்.

இவ்விசயத்தில் கோவில் ஆணையரின் உத்தரவை அமுல்படுத்துவதற்க்கு ஆதரவாக தி.க,மற்றும் சமூக ஆர்வலர்கள் பத்திரிக்கை மற்றும் சுவரொட்டிகளின் வாயிலாக ஆதரவு கருத்து வெளியிட்டிருந்தனர். ஆனால் காவல்துறை உதவியுடன் நடக்க இருந்த பட்டர்களின் பிரம்ம ரத நிகழ்ச்சியை தடுப்பதற்க்கு கோவிலின் நான்கு வாசல்களிலும் களத்தில் நின்று முறியடித்தனர் ம.க.இ.க மற்றும் மனித உரிமை பதுகாப்பு மைய தோழர்கள்.

ஆனால் ம.க.இ.க. தோழர்களின் போராட்டம், கைது பற்றிய உண்மையை எழுதாமல் வடிவேலுவின் ’கைப்புள்ள கதைபோல்’ ’கழக போராட்ட அறிவிப்பாலும் விடுதலை செய்தியின் எதிரொலியாலும் பட்டர் பின் வாசல் வழியாக ஓட்டம்!’ என வழக்கம் போல் தி.க வின் வெற்றியாக விடுதலை பத்திரிக்கையின் தலையங்கத்தில் எழுதியுள்ளனர். ஏற்கனவே கருவறை நுழைவு போராட்டத்தை வன்முறை என்று எதிர்த்த வீரமணி கும்பல் இன்று வெறும் சட்டவாதம் பேசும் புரோக்கர் கும்பலாக சீரழிந்து போயிருக்கிறது.

அடுத்தவர் உழைப்பை கூச்சமில்லாமல் அபகரிப்பதற்கு இந்த தில்லாலங்கடி தி.க கும்பல் எந்தவித கூச்ச நாச்சமும் அடைவதில்லை. அயோத்தி தீர்ப்பு தொடர்பாக வினவில் வந்த கார்ட்டூன்களை நன்றியோ, எங்கிருந்து சுட்டோம் என்ற அறிவிப்போ இன்றி விடுதலையில் வெளியிட்டிருந்தார்கள். அதுவும் கருணாநிதியை அம்பலப்படுத்தும் கார்ட்டூனை மட்டும் ஒளித்து விட்டு மற்றவற்றை வெளியிட்டிருந்தார்கள்.

பைனான்சு கம்பெனியாக தொழில் நடத்தும் இந்த கருப்பு பார்ப்பனக் கும்பல் இனி உண்மையான பார்ப்பன எதிர்ப்புக்கு வராது என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல்களை எமது தோழர்கள் களத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் போது, இவர்கள் அறிக்கை விட்டு சாதித்ததாக வீரம் பேசுகிறார்கள்.

எது எப்படியோ அரங்கநாதனது புரோக்கர்கள் என்பதற்காக தங்களையும் கடவுள் ரேஞ்சில் சித்தரித்து சூத்திர தோள்களில் உலாவந்த பார்ப்பன கொழுப்பு இப்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மதுரை உயர்நீதிமன்றமும் பட்டர்களின் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. ஒருவேளை உச்சநீதிமன்றம் சென்று பட்டர்கள் வெற்றிபெற்றாலும் அதை அமல்படுத்த முடியாது. ஏனெனில் இது “அயோத்தி அல்ல”, தமிழகம் என்பதை இந்து மதவெறியர்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.

போராடிய தோழர்களுக்கு வினவின் வாழ்த்துக்கள்!
http://www.vinavu.com/2010/11/20/srirangam-pallaku-battar/

No comments: