Monday, November 8, 2010

நவம்பர் -27 தமிழீழ மாவீரர் நாள்.

தமிழீழத் தேசியத் தலைமையின் வழிகாட்டலைத் தமிழினம்

ஏற்றுக் கொண்டது உண்மையானால்- அவரது சொல்லுக்குக்
கட்டுப்பட்டது உண்மையானால்……………….?

நவம்பர் -27 தமிழீழ மாவீரர் நாள்.

1989இல் தொடங்கிய இந்த மாவீரர்களைப் பூசிக்கின்ற வரலாறு
என்றென்றும் நீடிக்க வேண்டும்.

இதுவே தேசியத் தலைவரின் விருப்பம்- ஆணை.

முப்பதாண்டு காலப் போராட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான
மாவீரர்களைத் தமிழீழ மண் இழந்திருக்கிறது.

இவர்களின் இழப்பு தேசக் கட்டுமானத்துக்கான விதைப்பாகவே நாம்
கருதி வந்துள்ளோம்.

முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்காக இந்த
மாவீரர்கள் பட்ட துன்பங்கள்,துயரங்களை எவராலும் இலகுவில் புரிந்து
கொள்ள முடியாதவை. தெரிந்து கொள்ள முடியாதவை.

மரணத்தை எதிர்கொண்டு வாழ்ந்த பண்பும்- மரணத்துக்குச் சவால்
விட்டு இலக்கைத் தேடிய பண்பும் இவர்களுடையது.

தமிழ்மக்களின் விடுதலைக்காக உயிர் துறந்த இந்த மாவீரர்களைக்
காலம் காலமாக நினைவு கூர்ந்து பூசிக்க வேண்டியது தமிழீழத்தில் பிறந்த
அனைவரினதும் கடமை.

ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழ்மக்களைப் பாதுகாத்தும்-
அவர்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்தும்- எத்தனையோ விதங்களில்
அவர்கள் செய்து விட்டுப் போன பணிகளுக்காக நன்றிக் கடனைச் செலுத்தும்
நாள் தான் இந்த மாவீரர் நாள்.

வருடத்தில் ஒரு நாள் அவர்களை நாம் நினைவு கூர்ந்து- மணியெழுப்பி-
அவர்களுக்காக விளக்கேற்றி அஞ்சலிப்பது தான் எமது கடன்.

ஆனால் அந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்றத் தமிழினம் தவறிப்
போகுமோ என்ற அச்சம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது.

முள்ளிவாய்க்காலில் கடந்த வருடம் மே 19ம் திகதி நிகழ்ந்து விட்ட
அந்த வரலாற்றுச் சோகம் தமிழ் மக்களை திக்குத்திசை தெரியாமல் அலைய
விட்டுள்ளது.

தேசியத் தலைவரின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள இரண்டு
பட்ட நிலையின் காரணமாக மாவீரர் நாளை எப்படி நாம் நினைவு கூரப்
போகிறோம் என்ற கேள்வி எழுகின்றது.

தாயகத்தில் மாவீரர்களின் எந்தவொரு அடையாளச் சின்னத்தையும்
இல்லாமல் செய்து விடுவதில் சிங்களப் பேரினவாதம் வெற்றி கண்டுள்ளது.

தாயகத்தில் இருந்த அத்தனை மாவீரர்களின் நினைவாலயங்களும்
அழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக்கப்பட்டு விட்டன.

அங்கு மாவீரர்களை நினைவு கூருவதற்கு சிங்களப் பேரினவாத அரசு
ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.

இந்தக் கட்டத்தில் மாவீரர்களை நினைவு கூரும் பொறுப்பு
முழுவதும் புலம்பெயர் மக்களிடம் தான் உள்ளது.

மாவீரர்களின் வரலாற்றைக் கட்டிக் காப்பது தொடக்கம் மாவீரர் நாள்
பாரம்பரியங்களை அழிந்து விடாமல் காக்கும் பொறுப்பும் அவர்களுடையதே.

இதற்கு ஒன்றுபட்ட வேலைத்திட்டங்களே அவசியம்.

ஏட்டிக்குப் போட்டியான செயற்பாடுகள், அறிக்கைகளின் ஊடாக,
நாம் இதைச் சாதிக்க முடியாது- மாவீரர் நாளுக்குரிய பாரம்பரியத்தையும்
புனிதத்தையும் எம்மால் கட்டிக் காக்கவும் முடியாது.

இது வருடத்தில் ஒருமுறை வருகின்ற தேசியத் திருநாள்.

அதை அனைத்து புலம்பெயர் மக்களும் ஒன்றுபட்டு அனுஷ்டிக்க
வேண்டும் என்பதே முக்கியமான விடயம்.

இரண்டுபட்டு நின்று அறிக்கைகளை விட்டு மக்களைக் குழப்பும்
முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்குமேயானால்- அது மாவீரர்களைக்
களங்கப்படுத்த உதவுமே தவிர, மாவீரர்நாள் நிகழ்வுகளைச் சிறப்புற
நடத்துவதற்கு வழிசெய்யாது.

ஏற்கனவே தியாகதீபம் திலீபனின் நினைவு நாள், மாலதி நினைவு
நாள்,கடந்த வருட மாவீரர் நாள் போன்றவற்றின் போது பலதரப்பில் இருந்தும்
அறிக்கைகள் வெளியாகின.

இவை மக்களைக் குழப்பியதன்மூலம் மாவீரர்களை நினைவு கூரும்
புனித நிகழ்வுகளை கேலிக்குரியதாக்கவே உதவின.

இன்னமும் மாவீரர் நாளுக்கு மூன்று வாரங்கள் தான் உள்ளன.

இந்த நிலையில் புலம்பெயர் மக்களும் அவர்களை வழிநடத்தும்
தரப்பினரும் ஒன்றுபட்டு ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

மாவீரர் நாளை எப்படி யார் நடத்துவது என்று ஒரு தீர்மானத்துக்கு
வரவேண்டியது அவசியம்.

இங்கு பிரிந்து நின்று மோதிக் கொள்வதோ அல்லது மறைந்து
நின்று தாக்கிக் கொள்வதோ மாவீரர்களை ஒருபோதும் புனிதப்படுத்தாது.
அவர்களைக் அது களங்கப்படுத்தவே உதவும்.

அனைவரும் ஒன்றிணைந்து மாவீரர் நாளை அதற்குரிய சிறப்புடனும்
பாரம்பரியத்துடனும் நடந்தேற வழிசெய்வது தான் மாவீரர்களின் வழியில்
நடப்பதாகக் கூறிக் கொள்ளும் ஒவ்வொருவரினதும் வரலாற்றுக் கடமை.

தேசியத் தலைமையின் வழிகாட்டலைத் தமிழினம் ஏற்றுக் கொண்டது
உண்மையானால்- அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டது உண்மையானால்
இந்தமுறையில் இருந்தாவது மாவீரர் நாளை ஒன்றிணைந்து நடத்துவதற்கு
ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

பிளவுபட்டு நின்று மோதிக் கொள்வதன் மூலம் மாவீரர்களின்
அடையாளங்களைச் சிதைத்து விடாமல் பாதுகாக்க முடியாது.

அவர்களின் புனிதத்தைப் பேணும்வகையில் இந்த முறையில் இருந்து
ஒற்றுமையுடன் செயற்பட்டு மாவீரர்களை நினைவு கூர முன்வர வேண்டும்.

இதுதான் தமிழீழ மக்களின் விருப்பம்.

அதுமட்டுமன்றி தாயக மண்ணுக்காக தம்முயிர்களைக் கொடுத்த
ஆயிரமாயிரம் மாவீரர்களின் விருப்பமும் அதுவாகத் தான் இருக்க முடியும்.

தொல்காப்பியன்

No comments: