Sunday, November 21, 2010

தாலி இல்லையா, இனி வீட்டுப் பக்கமே வராதே...



அன்புத் தோழிக்கு,

நலம்,நலம் அரிய ஆவல். நீ வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சியான செய்தியொன்றை கூறவே இக்கடிதத்தை எழுதுகிறேன். ஆம் நீ நினைத்தது சரி தான். என்னுடைய மகளுக்கு திருமணம் ஏற்பாடாகியுள்ளது. நாங்கள் எதிர்பார்த்தது போலவே அவரும் சாதி,தாலி,வரதட்சிணை போன்ற பிற்போக்குத்தனங்களில் உடன்பாடில்லாதவர். ஆம், இது ஒரு புரட்சிகர திருமணம் தான்.

எங்களுடைய பெண்ணுக்கு இப்படி ஒருவரை கண்டடைய நாங்கள் பல மன உளைச்சல்களை எதிர் கொள்ள‌‌ வேண்டியிருந்தது. சிறுவயதிலிருந்தே எனது மகளை ஆணாதிக்கத்தை எதிர்ப்பவளாகவும், ஆணுக்கு பெண்ணை நுகர்வுப்பொருளாக்கும் ஆபரணங்களை சுமக்காத‌‌வளாகவும் தான் நாங்கள் வளர்த்தெடுத்தோம் என்பதை நீயும் அறிவாய். அவள் சிறுமியாக இருந்த போது எழாத பல்வேறு பிரச்சினைகளை அவளுடைய‌ பதின் பருவத்தின் போதும் அதன் பின்னரும் நாங்கள் எதிர்கொண்டோம்.

உறவினர் வீடுகளில் ஏதேனும் விசேசம் என்றால்,அக்கரை உள்ளவர்களை போல அனைவரும் எங்களை சுற்றி நின்று கொண்டு “பொட்டுக்கு கூட‌ நகை போடாம மொட்டக்கட்டையா இருக்காளே, இவளுக்கு எப்படிங்க‌ மாப்பிள்ளை தேடப்போறீங்க ? பொண்ணு இப்படி இருந்தா எவன் கட்டிக்குவான் ? மூட்டை தூக்குறவ‌ன் கூட 10 பவுன் நகை கேக்குற காலத்துல இப்படி புரட்சி கிரட்சின்னு பேசிக்கிட்டு இருக்க பொண்ண போய் எவன் கட்டிக்குவான் ? சரி நகையா போடலைன்னாலும் கூட பரவாயில்லை சொத்தாவாவது குடுங்க, பொண்ணு பேர்லயே கூட‌ டெபாசிட் பண்ணுங்க நாங்க மாப்ளை பார்க்கிறோம்” என்று பலவாறாக‌ யோசனை சொன்னவர்கள் பலர்.

வேறு சிலரோ “என்னது சாதி விட்டு சாதியா ! அப்படினா உன்னால‌ ஒரு கீழ்சாதி பையனை உன் பெண்ணுக்கு கல்யாண‌ம் பண்ணி வைக்க முடியுமா ?” என்றார்கள். பிற்போக்குதனங்களை எதிர்க்கக்கூடிய‌ யாராக இருந்தாலும் என் பெண்ணை அவருக்கு சந்தோஷமா கல்யாணம் செய்து வைப்போம்னு சொன்னேன்.

‘இந்த காலத்துக்கு இதெல்லாம் சரிப்படாது. கடைசில நீங்க எப்படி கல்யாணம் பன்னப்போறீங்கன்னு நாங்களும் பார்க்கத்தானே போறோம்’ என்று ஏளனம் செய்தார்கள். அதாவது எப்ப விழுவோம், கையை தட்டலாம் என்று காத்துக்கொண்டிருந்தார்கள். இது வர்க்கப்போராட்டத்தின் மற்றொரு வடிவமான‌ பிற்போக்கு கலாச்சாரத்திற்கெதிரான போராட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம் எனவே தான் இந்த போராட்டத்தின் ஒரு பக்கம் துன்பமானதாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு அதன் மறுபக்கமான‌ மகிழ்ச்சியை எங்களால் அடைய முடிந்தது.

சரியான வயது வந்ததும் எனது மகளின் விருப்பத்தை அறிந்து அவளுக்கேற்ற வாழ்க்கைத் துணையைத் தேடத் துவங்கினோம். சமூக ஆதரவு சக்திகளிடமும் சொல்லி வைப்போம் என்று சொல்லி வைத்தோம். ‘முற்போக்கு சிந்தனையாளர்கள்’ என்று அறியப்படுகிற‌‌ தி.க ‘தோழர்’களுக்கும் தகவல் தெரிவித்தோம். எதிர்பார்க்காதபடி அங்கிருந்தும் கூட‌ வந்தார்கள். வந்தவர்கள், ‘ உங்களுடைய கருத்துக்களில் எங்களுக்கு முழு உடன்பாடு தான் ஆனாலும் நீங்க சொல்ற மாதிரி எந்த மாற்றமும் இல்லாம‌ அப்படியே செய்யிறதுலயும் கொஞ்சம் பிரச்சினை இருக்கு. எங்களுக்கும் கவுரவம்னு ஒன்னு இருக்குல்லீங்களா ? குறைந்தப்பட்சம் மாப்பிள்ளையோடு வெளிய‌ போகும் போதாவ‌து பெண்னு நகைன்னு ஒன்ன போட்டுக்கிறது தானேங்க சரியா இருக்கும் ? அதுக்கு மட்டும் ஓக்கேன்னு சொல்லிட்டீங்கன்னா உடனே பேசி முடிச்சிடலாம் என்றார்கள்.

பெண்ணடிமைத்தனத்தை உணர்ந்து எனது இளம்பருவத்தில் நான் எனது தாலியையும், நகைகளையும் கழட்டி எறிந்த போது ‘என்னோட கவுரவத்துக்கு இழுக்கா இருக்கு இனிமே என் வீட்டுப்பக்கமே வராதே’ என்று என்னுடைய அப்பா கூறியதை நினைத்துக்கொண்டேன். ஆக எத்தனை தலைமுறை தாண்டினாலும் எல்லா ஆண்களும் தங்களுடைய‌ கவுரவத்தை பெண்களின் கழுத்தில் தான் தேடுகிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டோம். எங்களால் உங்களுடைய‌ கவுரவம் கெட வேண்டாம் நாங்கள் அதற்கானவர்களும் அல்ல எங்களுக்கு எங்களுடைய கொள்கை தான் முக்கியம் என்று ஒதுங்கிக்கொண்டோம்.

அதற்கடுத்து குடியையும், முதல் திருமணத்தையும் மறைத்துக் கொண்டு சம்பந்தம் பேச‌ வந்தார்கள். நாங்கள் இதை அறிந்து கேட்ட போது. ‘சமூகத்துல இதெல்லாம் சகஜம்தானேங்க’‌ என்றார்கள். ‘எங்களுக்கு இதெல்லாம் சகஜமில்லைங்க‌ என்று கூறி ஒதுங்கிக்கொண்டோம். ஒரு ஆண் எப்படிப்பட்டவனாகவும் இடுக்கலாம், குடிகாரனாக இருக்கலாம், பொம்பளை பொறுக்கியாக இருக்கலாம், முதல் திருமணத்தை மறைத்து பெண் தேடுபவனாக இருக்கலாம். ஆனால் ஒரு பெண் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் அடிமைத்தனத்தை எதிர்ப்பவளாய், சுயமாக சிந்திப்பவளாய் இருக்கக்கூடாது அப்படி இயல்பாய் இருந்தால் இவர்களுக்கு அது விசித்திரமாய் இருக்கும்.

இவ்வாறு பல்வேறு காரணங்களால் மாப்பிள்ளை கிடைக்காமல் காலதாமதம் ஆக ஆக உறவினர் கூட்டம் உற்சாகமடைந்தது. ‘நாங்க தான் அப்பவே சொன்னோம்ல இதெல்லாம் நடக்காதுன்னு’ கேட்க மாட்டோம்னீங்க. சரி சரி அவளை நகைய போடச் சொல்லு, அவுக அவுக சொத்து பத்த வித்து கூட பிள்ளைக கல்யாணத்தை நடத்திகிட்டு இருக்காக, இந்தா அங்க மாப்பிள்ளை இருக்கு இங்க மாப்பிள்ளை இருக்குன்னு அக்கறைப்பட்டாங்க,கண்ணில் சோகமும்,கடைசியில எங்க பிடிக்கு வந்துட்டீங்க‌ல்லங்ற கெக்கலிப்போடவும் உதவிக்கரம் நீட்டினார்கள். ச்சீ,ச்சீ நம்முடைய‌ பலவீனத்தை இவங்க பயன்படுத்திக்க பார்க்கிறாங்க. நாம் அரசியல் ரீதியாக‌ உறுதியோடு நிற்க‌ வேண்டிய தருணமிது என்பதை உணர்ந்து அனைத்து ‘உதவி’களையும் புறந்தள்ளினோம். கரிசனம் காட்டிக் கொண்டே எங்க பார்ப்போம், உன் பேருக்கு பின்னாடி சாதி போட்டுக்கிறயா இல்ல தோழரா நிக்கிறியான்னு பார்க்கலாமே என்று மார்தட்டினார்கள்.

இறுதியில் எங்களுடைய போராட்டத்திற்கு வெற்றி கிட்டியது ! எங்களுடைய பெண்ணுக்கு நாங்கள் எதிர்பார்த்தபடியே நல்ல‌ மாப்பிள்ளை கிடைத்தார். எங்களுடைய இக்கட்டான சூழலை பயன்படுத்திக் கொண்டு எப்படியாவது எங்களை பிற்போக்கின் பக்கம் தள்ளிவிட எங்களோடு‌ மல்லுக்கட்டிக்கொண்டிருந்த உறவினர்களிடம் இன்னார்தான் எங்களுடைய‌ மருமகன் என்று நாங்கள் பெருமிதத்துடன் அறிவித்த போது அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா ? எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சோமோ அது நடந்துரும் போல இருக்கே என்று எண்ணியவர்களாக பேச வார்த்தைகளின்றி இறுகிக் கொண்டார்கள். முகத்தை திருப்பிக் கொண்டார்கள். ‘என்னமோ செய்ங்க’ என்று கூறி எட்டி நின்று கொண்டார்கள்.

உறவினர்களின் துக்கத்திலும் சந்தோசத்திலும் மனதார பங்கெடுத்துக் கொண்டவர்கள் நாங்கள் ஆனால் எங்களுடைய‌‌ மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள உறவினர்கள் யாருமே முன்வரவில்லை. சரி இதுவும் ஒருவகை போராட்டம் தான் என்பதை உணர்ந்துகொண்டோம். பிற்போக்குத்தனங்களை எதிர்க்கும் போது அதை தாங்கி நிற்கும் உறவுகள் மட்டும் நீடிக்குமா என்ன ? அவற்றையும் இழக்கத்தான் வேண்டும். போராட்டத்தில் மலரும் புதிய உறவுகள் தான் மகிழ்ச்சி என்பதையும் அறிந்து கொண்டோம் எனவே எது வந்தாலும் எதிர்கொள்வோம் என ஆதரவு தந்த சமூக நண்பர்கள், அமைப்பு தோழர்களின் உதவியோடு திருமண ஏற்பாடுகளில் தீவிரமானோம்.

ஒரு நண்பர் சொன்னார், கரடு முரடான மலையில் ஏற முதலில் பாதை அமைப்பவர்கள் கற்களையும் வலிகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும், அதன் பிறகு பயணிப்பவர்களுக்கு அந்த‌ வலிகள் குறைவாக இருக்கும் இதெல்லாம் புதிய வழிக்கான விலைகள் என்றார். நாங்களும் அவ்வாறே எண்ணினோம் நாம் கூட இதில் பயணிப்போர் தான். நமக்கு முன் வீச்சரிவாளையும் வெந்தணலையும், கரைக்கின்ற கண்ணீரையும் கடந்து இதில் பாதை சமைத்தவர்கள் தான் எத்த‌னை எத்த‌னை பேர். எனவே இதுவெல்லாம் பெரிய வலியல்ல‌ சாதாரணமானது தான் என்று உணர்ந்து முன்னேறினோம்.

தன்னுடைய கடைசிகால‌ சேமிப்பு வரை வீணாக்கி, கடன் வாங்கி மீதி காலம் பூராவும் கஷ்டப்பட்டு சாதி,கவுரவம்,அந்தஸ்து என போலியான வாழ்க்கைக்குள் எங்களுடைய மகளை தள்ளிவிட நாங்கள் என்றுமே நினைத்துகூட பார்த்ததில்லை எவ்வளவு புறக்கணிப்புகள் வந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி ஒரு சரியான வாழ்க்கைக்காக‌ போராடுவோம் என்று மனஉறுதியோடு தயாரானோம். கண்ணுக்கு தெரியாமல் வலி தரும் காயம் கன்ணீருக்கும், புறக்கணிப்புக்கும் உண்டு. இது யாரையும் சற்று அசைத்துப் பார்க்கும். தான் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும், தூக்கியெறிய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்த சுமையை, நம் மீதும் சுமத்த முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் அவர்களுக்கு.

ஆனால் இன்று எண்ணற்ற இளைஞர்கள் இவர்களின் கண்ணீர் ஆயுதங்களை எதிகொள்ளும் மனத்துணிவோடு முன்வருகிறார்கள். த‌ங்களை பினைத்துள்ள மாயச்சங்கிலிகளிலிருந்து விடுபட்டு வெளிவர பெண்களும் தயாராக உள்ளனர். இது பெருகும்.வளரும். தடைகள் என்றும் தாண்டுவத‌ற்கே. அந்நேரத்திற்கு அது வலி தரும் அனுபவம் என்றாலும் ஒரு சரியான வாழ்க்கை பாதைக்கான அடித்தளம் அதுவே. என்னுடைய‌ அனுபவத்தை உன்னிடம் பகிர்ந்து கொண்டது எனக்கு மன நிறைவை தருகிறது. இத்துடன் மண‌விழா அழைப்பிதழை அனுப்பியுள்ளேன். அவசியம் திருமணத்தில் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும், உன்னுடைய‌ வரவை எதிர்பார்த்திருப்பேன்.

அன்புத்தோழி
விஜி
http://www.vinavu.com/2010/11/22/progressive-women/

No comments: