Thursday, September 30, 2010

காங்கிரஸ் கட்சிக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்! – தமிழருவி மணியன்



புராதன கிரேக்க நகர அரசுகளுள் ஒன்றான ஸ்பார்ட்டாவின் ஆட்சியாளனாகத் திகழ்ந்த லைகர்கஸ்… எதேச்சதிகார, கொடுங்கோன்மை அரசுகளுக்கு மாற்றாக ஆட்சி முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவன். மனிதரிடையே சமத்துவம் குறித்து அதிக ஆர்வத்துடன் பேசிய அவனிடம், ‘உன் ஆட்சியில் முழுமையான ஜனநாயகத் தன்மைகள் ஏன் இடம்பெறவில்லை?’ என்று கேட்டபோது, ‘முதலில் உன் வீட்டுக்குச் சென்று, அங்கே ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்திவிட்டு, என்னிடம் வந்து பேசு!’ என்றான். அன்று தொட்டு இன்று வரை முழுமையான ஜனநாயகம் உலகில் எங்கும் உருவாகவில்லை என்பதுதான் யாரும் மறுக்க முடியாத உண்மை!

நம் நாட்டு அரசியலில்… ஆட்சியிலும் கட்சிகளிலும் உள்ள தலைவர் கள் அணிந்திருக்கும் ஜனநாயக ஆடைகளுக்குள் சர்வாதிகாரச் சிந்தனை கள்தான் அவரவர் ஆன்மாவை அலங்கரிக்கின்றன. கலைஞரின் கண்ண சைவிலும், ஜெயலலிதாவின் பார்வை படும் இடத்திலும்தான் இரண்டு கழகங்களின் ‘ஜனநாயகம்’ கொலுவிருக்க முடியும். நேற்று கட்சி கண்ட விஜய்காந்த்தின் வாயில் இருந்து வரும் வார்த்தையே தே.மு.தி.க-வின் வேத வாசகம். மோசஸின் 10 கட்டளைகள் மீறப்படலாம். ஆனால், பொலிட்பீரோவின் முடிவை கம்யூனிஸ்ட்தோழர்கள் மீறலாகாது. ‘சொக்கத் தங்கம்’ சோனியா காந்தியின் சொந்த விருப்பு – வெறுப்புகளுக்கு ஏற்பத்தான் ஆட்சி பணிந்தாக வேண்டும்; காங்கிரஸ் கட்சி நடந்தாக வேண்டும். ‘தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே’ என்ற கம்பனின் கடவுள் வாழ்த்து வரிதான் எல்லாக் கட்சிகளுக்கும் இன்று தேசிய கீதம். இந்த அடிமை மனோபாவத்தின் அடித்தளம் தலைமை மீது பூண்டிருக்கும் ஆழ்ந்த பக்தி அன்று; அதிகாரத்தைச் சுவைக்கவும், செல்வத்தைப் பெருக்கவும், வாழ்க்கை சுகங்களை வகைவகையாக அனுபவிக்கவும் வாழ்த்துப் பா இது ஒன்றுதான் வழி என்ற புரிதல் நம் அரசியல்வாதிகளிடம் வாய்த்துவிட்டது.
காங்கிரஸ் கட்சிக்கும் ஜனநாயகப் பண்புகளுக்கும், இந்திரா காந்தி காலம் தொட்டு இன்றைய சோனியா காந்தி காலம் வரை எந்த சம்பந்தமும் இல்லை. ‘காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை’ என்று ராகுல் காந்தியே வாக்குமூலம் வழங்கி இருக்கிறார். தொண்டர்களின் உணர்வைப் புரிந்துகொள்ளவும் பிரதி பலிக்கவும், காங்கிரஸ் தலைமை என்றும் முயல்வதே இல்லை. முலாயம் சிங்கும், லாலு பிரசாத்தும் அவமானப்படுத்தும் வகையில் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிகளைப் பிச்சை போட நினைத்ததால், வேறு வழி இன்றி உத்தரப் பிரதேசத்திலும் பீகாரிலும் காங்கிரஸ் தனியாகக் களத்தில் நிற்க நேர்ந்தது. காங்கிரஸை மக்கள் இயக்கமாக மாற்ற ராகுல் காந்தி அந்த இரண்டு மாநிலங்களிலும் முயன்றது உண்மையெனில், 43 ஆண்டுகளாக நடுவீதியில் நிற்கும் தமிழ்நாடு காங்கிரஸை கோட்டையில் அமர்த்தும் நோக்குடன் திராவிடக் கட்சிகளை முற்றாகப் புறந்தள்ளிப் புதிய அணியைத் தன் தலைமையில் உருவாக்க அவர் புறப்பட்டிருக்க வேண்டும். சோனியா காந்தி அதற்குரிய பாதையை அமைத்திருக்க வேண்டும். அதற்குத்தானே இளங்கோவன் குரல் கொடுத்தார். ஆனால், என்ன நேர்ந்தது? உழைக்காமலே உண்டு பிழைப்பவர்கள் ஒருபோதும் வியர்வை சிந்த விரும்ப மாட்டார்கள். இங்கு உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு காமராஜரையும் கக்கனையும் காட்டிப் பிழைக்கத் தெரியும்; ஆனால்… உழைக்கத் தெரியாது.

கலைஞருக்கும் காங்கிரஸுக்கும் இருக்கும் கூட்டணி உறவை இளங்கோவன் அறுக்க முயன்றார். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் வந்தார். தி.மு.க-வுடன் கூட்டணி தொடரும் என்று திருவாய் மலர்ந்தார். இந்தக் கூட்டணிக்கு எதிராக யாரும் பேசக் கூடாது என்று வாய்ப் பூட்டுப் போட்டு விட்டுச் சென்றார். அடுத்த நாளே, தங்க பாலு கோபாலபுரக் கோயிலுக்குப் போய் கலைஞரின் தரிசனம் கண்டு, பாதாதி கேச பரியந்தமும் சிலிர்த்த பரவசமுமாக, ‘அன்னை சோனியாவின் விருப்பமே எங்கள் அனைவரின் விருப்பமும்’ என்றார் பத்திரிகையாளர்களிடம். இனி இளங்கோவன் என்ன செய்யப் போகிறார்? அவர் பெரியாரின் பேரன் என்பது உண்மை. ஆனால், அவருக்குள் பெரியாரின் போர்க் குணம் பல்கிப் பெருகும் என்று நாம் நம்புவதற்கில்லை!

‘சோனியாவின் விருப்பமே எங்கள் விருப்பம். சோனியாவின் முடிவே எங்கள் முடிவு’ என்று கூச்சமற்று கோஷம் போடும் கூட்டத்துக்கு எதுதான் கொள்கை? தமிழ்நாடு காங்கிரஸின் தொண்டர்களின் கருத்துக்கு என்ன மரியாதை? மாநில அளவில் பொதுக் குழுவும், செயற் குழுவும் கூடி முடிவெடுக்க அதிகாரம் இல்லை எனில், ஆட்டுக்குத் தாடியைப்போல் அந்த அலங்கார அமைப்புகள் எதற்கு? ஒரு வார்டு பிரதிநிதியைக்கூட ‘அன்னை சோனியாவின் ஆணைப்படி’யே நியமிக்கும் கட்சிக்கு எதற்கு ஒரு மாநில அமைப்பு? காந்திக்கும் காமராஜருக்கும் இன்றுள்ள காங்கிரஸுக்கும் என்ன சம்பந்தம்? நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்த காந்தியே தன் முடிவுகள் அனைத்தையும் காங்கிரஸின் மூலம் செயற்படுத்த முடியவில்லை. காந்திக்கு இல்லாத சக்தி சோனியாவுக்கு மட்டும் சாத்தியமானது எப்படி? காங்கிரஸுக்குள் பிழைப்புவாதிகள் பெருகிய தனால்தானே!
தேசியக் கொடியின் நடுவில் உழைப்பின் சின்னமான ராட்டை இடம் பெற வேண்டும் என்ற அண்ணலின் ஆசை நிராகரிக்கப்பட்டது. ஆச்சார்ய கிருபளானி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகியதும் நரேந்திர தேவ் என்ற அப்பழுக்கற்ற சோஷலிஸ சிந்தனையாளரைப் புதிய தலைவராக்க வேண்டும் என்ற மகாத்மாவின் பரிந்துரை புறக்கணிக்கப்பட்டது. அமைச்சர்கள் அனைவரும் எளிமையாக மிகச் சாதாரண வீடுகளில் வசிக்க வேண்டும் என்ற காந்தியின் ஆலோசனையைக் காது கொடுத்துக் கேட்க ஒருவரும் இல்லை. மகாத்மா தன் வாழ்வின் இறுதிக் காலத்தில், நேரு, படேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களால் தனிமைப்படுத்தப்பட்டார் என்பது தான் வரலாறு. காந்தியின் விருப்பத் துக்கு மாறாக, இரண்டாவது முறை காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி யிட்ட நேதாஜியை ஆதரித்துப் பெரும்பான்மை உறுப்பினர்கள் தமிழகத்தில் வாக்களித்தனர். 1946-ல் சென்னை மாகாணத்தின் முதலமைச் சராக ராஜாஜி பதவியேற்க வேண்டும் என்று மகாத்மாவும், அன்றைய அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத்தும், பார்லிமென்டரி போர்டின் தலை வராக விளங்கிய வல்லபபாய் பட்டேலும் வெளிப்படையாகத் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்த பின்பும், ஆந்திர கேசரி பிரகாசம்தான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். அகில இந்தியத் தலைவர்களின் ஆணையை மீறும் ஆண்மையும், உண்மையான ஜனநாயக உணர்வும் அன்று காங்கிரஸில் ஓங்கி நின்றன.

அண்ணல் காந்தி, இந்தி பிரசார சபா வெள்ளி விழாவில் பங்கேற்ற பின்பு தமிழகத்தில் சுற்றுப் பயணம் முடித்துத் திரும்பியதும் ராஜாஜிக்கு எதிராக ஒரு ‘கிளிக்’ (தன்னலக் குழு) இயங்குவதாக ‘ஹரிஜன்’ இதழில் (பிப்ரவரி, 1946) எழுதினார். மகாத்மாவின் விமர்சனத்தில் மனம் கசந்த காமராஜர், பார்லிமென்டரி போர்டில் இருந்து ராஜினாமா செய்தார். காங்கிரஸ் தலைவர் வரதராஜுலு நாயுடு, ‘காந்திய தர்மத்திலும், காங்கிரஸ் திட்டத்திலும் பரிசுத்தமான பக்தியுடன் உழைப்பவர்களில் முதல்வர் காமராஜர்’ என்று குறிப்பிட்டு, மகாத்மாவுக்குக் கடிதம் வரைந்தார். அவருக்கு எழுதிய பதில் கடிதத்தில் ‘ராஜாஜி – நாடார் தகராறில் இனி நான் தலையிட மாட்டேன்’ என்று உறுதி அளித்தார் அண்ணல். மகாத்மா காந்தியின் தவறான விமர்சனத்தைத் துணிவுடன் அன்று எதிர்த்த காமராஜர், பின்னாளில் இந்திரா காந்தியின் தவறான நடவடிக்கையையும் எதிர்த்தவரே. காமராஜர் தன் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாடு காங்கிரஸின் மேல் டெல்லித் தலைமை நாட்டாண்மை செய்ய விட்டதே இல்லை. அவர் மக்களின் மாபெரும் தலைவர். இன்று இருப்பவர்கள் மக்களோடு எந்த உறவும் இல்லாத நியமன நாற்காலி மனிதர்கள்.

‘கலைஞரோடு கைகோத்து நில்லுங்கள்’ என்று சோனியா காந்தி சொன்னாலும் சம்மதம்; ‘போயஸ் தோட்டத்தில் போய் பூச்செண்டு கொடுங்கள்!’ என்று கட்டளை இட்டாலும் பூரிப்பு; ராமதாஸுக்கும், விஜய் காந்த்துக்கும் வலை வீசுங்கள் என்று வாய் மொழிந்தாலும் வரவேற்பு. தமிழ்நாடு காங்கிரஸை வழி நடத்தும் தலைவர்களுக்கு சொந்த லட்சியங்கள் இல்லையா? ஏன் இல்லை? எப்படியாவது எம்.எல்.ஏ. ஆக வேண்டும். இந்த முறை கைக்கெட்டியும் வாய்க்கு எட்டாமற் போய்விட்ட மந்திரி பதவி 2011-ல் கட்டாயம் கிட்ட வேண்டும். இதைவிட வேறு என்ன லட்சியம் வேண்டும்?
‘நாட்டு நலனுக்கான கூட்டணி இது’ என்கிறார் தங்கபாலு. ’2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடும், காமன் வெல்த் விளையாட்டுக் குழப்படியும் இன்று உலகப் புகழ் பெற்றுவிட்டன. இந்த இரண்டு சாதனைகளின் மூலம் இந்தியாவின் ‘பெருமை’யை உலக அரங்கில் உயர்த்திய இரு கட்சிகளும் ஒரே அணியில் நிற்பது வரவேற்கத்தக்கதுதான். ஈழத்தில் தமிழ் இனத்தை முற்றாக அழித்தொழித்து, இலங்கை நிலப்பரப்பை சிங்களர் ஆதிக்கத்தில் கொண்டுவருவதற்கு ராஜபக்ஷேவின் அரக்க அரசுக்கு அனைத்து உதவிகளையும் உவகையுடன் தந்து உதவிய காங்கிரஸும், இன உணர்வுடன் முத்துக்குமார் மூடிய கனல் பெரு நெருப்பாய் வளர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள தீயணைப்புத் துறையாகச் செயற்பட்ட தி.மு.கழகமும் சேர்ந்து, ‘என்ன பொருத்தம்… நமக்குள் இந்தப் பொருத்தம்’ என்று ஆடிப் பாடுவதுதான் அழகு.

‘பழைய விறகு, எரிப்பதற்கு உகந்தது. பழைய குதிரை, சவாரிக்குச் சிறந்தது. பழைய புத்தகம், படிக்கத் தகுந்தது. பழைய நண்பர்கள், பழகுவதற்கு நம்பகமானவர்கள்’ என்றார் எமர்சன். பழைய குதிரையே சவாரிக்குச் சிறந்தது என்று சோனியா முடிவெடுத்துவிட்டார். பழைய நண்பர்களே, பழகுவதற்கு நம்பகமானவர்கள் என்று கலைஞர் கணித்துவிட்டார். இளங்கோவனுக்கும், காங்கிரஸில் மிச்சம் மீதி மான உணர்வு உள்ளவர்களாக இருக்கும் தொண்டர்களுக்கும் நம் ஆழ்ந்த அனுதாபங்கள்!

நன்றி: விகடன்

Wednesday, September 29, 2010

தீண்டாமை ஒழிப்புப் பிரிவை இழுத்துப் பூட்டுவோம்! – பெரியார் திராவிடர் கழகம்



சட்டப்படி தீண்டாமை குற்றம்; ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது? தமிழ்நாட்டின் பல கிராமங்களில் தேனீர்க் கடைகளில், சுடுகாடுகளில் முடிதிருத்தும் நிலையங்களில், ரேஷன் கடைகளில், பல இடங்களில் பல வடிவங்களில் தீண்டாமைக் கொடுமைகள் நீடிக்கின்றன.

பெரியார் திராவிடர் கழகம், தீண்டாமையைப் பின்பற்றும் கடைகள், அமைப்புகளை முகவரிகளோடு பட்டி யல்களாக தயாரித்துள்ளது. தீண்டாமை நிலவும் கிராமங்கள் இருப்பதாக அரசாங்கமும் ஒப்புக் கொள்கிறது.

மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் இந்தக் கொடுமையை எதிர்த்துத்தான் பெரியார் இயக்கம் தொடங்கினார். ஆனால், பெரியார் தொடங்கிய போராட்டம் இன்னும் முடியவில்லை.

பெரியார் திராவிடர் கழகம் மூன்று கட்டங்களாக பல மாதங்களாக, பல நூறு கிராமங்களில் தொடர்ந்து மக்களை சந்தித்து சாதி, தீண்டாமைக்கு எதிராக பரப்புரைப் பயணம் நடத்தியது. அடுத்தக்கட்டமாக இப்போது போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது.

தீண்டாமைக் குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் காவல்துறையில் தனிப் பிரிவே இருக்கிறது.

மனித உரிமைப் பிரிவு என்று பெயரில் உள்ள இந்தத் துறை என்ன செய்கிறது? தீண்டாமையைத் தடுக்க வேண்டாமா? குற்றம் புரிந்தோர் மீது கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டாமா? செயல்படாமல் இருப்பதற்கு ஒரு துறையா?

இந்தக் கேள்விகளோடு – கழகம் களமிறங்குகிறது! திருச்சியில் – அக்.2 இல் தீண்டாமை ஒழிப்புப் பிரிவை இழுத்துப் பூட்டும் போராட்டம்!

காந்தி பிறந்த நாள் அக்.2; ‘தேசியத் தந்தை’ பிறந்த நாளில் தேசிய அவமானமாக நீடிக்கும் தீண்டாமைக் கொடுமைகளை சுட்டிக் காட்டுகிறோம்.

இது மக்கள் போராட்டம்; மனித உரிமைப் போராட்டம்; சுயமரியாதைப் போராட்டம்.

தமிழர்களே! உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறது, பெரியார் திராவிடர் கழகம்! களப்பணிகளுக்கு, நிதி வழங்கி உதவிடுவீர்!

- பெரியார் திராவிடர் கழகம்

Tuesday, September 28, 2010

புலி பசித்தாலும் புல்லைத் தின்னலாமா? எந்திரன் படத்தைப் புறக்கணிக்க நாம் தயங்கலாமா? – தமிழர் பண்பாட்டு கழகம் பிரான்சு



“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்” என்று பாடினான் அன்று எட்டயபுரம் தந்த எழுச்சிக் கவிஞன் பாரதி! வெள்ளையரின் ஆதிக்கத்தை எதிர்த்து வீறு கொண்டு எழாமல், ஆமைகளாய் ஊமைகளாய், அடிவருடிகளாய் கூனிக்குறுகிக் கிடந்த இந்தியரைப் பார்த்து இப்படித்தான் ஏக்கப் பெருமூச்சு விட்டான் அந்தப் பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதி.

இன்று விடுதலை பெற்று 64 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழனைப் பார்க்கும் போது, நமக்கும் அப்படித்தான் பாடத் தோன்றுகிறது. ஏன் தெரியுமா? ‘சன்’ குடும்பத் தொலைக்காட்சியில் 19.09.2010 காலை ஒரு செய்தி வெளியானது.

நடிகர் ரஜினிகாந்த நடித்த எந்திரன் திரைப்படம், தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தாரால் தயாரிக்கப்பட்டு அடுத்தமாதம் உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறதல்லவா, அந்த எந்திரன் படம் ஆயிரம் நாள் ஓடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் (ரஜினி ரசிகர்கள்) கோயில் படிக்கட்டுகளில் முட்டிபோட்டு ஏறிச்சென்று வழிபாடு செய்தார்களாம். ரஜினியின் உருவப் பதாகைகளுக்குப் பாலாபிசேகம்கூட செய்தார்களாம்.

இத்தகைய நிலைகெட்ட மனிதர்கள் காலம் தோறும் இருக்கத்தான் செய்வார்கள் என்பதற்காக நெஞ்சு பொறுக்காமல் அன்றே பாடினார் போலும் பாரதி. தமிழக முதல்வர் குடும்பத் தொலைக்காட்சிகள் அனைத்தும் அன்று முள்ளிவாய்க்கால் 4ஆம் கட்ட ஈழப்போரில், ஈழத்தமிழர்கள் சிங்கள இராணுவத்தின் கொத்துக் குண்டுகளாலும், இரசாயனக் குண்டுகளாலும் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்ட போது அலறித்துடித்து அந்த அப்பாவித் தமிழர்கள் பெண்டு, பிள்ளைகளோடு, பதுங்கு குழிகளுக்குள் ஓடி தஞ்சம் புகுந்த போதிலும் வன்னெஞ்சர்கள் சர்வதேசப் போர் விதிமுறைகளையும் மீறி இராணுவ டாங்குகளால், உயிருடன் துடிதுடிக்க ஏற்றிச் சிதைத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தையும், தமிழ் இளைஞர்கள் கூட்டங்கூட்டமாக கைகள் பின்புறம் கட்டப்பட்டு, சிங்கள இராணுவத்தினால் நிர்வாணமான நிலையில் சுட்டுக்கொன்ற சொல்லொணாத் துயரச் சம்பவங்களையும் சேனல்4, சி.என்.என், பி.பி.சி, ஏ.பி.சி போன்ற தொலைக்காட்சிகள் உலகம் முழுவதும் ஒலிபரப்பின. அப்பட்டமான அந்த தமிழினப் பேரழிவு அவலங்களைப் பார்த்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்து உறைந்துப் போயினர். தாங்கள் வாழும் நாடுகளிலெல்லாம் தமிழினத்திற்கெதிராக நடந்தேறிய போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையையும் வீதியில் நின்று போராடி உலக மக்களுக்கு உணர்த்தினர்.

ஆனால் மனித நேயம் சிறிதும் இன்றி தமிழைக்காட்டி, தமிழனைக்காட்டி பிழைப்பு நடத்தும் கருணாநிதிக் குடும்பத் தொலைக்காட்சிகள் அந்த சூழ்நிலையில்கூட, மானாட மயிலாட என்று குத்தாட்டம் போட்டுக் குதூகலித்துக் கிடந்தனர். அம்மணமாக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் கைகள் கட்டப்பட்டு பிடரியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட இலண்டன் சேனல்4 காணொலிக் காட்சிகளைச் சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே பாணியில் அவை கிராபிக்சுக் காட்சிகள் என ஏகடியம் பேசினர். ஆனால் ஐ.நா.அமைப்பு அவற்றை ஆய்வு செய்து அந்த சேனல்4 காட்சிகளி;ல் அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக உறுதி செய்தது.

வெளிநாட்டு ஊடகங்களும், இணைய தளங்களும் ஈழத்தமிழர்களுக்கெதிரான இலங்கை இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்த எத்தனையோ ஆதாரங்களை அடிக்கடி வெளியிட்டு வருகின்றன. கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகளில் இது பற்றிய செய்திகள் எதுவும் வெளிவராமல் எச்சரிக்கையாய்ப் பார்த்துக் கொண்டனர். 2010 சனவரியில் வடஅயர்லாந்து டப்ளின் மக்கள் நீதிமன்றம், , இரண்டு நாட்கள் ஆய்வு செய்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட ஆதாரங்களை முன்வைத்து ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்திற்கு இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தது. இதுபற்றிக்கூட கருணாநிதி குடும்பத்தாரது தொலைக்காட்சிகள் கண்டும் காணாமல் நடந்து கொண்டன.

ஐ.நா.பொதுச்செயலாளர் பான்.கீ.மூன் இலங்கை போர்க்குற்றம் புரிந்துள்ளதா என்பதை ஆராய்ந்து பரிந்துரை செய்திட மர்சுகி தரூஸ்மன் தலைiயில் மூவர் கொண்ட குழுவை நியமனம் செய்ததையோ, அதை எதிர்த்து இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகத்தை, சிங்களர்கள், இலங்கையின் வீட்டுவசதித் துறை அமைச்சர் தலைமையில் முற்றுகையிட்டு அதிகாரிகளைச் சிறைபிடித்து வைத்தனர். ஐ.நா.மன்றத்தை அவமதித்த சம்பவத்தை இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூட கண்டித்தார்.

ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் பல ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவை வரவேற்றன. ஆனால் இந்தியா இன்றுவரையில் இதுபற்றி எந்தவிதக் கருத்தும் வெளியிடவில்லை. தமிழ்நாட்டில் உள்ள நெடுமாறன், தா.பாண்டியன், வை.கோ, செந்தமிழன் சீமான் உள்ளிட்ட பல தலைவர்கள் ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவிற்கு இந்தியா ஆதரவு அளிக்க, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி நடுவண் அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் எனப் பலமுறை கேட்டும் இதுபற்றிய செய்திகளைக் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகள் ஒருபோதும் வெளியிட்டது கிடையாது.

“வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” எனக் கலைஞர் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்கிறார்களே, தமிழரை வீழ்த்திவிட்டு தமிழை மட்டும் எப்படி இவர்கள் வாழ வைப்பார்கள்? “தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் எறிந்தாலும் அமிழ்ந்து போகமாட்டேன்;; கட்டுமரமாய் மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்” என்று கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சியில் வசனம் பேசினால் மட்டும் போதுமா? கருணாநிதி என்கிற இந்த “வெள்ளை வேனை” நம்பி தமிழர்கள் பத்திரமாக பயணம் செய்ய முடியுமா?

போர் முடிந்து ஓராண்டு கடந்த பிறகும் இன்னும் சிங்கள இராணுவக் கெடுபிடிகள் தமிழர் பகுதியில் ஓய்ந்தபாடில்லை. அங்கு வாழ இயலாத நிலையில் ஈழத்தமிழர்கள் சிலர் பகீரதப் பிரயத்தனம் செய்து படகிலேறி தப்பி வந்தால், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற தூரத்து நாடுகள் விசாரணை நடத்திய பிறகாவது மனிதாபிமானத்தோடு அகதியாக ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தளங்களில் வழிப்படச் செல்லும்போதே தடுத்துக் கைது செய்யப்படுகிறார்கள். சுற்றுலாத் தளங்களில் மடக்கிப்பிடித்து முகாம்களுக்கு திருப்பியனுப்பப்படுகிறார்கள்.

இலங்கைத் தமிழரானாலும் சரி, கடலோரத் தமிழக மீனவராயினும் சரி, தமிழன் என்ற ஒரே காரணத்திற்காகச் சுட்டுக் கொல்கின்ற போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்தியாவில் திருப்பதி கோயிலில் சிவப்புக் கம்பள வரவேற்பு – அரச மரியாதை. ஆனால் விடுதலைப் புலிகள் எனப் பூச்சாண்டிக்காட்டி தமிழரை அகதியாகக்கூட இந்தியா கெடுபிடி செய்து ஏற்க மறுக்கிறது என்றால், உலகத் தமிழர்களின் நெஞ்சம் பதைக்காதா? இத்தகைய தமிழர்களுக்கெதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எல்லாம் கருணாநிதி ஒத்து ஊதிக்கொண்டே இருந்தால், வரலாறு அவரைத் தமிழனத் துரோகி எனத் தூற்றும் என்பதைப்பற்றிக்கூட கருணாநிதி கவலைப்டவில்லையே.

தமிழர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன, தம்குடும்பம் செழித்துச் செல்வந்தரானால் போதும் என்று அரசியலில் இந்தியாவை வளைத்துப்போட்டது போல், திரைப்படத் துறையையும் கருணாநிதி தனது குடும்பக்கூடாரமாக்கி வளைத்துப்போட்டு விட்டார். கொள்கையில் திராவிட நாட்டை அடையாவிட்டாலும், தனது குடும்பத் தொலைக்காட்சிகளைத் திராவிட மாநிலங்கள் தோறும் திறந்து (திராவிட நாட்டை) குடும்பத்தின் குத்தகை வருமானமாக்கி அடைந்துவி;ட்டார். இனித் தமிழருக்கு காவிரி டெல்டா பகுதியில் முப்போகம் முழுதாய் விளைந்து தமிழ்நாடு செழித்துவிடப்போகிறது என்று அப்பாவித் தமிழர்கள் நம்பினாலும் நம்புவர்.

முல்லைப் பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த உச்சநீதி மன்றம் ஆய்வு ஆணை பிறப்பித்தும், அடாவடியாகக் கேரளா மறுப்பதை எதிர்த்துப் போராட தமிழரைத் தட்டி எழுப்பக் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகள் முன்வரவில்லை. ஆனால் கருணாநிதி குடும்பம் தயாரித்த எந்திரம் படம் ஆயிரம் நாட்கள் ஓடத் தமிழர்களைக் கோயில் படிக்கட்டுகளில் முட்டி போடமட்டும் முனைப்புடன் பிரச்சாரம் செய்கிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் போட்டியாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களாகிய நாமும் தமிழினத்தை வேரறுக்கத் துணை போகிற கருணாநிதிக் குடும்பத் தயாரிப்பான எந்திரன் படத்தைப் பார்த்து ஐரோப்பா யூரோக்களாகவும், இங்கிலாந்து பவுண்டுகளாகவும், அமெரிக்க டாலர்களாகவும், மலேசிய ரிங்கிட்டுகளாகவும், சிங்கப்பூர் வெள்ளிகளாகவும் வாரிக்கொடுத்து கருணாநிதி குடும்பக் கருவூலத்தை நிரபபப் போகிறோமா?

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் புரிந்த நாடு என்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கைக்கான ஜி.எஸ.பி வரிச்சலுகையை இரத்து செய்து இலங்கைக்குப் பொருளாதார நெருக்கடிகள் தருகின்றன. ஆனால் தமிழராகப் பிறந்த காரணத்திற்காக – தமிழ்ப் பேசுகின்றோம் என்கிற பாவத்திற்காக தொடர்ந்து இனஅழிப்புக்கு ஆளாகி அழிந்து வருகிறோம். நம்மினத்தை அழிப்பவர்கள் செழிப்படைய – நாம் நமது வருவாயை எள்ளுந் தண்ணீராய் இறைத்து வீணாக்க வேண்டுமா?

எந்திரன் படத்தைப் புறக்கணித்தால் எம்மினம் விடுதலைபெற்று விடுமா என்று சிலர் கேட்கலாம். மண்ணைத் துறந்து, மக்களை இழந்து நாடுநாடாய் திரிந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாம் இன்று வாழ்வது ஒரு வாழ்க்கையா? நம் காலை மிதிப்பவரின் தலையை மிதிக்கும் தன்மானச் சூழல் தற்போது நமக்கு இல்லாமல் இருக்கலாம். அதற்காக நமது உள்ளக்குமுறலை வெளிபடுத்தும் ஒரு வழிமுறையாக இதைக்கூடவா நம்மால் தியாகம் செய்யமுடியாது? நமக்கொரு நாடு வேண்டுமென்பதற்காக போராளிகளும், பொதுமக்களும் இலட்சக்கணக்கில் உயிர்த்தியாகம் செய்துள்ள அவல நேரத்தில், தமிழினத் துரோகிக் குடும்பப் படங்களைப் பார்த்துக் குதூகலித்துக் கிடப்பது எந்தவகையில் இனப்பற்றாகும்? நமது தாய்மார்களும், சகோதரிகளும், பச்சிளங்குழந்தைகளும் ஒவ்வொரு முறையும் குண்டுவீச்சுக்கு ஆளானபோது உடல் சிதறி உயிர்துடித்து ஓலமிட்டு அலறியபோதும், வெடித்துச் சிதறி அங்கமெல்லாம் சிதைந்து சின்னாபின்னமாகியதைக் கண்டபிறகும் கல்மனம் கொண்ட இரக்கமற்ற இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அனைத்தும் போரை நிறுத்தாமல் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்படும் அகோரத்தை வேடிக்கையல்லவா பார்த்துக் கொண்டிருந்தன.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, இன்று வரை இந்தியா, இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடைபெறாமல் தடுக்க அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளிடம் என்னென்னவோ முயற்சிகள் எடுக்கிறதே தவிர, தமிழர்களை மீள்குடியமர்த்த எவ்வித அக்கரையும் காட்டவில்லையே. வடக்கு-கிழக்கு பகுதிகள் புத்த விகாரைகளாகவும், சிங்கள குடியிருப்புகளாகவும், சிங்கள இராணுவக் கட்டமைப்புகளாகவும் மாற்றப்பட்டு வருவதை தடுக்க முடியவில்லை. குறைந்தது வதைமுகாம்களில் உள்ள போராளிகளையாவது விடுவிக்க உதவினார்களா? முள்வேளி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு இலட்சம் தமிழர்களை மீள்குடியமர்த்த முயற்ச்சிக்காமல், இலங்கை அரசுக்கு ஆயிரமாயிரம் கோடி ரூபாய்களை உதவிகளாய் அள்ளித்தருகிறது இந்தியா.

இதற்கெல்லாம் உறுதுணையாய் இருக்கும் தமிழினத்துரோகி கருணாநிதியின் குடும்பத் திரைப்படங்களை நாம் பார்த்து திரை செலுத்திக் கொண்டிருக்க வேண்டுமா? கன்றுக்கு அநீதி இழைத்ததால், தான் பெற்ற ஒரே மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் வாழ்ந்த தமிழகத்தில் இன்று தம் மகன்கள், பேரன்களுக்காகவும், தமிழினத்தையே அழித்துக்கொன்ற ராஜபக்சே, சோனியா,மன்மோகன்சிங் நலன்களுக்காகவும் முறைவாசல் செய்துக் கொண்டிருக்கும் துராகிகளுக்கு நமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தி எச்சரிப்பதற்காகவாவது எந்திரன் படத்தை புறக்கணிக்க நாம் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். தமிழகத்தின் நம்மினச் சொந்தங்கள் முத்துக்குமாருடன் 16 தமிழர்களும் நம் உறவு முரகதாசும் நமக்காக தங்களது இன்னுயிரை தீக்கிரையாக்கி வீரச்சாவு அடைந்தனரே. அவர்களது தியாகத்தை எண்ணியாவது நாம் துரோகிகளின் தயாரிப்பில் வெளிவரும் எந்திரன் படத்தை புறக்கணிக்க வேண்டும். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதை மெய்ப்பிக்க நமக்கு இதுவொரு அரசதந்திர வாய்ப்பு; நழுவ விடாதீர்கள்!

எந்திரன் படத்தைப் புறக்கணிப்போம்! தமிழினத் துரோகி கலைஞர் குடும்பத்தாரின் கனவை முறியடிப்போம்!!

கருணாநிதிக்கு வாத்தியார் காமராஜர்!



சட்டமன்றத்தில் திமுக முதற்பெரும் எதிர்க்கட்சியாய் நுழைந்த நேரம்… நாவலர் நெடுஞ்செழியன்தான் எதிர்க் கட்சித் தலைவர். இரவு முழுவதும் பல்வேறு குறிப்புகளைத் தயார் செய்துகொண்டு சென்றிருந்தார். பொருளாதாரத்தில் ஆடம்ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை அனைத்து மேதைகளும் கூறிய பொன்மொழி களை அழகாக நாவலர் எடுத் துக் கூறிக்கொண்டிருந்தார்.

காமராஜர் அவரைப் பேசவே விடவில்லை. “அவர்கள் சொன்னது இருக்கட்டும்… நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.
இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததாலும், காமராஜரின் இந்தத் ‘தொடர் தாக்குதலாலும்’ நாவலர் நெடுஞ்செழியன் திடீ ரென சட்டமன்றத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார்.
அப்போது எங்களுக்கெல்லாம் கட்டுமீறிக் கண்சிவந்த கோபம். ஆனால், இப்போது நினைத்துப் பார்க்கிறபோது, காமராஜரின் அன்றைய கேள்விகளில் ‘நியாய ரேகை’ ஒளிவிடுகிறது.
அடுத்தது கலைஞர் பேச்சு!

அவரும் ‘இசைக்கருவிகள் முழங்கினால் நெற்பயிர் வளரும்’ என்பதற்கு அடுக்கடுக்கான காரணங்களை – ஆதாரங்களை எடுத்துக் கூறிக்கொண்டிருந் தார்.
காமராஜர் கேட்டார்… “சட்டசபையிலே இதை எல்லாமா பேசறது?”
“சட்டசபையில் என்ன பேசுவது என்று நீங்கள் எழுதிக்கொடுங்கள்… நாங்கள் பேசுகிறோம்!” என்று கூறிவிட்டுக் கலைஞர் அமர்ந்தார்.

திமுக- வின் சட்டமன்றப் பயிற்சிக்கு, காமராஜர் கைப்பிரம்பு தூக்கிய ஒரு ஆசிரியரே!
காமராஜர் பட்டப்படிப்பு படிக்காதவராக இருக்கலாம். ஆனால், அவரது பட்டறிவு, வாளின் கூர்மை போன்றது. அதனால்தான் அந்தப் படிக்காத மேதையைச் சுற்றி படித்த மேதைகளின் கூட்டம் மொய்த் துக் கிடந்தது.
பொதுக்கூட்டத்தில் அவருக்கு முன் பேசுபவர்கள் யாராவது வரம்பு மீறி எதிர்க் கட்சித் தலைவர்களைத் தாக் கினால், தடுத்து நிறுத்திவிடுவார். கவிஞர் கண்ணதாசனும் இந்தக் ‘கில்லட்டின் வாளில்’ பலமுறை மாட்டிக்கொள்வார். “அந்தக் கவிராயரை உட்காரச் சொல்லய்யா” என்று சத்தம் போட்டுச் சொல்வார் காமராஜர்.

அந்தக் காலத்தில் அவரைத் தாக்கி எதிர்க்கட்சிகள் பேசியது போல் வேறு எந்தக் காலத்தி லும் இல்லை எனலாம். ஆனால், “ஆளுங்கட்சிக்கு அரசாங்க வேலை! எதிர்க்கட்சிக்கு என்ன வேலை? நம்மைப் பத்திப் பேசற பிழைப்புதானே? அவன் பிழைப்பிலே ஏன் மண்ணைப் போடறே?” என்று வெளிப்படையாகவே கேட்பார்.
நையாண்டி படத்துக்காக (கார்ட்டூன்) கைது செய்கிற இந்தக் காலத்தையும் பார்க்கிறோம். அவரது காலத்தில் அவரைக் கன்னாபின்னா என்று நையாண்டி ஓவியம் வரைந்தபோது காமராஜர் கூறினார்… “ பொம்மையைக் கண்டு ஏன் பயப்படறே? உண்மையைக் கண்டு பயப்படு! போ… போ..!”

‘ஹைதராபாத் வங்கியில் ஒன்றரைக் கோடி ரூபாய் போட்டிருக்கிறார் காமராஜர்’ என்ற வதந்தி பரவி – மேடைப் பேச்சாகி – அறைகூவல் வடிவில் வந்தது.
“எவனோ எதையோ சொல்றான்… விடு! எனக்கு யானைக்கால் வியாதின்னு யாராவது சொன்னா, ஒவ்வொருத்தர் கிட்டேயும் நான் போய் என் காலைக் காட்டிக்கிட்டா இருக்க முடியும்?” என்று கேட்டார் காமராஜர்.

அடேயப்பா! தன்னைப் பற்றியும் தனது நேர்மையைப் பற்றியும் எத்தனை அழுத்தமான நம்பிக்கை! அந்த நம்பிக்கை குறைகிற தலைவர்கள்தாம் தன்னைப் பற்றித் திறனாய்வு செய்கிறவர் தலையைத் திருகி சிதறு தேங்காய்போல வீசிட நினைக்கிறார்கள்.
-அடியார்

நன்றி: ஆனந்த விகடன்

Sunday, September 26, 2010

காமன் வெல்த் அல்ல காங்கிரஸ் வெல்த் இந்தியாவின் அவமானம்



சர்வதேச நாடுகளுக்கு இந்தியாவின் செல்வாக்கை நிரூபித்துக் காட்டும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளால், நாட்டின் ஒட்டுமொத்த கவுரவத்துக்கும் பலத்த அடி விழுந்துள்ளது.


போட்டி ஏற்பாடுகளில் ஊழல், கட்டுமானப் பணிகளில் முறைகேடு, டெங்கு பீதி, விளையாட்டு கிராமத்தில் சுகாதாரக் கேடு, ஸ்டேடியத்தின் கூரை இடிந்து விழுந்தது, நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது, பயங்கரவாத மிரட்டல் என, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், சர்ச்சை போட்டிகளாக மாறிப் போய் விட்டன.பாதுகாப்பு ஏற்பாடுகளையும், சுகாதாரக் குறைபாட்டையும் காரணம் காட்டி, நியுசிலாந்து, கனடா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகள், போட்டியில் பங்கேற்க தயக்கம் தெரிவித்துள்ளன. விளையாட்டு கிராமத்துக்கு வந்து பார்த்த, இந்த நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், அங்கு தெருநாய்கள் சுதந்திரமாக திரிவதையும், கழிவறைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதையும் கண்டு, திகைத்துப் போயினர். இவர்களில் சிலர், "ஆளைவிட்டால் போதும்' என, மறுபேச்சு எதுவும் இல்லாமல், தங்கள் நாடுகளுக்கு பறந்து விட்டனர்.


கப்பலேறும் மானம் : காமன்வெல்த் கிராமத்தில் வீரர்கள் தூங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள படுக்கைகளில் தெருநாய்கள் குதித்து விளையாடியதற்கான தடயங்களையும், தெருநாய்கள் ஆங்காங்கே சுற்றித் திரிவதையும், கழிவறைகள் சுகாதாரமற்ற வகையில் அழுக்கு படிந்து காணப்படுவதையும் காண முடிகிறது. போதாக்குறைக்கு, சில வெளிநாட்டு "டிவி' சேனல்கள், இந்த காட்சிகளை அடிக்கடி ஒளிபரப்பி, நம் மானத்தை வாங்கினர். "வரும் 2020ல் இந்தியா வல்லரசு நாடாகி விடும்' என்ற அரசியல்வாதிகளின் "பில்டப்'களை அடித்து நொறுக்கும் வகையில் அமைந்து விட்டது, காமன்வெல்த் போட்டிகளில் நடக்கும் குளறுபடிகள்.



காமன்வெல்த் போட்டிகள் : காமன்வெல்த் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்த 2006ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் போட்டிகள் நடந்தன. இதை தொடர்ந்து, தற்போது டில்லியில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இந்த போட்டிகளில் 71 நாடுகளை சேர்ந்த 8,500 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடப்பது, இதுதான் முதல் முறை. ஆசியாவில் இரண்டாவது முறையாக இந்த போட்டிகள் நடக்கின்றன. கடந்த 1998ல் கோலாலம்பூரில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தன.



ஒவ்வொரு நாட்டுக்கும் ரூ.48 லட்சம் : இந்த காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்காக, இந்தியா, கனடா நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் தலா 48 லட்ச ரூபாய் தரப்படும் என்றும், வீரர்களுக்கான விமான டிக்கெட், தங்குமிடம், உணவு, போக்குவரத்து ஆகியவற்றுக்கான செலவையும் ஏற்றுக் கொள்வதாக இந்தியா உறுதி அளித்தது.இதையடுத்து, காமன்வெல்த்தில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தன. இறுதியில் 46-22 என்ற ஓட்டு வித்தியாசத்தில் காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா வெற்றி பெற்றது.



செலவு எவ்வளவு?இந்தியாவில் நடக்கும் போட்டிக்காக 11 ஆயிரத்து 494 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், இதற்காக 36 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போட்டிகளை நடத்துவதற்காக கட்டமைப்பு பணிகளை செய்வது, விளையாட்டு அரங்கங்களை அமைப்பது மற்றும் புதுப்பிப்பது ஆகியவற்றுக்காக 27 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த செலவில் பெரும்பகுதி, "ஊழலில் கரைந்து விட்டதாக' மீடியாக்கள் அம்பலப்படுத்தின.



எங்கெங்கு காணினும் ஊழல் : தொடர் ஜோதி ஓட்ட ஏற்பாடுகள், போட்டி ஒளிபரப்பு உரிமை, விளம்பரதாரர் உரிமை என, ஆரம்பத்திலேயே போட்டி ஏற்பாடுகளில் பெருமளவில் ஊழல் நடந்ததாக தகவல் வெளியானது. இப்போட்டிக்காக, கடந்த ஆண்டு தொடர் ஜோதி ஏற்றி, ஓட்டத்தை தொடங்கி வைத்த பிரிட்டன் ராணியே, தனது கவலையை தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. ஆனாலும், அதிகாரிகள் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை.டில்லியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, விளையாட்டு அரங்கங்களை புதுப்பிப்பது, நடை மேம்பாலங்களை அமைப்பது, வீரர்களுக்கு தேவையான விளையாட்டு கருவிகளை வாங்குவது என, எங்கெங்கும் ஊழல் கரை கடந்தது. குறிப்பாக, மிகவும் விலை குறைந்த பொருட்களை, அதிக விலைக்கு வாங்கியதாக கணக்கு காட்டப்பட்டது. கட்டுமானப் பணிகளிலும் இதே நிலை தான். தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தியதால், நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது.



ஊழல் கண்காணிப்பு ஆணையம் அதிரடி : காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல் குறித்து தினமும் செய்திகள் வெளியானதும், மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆணையம் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. காமன்வெல்த் போட்டிகளின் 14 திட்டப் பணிகளில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியது.குறிப்பாக, திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தம் அளித்தது உள்ளிட்ட பணிகளில் முறைகேடு நடந்ததாக அறிக்கை தாக்கல் செய்தது. இதன் தொடர்ச்சியாக, போட்டி ஏற்பாட்டு குழுவின் இணை இயக்குனர் பொறுப்பில் இருந்த தர்பாரி என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.டென்னிஸ் கோர்ட் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம், போட்டி ஏற்பாட்டு குழுவின் பொருளாளர் அனில் கண்ணாவின் மகனுக்கு அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அனில் கண்ணா ராஜினாமா செய்தார். காமன்வெல்த் பணிகளில், குழந்தை தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்படுவதாக, பிரிட்டன் பத்திரிகை ஒன்று, புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு, தன் பங்கிற்கு இந்தியாவின் மானத்தை கப்பலேற்றியது.



வெள்ளம் : ஊழல் ஒரு பக்கம், போட்டிகளுக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்த, மறுபக்கம் இயற்கையும் தன் பங்கிற்கு விளையாடியது. அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பெய்த வரலாறு காணாத மழையால், டில்லியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட மைதானங்கள் சேதமாயின. சாலைகள், மேம்பாலங்கள் ஆகியவற்றின் கட்டுமானத்துக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களும், தண்ணீரில் மிதந்தன. வீரர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு கிராமம், வெள்ள நீர் சூழ்ந்து தீவு போல் காட்சியளித்தது. அங்கு தேங்கியிருந்த தண்ணீரால், கொசுக்கள் உருவாகி, டெங்கு, மலேரியா போன்ற நோய்களை உருவாக்கி, போட்டி ஏற்பாட்டாளர்களை கதறடித்தன.


பயங்கரவாதம் : இந்தியாவுக்கு நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து கொண்டிருந்த பயங்கரவாத பிரச்னையும், காமன்வெல்த் போட்டிகளில் ஊடுருவியது. போட்டிகள் துவங்குவதற்கு சில நாட்களே உள்ள சூழ்நிலையில், டில்லி ஜும்மா மசூதி அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், தைவான் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்தியன் முஜாகிதீன் அமைப்பிடம் இருந்து, காமன்வெல்த் போட்டிகளுக்கு மிரட்டல் விடுத்து, இ-மெயிலும் வந்தது. இதை பார்த்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், தங்களால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு பீதியை கிளப்பி விட்டு, புண்ணியம் தேடிக் கொண்டன. காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்பின் தலைவர் மைக்கேல் பென்னல் தலைமையிலான குழுவினர், விளையாட்டு கிராமத்தை சுற்றிப் பார்த்து விட்டு, அதிருப்தி தெரிவித்தனர்.


அடி மேல் அடி :இதுபோன்ற பிரச்னைகளால் டில்லி காமன்வெல்த் போட்டிக்கு, தொடர்ந்து அடி மேல் அடி விழுந்து கொண்டிருந்தது. விளையாட்டு வீரர்களிடம் பீதி ஏற்பட்டு, சிலர் போட்டிகளை புறக்கணிப்பதாகவும் அறிவித்தனர். ஆனால், இதற்கெல்லாம் சாதாரண மக்கள் கவலைப்பட்ட அளவுக்கு கூட, விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளும், பொறுப்பாளிகளும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. "சர்வதேச அளவிலான ஒரு போட்டியை ஏற்பாடு செய்யும் போது, இதுபோன்ற குறைபாடுகள் எல்லாம் சகஜம்' என, "குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத கதையாக' பேசித் திரிகின்றனர். தங்கள் பாக்கெட் நிறைந்தால் போதும் என்ற நிலை தான் அவர்களுக்கு.


பிரதமர் தலையிட்டும் தீர்வு இல்லை : பிரச்னை பெரிதானதும், இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக தலையிட்டார். பிரதமர் வீட்டில் இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மத்திய அமைச்சர்கள் ஜெய்பால் ரெட்டி, கில், டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐ.மு., கூட்டணி ஒருங்கிணைப்பாளர் சோனியாவும் ஆலோசனைகளை வழங்கினார்.இதன்படி, போட்டிக்கான பணிகளை கண்காணிக்கும்படி, மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். இருந்தும், பிரச்னை தீரவில்லை.


அரசு என்ன செய்ய வேண்டும்? நம் நாட்டில் திறமையான முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களை கண்டறிந்து, போட்டி ஏற்பாடுகளை அவர்கள் கையில் ஒப்படைப்பதன் மூலம், நம் நாட்டின் மதிப்பு, சர்வதேச அளவில் கெடாமல் பார்த்து கொள்ளலாம். ஆனால், அதற்கு அரசுக்கு மனம் வர வேண்டும்.மேலும், போர்க்கால அடிப்படையில் விளையாட்டு கிராமத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போட்டி துவங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அரசு இயந்திரம் இதற்காக முடுக்கி விடப்பட வேண்டும். சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை நிரூபிக்கும் பிரச்னை என்பதால், இதற்காக ராணுவத்தை கூட பயன்படுத்தலாம். இல்லையெனில், எதிர்காலத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான விளையாட்டு போட்டிகளை மட்டுமல்ல, வேறு எந்த நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு, சர்வதேச நாடுகள் தயக்கம் காட்டும் சூழ்நிலை உருவாகி விடும். முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்காவிட்டால், சர்வதேச நாடுகளின் முன், நாம் தலைகுனிந்து நிற்கும் சூழல் உருவாகும். எது எப்படியோ, போட்டிகள் சிறப்பாக நடந்து முடிவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து விடுவோம்.


இந்தியாவால் முடியாதது இல்லை : சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்துவது என்பது, இந்தியாவுக்கு புதிய விஷயம் அல்ல. கடந்த 1951 மற்றும் 1982 ஆகிய ஆண்டுகளில் ஆசிய விளையாட்டு போட்டிகள் இங்கு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட வரலாறு உண்டு. எனவே, வெறும் 12 நாட்கள் மட்டுமே நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டிகளை நடத்துவது, இந்தியா போன்ற மனிதவளம் கொண்ட நாட்டுக்கு சிரமமான காரியமே அல்ல. ஆனால், போட்டி துவங்கியதில் இருந்து, முடிவது வரை அனைத்திலும் பிரச்னை என்றால், அடிப்படையிலேயே கோளாறு இருக்கிறது என்று தானே அர்த்தம்!


"கவுன் டவுண்' களேபரம் : போட்டிகள் துவங்குவதற்கு சில நாட்களே உள்ள கடைசி நேரத்தில் நடந்த "மெகா' குளறுபடிகள்:
* ஜவகர்லால் நேரு அரங்கில் 961 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. போட்டி துவங்குவதற்கு 11 நாட்கள் இருக்கும் போது, அரங்கின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இங்குள்ள நடைபாதை மேம்பாலமும் இடிந்து விழுந்தது.
* காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தின் பணிகள் 1,000 கோடி ரூபாய் செலவில் நடந்தன. வீரர்கள் வரத் துவங்கிய நேரத்தில் இங்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டது.
* இந்திரா காந்தி விளையாட்டு வளாகம், 669 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு சைக்கிள் போட்டி நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஓடுபாதைக்குள், தண்ணீர் கசிந்ததால், ஓடுபாதை சேதமடைந்தது.


குற்றச்சாட்டு பட்டியல் : டில்லி காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து மற்ற நாட்டு வீரர்கள் கூறிய குற்றச்சாட்டுகள்:


ஸ்காட்லாந்து: விளையாட்டு கிராமத்தில் தெரு நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. வீரர்கள் தூங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள படுக்கையில் நாய்கள் உற்சாகமாக விளையாடுகின்றன. அறைகளில் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன.
பிரிட்டன்: விளையாட்டு கிராமத்தில் உள்ள கழிப்பறைகள், சுகாதாரமின்றி உள்ளன. உள்ளே நுழையவே முடியவில்லை. இங்குள்ள மின்சார கருவிகளும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன.
கனடா: விளையாட்டு கிராமம் முழுவதும் குப்பை கூளங்கள் தேங்கிக் கிடக்கின்றன. அங்குள்ள சூழ்நிலையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது.
நியூசிலாந்து: தற்போதுள்ள நிலை, இன்னும் ஒரு சில நாட்களில் முற்றிலும் மாறி விடும் என கூற முடியாது.


யார் யாருக்கு என்ன பொறுப்பு? * எம்.எஸ்.கில் (மத்திய விளையாட்டு துறை அமைச்சர்), ஜெய்பால் ரெட்டி (மத்திய நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர்), ஷீலா தீட்ஷித் (டில்லி மாநில முதல்வர்) இவர்கள் மூவருக்கும் தான், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான முக்கிய பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. விளையாட்டு போட்டிகள் தொடர்பான திட்டங்கள், ஏற்பாடுகள் ஆகியவற்றை இவர்கள் தான் கண்காணிக்கின்றனர்.


*சுரேஷ் கல்மாடி: காங்கிரஸ் எம்.பி.,யான இவர், காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாட்டு குழு தலைவர். தொடர் ஜோதி ஓட்டம், வீரர்களுக்கான டிக்கெட், போக்குவரத்து, தங்குமிட வசதி, உணவு வசதி, துவக்க மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகள், டிக்கெட் விற்பனை ஆகியவை இவர் பொறுப்பில் தான் விடப்பட்டன. ஊழல் குற்றச்சாட்டு எழுந்த போது, கல்மாடி மீது தான் அதிகம் புகார் தெரிவிக்கப்பட்டது. தற்போது காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டு குழுவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளார்.


*ஒய்.எஸ்.தத்வால்: டில்லி டி.ஜி.பி.,யான இவர் பொறுப்பில் தான், பாதுகாப்பு ஏற்பாடுகள் விடப்பட்டுள்ளன.


*செல்ஜா: மத்திய சுற்றுலா துறை அமைச்சர். போட்டிகளை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்டவை இவர் பொறுப்பில் விடப்பட்டுள்ளன.


*அம்பிகா சோனி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர். போட்டிகளை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவது, தரமான முறையில் ஒளிபரப்பு வசதிகளை செய்து தருவது, செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது ஆகியவற்றை, இவரது தலைமையிலான அமைச்சரகம் தான் கவனிக்கிறது.


"இதுபோன்ற அரைகுறையான போட்டி ஏற்பாடுகளை இதுவரை என் வாழ்க்கையில் பார்த்தது இல்லை. இதன் காரணமாக எதிர்காலத்தில், ஒலிம்பிக் போன்ற மிகப்பெரிய விளையாட்டு போட்டிகளை நம்மால் நடத்த முடியும் என, என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!'- மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த குஞ்சராணி தேவி, பளு தூக்கும் வீராங்கனை.

Saturday, September 25, 2010

உலகத்தமிழ் தியாகத்தின் திருமுகமானவனே



உலகத்தமிழ் தியாகத்தின் திருமுகமானவனே!
அகிம்சையே! உன்னை யாது என்று கூறுவது!
எம் தாய் நாட்டின் விடுதலைக்காக,
அந்நியர்களை வெளியேற்றுவதில்
அகிம்சை ஏந்தியவனே!!
அகிம்சைக்காக போராடிய,
அந்த காந்தி வம்சா வழியினரே - உன்
அகிம்சையை காலிற்கு
கீழ் போட்டு கசக்கி விட்டனர்...

காந்தி, "வெள்ளையனே வெளியேறு"
எனக்கத்தி அகிம்சை மூலம்,
தன் தாய் நாட்டின் விடுதலையை
வென்றெடுத்தார். - அதே தாய் நாட்டின்
விடுதலைக்காக, "இந்தியனே வெளியேறு"
எனக்கூறி, அகிம்சையை கையில் ஏந்திய
உன்னை மதிக்காதது என் ?????

நீ ஓர் மருத்துவனாக இருந்தாலும்,
உன்னை ஓர் மருத்துவனாலும்
காப்பாற்ற முடியாமல் போனதே!!
ஆனாலும், உன் உடலை
மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைத்து,
பல தமிழ் சாதனையாளர்களை
உலகிற்கு வெளிக்காட்டியவனே!!

ஊணின்றி, உணவின்றி - எமக்காக
பாடுபட்டவனே!! - உன் ஞாபகங்கள்,
எம்மை தொடரும்.. - உன் தியாகத்தை
இவ் வரலாறு புரிந்து விட்டதே...

அகிம்சைக்கு "காந்தி" என்பது மாறி
அகிம்சை என்றதுமே உன் பெயர் சொல்லும்
அளவுக்கு அகிம்சை வழியில்
விடுதலைக்காக போராடியவனே!!

அகிம்சை, தியாகம், தானம் என்றதுமே,
"திலீபன்" என்று ஆகி விட்டதே..
உன் அகிம்சை தொடரும்..
மூச்சிழுக்கும் நேரமெல்லாம் - உன்
முகமே ஞாபகம்...

காற்றலைகள் உன் பெயரை
காலமெல்லாம் கூறிடும்!!
காசி அண்ணன் பாடலை
தேனிசையில் கேட்போம்!!
பசியை மறந்த பிள்ளை,
நீ என்றும் இறப்பதில்லை...

http://www.facebook.com/photo.php?pid=192106&fbid=129482230435942&id=100001224967290&ref=nf

Friday, September 24, 2010

தேசத் துரோகிகள்



இயற்கையின் சீற்றத்தாலோ,அந்நியர் படையெடுப்பாலோ, பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அதை இந்தியாவுக்கு ஏதோ சோதனைக் காலம் என்று சமாதானப்படலாம். ஆனால், தெரிந்தே தான் பிறந்த தாய் நாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஏமாற்றினால் - அவமானத்துக்கு உள்படுத்தினால் அதை வேதனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சோதனைக் காலம் என்று ஒதுக்கிவிட முடியாது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க சரியாக பத்து நாள்களே உள்ள நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக புற்றீசல்போல புறப்பட்டு வரும் ஊழல்களும், அரைகுறையாக முடிக்கப்பட்டுக் கிடக்கும் பணிகளும், வெளிநாட்டவர் முன்னால் இந்தியாவை ஏளனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கி இருக்கும் சுகாதாரக் குறைவான ஏற்பாடுகளும் அதிர்ச்சியில் உறையவைக்கின்றன. ஒன்றா இரண்டா, ஏறத்தாழ 70,000 கோடி விரயமாக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று யாரும் நம்மை கட்டாயப்படுத்தவில்லை. நாமேதான் வலியப்போய், எங்கள் நாட்டில் காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் காட்டுகிறோம் என்று கேட்டுப் பெற்றோம். அதற்காக நாம் என்னென்ன சலுகைகளைத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று தெரியுமா?

தில்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் ஒவ்வொரு நாட்டுக் குழுவுக்கும் இலவச விமானப் போக்குவரத்துச் செலவு, தங்கும் வசதி, உள்ளூரில் பயணம் செய்ய இலவச வசதி, இவையெல்லாம் போதாதென்று பங்குபெறும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு லட்சம் டாலர் வழங்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் நமது தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை அள்ளி வீசியது மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டிகள் நடத்த அனுமதி கிடைத்தது முதல், இந்திய ஒலிம்பிக் கமிட்டி இஷ்டத்துக்குப் பணத்தை வாரி இறைக்கவும் தொடங்கியுள்ளது.

முதலில் 655 கோடி செலவாகும் என்று கருதப்பட்ட காமன்வெல்த் போட்டிகள் 11,490 கோடியாக செலவு கணக்கை அதிகரித்தது. இப்போது அது மேலும் அதிகரித்திருக்கிறது. இது போதாதென்று கட்டமைப்பு வசதிகள் என்கிற பெயரில் தில்லி அரசு செலவு செய்யும் தொகை சுமார் 17,000 கோடி. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, விளையாட்டு அமைச்சகம், மாநில அரசின் பொதுப்பணித்துறை இப்படி எல்லா துறைகளின் ஒட்டுமொத்த செலவுகளையும் - இதில் பெரும்பகுதி ஏப்பம் விடப்பட்டது என்பது வேறு கதை - சேர்த்துக் கணக்குப் பார்த்தால் ஏறத்தாழ 70,000 கோடி வரை காமன்வெல்த் போட்டிகள் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. ஏற்கெனவே இருக்கும் விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் கையாளப்பட்டிருக்கும் தொகையைக் கேட்டால் தலை சுற்றுகிறது.

ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம் 961 கோடி, இந்திரா காந்தி ஸ்டேடியம் 669 கோடி, தயான்சந்த் ஹாக்கி ஸ்டேடியம் 262 கோடி, கார்னிசிங் துப்பாக்கி சுடும் மைதானம் 149 கோடி என்று ஏறத்தாழ 44,459 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் மேம்பாட்டுக்கு 85 கோடியும், ஹைதராபாத் லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்துக்கு 80 கோடியும்தான் செலவாகி இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழலின் அளவு எத்தகையது என்பது புரியும்.

961 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள மேம்பாலம் உடைந்து விழுகிறது. தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், "அது ஒன்றும் பொது மக்களின் உபயோகத்துக்காகக் கட்டப்பட்டதல்ல' என்று சாக்குப் போக்கு கூறுகிறார். வெளிநாட்டு அணியைச் சேர்ந்தவர்கள் பார்வையிட வந்தபோது, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் தெரு நாய்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், கழிவறைகளில் வேலையாள்கள் அசுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் சென்றிருப்பதையும் பார்த்து அதிர்ந்துவிட்டிருக்கிறார்கள்.

பன்னாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் "விளையாட்டு கிராமம்' அசுத்தமாக, சுகாதாரமற்று இருக்கிறதே என்கிற வெளிநாட்டு விருந்தாளிகளின் கேள்விக்கு நம்மவர்கள் தரும் பதில் என்ன தெரியுமா? ""சுத்தம், சுகாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டினருக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும்'' என்பது. அதாவது, இந்தியர்களின் சுகாதாரஅளவு இதுதான் என்கிறார்களா? அப்படியானால், இவர்கள் பன்னாட்டு விளையாட்டு வீரர்களை அழைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த முன்வந்திருக்கக் கூடாது.

விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கேள்விகள் கேட்டால், தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதுபோல கேட்டும் கேட்காமலும் நகர்கிறார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அதற்கும் ஒருபடி மேலே போய், "எல்லாம் இப்படித்தான் இருக்கும், நம்ம ஊர் கல்யாணங்களைப்போல, விளையாட்டுத் தொடங்கிவிட்டால் சரியாகிவிடும்' என்று விட்டேத்தியாக பதிலளிக்கிறார்.

ஒரு வருடத்துக்கு முன்பே காமன்வெல்த் போட்டி அமைப்பாளர் குழுத் தலைவர் இந்தியா வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில், போட்டிக்கு முன்பு அரங்கங்களும், கட்டமைப்பு வசதிகளும் தயாராகுமா என்பது சந்தேகம்தான் என்று கூறியபோதே, பிரதமர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகி விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா? ஆனால், யாருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அசிரத்தை, எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல், எல்லாம் நடந்துவிடும் என்கிற பொறுப்பின்மை.

அதையே சாக்காக்கி, இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என்று பயமுறுத்தி, செலவுக்கான பட்ஜெட்டை அதிகரித்துவிட்டார்கள் இந்திய ஒலிம்பிக் குழுவின் பாவிகள். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. வேலையைத் துரிதப்படுத்த மீண்டும் கோடிக்கணக்கில் பணம் வாரி வழங்கப்பட்டது. இதை எல்லாம் சொல்லி என்ன பயன்?

விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் பத்து நாள்கள்தான் இருக்கின்றன. இன்னும் 30 சதவிகித வேலைகள் முடிவடையவில்லை. கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களில் ஆங்காங்கே பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. ஸ்டேடியங்களின் கூரையிலிருந்து பதிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உடைந்து விழுகிறது. சாலை வசதிகள், மின்சார வேலைகள் எல்லாமே அரைகுறை. தரக்குறைவான வேலைகள். அங்குலத்துக்கு அங்குலம் ஊழல் பல்லிளிக்கிறது.

வெளிநாட்டு வீரர்கள் பலர் தாங்கள் வருவதில்லை என்று கூறிவிட்டனர். ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் - நடக்க வேண்டாம், நடக்கக்கூடாது - நடந்தால், கேட்கவே வேண்டாம். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் வரமாட்டார்கள்.

70,000 கோடியில் இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 500 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக்கியிருந்தால், ஒலிம்பிக்கில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடியிருக்கலாமே! ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜிம்பாப்வே போன்றவைக்கு இருக்கும் முன்யோசனைகூட ஹார்வர்ட் பட்டதாரிகளான நமது மன்மோகன் சிங் குழுவினருக்கு ஏன் இல்லாமல் போயிற்று? இவர்களுடைய அசிரத்தை இப்போது இந்தியாவுக்கு உலகளாவிய அளவில் "ஊழல்' பதக்கத்தை அல்லவா தேடித்தந்திருக்கிறது.

எல்லோரும் இந்திய ஒலிம்பிக் கழகத் தலைவர் சுரேஷ் கல்மாதியை குற்றம் சாட்டுகிறார்கள். அவர் மட்டுமா குற்றவாளி? தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எல்லோரும்தான் குற்றவாளிகள். அணுசக்தி ஒப்பந்தம் தமது மானப்பிரச்னை என்று கருதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் பறிபோவதைப் பற்றி அக்கறை இல்லாமல் போயிற்றே, அவர் குற்றவாளி இல்லையா? கடந்த ஒரு வருடமாகப் பத்திரிகைகள் எச்சரிக்கின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுகின்றன.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் 70,000 கோடி விரயமாவதையும், தேசத்தின்
கௌரவம் கேள்விக்குறியாவதையும் வேடிக்கை பார்ப்பதற்காகவா நமக்கு ஒரு பிரதமர்? நமக்கு ஒரு மத்திய அரசு? நமக்கு ஒரு நிர்வாக இயந்திரம்?
இன்னொரு தேசப்பற்று மிக்க நாடாக இருந்தால், மேலே குறிப்பிட்ட அனைவரும் தேசத்துரோகக் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டிருப்பார்கள். என்ன செய்வது, இந்தியாவுக்கு அவமானங்களையும், தேசத் துரோகிகளையும் சுமப்பதே தலையெழுத்தாகிவிட்டது!

நன்றி-
http://computerraj.blogspot.com/2010/09/blog-post_8365.html

விஜய் நடிக்கும் படத்தில் ஈழ ஆதரவு கருத்துக்கள்: சிறைக்குள் சீமான் எழுதும் திரைக்கதை



இலங்கை கடற்படையை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் சிறையில் இருந்தபடியே மூன்று திட்டங்கள் தீட்டி அவற்றை சிறையில் இருந்து வெளியே வந்ததும் செயல்படுத்துவதற்கான பணிகளை துவங்கியுள்ளார்.

1.சிறைக்கு சென்றபிறகு ஈழப்போரில் திராவிட கட்சிகள் ஆரியருக்கு உதவி செய்ததன் மூலம் ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்தது என்று சிறையில் இருந்தபடி எழுதிவருகிறார்.

திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றிவிட்டு தொப்புள் குடி உறவான தமிழர்களை அழிக்க, மறைமுகமாக ஆரியர்களுக்கு செய்த உதவிகள் என்று அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.


இப்புத்தகத்திற்கு ’ஆரியம் வெல்ல..திராவிடம் செய்த உதவி’ என்று தலைப்பிட்டுள்ளார். சிறையை விட்டு விடுதலையாகி வெளியே வந்ததும் இப்புத்தக வெளியீட்டு விழாவில் நடத்த திட்டமிட்டுள்ளார்.

2.விஜய்யை வைத்து இயக்கும் படம்சிறையில் தாணு தயாரிப்பில் சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பகலவன் திரைப்படத்திற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.

சிறைக்குள் பகலவன் படத்துக்கான திரைக்கதை எழுதி வருகிறார் சீமான். சிறையில் இருந்தபடியே தன்னுடையை இணை,துணை இயக்குநர்களை வரவழைத்து பட விசயமாக ஆலோசனை நடத்துகிறார்.

படத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவான கருத்துக்கள் அதிகம் இடம்பெறும்படி திரைக்கதையில் மாற்றங்கள் செய்துள்ளதாக தெரிகிறது.விடுதலையானதும் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறதாம்.

3.கட்சியை பலப்படுத்த மாவட்டங்கள்தோறும் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்போகிறார் சீமான். வெளிநாடுகளில் உள்ள நாம் தமிழர் இயக்கத்திற்கும் நிர்வாகிகள் நியமிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

இதன் பின்னர் கட்சியின் மிகப்பெரிய மாநாடு ஒன்றை தமிழகத்தில் நடத்தவும், அம்மாநாட்டின் மூலம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் இயற்றவும் முடிவு செய்துள்ளார் சீமான்.

அதற்கான பணிகளை செய்யவும் கட்சி முக்கியஸ்தர்களிடம் ஆலோசனை கூறியுள்ளார் சீமான்.

Wednesday, September 22, 2010

பள்ளி சென்றுகொண்டிருந்த 21 மாணவர்கள் உடல் சிதறி இறந்தனரே: மறப்போமா?



அதிகாலைப் பொழுதொன்று குருதியில் உறைந்தது அன்று, அந்த நாளை நாம் மறப்போமா? தலைவாரி, பொட்டுவைத்து, பள்ளி சென்று வா என்று அம்மா அனுப்பிவைக்க, பத்திரமாக படித்துவிட்டு வீடு திரும்பி வா என அப்பாவும் சொல்லி அனுப்ப, வெள்ளை நிற பள்ளிக்கூட ஆடைகளை அணிந்து உல்லாசமாக, உற்சாகமாகச் சென்ற அந்த பிஞ்சுக் குழந்தைகள் மீது குண்டுபோட சிங்கள இனவெறியனுக்கு எப்படித் தான் மனம் வந்ததே தெரியவில்லை. பாவம்! பள்ளிக்குச் செல்லும் பிள்ளை அன்று வீடு திரும்ப மாட்டாள் என அம்மாவுக்கு முன்னரே தெரியாமல் போய்விட்டது. பாடசாலை சென்ற பையன் இனி வீட்டிற்கு பிணமாகத் தான் வருவான் என அப்பா நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

ராட்சஷக் கழுகாக பறந்துவந்த இலங்கை புக்காரா விமானங்கள் பாடசாலை என்று கூடப்பாராமல் குண்டுகளை வீசிச் சென்றது. அதில் 21 பாடசாலை மாணவர்கள் ஸ்தலத்திலேயே பலியானார்கள். சில மாணவர்கள் சிறிய காயங்களுக்கு உள்ளாகி இருந்தாலும், ரத்தப்போக்கு காரணமாக ஆசிரியரின் மடியில் பிணமானர்கள். கொஞ்சம் கொஞ்சமாக இரத்தம் வெளியேற, உடலில் உள்ள நாடி நரம்புகளில் இரத்த அழுத்தம் குறைவடைய, இறுதியில் மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைய, அது இதயத்தை நிறுத்தச் சொல்லி சமிக்ஞைகளை அனுப்ப, பரிதாபமாக துடிதுடித்து இறந்தனரே 21 குழந்தைகள். அவர்கள் சாவுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

எல்லாவற்றையும் பார்த்தும், பாராமுகமாக வாழ்ந்து வருகிறோம். இது போன்ற கொடுமைகள் வேறு ஒரு இனத்துக்கு நடந்திருந்தால், தமிழர்களை விட குறைவான எண்ணிக்கையில் அவர்கள் இருந்திருந்தால் கூட குறைந்த பட்சம் ஒரு தீர்வைக் கண்டிருப்பார்கள். ஆனால் எமது தமிழ் மக்கள் என்ன செய்கிறார்கள்? 22.09.1995 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான 21 மாணவர்களின் நினைவை நாம் சுமந்து நிற்கிறோம். எமது இனத்தைக் கருவறுக்க, சிங்கள இனவாதிகள் மாணவர்களைக் குறிவைத்தனர். கள்ளம் கபடம் ஏதுமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட மாணவர்கள் அணிந்திருந்த வெள்ளை ஆடைகளில் எல்லாம் ரத்தக் கறைகள்!

தமது குண்டு வீச்சில் 21 தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டோம் என்ற இறுமாப்பு சிங்கள வான்படைக்கு, கொன்றது பச்சை குழந்தையானாலும் சரி, அல்லது பிறந்து 3 நாள் ஆன குழந்தையானாலும் சரி, கொல்லப்பட்டது தமிழன் தானே என்று அவனுக்கு திருப்தி, இது போன்ற உணர்வுகள் அற்ற காட்டேரிகளோடு, சேர்ந்து வாழ்வோம் என சில தமிழர்கள் இன்னும் கொக்கரிக்கிறார்கள்! பாருங்கள்! உங்கள் பிள்ளைகளுக்கு இப்படி நடந்திருந்தால் நீங்கள் இப்படி பேசியிருக்க மாட்டீர்கள்!

அன்று கொல்லப்பட்ட 21 பிள்ளைகளின் பெற்றோர் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களின் துயரில் அதிர்வு இணையமும் பங்கு கொள்கிறது! விடியும் ஒரு நாள் என வீரப் பறை சாற்றி நிற்கிறது! வீறுகொண்டு எழு தமிழா அதை வீதிக்கு வீதி சொல்லிடு தமிழா என்று சொல்கிறது!

மாண்டவர் எல்லோரும் மலரட்டும் பூக்களாய், மலரப்போகும் எங்கள் சுதந்திர தேசத்தில்!

உலகின் அழகிய மணமக்கள் ! – சந்தனமுல்லை



உலகின் அழகிய மணப்பெண்ணை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உலகின் அழகிய மணமகனை?

ஜோசிய‌ர் சொன்னார் என்பதற்காக மாங்கல்ய தோஷத்தை நீக்க மரங்களை இரண்டு முறைகள் மணந்து, அதற்கு பின்னர் நடமாடும் மூன்றாவது மரத்தை மணந்த ‘உலக அழகி’ ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனையா நினைத்துக் கொண்டீர்கள் நீங்கள்? ச்சே..ச்சே….நிச்சயமாக அவர்கள் இல்லை.

உலகின் எந்த மூலைக்குப் போனாலும், ஏன் சந்திரனுக்கே சென்று வந்திருந்தாலும் சந்தியாவந்தனம் செய்வதை விடுவதில்லை - ஆவணி அவிட்டத்தை விடுவதில்லை – ஒரு சம்பிரதாயம் விடாமல் எல்லா சடங்குகளையும் நிறைவேற்றி,காசி யாத்திரைக்குச் சென்று அய்யர் வைத்து ஓதி நெருப்பை வலம் வந்து அம்மி மிதித்து நமது பண்பாட்டின் படிதான் திருமணம் செய்துக் கொள்வேன் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் பல தமிழர்களின் பகட்டான திருமணங்களுக்கு நடுவில் -‍உடலில் ஒரு பொட்டு தங்கம் இல்லாமல் பெண்களை அடிமையாக்கும் எந்த சம்பிரதாயங்களுககோ, மூடநம்பிக்கைகளுக்கோ, போலி ஆடம்பரங்களுக்கோ இடம் தராமல் தலைநிமிர்ந்து, ‘இந்த சமூகத்தின் எந்த அழுக்குகளும் கறைகளும் எங்கள் மீது படவிடமாட்டோம்’ என்று உறுதியான கொள்கையுடன் நடந்த திருமணத்தின் மணமக்களான தோழர்.அஜிதா மற்றும் தோழர்.பாண்டியன்-தான் அவர்கள் – உலகின் அழகிய மணமக்கள்!

ஆம்,அங்கு ஜோடிக்கப்பட்ட மேடை அலங்காரங்களோ கண்கவரும் மேடை வளைவுகளோ இல்லை; ஆனால் போலித்தனமில்லாத சுயமரியாதை இருந்தது.

கை கூப்பி வரவேற்கும் ஆட்டோமேடிக் பொம்மைகளோ, கல்கண்டு டப்பாக்களோ மணக்கும் சந்தனமோ இல்லை ; ஆனால், பார்க்கும் யாவரையும் நோக்கி புன்னகைக்கும் எளிமையும் தோழமையும் இருந்தது.

மண்டபத்தில், பளபளவென அடுக்கி வைக்கப்பட்ட புத்தம்புதிய சீர்வரிசை பாண்டங்களோ அட்டை பிரிக்கப்படாத வீட்டு உபயோகப் பொருட்களோ இல்லை ; ஆனால் “நாங்கள் விரும்பி ஏற்றுக் கொண்ட இவ்வாழ்க்கையை சமூகத்தின் விடுதலைக்காக இதுவரை தனியாக போராடிய வாழ்க்கையை இனி இருவருமாக ஒன்றாகத் தொடர்வோம்” என்ற உறுதியும், உத்வேகமும் இருந்தது.

திரை இசையை பாடி மகிழ்விக்கும் ஆர்கெஸ்ட்ராவோ, பட்டுப்புடவை சரசரப்புகளோ இல்லை; “கலகலப்பு என்பது இவற்றில் இல்லை, உண்மையான மகிழ்ச்சி என்பது போராட்டத்தில் இருக்கிறது” என்ற உறுதி இருந்தது. மக்களை சிந்திக்க வைக்கும் பேச்சாளர்களாலும், மக்களுக்கான கலையாலும் களை கட்டிய விழாக்கோலம் அங்கிருந்தது.

காது பிளக்கும் இரைச்சலான கெட்டிமேளம், நாயனங்கள் இல்லை; ஆனால் உடலின் ஒவ்வொரு செல்லையும் தூண்டி உணர்வுகளை புதுப்பிக்கும் பறையும் புல்லாங்குழலும் இருந்தது.

சாதியோ, மதமோ, காட்டுமிராண்டித்தனமான சம்பிரதாயங்களோ எதுவும் இல்லை; ஆனால் மனிதரை மனிதர் உள்ளன்போடு நேசித்து அவர்களின் உணர்வுகளை, உரிமைகளை மதித்து அங்கீகரிக்கும் உயர்ந்த பண்பு இருந்தது. தங்கள் மகன் மற்றும் மகளுக்காக காலங்காலமாக மக்களை அழுத்தி வைத்திருக்கும் போலி நம்பிக்கைகளை தூக்கியெறிந்து, புதிய சமூக மாற்றங்களை மனமுவந்து ஏற்கும் தெளிவும், தைரியமும், எதிர்கொள்ளும் துணிவும் அந்த பெற்றோர்களிடம் இருந்தது.

ஓ, சுய மரியாதைத் திருமணமா என்றா கேட்கிறீர்கள்…இல்லை…இல்லை….இது ஒரு புரட்சிகர திருமணம்!

சாதி மத சம்பிரதாயங்களை மறுத்த சுயமரியாதைத் திருமணங்களைக் கேள்விப்பட்டிருப்போம்; ஏன் பார்த்துமிருப்போம்.

ஆனால், கோடானுகோடி மக்களின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தோழர்களின் புரட்சிகரத் திருமணத்தை?

ஆம், முதல் முறையாக ஒரு புரட்சிகரத் திருமணத்திற்கு சென்று பங்கேற்ற பிரமிப்பிலிருந்தும் தாக்கத்திலிருந்தும் இன்னும் மீள முடியாமலிருக்கிறேன்.

மனித குல விடுதலைக்காக, கம்யூனிசமே தீர்வு என்று தான் நம்பும் கொள்கைகளுக்காக, அரசியல் சித்தாந்தங்களுக்காக சொந்த வாழ்க்கையை, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக‌களை துச்சமென மதித்து சமூகத்திற்காக வாழும் உன்னத நோக்கத்திற்காக அர்ப்பணித்துக்கொண்ட இரண்டு பேர் தங்கள் வாழ்க்கையை இணைத்துக் கொண்ட விழா அது! இதுதான் எவ்வளவு அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

மக்களின் நலனுக்காக தங்கள் உயிரை ஈந்து தியாகிகளான தோழர்களை நினைவு கூர்ந்தபடி விழா ஆரம்பமாயிற்று.மணமக்களின் பெற்றோர்கள் இருவரும் மேடைக்கு அழைக்கப்பட இரு தம்பதிகளும் மேடைக்கு வந்து வணங்கி அமர்ந்தனர்.அதன்பின், மணமக்கள் இருவரும் அழைக்கப்பட மேடையை நோக்கி இருவரும் நடந்து வந்தனர்.

பார்க்கத்தான் அது எவ்வளவு கம்பீரமாக கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது!

பெண்ணை அவமானத்துக்குள்ளாக்காத திருமண முறை எந்த மதத்திலாவது எந்த சாதியிலாவது இருக்கிறதா?

“திருமண மேடையில் எப்படிப் பெண்ணுக்குரிய லட்சணங்களோடு நடந்துக் கொள்ள வேண்டும், நீ பெண் என்பதால் தலைகுனிந்து நாணி கோணி தன்னியல்பாக இருப்பதை விட இயல்பைவிட்டு ஒதுங்கி வெட்கத்தை, குடும்ப வளர்ப்பை, மானத்தை நீ நடந்துக் கொள்ளும் முறையில்தான் காப்பற்ற வேண்டும்” என்றும் “அளவா சிரி, பல்லு தெரியயாம ஸ்மைல் பண்ணக் கத்துக்கோ” என்றும் அறிவுரைகள் வழங்கி, இத்தனைக்கும் மேலாக தலைகொள்ளாப் பூவை சடையில் தைத்து வைத்து நினைத்தாலும் தலை நிமிர்ந்து பார்க்க முடியாமல் மணப்பெண்ணை அலங்கார பொம்மையாகவே மாற்றியிருக்கும் திருமணங்கள் - முக்காடிட்டு பெண்ணை ஒரு தனி இடத்திலும், ஆணை ஒரு தனி இடத்திலும் அமர வைத்து, ஆணை மையமாக வைத்தே சம்பிரதாயங்களை நிறைவேற்றி, வரதட்சிணையை பேரேட்டில் குறித்துக் கொண்டு கையெழுத்திட்டு, இருவரையும் பொதுவாக ஒரு இடத்தில் இருவரும் அமரக் கூட வழியில்லாமல் மணவிழாச் சடங்குகள் நிறைந்த கட்டுக்கோப்பான திருமணங்கள் – முதலில் மணமகன் நடந்து வர பின்னாலேயே தலை குனிந்து மணமகள் நடந்து வரும் நடைபெறும் திருமணங்கள் -

இவை நடுவில் மணமகனும் இருவரும் சமமாக நடந்து வர எந்த திருமண மேடை அல்லது திருமண அமைப்பு அனுமதிக்கிறது?

இல்லை, அந்த மாற்றத்தைத்தான் எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள்? படித்திருக்கிறோம், உயர்ந்த பதவிகள் வகிக்கிறோம், உலகின் விலை உயர்ந்த காரை ஓட்டுகிறோம், ஊருக்கே முன்மாதிரியாக இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஏற்க மறுக்கும் மாற்றங்களை இந்தத் தோழர்களின் பெற்றோர்கள் வெகு இயல்பாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

பலருக்கு பின்னுதாரணமாக இருக்கும் பிரபலக் குடும்பங்கள் பார்ப்பனிய சடங்குகளையும் பிற்போக்குத்தனங்களையும் கடைபிடித்து உலகை பின்னோக்கி இழுத்துச் செல்கின்ற வேளையில் இந்த எளிய மக்கள் தங்களின் உயர்பண்பால் உலகை முன்னோக்கி தள்ளிச் செல்கிறார்கள். அப்பிரபல குடும்பங்களின் பெண்கள் தந்தைகளின் மடியில் அமர்ந்து கன்னிகாதானமாக வழங்கப்படுகையில், இங்கு ’நாங்களிருவரும் சரிசமமாக வாழ்வோம்’ என்று உறுதிமொழி எடுக்கிறார்கள்!

எப்படி சாத்தியமாயிற்று இது?

இந்த திருமணத்தில் தாலி இல்லை, சாதி மத சம்பிரதாயங்கள் இல்லை. இது வேறுபட்ட திருமண வடிவம் என்பதை பெற்றோருக்கும் தோழர் பாண்டியன் சொன்னபோது முதலில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது அவரது தந்தையிடமிருந்து. ஆனால், அவரது தாய் தோழருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். அதோடு நில்லாமல், “இந்த சம்பிரதாயங்கள் நம்மோடு போகட்டும்” என்று மணமகனின் தந்தையிடம் கூறி திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்திருக்கிறார். உறவினர்களையும் சமாளித்திருக்கிறார். சுவாரசியமானதென்னவெனில், அவரொன்றும் பெரும் படிப்போ அல்லது பெண்ணியம் பேசும் மெத்த படித்தவருமல்லர். தேயிலை தோட்டத்தில் தேயிலைக்க் கொழுந்துகளை பறிக்கும் ஒரு தொழிலாளி. தனது வாழ்வியல் மூலமாக அனுபவங்கள் ரீதியாக ஒரு பெண் இதை சொல்லும்போது அந்த வார்த்தைகள்தான் எவ்வளவு வீரியம் மிக்கதாக இருக்கிறது!

ஒருவேளை படித்தவர் இம்மாறுதலை எளிதாக ஏற்றுக்கொண்டிருந்தால் இதில் எவ்வித சுவாரசியமும் இல்லாமல் போயிருக்கும். ஆனால் முரண்பாடுகளின் மொத்த உருவமான நம் நாட்டில்தான் நடைமுறை முற்றிலும் வேறாக அல்லவா இருக்கிறது!

குழந்தை ஒன்று பிறந்துவிட்டாலே அதை எப்படி கரையேத்துவது என்ற கவலைப்படுவர்களை பார்த்திருப்போம். மேலும், அக்குழந்தை பெண்ணாக பிறந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம். ’வயித்துலே நெருப்பை கட்டிக்கிட்ட மாதிரி’தான். ’அதை எப்படி ஒருத்தன் கையிலே புடிச்சு கொடுக்கிறது’ என்பதே பெற்றோருக்கு மனதை அரிக்கும் கவலையாக இருக்கும். அது எந்த வர்க்கத்து பெற்றோராக இருந்தாலுமே! இதில் பெற்றோரை அந்த நிர்பந்தத்துக்கு தள்ளுவது எது? திருமணத்தோடு சீரும் காரும் பங்களாவும் குறைந்த பட்சம் பைக்கும் எதிர்பார்க்கும் நமது சமூகச் சூழல்தானே!

”எங்கே, செக்கோஸ்லாவேகியா சொல்லு” என்றும் இன்று இவ்வளவு முதலீடு செய்தால் 20 வருடங்களில் இவ்வளவு தொகை வரும் என்றும் மாதந்தோறும் மியூச்சுவல் ஃபண்டில் ஆயிரமாவது கட்டினால் ஐந்து வருடங்களில் இவ்வளவு கிடைக்கும் கணக்கிடும் தந்தைகளை பார்த்திருப்போம். அவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் தோழர் அஜிதாவின் தந்தை. எந்திரனில் கையை காலை ஆட்டி கோடிகளில் சம்பாரித்து மகளின் திருமணத்தை நடத்திய தந்தையில்லை அவர்.ஆனால் அந்தத் தந்தைகள் தங்கள் மகள்களுக்கு கொடுக்காததை தனது மகளுக்கு கொடுத்திருத்திருக்கிறார் இவர். விவசாயம் பொய்த்து போனதன் காரணமாக திருப்பூருக்கு சென்று பனியன் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளி. சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்துக் கொண்ட குற்றத்திற்காக மகளை கொல்லும் தந்தைகள் மத்தியில், ஒரு பெருமைமிகு வாழ்க்கையை, அதை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமையை தனது மகளுக்குக் கொடுத்திருக்கிறார்.

தன் மகள்களை டாக்டராகவோ, இன்ஜினியராகவோ ஆக்கத் துடிக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் அஜிதா சிறுமியாக இருக்கும்போதே ம.க.இ.க கலைக்குழுவில் சேர்த்துவிட்டு “தனது மகள் மக்கள் தொண்டாற்றட்டும்” என்று பெருமை கொண்டவர் அந்த தந்தை. “எங்களுக்கு மொய் தேவையில்லை, அன்பளிப்பாக கொடுப்பதாக இருந்தால் புத்தகங்களை பரிசளித்து வாழ்த்துங்கள்” என்று சொல்லும் உயர்ந்த பண்பாடு மிகுந்த பெற்றோர்கள் இவர்கள்.

விழாவின் முக்கிய கவர்ந்த அம்சம் மேடையில் பலரும் பேசிய பேச்சுகளே! மேலும், குழுமியிருந்த மக்களும் மிக நாகரிகமாக பொறுமையாக அமர்ந்து பேசுவதை அமைதியாகக் கேட்டு ரசித்தனர். ஒரு சலசலப்போ கவனச்சிதறலோ இல்லை. சம்பிரதாயத் திருமணங்களில், மேடையில் மும்முரமாக மணமக்களை ”சொல்றதை பின்னாடியேச் சொல்லுங்கோ” என்று பின்னி பெடலெடுத்துக்கொண்டிருக்கும் ஐயர் ஒரு புறம்; வேர்த்து விறுவிறுத்தபடி மணமக்களும் அவர்களுக்குப் பின்னால் அதைவிட பரபரப்புடன் காணப்படும் நெருங்கிய சொந்தங்கள் ஒருபுறம்; யாருக்கும் எந்தக் குறையும் இல்லாமல் நல்லபடியாக கல்யாணம் முடியவேண்டுமே என்ற கவலையுடன் வெளியே சிரித்துக்கொண்டிருக்கும் மணமகளின் பெற்றோர் ஒரு புறம் என்ற திருமணக் காட்சிகளிலிருந்து இது முற்றிலும் வேறாக இருந்தது. மேடைப் பேச்சுகளால் விழா களைக் கட்டியது என்பதே உண்மை.

ம க இ கவின் ‌திருச்சிப் பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நிர்மலா பேசும்போது குறிப்பிட்ட நிகழ்ச்சி இது. காவல்துறையில் ஏட்டாக பணிபுரியும் ஒருவர் தனது மகளுக்கு சொந்த சாதியில் ஒரு வரனை தரகர் மூலமாக‌ப் பார்த்து மணமுடிக்கிறார். அவன் சரியானவனில்லை, ஒரு பொறுக்கி என்று விரைவில் தெரிய வருகிறது. ஆறுமாதத்திற்குள்ளாக அந்த பெண்ணை அவளது த‌ந்தை வீட்டிலேயே கொண்டுவந்து விட்டுவிடுகிறான். இன்னொரு தரகரைப் பார்த்து தனது புகைப்படத்தைக் கொடுத்து வேறு மணமகளைத் தேடுகிறான். முதல் தரகரின் நண்பரான இவர் இவனது அயோக்கியத்தனத்தை ஏட்டுவிற்கு தெரியப்படுத்துகிறார். தக்க நேரத்தில் கையும் களவுமாக பிடிபடுகிறான். ஆனாலும், ஏட்டுவினால் அதைத் தாண்டி அவனை ஒன்றும் செய்யஇயலவில்லை.இதுதான் யதார்த்தம். திருச்சியைச் சேர்ந்த ஸ்மாலின் ஜெனிட்டாவின் கதையை நாம் அறிவோம். பல பெண்கள் தாங்கள் ஐடி மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப் படவேண்டுமென்று விரும்புகிறார்களே தவிர எந்த மாதிரியான வாழ்க்கை வாழவேண்டுமென்று கொள்கைகள் கூட இல்லாமல்தான் இருக்கிறார்கள். விட்டில்பூச்சிகளைப் போல அற்ப வாழ்வு வாழ்ந்து இரைகளாகிப் மடிகிறார்கள்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த தோழர் வாஞ்சிநாதன் பேசும்போது சொன்னார் – பெண்கள் பலருக்கு கிருஷ்ண ஜெயந்தி என்றைக்கு என்பது நினைவிலிருக்கும். விநாயகர் சதுர்த்தி நினைவிலிருக்கும்.ஆனால், பெண்களின் விடுதலைக்கு பெரிதும் போராடிய தந்தை பெரியாரின் பிறந்தநாளை மறந்துவிடுகிறார்கள் என்று. இன்றும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருக்கிறார்கள் என்றால் அவரே முக்கியக் காரணம். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி பெண்கள் ஆண்களுக்கு நிகராக சேரில் கூட அமர முடியாது. கல்யாணத்தில் ஆண்களுக்கு மட்டுமே சேர் இருக்கும். பெண்கள் கீழே தரையிலோ அல்லது ஜமக்காளத்திலோதான் அமர வேண்டும் அல்லது நின்றுக்கொண்டிருக்க வேண்டும். இதுபோன்ற ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் நிறைந்த சமூகம்தான் நமது தமிழ்ச்சமூகம். இங்கு ஓரளவு முன்னேறியிருந்தாலும் இன்னும் முழுமையாக விடுதலை கிடைக்கவில்லை.

மகாபாரத்ததில் அர்ஜூனன் பிச்சைபெற்று மணப்பெண்ணை வீட்டுக்கு அழைத்து வருகிறான். தாயிடம் விஷயத்தைச் சொன்னதும், “எதுவாக இருந்தாலும் உனது சகோதரர்களுடன் பங்குப் போட்டுகொள்” என்கிறாள் தாய்.உடனே அர்ஜுனன் என்ன சொல்லி இருக்க வேண்டும்? “அம்மா, நான் அழைத்து வந்திருப்பது பொருளல்ல, ஒரு பெண்” என்று சொல்லி இருக்க வேண்டும்.

அந்த மணப்பெண்ணுக்காவது கோபம் வந்திருக்க வேண்டும்.அது இயல்பு. அல்லது ஐவரில் முதல்வனான தருமத்திற்கு பெயர் போன தருமர் என்ன சொல்லியிருக்க வேண்டும்? எந்தக் கேள்வியுமில்லாமல், அவள், ஐவருக்கும் மனைவியாகிறாள். இது ஒரு புனையப்பட்டக் கதையாகவே இருந்தாலும் என்ன சொல்ல வருகிறது?

பெண் என்பவள் ஒரு சொத்து. கணவனுக்கும் குடும்பத்தாருக்கும் சொந்தம். அவர்கள் சொல்வதை மறுப்பேச்சின்றி கேட்க வேண்டும், அவளே பத்தினி. இதுவா முன்னுதாரணம்?

ஏகபத்தினி விரதன் ராமனின் கதை என்ன? சீதையை சந்தேகப்பட்டு காட்டுக்கு அனுப்புவதும், பிறர் தவறாக பேசிக்கொண்டதைக் கேட்டு சந்தேகப்பட்டு சீதையை தீக்குளிக்க வைத்ததும்….ராமன் என்பவன் ஆணாதிக்க வெறி பிடித்த சந்தேகப்பேயே அவன். இவனா ஆண்களுக்கு முன்னுதாரணம் அல்லது தன்னை நிரூபிக்க தீக்குளித்த சீதைதான் பெண்களுக்கு முன்னுதாரணமா?

அடுத்த பிம்பம் கற்புக்கரசி கண்ணகி ‍; மணமேடையிலிருந்து நேராக தாசி வீட்டுக்கு சென்ற கணவன் வரும்வரை பிடிவாதமாக அவனுக்காக காத்திருந்து அவனுடன் வாழவே தலைப்படுகிறாள். அவளைத்தான் நமது இலக்கியவாதிகள் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். பத்தினிக்கு அடையாளம் என்கிறார்கள்.

நியாயமாக அவள் என்ன செய்திருக்க வேண்டும்?

தாசி வீட்டுக்குச் சென்ற கணவனை தூக்கியெறிந்திருக்க வேண்டும்.

பெண்ணுக்கு முன்னுதாரணமாகச் சொல்லப்படும் பிம்பங்கள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு தோழர்.அஜிதாவைத்தான் நாம் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.

மேலும் பழைய திருமண முறைக்கும் இந்தத் திருமண வடிவத்துக்குமுள்ள வேறுபாடு என்ன? பழைய திருமண முறையின் உள்ளடக்கம் சொல்ல வரும் செய்தி என்ன? பெண்ணை தானமாகக் கொடுத்து தாலியை கட்டுகிறார்கள். இதன் பொருள் பெண் தந்தையிடமிருந்து வேறு ஒருவருக்குச் சொந்தமாகிறார். இதற்குத்தான் தாலி. இதை ஒரு சிலர் பாதுகாப்பாகக் கருதுகிறார்கள். பெண்களும்,ஆண்களுமேதான். தாலயின் மகிமை பற்றியெல்லாம் தமிழ்சினிமா பார்த்தால் தெரிந்துக் கொள்ளலாம்.

சென்ற வாரத்தில் ஒரு இடுகைக் கூட தமிழ்மணத்தில் இருந்தது. நேற்றும் ஒரு குலக்கொழுந்து அதைத் திருக்குறள் வடிவத்தில் விளக்கி இருந்தார்.

ஏன், பாதுகாப்பு வேண்டுமென்றால் இன்ஷ்யூரன்ஸ் எடுக்க வேண்டியதுதானே?

அல்லது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டியதுதானே? பெண்களின் பாதுகாப்பு தாலியில் இருப்பதாகவும் ஆண்களின் உயிருக்கு உத்திரவாதம் பெண்களின் தாலியிலும் பொட்டிலும் இருப்பதாகவும் ஏன் நினைத்துக் கொள்ளவேண்டும்?

பொட்டு என்பது இந்து முறைப்படி கணவனின் உரிமை. அவன் இறந்துபோனால் ஒரு பெண்ணின் பொட்டு வைக்கும் உரிமையும் பறி போகிறது. அதோடு பூவும்.

அது போல காலில் மெட்டி. “பசங்க ஒரு பொண்ண பாக்கறாங்கன்னா அதுவும் கொஞ்சம் நல்லாருந்துச்சுன்னா உடனே காலைத்தான் பார்ப்பாங்க..மெட்டி போட்டிருக்கான்னு..கல்யாணம் ஆய்டுச்னான்னு தெரிஞ்சுடும் இல்லே” ‍‍; வேலை செய்யுமிடத்தில் அறிமுகமான நண்பரொருவர் சொன்னது இது.

இல்லையென்றாலும் பார்க்காமலா விடப் போகிறார்கள்? அல்லது அப்பெண்ணை அணுகி அடி வாங்குவதை தடுக்க இந்த மெட்டி உதவுகிறதா?

இவை அனைத்தும் இந்தப் பெண் இன்னொருவனது உடமை என்று அறிவிக்கும் அதிகாரபூர்வ சின்னங்கள். காலங்காலமாக பெண்கள் அணிந்து வந்ததை மாறுதலுக்கு ஆண்கள்தான் அணியட்டுமே?தாலியும், மெட்டியும் பூவும் பொட்டும் ஆண்களும் கொஞ்ச நாட்கள் உரிமை கொண்டாடட்டுமே!

இவை எல்லாம் பெண்ணடிமை வடிவங்களே என்றாலும் அவை பெண்களுக்கு அழகூட்டத்தானே செய்கிறது என்று வாதாடும் ஆண்களையும் பெண்களையும் அறிவேன். ஏன், பதிவுலகில் புர்க்காவைப் பற்றி பேசியபோது ஒருவர் எழுதியிருந்தார் ‍; எவ்வளவு அழகழகான விதவிதமான சம்க்கிகளை வைத்து தைத்த புர்க்காக்கள் இருக்கின்றனவே,அதை அணிந்துக்கொள்ள என்ன கசக்கிறதா என்பது போல! ஏன், அவ்வளவு கண்கவரும் அழகெனின் ஆண்களும் அதை வாங்கி அணிந்துக் கொள்ள வேண்டியதுதானே?

இந்த திருமண வழிமுறைகள் யாவும் மதங்கள் காட்டுபவையே. பெண்ணை மதிக்கும், பெண்ணை கண்ண்ணீயமாக நடத்தும் எவரும் இதை விரும்புவதில்லை. உண்மையில் பெண்களுக்கு எங்குச் சென்றாலும் என்ன வேலைக்குச் சென்றாலும் அந்தந்த படி நிலைக்கு ஏற்றவாறு தொல்லைகள் ஆணாதிக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது. பதிவுலகமும் அதற்கு விதிவிலக்கல்ல.

பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் ஆணாதிக்கவெறிகளுக்கெராகவும்தான் நாம் போராட வேண்டியிருக்கிறது. இதற்கு பெண்களும் சிந்திக்க வேண்டும்.

எனது எத்தனையோ தோழிகள், அலுவலகத்தில் மேனேஜரையும், மேனேஜருக்கு மேனேஜரையும் ஏன் சீஇஓ வைக்கூட பெயரிட்டு அழைக்கும்போது, வீட்டில் தன் கணவரை “வாங்க போங்க” என்று மரியாதைக்கொடுத்து அழைக்க வேண்டியிருப்பது ஏன்? பதிலுக்கு அவர்களும் இவ்வாறு அழைக்கிறார்களா என்ன? இதைப் பற்றிக் கேட்டால் உடனே பஜாரி வேடமும், அடங்காப்பிடாரி பட்ட்டமும் கொடுக்க காத்துக்கொண்டல்லவா இருக்கிறார்கள்?

நாள் பார்த்து நேரம் குறித்து ஒரு சம்பிரதாயங்கள்/ அடையாளங்கள் விடாமல் நடத்திய எத்தனை கல்யாணங்கள் ஒரு வருடம் கூட முழுமையடையாமல் உயிரை விட்டிருக்கின்றன?

ஐயரின் ஒன்றும் புரியாத மந்திர உச்சாடனங்களுக்கிடையில் குறித்த வேளைக்குள் தாலியை கட்டிவிட்டால் வம்சம் தழைக்கும்என்ற வெத்து கல்யாணங்களுக்கிடையில் “வாழ்க்கையில் ஒருபோதும் ஆணாதிக்கத்தை பெண்ணடிமையை கடைபிடிக்காமல் ஒருவர் தேவையை ஒருவர் புரிந்துக் கொண்டு இணையாக வாழ்வோம்” என்று உறுதி எடுத்துக்கொண்ட இத்திருமணம்தான் எவ்வளவு அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது!


மணமக்கள் குடும்பத்தினர் மற்றும் தோழர்களுடன்

தோழர் மருதையன் சிறப்பு வாழ்த்துரை வழங்கும் போது சொன்னதாவது:

தோழர் அஜிதா மக்களின் பணிக்காக தனது சிறுவயதிலிருந்தே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.தான் சிறுமியாக இருந்தபோது கருவறை நுழைவு போராட்டத்தில் ஆரம்பித்து கிராமம் கிராமமாக ஊர் ஊராக சென்று அரசியல் பிராச்சாரங்களை மேற்கொண்டவர்.

தோழர் பாண்டியன், சென்னையில் கல்லூரி மாணவர் போராட்டத்தில் பங்கேற்று சிறைவைக்கப்பட்டவர். போராட்டங்களைக் கண்டு அஞ்சி விலகி ஓடியவரல்லர். அதுமுதல் பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றவர்.

இருவரும் ம.க.இ.கவின் முழுநேர அரசியல் ஊழியர்கள். தங்கள் வாழ்க்கையை இப்படி மக்கள் பணிக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் எவ்வவளவு பேர் இருக்கிறார்கள்? இவ்விருவரின் திருமணம் அமைப்புத் தோழர்களால் பரிந்துரைச் செய்யப்பட்டு அமைப்பே முன்னின்று நிறைவேற்றிய திருமணம்.கணவன் கிழித்தக் கோட்டை தாண்டாத அடங்கிப் போகும் பெண் கணவனோடு இறுதிவரை வாழ்வது பெரிய விஷயம் இல்லை.வேறுபட்ட ஆளுமைகளை கொண்டவர்கள் அவரவர் நியாயங்களை அங்கீகரித்து இணைந்து வாழ்வது, குறைகளை சரி செய்து இருவருமாக புதியதாக உருமாறுவது.இதுதான் வாழ்க்கை என்று முடிவு செய்துக் கொண்டு வாழ்வது.

இருவரும் தங்கள் வாழ்க்கையை ஜனநாயகப்பூர்வமாகவும் அமைத்துக் கொள்வதோடு, மக்கள் நலனுக்காக குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாக உறுதி மொழி எடுத்துக் கொண்டபின் மாலைகளை மாற்றிக்கொள்ள விழா முடிவடைந்து கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. கலைநிகழ்ச்சிகளில் மணப்பெண்ணும் பாடல்கள் பாடும் போது சேர்ந்துக்கொண்டார். எந்த எளிமை என்னை நிச்சயமாக எனக்கு ஆச்சர்யமாகவே இருந்தது.

சாதி இல்லை என்று சொல்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நாமொன்றும் கம்யூனிஸ்டாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதியெல்லாம் “நாட் அ பிக் டீல் யார்” என்று சொல்பவர்கள் எத்தனை பேர் சாதி விட்டு திருமணம் செய்துக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்?

நாகரிக சமூகம் என்று சொல்லிக்கொள்ளும் நாம் படிப்பறிவு பெற்றிருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் நாம் செய்வது என்ன? சிந்தித்துப் பார்ப்போம்.

திருமண வாழ்க்கையைத் தொடங்கிய தோழர்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

தாங்கள் கொண்ட அரசியல் ஈடுபாடு காரணமாகவும்,சமூக அக்கறையின் காரணமாகவும் வாழ்க்கையை இணைத்துக்கொண்டு புதிய பயணத்தைத் தொடங்கிய தோழர் அஜிதா நீங்கள்தான் உலகின் அழகிய பெண் – தோழர் பாண்டியன் நீங்கள்தான் உலகின் அழகிய ஆண்!
________________

- சந்தனமுல்லை
______________

Monday, September 20, 2010

திலீபன் நினைவுநாள் பொதுக்கூட்டம்..

மக்கள் புரட்சியை மனதில் தேக்கி உண்ணாநோம்பிருந்தே கொள்கைக்காய் உயிர்விட்டு உண்மையான அகிம்சையை உலகுக்கு காட்டிய அண்ணன் திலீபன் நினைவுநாளில் அவர் கண்ட கனவை நினைவாக்க உறுதி ஏற்ப்போம்...

Sunday, September 19, 2010

'அதிகாலை' குறும்படம் வெளியீட்டு விழா



ஆண்டனியை அவருடைய இரண்டாம் பிறவியில் தான் முதல் முதலாக சந்தித்தேன்... ஒரு உதவி இயக்குனருக்கே உண்டான ஆழ்ந்த வாசிப்பு ஞானம்,பேச்சில் முதிர்ச்சி, நிகழ்வுகளை அற்புதமாக விவரிக்கும் திறன் என அந்தசந்திப்பிலேயே நிறைய ஆச்சரியங்களை எனக்கு அளித்தார்.தமிழர் நலன் குறித்த அவர் பார்வையும், அக்கறையையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

விபத்து அவருடைய ஒரு கரத்தை பறித்து கொண்டதை தவிர்த்து அவருடைய போராட்ட குணம், கொள்கையில் நேர்மை, விடா முயற்சி என எல்லாவற்றிலும் கனக்கச்சிதமாகவே இருக்கிறார்.

ஒரு சிறந்த திரைப்பட இயக்குனர் ஆவது என்ற லட்சியத்தை நோக்கி இரண்டாம் படியை எடுத்து வைத்துள்ளார். ஆம்....... எந்த விபத்து அவர் ஓடுவதை சற்று தடுத்து நிறுத்தியதோ, அதே விபத்தை மையப்பொருளாக கொண்டு தனது இரண்டாம் குறும்படத்தை வெளியிட உள்ளார்.

பெரும் போராட்டங்களுக்கு இடையில் எடுக்கப்பட்ட இந்த குறும்படம் 24 செப்டம்பர் 2010 அன்று காலை பத்து மணிக்கு ரஷ்ய கலாச்சார மையத்தில் வைத்து வெளியிடப்பட உள்ளது. சமூக ஆர்வலர்கள், திரைத்துறை மற்றும் இலக்கிய ஆளுமைகள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்.

ஆண்டனியுடைய முதல் குறும்படம் இருள் மக்கள் தொலைக்காட்சியில் பரிசு பெற்றது போல, இந்த 'அதிகாலை' என்ற குறும்படமும் பல விருதுகளை பெற வாழ்த்துவோம்.

ஆண்டனி பற்றி 'ஆனந்த விகடன்'(04-08-2010) வார இதழில் வெளிவந்த சிறப்பு கட்டுரை கீழே........

ஆண்டனியால் அது முடியும்!

"மனசு வலிக்குது சார்" என்கிறார் ஆண்டனி ராஜ். நான் அவரைப் பார்க்கிறேன்

அவருக்கு வலது கை இல்லை. கை இருந்த இடத்தில் ஒரு துண்டு போர்த்தியிருக்கிறது. இல்லாத கை அவருக்கு வலியைத் தந்துகொண்டே இருக்கிறது. ஆண்டனி பேசிக்கொண்டே இருக்கிறார்.

"நல்லதா ஒரு சினிமா எடுக்கணும். நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இது மட்டும்தான் சார் என்னோட ஆசை. ஓர் இடத்தில் இருக்காம துறுதுறுன்னு பயங்கர சேட்டை பண்ணுவேன். என்னைச் சமாளிக்க முடியாம பாண்டிச்சேரியில் ஒரு ஹாஸ்டலில் சேர்த்துவிட்டுட்டாங்க. ப்ளஸ் டூ வரைக்கும் அங்கதான் படிச்சேன். நாடகம், கவிதைன்னு ஆர்வம். அதுக்குப் பிறகு, சென்னை வந்து லயோலாவில் தமிழ் படிச்சேன்.

கல்லூரி முடிச்சு வெளியில் வந்ததும் சினிமாவுக்குள் நுழையப் பெரிய போராட்டம். கையில ஒரு பைக் இருந்துச்சு. அதை வெச்சுக்கிட்டு தினமும் ரவுண்ட் அடிக்கிறது. எப்படியாச்சும், யார்கிட்டேயாவது சேர்ந்துட முடியாதான்னு இருக்கும். படம் எடுத்து ரிலீஸ் பண்ண முடியாத எத்தனையோ இயக்குநர்களின் கதைகளில் வேலை பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமா சினிமா பிடிபட ஆரம்பிச்சுது. ஜான் மகேந்திரன் சார் அறிமுகம் கிடைச்சு, அவருடன் வேலை பண்ணேன். அவர் மூலமா லக்ஷ்மிகாந்தன் சார் அறிமுகம் ஏற்பட்டு, அவரோட 'டாக்ஸி' படத்தில் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன்.

இதுக்கு இடையில் 'இருள்'னு ஒரு குறும்படம் பண்ணேன். மக்கள் டி.வியில் அப்போதான் குறும்படப் போட்டி ஆரம்பிச்சிருந்தாங்க. அதில் 'இருள்' இரண்டாவது பரிசு வாங்கியது. வசதி குறைவான குடும்பப் பின்னணி என்னோடது. ஆனால், எதுக்காகவும் எப்பவும் நான் கவலைப்பட்டது இல்லை... கலங்கி நின்னது இல்லை. நினைச்சதை செஞ்சு பார்த்துடணும்னு குறியா இருந்தேன். அந்தச் சமயத்தில்தான் என்னோட மிக நெருங்கிய நண்பன் தமிழ்ச்செல்வன் ஒரு பெரிய விபத்தில் சிக்கினான்" கொஞ்சம் நிறுத்தித் தொடர்கிறார்...

"தமிழ்ச்செல்வன் எனக்கு ரொம்ப நெருக்கம். படுத்த படுக்கையாக் கிடந்த அவனைப் பார்க்கப் போனேன். ஆனால், என்னை அவனுக்கு அடையாளம் தெரியலை. அவன் நினைவுகள் மாறிப்போயிருந்துச்சு. விபத்து என்பது எவ்வளவு கொடூரமானதுன்னு அந்தக் கணத்தில் நான் உணர்ந்தேன். சம்பந்தமே இல்லாம சாலையில் போயிட்டு இருக்கிற ஒருத்தரை ஒரு வாகனம் அடிச்சுத் தள்ளிட்டுப் போயிடுது. ஆனா, அடிபட்டவனுக்கு ஒரு குடும்பம், வாழ்க்கை, பொறுப்புகள், எதிர்காலம்... எவ்வளவு இருக்கு? விபத்தை வேடிக்கை பார்க்குற மக்கள் 'பாவம்'னு சொல்லிட்டுப் போயிடுவாங்க. அந்தப் 'பாவம்' எந்தவிதத்துலயும் உதவப் போறது இல்லை. உடனடியா விபத்தைப்பற்றி ஒரு குறும்படம் எடுக்க முயற்சி பண்ணேன்.

பேப்பர்ல வந்த செய்திகள், உலகத்தில் என்னென்ன வகையான விபத்துக்கள் நடக்குது... எல்லாத்தையும் சேகரிச்சேன். விபத்து தொடர்பான விதவிதமான வீடியோக்களைச் சேகரிச்சுப் பார்த்தேன். அந்தச் சமயத்தில் பாண்டிச்சேரியில் இருந்து என் நண்பன் ஒருவன் வந்திருந்தான். அவனைப் பார்த்துட்டு சும்மா அவன்கூட பாண்டிச்சேரிக்குப் போயிட்டு வருவோம்னு கிளம்பினேன். விபத்துபற்றிய சில படங்களை ரெஃபரன்ஸுக்காக வாங்கிட்டு பஸ்ல திரும்பிட்டு இருந்தேன். பாண்டிச்சேரியில் இருந்து பஸ் வெளியே வந்துச்சு. ஈ.சி.ஆர். ரோடு. வேகமா ஓட்டிட்டு இருந்தார் டிரைவர். நான் டிரைவர் ஸீட்டுக்குப் பின் பக்கமா நாலாவது வரிசையில் ஜன்னல் ஓரமா உட்கார்ந்து இருந்தேன். திடீர்னு எதிர்ல ஒரு பஸ் தாறுமாறா பயங்கர வேகமா வருது. எங்க பஸ் டிரைவர் பஸ்ஸை ஒடிச்சுத் திருப்பினார். நேருக்கு நேரா மோதியிருக்க வேண்டிய அந்த பஸ், நான் உட்கார்ந்திருந்த ஜன்னல் ஓரமா படார்னு மோதி அந்தப் பக்கத்தையே நொறுக்கிடுச்சு.

என்னோட வலது கை ஜன்னலுக்கு வெளியே தோள்பட்டையில் இருந்து தனியா தொங்கிட்டு இருக்கு. எனக்குச் சில நிமிடங்களுக்கு எந்த வலியும் தெரியலை. சொதசொதன்னு ரத்தம் கொட்டுது. ஆனா, மயக்கம் இல்லை. எனக்கு முன்னாலயும் பின்னாலயும் உட்கார்ந்திருந்த எல்லோருக்குமே என்னை மாதிரி கொடூரமான அடி. ஒரே சத்தம். எனக்கும் உயிரை எடுக்குற கொடூர வலி. 'ஐயோ, அம்மா'ன்னு கத்துறேன். அந்த இடத்தில் யாரும் இல்லை. எங்களை மோதின வண்டி நிக்காமப் போயிடுச்சு. டிரைவரும் கண்டக்டரும் அந்த வண்டியைப் பிடிக்கக் கிளம்பிப்போயிட்டாங்க. என் கை தோள் பட்டையில் இருந்து தொங்கிட்டு இருக்கு. ஆஸ்பிட்டல் அழைச்சுட்டுப் போக ஒரு வண்டி வந்து நிக்குது. தொங்கிட்டு இருந்த கையை எடுத்து மடியில் வெச்சுக்கிட்டு உட்கார்ந்தேன். பாண்டிச்சேரி பி.ஐ.எம்.சி. அரசு மருத்துவமனை. இரவு 11 மணிக்கு அடிபட்ட நாங்க எல்லோரும் போனபோது பெரிய டாக்டர்கள் யாரும் இல்லை. பயிற்சி டாக்டர்கள்தான் இருந்தாங்க. அப்போதைக்கு எங்க வலியைக் குறைக்க மருந்து கொடுத்துட்டு, 'காலையில் பெரிய டாக்டர் வருவார்'னு சொல்லிட்டாங்க. தோள்பட்டையில் இருந்து ரத்தம் வழியத் தொங்கிட்டு இருந்த கையைப் பார்த்தேன். வாழ்க்கை முழுக்க இனிமே எனக்கு வலது கை கிடையாதுன்னு அப்பவே எனக்குப் புரிஞ்சுபோச்சு. வலது கையை எடுத்துட்டாங்க. பிறகு பார்த்த டாக்டர்கள் 'உடனே ஆபரேஷன் பண்ணியிருந்தா கையை ஒட்ட வெச்சிருக்கலாமே'ன்னு சொன்னாங்க. யாரைக் குற்றம் சொல்றது? எல்லாம் முடிஞ்சுபோச்சு.

ரெண்டு மாசம். அந்தப் புது வாழ்க்கையை எதிர்கொள்றது பெரிய சவாலா இருந்துச்சு. 26 வயசுல புதுசா பொறந்தது மாதிரி ஒவ்வொண்ணாக் கத்துக்கிட்டேன். சினிமாவில் கையெழுத்து அழகா இருக்குற அசிஸ்டென்ட்டை ஸ்க்ரிப்ட் காப்பி பண்ணச் சொல்லுவாங்க. என் கையெழுத்து குண்டு குண்டா அழகா இருக்கும். அது போச்சு. நோட்டும் பென்சிலும் வாங்கி வெச்சுக்கிட்டு இடது கையால் எழுதப் பழகினேன். ஒரு கையால் துணி போட்டுக்க, ஒரு கையால் தலைவாரிக்க... எல்லாத்துக்கும் பழகினேன். மறுபடியும் பழைய ஸ்க்ரிப்ட்டை எடுத்து விபத்துபற்றிய அந்தக் குறும்படத்தை நண்பர்களின் பொருள் உதவியோடு பண்ணி முடிச்சேன்" என்று டி.வி.டியைக் கையில் தருகிறார். 'அதிகாலை' என்று தலைப்பிடப்பட்ட அந்தக் குறும்படம் இரண்டு விபத்துக்களைப்பற்றி விவரிக்கிறது.

"குடிச்சுட்டு வண்டி ஓட்டுறது, வேகமா ஓட்டுறது... இது எல்லாத்தையும் தாண்டி, மன உளைச்சலோடு வண்டி ஓட்டுறதுதான் உலகம் முழுக்கப் பெரும்பாலான விபத்துக்களுக்கான காரணம். ஒரு தனி மனிதனுக்கு ஏன் மன உளைச்சல் வருது? அலுவலக உயர் அதிகாரிகள், பொருளாதாரப் பிரச்னை... இப்படி சமூகத்தால்தான் தனி மனிதனுக்குப் பிரச்னைகள். அதனால் விபத்து என்பது ஓட்டுறவருக்கும் மோதுறவருக்கும் இடையில் நடக்குற ஒரு சம்பவம் மட்டுமே இல்லை. அதில் நாம் எல்லோருமே சம்பந்தப்பட்டு இருக்கோம். இதை அழுத்திச் சொல்லணும்னு ஆசைப்பட்டுதான் இந்தக் குறும்படத்தை எடுத்தேன். எனக்கு ஒரு சினிமா இயக்குநர் ஆகணும். அதுதான் ஆசையும் லட்சியமும். என் எதிர்கால வாழ்க்கைப் போராட்டம் முழுக்க அதை நோக்கித்தான் இருக்கும்" கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் அமர்ந்தபடி பெரும் கனவுகளுடன் பேசுகிறார் ஆண்டனிராஜ். அதை அடையும் வல்லமை ஆண்டனிக்கு உண்டு!

உறவுகளே உதவுங்கள்
நொடியில் நொறுங்கியவனுக்காக.......
http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html

Friday, September 17, 2010

பெரியாருடன் ஒரு பயணம்

எம்மின தந்தை 132 ஆம் ஆண்டு பிறந்தநாள்(17-09-2010) தமிழரின் மான மீட்பு நாள் - வாழ்க பெரியார்

எம்மின தந்தை 132 ஆம் ஆண்டு பிறந்தநாள்(17-09-2010) தமிழரின் மான மீட்பு நாள் - வாழ்க பெரியார்





Thursday, September 16, 2010

23-ம் ஆண்டு நினைவலைகள்

நாங்க கோயிலுக்குள்ள ஆடினா..தீட்டு பட்டுடுமா




அன்பான முதல்வர் அவர்களுக்கு...

வணக்கமுங்க.

தஞ்சாவூர்லயிருந்து பறையடிக்கிற கருப்பன் எழுதுற கடிதமுங்க இது.அய்யா எனக்கு முப்பது வயசுதான் ஆவுதுங்க.எங்க பாட்டன்,முப்பாட்டன் காலத்துலயிருந்தே பறையடிக்கறதுதாங்க எங்க தொழில். சாவு வூடு, கண்ணாலம், கோயிலு கொடை, கட்சிமீட்டிங்கு,ஊர்வலம், எல்லாத்துக்கும் பறையடிக்கிறோமுங்க.

பறையடிக்கிறத மத்தவங்க கேவலமா நினைக்கிறாங்க.ஆனா, நாங்க அத கேவலமா நெனைக்கிறது இல்லீங்க.ஏன்னா,அது எங்க ரத்தத்துலயே ஊறியிருக்குங்க.அதுவுமில்லாம அது எங்களுக்கு சோறு போடுதுங்க.காலங்காலமா அந்த தொழில எங்களுக்குன்னே ஒதுக்கி குடுத்து எங்களயும் ஊரைவிட்டே ஒதுக்கியும் வச்சிட்டாங்க.இத நெனைக்கும்போது கஷ்டமாயிருந்தாலும், ஊரையே நாம ஒதுக்கிவச்சிட்டதா நெனைச்சி ஆறுதல் பட்டுக்கிறோமுங்க.வேறென்ன பண்ணமுடியும்.

இந்த வேதனை ஒரு பக்கம் உள்ளுக்குள்ள அரிச்சிகிட்டே இருந்தாலும்,ஆதிமனுசனின் கலையை..ஒரு பாரம்பரியக் கலையை இன்னும்விடாம வச்சிருக்கோம்கிறத நெனைச்சா பெருமையாவும் இருக்குதுங்க.அந்த சந்தோசத்துல ரெண்டு அடி ஓங்கி அடிப்பேங்க.

நாங்கல்லாம் தாழ்ந்த சாதிங்களாம்.நான் மட்டும் இல்லீங்க, எங்கள மாதிரி இருக்குற நாட்டுப்புறக் கலைஞருங்க எல்லாருமே பெரும்பாலும் தாழ்ந்தசாதிதான்னு சொல்றாங்க.அதுக்கேத்தமாதிரி நாங்களும் ஊருக்கு ஒதுக்குப்புறமா சேரியிலதான் வசிக்கிறோங்க.நாங்களா விரும்பி அங்க வசிக்கலைங்க. அதுதான் ஒங்க இடமுன்னு ..அந்தசேரியதான் எங்களுக்குன்னு ஒதுக்கி குடுத்திருக்காங்க.நாங்களும் காலங்காலமா சரிங்க சாமீன்னுட்டு அங்கயே இருந்துட்டுவர்றோம்.

எங்களமாதியான பெரும்பாலும் நாட்டுப்புறக் கலைஞர்களூம் சேரியிலதான் வசிக்கறாங்களாம்.மோளம் வாசிக்கறவங்க..கொட்டு அடிக்கறவங்க..கரகம் ஆடறவங்க...கூத்து ஆடறவங்க.....புலியாட்டம்..மயிலாட்டம்..ஒயி
லாட்டம்..காளயாட்டம்..அப்படீன்னு இருக்குற எங்கள மாதிரியான கலைஞர்களுக்கு பெருசா அப்படி ஒண்ணும் மரியாதை கிடையாதுங்க. தம்மாத்துண்டு இருக்குற சின்னப்பசங்ககூட எங்கள வாடா..போடான்னு மரியாதையில்லாமத்தான் கூப்புடுவானுங்க.தொழிலுக்குப் போற எடத்துல தன்ணிஅடிச்சிட்டுவந்து அட்றா..அட்ற்றான்னு ஆட்டம்போடுவானுங்க.மோளத்த தூக்கிப்போட்டு ஒடைப்பானுங்க.ஆனா இதையெல்லாம் நாங்க கண்டுக்கறது இல்லீங்க.மக்கள சந்தோசப்படுத்தறப்போ இதுமாதிரி சங்கடம்லாம் இருக்கும்தான்னு சிரிச்சிக்கிட்டே அடிக்க ஆரம்பிச்சிடுவோம். வேற என்ன பண்ணமுடியும்.

எங்களுக்கு வருசம்பூரா பெருசா ஒன்னும் வேலைஇருக்காதுங்க.எப்பயாவது சாவு வுழுந்தா வேலை வரும்...கோயிலு திருவிழா வந்தா வேலைவரும். மத்தபடி கட்சி ஊர்வம்,மீட்டிங்க்குக்கு கூப்புட்டாங்கன்னா போவோம்.மீதிநாள்ல அத்துக்கூலி வேலைதான்.ஒழவுக்கூலிக்கு போவோம்..செருப்பு தைக்கிறோம்..மாடு அறுக்குறோம்..எதையாவது செய்ஞ்சி வயித்தக்கழுவவேண்டியிருக்கு.

இப்பதான் கொஞ்சநாளா எங்களயும் திரும்பிபாக்க ஆரம்பிச்சிருக்காங்க. வெளியூருங்கள்ல இருந்தெல்லாம் கூப்டறாங்க. நாங்களும் போயிட்டு வர்றோம். ரெண்டு,மூணு வருசமா ஒங்க பொண்ணு கனிமொயி எங்கள சென்னைக்கு கூப்டு ஆட வச்சாங்க.பார்க்கு..பீச்சீ...ன்னு பல இடங்கள்ல ஆடுனோம். கொஞ்சம் காசும் குடுத்தாங்க.ஏதோ எங்கள கவுரவிக்கிற மாதிரி இருந்துச்சி. நீங்ககூட எங்க ஆட்டத்தப்பாத்து நல்லாயிருக்குன்னு சொன்னீங்க.எங்களுக்குன்னு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம்னு கூட ஆரம்பிச்சீங்க.அடையாளஅட்டைக்கூட குடுத்தீங்க.ஆனா நலஉதவிதான் இன்னும் குடுக்கல.

கோயம்புத்தூர்ல நடந்த செம்மொயி மாநாட்டுக்குக்குகூட மோளம் அடிக்க கூப்டாங்க.போய்ட்டுவந்தோம்.பத்துமைலு தூரம் அடிச்சிக்கினே..ஆடிக்குனே வந்தோம்.அப்ப ஒங்களப் பாத்து கையக்கூட ஆட்டுனேன். நீங்க கவனிச்சீங்களான்னு தெரியல.இன்னாடா..இம்மாம் விளக்கமா எழுதறான்னு நெனைக்கறீகளா..இம்மாம்நேரம் சொன்னதுல ஒன்ண நீங்க கவனீச்சீங்களா அய்யா..இந்த நிகழ்ச்சி எல்லாத்தையும் நாங்க தெருவுலதான் நடத்தியிருக்கோம். ஒன்ணக்கூட மேடையிலயோ...பெரீய்ய மண்டபத்துலயோ நடத்தல. ஆனா இதே நிகழ்ச்சியில கலந்துகிட்ட மத்தவங்கள்லாம்..அதாங்க...இந்த வீணை வாசிக்கறவங்க...டொய்ங்...டொய்ங்..ன்னு வயலின் வாசிக்கறவங்க...சங்கீதம் பாடறவங்க...கர்னாடக பாட்டு பாடறவங்க..பரதனாட்டியம் ஆடறவங்க..இவங்கெல்லாம் பெரியபெரிய மேடையிலதான் வாசிச்சாங்க.ஒருத்தருகூட தெருவுக்கு வந்து பாடல...ஆடல...இது ஏன்னு எனக்கு புரியல. எங்கூட இருந்தவங்ககிட்ட இதப்பத்திக் கேட்டேன். அப்பிடியெல்லாம் கேக்கக்கூடாது..அவங்கள்லாம் ரொம்ப பெரியவங்க..ன்னு சொன்னாங்க. நானும் சரிதான்னுட்டு கம்முனு போய்டுவேங்க. ஆனா ஒரு கேள்வி மட்டும் எனக்குள்ளயே கேட்டுக்குவேன்..”நமக்கு மட்டும் எப்பவும் தெருவுதானா...”என்ற கேள்விதாங்க அது.

தெருவுல ஆடறது ஒண்ணும் கேவலமில்லீங்க. நாங்க அதை கேவலமா நெனைக்கலீங்க.தெருவுலதான் பொறந்தோம்..தெருவுலதான் வாழறோம்...அங்கயே சாவறோம்..ஆனா..நாங்க மட்டும் எப்பவும் தெருவுலதான் ஆடணுமாங்கற கேள்விதான் என்ன துரத்திக்கிட்டேயிருக்கு. அந்தக் கேள்வி இப்ப எனக்கு மறுபடியும் வந்துடிச்சிங்க.அதுவும் நீங்க வெளியிட்டிருக்கிற ஒரு அறிவிப்பாலதான், அந்த கேள்வி மறுபடியும் வந்துடுச்சிங்க.

அதுத்த மாசம் ரெண்டு நாளு தஞ்சாவூர்ல நீங்க விழா நடத்தப் போறீங்களாமே..ராஜராஜசோழன் கட்டுன பெரியகோயிலு ஆயிரமாவது ஆண்டுவிழாவ கொண்டாடப் போறீங்களாமே.அந்தவிழாவுல எங்களமாதிரி நாட்டுப்புறக் கலைஞர்களின் நிகழ்ச்சியும் நடக்கும்னு நீங்க அறிவிச்சதுல இருந்துதாங்க அந்தக் கேள்வி மறுபடியும் கெளம்பிடுச்சி.எங்களுக்கு வாய்ப்பு குடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்க. ஆனா.. இப்பவும் முதல்நாள் நிகழ்ச்சியில...காலையிலயிருந்து தஞ்சாவூர்ல தெருவோரங்கள்ல நாங்க நிகழ்ச்சி நடத்துவோம்னு அறிவிச்சிருக்கீங்க.அதேசமயம்,அன்னிக்கி சாயங்காலம் பெரியகோயில் உள்ளாற பத்மா சுப்ரமணியம் தலைமையில ஆயிரம் பேரு பரதநாட்டியம் நடத்துவாங்கன்னும் அறிவிச்சிருக்கீங்க.இது என்னங்க நியாயம்.

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தெருவு..பரதனாட்டியத்துக்கு கோயிலு.. கலைகள்னா எல்லாக்கலைகளுமே ஒண்ணுதானுங்க...எந்தக் கலைஞனுக்கும் உழைப்பு ஒன்னுதானுங்க..வியர்வை ஒண்ணுதானுங்க..அதுல அடிக்கிற் நாத்தமும் ஒண்ணுதானுங்க...அதுல ஏற்றத்தாழ்வு பாக்குறது..வித்தியாசமா நடத்துறது சரியாங்க. ஒருவேளை நாங்கள்லாம் தாழ்த்தப்பட்ட சாதிக்காரங்கங்கிறதால எங்க கலையும் தாழ்த்தப்பட்ட கலைகள்னு முடிவு பண்ணி கோயிலுக்குள்ள வுடக்கூடாதுன்னு தெருவுலயே நிறுத்திட்டீங்களா..? அல்லது எங்க கலைகளுக்கு கோயிலுக்குள்ள நடத்துற அளவுக்கு தகுதியிலையின்னு முடிவுபண்ணிட்டீங்கள..?

உலகத்திலயே எந்த தலைவருக்கும் இல்லாத பட்டப்பேரு ஒங்களுக்கு இருக்கு.’கலைஞர்’னு பேரு வச்சிகிட்டு கலைஞர்களை இப்படி தெருவுல நிறுத்தறீங்களே..ஒருவேளை பரதனாட்டியம் ஆடறவங்கதான் கலைஞர்கள்..மத்தவங்கள்லாம் கலைஞர்கள் இல்லைன்னு நீங்களாவே முடிவுக்குவந்துட்டீங்களா..? ஒங்க ஆட்சியில என்னென்னமோ..இலவசமா குடுக்கறதா சொல்றீங்க.அரிசி குடுக்கறோம்...மளிகை கொடுக்கறோம்..டீவி குடுக்கறோம்..ரெண்டு ஏக்கரு நெலம் குடுக்கறோம்...வூடு குடுக்குறோம்...அப்படீன்னு என்னென்னமோ குடுக்கறதா சொல்றீங்க...அதையெல்லாம்விட முக்கியம் மானமும் மரியாதையும்தாங்க. ‘மானமும் அறிவும்தான் மனுசனுக்கே அழகு’ன்னு பெரியாரு கூட சொல்லியிருக்காருங்க. நான் அவருகிட்டதான் வளர்ந்தேன்னு சொல்லிக்கறீங்க..இது ஒங்களுக்கு தெரியாதா..?

அதனால எங்களமாதிரி நாட்டுப்புறக் கலைஞர்களும் தஞ்சை விழாவுல கோயில்ல ஆடறதுக்கு இடம் குடுங்க.பெரிய கோயில் சுவத்துல எங்க பறை சத்தமும் கேட்கட்டுமே..புழுதிபடிஞ்ச எங்க காலுங்க கோயிலுக்குள்ள ஆடட்டுமே...யுகம்யுகமா ஒடுக்கப்பட்டிருக்கிற எங்க குரல் பெரியகோயில் கோபுரத்துல எதிரொலிக்கட்டுமே..அடிமைச்சங்கிலி நொறுங்கநொறுங்க திசைகளெல்லாம் அதிர அதிர... நாங்க கோயிலுக்குள்ள ஆடினா..தீட்டு பட்டுடுமா..நட்ட கல்லும் பேசுமோன்னு ரெண்டு நாளைக்கு முன்னாலதானே பேசுனீங்க..அப்புறம் நாங்க ஆடினாமட்டும் கோயில் இடிஞ்சுடுமா..? திட்டமிட்ட இந்த புறக்கணிப்பை...ஒதுக்குதலை...எளிய மனிதர்களை கேவலப்படுத்துவதை ...தடுத்து நிறுத்த...ஒங்க ஒரு கையெழுத்து போதும். செய்ஞ்சீங்கன்னா, சந்தோஷத்துல அடிப்பேன்...
டண்டணக்கா..டண்டன்க்கா...
டண்டணக்கா..டண்டன்க்கா...

இப்படிக்கி...
கருப்பன்
பறை இசைக்கலஞர்

Tuesday, September 14, 2010

செப்டம்பர் 17ஆம் நாள் மஹிந்தவைக் கைது செய்ய வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு


ஐக்கிய நாடுகள் சபை பொதுவிவாதத்தில் உரையாற்றுவதற்காக இந்த மாதம் அமெரிக்காவுக்கு வருகை தரும் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்து அவர் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரும் கவனயீர்ப்பு நிகழ்வு, ரொரன்ரோவிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திலும் (360 University Ave, Toronto (Subway: St. Patrick)), கியூபெக்கிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திலும் (1155 rue St-Alexandré (Corner Of St-Alexandré & Rene Levesque), Montréal, Québec, H3B 1Z1) நடக்கவுள்ளது.


வருகின்ற வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 17ஆம் நாள், பி.ப. 3 மணி முதல் மாலை 8 மணிவரை நடக்கும் இம்மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கனடியத் தமிழ் மக்கள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை அழைக்கின்றது.

மேலதிக தொடர்புகள் வேண்டின் 1866 263 8622 (101) என்ற தொலைபேசி இலக்கத்திலும், info@ncctcanada.ca என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளவும்

சேகுவேரா பற்றிய ஒரு தமிழ் வீடியோ



சேகுவேரா பற்றிய ஒரு தமிழ் வீடியோ
http://video.google.com/videoplay?docid=-1260884780810138084&hl=undefined#

Saturday, September 11, 2010

யார் ? இந்த விநாயகன்?





விநாயகர் எனும் கடவுள் இந்த நாட்டிலே உற்பத்தியான கடவுள் என்றும் சொல்ல முடியாது. வடநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கே இவ்வளவு கூத்தடிக்கப்படுகிறது. ஆற்றங்கரையோரம், அரசமரத்தின் கீழ், குளத்தங்கரையிலும், வீதிகளின் சந்தியிலும் வைக்கப்பட்டு இருக்கும் இந்தக் கடவுளின் யோக்கியதையைச் சொல்லப்போனால் அது ஏனைய ´கடவுள்´களுக்கு மிகவும் வெட்கக்கேடாகும்.

அதாவது, இவருடைய பிறப்பின் வரலாறு அந்தப் பார்ப்பனர்களாலேயே எழுதப்பட்ட புராணங்களில் இருந்து பார்த்தாலும் கூட மிக மிக மோசமாக உள்ளது. விநாயகர் பிறப்பு பற்றி மூன்று வரலாறு உள்ளது. நம் மக்களுக்கு இவற்றில் இருந்து ´இது உண்மையில் கடவுள்´ என்று சொல்ல முடியுமா என்பதை அறிய முடியவில்லை.

சிவன் என்ற கடவுளின் மனைவி பார்வதி குளிக்கப் போனாளாம். தான் குளிக்கின்றபோது யாராவது அந்த அறைக்குள் புகுந்துவிடக்கூடாதே என்று பயந்து குளிக்கும் அறைக்கு வெளியே காவல் வைப்பதற்கு ஒரு உருவத்தை உற்பத்தி செய்தாளாம். அந்த உருவத்தை எப்படி உற்பத்தி செய்தாள் என்பது தான் கடவுள் தன்மையை விளக்கும் அதிசயம்.

முதலாவதாக,

பெண்கள் குளிக்கும்போது அங்கு அந்த அறைக்கு ஆண்கள் போவது சர்வ சாதாரணமாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், யாராவது வந்து விடுவார்களோ என்ற பயம் இருந்திருக்கத் தேவையில்லை; காவல் செய்யவும் ஆள் தேவையில்லை. அடுத்தபடியாக, ஆண்கள் யாராவது வந்து விடுவார்கள் என்ற பயம் இருந்தால், விநாயகர் என்று செய்யப்பட்ட அந்த உருவம் ஆண் உருவம் தானே! ஆண்கள் வந்துவிடக் கூடா தென்ற நினைப்பினால் ஒரு ஆணையே உற்பத்தி செய்து சதா நேரமும் பார்த்துக்கொண்டு இருக்கச் செய்வது எவ்வளவு புத்திசாலித்தனம்?

குளிப்பதற்காகச் சென்ற பார்வதி, தன் உடம்பின் மேல் உள்ள அழுக்கை உருட்டி ஒரு உருண்டை பிடித்து, அதை வாசற்படியில் வைத்து உயிர்கொடுத்தாள் என்று கூறப்படுகிறது. இதுதான் விநாயகர்!

ஒரு மனிதனுடைய எடைக்கு ஏற்றவாறு அத்தனை பெரிய அழுக்கு பார்வதியின் மேல் இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளாமல் இருக்கமுடியுமா? எனவே, சுத்த ஆபாசமும், அசுத்தமும் நிறைந்தவளாகவே நாம் அவளைக் கருதவேண்டியுள்ளது.

அடுத்தப்படியாக,

அவள் குளிக்கும்போது அங்கே வருகின்றான் சிவன். சிவனைக் கண்டதும் உமா கேட்கின்றாள், "இங்கே எப்படி வந்தீர்? நான் குளிக்கும் போது நீர் வரலாமா? ஒரு ஆளை நடையில் காவல் வைத்து இருந்தேனே, அவனை எப்படி தட்டிக் கழித்துக்கொண்டு வந்தீர்கள்?" என்றதும், அதற்குப் பரம சிவன் கூறுகின்றார், "நான் வரும்போது நடையிலே ஒருவன் நின்று கொண்டு வழி மறித்தான்; நான் இங்கே வரவேண்டும் என்று கூறினேன். அதற்கு அவன் விடமாட்டேன் என்றான்; யாராய் இருந்தாலும் சரி, கணவனாய் இருந்தாலும் விட மாட்டேன் என்றான்! என்னைவிடாமல் தடுத்தான். எனவே நான் என் கை வாளால் அவன் தலையைச் சீவினேன். பிறகு தடையின்றி உன்னைக் காண வந்தேன்" என்றான்.

இதிலே, குளிக்கும் பெண் தன் மனைவியாய் இருந்தாலும்கூட அவனுக்கு அங்கே என்ன வேலை?

இரண்டாவது, அதற்காக ஒரு மனிதனையே கொலை செய்து விட்டுப் போகவேண்டிய அவ்வளவு பெரிய சங்கதி அங்கே என்ன நடந்துவிட்டது?

மூன்றாவது, அவள் கணவனே என்று தெரிந்த பின்னும் பரமனை அவன் தடுத்தது எவ்வளவு முட்டாள்தனம்?

இவற்றை எல்லாம் யோசனை செய்தால் இது ஒரு அண்டப்புளுகு என்பதும், முட்டாள்தனமான நடவடிக்கை என்பதும் விளங்கும். இதனை அறிந்த பார்வதி, துடிதுடித்துக் கொண்டு ஓடி வந்து பார்க்கின்றாள். தலை துண்டாக்கப்பட்டு உள்ளது. ஆனால் துண்டாக்கப்பட்ட தலையை அங்கே காணோம். உடனே பரமனை நோக்கி, "நாதா என் அருமைச் செல்வம் - என் குழந்தை போன்று நான் உற்பத்தி செய்த அந்த அருள் செல்வத்தை எனக்குத் தாங்கள் தந்தாக வேண்டும். இல்லையேல் என்னால் பொறுத்துக் கொண்டு இருக்க முடியாது!" என்று கூறினாள்.

பிறகு இதைக்கேட்ட பரமன் என்ன செய்வதென்று யோசித்து, கடைசியாக ஒரு யானையின் தலையைக் கொய்து அந்த முண்டத்தின் மேல் வைக்கின்றான். உடனே அந்த முண்டம் யானைத்தலை கொண்ட விநாயகர் ஆகிறது. இது ஒருகதை.

மற்றொன்று -

பரமனும், பார்வதியும் ஒரு நாள் வனத்திற்குச் சென்றபோது, ஒரு ஆண் யானையும், பெண் யானையும் கலவி செய்து கொண்டு இருந்ததைப் பார்வையிட்டனர். அதை ஆசையால் பரமனும் பார்வதியும் யானை வடிவில் உருமாறிக் கலவிசெய்து பெற்றது தான் விநாயகர்.

மூன்றாவது,

ஒரு நாள் பார்வதியும் பரமனும் போய்க்கொண்டு இருக்கையில், ஒரு யானையின் உருவம் (பொம்மை) ஒன்றைக் கண்டார்களாம். ஆகவே, அதன் மேல் மோகம் கொண்ட பார்வதியும் அதுபோல் பிள்ளை பிறக்கவேண்டும் என்ற நினைத்தாளாம். ஆகவே, அப்படிப் பிறந்தது தான் விநாயகர் என்றும் கூறுகிறார்கள்.

ஆகவே இந்த மூன்று கதைகளையும் தெரிந்த மக்களே இந்தப்படி மண்டையை உடைப்பார்கள் என்றால், இவர்களின் புத்திகெட்டத் தன்மையை, முட்டாள்தனத்தைப் பொறுத்துக் கொண்டு இருக்க முடியுமா?

இந்தப்படி ஆபாசமான கதையை எழுதி நம்மை நம்பும்படிச் செய்துவிட்டனர் பார்ப்பனர். ஆகவே, இது சிவனும் சுப்பிரமணியனும் வந்த காலத்திலே வந்தது, வடநாட்டான் இங்கு கொண்டுவந்து விளம்பரம் செய்துவிட்டான். அது இப்போது பெரிய கடவுளாக மதிக்கப்பட்டு எல்லாக் காரியங்களுக்கும் முன்னே வைக்கும் இடத்தைப் பெற்றுவிட்டது. ஆனதால் தான் பிள்ளையார் சதுர்த்தி - விநாயகர் சதுர்த்தி என்று ஆடம்பரமான நாளைக் கொண்டாடுகிறார்கள்.

எனவே, இதை எல்லாம் அறிவைக் கொண்டு ஆராய்ந்தால், பகுத்தறிவைப் பயன்படுத்திப் புகுந்து பார்த்தால் மனிதனுக்கு இதன் உண்மை புலனாகும். ஆனால் நாம் அப்படிச் செய்வது இல்லை.

இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.

* சிறுகுறிப்பு : "இந்துமதப் பண்டிகைகள்" என்னும் நூலில் இருந்து விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டம் எதற்காக? என்னும் புராணக் கதையை பெரியார் விளக்கியதை இப்பகுதியில் தொகுத்திருக்கின்றோம்.


தொகுப்பு
தமிழச்சி (எழுத்தாளர்/ பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா அமைப்பாளர்)