Thursday, September 2, 2010

"ஜனவரி 29" ஈகி முத்துக்குமாரின் ஆவணப்படம் வெளியீட்டு விழா




உயிராயுதம் ஏந்தி தமிழ் பற்றை, தமிழின பற்றை உலக தமிழர்களுக்கு உணரவைத்த முத்து குமரனின் வாழ்கையை சித்தரிக்கும் ஆவணப்படம் "ஜனவரி 29" என்ற பெயரில் குறுந்தகடு 28-08-2010 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள பிலிம் சேம்பரில் வெளியிடப்பட்டது.

குறுந்தகடை திரு தமிழர் சத்யராஜ், இயக்குனர் அமீர் அவர்கள் சேர்ந்து வெளியிட ஈகி முத்துககுமாரின் தந்தை குமரேசன் ஐயா மற்றும் ரோட்டரி தலைவர் ஒளிவாணனும் பெற்று கொண்டனர். கடுமையான போராட்டங்களுக்கிடையே அரங்கு அனுமதியை தயாரிப்பாளர் பெற்று இருந்த போதும் நிற்பதற்கு கூட இடமில்லாமல் அரங்கம் நிரம்பி வழிந்தனர் தமிழின உணர்வாளர்கள்.

நிகழ்வு ஈகி முத்துகுமாரின் படத்திற்கு ஒளியேற்றி, மௌன அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது. முதலில் பேசிய இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் முத்துகுமாரின் தியாகம் தமிழக இளைஞர்களை மட்டுமல்லாமல் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளைஞர்களையும் தட்டி எழுப்பி போராட வைத்த பெருமை முத்துகுமரனுக்கே சேரும் என்றார். முத்துகுமாரின் தியாகம் வெற்றி பெற நாம் கடமையாற்ற வேண்டும் என்றார்.

இயக்குனர் அமீர் அவர்கள் பேசும்பொழுது இங்குள்ள ஒவ்வொரு தமிழனும் தன்னால் முடிந்த உதவிகளை பொருளாகவோ, உழைப்பாகவோ அல்லது அவர்களது அறிவை இந்த தமிழ் சமுதாயத்திற்கு பயன்படுத்தினாலே போதும் நாம் தமிழீழத்தை பெற்று விடலாம் என்றார். சன் தொலைகாட்சி போன்ற ஊடகங்கள் இனப்பற்றுள்ள தமிழர்களிடம் இருந்திருந்தால் நம் இனத்தை நாம் காப்பாற்றி இருக்கலாம் எனவே அனைத்து அறிவு சார்ந்த தொழில்களிலும் தமிழர்கள் இருக்க வேண்டும், தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றார். அடுக்கு மொழியில் பேசி ஆட்சி நடத்தும் காலம் முடிந்து விட்டது இது தமிழர்கள் விழித்தெழும் காலம் மறத் தமிழன் ஆளும் காலம் என்றார். மேலும் அவர் பேசுகையில் விரைவில் சிறையிலிருந்து சீமான் வெளியில் வருவார் என்றார். ஒடுக்குமுறையை முறியடித்து தனது போராட்டத்தை தொடர்வார் என்றார் அமீர்.


குறுந்தகடை வெளியிட்டு சத்யராஜ் அவர்கள் பேசும் பொழுது முத்துகுமாரின் இந்த குறும் படத்தை காணும் போதுதான் எவ்வளவு திறமைகளை தன்னுள் அடக்கி கொண்டு இனத்திற்காக தன் உயிரை கொடுத்திருக்கிறான் என்பது புரிகிறது. ஒரு எழுத்தாளனாய் இயக்குனராய் கணிபொறி அறிவு சார்ந்த அனைத்து திறமைகளையும் கொண்டிருந்த முத்துகுமரனின் இறப்பு அவரது பெற்றோர்களுக்கு பேரிழப்பு என்பதை மறுக்க முடியாது.

அவர்கள் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு உரிமையுடன் உதவிகளை கேட்கலாம் என்றார், முத்துகுமாரின் வரலாற்றை தாங்கிய இந்த ஆவண படத்தை ஒவ்வொரு தமிழனிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த குறுந்தகடை இந்துக்கள் பகவத் கீதை பக்கத்திலும்,கிருத்துவர்கள் பைபிள் பக்கத்திலும், முசுலீம்கள் குரானுக்கு பக்கத்திலும் வைக்கலாம் தவறில்லை என்றார் .மேலும் அவர் பேசுகையில் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசும் இந்த சத்தியராஜ், செந்தமிழன் சீமானிடம் பேசும் போது மட்டும் தானாகவே சுத்த தமிழில் பேசிவிடுவேன். இல்லை என்றால் அவர் பதில் என்னவாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். முத்துகுமரனின் தியாகமும், தம்பி சீமான் சிறையில் இருந்து அவர் படும் துன்பங்களுக்கும் விரைவில் ஒரு முடிவு வந்து விடும். சீமானை போன்று தன் வாழ்கையை மக்களுக்காக அற்பணிப்பவர்களே இப்பொழுது நம் இனத்திற்கு தேவை என்றார்.


இயக்குனர் சிபிச்சந்திரன் பேசும் பொழுது முத்து குமரன் ஏற்றி வைத்த தீ தமிழர்களின் ஒவ்வொருவர் எண்ணத்திலும் இருக்க வேண்டும், அந்த தீயை அணையாமல் சீமான் பார்த்து கொள்வார். தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தமிழன் என்ற இன பற்றோடு நாம் தமிழராய் ஒற்றுமையாக செயல் பட்டாலே போதும் நாம் வென்று விடலாம் இந்த தமிழின எதிர்ப்பு அரசுகளிடமிருந்து விடுதலை பெற்று விடலாம் என்று கூறினார்.

குறம் பட தயாரிப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை அவர்கள் பேசும் பொழுது முத்துகுமாரின் இந்த குறும்படத்தை நாங்கள் வருமான நோக்கிற்காக தயாரிக்கவில்லை. கடுமையான நிதி நெருக்கடியிலும் இந்த பணியை சிறப்பாக செய்து முடித்திருக்கிறோம். இந்த குறுந்தகடை ஒவ்வொரு தமிழன் வீட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும் அந்த பணியை தமிழ் உணர்வாளர்கள் செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்குண்டு என்று கூறினார். இந்த குறும்படத்தை தயாரிக்க நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பக்க துணையாக இருந்து ஆலோசனை வழங்கி இந்த நிகழ்வு எந்த வித அரசியல் கட்சியை சாராமல் தமிழ் பற்றை, தமிழின பற்றை அடிபடையாக கொண்டு மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவரது கூற்றே, இந்த நிகழ்ச்சி இவ்வளவு சிறப்பாக அமைய காரணமாக இருந்தது என்பதை நன்றியுடன் குறிப்பிட்டார்.


பிலிம் சேம்பரில் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பே அரங்கு நிரம்பிவிட்டது. 70 நிமிடம் ஓடும் இந்த குறும்படம், உயர் தர ஒளி ஓலி அமைப்போடு (DTS)நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பெட்டியில், முத்து குமாரின் கடைசி கடிதம் அவருடன் எரிந்து போன காகிதம் போல் வடிவமைக்கப் பட்டிருந்தது. ஆவணப்படம் ஓடிய 70 நிமிடங்களும் அரங்கம் அமைதியிலும் உள்ளம் தாங்க முடியா குமுறலிலும் நிலைத்து இருந்தநது. ஈழ மக்களின் மரண ஓலங்கள் கடினமான மனதுடையவனையும் கரைய வைத்து விடும், குறும்படத்தின் காட்சிகள் நம் கண்களை விட்டு அகல மறுக்கின்றன, முத்துகுமாரின் வாழ்வும் தியாகமும் நம் கண் முன்னே கொண்டு சேர்த்தது நேர்த்தியான ஒளிபதிவு.


மனதை நெகிழ வைக்கும் இசை கனத்த மனதுடனும் ஈழ மக்களுக்கு நாம் எதுவும் செய்ய முடியவிலையே என்ற குற்ற உணர்வோடும் ஒவ்வொருவரும் கலைந்து சென்றனர். உலகில் உள்ள ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய இந்த குறுந்தகட்டின் விலை 50 ரூபாய்.


இனத்தின் விடியலை நோக்கிய பயணத்தில், தன்னையே திரியாக்கி நமது பயண பாதைக்கு சுடர் ஏத்திய ஈகியின் தாகத்தை வரலாற்றில் பதிவு செய்து, அணைத்து உலக தமிழர்களிடத்தும் கொண்டு செல்வதே தயாரிப்பாளர்களின் நோக்கம்.


குறுந்தகடு வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

திரு நல்லதுரை

வடக்கு தெரு ,

கல்லபெரம்பூர்தஞ்சாவூர் வட்டம் -613603

அலைபேசி எண்:9442317631

email:cm.selva@gmail.coma

No comments: