Wednesday, September 22, 2010
பள்ளி சென்றுகொண்டிருந்த 21 மாணவர்கள் உடல் சிதறி இறந்தனரே: மறப்போமா?
அதிகாலைப் பொழுதொன்று குருதியில் உறைந்தது அன்று, அந்த நாளை நாம் மறப்போமா? தலைவாரி, பொட்டுவைத்து, பள்ளி சென்று வா என்று அம்மா அனுப்பிவைக்க, பத்திரமாக படித்துவிட்டு வீடு திரும்பி வா என அப்பாவும் சொல்லி அனுப்ப, வெள்ளை நிற பள்ளிக்கூட ஆடைகளை அணிந்து உல்லாசமாக, உற்சாகமாகச் சென்ற அந்த பிஞ்சுக் குழந்தைகள் மீது குண்டுபோட சிங்கள இனவெறியனுக்கு எப்படித் தான் மனம் வந்ததே தெரியவில்லை. பாவம்! பள்ளிக்குச் செல்லும் பிள்ளை அன்று வீடு திரும்ப மாட்டாள் என அம்மாவுக்கு முன்னரே தெரியாமல் போய்விட்டது. பாடசாலை சென்ற பையன் இனி வீட்டிற்கு பிணமாகத் தான் வருவான் என அப்பா நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
ராட்சஷக் கழுகாக பறந்துவந்த இலங்கை புக்காரா விமானங்கள் பாடசாலை என்று கூடப்பாராமல் குண்டுகளை வீசிச் சென்றது. அதில் 21 பாடசாலை மாணவர்கள் ஸ்தலத்திலேயே பலியானார்கள். சில மாணவர்கள் சிறிய காயங்களுக்கு உள்ளாகி இருந்தாலும், ரத்தப்போக்கு காரணமாக ஆசிரியரின் மடியில் பிணமானர்கள். கொஞ்சம் கொஞ்சமாக இரத்தம் வெளியேற, உடலில் உள்ள நாடி நரம்புகளில் இரத்த அழுத்தம் குறைவடைய, இறுதியில் மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைய, அது இதயத்தை நிறுத்தச் சொல்லி சமிக்ஞைகளை அனுப்ப, பரிதாபமாக துடிதுடித்து இறந்தனரே 21 குழந்தைகள். அவர்கள் சாவுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?
எல்லாவற்றையும் பார்த்தும், பாராமுகமாக வாழ்ந்து வருகிறோம். இது போன்ற கொடுமைகள் வேறு ஒரு இனத்துக்கு நடந்திருந்தால், தமிழர்களை விட குறைவான எண்ணிக்கையில் அவர்கள் இருந்திருந்தால் கூட குறைந்த பட்சம் ஒரு தீர்வைக் கண்டிருப்பார்கள். ஆனால் எமது தமிழ் மக்கள் என்ன செய்கிறார்கள்? 22.09.1995 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான 21 மாணவர்களின் நினைவை நாம் சுமந்து நிற்கிறோம். எமது இனத்தைக் கருவறுக்க, சிங்கள இனவாதிகள் மாணவர்களைக் குறிவைத்தனர். கள்ளம் கபடம் ஏதுமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட மாணவர்கள் அணிந்திருந்த வெள்ளை ஆடைகளில் எல்லாம் ரத்தக் கறைகள்!
தமது குண்டு வீச்சில் 21 தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டோம் என்ற இறுமாப்பு சிங்கள வான்படைக்கு, கொன்றது பச்சை குழந்தையானாலும் சரி, அல்லது பிறந்து 3 நாள் ஆன குழந்தையானாலும் சரி, கொல்லப்பட்டது தமிழன் தானே என்று அவனுக்கு திருப்தி, இது போன்ற உணர்வுகள் அற்ற காட்டேரிகளோடு, சேர்ந்து வாழ்வோம் என சில தமிழர்கள் இன்னும் கொக்கரிக்கிறார்கள்! பாருங்கள்! உங்கள் பிள்ளைகளுக்கு இப்படி நடந்திருந்தால் நீங்கள் இப்படி பேசியிருக்க மாட்டீர்கள்!
அன்று கொல்லப்பட்ட 21 பிள்ளைகளின் பெற்றோர் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களின் துயரில் அதிர்வு இணையமும் பங்கு கொள்கிறது! விடியும் ஒரு நாள் என வீரப் பறை சாற்றி நிற்கிறது! வீறுகொண்டு எழு தமிழா அதை வீதிக்கு வீதி சொல்லிடு தமிழா என்று சொல்கிறது!
மாண்டவர் எல்லோரும் மலரட்டும் பூக்களாய், மலரப்போகும் எங்கள் சுதந்திர தேசத்தில்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment