Thursday, September 16, 2010

நாங்க கோயிலுக்குள்ள ஆடினா..தீட்டு பட்டுடுமா




அன்பான முதல்வர் அவர்களுக்கு...

வணக்கமுங்க.

தஞ்சாவூர்லயிருந்து பறையடிக்கிற கருப்பன் எழுதுற கடிதமுங்க இது.அய்யா எனக்கு முப்பது வயசுதான் ஆவுதுங்க.எங்க பாட்டன்,முப்பாட்டன் காலத்துலயிருந்தே பறையடிக்கறதுதாங்க எங்க தொழில். சாவு வூடு, கண்ணாலம், கோயிலு கொடை, கட்சிமீட்டிங்கு,ஊர்வலம், எல்லாத்துக்கும் பறையடிக்கிறோமுங்க.

பறையடிக்கிறத மத்தவங்க கேவலமா நினைக்கிறாங்க.ஆனா, நாங்க அத கேவலமா நெனைக்கிறது இல்லீங்க.ஏன்னா,அது எங்க ரத்தத்துலயே ஊறியிருக்குங்க.அதுவுமில்லாம அது எங்களுக்கு சோறு போடுதுங்க.காலங்காலமா அந்த தொழில எங்களுக்குன்னே ஒதுக்கி குடுத்து எங்களயும் ஊரைவிட்டே ஒதுக்கியும் வச்சிட்டாங்க.இத நெனைக்கும்போது கஷ்டமாயிருந்தாலும், ஊரையே நாம ஒதுக்கிவச்சிட்டதா நெனைச்சி ஆறுதல் பட்டுக்கிறோமுங்க.வேறென்ன பண்ணமுடியும்.

இந்த வேதனை ஒரு பக்கம் உள்ளுக்குள்ள அரிச்சிகிட்டே இருந்தாலும்,ஆதிமனுசனின் கலையை..ஒரு பாரம்பரியக் கலையை இன்னும்விடாம வச்சிருக்கோம்கிறத நெனைச்சா பெருமையாவும் இருக்குதுங்க.அந்த சந்தோசத்துல ரெண்டு அடி ஓங்கி அடிப்பேங்க.

நாங்கல்லாம் தாழ்ந்த சாதிங்களாம்.நான் மட்டும் இல்லீங்க, எங்கள மாதிரி இருக்குற நாட்டுப்புறக் கலைஞருங்க எல்லாருமே பெரும்பாலும் தாழ்ந்தசாதிதான்னு சொல்றாங்க.அதுக்கேத்தமாதிரி நாங்களும் ஊருக்கு ஒதுக்குப்புறமா சேரியிலதான் வசிக்கிறோங்க.நாங்களா விரும்பி அங்க வசிக்கலைங்க. அதுதான் ஒங்க இடமுன்னு ..அந்தசேரியதான் எங்களுக்குன்னு ஒதுக்கி குடுத்திருக்காங்க.நாங்களும் காலங்காலமா சரிங்க சாமீன்னுட்டு அங்கயே இருந்துட்டுவர்றோம்.

எங்களமாதியான பெரும்பாலும் நாட்டுப்புறக் கலைஞர்களூம் சேரியிலதான் வசிக்கறாங்களாம்.மோளம் வாசிக்கறவங்க..கொட்டு அடிக்கறவங்க..கரகம் ஆடறவங்க...கூத்து ஆடறவங்க.....புலியாட்டம்..மயிலாட்டம்..ஒயி
லாட்டம்..காளயாட்டம்..அப்படீன்னு இருக்குற எங்கள மாதிரியான கலைஞர்களுக்கு பெருசா அப்படி ஒண்ணும் மரியாதை கிடையாதுங்க. தம்மாத்துண்டு இருக்குற சின்னப்பசங்ககூட எங்கள வாடா..போடான்னு மரியாதையில்லாமத்தான் கூப்புடுவானுங்க.தொழிலுக்குப் போற எடத்துல தன்ணிஅடிச்சிட்டுவந்து அட்றா..அட்ற்றான்னு ஆட்டம்போடுவானுங்க.மோளத்த தூக்கிப்போட்டு ஒடைப்பானுங்க.ஆனா இதையெல்லாம் நாங்க கண்டுக்கறது இல்லீங்க.மக்கள சந்தோசப்படுத்தறப்போ இதுமாதிரி சங்கடம்லாம் இருக்கும்தான்னு சிரிச்சிக்கிட்டே அடிக்க ஆரம்பிச்சிடுவோம். வேற என்ன பண்ணமுடியும்.

எங்களுக்கு வருசம்பூரா பெருசா ஒன்னும் வேலைஇருக்காதுங்க.எப்பயாவது சாவு வுழுந்தா வேலை வரும்...கோயிலு திருவிழா வந்தா வேலைவரும். மத்தபடி கட்சி ஊர்வம்,மீட்டிங்க்குக்கு கூப்புட்டாங்கன்னா போவோம்.மீதிநாள்ல அத்துக்கூலி வேலைதான்.ஒழவுக்கூலிக்கு போவோம்..செருப்பு தைக்கிறோம்..மாடு அறுக்குறோம்..எதையாவது செய்ஞ்சி வயித்தக்கழுவவேண்டியிருக்கு.

இப்பதான் கொஞ்சநாளா எங்களயும் திரும்பிபாக்க ஆரம்பிச்சிருக்காங்க. வெளியூருங்கள்ல இருந்தெல்லாம் கூப்டறாங்க. நாங்களும் போயிட்டு வர்றோம். ரெண்டு,மூணு வருசமா ஒங்க பொண்ணு கனிமொயி எங்கள சென்னைக்கு கூப்டு ஆட வச்சாங்க.பார்க்கு..பீச்சீ...ன்னு பல இடங்கள்ல ஆடுனோம். கொஞ்சம் காசும் குடுத்தாங்க.ஏதோ எங்கள கவுரவிக்கிற மாதிரி இருந்துச்சி. நீங்ககூட எங்க ஆட்டத்தப்பாத்து நல்லாயிருக்குன்னு சொன்னீங்க.எங்களுக்குன்னு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம்னு கூட ஆரம்பிச்சீங்க.அடையாளஅட்டைக்கூட குடுத்தீங்க.ஆனா நலஉதவிதான் இன்னும் குடுக்கல.

கோயம்புத்தூர்ல நடந்த செம்மொயி மாநாட்டுக்குக்குகூட மோளம் அடிக்க கூப்டாங்க.போய்ட்டுவந்தோம்.பத்துமைலு தூரம் அடிச்சிக்கினே..ஆடிக்குனே வந்தோம்.அப்ப ஒங்களப் பாத்து கையக்கூட ஆட்டுனேன். நீங்க கவனிச்சீங்களான்னு தெரியல.இன்னாடா..இம்மாம் விளக்கமா எழுதறான்னு நெனைக்கறீகளா..இம்மாம்நேரம் சொன்னதுல ஒன்ண நீங்க கவனீச்சீங்களா அய்யா..இந்த நிகழ்ச்சி எல்லாத்தையும் நாங்க தெருவுலதான் நடத்தியிருக்கோம். ஒன்ணக்கூட மேடையிலயோ...பெரீய்ய மண்டபத்துலயோ நடத்தல. ஆனா இதே நிகழ்ச்சியில கலந்துகிட்ட மத்தவங்கள்லாம்..அதாங்க...இந்த வீணை வாசிக்கறவங்க...டொய்ங்...டொய்ங்..ன்னு வயலின் வாசிக்கறவங்க...சங்கீதம் பாடறவங்க...கர்னாடக பாட்டு பாடறவங்க..பரதனாட்டியம் ஆடறவங்க..இவங்கெல்லாம் பெரியபெரிய மேடையிலதான் வாசிச்சாங்க.ஒருத்தருகூட தெருவுக்கு வந்து பாடல...ஆடல...இது ஏன்னு எனக்கு புரியல. எங்கூட இருந்தவங்ககிட்ட இதப்பத்திக் கேட்டேன். அப்பிடியெல்லாம் கேக்கக்கூடாது..அவங்கள்லாம் ரொம்ப பெரியவங்க..ன்னு சொன்னாங்க. நானும் சரிதான்னுட்டு கம்முனு போய்டுவேங்க. ஆனா ஒரு கேள்வி மட்டும் எனக்குள்ளயே கேட்டுக்குவேன்..”நமக்கு மட்டும் எப்பவும் தெருவுதானா...”என்ற கேள்விதாங்க அது.

தெருவுல ஆடறது ஒண்ணும் கேவலமில்லீங்க. நாங்க அதை கேவலமா நெனைக்கலீங்க.தெருவுலதான் பொறந்தோம்..தெருவுலதான் வாழறோம்...அங்கயே சாவறோம்..ஆனா..நாங்க மட்டும் எப்பவும் தெருவுலதான் ஆடணுமாங்கற கேள்விதான் என்ன துரத்திக்கிட்டேயிருக்கு. அந்தக் கேள்வி இப்ப எனக்கு மறுபடியும் வந்துடிச்சிங்க.அதுவும் நீங்க வெளியிட்டிருக்கிற ஒரு அறிவிப்பாலதான், அந்த கேள்வி மறுபடியும் வந்துடுச்சிங்க.

அதுத்த மாசம் ரெண்டு நாளு தஞ்சாவூர்ல நீங்க விழா நடத்தப் போறீங்களாமே..ராஜராஜசோழன் கட்டுன பெரியகோயிலு ஆயிரமாவது ஆண்டுவிழாவ கொண்டாடப் போறீங்களாமே.அந்தவிழாவுல எங்களமாதிரி நாட்டுப்புறக் கலைஞர்களின் நிகழ்ச்சியும் நடக்கும்னு நீங்க அறிவிச்சதுல இருந்துதாங்க அந்தக் கேள்வி மறுபடியும் கெளம்பிடுச்சி.எங்களுக்கு வாய்ப்பு குடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்க. ஆனா.. இப்பவும் முதல்நாள் நிகழ்ச்சியில...காலையிலயிருந்து தஞ்சாவூர்ல தெருவோரங்கள்ல நாங்க நிகழ்ச்சி நடத்துவோம்னு அறிவிச்சிருக்கீங்க.அதேசமயம்,அன்னிக்கி சாயங்காலம் பெரியகோயில் உள்ளாற பத்மா சுப்ரமணியம் தலைமையில ஆயிரம் பேரு பரதநாட்டியம் நடத்துவாங்கன்னும் அறிவிச்சிருக்கீங்க.இது என்னங்க நியாயம்.

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தெருவு..பரதனாட்டியத்துக்கு கோயிலு.. கலைகள்னா எல்லாக்கலைகளுமே ஒண்ணுதானுங்க...எந்தக் கலைஞனுக்கும் உழைப்பு ஒன்னுதானுங்க..வியர்வை ஒண்ணுதானுங்க..அதுல அடிக்கிற் நாத்தமும் ஒண்ணுதானுங்க...அதுல ஏற்றத்தாழ்வு பாக்குறது..வித்தியாசமா நடத்துறது சரியாங்க. ஒருவேளை நாங்கள்லாம் தாழ்த்தப்பட்ட சாதிக்காரங்கங்கிறதால எங்க கலையும் தாழ்த்தப்பட்ட கலைகள்னு முடிவு பண்ணி கோயிலுக்குள்ள வுடக்கூடாதுன்னு தெருவுலயே நிறுத்திட்டீங்களா..? அல்லது எங்க கலைகளுக்கு கோயிலுக்குள்ள நடத்துற அளவுக்கு தகுதியிலையின்னு முடிவுபண்ணிட்டீங்கள..?

உலகத்திலயே எந்த தலைவருக்கும் இல்லாத பட்டப்பேரு ஒங்களுக்கு இருக்கு.’கலைஞர்’னு பேரு வச்சிகிட்டு கலைஞர்களை இப்படி தெருவுல நிறுத்தறீங்களே..ஒருவேளை பரதனாட்டியம் ஆடறவங்கதான் கலைஞர்கள்..மத்தவங்கள்லாம் கலைஞர்கள் இல்லைன்னு நீங்களாவே முடிவுக்குவந்துட்டீங்களா..? ஒங்க ஆட்சியில என்னென்னமோ..இலவசமா குடுக்கறதா சொல்றீங்க.அரிசி குடுக்கறோம்...மளிகை கொடுக்கறோம்..டீவி குடுக்கறோம்..ரெண்டு ஏக்கரு நெலம் குடுக்கறோம்...வூடு குடுக்குறோம்...அப்படீன்னு என்னென்னமோ குடுக்கறதா சொல்றீங்க...அதையெல்லாம்விட முக்கியம் மானமும் மரியாதையும்தாங்க. ‘மானமும் அறிவும்தான் மனுசனுக்கே அழகு’ன்னு பெரியாரு கூட சொல்லியிருக்காருங்க. நான் அவருகிட்டதான் வளர்ந்தேன்னு சொல்லிக்கறீங்க..இது ஒங்களுக்கு தெரியாதா..?

அதனால எங்களமாதிரி நாட்டுப்புறக் கலைஞர்களும் தஞ்சை விழாவுல கோயில்ல ஆடறதுக்கு இடம் குடுங்க.பெரிய கோயில் சுவத்துல எங்க பறை சத்தமும் கேட்கட்டுமே..புழுதிபடிஞ்ச எங்க காலுங்க கோயிலுக்குள்ள ஆடட்டுமே...யுகம்யுகமா ஒடுக்கப்பட்டிருக்கிற எங்க குரல் பெரியகோயில் கோபுரத்துல எதிரொலிக்கட்டுமே..அடிமைச்சங்கிலி நொறுங்கநொறுங்க திசைகளெல்லாம் அதிர அதிர... நாங்க கோயிலுக்குள்ள ஆடினா..தீட்டு பட்டுடுமா..நட்ட கல்லும் பேசுமோன்னு ரெண்டு நாளைக்கு முன்னாலதானே பேசுனீங்க..அப்புறம் நாங்க ஆடினாமட்டும் கோயில் இடிஞ்சுடுமா..? திட்டமிட்ட இந்த புறக்கணிப்பை...ஒதுக்குதலை...எளிய மனிதர்களை கேவலப்படுத்துவதை ...தடுத்து நிறுத்த...ஒங்க ஒரு கையெழுத்து போதும். செய்ஞ்சீங்கன்னா, சந்தோஷத்துல அடிப்பேன்...
டண்டணக்கா..டண்டன்க்கா...
டண்டணக்கா..டண்டன்க்கா...

இப்படிக்கி...
கருப்பன்
பறை இசைக்கலஞர்

No comments: