Sunday, September 26, 2010
காமன் வெல்த் அல்ல காங்கிரஸ் வெல்த் இந்தியாவின் அவமானம்
சர்வதேச நாடுகளுக்கு இந்தியாவின் செல்வாக்கை நிரூபித்துக் காட்டும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளால், நாட்டின் ஒட்டுமொத்த கவுரவத்துக்கும் பலத்த அடி விழுந்துள்ளது.
போட்டி ஏற்பாடுகளில் ஊழல், கட்டுமானப் பணிகளில் முறைகேடு, டெங்கு பீதி, விளையாட்டு கிராமத்தில் சுகாதாரக் கேடு, ஸ்டேடியத்தின் கூரை இடிந்து விழுந்தது, நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது, பயங்கரவாத மிரட்டல் என, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், சர்ச்சை போட்டிகளாக மாறிப் போய் விட்டன.பாதுகாப்பு ஏற்பாடுகளையும், சுகாதாரக் குறைபாட்டையும் காரணம் காட்டி, நியுசிலாந்து, கனடா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகள், போட்டியில் பங்கேற்க தயக்கம் தெரிவித்துள்ளன. விளையாட்டு கிராமத்துக்கு வந்து பார்த்த, இந்த நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், அங்கு தெருநாய்கள் சுதந்திரமாக திரிவதையும், கழிவறைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதையும் கண்டு, திகைத்துப் போயினர். இவர்களில் சிலர், "ஆளைவிட்டால் போதும்' என, மறுபேச்சு எதுவும் இல்லாமல், தங்கள் நாடுகளுக்கு பறந்து விட்டனர்.
கப்பலேறும் மானம் : காமன்வெல்த் கிராமத்தில் வீரர்கள் தூங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள படுக்கைகளில் தெருநாய்கள் குதித்து விளையாடியதற்கான தடயங்களையும், தெருநாய்கள் ஆங்காங்கே சுற்றித் திரிவதையும், கழிவறைகள் சுகாதாரமற்ற வகையில் அழுக்கு படிந்து காணப்படுவதையும் காண முடிகிறது. போதாக்குறைக்கு, சில வெளிநாட்டு "டிவி' சேனல்கள், இந்த காட்சிகளை அடிக்கடி ஒளிபரப்பி, நம் மானத்தை வாங்கினர். "வரும் 2020ல் இந்தியா வல்லரசு நாடாகி விடும்' என்ற அரசியல்வாதிகளின் "பில்டப்'களை அடித்து நொறுக்கும் வகையில் அமைந்து விட்டது, காமன்வெல்த் போட்டிகளில் நடக்கும் குளறுபடிகள்.
காமன்வெல்த் போட்டிகள் : காமன்வெல்த் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்த 2006ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் போட்டிகள் நடந்தன. இதை தொடர்ந்து, தற்போது டில்லியில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இந்த போட்டிகளில் 71 நாடுகளை சேர்ந்த 8,500 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடப்பது, இதுதான் முதல் முறை. ஆசியாவில் இரண்டாவது முறையாக இந்த போட்டிகள் நடக்கின்றன. கடந்த 1998ல் கோலாலம்பூரில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தன.
ஒவ்வொரு நாட்டுக்கும் ரூ.48 லட்சம் : இந்த காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்காக, இந்தியா, கனடா நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் தலா 48 லட்ச ரூபாய் தரப்படும் என்றும், வீரர்களுக்கான விமான டிக்கெட், தங்குமிடம், உணவு, போக்குவரத்து ஆகியவற்றுக்கான செலவையும் ஏற்றுக் கொள்வதாக இந்தியா உறுதி அளித்தது.இதையடுத்து, காமன்வெல்த்தில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தன. இறுதியில் 46-22 என்ற ஓட்டு வித்தியாசத்தில் காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
செலவு எவ்வளவு?இந்தியாவில் நடக்கும் போட்டிக்காக 11 ஆயிரத்து 494 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், இதற்காக 36 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போட்டிகளை நடத்துவதற்காக கட்டமைப்பு பணிகளை செய்வது, விளையாட்டு அரங்கங்களை அமைப்பது மற்றும் புதுப்பிப்பது ஆகியவற்றுக்காக 27 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த செலவில் பெரும்பகுதி, "ஊழலில் கரைந்து விட்டதாக' மீடியாக்கள் அம்பலப்படுத்தின.
எங்கெங்கு காணினும் ஊழல் : தொடர் ஜோதி ஓட்ட ஏற்பாடுகள், போட்டி ஒளிபரப்பு உரிமை, விளம்பரதாரர் உரிமை என, ஆரம்பத்திலேயே போட்டி ஏற்பாடுகளில் பெருமளவில் ஊழல் நடந்ததாக தகவல் வெளியானது. இப்போட்டிக்காக, கடந்த ஆண்டு தொடர் ஜோதி ஏற்றி, ஓட்டத்தை தொடங்கி வைத்த பிரிட்டன் ராணியே, தனது கவலையை தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. ஆனாலும், அதிகாரிகள் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை.டில்லியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, விளையாட்டு அரங்கங்களை புதுப்பிப்பது, நடை மேம்பாலங்களை அமைப்பது, வீரர்களுக்கு தேவையான விளையாட்டு கருவிகளை வாங்குவது என, எங்கெங்கும் ஊழல் கரை கடந்தது. குறிப்பாக, மிகவும் விலை குறைந்த பொருட்களை, அதிக விலைக்கு வாங்கியதாக கணக்கு காட்டப்பட்டது. கட்டுமானப் பணிகளிலும் இதே நிலை தான். தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தியதால், நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது.
ஊழல் கண்காணிப்பு ஆணையம் அதிரடி : காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல் குறித்து தினமும் செய்திகள் வெளியானதும், மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆணையம் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. காமன்வெல்த் போட்டிகளின் 14 திட்டப் பணிகளில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியது.குறிப்பாக, திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தம் அளித்தது உள்ளிட்ட பணிகளில் முறைகேடு நடந்ததாக அறிக்கை தாக்கல் செய்தது. இதன் தொடர்ச்சியாக, போட்டி ஏற்பாட்டு குழுவின் இணை இயக்குனர் பொறுப்பில் இருந்த தர்பாரி என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.டென்னிஸ் கோர்ட் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம், போட்டி ஏற்பாட்டு குழுவின் பொருளாளர் அனில் கண்ணாவின் மகனுக்கு அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அனில் கண்ணா ராஜினாமா செய்தார். காமன்வெல்த் பணிகளில், குழந்தை தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்படுவதாக, பிரிட்டன் பத்திரிகை ஒன்று, புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு, தன் பங்கிற்கு இந்தியாவின் மானத்தை கப்பலேற்றியது.
வெள்ளம் : ஊழல் ஒரு பக்கம், போட்டிகளுக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்த, மறுபக்கம் இயற்கையும் தன் பங்கிற்கு விளையாடியது. அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பெய்த வரலாறு காணாத மழையால், டில்லியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட மைதானங்கள் சேதமாயின. சாலைகள், மேம்பாலங்கள் ஆகியவற்றின் கட்டுமானத்துக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களும், தண்ணீரில் மிதந்தன. வீரர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு கிராமம், வெள்ள நீர் சூழ்ந்து தீவு போல் காட்சியளித்தது. அங்கு தேங்கியிருந்த தண்ணீரால், கொசுக்கள் உருவாகி, டெங்கு, மலேரியா போன்ற நோய்களை உருவாக்கி, போட்டி ஏற்பாட்டாளர்களை கதறடித்தன.
பயங்கரவாதம் : இந்தியாவுக்கு நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து கொண்டிருந்த பயங்கரவாத பிரச்னையும், காமன்வெல்த் போட்டிகளில் ஊடுருவியது. போட்டிகள் துவங்குவதற்கு சில நாட்களே உள்ள சூழ்நிலையில், டில்லி ஜும்மா மசூதி அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், தைவான் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்தியன் முஜாகிதீன் அமைப்பிடம் இருந்து, காமன்வெல்த் போட்டிகளுக்கு மிரட்டல் விடுத்து, இ-மெயிலும் வந்தது. இதை பார்த்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், தங்களால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு பீதியை கிளப்பி விட்டு, புண்ணியம் தேடிக் கொண்டன. காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்பின் தலைவர் மைக்கேல் பென்னல் தலைமையிலான குழுவினர், விளையாட்டு கிராமத்தை சுற்றிப் பார்த்து விட்டு, அதிருப்தி தெரிவித்தனர்.
அடி மேல் அடி :இதுபோன்ற பிரச்னைகளால் டில்லி காமன்வெல்த் போட்டிக்கு, தொடர்ந்து அடி மேல் அடி விழுந்து கொண்டிருந்தது. விளையாட்டு வீரர்களிடம் பீதி ஏற்பட்டு, சிலர் போட்டிகளை புறக்கணிப்பதாகவும் அறிவித்தனர். ஆனால், இதற்கெல்லாம் சாதாரண மக்கள் கவலைப்பட்ட அளவுக்கு கூட, விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளும், பொறுப்பாளிகளும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. "சர்வதேச அளவிலான ஒரு போட்டியை ஏற்பாடு செய்யும் போது, இதுபோன்ற குறைபாடுகள் எல்லாம் சகஜம்' என, "குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத கதையாக' பேசித் திரிகின்றனர். தங்கள் பாக்கெட் நிறைந்தால் போதும் என்ற நிலை தான் அவர்களுக்கு.
பிரதமர் தலையிட்டும் தீர்வு இல்லை : பிரச்னை பெரிதானதும், இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக தலையிட்டார். பிரதமர் வீட்டில் இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மத்திய அமைச்சர்கள் ஜெய்பால் ரெட்டி, கில், டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐ.மு., கூட்டணி ஒருங்கிணைப்பாளர் சோனியாவும் ஆலோசனைகளை வழங்கினார்.இதன்படி, போட்டிக்கான பணிகளை கண்காணிக்கும்படி, மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். இருந்தும், பிரச்னை தீரவில்லை.
அரசு என்ன செய்ய வேண்டும்? நம் நாட்டில் திறமையான முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களை கண்டறிந்து, போட்டி ஏற்பாடுகளை அவர்கள் கையில் ஒப்படைப்பதன் மூலம், நம் நாட்டின் மதிப்பு, சர்வதேச அளவில் கெடாமல் பார்த்து கொள்ளலாம். ஆனால், அதற்கு அரசுக்கு மனம் வர வேண்டும்.மேலும், போர்க்கால அடிப்படையில் விளையாட்டு கிராமத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போட்டி துவங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அரசு இயந்திரம் இதற்காக முடுக்கி விடப்பட வேண்டும். சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை நிரூபிக்கும் பிரச்னை என்பதால், இதற்காக ராணுவத்தை கூட பயன்படுத்தலாம். இல்லையெனில், எதிர்காலத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான விளையாட்டு போட்டிகளை மட்டுமல்ல, வேறு எந்த நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு, சர்வதேச நாடுகள் தயக்கம் காட்டும் சூழ்நிலை உருவாகி விடும். முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்காவிட்டால், சர்வதேச நாடுகளின் முன், நாம் தலைகுனிந்து நிற்கும் சூழல் உருவாகும். எது எப்படியோ, போட்டிகள் சிறப்பாக நடந்து முடிவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து விடுவோம்.
இந்தியாவால் முடியாதது இல்லை : சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்துவது என்பது, இந்தியாவுக்கு புதிய விஷயம் அல்ல. கடந்த 1951 மற்றும் 1982 ஆகிய ஆண்டுகளில் ஆசிய விளையாட்டு போட்டிகள் இங்கு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட வரலாறு உண்டு. எனவே, வெறும் 12 நாட்கள் மட்டுமே நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டிகளை நடத்துவது, இந்தியா போன்ற மனிதவளம் கொண்ட நாட்டுக்கு சிரமமான காரியமே அல்ல. ஆனால், போட்டி துவங்கியதில் இருந்து, முடிவது வரை அனைத்திலும் பிரச்னை என்றால், அடிப்படையிலேயே கோளாறு இருக்கிறது என்று தானே அர்த்தம்!
"கவுன் டவுண்' களேபரம் : போட்டிகள் துவங்குவதற்கு சில நாட்களே உள்ள கடைசி நேரத்தில் நடந்த "மெகா' குளறுபடிகள்:
* ஜவகர்லால் நேரு அரங்கில் 961 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. போட்டி துவங்குவதற்கு 11 நாட்கள் இருக்கும் போது, அரங்கின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இங்குள்ள நடைபாதை மேம்பாலமும் இடிந்து விழுந்தது.
* காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தின் பணிகள் 1,000 கோடி ரூபாய் செலவில் நடந்தன. வீரர்கள் வரத் துவங்கிய நேரத்தில் இங்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டது.
* இந்திரா காந்தி விளையாட்டு வளாகம், 669 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு சைக்கிள் போட்டி நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஓடுபாதைக்குள், தண்ணீர் கசிந்ததால், ஓடுபாதை சேதமடைந்தது.
குற்றச்சாட்டு பட்டியல் : டில்லி காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து மற்ற நாட்டு வீரர்கள் கூறிய குற்றச்சாட்டுகள்:
ஸ்காட்லாந்து: விளையாட்டு கிராமத்தில் தெரு நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. வீரர்கள் தூங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள படுக்கையில் நாய்கள் உற்சாகமாக விளையாடுகின்றன. அறைகளில் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன.
பிரிட்டன்: விளையாட்டு கிராமத்தில் உள்ள கழிப்பறைகள், சுகாதாரமின்றி உள்ளன. உள்ளே நுழையவே முடியவில்லை. இங்குள்ள மின்சார கருவிகளும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன.
கனடா: விளையாட்டு கிராமம் முழுவதும் குப்பை கூளங்கள் தேங்கிக் கிடக்கின்றன. அங்குள்ள சூழ்நிலையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது.
நியூசிலாந்து: தற்போதுள்ள நிலை, இன்னும் ஒரு சில நாட்களில் முற்றிலும் மாறி விடும் என கூற முடியாது.
யார் யாருக்கு என்ன பொறுப்பு? * எம்.எஸ்.கில் (மத்திய விளையாட்டு துறை அமைச்சர்), ஜெய்பால் ரெட்டி (மத்திய நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர்), ஷீலா தீட்ஷித் (டில்லி மாநில முதல்வர்) இவர்கள் மூவருக்கும் தான், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான முக்கிய பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. விளையாட்டு போட்டிகள் தொடர்பான திட்டங்கள், ஏற்பாடுகள் ஆகியவற்றை இவர்கள் தான் கண்காணிக்கின்றனர்.
*சுரேஷ் கல்மாடி: காங்கிரஸ் எம்.பி.,யான இவர், காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாட்டு குழு தலைவர். தொடர் ஜோதி ஓட்டம், வீரர்களுக்கான டிக்கெட், போக்குவரத்து, தங்குமிட வசதி, உணவு வசதி, துவக்க மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகள், டிக்கெட் விற்பனை ஆகியவை இவர் பொறுப்பில் தான் விடப்பட்டன. ஊழல் குற்றச்சாட்டு எழுந்த போது, கல்மாடி மீது தான் அதிகம் புகார் தெரிவிக்கப்பட்டது. தற்போது காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டு குழுவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளார்.
*ஒய்.எஸ்.தத்வால்: டில்லி டி.ஜி.பி.,யான இவர் பொறுப்பில் தான், பாதுகாப்பு ஏற்பாடுகள் விடப்பட்டுள்ளன.
*செல்ஜா: மத்திய சுற்றுலா துறை அமைச்சர். போட்டிகளை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்டவை இவர் பொறுப்பில் விடப்பட்டுள்ளன.
*அம்பிகா சோனி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர். போட்டிகளை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவது, தரமான முறையில் ஒளிபரப்பு வசதிகளை செய்து தருவது, செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது ஆகியவற்றை, இவரது தலைமையிலான அமைச்சரகம் தான் கவனிக்கிறது.
"இதுபோன்ற அரைகுறையான போட்டி ஏற்பாடுகளை இதுவரை என் வாழ்க்கையில் பார்த்தது இல்லை. இதன் காரணமாக எதிர்காலத்தில், ஒலிம்பிக் போன்ற மிகப்பெரிய விளையாட்டு போட்டிகளை நம்மால் நடத்த முடியும் என, என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!'- மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த குஞ்சராணி தேவி, பளு தூக்கும் வீராங்கனை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment