Saturday, September 11, 2010

யார் ? இந்த விநாயகன்?





விநாயகர் எனும் கடவுள் இந்த நாட்டிலே உற்பத்தியான கடவுள் என்றும் சொல்ல முடியாது. வடநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கே இவ்வளவு கூத்தடிக்கப்படுகிறது. ஆற்றங்கரையோரம், அரசமரத்தின் கீழ், குளத்தங்கரையிலும், வீதிகளின் சந்தியிலும் வைக்கப்பட்டு இருக்கும் இந்தக் கடவுளின் யோக்கியதையைச் சொல்லப்போனால் அது ஏனைய ´கடவுள்´களுக்கு மிகவும் வெட்கக்கேடாகும்.

அதாவது, இவருடைய பிறப்பின் வரலாறு அந்தப் பார்ப்பனர்களாலேயே எழுதப்பட்ட புராணங்களில் இருந்து பார்த்தாலும் கூட மிக மிக மோசமாக உள்ளது. விநாயகர் பிறப்பு பற்றி மூன்று வரலாறு உள்ளது. நம் மக்களுக்கு இவற்றில் இருந்து ´இது உண்மையில் கடவுள்´ என்று சொல்ல முடியுமா என்பதை அறிய முடியவில்லை.

சிவன் என்ற கடவுளின் மனைவி பார்வதி குளிக்கப் போனாளாம். தான் குளிக்கின்றபோது யாராவது அந்த அறைக்குள் புகுந்துவிடக்கூடாதே என்று பயந்து குளிக்கும் அறைக்கு வெளியே காவல் வைப்பதற்கு ஒரு உருவத்தை உற்பத்தி செய்தாளாம். அந்த உருவத்தை எப்படி உற்பத்தி செய்தாள் என்பது தான் கடவுள் தன்மையை விளக்கும் அதிசயம்.

முதலாவதாக,

பெண்கள் குளிக்கும்போது அங்கு அந்த அறைக்கு ஆண்கள் போவது சர்வ சாதாரணமாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், யாராவது வந்து விடுவார்களோ என்ற பயம் இருந்திருக்கத் தேவையில்லை; காவல் செய்யவும் ஆள் தேவையில்லை. அடுத்தபடியாக, ஆண்கள் யாராவது வந்து விடுவார்கள் என்ற பயம் இருந்தால், விநாயகர் என்று செய்யப்பட்ட அந்த உருவம் ஆண் உருவம் தானே! ஆண்கள் வந்துவிடக் கூடா தென்ற நினைப்பினால் ஒரு ஆணையே உற்பத்தி செய்து சதா நேரமும் பார்த்துக்கொண்டு இருக்கச் செய்வது எவ்வளவு புத்திசாலித்தனம்?

குளிப்பதற்காகச் சென்ற பார்வதி, தன் உடம்பின் மேல் உள்ள அழுக்கை உருட்டி ஒரு உருண்டை பிடித்து, அதை வாசற்படியில் வைத்து உயிர்கொடுத்தாள் என்று கூறப்படுகிறது. இதுதான் விநாயகர்!

ஒரு மனிதனுடைய எடைக்கு ஏற்றவாறு அத்தனை பெரிய அழுக்கு பார்வதியின் மேல் இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளாமல் இருக்கமுடியுமா? எனவே, சுத்த ஆபாசமும், அசுத்தமும் நிறைந்தவளாகவே நாம் அவளைக் கருதவேண்டியுள்ளது.

அடுத்தப்படியாக,

அவள் குளிக்கும்போது அங்கே வருகின்றான் சிவன். சிவனைக் கண்டதும் உமா கேட்கின்றாள், "இங்கே எப்படி வந்தீர்? நான் குளிக்கும் போது நீர் வரலாமா? ஒரு ஆளை நடையில் காவல் வைத்து இருந்தேனே, அவனை எப்படி தட்டிக் கழித்துக்கொண்டு வந்தீர்கள்?" என்றதும், அதற்குப் பரம சிவன் கூறுகின்றார், "நான் வரும்போது நடையிலே ஒருவன் நின்று கொண்டு வழி மறித்தான்; நான் இங்கே வரவேண்டும் என்று கூறினேன். அதற்கு அவன் விடமாட்டேன் என்றான்; யாராய் இருந்தாலும் சரி, கணவனாய் இருந்தாலும் விட மாட்டேன் என்றான்! என்னைவிடாமல் தடுத்தான். எனவே நான் என் கை வாளால் அவன் தலையைச் சீவினேன். பிறகு தடையின்றி உன்னைக் காண வந்தேன்" என்றான்.

இதிலே, குளிக்கும் பெண் தன் மனைவியாய் இருந்தாலும்கூட அவனுக்கு அங்கே என்ன வேலை?

இரண்டாவது, அதற்காக ஒரு மனிதனையே கொலை செய்து விட்டுப் போகவேண்டிய அவ்வளவு பெரிய சங்கதி அங்கே என்ன நடந்துவிட்டது?

மூன்றாவது, அவள் கணவனே என்று தெரிந்த பின்னும் பரமனை அவன் தடுத்தது எவ்வளவு முட்டாள்தனம்?

இவற்றை எல்லாம் யோசனை செய்தால் இது ஒரு அண்டப்புளுகு என்பதும், முட்டாள்தனமான நடவடிக்கை என்பதும் விளங்கும். இதனை அறிந்த பார்வதி, துடிதுடித்துக் கொண்டு ஓடி வந்து பார்க்கின்றாள். தலை துண்டாக்கப்பட்டு உள்ளது. ஆனால் துண்டாக்கப்பட்ட தலையை அங்கே காணோம். உடனே பரமனை நோக்கி, "நாதா என் அருமைச் செல்வம் - என் குழந்தை போன்று நான் உற்பத்தி செய்த அந்த அருள் செல்வத்தை எனக்குத் தாங்கள் தந்தாக வேண்டும். இல்லையேல் என்னால் பொறுத்துக் கொண்டு இருக்க முடியாது!" என்று கூறினாள்.

பிறகு இதைக்கேட்ட பரமன் என்ன செய்வதென்று யோசித்து, கடைசியாக ஒரு யானையின் தலையைக் கொய்து அந்த முண்டத்தின் மேல் வைக்கின்றான். உடனே அந்த முண்டம் யானைத்தலை கொண்ட விநாயகர் ஆகிறது. இது ஒருகதை.

மற்றொன்று -

பரமனும், பார்வதியும் ஒரு நாள் வனத்திற்குச் சென்றபோது, ஒரு ஆண் யானையும், பெண் யானையும் கலவி செய்து கொண்டு இருந்ததைப் பார்வையிட்டனர். அதை ஆசையால் பரமனும் பார்வதியும் யானை வடிவில் உருமாறிக் கலவிசெய்து பெற்றது தான் விநாயகர்.

மூன்றாவது,

ஒரு நாள் பார்வதியும் பரமனும் போய்க்கொண்டு இருக்கையில், ஒரு யானையின் உருவம் (பொம்மை) ஒன்றைக் கண்டார்களாம். ஆகவே, அதன் மேல் மோகம் கொண்ட பார்வதியும் அதுபோல் பிள்ளை பிறக்கவேண்டும் என்ற நினைத்தாளாம். ஆகவே, அப்படிப் பிறந்தது தான் விநாயகர் என்றும் கூறுகிறார்கள்.

ஆகவே இந்த மூன்று கதைகளையும் தெரிந்த மக்களே இந்தப்படி மண்டையை உடைப்பார்கள் என்றால், இவர்களின் புத்திகெட்டத் தன்மையை, முட்டாள்தனத்தைப் பொறுத்துக் கொண்டு இருக்க முடியுமா?

இந்தப்படி ஆபாசமான கதையை எழுதி நம்மை நம்பும்படிச் செய்துவிட்டனர் பார்ப்பனர். ஆகவே, இது சிவனும் சுப்பிரமணியனும் வந்த காலத்திலே வந்தது, வடநாட்டான் இங்கு கொண்டுவந்து விளம்பரம் செய்துவிட்டான். அது இப்போது பெரிய கடவுளாக மதிக்கப்பட்டு எல்லாக் காரியங்களுக்கும் முன்னே வைக்கும் இடத்தைப் பெற்றுவிட்டது. ஆனதால் தான் பிள்ளையார் சதுர்த்தி - விநாயகர் சதுர்த்தி என்று ஆடம்பரமான நாளைக் கொண்டாடுகிறார்கள்.

எனவே, இதை எல்லாம் அறிவைக் கொண்டு ஆராய்ந்தால், பகுத்தறிவைப் பயன்படுத்திப் புகுந்து பார்த்தால் மனிதனுக்கு இதன் உண்மை புலனாகும். ஆனால் நாம் அப்படிச் செய்வது இல்லை.

இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.

* சிறுகுறிப்பு : "இந்துமதப் பண்டிகைகள்" என்னும் நூலில் இருந்து விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டம் எதற்காக? என்னும் புராணக் கதையை பெரியார் விளக்கியதை இப்பகுதியில் தொகுத்திருக்கின்றோம்.


தொகுப்பு
தமிழச்சி (எழுத்தாளர்/ பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா அமைப்பாளர்)

No comments: