Tuesday, March 18, 2014

ப.சிதம்பரத்துக்கு ஒரு பகிரங்க மடல்..........

ஒரே நாளில் 40 ஆயிரம் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொன்றுகுவித்த ராஜபக்ஷேவை உங்கள் அரசுதானே குடியரசு மாளிகையில் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்று விருந்தோம்பி மகிழ்ந்தது? காமன்...வெல்த் விளையாட்டு அரங்கில் அவருக்குத் தனிமரியாதை தந்து பரவசப்பட்டவர் நம் பாரதப் பிரதமர்தானே! புத்தகயாவிலும், திருப்பதியிலும் அவர் புனித யாத்திரை நடத்துவதற்கு அனுமதியும், பாதுகாப்பும் அளித்தது யார்? நீங்கள் அறிவாளி என்பதில் எங்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. அதற்காக, நாங்கள் எதையும் நம்பும் முட்டாள்கள் என்று நீங்கள் முடிவெடுத்துப் பேசுவதில் நியாயமில்லை. இனப்படுகொலையைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது’ என்று நீங்கள் மனிதகுல நாகரிகத்தின் உச்சத்தில் நின்று உரத்த குரலில் அறிவித்துவிட்டீர்கள். ஆனால், இனப்படுகொலை இலங்கை அரக்கர்களால் முள்ளிவாய்க்காலில் அரங்கேறியபோது நீங்களும், உங்கள் மத்திய அரசும் வெறும் மௌனப் பார்வையாளர்களாக மட்டும் இருக்கவில்லை; அந்த மாபாதகச் செயலுக்குப் பக்க பலமாகவும் இருந்தீர்கள் என்பதை உலகம் நன்கறியும். ஈழத் தமிழர் அழிவுக்கு நாள் குறித்த இலங்கை அரசுக்கு இணக்கமாக நடந்துகொண்ட நீங்கள், போரை நிறுத்த எவ்வளவோ முயன்றதாகச் சொல்கிறீர்கள். கேழ்வரகில் நெய்யென்றால் கேட்பவர்களுக்கா புத்தியில்லை? 'ஒரு இறையாண்மை உள்ள நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தருவது எளிதல்ல’ என்று புத்தஞானம் போதிக்கிறீர்கள். அல்பேனியர்களுக்கும் செர்பியர்களுக்கும் ஒத்துவராத நிலையில் நடந்த இனப்போரில் 11 ஆயிரம் பேர் பலியானதும், பத்து லட்சம் அல்பேனியர்கள் துரத்தியடிக்கப்பட்டதும், செர்பியர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட அல்பேனியர்கள் சர்வதேச சமுதாயத்தின் அங்கீகாரத்துடன் 'கொ சோவா’ தனிநாடு கண்ட சரித்திரம் உங்களுக்குத் தெரியாதா? யுகோஸ்லேவியா இன அடிப்படையில் சிதறுண்டதைச் சிந்தியுங்கள். 'குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்தியா ஓயாது’ என்றீர்கள். அடுத்த நாளே அந்தக் குற்றவாளிகளின் கடற்படையை வலுப்படுத்தி எங்கள் மீனவர்களை மேலும் கொன்று குவிக்க வழிவகுக்கிறீர்கள். உங்கள் வார்த்தைகளுக்கு நம்பகத்தன்மை இல்லை என்பதை நீங்களே இதற்கு முன்பு நிரூபித்திருக்கிறீர்கள். 'இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம், வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு, தமிழர்களின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் பெற்றுத்தரும் 13-வது திருத்தத்தை இலங்கை அரசு நிறைவேற்றும் வரை இந்தியா ஓயாது’ என்றும் நீங்கள் சுருதி பேதம் சிறிதும் இல்லாமல் சொல்லி இருப்பதைப் படித்தபோது சிரிப்பை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை சிதம்பரம் அவர்களே! விடுதலைப் புலிகள் இந்திய அரசின் ஆதரவோடு இலங்கை ராணுவத்தால் மே 18, 2009 அன்று முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக ராஜபக்ஷே ஆரவாரத்துடன் அறிவித்து நான்கரை ஆண்டுகள் நடந்துவிட்ட பின்பும், 13-வது திருத்தம் ஏன் நடைமுறைக்கு வரவில்லை நிதியமைச்சரே? போர் நடந்த நேரத்தில் 13-வது திருத்தம் வழங்கும் உரிமைகளோடு கூடுதலாகவும் சில உரிமைகள் ஈழத் தமிழருக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கிய ராஜபக்ஷேவின் வாய் மலர்ந்த அரசியல் தீர்வுதான் '13 ப்ளஸ்’ என்பதை அரசியல் விழிப்பு உணர்வுள்ள ஒருவராவது மறக்க முடியுமா? இன்று அதே ராஜபக்ஷே, 'தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது பற்றிப் பேச நான் என்ன முட்டாளா?’ என்று ஆணவத்துடன் பத்திரிகையாளர்களிடம் பதிவு செய்ததையும், '13 மைனஸ்’ என்று புதிய பல்லவி பாடுவதையும் மன்மோகன் அரசு ஏன் மனதில் கொள்ளவில்லை? ஈழத் தமிழருக்குரிய உரிமைகள் அனைத்தையும் அள்ளி வழங்கும் அதிசய அட்சய பாத்திரம் 13-வது திருத்தம் என்பது போன்ற பொய்யான மாயத்தோற்றத்தை நீங்களும், காங்கிரஸ் அறிவு ஜீவிகளும் இன்னும் எவ்வளவு காலம் உருவாக்கி இந்த இனத்தை ஏமாற்றப்போகிறீர்கள்? இந்திய மாநிலங்களுக்குரிய உரிமைகள் ஈழ மண்ணில் வடக்கிலும் கிழக்கிலும் சென்று சேர இந்த 13-வது திருத்தம் எந்த வகையில் உதவக்கூடும்? ராஜபக்ஷேவின் கண்ணசைவுக்கு ஏற்பக் காரியமாற்றும் ஆளுநரே உண்மையான நிர்வாக அதிகாரம்(executive power) உள்ளவர். அவருக்கு 'உதவுவதும் பரிந்துரைப்பதும்’ தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் பணி. நிதி மேலாண்மை ஆளுநர் வசம். ஆளுநர் விருப்பத்துக்கு இசைய மறுக்கும் மாகாண சபை கலைக்கப்படும். அந்த அதிகாரம் இலங்கை அதிபர் கையில்... 13-வது திருத்தம் சொல்லும் செய்தி இதுதானே! சட்டம்-ஒழுங்கு, காவல் துறை, அரசு நிலம் என்று எதன் மீதும் முற்றுரிமை மாகாண அவைக்கு அறவே இல்லை. 'தேசிய நலன்’ என்ற போர்வையில் இலங்கை நாடாளுமன்றம் தமிழர் நலனுக்கு எதிராக எந்தச் சட்டத்தையும் இயற்ற முடியும். எந்த உரிமையும் தமிழருக்குத் தருவதற்கு வழிவகுக்காத இந்த 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் சிங்கள அரசுக்குச் சம்மதம் இல்லை. நீங்கள் ஒரு கற்றறிவாளர், புகழ்பெற்ற வழக்கறிஞர்; சர்வதேச சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர். இந்த ஏதுமறியாப் பாமரனுக்கு நீங்கள்தான் தெளிவான பதிலைத் தரக்கூடும். இரண்டு இறையாண்மை மிக்க நாடுகள் பலமுறை கூடிப் பேசி, விவாதித்து... இறுதியில் ஓர் ஒப்பந்தத்தில் கையப்பமிட்டால், அந்த ஒப்பந்தம் இரு நாடுகளையும் சம அளவில் கட்டுப்படுத்துவதுதானே நியாயம்? பின்னாளில் அரசுப் பொறுப்பில் அமரும் அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்கேற்ப ஒரு நாடு தன்னிச்சையாக அந்த ஒப்பந்தத்தைக் குப்பைக்கூடையில் வீசியெறிந்தால், அந்த இழிசெயலை இன்னொரு நாடு பார்த்தும் பாராமல் நடந்துகொண்டால், இரண்டு அரசுகளின் 'இறையாண்மை’ என்னாவது? இறையாண்மை பற்றி அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கும் நீங்கள்தான் இந்த அறிவிலிக்கு விளக்கவுரை வழங்க வேண்டும். vikatan.com, 08.12.2013.