Tuesday, June 29, 2010

ஈழத்தமிழனாகப் பிறந்ததுதான் குற்றமா?

ரமணன்,

த.பெ. குணசீலன்,

கிளைச் சிறை முகாம்,

பூவிருந்தவல்லி,

சென்னை - 600 056.

பெறுநர்

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: நீதியான நியாயமான, சுதந்திரமான வாழ்வு வேண்டியும் தடையின்றி முறையான சிகிச்சை பெற பரிந்துரைக்க வேண்டியும் எனது நாட்டிற்கு திரும்பச் செல்ல உதவி வேண்டியும் மனிதாபிமான ரீதியில் உதவிபுரியுமாறு ஒரு ஈழத்தமிழ் அகதியின் விண்ணப்பம்.

மேற்குறிப்பிட்டுள்ள முகவரியில் வசிக்கும் ரமணன் த.பெ குணசீலன் ஆகிய நான் இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அங்கே வாழமுடியாத சூழ்நிலையில், என் தம்பியை இலங்கை வவுனியாவில் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்ற கோர நிகழ்வால் எனது மனைவி, எனது 3 வயது மகளுடன் சாவுக்குப் பயந்து அகதிகளாக 10.09.2007 அன்று விசைப்படகு மூலம் தமிழகம் வந்து, மண்டபம் அகதி முகாமில் பதிவு செய்து, பின் திருச்சியில் வசித்து வந்தேன். அங்கு புகைப்படம் எடுக்கும் தொழில் செய்து என் குடும்ப வாழ்வை நடத்தி வந்தேன். சந்தோசமாகவும் நிம்மதியாகவும் எங்கள் வாழ்வு கழிந்தது. என் மனைவியும் கர்ப்பமானார். இவ்வாறு 7 மாத காலமாக எங்கள் வாழ்வு நகர்ந்து கொண்டிருந்தது.

இந்த வேளையில் எனது நண்பன் விஜ‌யநீதன் என்பவர் தான் வாங்கிய மீன்பிடி உபகரணங்களை தனது வீட்டிற்குக் கொண்டு செல்வதற்காக வாடகை வண்டி ஏற்பாடு செய்து தரும்படி என்னிடம் கேட்டார். அவருக்கு உதவி செய்யும் பொருட்டு ஒரு வாடகை வண்டி ஒழுங்கு செய்து, அவரின் அன்பான வற்புறுத்தல் காரணமாக நானும் அவருடன் செல்ல வேண்டி வந்தது. இவ்வாறு அவரின் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை 29.07.2008 அன்று இராமநாதபுரம் மாவட்டம் திர்ப்பாலைக்குடியில் தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டு விடுதலைப்புலிகளுக்கு பொருட்கள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜ‌ர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன்.

இரண்டு மாதங்களுக்குப் பின் எனது மனைவி கடன்பட்டு, தன் நகைகளை அடகு வைத்து மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு. நீலகண்டன் என்பவருக்கு பிணையில் எடுப்பதற்காக ஒரு இலட்சத்து நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்து அவரால் ஏமாற்றப்பட்டு பிணையில் வெளிவந்த என்னை மதுரை சிறைவாசலில் வைத்து மீண்டும் க்யூ - பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு கிளைச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டேன். நான் முக்கியமாக குறிப்பிடுவது என்னவென்றால் நீதிமன்றத்தால் ஒரு நீதிபதி அவர்கள் 'இவர் பிணையில் வீடு செல்லலாம்' என அனுமதித்தும் திரும்பவும் சிறைவாசலில் வைத்து கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? இவ்வாறு திரும்பவும் சிறையில் அடைப்பதென்றால் எதற்கு நீதிமன்றம் கூட்டிச்செல்ல வேண்டும்? எனக்கு எனது பணம் மிஞ்சியிருக்குமே?

எனக்குத்தான் இந்திய சட்டதிட்டம் எதுவுமே தெரியாது ஏனெனில் நான் ஒரு இலங்கைத் தமிழன். எனக்கு இப்படி ஒரு சட்டம் இருக்கிறது எனத் தெரிந்திருந்தால் எனது கர்ப்பமான மனைவியை நீதிமன்றம், சிறை என மாறி மாறி அலைய வைத்திருக்க மாட்டேனே? எனது பணத்தையும் இழந்திருக்கமாட்டேனே? அவ்வாறு மீண்டும் சிறையில்தான் அடைக்கவேண்டுமெனில் ஏன் பிணை தர வேண்டும்? நீதிமன்றத்தின் சட்டதிட்டங்களை அவர்கள் அவமதிப்பதென்றால் பேசாமல் என்னை சிறையிலேயே அடைத்து வைத்திருக்கலாமே? நீதிமன்றத் தீர்ப்பு செல்லாது என்று க்யூ - பிரிவு காவல்துறையினர் தாங்கள் சொல்வதுதான் சட்டம் எனில் எனக்கு பிணையில் விடுதலை தந்த நீதிமன்றம் எதற்கு? நீதிபதி எதற்கு? வழக்கறிஞ‌ர் எதற்கு? என்னை சிறையில் அடைப்பதற்கு நீதிமன்றம் தேவை, என்னை விடுதலை செய்வதற்கு நீதிமன்றம் தேவையில்லையா? இந்திய சட்ட ஒழுங்குகளில் இந்த நடைமுறை எங்கு உள்ளது?

ஒரு சிங்களவனைப் பிடித்து குறைந்தது 3 மாத காலத்தில் சிறையில் அடைத்து பின் விடுதலை செய்து இராஜமரியாதையோடு இலங்கைக்கு வழியனுப்பி வைக்கின்றார்கள். அதே சிங்களவன் பிறந்த அதே நாட்டில்தான் நானும் பிறந்தேன். அவன் சிங்களவன், நான் தமிழன். சிங்களவனுக்கு ஒரு சட்டம், தமிழனுக்கு ஒரு சட்டம் என உங்கள் சட்டத்தில் ஏதாவது இருக்கின்றதா? ஒரு சிங்களவனையே அல்லது வேறு நாட்டுக்காரனையோ இவ்வாறு சிறப்பு சிறையில் அடைத்து வைப்பதில்லையே அது ஏன்? நான் குற்றவாளியா? அல்லது நிரபராதியா என்று நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். அதற்கு நீதிமன்றம் கூட்டிச்சென்றால்தானே? அவ்வாறு குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் குறைந்தது 6 மாத கால தண்டனைதான். ஏன் இவ்வாறு இர‌ண்டு வருடகாலமாக சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும்? நீதிமன்றம் கூட்டிச்சென்றால்தானே என் வழக்கின் தன்மையும் வழக்கு எந்த நிலையில் உள்ளது என்றும் தெரியவரும்? இரண்டு வருடகாலமாகியும் குற்றப்பத்திரிக்கை ஏன் இன்னும் தாக்கல் செய்யவில்லை? இதற்கு என்ன காரணங்கள்?

இந்தியாவிற்குள் பயங்கரவாதியாக நுழைந்தது மட்டுமின்றி மும்பையில் சுமார் 160 பேரை ஈவிரக்கமில்லாமல் நாயை சுடுவதுபோல சுட்டுத்தள்ளிய அஜ்மல் கசாப்பிற்கு சில மாதங்களில் சுமார் ஆயிரத்து நானூறு பக்கங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து சிறையில் அஜ்மலை இராஜ மரியாதையோடு நல்லவிதமான சாப்பாடு (மட்டன், சிக்கன்) கொடுத்து வைத்திருக்கும் இந்திய அரசாங்கம் இந்தியாவிற்குள் அகதியாக நுழைந்து நிம்மதி பெருமூச்சுடன் என் மனைவி பிள்ளையுடன் வாழ்ந்து வந்த என்னை சிறையில் அடைத்து இரண்டு வருடகாலமாகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாதது ஏன்?

அகதியாக வந்த எனக்கு அகதி பதிவு அட்டை கொடுத்திருந்தும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழக்கு எப்படிபோட முடியும்? ஒரு நாடு ஒருவனை அகதியாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு அகதிப்பதிவு கொடுத்து, தங்க வீடு கொடுத்து உண்ண உணவு கொடுத்து, வேலை கொடுத்து சில வேலைகளில் ஆணோ, பெண்ணோ இங்குள்ளவர்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி கொடுத்தும் சட்டம் மட்டும் அயல் நாட்டார் சட்டம் போடுவது ஏன்? உதாரணமாக இந்தியாவின் திருமகள் சானியாமிர்சாவை திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சோயிப் மாலிக்கிற்கு அயல்நாட்டார் ச‌ட்டம் போடவில்லையே அது ஏன்? அதுவும் திருமணம் முடிப்பதற்கு முன் இந்தியாவின் இன்னொரு பெண்ணான ஆயிசாவை திருமணம் முடித்தவர் அவரை சில நாட்களில் விடுதலை செய்து விட்டது. ஏன் அவருக்கு மட்டும் சட்டங்கள் வித்தியாசமாக இருக்கின்றது?

இங்கே வாழப்பழகி, இங்குள்ள கலாச்சாரத்தில் மூழ்கி இங்குள்ள தமிழகத் தமிழன்போல் மாறிவிட்ட ஈழத்தமிழனுக்கு இங்கு தமிழகத் தமிழனுக்கு போடும் சட்டத்தையே போடலாமே? ஈழத்தமிழனும் நாடு இழந்து, ஊர் இழந்து, உறவுகள் இழந்து, தனது தாய்த்தமிழகம் என்று நம்பித்தானே வருகிறான். ஏன் அவனை பிரிவு காட்டி வேறு சட்டம் போட வேண்டும்? பிறகு எதற்கு மேடைகளிலும், உலக அரங்கிலும் தொப்புள் கொடி உறவு என்று சொல்லவேண்டும்?

ஒரு சிங்களவனுக்கோ, ஒரு பாகிஸ்தானிக்கோ ஒரு ஈழத்தமிழனுக்கோ இந்திய சட்டம் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. இந்திய சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானதா? மாறாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானதா?

நான் செங்கல்பட்டு சிறையில் இருக்கும்போதே எனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. இதில் முக்கியமாக நான் குறிப்பிடுவது என்னவெனில் ஒரு தமிழகத்தமிழன் சிறையில் அடைக்கப்பட்டால் அவனது மனைவி பிள்ளைகளை பார்ப்பதற்கு சொந்தபந்தம் இருக்கும்; அவனையும் வந்து பார்ப்பதற்கு உறவுகள் இருக்கும்; வழக்காட உதவிகள் இருக்கும். இந்தியா சட்டதிட்டம் நன்றாகத் தெரியும். குறுகிய காலத்தில் வழக்காடி வெளியே வந்து விடுவான்.

ஆனால் ஈழத்தமிழனாகிய எனக்கு அவ்வாறு இல்லை. நான் அகதியாக வரும்போதே, எனது மனைவி பிள்ளையோடு மட்டும்தான் வந்தேன். உறவுகள் என்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லை. இப்படி இருக்கையில் என்னை சிறையில் அடைத்து வைத்திருந்தால் என் மனைவி எப்படி வாழ்வார்? அவர் வேலைக்குப் போனால் இரண்டு பிள்ளைகளையும் யார் பார்ப்பது? அவரின் செலவுக்கு என்ன செய்வார்? அவரின் தனிமை பாதுகாப்பிற்கு யார் உத்தரவாதம்? தெரியாத நாட்டில் 22 வயது நிறைந்த ஒரு இளம் பெண் தன் இருகுழந்தைகளையும் வைத்துக்கொண்டு எப்படி பாதுகாப்போடு வாழ முடியும்?

ஆண்துனை இல்லாமல் வாழ்ந்தால் உடல்ரீதியாக எத்தனைவிதமான வன்சொற்களுக்கு ஆளாக வேண்டி வரும்? குழந்தைகளின் படிப்பை எப்படி கவனிப்பார்? தனது இரண்டாவது கைக்குழந்தையை தனது அறுவை சிகிச்சை செய்த உடலோடு எப்படி கவனிப்பார்? இப்படி இரண்டு வருட காலமாக நான் சிறையில் இருந்தால் என் மனைவி தன் வாழ்வாதாரங்களை எப்படி பெற்றுக்கொண்டு வாழ முடியும்?

இங்குள்ள சட்டதிட்டங்கள் எதுவும் தெரியாமல் எங்குபோய் யாரைப் பார்ப்பதென்று தெரியாமல் என்னை விடுவிக்க வழி தெரியாமல் ஏமாற்றப்பட்டு, ஏமாற்றமடைந்து மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு இரண்டு தடவைகள் தற்கொலைக்கு முயன்றவரை என் இரு பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைவு கூர்ந்து என் அன்பான வார்த்தைகளால் தடுத்து வைத்திருக்கிறேன். (அவர் தற்கொலைக்கு முயன்றதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இலங்கை வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் அவரது இரண்டாவது அண்ணா விமானக்குண்டு தாக்குதலில் இறந்து அவரது தாய், சகோதரர்கள் காணமல் போனது)

இன்னும் எதுவுமில்லாமல் விடுதலைக்கான வழிதெரியாமல் இப்படியே நான் சிறையில் இருந்தால் என் மனைவி எதுவும் செய்துவிடுவாரோ என அஞ்சுகிறேன். இதே காரணங்களை கருத்திற்கொண்டு கடந்த 01.02.2010 அன்று செங்கல்பட்டு கிளைச்சிறையில் இரண்டு வருட காலமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியும் என் வழக்கில் உள்ள இருவரை (திருமணம் ஆகாதவர்கள், பணவசதி படைத்தவர்கள்) விடுதலை செய்துள்ளனர். ஒருவரை கடந்த ஆண்டு 15 ம் தேதி 7ம் மாதமும் அடுத்தவரை 11ம் மாதமும் விடுதலை செய்துவிட்டனர்.

ஒரே குற்றப்பிரிவு, ஒரே வழக்கு, ஒரே நீதிமன்றம், ஒரே சிறை, ஒரே அறையில் தங்கியிருந்தும் எல்லாம் ஒரே மாதிரி இருந்தும் அவர்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது. எனக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை என்றும், எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழுந்தைகள் இருக்கிறதென்றும் ஒரு குழந்தை நோயால் அவதிப்படுவது குறித்தும் என் குடும்பத்துடன் வாழ என் வழக்கில் உள்ள இவரை விடுதலை செய்தது போல் என்னையும் விடுதலை செய்யக்கோரியும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தேன். பின் வேலூரில் அடைக்கப்பட்டு சென்னை உயர்நீதி மன்றத்தால் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டு மீண்டும் பூவிருந்தம‌ல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன்.

சாதாரண சிறையில் கூட மரம் செடிகள் இருக்கும்; மண்கூட இருக்கும்; மருத்துவமனைகள் இருக்கும்; நினைத்தவுடன் சிறை அதிகாரிகளைப் பார்க்க முடியும். கைதிகளின் குறைகளையும் அந்த அதிகாரிகள் உடனுக்குடன் தீர்த்துவிடுவார்கள். ஒரே ஒரு குறைதான் இரவு அறைக்குள் பூட்டி காலையி திறந்துவிடுவார்கள். ஒழுங்கு முறையில் வாய்தா சென்று வரலாம். நோய்கூடினால் வெளிமருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வரலாம், உறவினர்கள் யாரும் வந்து எளிதில் எந்தக் கைதியையும் பார்த்துவிட்டுச் செல்லலாம். கல்வி வசதிகள் உண்டு. யோகா வகுப்புகள் உண்டு. இன்னும் பல வசதிகள் உண்டு.

இலங்கை கொழும்பில் 4ம் மாடி என்றழைக்கப்படும் கொடூரமான சித்ரவதைக்கூடம் ஒன்று இருக்கின்றது. இதற்குள் அடைக்கப்படுபவர்கள் 40 சதவீதமானவர்கள் தப்பி விடுதலை ஆவார்கள். மீதி கணக்கில் காட்டப்பட மாட்டார்கள் காணாமல் போனோர் பட்டியலில் இணைக்கப்பட்டு விடுவார்கள். அந்த 4ம் மாடி சிறைக்கூடத்தில் கூட கணக்கில் காட்டப்பட்டவர்கள் U.N.H.C.R,I.C.R.C மனித உரிமைக்கான அமைப்புகள் வாராவாரம் சென்று பார்வையிட்டு விடுதலையை வலியுறுத்தியும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் வருவார்கள். இது எதுவுமே இல்லாமல் நாம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறை மிகவும் கொடூரமானது. என்னை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பூவிருந்தம‌ல்லி சிறையானது சிறப்பு முகாம் என்ற பேரில் இயங்கும் மறைமுகமான சித்ரவதைக்கூடம் (தயவு செய்து நேரில் வந்து பார்வையிட்டால் புரியும்)

இங்கு நாம் நினைத்தவுடன் வைத்தியம் செய்ய முடியாது, நினைத்தவுடன் சமையல் பொருட்கள் வாங்க முடியாது, நினைத்தவுடன் எமது உறவினர்கள் வந்து பார்வையிட முடியாது. இந்த சிறையானது இராஜீவ் காந்தி கொலையாளிகளுக்காக விசேடமாக வடிவமைத்து கட்டப்பட்டது. வெறும் 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் 26 பேருக்காக கட்டப்பட்டது. மேற்பரப்பு முழுவதும் கம்பிகளால் மூடப்பட்டுள்ளது. கம்பிகளுக்கு ஊடாகத்தான் வானத்தைப் பார்க்க முடியும். ஒரு பிடி மண்கூட இல்லை. நில‌ப்பரப்பு ழுமுவதும் சிமெண்ட் பூச்சால் பூசப்பட்டு தரை வைக்கப்பட்டுள்ளது. மரம் செடி எதுவும் கிடையாது. நிழல் என்று ஒதுங்குவதற்கு எதுவும் கிடையாது. குறுகிய இடத்திற்குள் 20 அடி உயரத்தில் சுவர் எழுப்பப்பட்டுள்ளதால் காற்றுக்கூட உள்ளே வராது.

இப்போது வெயில் காலம் என்பதால் வெப்பத்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை மேல் கம்பிகளிலும், கட்டிடங்களிலும் பகல் நேர வெப்பமானது தேங்கி கிடந்து இரவு முழுவதும் அந்த வெப்பத்தை வெளியேற்றிக் கொண்டு இருக்கும். இதனால் இங்குள்ள 19 பேருக்கும் வியர்வை, பரு உண்டாகி மிகவும் எரிச்சலுடன் வாழ்கின்றோம்.

2000 பேர் அடைக்கப்பட்ட சாதாரண சிறையில் கூட ஓர் அடுக்கு பாதுகாப்பு. இங்கு 19 பேருக்கு மட்டும் 4 அடுக்கு பாதுகாப்பு. நான் முக்கியமாகக் குறிப்பிடுவது என்னவெனில். எனக்கு செங்கல்பட்டு சிறையில் காவல் துறையினர் அடித்த கண்டல் காயம் தலையிலும், காலிலும், கையிலும் இருப்பதால் கடந்த மாதம் வட்டாட்சியர் திரு. வள்ளிமுத்து அவர்களிடம் என்னை மருத்துவமனை கூட்டிச்சென்று சிகிச்சை பெற அனுமதி கேட்டிருந்தேன் ஆனால் ஒரு மாதகாலம் மேலாகியும் அனுமதி தரவில்லை. இந்த சிறையிலும் மருத்துவ வசதி அறவே இல்லை. என் தலையில் வலி உள்ளதால் அடிக்கடி சாப்பிடும்போதும் பல்துலக்கும்போதும் மிகவும் வலி எடுப்பதால் தாங்க முடியாமல் மீண்டும் சென்னை அரசு மருத்துவமனை கூட்டிச் சென்று சிகிச்சை பெற 15.04.2010 அன்று வட்டாட்சியரிடம் ஒரு மனு அனுப்பியிருந்தேன். அதற்கு அனுமதி தரவில்லை. என் தலைவலி தாங்க முடியாத வலியாக இருப்பதால் 15.04.2010 அன்றைய தினமே எனக்கு விஷ‌ம் வாங்கித்தரும்படி மனு கொடுத்திருந்தேன்.

இவ்வாறு இருக்கையில் 16.04.2010 அன்று RA ஆன விஷயகுமார் என்பவர் எமது முகாமிற்கு சம்பளம் கொடுக்க வருகைதந்தார் அவரிடம் என்னை ஏதாவது ஒரு மருத்துவமனை செல்ல அனுமதி வாங்கித் தரும்படி கூறினேன் அவரோ சர்வசாதாரணமாக க்யூ - பிரிவு காவல்துறையினருக்கு எழுதி அனுமதி கேட்டிருக்கின்றோம். அவர்கள் அனுமதி தந்தவுடன் கூட்டிச் செல்கின்றோம் என கூறிவிட்டுச் சென்றுவிட்டார். பின் சில அதிகாரிகளிடம் தயவுடன் கேட்டால் திரும்பவும் என் மீது வழக்கு போட்டு சிறையில் அடைப்பேன் என்று மிரட்டுகின்றார்கள். இவர்கள் மாறி மாறி சொல்லி அனுமதி தர ஒரு மாத கால அவகாசம் தேவையா? அமெரிக்கா வெள்ளை மாளிகைக்குகூட எழுதிப்போட்டால் இதுவரைக்கும் பதில் வந்துவிடும். ஐயா நன்றாக சிந்தித்துப் பாருங்கள்... உயிர் போகும் நிலையில் ஒரு வருத்தம் (நோய்) முற்றினால் இவர்கள் அனுமதி தரும் கால அவகாசம் வரை எமது உயிர் எம் உடலில் இருக்குமோ என்பது சந்தேகம்தான்.

சிறையில் இருந்து பிணையில் விடுதலையாகிய எம்மை சிறப்பு முகாம் என்ற போர்வையில் திரும்பவும் அடைத்து வைத்துள்ளார்கள். சாதாரண சிறையை விட மிகவும் கொடூரமான இம்முகாம் எப்படி சிறப்பு முகாமாகும்? சிறப்பு சிறை என்று வைத்திருக்கலாமே! இச்சிறை பற்றியும் எம் வழக்கின் தன்மைகள் பற்றியும் “தமிழக மக்கள் உரிமைக்கழகத்தின்” செயலர் திரு.பா.புகழேந்தி அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் எமக்காக எமது அத்தியாவசிய தேவைகள் குறித்தும், எமது மனித உரிமைகள் குறித்தும் அடிக்கடி குரல் கொடுத்து மனிதாபிமான ரிதியில் பல உதவிகள் புரிவதும் தமிழக மக்கள் உரிமைக்கழகத்தின் செயலர் திரு.பா.புகழேந்தி அவர்கள்தான் எமது பல வழக்குகளை வாதாடி வருகின்றவர். எம்மைப் பற்றியும் எம் வழக்குகள் பற்றியும் எமது சிறை பற்றியும் நிறைய தெரிந்திருப்பவர்.

மிருகங்களுக்காக “மிருக வதை தடுப்புச்சட்டம்” இருக்கின்றது. மிருகங்களை துன்புறுத்தினால் கூட “புளுகிராஸ்” என்ற அமைப்பு தட்டிக்கேட்கும். சாதாரண சினிமாவில் கூடி நடிப்பு என்று தெரிந்தும் மிருகங்களை துன்புறுத்துவதாக மிருகங்களுக்காக குரல் கொடுக்க நிறைய அமைப்புகள் இருக்கின்றன. இதே போல் “மனித வதை தடுப்புச்சட்டம்” என்று ஏதாவது இருந்திருந்தால் நான் மட்டும் அல்ல ஈழத்தில் இறுதியுத்தத்தில் என் இன மக்களே பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்.

இறுதியாக நான் கேட்பது என்னவெனில், ஈழத்தமிழன் எந்த தமிழ் தெரியாத நாட்டிற்கு அகதியாக சென்றாலும் அந்தந்த நாடு ஈழத்தமிழனுக்கு குடியுரிமை கொடுக்கிறது. ஆனால் தமிழ் தெரிந்த தமிழகத்தில் மட்டும் குடியுரிமை கொடுக்காமல் மறுப்பது ஏன்? சாதாரண வழக்கைக் கூட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் பிணையில் வந்தும் பல வருடங்களாக சிறையில் அடைத்து குடும்பத்தை பிரிந்து வாழவியலை சீரழித்து கணவன் சிறையில் பல வருடங்களாக வாழ்வதால், வெளியில் பிரிந்திருக்கும் மனைவியானவள் யாரும் உறுதுணை இல்லாததால் பல உடலியல் ரிதியான உபத்திரங்களுக்கு, உள்ளாகி மனரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கின்றார்கள். வேறு சிலர் சொல்ல முடியாத பல பிரச்சனைகளால் விவாகரத்து செய்துள்ளார்கள்.

அகதியாக சகலவற்றையும் இழந்து பல வருடங்களாக தமிழகத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழும் இலட்சக்கண‌க்கான ஈழத்தமிழர்களுக்கு அண்மையில் தமிழக அரசு ஒதுக்கிய நிதி 100 கோடி. பல கோடிகள் சம்பாதித்து பல சுகங்கள், பல புகழ்கள் கண்டு மக்களுக்காக எந்தவித சேவையும் செய்யாமல் (நடிகர் லாரன்ஸ் தவிர்த்து) சமுதாயத்தை சீரழிக்கும் சினிமாத்துறையினருக்கு அண்மையில் தமிழக அரசு ஒதுக்கியிருப்பதோ பல நூறு கோடி. இந்தப் பாகுபாடுகள் பார்க்கும் நிலையில் இந்தத் தமிழக அரசிடம் நாம் எதையும் எதிர்பார்த்து நிற்பதில் எந்தப் பலனும் இல்லை. ஆகவே மனித உரிமைக்காகப் போராடும் உங்களிடம் கையேந்தி நிற்கின்றேன்.

செங்கல்பட்டு முகாமில் 02.02.2010 அன்று நடந்த சம்பவத்தை உற்று நோக்கினால், சட்ட நிபுணர்களே கேலிக் கூத்தாய் சிரிப்பார்கள். இப்படியொரு கேவலம் சர்வாதிகார இலங்கை அரசுகூட செய்யாது. ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் 4 அடுக்கு பாதுகாப்பிற்குள் மொத்தம் 33 இலங்கை அப்பாவித்தமிழர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் சில பேரின் குடும்பம் தமிழகத்திலும், சில பேரின் குடும்பம் இலங்கை வன்னியில் நடந்த யுத்தத்தில் இறந்தும் காணாமல் போயும் எங்கே இருக்கின்றார்கள் என்று தெரியாமலும் மன ரிதியாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள். செங்கல்பட்டு சிறையில் 99 பேர் அடைக்கப்பட்டு படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டும் 33 ஆக குறைக்கப்பட்டார்கள்.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களை நினைவில் வைத்தும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கோரியும் விடுதலையானவர்கள் போல் எங்களையும் விடுதலை செய்யக் கோரியும் உண்ணாவிரதம் இருந்தனர் (அன்று நானும் இருந்தேன்) எதையும் பேசித்தீர்க்காமல் அடித்து தாக்கி காயப்படுத்தியது மட்டுமல்லாமல் கொலை வழக்கு போட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.. சிறையில் அடைக்கப்பட்டு மனரீதியாக பாதிக்கப்பட்டு எதையுமே செய்ய இயலாத நிலையில் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்தவர்களால் எப்படித் திருப்பி தாக்க முடியும்? 33 அப்பாவி ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டிருந்த சிறையில் சம்பவம் நடந்த அன்று அனைவரும் ஒரே இடத்தில் நிற்பதற்கு சாத்தியம் இல்லை. மாலை 7 மணி என்பதால் சமையல் வேலையில் சிலரும், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு சிலரும், காரம் போர்ட் விளையாட்டில் சிலரும், உறங்கிய நிலையில் சிலரும் உண்ணாவிரதம் இருந்தவர்களில் ஒவ்வொருவரும் இவ்வாறு இருக்கையில் சம்பவம் நடந்த அன்று அந்த நேரத்தில் எதிர்பாராத வேளையில் சுமார் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் கண்களில் பட்டதோ வெளிமுற்றத்தில் நின்ற ஒரு சிலர்தான். அதுவும் நிராயுதபாணிகளாக....

ஏற்கனவே காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தும் நாம் ஏதாவது வன் முறையில் ஈடுபட்டாலோ திருப்பி ஏதாவது செய்தாலோ தப்பி ஓடவே முடியாது எனறு தெரிந்தும் அந்த ஒரு சிலரால் நன்றாகப் பயிற்சி எடுத்து அதிகாரமுள்ள அதுவும் துப்பாக்கிகள் உருட்டுக்கட்டைகளுடன் சுமார் 150 பேருடன் வந்திறங்கிய காவல்துறை அதிகாரியான ASP சேவியர் தன்ராஜ் என்பவரை நாம் எப்படி திருப்பித் தாக்கியிருக்க முடியும்? இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கூட 30.03.2010 அன்று எமது பக்கமே நியாயமானது என்றும் இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு அன்றைய தினமே ஒரு மாதகால அவகாசத்தில் வழங்குமாறு செங்கல்பட்டு J.M ‍ 1 நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளது.

21.04.2010 அன்று எமது முகாமில் 12 மணி நேர கடமையில் இருந்த காவல் அதிகாரியிடம் எனக்கு தலையில் வலி அதிகமாக உள்ளது. மருத்துவமனை கூட்டிச்செல்லும்படி கேட்டிருந்தேன். அவரோ எமக்கு பொறுப்பாக இருக்கும் வட்டாட்சியரின் உதவியாளரான R.A (விஜ‌யகுமார் அவர்கள்) என்பவருக்கு தொலைபேசியில் தெரிவித்து மருத்துவமனை கூட்டிச்செல்ல ஒழுங்கு செய்யும்படி அறிவித்தார் ஆனால் R.A மாலை 5 மணிக்கு வருவதாக அறிவித்தும் பின் வரவே இல்லை. நான் மட்டும் அல்ல 8 பேர் சிகிச்சைக்காக அனுமதி கேட்டு 1 மாதங்களுக்கு மேலாக காத்திருக்கின்றார்கள். எமக்கு சிகிச்சை பெற வழியேதும் தெரியவில்லை. சிகிச்சை பெறாமல் போனால் எதிர்காலத்தில் என் தலையில் ஏதாவது பிரச்சனையாகிவிடுமோ என அஞ்சுகிறேன.

சிகிச்சைக்கான நியாயமான வழிகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில்தான் உங்களுக்கு எழுதி எனக்கு, என்னுடன் உள்ளவர்களுக்கும் சிகிச்சை பெற வழி அமைத்துத் தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டு வருடகாலமாகியும் எந்தவித வழியும் தெரியாமல், என் குடும்பத்தோடு சேர்ந்து வாழ முடியாமலும் என்மனைவி பிள்ளைகள் தமது வாழ்வினை மேற்கொண்டு நடத்த முடியாமல் மிகவும் வறுமையோடு தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கின்றார்கள். என் மனைவி பிள்ளைகள் சீரழந்து கஷ்டப்படுவதை என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. நான் செய்த மிகப்பெரிய தவறு என்னவென்று கூறினால் அந்தத் தவறை மீண்டும் செய்யமாட்டேன். ஆகவே இந்த தேவையில்லாத வழக்கில் இருந்து என்னை விடுவித்து சிறையில் இருந்து பிணையில் விடுதலையாகிய என்னுடன் என் மனைவி பிள்ளைகள் சேர்ந்து வாழ வழிவகை செய்து தருமாறும் என் வழக்கு முடிந்தவுடன் என்னையும் எனது மனைவி பிள்ளைகளையும் திரும்ப எனது நாட்டிற்கே அனுப்பி வைக்க உதவி செய்யுமாறு தங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இங்கிருந்து கொண்டு இலங்கை வவுனியாவில் உள்ள முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்யுமாறு தொண்டை கிழிய கத்தி அரசியல் ஆதாயம் தேடும் தமிழக அரசாங்கம் தனது நாட்டில் உறவுகளைப் பிரிந்து தனிமைப்படுத்தி குடும்பத்தை சீரழித்து முட்கம்பி வேலிகளால் அடைக்கப்பட்டிருக்கும் செங்கல்பட்டு பூந்தமல்லி சித்ரவதைக் கூடங்களை எப்போது அகற்ற போகிறது?

ஒரு ராஜீவ் காந்தி கொலையை வைத்து அதன் உண்மையான குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்காமல் (ஜெயின் கமிமூன் அறிக்கையை விசாரிக்காமல்) ஒட்டு மொத்த ஈழத் தமிழர்கள் அனைவரையும் அதே கண்ணோடு பார்க்கும் இந்திய அரசாங்கம் எப்போது எங்களையும் சக மனிதர்களாக பார்க்கப்போகின்றது ?

இராஜீவ் காந்தியை கொன்றவர்கள் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்றால் ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் அதே கண்ணோடு பார்க்க வேண்டியதுதானே? ஏன் தமிழர், சிங்களவர் என்று பார்க்க வேண்டும்? அப்படி பிரித்து பார்ப்பதென்றால் குற்றத்திற்குரியவர்களை மட்டும் பார்க்க வேண்டியதுதானே?

திரு. இராஜீவ் காந்தி அவர்கள் இலங்கை சென்று கொழும்பில் இராணுவ வீரனால் துப்பாக்கியின் பின் பக்கத்தால் தலையில் தாக்கப்பட்டார். அப்போது இராஜீவ் காந்தி அவர்களுக்கு ஏதாவது நடந்திருக்குமானால் இன்று இந்திய அரசாங்கம் இலங்கையையே வெறுத்து ஒதுக்கியிருக்குமா? தாக்கிய சிங்கள இராணுவ வீரனோ ஒருசில மாதத்தில் விடுதலையாகிவிட்டான்.

சிறையில் இருந்து பிணையில் விடுதலையாகிய என்னை சிறப்பு முகாம் என்று அடைத்து வைத்துள்ளார்களே அவ்வாறெனில் இந்த சிறப்பு முகாமில் என் மனைவி பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கலாமே? அவ்வாறு அனுமதி இல்லையென்றால் அது எப்படி சிறப்பு முகாம் ஆகும்? இதுவும் ஒரு சிறைதானே?

சிறை என்று வைத்துக்கொள்வோமே... அவ்வாறெனில் ஒழுங்காக தவணை முறையில் வாய்தா அழைத்துச் செல்லலாமே, இல்லை முகாம் என்றால் குடும்பத்துடன் வாழ அனுமதிக்கலாமே. இது இரண்டுமே இல்லையென்றால் இந்த முகாம் எந்த வகையில் சேரும்?

ஆடு மாடுகளைக் கூட பட்டியில் அடைத்தால் பகல் முழுவதும் திறந்து விடுவார்கள். நல்ல விதமான சாப்பாடு கொடுப்பார்கள். காயங்கள் ஏற்பட்டால் மருத்துவம் கூட செய்வார்கள். அதுவும் ஆடு மாடுகளுக்குக் கூட இவ்வாறு இருக்கையில் நாம் இவைகளை விட கீழானவர்களா?

இக்கடிதம் உங்களுக்கு எழுதுவதால். எனக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்து மேலும் பல வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைத்து அல்லது இங்கு விடுதலையாகாமல் இலங்கைக்கே திருப்பி அனுப்பி என் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

சில வேலைகளில் வெளியில் திருச்சியில் தங்கியிருக்கும் என் மனைவி பிள்ளைகளுக்கு ஏதாவது நேரக் கூடுமானால் அதற்கும் அவர்களே பொறுப்பாவார்கள்.

நன்றி.

இவ்வண்ணம்

தங்கள் உண்மையுள்ள

(கு. ரமணன்)
நன்றி-
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9781:2010-06-29-07-42-16&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

கருணாநிதியை விமர்சித்தால் தாக்குதல்தான்! - காவற்துறையும் கைது செய்யாது - பெ.மணியரசன்!

முதல்வர் கருணாநிதியின் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்து கூறுவோர் மீது வன்முறை தாக்குதல் நடப்பது தி.மு.க ஆட்சியில் அதிகரித்து விட்டது எனவும் காவற்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருப்பதால், அவர்கள் கைது செய்யப்படுவதில்லை என தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் பெ. மணியரசன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கை
தமிழ் மொழி உணர்வும் தமிழ் இன உணர்வும் மிக்க எழுத்தாளர் பழ.கருப்பையா அவர்களும், அவர் மகனும் அவரின் கார் மற்றும் வீட்டுப் பொருள்களும் 27.06.2010 மாலை வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டதற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘கருணாநிதியைத் தாக்கிப் பேசிய வாய் இதுதானே’ என்று கத்திக் கொண்டே அக்கும்பல் பழ.கருப்பையா அவர்களின் வாயில் குத்தியதாக அவர் கூறுகிறார். அண்மைக் காலமாக தமிழக முதல்வர் கருணாநிதியின் செயல்பாடுகள் கருத்துகள் குறித்து பழ.கருப்பையா கடுமையாக அரசியல் விமர்சனம் எழுதி வருகிறார். பேசி வருகிறார். இதனால் ஆத்திரமுற்ற கும்பல் இந்த வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது.

முதல்வர் கருணாநிதியின் அரசியல் நிலைபாட்டுக்கு எதிராகக் கருத்து கூறுவோர் மீது வன்முறைத் தாக்குதல் நடப்பது தி.மு.க. ஆட்சியில் அதிகரித்து விட்டது. அப்படிப்பட்ட வன்முறையில் ஈடுபட்டவர்களை தி.மு.க ஆட்சி கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தாததால் இந்த அராஜகம் மேலும் மேலும் ப ருகிவருகிறது.

ஈழத்தமிழ் மக்களை இந்திய அரசின் துணையோடு சிங்கள இனவாத அரசு கடந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கில் கொன்றபோது, இந்தியாவையும் அந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறிய கருணாநிதியின் இனத்துரோகத்தையும் விமர்சித்த திரைப்பட இயக்குநர் சீமான் காருக்கு காலிகள் சிலர் தீ வைத்தனர். அடுத்து ஒரு வன்முறைக்கும்பல் இயக்குநர் பாரதி ராஜாவின் அலுவலகத்தைத் தாக்கி இருபது லட்ச ரூபாய் பெறுமானமுள்ள திரைப்படக் கருவிகளையும் மேசை நாற்காலிகளையும் நொறுக்கி அழித்தது. அதன்பிறகு வேறொரு வன்முறைக் கும்பல் இந்தியக் கம்யு+னிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர் தோழர் தா. பாண்டியன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை எரித்தது.

மேற்கணட மூன்று வன்முறைத் தாக்குதலிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. காவல்துறையின் கையைக் கருணாநிதி அரசு கட்டிப் போடாமல் இருந்திருந்தால் மேற்கண்ட வன்முறையாளர்களைக் காவல்துறையினர் கைது செய்திருப்பார்கள். தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளையும் அக்கூட்டணியின் ஆட்சியையும் விமர்சிப்பவர்களைத் தாக்கினால் அரசு நடவடிக்கை எடுக்காது என்ற துணிச்சல்தான் இப்பொழுது திரு. பழ. கருப்பையாவையும் அவரது வீட்டையும் தாக்கத் தூண்டியுள்ளது. அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளைப் பேச, எழுத அனைவர்க்கும் உரிமை இருக்கிறது. அவ்வுரிமைகளைக் கொல்லைப் புற வன்முறைகள் மூலம் தி.மு.க. அரசு பறிக்கிறது.

இந்நிலை தொடர்ந்தால் எதிர்வினைகள் உருவாகும். வன்முறைக்கு எதிர் வன்முறை என்ற அராஜகங்களைத் தமிழகம் எதிர்கொள்ளும் நிலை வரும் எனவே பழ.கருப்பையா அவர்களைத் தாக்கிய வன்முறையாளர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்

தோழமையுடன்,பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

நன்றி-
http://www.4tamilmedia.com/ww1/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/7079-pmaniyarasan-complain-again-karunanidhi

Sunday, June 27, 2010

குண்டுச்சத்தங்களுக்கிடையில் படித்து முதலிடம் பெற்ற மாணவர் புஷ்பக்காந்தனை வாழ்த்துவோம்..

இலங்கையில் ஒரு தமிழனின் சாதனைஅண்மைக் காலமாக இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட செய்திகளில் பிரபலமாகப் பேசப்பட்டதானது , அண்மையில் வெளியான பரீட்சை முடிவுகளில் முன்னிலைமை பெற்றவர்களுக்கு முதல்வரின் நேரடி வாழ்த்தும் , வழங்கிய பரிசும் பற்றிய சந்தோசமானதும் சமூகத்துக்கு ஆரோக்கியமானதுமான செய்தியாகும்.

அந்த மாணவர்களைப் போல என்பதை விட அதற்கும் ஒரு படி மேற்பட்ட சாதனை படைத்திருக்கிறார் இலங்கையில் ஒரு தமிழ் மாணவர்.கடந்த வருடம் இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவ பீடங்களிலும் பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய 700 க்கும் மேட்பட்ட வைத்தியகளிற்கான தரப்படுத்தலில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார் ஒரு தமிழ் மாணவர்.

புஷ்பக்காந்தனாகிய அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து கொண்டே இந்த சாதனையை செய்து முடித்துள்ளது எதை இழந்தாலும் இன்னும் எமது கல்வித்தரத்தை இழக்கவில்லை என்பதை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

மட்டக்களப்பு சிவானந்த பாடசாலையில் உயர் கல்வி கற்ற புஷ்பகந்தன் , உயர் கல்வியை யாழ் மருத்துவ பீடத்தில் தொடர்ந்தார். அங்கே பல் குழல் பீரங்கிகளின் சத்தங்களின் மத்தியில் இருந்து கொண்டு , தொடர்ச்சியான மின்சார வசதிகள் கூட இல்லாத நிலையிலே படித்தும், இலங்கையில் பல்வேறு வசதிகள் கொண்ட மற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற தமிழ் , சிங்கள மாணவர்களோடு போட்டி போட்டு முதல் இடம் பெறுவது என்பது மிகப் பெரிய சாதனை.

அதுமட்டுமல்லாமல் ஒரு பேராசிரியர் கூட இல்லாத நிலையில் , இறுதியாண்டு கற்பித்தல் செயற்பாடுகள் முற்று முழுதாக யாழ் வைத்திய சாலையில் பணிபுரியும் வைத்திய நிபுணர்கலால்தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பல்வேறுபட்ட துறை சார்ந்த பேராசிரியர்களால் பயிற்றப்பட்ட வேறு பல்கலைக் கழக மாணவர்களோடு போட்டி போட்டு புஷ்பக்காந்தனால் முதல் இடம் பெற முடிந்துள்ளது என்றால் நிச்சயமாக இவரை பயிற்று வித்த குறிப்பிட்ட சில வைத்திய நிபுணர்களின் அர்ப்பணிப்பான சேவையையும் நாம் பாராட்ட வேண்டும்.

சென்ற வருடம் மொத்தமாக 700க்கும் மேட்பட்ட வைத்தியர்கள் பட்டம் பெற்றுள்ளார்கள் , இதிலே தமிழ் மாணவர்கள் மொத்தமாக வெறும் 2ooக்கும் குறைவாகத்தான் இருக்கும் ( மாவட்டத்தில் இருந்து விகிதாசார அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படுவதால் இந்த எண்ணிக்கையில் எந்த அரசியல் செல்வாக்கும் இல்லை)எஞ்சியவர்கள் அனைவரும் சிங்கள மாணவர்களாகும் .

அத்தோடு கொழும்பு பல்கலைக் கழக மாணவரான பாலசிங்கம் பாலகோபி மருத்துவக் கல்லூரியின் சிறந்த மாணவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் மருத்துவம் பயிலும் தமிழ் மாணவர்கள் அனைவரும் யாழ்ப்பான மற்றும் கொழும்பு மருத்துவக் கல்லோரிகளிலேயே உள்வாங்கப் பட்டுள்ளார்கள்.( தற்போது சில வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலும் ஒரு கல்லூரி ஆரம்பிக்கப் பட்டுள்ளது)

ஆக ,அகில இலங்கை ரீதியாக மட்டுமல்ல , எங்கே எல்லாம் தமிழ் மாணவர்கள் இருதார்களோ அங்கேயெல்லாம் அவர்களே முதல் இடத்தைப் பெற்று எமக்கு பெருமை தேடித்தந்து உள்ளார்கள்.இவ்வாறான சாதனையாளர்களை சமுகத்துக்கு வெளிக் கொண்டு வருவது சமூகத்தில் இருந்து மேலும் பல சாதனையாளர்களை உருவாக்குவதற்கு வழிகாட்டியாக அமையும்.

இந்தியாவில் பத்தாம் ஆண்டு தேர்வில் முதன்மை வகிக்கும் மாணவர்களையே போட்டி போட்டுக் கொண்டு ஊடகங்கள் அறிமுகப்படுத்தி கௌரவித்து எதிர்கால மாணவர்களுக்கு ஒரு உந்து சக்தியை கொடுக்கின்றன

இலங்கையிலோ இந்த மாணவர்கள் பற்றி இதுவரை எந்த ஊடகத்திலோ எதுவுமே சொல்லப்படவில்லை என்றுதான் நினைக்கின்றேன். சினிமாத் தனத்தில் ஊறிப்போன இந்த ஊடகங்கள் ரகுமானுக்கு கிடைக்கும் விருதுகளை முதலில் யார் சொல்வது என்று போட்டி போட்டுக் கொள்கின்றன ஆனால் சொந்த மண்ணில் சாதனை செய்பவர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றன.

நான் முதலிடம் நானே முதலிடம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளவே நேரம் போதாத போது முதலிடம் பெற்ற ஒரு மாணவனை ஒரு செய்தியாகவேனும் சொல்ல இந்த ஊடகங்களுக்கு நேரம் இல்லாதது நியாயம்தான்.

சரி அந்த ஊடகங்கள் எதற்கு ? நமக்குத்தானே வலைப் பூக்கள் உள்ளன, இந்த செய்தியை உங்கள் தளங்களிலும் பிரசுரியுங்கள்( நீங்கள் அப்படியே உங்கள் பெயரிலேயே பிரசுரிக்கலாம்) அல்லது தமிழ் மனத்தில் பரிந்துரைத்து செய்து உலகம் எல்லாம் பரந்து கிடக்கும் தமிழர்களை போய்ச்சேர செய்யுங்கள்.அவர்கள் மகிழ்ச்சி கொள்ளட்டும் , இனனும் யாழ் பல்கலைக் கழகம் உயிர்ப்புடன்தான் உள்ளது என்று.

நீங்களும் விரும்பினால் வாழ்த்தி விட்டுச் செல்லுங்கள் அத்தனையையும் புஷ்பக் காந்தனைப் போய்ச் சேர செய்துவிடுகிறேன்..
நன்றி - மீனகம்

Saturday, June 26, 2010

செம்மொழி கொன்றான் - கருணாநிதிசெம்மொழி மாநாடு தொடங்கிவிட்டது. நிறைய பேருக்கு ஒரு நடுநிலையாக இதை பார்க்க விருப்பம் என்கிறார்கள். அது ஒரு தமிழ் வளர்ச்சிக்கான மாநாடு என்று நினைத்து அதை ஆதரிக்க வேண்டுமாம்.அதுவும் அதிர்வு வெளியிட்ட புலிகளின் அறிக்கை வந்ததும் இந்த நடுநிலையாளர்கள் கொஞ்சம் தைரியம் வந்தவர்களாய் கிளம்பிவிட்டார்கள். எங்களை பொறுத்தவரை இரண்டும் கெட்டான் எந்த விதத்திலும் பயனற்றவர்களே. தி.மு.க வினரை பற்றி சொல்லவும் தேவை இல்லை.
செம்மொழி மாநாடு நடத்துகிற கருணாநிதியும் தி.மு.கவும் ஐந்து முறை தமிழ்நாட்டு ஆட்சிப்பொறுப்பை ஏற்று முதலமைச்சர் இருக்கையை தேய்த்ததை தவிர வேறொன்றும் செய்துவிடவில்லை என்பதே உண்மை. 1965-ல் மொழிப்போராட்டத்தை மாணவர்கள் கையிலிருந்து பிடுங்கிக்கொண்டு போராட்டத்தின் தீவிரத்தைக்கட்டுப்படுத்தி, பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே தி.மு.க வின் தூரோக வரலாறும் தொடங்கிவிட்டது. இருமொழிக்கொள்கை மும்மொழிக்கொள்கை என்ற மோசடி வார்த்தைகளைத்தவிர வேறொன்றையும் தமிழ்நாடு கண்டது இல்லை.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று வார்த்தைகளால் ஏமாற்றிக் கொண்டே எங்கேயும் தமிழின்றி செய்து முடித்தவர்கள்தான் இந்த கூட்டம்.

செம்மொழிக்கான அனைத்துத்தகுதிகளும் இருந்தும் தமிழ் மொழி உண்மையான செம்மொழிக்கான தகுதிகளுடன் செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தமிழை செம்மொழியாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாத இந்திய அரசு வஞ்சனையுடன் தனிப்பட்டியலில் செம்மொழியாக அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே 2000-ம் ஆண்டுகள் பழமையானது என்ற தகுதியை 1000-ம் ஆண்டுகள் பழமையானது என்று குறைக்கப்பட்டு 1000-ம் ஆண்டுகளுக்குட்பட்ட மொழிகளுடன் சேர்க்கப்பட்டே செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியைத்தட்டிக்கேட்க முடியாத கருணாநிதி (இதில் கருணாநிதியும் கூட்டுக்களவாணி) அன்று அய்யா மணவை முஸ்தஃபா போன்றவர்களைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் விளம்பரம் மட்டும் செம்மொழி கொண்டான்...! என்றே போட்டுக்கொள்கிறார்கள்...
இந்த செம்மொழி கொண்டான் உண்மையில் செம்மொழி கொன்றான் என்றே சொல்லவேண்டிய ஆள்..
இதற்கான காரணம் ஒன்று இரண்டல்ல ஏராளம். தமிழ் மொழிக்கு, இனத்திற்கு என்று செய்த துரோகம் மறக்கக்கூடியது இல்லை. அதனை மறந்து இந்த மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவோ, வாழ்த்துக்கூறவோ, எந்த நியாயமும் இல்லை.ஏனெனில் அதில் வெறும் கருணாநிதி துதி பாடல்களே நடக்கப்போகிறது.
கருணாநிதியின் உண்மை முகத்தை தெரிந்துகொண்டால் இதை எளிதாக புரிந்துகொள்ளலாம்.
அய்யா தேவநேயப்பாவாணர் அவர்கள் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டு தமிழர் வரலாற்றை வெளிக்கொண்டுவந்தவர். அவரை விட சிறப்பான தமிழறிஞர் இன்றளவும் இல்லை. அவர் கடைசிக்காலத்தில் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில் கருணாநிதியிடம் அய்யா தேவநேயப் பாவாணர் வேண்டியது கொஞ்சக் காலத்துக்கு உணவுக்கும் தங்கும் இடத்திற்கும் வழிசெய்யவேண்டும், நான் எனது கடைசி ஆய்வுகளை முடிக்கும் வரை இந்த உதவியை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த உதவிகளை செய்து இருந்தால் தமிழுக்கும் இனத்துக்கும் அவர் இன்னும் சிறப்பான பணிகளை செய்து இருப்பார். முதலமைச்சராக இருந்தும் கயவன் கருணாநிதி கடைசிவரை கண்டுகொள்ளவே இல்லை. கடைசிக்காலத்தில் தமிழனின் வரலாற்றை எழுதிய அய்யா வறுமையில் வாழ்ந்தார். இது ஒரு தமிழறிஞரை கருணாநிதி போற்றிய விதம்..!.
மொழிப்போருக்கு உரிமை கொண்டாடும் தி.மு.க. மொழிப்போர் வரலாற்றை இதுவரைக்கும் அடுத்த தலைமுறை படிக்கும் விதத்தில் பாடத் திட்ட்த்தில் சேர்க்காதவர் தான் இந்த செம்மொழிகொண்டான். எத்தனை தமிழறிஞர்களின் வரலாறு மாணவர்களுக்கு போய்ச்சேர்கிறது. கண்டவனுக்கெல்லாம் மணிமண்டபம் கட்டும் கருணாநிதி மொழிப்போர் தியாகிகளுக்கு செய்தது எதுவுமே இல்லையே..இதன் பொருள் என்ன..? மொழிப்போராட்டத்தாலும் , மொழிப்போராட்ட தியாகிகளாலும் கருணாநிதியின் புகழ் மங்கிவிடும் என்பதால் தானே இவற்றையெல்லாம் கண்டுகொள்ளவில்லை....
பக்கத்தில் உள்ள கர்நாடகாவில் பத்தாம் வகுப்புவரை கன்னடமொழியை ஒரு மொழிப்பாடமாக கட்டாயம் படித்தே ஆகவேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் கருணாநிதி ஐந்து முறை ஆட்சிபொறுப்பில் இருந்தும் சட்டம் இயற்றவில்லை. ஐந்தாம் வகுப்புவரை தமிழை தமிழ்நாட்டில் பயிற்று மொழியாக்க ஒரு அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணை என்பது சட்டம் இல்லை .ஆதலால் தி.மு.க.வின் ஒன்றிய செயளாலர் ஒருவராலயே நீதிமன்றத்தில் தடையாணை வாங்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் மட்டும் தான் ஒருவன் தமிழ் மொழியைப் படிக்காமலே உயர்படிப்புவரை படிக்கலாம். இது இன்றும் தொடர்கிறது. இந்த நிலை தொடர பொறுப்பானவர் ஐந்துமுறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி இல்லையா..?
தமிழை தமிழ்நாட்டில் பயிற்று மொழியாக்க ஒரு அணுவளவேனும் முயற்சி செய்யாமல் செம்மொழி மாநாடு நடத்தி தமிழ்மொழி வளர்ச்சிக்கு என்றால் இதன் பெயர் என்ன...? மோசடி இல்லையா..?

வேலை வாய்ப்பில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். அப்போதுதான் தமிழ் மொழியில் படிப்போருக்கு வேலை உறுதிசெய்யப்படும் என்று கோரிக்கை வைத்து போராடிக்கொண்டே இருக்கிறோம் . இதை ஏன் இன்னும் செயல்படுத்த எண்ணம் இல்லை..? இது தமிழ் மொழி வளர்ச்சியில் சேர்க்கமுடியாததா..?

டி.ஆர்.பாலு மத்தியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டில் மைல்கற்களில் ஹிந்தியில் எழுதப்பட்டதே.? அப்போது இவர்கள் சொன்ன பதில் இன்றும் நினைவில் இருக்கிறது. வட இந்தியக்காரன் சரக்குந்து ஓட்டிவருகிறான் என்பதற்காக தமிழ்நாட்டு மைல்கல் ஹிந்தி எழுத்துக்களை சுமக்க வேண்டும் என்று நாக்கூசாமல் சொன்னார்களே..? இவர்ளால் வேறு மாநிலத்தில் இப்படி பேச முடியுமா..? இவர்கள் நடத்தும் செம்மொழி மாநாடு தமிழை வளர்க்கும் என்று நாங்கள் நம்பவும் வேண்டுமோ...?
இன்றளவும் இந்திய அரசு தனது திட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் சூட்டி தமிழ்நாட்டு குக்கிராமங்களுக்கும் (படம் இனைக்கப்பட்டுள்ளது) சென்று விளம்பரம் வைக்கிறதே. கருணாநிதி அரசின் கவனத்துக்கு வராமல்தானா இந்த ஹிந்தி திணிப்பு நடக்கிறது..?.

தமிழ்நாடு அரசின் அரசு விரைவுப் பேருந்துகள் முழுவதிலும் ஆங்கிலத்தில் S.E.T.C என்ற எழுத்துக்கள் தானே பெரிய அளவில் எழுதப்படுகிறது. வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும் , பெயர்பலகைகளில் முதன்மையாக தமிழே இருக்கவேண்டும் என்று எத்தனையோ கோரிக்கைகள் அனுப்ப பட்டும், போராட்டங்களும் நடாத்தப்பட்டும் இருக்கிறது. இதை நடைமுறை படுத்தாமல் ஆட்சி நடத்தும் தி.மு.க அரசுதானே.இந்த செம்மொழி மாநாடு நடத்துகிறது. இதை எப்படி ஆதரிக்க முடியும்.

கருணாநிதி சொந்த விசயத்துக்கும் ,புகழுக்கும் எடுக்கும் சிரத்தை தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எடுத்தது இல்லை என்பதுதான் உண்மை. இப்போது நடக்கும் வழக்கறிஞர்களின் போராட்டத்துக்கும் அப்படியே சால்சாப் பதில் தான் வந்து இருக்கிறது. அவர்கள் என்ன செம்மொழி மாநாட்டுக்கு எதிராகவா போராடுகிறார்கள். தாங்கள் வாதாடும் சென்னைஉயர்நீதிமன்றத்தின் மொழியாக தமிழை ஆக்க வேண்டும் என்கிறார்கள். அவர்களின் போராட்ட வீரியத்தை பயன்படுத்தி சட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம்.. இதற்கு மட்டும் கருணநிதியிடம் இருந்து சட்டம், நீதி, நீதிமன்றம் என்று பதில் வருகிறதே, அமைச்சரவையில் பங்கு கேட்கும் போர்க்குணத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட இதில் காட்டவில்லையே..? அப்படியே இவர்களால் முடியாது இதெல்லாம் மத்திய அரசின் கையில் உள்ளது என்று சொல்வார்களானால் தமிழ் மொழி தில்லிக்காரனிடம் அடிமையாக இருக்கிறது என்று தானே பொருள். இந்த மாநாட்டில் இந்த உண்மையை அறிவித்து தமிழ் மொழியின் விடுதலைக்கு வழி வகுக்க போகிறாரா கருணாநிதி. இப்படி கனவிலும் நினைக்க முடியாது. அப்படி இருக்க இந்த மாநாட்டை எப்படி ஆதரிக்க முடியும்.

இந்திய அரசு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை எல்லம் NRI-களாக காட்டி அவர்கள் இருக்கும் நாடுகளிலெல்லாம் அந்த நாடுகளின் உதவியை பெற்று ஹிந்தி மொழியைப்பரப்பிவருகிறது. அதற்கான நிதியையும் அதிகரித்து வருகிறது. இதை தடுத்து தமிழ் மொழிக்கு நிதி வழங்கவும் தமிழ் மொழியை காப்பாற்றவும் ஏதேனும் திட்டம் தமிழ் நாட்டு அரசின் கொள்கைகளில் இருக்கிறதா ? அல்லது தி.மு.க.வின் கொள்கைகளில்தான் இருக்கிறதா..?அல்லது கூட்டாளியான தில்லி அரசிடம் வலியுறுத்திய கடிதாமவது இருக்கிறதா..?ஏனென்றால் இவர்கள் காட்டும் செயல்பாடு எப்போதும் தில்லிக்கு எழுதும் கடிதம் தான்.

இதுவரைக்கும் நெடுமாறன் அய்யா நடத்தும் உலகத்தமிழர் பேரமைப்பு மாநாட்டுக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு கொடுத்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியே அனுமதிபெற்று வருகிறார். தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு முன் பல தமிழ் உணர்வளர்கள் கைது செய்யப்பட்டார்கள். தமிழ் உணர்வாளர்களை நசுக்கும் கருணாநிதி அரசா தமிழ் மொழியை வாழவைக்கப்போகிறது..?
ஒப்பற்ற திருவள்ளுவருக்கு இணையாக ஏதோ ஒரு துக்கடா கவிஞரான கன்னட சர்வஞர் சிலையை தமிழ்நாட்டில் அனுமதித்த கருணாநிதியின் விவேகம் எவ்வளவு சிறுமைகொண்டது என்பது எளிதாக புரிந்துகொள்ளக்கூடியதே.

உயர்கல்வியில் தமிழை பயிற்று மொழியாக்க இதுவரை அரசு செய்த முயற்சிகள் என்னவென்றுபார்த்தால் எதுவும் இல்லை. ஆனால் உண்மையில் மருத்துவமொழி, இராணுவமொழி, பயிற்றுமொழி, ஆட்சிமொழி எல்லாமே தமிழில் உருவாக்கி செயற்படுத்திக் காட்டிய தமிழீழத் தேசியத்தலைவர்தான் இந்த தமிழனத்தின் ஓரே தலைவர். அதை பொறுக்காமல் தனது தமிழின தலைவர் பட்டத்தை காப்பற்றிக் கொள்ள இந்திய பார்பனிய அரசின் கைக்கூலியாக இருந்து தமிழ் இனத்தை காட்டிக்கொடுத்து சாகடித்தவர்தான் கருணாநிதி. இன்று நானும் தமிழினத்தலைவன் ! நானும் தமிழினத்தலைவன் ! என்று வடிவேலு நகைச்சுவை போல( நானும் ரொளடி.. நானும் ரொளடி) சொல்லிக்கொண்டு சொம்மொழி மாநாடு நட்த்துகிறார். இனவெறியன் இராசபக்சே தமிழர்களின் மீள்குடியேற்றம், வேலை கொடுக்கிறேன் என்று சொல்வதை எப்படி மோசடி என்கிறோமோ, அதே போன்றுதான் கருணாநிதியின் செம்மொழி மாநாடும். இந்த மாநாடு கருணாநிதிக்கு ஒரு பட்டம் சூட்டு விழாவே அன்றி தமிழுக்கும் இனத்துக்கும் ஒரு கடுகளவும் உதவாது என்பது கருணாநிதியின் கழுத்தறுப்பு வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

புலிகளின் அறிக்கையைப்பொறுத்தவரை அவர்கள் எப்போதும் தமிழ்நாட்டு அரசியல் சூழலில் தங்கள் கருதுக்களைப்பதிவு செய்தது இல்லை..எல்லோரையும் ஆதரவு சக்தியாகவே வைத்து இருக்க விரும்பினர். முள்ளிவாய்க்கால் இழப்பிற்குப் பிறகும் அப்படியே தொடர்வது சரியான அரசியல் பார்வை இல்லை. ஏனென்றால் தற்போது தமிழ்நாட்டில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். உளவு நிறுவனங்கள் இதைப்பார்த்து திணறி போய் பழைய செருப்பு மாலை பாணியை கைவிட்டு குண்டுவைக்க தொடங்கி இருக்கின்றன. இது போன்ற அரசியல் பார்வை அந்த இளைஞர்களை தளர்வுற செய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த அறிக்கை சில நல்ல நோக்கங்களுக்காக வெளியிடப்பட்டாலும் தமிழ்நாட்டு அரசியல் சூழலில் எதிர்ப்பிற்குரியதே.
தமிழை ஆட்சி மொழியாக்காமல் , கல்வி மொழியாக்காமல் , நீதிமன்ற மொழியாக்காமல் மாநாடு நடத்தினால் தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது ஒரு முட்டாள்தனம். அதை ஆதரிக்கவும் முடியாது..ஆக்கப் பூர்வமாக எந்த செயலும் ஆட்சி பொறுப்பில் இருந்து செய்யாத ஒரு நபர் தன் புகழுக்காக நடத்தும் ஒரு கூத்து தமிழ் வளர்ச்சிக்காக என்று சொல்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. தி.மு.க தனது மாநாடுகளில் அறுபதுகளில் இருந்தே சில தீர்மானங்களை இயற்றி வருகிறது. அதில் அன்றிலிருந்து மாறாத இரண்டு :1. மாநில சுயாட்சி, 2.சேது சமுத்திரத்திட்டம். இவற்றில் தி.மு.க எள்ளளவும் முன்னேற்றத்தை கண்டது இல்லை. இதே நிலைதான் கலந்து கொள்ளும் தமிழறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகளுக்கும் , இந்த மாநாட்டு தீர்மானங்களுக்கும் என்பது திண்ணம். எனக்கு கொஞ்சமும் இந்த செம்மொழி மாநாடு பற்றி வெற்று சந்தோசப்படுவதற்கான காரணங்கள் கிடைக்கவில்லை.
அன்பான தமிழ் உறவுகளே உலகத்தில் எந்த இனத்துக்கும் இல்லாத நெருக்கடி தமிழினத்துக்கு இன்று. நாம் தமிழ் இனத்தை காத்து தமிழ் மொழியையும் காக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்திய சிங்கள அரசுகள் தற்ப்போது செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் தமிழ், தமிழர் என்ற வார்த்தையை எதிர்காலத்தில் இல்லாமல் செய்யப்போகிறது. தமிழ் நாட்டில் தமிழ் உணர்வாளர்களை ஒடுக்க உளவு நிறுவனங்களுடன் கைகோர்த்து வேட்டையை தொடங்கிவிட்டது கருணாநிதி அரசு . இதையெல்லாம் முறியடித்து வெற்றிகொள்ளும் வேட்கையுடன் விழிப்புடன் இருப்போம். வெற்று ஆராவாராங்களையும் இனத்துரோகிகளையும் புறக்கனித்து தமிழ்தேசிய இலக்கு நோக்கி பயனிப்போம். இதுவே ஒவ்வொரு தமிழனுக்கும் இன்றைய கடமை.

தோழர் சிவா.

Friday, June 25, 2010

யாரடா பயங்கரவாதி?

தமிழீழ மக்கள்மீது கடந்த 60 ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டுவந்த இன அழிப்பு நடவடிக்கையின் உச்சக்கட்ட நடவடிக்கையாக கடந்த 2009 மே திங்களில் ஒரே நாளில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்றொழித்த பெரும் கொடுமைக்காரன் இட்லரின் அவதாரமாக முசோலினியின் மூளையாக செயல்பட்ட ராசபக்சே என்ற கொலை வெறியனின் செயல்கள் இன்று அம்பலப்பட தொடங்கிஇருக்கின்றன. சிங்கள இனவெறி பாசிச அரச பயங்கரவாத நடவடிக்கைகள் மெல்ல மெல்ல கசிந்து வர துவங்கியிருக்கிறது. வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு மாந்தகுல கொடுமைக்கு அளவுகோல் வைத்தவனாக ராசபக்சே இந்த 21ஆம் நூற்றாண்டின் இணையில்லா அடக்குமுறையாளனாக காட்சி அளிக்கிறான்.

நடந்து முடிந்த மாந்தகுல பேரழிவு நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் அச்சத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்குபவையாக இருக்கிறது. யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்ற மமதையோடு தமிழீழ மக்களை கொன்றொழித்த ராசபக்சே, இன்று அங்கே சிங்கள பேரினவாதத்தின் களமாக தமிழீழ பூமியை மாற்றும் பணியை மிக சிறப்பாக, வேகமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறான். யாரெல்லாம் இந்த பெருங்கொடுமைக்கு துணைபோனார்களோ, அவர்களே கூட நடுங்கி, அடடா என்று வாய்ப் பிளந்து நிற்கும் அளவிற்கும் தோண்டும் இடங்கள் எல்லாம் பிணங்களாக, பார்க்கும் பூமியெல்லாம் சமாதியாக மாறியிருப்பதைக் கண்டு திகைத்து நிற்கிறார்கள். அங்கே நடைபெறுவது ஒரு இன அழிப்புப் போர் என்று மிக கடுமையாக உலகத்தமிழர்கள் எல்லாம் எச்சரித்தபோது, எதையும் கண்டுகொள்ளாத உலக நாடுகள் சபை, இன்று அதன் உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கியிருக்கிறது.

உலக நாடுகளில் பல, ராசபக்சே போர் குற்றவாளிதான் என்ற மிக சாதாரண நடவடிக்கையின்கீழ் ராசபக்சேவை கண்டித்திருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி ராசபக்சே ஒரு மனித பேரழிவின் ஆற்றலாக, இந்த பூமியில் வாழும் ரத்த வெறி பிடித்த ஆட்சியாளன் என்பதை உலகம் உணரத் தொடங்கி இருக்கிறது. தொன்மை வாய்ந்த ஒரு இனத்தை அவர்களின் சொந்த பூமியிலேயே போட்டு புதைத்து, வாய்பிளந்து பிணம் மீது நின்று வெற்றி கொண்டாடும் கேடுகெட்ட மாந்தகுல எதிரியாக ராசபக்சே இன்று அறிமுகப்படுத்தப்படுகிறான். எப்படியாவது தமிழீழத்திலே இருக்கும் தமிழ் இனத்தை முற்றிலுமாக அழித்து, அவர்களின் இனமுகவரியை இல்லாதாக்கும் பெரும் கொடுமையை தமிழீழ மண்ணிலே நிகழ்த்திக் கொண்டிருப்பதாக நாள்தோறும் வரும் செய்திகள் சொல்லிக் கொண்டிருக்கிறது.

தமிழ் இனம் என்று ஒன்று தமிழீழ மண்ணில் வாழ்ந்ததற்கான அடையாளத்தை சிதைத்து, அங்கே சிங்கள பாசிச வெறிக்கொண்ட அவர்களின் படை அணிகளை கொடியேற்றும் பெரும் கொடுமையை ராசபக்சேவின் அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. உலகு எல்லாம் துண்டு ஏந்தி பிச்சைக் கேட்கும் இந்த பிச்சைக்கார அரசாங்கம், தமிழீழ மக்களின் மறுவாழ்வுக்காக தமது அரசு நிவாரணம் செய்யப்போகிறது என்றெல்லாம் பொய் சொல்லிக் கொண்டு இப்படி உலகெல்லாம் கிடைக்கும் பணத்தை தமது சிங்கள மக்களின் நல்வாழ்வுக்காகவும், தமிழ் மக்களின் ஒழிப்புக்காகவும் திட்டமிட்டு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை ஊடகங்கள் மிக மெல்லியதாக சொல்லத் தொடங்கியிருக்கும் தருணத்தில், இது இன அழிப்பு என்று தமிழகத்திலும், உலகெங்கும் இருக்கும் உறவுகளும் ஓங்கி அறிவித்த அனைத்து செய்திகளும் உண்மை என வெளிப்பட தொடங்கியிருக்கிறது.

அதன் தொடக்கமாகத்தான் சிங்கள இனவெறியன் ராசபக்சே உலக நாடுகளின் பொதுச் செயலாளர் பான்-கீ-மூனால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவை தனது நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என அடாவடியாக அறிவித்திருக்கிறான். புலிகள் மீதான போர் என அறிவித்து, மாபெரும் மாந்த உரிமை மீறலை நிறைவேற்றிய ராசபக்சேவிற்கு உலக நாடுகள் சபையின் விசாரணைக் குழுவை கண்டு நடுநடுங்கி நிற்பதற்கான காரணமென்ன? மடியில் கனம் இல்லையென்றால் வழியில் ஏன் பயம்? நீ உண்மையிலேயே நல்லவன் என்றால், உலக நாடுகளின் அவைதான் வந்து விசாரிக்கட்டுமே. நீ உண்மையை சொல்லேன். ஏன் அந்த குழுவை அனுமதிக்க மாட்டேன் என்று தடுக்க முயற்சிக்கிறாய்? அதோடல்லாமல், அந்த நாட்டின் இறையாண்மையில் உலக நாடுகள் தலையிடுவதாக கூப்பாடு போட வேண்டிய காரணம் தான் என்ன?

என்ன இறையாண்மை? எங்கள் தமிழீழ குடியரசின் மீது நீ நடத்திய பெரும் சமர், எமது தமிழ் மக்கள் மீது நீ நடத்திய கொடும் தாக்குதல், எமது தமிழீழ பெண்கள் மீது நீ நிகழ்த்திய பாலியியல் வன்கொடுமை எந்த விதத்தில் சரியானது? அது எமது இறையாண்மை மீது, எமது நாட்டின் இறையாண்மைமீது நடத்திய சமரல்லவா? அப்பொழுது இல்லாத உன்னுடைய இறையாண்மை போக்கு, இப்போது எப்படி உதயமானது? எதையாவது சொல்லலாம், எப்படியாவது சொல்லலாம், அதற்கு உன் நாட்டிலே வர்த்தகம் செய்து, ரத்தத்தில் தோய்த்தெடுத்த பணத்தில் தம் வாழ்வை வளர்க்கலாம் என்று போட்டிப்போடும் நாடுகள் வேண்டுமாயின் உன் நாட்டின் இறையாண்மையாக அதை கருதலாம். ஆனால் நாங்கள் எப்படி கருதமுடியும். எமக்கு நீதி வேண்டும். எமது மக்களின் கதறல்களுக்கு காரணம் வேண்டும். எமது பெண்களின் கண்ணீருக்கு தண்டனை வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்க, அதை முடியாது என்று சொல்லும் அளவிற்கு எங்கிருந்து துணிவு வந்தது? இந்த துணிவை உனக்குக் கொடுத்தது யார்? தனியாக நின்று எமது புலிகள் படையோடு மோத முடியாமல், பேடியாக கூட்டுச் சேர்ந்து அல்லவா எம்மை வென்றாய்? உன் ஆண்மையை தவற விட்ட நீ, விசாரணையைக்கூட தவிர்க்க ஏதேதோ திட்டம் வகிக்கிறாயே? இனியும் உலகம் உன்னை நம்ப தயாராக இல்லை.

நடைபெற்றது மாந்தகுல பேரழிவு தான். நடத்தி முடித்த உன்னுடைய அட்டூழியம் ஒரு இனஅழிப்பின் அடையாளம்தான் என்பதை உலக நாடுகள் புரிந்து கொள்ளும் காலம் தொடங்கியிருக்கிறது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும் என்கின்ற தத்துவத்திற்கேற்ப உண்மையை ஆழ குழி தோண்டி புதைத்தாலும் அது ஒரு நாள் தடையை மீறி எழுந்துவரும் என்கின்ற தத்துவத்திற்கேற்ப இதோ நீ செய்த அநியாயங்களின் அணிவகுப்பு இப்போது படிப்படியாய் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. இருட்டிலே மூடி மறைக்கலாம் என்று நீ செய்த முடிவு, இப்போது வெளிச்சம்போட்டு காட்டப்படுகிறது.

நீ செய்த அக்கிரமத்தை மறைப்பதற்காக ஊடகங்களை கழுத்தைப் பிடித்து நெறித்தாய். கருத்தியல்வாதிகளை கதறக் கதற கொன்றாய். அமைதிக்காக வந்தவர்களை அத்துமீறி கொன்றொழித்தாய். அத்தனையும் நிகழ்த்திவிட்டு, இப்போது உத்தமனைப் போல் வேஷம் போடுகிறாயே, எப்படி முடிகிறது? இதுதான் சிங்கள இனத்தின் அடையாளமோ! ஆனாலும்கூட எமது இனத்தின் எச்சங்கள் இருக்கும்வரை நாம் தமிழீழத்தை அடைந்தே தீருவோம். எமது இனத்தின் இறுதியான ஒரு குழந்தையின் அழுகைக்குரல் கேட்கும்வரை எமக்கான நாட்டை நாம் அடைந்தே தீருவோம். எத்தனை நாடுகளை கூட்டு சேர்த்து எவ்வளவு காலத்திற்கு தடுக்க முடியும்?

எத்தனை ஆயுதங்களை குவித்து வைத்து உயிராயுதங்களாய் உலாவரும் எமது உணர்வுகளை ஒடுக்கமுடியும்? கடுமையான உமது கருவிகள் எங்களுடைய கால்களில் போட்டு மிதிக்கும் காலம் இதோ அருகாமையில் இருக்கிறது. அடுக்கடுக்காய் தவறுகள், அடக்க முடியாத அளவிற்கு அக்கிரமங்கள், உரிமை கேட்டவர்களை ஒடுக்கிப்போட்ட உம் திமிர், அரசாங்கத்தின் தலைமையில் நீ இருக்கிறாய் என்பதற்காக உன் குடும்பத்தையே சிங்கள மண்ணிற்கு உரிமை கொண்டாட முனைந்தாயே? சிங்களனும் சேர்ந்தே உன்னை சிதறடிக்கும் காலத்திற்கு புதிய களம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது.

எமது உறவுகளே! சிங்கள பாசிச வெறியன் எமது ஒட்டுமொத்த உறவுகளை அடையாளம் தெரியாத அளவிற்கு அழித்துப்போட முனைந்த அக்கிரமக்காரன், அவன் துரோகங்களுக்கும், அவனின் அக்கிரமங்களுக்கும் துணைப்போன நம் இன துரோகிகள் அனைவரையும் அடையாளம் காட்டும் காலத்திற்கு நாம் வந்திருக்கிறோம். உலக நாடுகள் குழுவை அணுகுவோம். அமைக்கப்பட்டிருக்கும் விசாரணை குழுவிடம் சிங்கள இனவெறியன் நமது இனத்திற்கெதிராக செய்த அக்கிரமத்தின் சான்றுகளை உடனடியாக அளிக்க முனைப்புக் காட்டுவோம். புகைப்படங்களாக, காட்சிகளாக, தகவல்களாக ஏதெல்லாம் உங்களிடம் இருக்கிறதோ, அவை அனைத்தையும் விசாரணைக் குழுவிற்கு அனுப்புங்கள். இன அழிப்பின் குற்றவாளியை கூண்டில் ஏற்றி தண்டனை தருவதற்கு, வரலாறு நமக்கொரு வாய்ப்பை தந்திருக்கிறது.

நாட்டை காத்து, நாட்டின் ஒவ்வொரு அசைவையும் உயிருக்கு நிகராய் நேசித்து, மொழி, இனம், கலாச்சாரங்களை தமது உயிர் மூச்சாய் கருதி, அங்கிருக்கும் சிறு உயிருக்குக்கூட தீங்கு வரக்கூடாது என்பதிலே பெரும் முயற்சி எடுத்த புலிகளின் படையை பயங்கரவாதிகள் என்று பரப்புரை செய்தவனை உலகம் ஒருங்கிணைந்து பயங்கரவாதி என்று அறிவிக்கும் காலத்திற்கு வந்திருக்கிறது. எந்த தாக்குதல் நிகழ்ந்தாலும், அந்த தாக்குதலுக்கு இடையே சிங்கள இனவெறி அதிகாரிகளின் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் இருந்தால் அவர்களை பத்திரப்படுத்திவிட்டு, சமரைத் தொடங்குங்கள் என்று உத்தரவிட்ட மாந்தநேய சிந்தனையாளன் மேதகு தேசியத் தலைவர் அவர்களைப் பார்த்து பயங்கரவாதி என்று அறிவித்தவன், இன்று உலக அரங்கிலே பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறான்.

வனவிலங்குகளைக்கூட வாயார வாழ்த்தி மடி மீது கிடத்தி, தாயாக நேசித்த தமிழ் இனத்தின் தவப்புதல்வன் மேதகு தேசியத் தலைவர் அவர்களை பயங்கரவாதி என்று அறிவித்த சிங்கள பேரினவாத பயங்கரவாதி இன்று சர்வதேச குழுவால் பயங்கரவாத விசாரணைக்கு உட்படுத்தப்படப்போகிறான். நீங்கள் கேளுங்கள், யாரடா பயங்கரவாதி? 30 ஆண்டுகாலமாக வலிமை வாய்ந்த ஆற்றலாக களத்திலே இருந்தபோதுகூட, சிங்கள மக்களுக்கு சிறு தீங்கும் செய்யாத புலிகளா பயங்கரவாதி? புலிகளின் கண்ணியத்தை தமது கண் இமைப்போல் காத்த மேதகு தேசிய தலைவர் அவர்களா பயங்கரவாதி? ஆண், பெண், முதியோர், நோயார் என்று பாராமல் அனைவரையும் கொன்றொழித்த நீ பயங்கரவாதியா? யாருக்கும் தீங்கு வரக்கூடாது என்று யாரோடு எமக்கு சமர், அவனோடே களம் என கண்ணியமாக வாழ்ந்த எமது தேசிய தலைவர் பயங்கரவாதியா? காலம் மாறுகிறது. கடமையாற்ற புறப்படுங்கள். தமிழீழம் அடையும்வரை தவறாது உழையுங்கள். நாம் வெற்றிபெறும் காலம் அருகில் இருக்கிறது. தேசிய தலைவர் தலைமையிலான தமிழீழ குடியரசு மலரப்போகிறது.

-கண்மனி

பூஜ்ஜியமாகிப்போன அரசாங்கத்தின் வீராப்பு

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விசேட பிரதிநிதியான பெஸ்கோ இலங்கைக்கு வந்திறங்கி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து வடபகுதிக்கும் விஜயம் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அமர்ந்து நெஞ்சை நிமர்தியவராக “நாம் அடுத்தவாரம் இலங்கையின் போர்க் குற்றங்களை ஆராய்ந்து பார்க்க விசேட குழுவொன்றை நியமிக்கப் போகிறோம் எனக் கூறியபோது, ஒரு ஊடகவியலாளர், மற்றுமொரு ஊடகவியலாளரின் காதுக்கருகில் சென்று அருமையான கேள்வியொன்றை எழுப்பினார். “எங்க நண்பா.. தாய் நாட்டின் பஞ்சாயுதக் காரர்கள்? நித்திரையோ?? எனக் கேட்டார்.

உண்மையில் கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன், தான் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து கண்டறிவதற்காக ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழுவை நியமிக்கப் போவதாகக் கூறிய போது அரசாங்கத்தின் பஞ்சாயுதங்கள் பேயாட்டம் ஆடினர். ஷஷஎமது பிணங்கள் மேல் தான் இந்தக் குழு நியமிக்கப்படும்|| “அஞ்ச வேண்டாம். எம்முடன் அணி சேரா நாடுகள் இருக்கின்றன. குழுவொன்றை நியமிக்க பான் கீ மூனுக்கு நாம் இடமளிக்கமாட்டோம்.|| ஷஷஎமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுத் தாருங்கள். ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட சர்வதேச சூழ்ச்சிகளைத் தோற்கடிப்போம்.|| இவை தேர்தல் காலத்தில் அரசாங்கத்தின் பஞ்சாயுதங்களும் அடித் தொண்டையில் கத்தி எழுப்பிய கோஷங்களாகும். இந்தக் குழுவை நியமிப்பதற்கு முன்னர் இலங்கையின் நிலைமைகளைக் கண்டறிய பான் கீ மூனினால் அனுப்படும் விசேட பிரதிநிதியான பெஸ்கோவை இலங்கை மண்ணில் காலடி வைக்க இடமளிக்கப் போவதில்லையென அரசாங்கம் தீர்மானமொன்றை எடுத்துள்ளதாகக் கூறியது.

பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த பலத்தைப் பெற்றவுடன் அந்தத் தீர்மானத்தை மாற்றிக்கொண்ட அரசாங்கம் பெஸ்கோவை மாத்திரமல்ல அமெரிக்க ஒபாமா அரசாங்கத்தைச் சேர்ந்த போர்க் குற்ற நிபுணர்களுக்கும் இலங்கைக்கு வர அனுமதி வழங்கியது. ஏன் அரசாங்கம் அனுமதி வழங்கியது? அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு முதலில் மேற்கொண்ட விஜயத்தின் போது அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஏமாற்றமொன்றைச் சந்தித்தார்.

“யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஹிலாரி கிளின்டன் பாராட்டினார்|| ஷஷயுத்தம் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு பற்றி நாம் நம்பிக்கைக் கொண்டுள்ளோம்|| ஜீ.எல். பீரிஸ் அமெரிக்காவிற்குச் சென்று ஹிளாரி கிளின்டனைச் சந்தித்த பின்னர் அரசாங்கத்தின் ஊடகங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு தலைப்புச் செய்திகளாக வெளியிட்டன. அமெரிக்கா தற்போது எமது பைக்குள் என அரசாங்கம் நினைத்தது. அமெரிக்கா தமது சட்டைப் பைக்குள் என நினைத்துக்கொண்ட அரசாங்கம் பெஸ்கோ, அமெரிக்க ஜனாதிபதியின் போர்க் குற்றங்கள் தொடர்பான நிபுணர்களை இலங்கைக்கு வருமாறு செங்கம்பளம் விரித்தது. இதனிடையே யசூசி அகாஸியும் இலங்கை வந்தார். இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் வெளிநாட்டுத் தலையீடுகள் வேண்டாம் என யசூசி கூறியதாக இலங்கையின் ஊடகங்கள் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. எனினும், இலங்கை ஊடகங்களில் வெளியிடப்படாத இரண்டு கதைகள் இருக்கின்றன.

“இலங்கையின் போர் குறித்து ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைகளுக்கு ஜப்பான் உதவி வழங்கும்|| ‐ யசூசி அகாசி ‐ ஏ.எவ்.பி

“இலங்கையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு குறித்து திருப்தி கொள்ள முடியாது மெத்தியு லீ ‐ ஒபாமாவின் ஐக்கிய நாடுகளுக்கான போர்க் குற்றங்கள் தொடர்பான பிரதிநிதி இந்த இரண்டு கதைகள் மூலம் அரசாங்கத்தின் ஆணைக்குழு தொடர்பாக கொண்டை கட்டிய சீனர்களுக்கு காண்பியுங்கள் என அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச சமுகம் இலங்கைக்கு வந்து வடக்கில் சுற்றிய பின்னர் மகிந்தவுடன் கைகுலுக்கி புகைப்படத்திற்கும் போஸ் கொடுத்துவிட்டு அரசாங்கத்திற்கு வாலைக் காட்டியுள்ளன என்பது தெளிவாகியது.

ஷஷஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு எதிரிலும், தூதரக அலுவலகங்களுக்கு எதிரிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியவர்கள் தற்போது எங்கே?|| “பான் கீ மூன், ஹிலாரி கிளின்டன் ஆகியோர் புலிகளின் சீருடைகளை அணிந்துள்ளதைப் போன்று வைக்கப்பட்ட பதாதைகள் எங்கே?|| இவையெல்லாம் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சுப்பர் ஸ்டார் தரத்திலான நகைச்சுவைக் காட்சிகள்.

“ஐக்கிய நாடுகள் அமைக்கும் விசேட நிபுணர் குழுவைத் தடுப்பதற்கு எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தாருங்கள்|| எனக் கூறி பொதுத் தேரிதலில் நாட்டு மக்களை ஏமாற்றிய அரசாங்கம் தற்போது ஐக்கிய நாடுகள் பிரதிநிதியே இலங்கைக்கு வந்து நிபுணர்கள் குழு நியமிக்கப்படும் என கூறிச் செல்லும் போது காதில் விழாதைப் போன்றிருக்கும் அரசாங்கம், ஜனாதிபதி மீண்டும் ஒரு முறை தேர்தலில் போட்டியிடும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தேடுகிறது.

“ஏன் எம்முடன், சீனாவும், ரஷ்யாவும் இருக்கிறன?|| என அரசாங்கம் கௌரவமாகக் கூறுகிறது. சீனாவிடமும் ரஷ்யாவிடமும் கூறி ஐக்கிய நாடுள் சபையின் நிபுணர் குழுவைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் அல்லவா? அமெரிக்காவும் இந்தியாவும், மேற்குலக நாடுகளும் ஒன்றோடு ஒன்று இணைந்தால், சீனா அச்சம் கொள்ளும். சூடான் சீனாவின் நெருங்கிய நட்பு நாடாகும். இலங்கையை விட மிக நெருக்கமான நண்பனாக சூடான் இருந்து வருகிறது. எனினும், போர்க் குற்றங்கள் தொடர்பாக சூடானை சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதைத் தடுக்க சீனா முன்வரவில்லை.

பாகிஸ்தான் சீனாவின் சகோதரரைப் போன்ற ஒரு நாடாகும். எனினும், கார்கில் நெருக்கடி நேரத்தின் போது பாகிஸ்தானைக் காப்பாற்ற சீனா வரவில்லை. அமெரிக்காவிற்கு எதிரான கூட்டணியில் சீனாவின் மிக முக்கியமான நண்பனான ஈரானுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் யோசனைகள் நிறைவேற்றப்பட்டபோது சீனா எவ்வித தடுப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதனைப் பார்க்கும்போது இலங்கை போன்ற சிறிய நாட்டைப் பாதுகாக்க அமெரிக்கா போன்ற வல்லரசுகளைப் பகைத்துக்கொள்ள சீனா விரும்புமா? கனவில்கூட நினைக்க முடியாது. சீனாவும் அவ்வாறு முட்டாள் தனமான நடவடிக்கையில் ஈடுபடாது.

சீனா எப்போதும் தனது பொருளாதார நலன்களையே கருத்திற்கொண்டு செயற்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளிலிருந்து சீனாவிற்கு கிடைக்கும் பொருளாதார நலன்களை அளவிடும் போது இலங்கைக்கு அதன் அருகில் செல்லக்கூட முடியாதுள்ளது. தற்போது இந்த அரசாங்கம் செய்கின்ற தவறையே அந்நாள் ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசாங்கமும் செய்தது.

ஜே.ஆர்.ஜயவர்தனவின் நாடாளுமன்றம் மூன்றில் இரண்டு அல்ல. ஆறில் ஐந்து வீத அதிகாரத்தைக் கைப்பற்றி இந்தியாவிற்கு சவால் விடுத்தது. அன்றைய சோசலிச சோவியத் நாட்டின் நட்பு நாடான இந்தியாவுடன் மோதும் போது அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வரும் என ஜே.ஆர்.ஜயவர்தன நினைத்தார். அவ்வாறு எண்ணிய ஜே.ஆர்.ஜயவர்தன, திருகோணமலை எண்ணெய்க் குதம் மற்றும் துறைமுகத்தை அமெரிக்காவிற்கு குத்தைக்கு வழங்க முயற்சித்தார். இந்த முயற்சிக்கெதிராக இந்தியா ஆயுதக் குழுக்களை உருவாக்கி அவர்களைப் பாலூட்டி வளர்த்து இலங்கையில் யுத்தமொன்றை உருவாக்கி, இறுதியில் வானிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொதிகளை போட்டு இலங்கையின் வான் எல்லையை ஆக்கிரமித்தது.

ஜே.ஆர். உடனடியாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளிடம் உதவி கோரினார். எம்மால் இந்தியாவைப் பகைத்துக் கொள்ள முடியாது. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளுங்கள் என அமெரிக்கா பதிலளித்தது.

அமெரிக்காவின் இந்த பதிலால் அமெரிக்காவைத் திட்ட முடியாது. காரணம் அமெரிக்கா, இலங்கை போன்று சிறிய நாடு அல்ல. இந்தியாவைப் போன்று பெரிய நாடு. அதேபோல் இலங்கை அமெரிக்காவுடன் மோதினால், சீனா, ஈரான் உள்ளிட்ட அமெரிக்க விரோத நாடுகள் சிறிதாக கைகளைத் தட்டி சிறிய சத்தத்தை எழுப்பலாம். எனினும், அமெரிக்காவைத் தாக்குவதற்கு சீனா ரஷ்யா, அல்லது ஈரானிடம் உதவி கோரினால் எங்களுக்கு என்ன தலையில் கிறுக்கா என அவர்கள் கூறக்கூடும்.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் அரசாங்கம் நேரடியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்குச் சென்றது. இதன்போது இலங்கை யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த விதத்திற்கெதிராக மேற்குலக நாடுகள் யோசனையொன்றைக் கொண்டுவந்திருந்தன. அப்போது மேற்குலக நாடுகளின் யோசனையைத் தோற்கடிக்க உலக நாடுகள் இலங்கையுடன் ஒன்றாக அமர்ந்தன. மேற்குலக நாடுகளின் யோசனை தோல்வியடைந்தது. அரசாங்கம் வடக்கு கிழக்கை மாத்திரமல்ல உலகைத்தையே வென்றது என சிலர் கூறினர். அதன்பின்னர், பொதுத் தேர்தல் காலத்தில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கையின் போர்க் குற்றங்களை ஆராய்ந்து ஆலோசனையைப் பெற நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்க தீர்மானித்த போது, அரசாங்கம் அணிசேரா நாடுகளிடம் சென்று அதனை எதிர்க்குமாறு கோரிக்கை விடுத்தது. அவ்வாறான குழுவொன்றை நியமிக்க வேண்டாம் என வலியுறுத்தும் கடிதமொன்றில் கையெழுத்திட அந்நாடுகள் இணங்கின. இதன்பின்னர் இரண்டு, மூன்று மாதங்கள் கடந்தன. குறித்த கடிதத்தில் கையெழுத்திட்ட அணிசேரா நாடுகள் நிபுணர்கள் குழுவிற்கு எதிரான தமது நிலைப்பாடுகளை திரும்பப்பெற்றன. தாம் தகவல்களை அறியாது கையெழுத்திட்டதாக சில நாடுகள் கூறின. பான் கீ மூனிற்கு எதிராக இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட கடிதம் இலங்கை ஊடகங்களில் பெரிதாக பிரசாரப்படுத்தப்பட்டன. பான் கீ மூனின் தீர்மானத்திற்கெதிராக தம்முடன் அணிசேரா நாடுகள் அனைத்தும் இருப்பதாக அரசாங்கம் கௌரவமாகக் கூறிக்கொண்டது. பொதுத் தேர்தலில் அரசாங்கம் அதனை பெரிய துரும்புச் சீட்டாக பயன்படுத்தியது. பின்னர் அணிசேரா நாடுகள் தமது கடிதத்தை திரும்பப் பெற்றதும், எதிர்ப்பை விலகிக் கொண்டமை குறித்தும் இலங்கையின் ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்படவில்லை. தற்போது பான் கீ மூனின் விசேடப் பிரதிநிதி பெஸ்கோ இலங்கைக்கு வந்து யுத்தக் குற்றங்களை ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவை நியமிப்பதாகக் கூறும்போது அரசாங்கத்திலுள்ள தாய்நாட்டின் பஞ்சாயுதங்கள் ஏதும் அறியாதவர்களைப் போல் மௌனித்துப் போயுள்ளனர்.

நன்றி

உபுல் ஜோசப் பெர்னாண்டோ
GTN

Wednesday, June 23, 2010

தேசிய தலைவரையும் சுட்டு விடுங்கள் ! தமிழீழத்தை கைவிட்டால்

தமிழீழ கோரிக்கையை கைவிட்டால் என்னையும் சுட்டு விடுங்கள் , என்று எங்களுக்கெல்லாம் கொள்கையில் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும் என்று உணர்த்தி நிற்பவர் எங்கள் தேசிய தலைவர். அவரை பயங்கரவாதியாக பார்த்தவன் கூட , தங்கள் எதிரியாக பார்த்த துரோகிகள் கூட அவரது தலைமையும் உறுதியையும் கண்டு வியந்தவர்கள் தான்! . சைக்கிள் இல் தொடங்கி விமான படை வரை கட்டி அமைக்க எதனை உயிர்கள் எவ்வளவு பணம் , எத்தனை கட்டமைப்புகள் ! இவ்வளவையும் காட்டி தந்த தலைவருக்கு அதன் விலைமதிக்க முடியாத அர்பணிப்பு புரிந்து இருந்தது.

அதனாலோ என்னவோ இதை எந்த நிலையிலும் கைவிட்டால் தான் என்றாலும் பரவாயில்லை சுட்டு விடுங்கள் என்று கூறி நின்றார். இன்றைக்கு அதை நாம் மனதில் நிறுத்துவோம் . பல பேர் பல காரணங்கள் கூறினாலும் தமிழீழம் என்பது அமைக்கப்படவேண்டும் . அதை யார் கைவிட்டாலும் அவர்களை ஒதுக்கி , எங்கள் போராக , இளையோரின் ஒன்றிணைந்த சக்தியாக , ஜனநாயக வழியில் நிச்சயம் தொடர வேண்டும் , தொடர படும் ! ஒரு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் ஒரு வாக்கெடுப்பு மூலம் எங்கள் மக்கள் அதை தீர்மானிக்கும் உரிமை பெறப்படும் வரை நாங்கள் பயணிப்போம் .

இன்றைக்கு இவ்வளவு குழப்பங்கள் நிறைந்த நிலையில் , எல்லாரும் தங்கள் தான் புலிகள் என்று அறிக்கை விடும் நிலையில் , மக்கள் ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தார்கள் . தமிழீழ விடிவை நோக்கி பயணிக்கும் எல்லா அமைப்புகளையும் ஆதரித்தனர். பிரித்தானிய தமிழர் பேரவை , தமிழ் இளையோர் அமைப்பு என்பன மக்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த போதெல்லாம் மக்கள் இணைந்து நின்று தங்கள் உணர்வை காட்டினர் , வட்டுகோட்டை தீர்மானம் , தமிழீழ அரசு தேர்தல் என்றால் இணைந்து நின்று முடியுமானோர் வாக்களித்து எம்மின போராட்டத்தை நிமிர்த்த தங்கள் ஆதரவை தந்தனர்.

இதை எவர் எதிரதாலும் , எவர் கை விட்டாலும் அவர்களை தூக்கி எறிந்து விட்டு எவர் சரியான திசையில் பயணிக்கிரரோ அவருக்கு தம் ஆதரவை எப்ப்ளுதும் வழங்க மக்கள் நிச்சயமாக முன்வந்து உள்ளனர். இலங்கை அரசு வாங்க நினைக்கும் தலைவர்கள் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர்கள் என்றால் கூட தூக்கி , தமிழீழ கோரிக்கையை கை விட்டால் , நிச்சயம் அவர்களையும் தூக்கி எறிய தயங்க மாட்டோம் . தேசிய தலைவரின் வரிகள் காதில் ஒலிக்கட்டும் ! பலர் தங்கள் சொந்த இலாபத்துக்காக , உள்வீட்டு பிரச்சைனக்காக எங்கள் போராடத்தை மழுங்கடிக்க எதிரியுடன் கூட்டு சேர்வது முதன் முறையல்லவே !

கருணாவில் இருந்து டக்லஸ் வரை தங்கள் உள்வீட்டு பிரச்சனைக்காக சிங்கள அரசுடன் சேர்ந்தவர்கள் தானே. தமிழீழம் வேண்டாம் , புலிகளிடம் இருந்து எங்களை காத்தருள்க என்று சிங்கள பேரினவாதிகளின் கை பொம்மை ஆகியவர் பட்டியல் இன்னமும் முடியவில்லை.
ஆனால் இம்முறை அவர்கள் நேரடியாக சந்திக்க போவது மக்களை!. புலிகள் என்றும் எதிரிகள் என்றும் நாங்கள் பார்கபோவது இல்லை , யார் என்றாலும் எங்கள் தேசிய தலைவனின் பாதையை மறந்து , இத்தனை தமிழ் இளையோர் தங்கள் உயிரை கொடுத்த ஒரு இலக்கை அடையாமல் கைவிட்டால் மன்னிக்க போவதும் இல்லை அதுவரை நாம் தூங்க போவதும் இல்லை.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம். இதை உரக்க கூறுவோம் ! எங்கள் எதிரிகளின் காதுகளில் வீழட்டும் ! புலிகளின் தலைவர்கள் சிலரை வளைத்து போட்டால் அடங்குவதற்கு இது ஒன்றும் தண்ணீரில் அடங்கும் தாகமல்ல , கண்ணீர் காய்ந்து போன கன்னங்கள் இறுகிய உள்ளத்தோடு தொடங்கிய போர் ! சிவகுமாரன் தொட்டு தீபன் வரை உயிரை கொடுத்து வளர்த்த தீ!

தெளிவாக இருப்போம் ! அறிவோடு நடப்போம் !

செம்மொழி மாநாடு – கருணாநிதி தமிழுக்கு செலுத்தும் இறுதி மரியாதை !

கோவையில் நடக்க இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழ்நாட்டின் இப்போதைய முக்கியமான செய்திகளில் ஒன்று. துணை முதல்வரும் ஏனைய அமைச்சர்களும் தொடர்ந்து கோவையை பார்வையிட்டு வருகிறார்கள். இது கருணாநிதியின் வாழ்நாள் கனவு என்பது போன்ற ஒரு கருத்து எல்லா அச்சு ஊடகங்களாலும் உமிழப்படுகிறது. கோவை மக்கள் அகலமாக்கப்படும் சாலைகளைப் பற்றியும் புதைந்துபோன வீடுகளைப் பற்றியும் பேசுகிறார்கள். அமைச்சர்கள் கோவைக்கு வரப்போகும் உள்கட்டமைப்பு வசதிகளைப்பற்றி பெருமை பேசுகிறார்கள். பொதுவாக கவனிக்கவேண்டிய செய்தி யாதெனில் ஒருவரும் தமிழைப் பற்றி மறந்தும்கூட பேசுவதில்லை.

தொன்னூற்று மூன்றாம் வருடம் தஞ்சாவூரில் நடந்த எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டின்போது நான் எட்டாம் வகுப்பு மாணவன். அப்போது எனக்கிருந்த அறிவுக்கு மாநாடு என்றால் அதில் என்ன செய்வார்கள் என்பது பற்றி எந்த ஆர்வமும் எழவில்லை. ஊரைச் சுற்றி போடப்பட்ட சாலைகளும் ஒரு மிதவைப்பாலமும் ஒரு ரூபாய்க்கு போடப்பட்ட பொன்னி அரிசி சாதமும் மட்டுமே நான் விவாதிக்கப் போதுமானதாக இருந்தது. இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதே மனோநிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது. அன்றைய தமிழ் மாநாட்டின்போது ஜெயலலிதாவின் கட் அவுட்டுக்கள் தஞ்சை நகரெங்கும் பயமுறுத்தின இப்போது அதே நிலைதான் நீடிக்கிறது. கருணாநிதி ஸ்டாலினின் மண்டைகளைப் பார்க்காமல் நீங்கள் இங்கு கால் கிலோமீட்டர்கூட பிரயாணம் செய்ய முடியாது, அத்தனை பேனர்கள் வீதிகளை ஆக்கிரமித்திருக்கின்றன.

ஈழத்துப் பேரழிவுக்குப் பிறகு மக்கள் அந்த சோகத்திலிருந்து மீளாத தருணத்தில் கருணாநிதியால் இந்த மாநாட்டின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகத் தமிழ் ஆய்வு மன்றம் ஒப்புதலில்லாமலே உலகத்தமிழ் மாநாடு என்ற அறிவிப்பு வெளியானது.அந்த நிறுவனத்தின் தலைவர் நெபுரு கராஷிமா ஒரு மானம் மரியாதை உள்ள ஒரு ஆள் போலிருக்கிறது அதனால் கருணாநிதியின் ’தேவையை’ அவரால் ஏற்க இயலவில்லை. நீண்டகாலமாக தி.மு.க வின் தலைவராக இருப்பதால் உலகில் சில மானஸ்தர்களும் இருப்பார்கள் என்ற தகவல் அவருக்கு நினைவுக்கு வராமல் போய்விட்டது. நெபுரு கராஷிமாவால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பிறகு உலகத்தமிழ் செம்மொழி மாநாடாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இம்மாநாடு கருணாவின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக திட்டமிடப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இந்த புள்ளியிலிருந்தே கிடைக்கத் துவங்குகின்றன.

அதன் பிறகு சட்டமன்றத்தில் பேராசிரியர் அன்பழகன் உலகத் தமிழ் ஆய்வு மன்றம் செத்துவிட்டது என்று அறிவித்தார். ஈழத்து படுகொலைகளின் சோகம் அகலாத சூழலில் இந்த மாநாடு தேவையா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது கனிமொழி சொன்னார் ‘ மாநாட்டில் நமது ஒற்றுமையை உலகுக்கு காட்டுவதன் மூலம் நாம் ஈழத்தமிழருக்காக இன்னும் அழுத்தமாக குரல் கொடுக்கலாம்‘. ஒன்று மட்டும் உறுதி, இன்றைய ஊடக ஆதரவுச் சூழலில் கருணாநிதி முகச்சவரம் செய்துகொள்வதுகூட ஈழத்தமிழர் நலனுக்காகத்தான் என்று கனிமொழியால் கூசாமல் சொல்லிவிட முடியும். சட்டமன்றத் தேர்தலை விரைவாக நடத்தும் எண்ணத்திலிருந்த கருணா இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டின் துவக்கத்தில் இம்மாநாட்டை நடத்தத் திட்டமிட்டார். ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க இவ்வளவு குறுகிய காலம் போதாது என்று அறிஞர்கள் கோரியதன் பிறகு மாநாடு ஜுன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. முத்தமிழ் செக்யூரிட்டிக்கு ( காவலருங்க) ஆய்வுக்கட்டுரை என்பது ஜெகத்திரட்சகனுடைய சொறிந்துவிடும் வாழ்த்துரையையைப் போல எளிமையானதான தோன்றியதை என்னவென்று சொல்வது?

தமிழை ஒழித்துக்கட்டும் முயற்சி ஏதோ ஜெயலலிதா காலத்தில் துவங்கி கருணாநிதி காலத்தில் நிலை பெற்றதாக பலர் கருதுகிறார்கள், சில தமிழறிஞர்கள் உட்பட. தமிழ் மொழி காமராஜர் அண்ணாதுரை காலம்தொட்டே அரசினால் கைவிடப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் அண்ணாதுரையை அரியாசனத்தில் அமர்த்தியது. தமிழின் வளர்ச்சிக்கு அவர் செய்தது என்ன ? இன்னும் சொல்லப்போனால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவர் மாணவர்ளை காட்டிக்கொடுக்கும் வேலையைத்தான் செய்தார். லட்சக்கணக்கிலான தமிழ் மக்களை மட்டுமே கொண்டிருக்கிற இலங்கையில் பொறியியலும் மருத்துவமும் தமிழில் கற்றுத்தரப்படும்போது இதற்கான முதல் முயற்சிகூட அண்ணா காலத்தில் செய்யப்படாதது ஏன்? 1968ல் அண்ணதுரையால் நடத்தப்பட்ட இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் ஏராளமான சிலைகள் சென்னையில் திறக்கப்பட்டன அலங்கார ஊர்திகள் மாநாட்டில் ஊர்வலம் சென்றன, வேறென்ன நடந்ததென்றால் யாருக்கும் தெரியாது. நாடகத்துறையில் இருந்தவர் என்பதால் அரங்கம் அமைபதைத் தவிர வேறெதையும் அவரும் செய்யவில்லை.

அதன் நீட்சியாக கருணாநிதியும் மொழிக்கு அவர் செய்யப்போகும் சிறப்பு பற்றி ஒரு எழவும் பேசியதாகக் காணோம் எப்போதும் மாநாட்டுப் பூங்காவில் தொடங்கி அரசுக் கழிப்பிடம் கட்டுவது வரையிலான கட்டுமான விவகாரங்களைப் பற்றித்தான் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். மாநாட்டுப் பாடலை கருணாநிதி எழுத ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க கவுதம் மேனன் இயக்கியிருக்கிறார். நல்லவேளையாக நமீதா நடனமாடாத காரணத்தால் தமிழினம் தப்பிப்பிழைத்தது. அண்ணாதுரை காலத்தில் துவங்கிய ஜனரஞ்சகமான மாநாடு எனும் பழக்கம் இப்போது கருணாநிதியின் கதை வசனம் எழுதப்பட்ட படங்களைப் போல சகிக்க முடியாததாக வளர்ந்திருக்கிறது. மொழியைக் காப்பதற்கு ஏதாவது செய்பவர்தானே அதை வளர்ப்பதற்கும் தகுதியுடையவராவார் ? கருணா தமிழைக் காப்பதற்கு என்ன முயற்சியை இதுவரை எடுத்திருக்கிறார்? தமிழில் கலைச்சொற்களை உருவாக்குவது, மற்ற மொழி அறிவியல் புத்தகங்களை தமிழாக்கம் செய்வது ( இவை இப்போதும் சீனா ஜப்பான் நாடுகளில் மின்னல் வேகத்தில் செய்யப்படுகின்றன ) ஆகியவற்றுக்கான முன்முயற்சிகள் மயிரளவுகூட தமிழக அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. தமிழின் தொன்மையில் நான்கில் ஒரு பங்குகூட இல்லாத கன்னட மொழியின் இலக்கியங்கள் மலிவுப்பதிப்பாக கர்நாடக அரசால் மக்களுக்குத் தரப்பட்டன. இங்கு அதுபோன்ற முயற்சிகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டதா?

தாய்மொழிக் கல்வியை அரசுப் பள்ளிகள் மட்டுமே நடத்த முடியும். பொதுவாகப் பார்க்கையில் அரசுப்பள்ளிகளது தரம் குறைவது என்பது எதேச்சையானது அல்ல. இது பல ஆண்டுகளாக திட்டமிட்ட வகையில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் அரசின் கல்விச் செலவினத்தை குறைக்கவும் இன்னொருபுறம் தனியார் வசம் கல்வியை ஒப்படைக்கவுமே அரசு விரும்புகிறது. இப்போது அரசு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணத்தை ஏற்க மறுத்து பள்ளிகளை திறக்க மாட்டோம் என்று அரசை மிரட்டும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சொல்வது என்ன ? நாங்கள் இல்லாவிட்டால் பின்னாளில் தரமான கல்வி பெற்றவர்களே தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள் என்கிறது. ஆயிரக்கணக்கான பள்ளிகளை நடத்தும் அரசுக்கு இதைவிட பெரிய அவமானம் இருக்க முடியுமா ? ஓராண்டுக்கு முன்பு கல்வியாளர் வசந்திதேவியால் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மிக மோசமானதாக இருக்கிறது என்று முடிவு வந்திருக்கிறது. ஐந்தாம் வகுப்பு பூர்த்தி செய்த அரசுப் பள்ளி மாணாக்கர்கள் எளிமையான வாக்கியங்களை அமைக்கவே அல்லது புரிந்துகொள்ளவோ தெரியாதிருக்கிறார்கள் என்கிறது அவ்வறிக்கை.

பெரும்பாலான கிராமப்புற பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகள். நிர்வாகப்பணியையே செய்யத் திணறும் ஆசிரியரால் எப்படி ஐந்து வெவ்வேறு வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும் ? இப்படியான சூழலில் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிக்கு வரும் மாணவர்கள் அந்தப் பாடச்சுமையை எப்படி எதிர்கொள்வார்கள்? பெரும் சதவிகிதமான மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பு முடிவதற்குள் படிப்பிலிருந்து விலகுகிறார்கள். அரசும் அதையே விரும்புகிறது. ஏழைகள் எல்லோரும் படிக்கத்துவங்கினால் பிற்பாடு அவர்கள் உயர்கல்வி கேட்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஆகவே அரசுப்பள்ளிகளை தரமில்லாமல் வைத்திருப்பது அரசுக்கு மிக அவசியம். இந்த ஆண்டு +2 தேர்வில் மிக அதிக தேர்ச்சி விழுக்காடு காட்டிய விருதுநகர் மாவட்டத்தில் ஒரு அரசுக் கல்லூரிகூடக் கிடையாது. கேட்டால் சிறிய மாவட்டம் அதனால் அரசுக் கல்லூரி அமைக்க முடியாது என்கிறார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. ஆனால் அங்கு ஏறத்தாழ இருபது தனியார் கல்லூரிகள் இருக்கின்றன. இப்படி வறிய மக்கள் போகக்கூடிய ஒரே இடமான அரசுக் கல்லூரிகள் இல்லாத பட்சத்தில் ஏழைப் பெற்றோர்கள் எந்த நம்பிக்கையில் பள்ளிக்கு தம் பிள்ளைகளை அனுப்புவார்கள் ?

மற்றொரு வாதம் தமிழ்வழிக் கல்வியை மக்கள் விரும்புவதில்லை என்பது. இது ஏறத்தாழ உண்மையே. ஆயினும் மக்களை அந்த சூழலுக்கு தள்ளியவர்கள்தான் தமிழ்நாட்டை நாற்பதாண்டுகளாக ஆள்கிறார்கள். இவர்கள்தான் ஆளுக்கொருமுறை தமிழ் மாநாட்டை நடத்தினார்கள் மற்றும் நடத்துகிறார்கள். மருத்துவம் மற்றும் பொறியியல் உட்பட எந்த ஒரு உயர்கல்வியும் தமிழில் இல்லாததால் மக்கள் எல்லோரும் இயல்பாகவே ஆங்கிலவழிக் கல்விதான் சிறந்தது என்று முடிவெடுக்கவே செய்வார்கள். ஒருவேளை தமிழ் வழியிலேயே தமது பிள்ளைகளை படிக்கவைக்க விரும்புபவர்களுக்கு இங்கு போதுமான பள்ளிகளும் கிடையாது. ஆக ஏழை மக்களாக இருந்தாலும் சரி தமிழ்வழியில் தம் பிள்ளைகளை படிக்கவைக்க விரும்பும் நடுத்தரவர்க மக்களாக இருந்தாலும் சரி அவர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாவது உறுதி. இப்படி சிறுகச்சிறுக மக்கள் தமிழ் வழிக் கல்வி மீது அலட்சியத்தை உருவாக்கிய அரசுதான் இப்போது செம்மொழி மாநாட்டை நடத்துகிறது.

இப்போதும் ஆயிரக்கணக்கிலான ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாட்டில் காலியாக இருக்கின்றன. அதில் மற்ற பாடங்களுக்கு நிரப்பப்படும் அளவுக்கு தமிழாசிரியர்கள் நிரப்பப்படுவதில்லை அல்லது நிரப்பப்படுவதே இல்லை. தமிழை முதன்மைப்பாடமாக இல்லாமல் ஒரு பாடமாக படித்தவர்கள் மட்டுமே தமிழாசிரியர்களாக தற்போது பணியாற்றுகிறார்கள். தமிழ் மொழியை உயர்கல்வியாக படித்த மாணவர்கள் மாநாட்டு அறிவிப்பின்போது மேற்கூறிய காரணத்தைச் சொல்லி தமிழ் மாநாட்டின்போது தற்கொலை செய்துகொள்ளப்போவதாக!! ஒரு போராட்டத்தை அறிவித்தார்கள். அரசும் இதை கண்டுகொள்ளவில்லை, கருணாவின் தமிழுக்கான வாரிசு கனிமொழியும் இதைக் கண்டுகொள்ளவில்லை. அப்போது ஃபேஷியல் செய்துகொள்ளப் போய்விட்டாரா என்று தெரியவில்லை ஆக தமிழ் வழியில் படிக்கவும் வாய்ப்பு கிடையாது படித்தவனுக்கும் வாய்ப்பு கிடையாது.

இந்தப் பின்புலத்திலிருந்துதான் நாம் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளை அணுகவேண்டும். தமிழ் மொழியை இந்தத் தலைமுறையோடு தலைமுழுக வைக்கும் காரியங்கள் முழுவீச்சில் நடக்கின்றன. பிரந்தியமொழியில் ஒரு வார்த்தைகூட கற்காமல் பட்ட மேற்படிப்புவரை கற்க முடியும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். பள்ளிகளில் தமிழ் கட்டாயம் எனும் முந்தைய திமுக அரசின் சட்டம் என்னவானது என்றே தெரியவில்லை. மருத்துவப் பட்ட மேற்படிப்புத் தேர்வை தமிழில் எழுதி படாதபாடுபட்டார் மருத்துவர் ஜெயசேகர், அது எப்படி முடியும் என எள்ளி நகையாடியவர் திமுகவின் அப்போதைய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன். இப்போதும் தமிழ் மாநாட்டுப் பணிகள் தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் அறிவிப்புக்களில் பல ஆங்கிலத்தில் இருப்பதாக தினமலரே சொல்கிறது. மாநாடுக்காக துவங்கப்பட்ட வலைதளம் பல மாதங்களாக முன்னேற்றமில்லாமல் இருக்கிறது. இம்மாநாடு ஒரு சதவிகிதம்கூட தமிழுக்காக நடத்தப்படவில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை.

எத்தனை சான்றுகளை கொட்டினாலும் இக்கட்டுரை முடியாது. இது கருணாநிதி தனது ஓய்வுக்கு முன்பு சர்வதேச அளவில் நடத்திக்கொள்ள விரும்பும் ஒரு பாராட்டுவிழா முயற்சி. தான் விரும்பியது யாவையும் உடனே கிடைக்கவேண்டும் என்று விரும்பும் பணக்கார இளைஞர்களைப் போல கருணாவும் தன் வாழ்நாள் கனவுகளை தனது ஆட்சிக்குள் அல்லது ஆயுளுக்குள் செய்துகொள்ள விரும்புகிறார். கட்சிக்கு கிடைக்கும் கட்டுமான கமிஷனையும் கோவை வட்டாரத்தில் திமுகவை வலுப்படுத்தும் நோக்கத்தையும் இதில் இணைத்ததில்தான் கருணாநிதியின் சாணக்கியத்தனம் இருக்கிறது. மற்றபடி இது தமிழுக்காக செய்யப்படும் முயற்சி என்றால் அதை திமுககாரன்கூட நம்பமாட்டன். ஆறு மாதத்தில் வீணாகப்போகிற சாலைகளும் ஜுலை மாதத்திலிருந்து கவனிப்பாரில்லாதுபோகும் பூங்காக்களுமே கோவை மக்களுக்கு மிச்சமாகப் போகிறது.

சரி நம் மொழியைக் காக்க என்னதான் செய்வது என்று கேட்கிறீர்களா ? அது ஒன்றும் அவ்வளவு சிரமமானதில்லை. மொழி எப்போதும் பாமர மக்களால்தான் காப்பாற்றப்படுகிறது. இன்று உலகை ஆள்வதாக சொல்லப்படும் ஆங்கிலம் பேசுவது ஒரு காலத்தில் இங்கிலாந்திலேயே கவுரவக்குறைவாக கருதப்பட்டது. இங்கிலாந்தின் அன்றைய பிரபுக்கள் குடும்பங்களிலும் ஏன் பாராளுமன்றத்திலும்கூட பிரென்சு மொழிதான் பயன்படுத்தப்பட்டது (தேவாலயங்களில் லத்தீன்). நிலப்பிரபுத்துவம் வீழ்த்தப்பட்ட பிறகுதான் ஆங்கிலமே அங்கு தலையெடுத்தது. கோடிக்கணக்கிலான மக்களுக்கு அன்றாட உணவையே நிச்சயமற்றதாகிவிட்ட சூழ்நிலையில் நாம் நம் மொழி குறித்துமட்டும் கவலைப்பட்டால் அது ஒரு சதவிகிதம்கூட பலன்தராது. இனத்தைப் பற்றி கவலைப்படாமல் மொழியை மட்டும் நேசிப்பது அயோக்கியத்தனம். மொழியை கண்டுகொள்ளாமல் இனத்தைப் பற்றி கவலைப்படுவதாகச் சொல்வது அவ்வாறானதே.

ஏழ்மை, சுரண்டல், சாதிவெறி மற்றும் மொழிப்புறக்கணிப்பு யாவும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இதில் ஒன்றை விடுத்து மற்றொன்றை நம்மால் சரி செய்யவே முடியாது. தமிழ் சினிமாவுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு தரும் இழிநிலைக்கு நாட்டை தள்ளிய கருணாநிதியால்தான் மொழியைக் காப்பாற்ற முடியும் என்று இனியும் சுப.வீரபாண்டியன் வகையறாக்கள் சொன்னால், அழுத்தமாக பதில் சொல்லுங்கள் ‘ என் மொழி கருணாநிதியால் காப்பாற்றப்படுவதைவிட அழிந்துபோவதே மேல், ஏனெனில் என் மொழியின் கவுரவம் அது பிழைத்திருப்பதைக் காட்டிலும் முக்கியமானது‘.

நன்றி________________________________________
• வில்லவன்
புதிய கலாச்சாரம் ஜூன் 2010
_______________________________

Monday, June 21, 2010

தமிழீழத்தை படைத்தளிப்போம்..

கடந்த ஆண்டு மே திங்களில் தமிழீழ விடுதலை போராட்டக் களத்தில் நான்காம் கட்ட இறுதி நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருந்தது. இறுதியாக தேசிய தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக ஊடகங்கள் அறிவித்தன. இந்திய ஊடகங்கள் சிங்கள பேரினவாதத்தின் மூளையைக் கொண்டு தமது குரலில் பேசியது. தேசிய தலைவரின் அடையாளம் கொண்ட ஒரு உருவத்தை கருணா என்கின்ற இன துரோகியை வைத்து அடையாளம் காட்டினார்கள். பேய் அறைந்ததைப் போல் காணப்பட்ட கருணாவின் முகம் ஒரு சிறு சலனம் இல்லாமல் அந்த பொம்மையைப் பார்த்து உதடு அசைத்துவிட்டு சென்றது. ஒரு நாள் கழித்து இச்செய்தியை பேரினவாத ஆற்றல் ரத்தவெறி பிடித்த ராசபக்சே அறிவித்தான்.

இப்படி இனவிடுதலைக்கான மக்கள் விடுதலைக்கான மாவீரர்களை கொல்ல நினைப்பதும், கொல்லப்பட்டதாக அறிவிப்பதும் வரலாறுகளில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் எமது பதிவுகளின் மூலம் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை மட்டுமல்ல. சர்வதேச விடுதலைப்போராட்டத்தில் பங்காற்றிய மகத்தான தலைவர்களை அறிமுகப்படுத்துவதும், அத்தலைவர்களோடு எமது தேசிய தலைவரை ஒப்புமைப்படுத்துவதும் கடமை என கருதியது. மேலும் வாசிப்புத்தன்மை இல்லாமல் குமுதம் படித்து இலக்கியம் கற்பவர்களும், தினத்தந்தி படித்து அரசியல் கற்பவர்களும் இருக்கின்ற இந்த காலத்தில், சமூகம் அதைச் சார்ந்த அரசியல் அகப்புற தன்மைகள், தேசிய, சர்வதேசிய அரசியல் களங்கள், கடந்த கால வரலாற்று சூழல்கள் இவைகளை தெளிவுப்படுத்திக் கொள்ளாதவரை நாம் நமது தேசிய விடுதலையை வென்றெடுக்க முடியாது.

நமது தமிழ் தேசிய விடுதலை என்பது வரலாற்றின் நிகழ்வுகளோடும் நமது விடுதலையைக் குறித்த தேடல்களோடும் நமது தேவையை உள்ளடக்கியதாகவும் இருக்கின்ற காரணத்தினால் நாம் புறம் சார்ந்த அரசியல் தத்துவார்த்த கோட்பாட்டின்படிதான் நமது விடுதலையை இணைக்க வேண்டும். அந்த பாதைகளை நமது விடுதலைப் போராட்டத்தோடு இணைப்பதின் மூலமே நமது விடுதலையின் முழு பொருளையும் புரிந்து கொள்ள முடியும். நமது விடுதலை என்பது எவ்வளவு முக்கியமோ, அதைப்போன்றே சர்வதேச அரசியல் களங்களில் சமராடும் அடிமைத்தனத்தின் தளைகளை அறுத்தெறிய களமாடிக் கொண்டிருக்கும் எண்ணற்ற போராளிகளின் இலக்கும், அவர்களின் ஈகம் செறிந்த பயணமும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதோடு, அந்த போராட்ட தன்மையோடு நமது போராட்டத்தை கலந்து பார்ப்பதிலே தான் நமது வெற்றி உள்ளடங்கி இருக்கிறது.

கொன்றுவிட்டார்கள், கொன்றுவிட்டார்கள், லெனினை கொன்றுவிட்டார்கள் என்ற கூக்குரல் ஸ்தெப்பான் கில் காதில் விழுந்தபோது தடுமாறி விட்டார். அன்றைய நாளிதழை வாசித்துக் கொண்டிருந்த தோழர் லெனினின் மகிழ்வுந்து ஓட்டுநரான அவருக்கு இந்த ஓசை நம்ப முடியாததாக இருந்தது. அவர் தலை உயர்த்தி பார்த்தபோது, இளம் பெண் ஒருத்தி தோழர் லெனினுக்கு நேராக தமது துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருந்தாள். தாம் வாசித்துக் கொண்டிருந்த இதழை வீசி எறிந்துவிட்டு, அவளை நோக்கி ஓடுவதற்குள்ளாக அவள் மூன்று ரவுண்டுகள் லெனினை நோக்கி சுட்டிருந்தாள். பின், தமது துப்பாக்கியை அவரின் காலுக்கு அடியிலே வீசி எறிந்துவிட்டு ஓடினாள்.

அவளை பிடிக்க ஓடிய கில், தோழர் லெனின் அடிப்பட்டு கிடப்பதை நினைவு கூர்ந்து பின்நோக்கி திரும்ப வந்தார். அங்கே குழுமியிருந்த தொழிலாளர்கள் லெனினை தாங்கிப் பிடித்து காருக்கருகே கொண்டு வந்தார்கள். அந்த கார் உலக வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று ஆவணமான அலுக்குச் சட்டை போட்டவன் ஆள முடியுமா? என்கின்ற முதலாளித்துவ நையாண்டிக்கு முடிவுக் கட்டிய உலக வரலாற்றிலே தொழிலாளர்களின் ஆட்சி அதிகாரத்தை ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியமாக கட்டியமைத்த விலைமதிப்பற்ற ஒரு உயிரை சுமந்து கொண்டு அதைக் காப்பாற்றும் முகமாக பறந்தது. ரஷ்ய புரட்சியின் தலைவன் தோழர் லெனின் புரட்சி நடைபெற்று ஓராண்டு முடிவதற்குள்ளாக கொல்ல முயற்சி செய்த அந்த பெண்ணின் பெயர் ஃபான்னி கப்ளான் என்று தெரிய வந்தது.

சோசிலிட் ரெவல்யூசனரி என்னும் தீவிரவாத அமைப்பைச் சார்ந்த அவள், 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் நாளன்று அந்த விலைமதிப்பற்ற உயிரை கொல்வதற்கு முயற்சி செய்தாள். மகத்தான அக்டோபர் புரட்சியை தகர்க்க, எதிர் புரட்சியாளர்கள் தொடர்ந்த முயற்சிகளில் ஒன்றுதான் இது. லெனின் செய்த தவறென்ன? ரஷ்ய மக்களின் ரத்தத்தை அட்டையாக உறிஞ்சி அவர்களின் வாழ்வை சூறையாடிக் கொண்டிருந்த ஜார் என்னும் எதேச்சதிகாரியை அவனின் கொடுங்கோல் ஆட்சி அதிகாரத்தை அகற்றி ஒரு புதிய தொழிலாளி வர்க்கத்தினுடைய ஆட்சியை கொண்டு வந்தார். வேலை செய்பவர்களின் கடினங்களை அகற்றினார். 1917 அக்டோபரில் கடும் காற்றும் மழையும் கொண்ட ஒரு நாளில் லெனின் கிராடில் மோல்னி என்னும் கட்டிடத்தை தலைமையிடமாகக் கொண்டு புரட்சிக்கு தலைமைத் தாங்கினார்.

அதன்மூலம் உலகத்தின் வரலாறு தலைகீழ் மாற்றமடைந்தது. ரஷ்யாவின் வரலாற்றை மாற்றி அமைப்பேன் என்று தாம் ஏழாம் வயதில் உறுதி எடுத்த அவர், ஜாரின் எதார்த்த முகத்தை அந்த வயதிலேயே புரிந்து கொண்டிருந்தார். தமது அண்ணன் அலெக்ஸாண்டரை 1877 மே 8ஆம் நாள் ஜாரின் கொடுங்கோல் ஆட்சி தூக்கிலிட்டு கொன்றது. அவன் செய்த தவறு, நரோத்னிக்குகள் என்கின்ற பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து செயல்பட்டதுதான் அவனின் மரண தண்டனைக்கு காரணமாக அமைந்தது.

வரலாற்றின் பக்கங்கள் எப்போதும் துரோகங்களும், ரத்தக் கறை படிந்ததுமாகத்தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதன் மையம் எப்பொழுதும் அதிகார வர்க்கத்தின், அரச பயங்கரவாதத்தின் தலைமையில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதை தகர்த்தெறிவதின் மூலம்தான் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்பதை லெனின் போன்ற சிலர்தான் உணர்ந்திருக்கிறார்கள். அதே பாதையில்தான் எமது தேசிய தலைவரும் உணர்ந்தார். விடுதலையை எப்படி வென்றெடுக்க வேண்டும். வென்றெடுக்கப்பட்ட விடுதலையை எவ்வாறு மக்களுக்கானதாக மாற்ற வேண்டும் என்கின்ற மகத்தான சிந்தனை கொண்டவராக அவர் திகழ்ந்தார்.

அவரைக் கொல்ல பலமுறை முயற்சி நடந்தது. அது துப்பாக்கி குண்டுகளால் நடைபெற்ற முயற்சி மட்டுமல்ல. கருத்துக்களால் நடைபெற்ற முயற்சி. துப்பாக்கிக் குண்டுகளால் நடக்கும் முயற்சிகளைக் கூட மிக எளிதாக முறியடித்துவிட முடியும். தோழர் லெனின் காப்பாற்றப்பட்டது போல, காப்பாற்றப்பட்டு பின்னர் தமிழீழம் கட்டியமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சிங்கள பேரினவாத அரசு, இந்திய பார்ப்பனிய அரசோடு இணைந்து கொண்டு எமது தேசிய தலைவரை பரப்புரையால் கொன்றுகொண்டிருக்கிறது. இதுதான் கடந்த மே திங்களில் நடைபெற்றது. முன்னுக்குப் பின் முரணாக மாறி மாறி ஒரு தகவலை சொல்ல வேண்டிய பரிதாபகரமான நிலைக்கு சிங்கள அரசு தள்ளப்பட்டது.

ஒரு பொய்யை நிரூபிக்க அது மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டது. சிங்கள நாட்டின் பொய்யை நம்பிக் கொண்டிருக்க உலகத் தமிழர்கள் மட்டுமல்ல, விடுதலைக்கான போர்க்களத்தில் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் தயாராக இல்லை என்பதையே நிகழ்வுகள் நிரூபித்திருக்கின்றன. சமீபத்தில் இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்களுக்கு உணவு, நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற சர்வதேச தூதுக்குழுவைச் சேர்ந்தவர்களை சுட்டுக் கொன்றிருக்கிறது. உலகமே தலை கிறுகிறுத்து இது சரியா? இஸ்ரேல் ராணுவத்தின் அடங்காப்பிடாரித் தனத்தை ஒழிக்க வேண்டாமா? என்றெல்லாம் வெறும் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நினைத்துப் பாருங்கள். கடும் சமரில் பாதிக்கப்பட்டிருந்த எமது உறவுகளுக்கு உலகெங்கும் வாழும் உறவுகளிடம் சேகரிக்கப்பட்ட உணவு, மருந்து, உடைகளை ஏற்றிக் கொண்டு வணங்கா மண் என்ற கப்பல் தமிழீழத்தை நோக்கிச் சென்றபோது, சிங்கள ராணுவம் இப்படித்தான் தமது அடங்காப்பிடாரித் தனத்தை காட்டியது. பல்வேறு அச்சுறுத்தலுக்குப் பிறகு, போராட்டங்களுக்குப் பிறகும்கூட அவை அந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை. இன்று செய்தி வருகிறது, அயர்லாந்து தூதுக் குழுவினர் பாலஸ்தீன மக்களுக்கு உணவேற்றி செல்வதற்கு கடல் வழியே வருகிறார்கள். ஒருவேளை அவர்கள் எமது கடல் எல்லைக்குள் கால் பதித்தார்கள் என்றால், நாங்கள் கடும் தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை செய்கிறது.

தமிழீழ மக்களுக்கு வழங்குவதற்காக, தமிழகத்திலிருந்து அய்யா பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையில் சேகரிக்கப்பட்ட உணவையும், மருந்தையும் இந்திய பாசிச அரசு தமிழ் விரோத கருணாநிதி அரசு தடை விதித்து, அது எம் மக்களுக்கு சென்றடையாமல் சிதைவடைந்து போனது. கோடிக்கணக்காக கொட்டிக் கொடுக்கப்பட்ட எம் உறவுகளின் உழைப்பு வீணடிக்கப்பட்டதற்கு இந்திய பார்ப்பனிய அரசும், அதன் காலடிகளில் வீழ்ந்து கிடக்கும் கருணாநிதி அரசும் காரணமாக இருந்தார்கள். உலகமெங்கும் இருந்து திரட்டப்பட்ட உணவு, மருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற வணங்கா மண் கப்பலை தடுத்தது சிங்கள பேரினவாத அரசும் அதன் கூட்டாளிகளின் அரசுமாகும்.

இப்போது காட்டு கத்தல் போடுகிறார்களே, இதே தான் இலங்கையிலே தமிழீழ மண்ணில் வசிக்கும் எமது மக்களுக்கு இழைக்கப்பட்டது. இந்த அக்கிரமத்தை தட்டிக் கேட்க அன்றே சர்வதேச சமூகம் முன்வந்திருக்குமேயானால் இன்று இஸ்ரேலுக்கு இவ்வளவு திமிர் வந்திருக்காது. ஆகவே, எங்கு தீமை நடக்கிறதோ, எங்கே அநியாயக்காரன் வசிக்கிறானோ, அங்கே அவனுக்கெதிராக நாம் கொதித்தெழும்போதுதான் ஒட்டுமொத்த உலகச் சமூகமும் மகிழ்ச்சியோடும் சமாதானத்தோடும் மனநிறைவுக் கொண்டு ஆனந்தமாய் வாழ முடியும். இது தமிழீழ மக்கள் தானே என்று அசட்டையாக இருந்த காரணத்தினால் இன்று வேறொரு அரசு பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இருக்கிறது. இந்த உலகம் மிக சுருங்கிவிட்டது. தகவல் தொழில்நுட்பத்தாலும், அறிவியல் காரணங்களாலும் வேகமாக கருத்துப் பாறிமாறிக் கொள்ளும் களம் இருப்பதால் மிக விரைவாக ஒரு நிகழ்வு அடுத்தவர் அறிந்து கொள்ள முடிகிறது.

அன்று எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சர்வதேச சமூகம் கண்டித்திருந்தால், இன்று இஸ்ரேலுக்கு இந்த திமிர் வந்திருக்க வாய்ப்பில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிப்பதை தடுத்தால், உலகமே எழுந்து நிற்கும் என்று அன்று சிங்கள பாசிச வெறியன் ராசபக்சேவுக்கு அவனை தோள்மீது வைத்துக் கொண்டு சமருக்கு அழைத்துச் சென்ற இந்திய பார்ப்பனிய அரசுக்கு இந்த உலகம் எச்சரிக்கை விடுவித்திருக்குமேயானால், இன்று இஸ்ரேலும் அமைதி காத்திருக்கும். ஆகவே, இனி வரும் காலங்களிலாவது நாம் எங்கு அநீதி நடந்தாலும் வரலாற்றின் பக்கங்களில் நமது எதிர்ப்பு பதிவு செய்யப்பட உறுதியாக பணியாற்ற வேண்டும்.

எமது தேசிய தலைவரின் மரணத்தைக் குறித்த செய்தியாகட்டும், பாலஸ்தீனத்திற்கு உணவுக் கொண்டு செல்லப்பட்ட தகவல்களாகட்டும், இது எமது தமிழீழ மண்ணில் நிகழ்ந்தது தான். ஆனால் இதையெல்லாம் கடந்துதான் தமிழீழம் வரலாறு படைக்க இருக்கிறது. இந்த பரப்புரைகளை எல்லாம் உடைத்தெறிந்துதான் நமது தேசம் உயிர்பெற இருக்கிறது. நாம் பதிவு செய்யும் தகவல்கள் நமது உயிரை பிழிந்து வடிக்கும் எழுத்துக்கள். இவற்றிற்கு உயிர் இருக்கிறது, இவை உலகெங்கும் விழிப்பூட்டும். அது நமது விடுதலையை வென்றெடுக்க பெரும் துணை புரியும்.

தேசிய தலைவரின் தலைமையில் தமிழீழ அரசு அமைவதை எந்த ஒரு ஆற்றலாலும் தடுக்க முடியாது. பரப்புரைகளை உடைத்தெறிவோம்.

கருத்துறைகளால் களம் படைப்போம்.

நாம் தமிழீழத்தை படைத்தளிப்போம்.
அதுவரை தொடர்ந்து இடைவிடாமல் தொடர் பயணம் செய்வோம்.

நன்றி- ஈழவர்குரல்

செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்!

“தர்ம ஏகத் கலைஞர் தேவஸ்ய
கருணாநிதி ஸ்ரீமச்சாசனம்
ஊர்வச சிரோபபிஷசேகரி…”

இச்செப்பேடு
செப்புவது யாதெனில்,

“காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்!”
என்று ஈழத்தமிழர் கதறிய காலத்தே
பராக்கிரமத்தோடு சோனியாவுக்கு
விடாது கடிதமெழுதியதோடு,

அலைகடலோரம் நெடுஞ்சாண் கிடந்து
காலை உணவுக்கும், மதிய உணவுக்கும்
இடைப்பட்ட மணித்துளியில்
அன்ன ஆகாரம் உண்ண மறுத்து,

ஈழத்தமிழர் செத்த பின்பு
போரை நிறுத்திய ஒரே புறநானூற்றுத் தமிழன்
கருணாநிதிச் சோழனின்
மற்ற கைங்கர்யங்களாவன:

சோழநாடு சோறுடைத்ததைப்
பின்னுக்குத் தள்ளி
ஒரு ரூபாய் அரிசியாலேயே உடைத்தார்!
பகை முடித்தார்!

வண்ணத் தொலைக்காட்சி, காஸ் அடுப்பு,
மனை கட்ட உதவி, மணமகன் கட்ட உதவி,
மகப்பேறு உதவித்தொகை…
எனக் குடிதானம் ஏராளம்.
மக்களைத் தானாக வாழவிடாமல்
தடுத்தாண்ட சிறப்பிவைகள்.
மற்றபடி,
இடைத்தேர்தல் எதிர்ப்பட்டால்
வாக்காள பெருங்குடிக்கு
பொன்முடிப்பு தாராளம்!

காணியுடையோராய் இருந்த
தொல்குடிகள் நீக்கி,
காடு, மலை, நதியென
அந்நியப் பன்னாட்டுக் கம்பெனி
வேண்டுவன தட்டாமல் வழங்கும்
தகைமையில் விஞ்சுவாரின்றி
கருணையும், நிதியும் ஒன்றாய் ஆனார்!

யாதும் ஊரே; யாவரும் கேளிர்
ஹூண்டாயும், ஃபோர்டும் நம் உடன்பிறப்பே,
எனப் பன்னாட்டு உறவில் புது எல்லை கண்டான்!
அண்ணலும் ‘நோக்கியா’ அவளும் ‘நோக்கியா’
என கம்பநாட்டாழ்வரையே கற்பனையில் விஞ்சி
திருப்பெரம்புதூரில் தென்கொரியாவையே கொண்டான்!

அறக்கொடைகள் அம்மட்டோ!

வேளாண்வகை ஏரிகள் மாற்றி
பெப்சி, கோக்குக்கு சதுர்வேதி மங்களங்கள்!

திருவண்ணாமலை வேடியப்பன் மலையை எடுத்து
‘ஜிண்டால்’ கம்பெனிக்கு தேவதானம்!

சிறுவணிகத்தை மடைமாற்றி
ரிலையன்சு டாட்டாவுக்கு இறையிலி.

பாலியல் கொலைகாரன் காஞ்சி சங்கரனுக்கு
சட்டமும் போலீசும் பிரம்மதேயம்…
அண்டி நிற்கும் வீரமணிக்கும்
அவ்வப்போது அறச்சாலாபோகம்!

இத்தனை ஆட்சிக்குப் பிறகும்
எஞ்சியிருக்கும் தமிழ்க்குடிக்கு
தனது வீட்டையே தானம் கொடுத்தார்!
இன்னும் கொடுப்பதற்காய்
தமிழ்நாட்டையே எடுத்துக் கொண்டார்!

சாதனைகள் சொல்ல
செப்பேடு போதாது…!

காவிரிக்கு குறுக்கேதான்
கல்லணை அமைத்தான் கரிகாலன்..
காவிர, முல்லைப்பெரியாறு இரண்டிலுமே
நீதிமன்றத்திலேயே அணையைக்கட்டி
பிரச்சினை நிரம்பி வழியாமல்
பார்த்துக் கொண்டவர் கருணாநிதி!

பாடிச் சொரிந்த புலவர்க்கு மட்டும்
மதுவை ஊற்றிக் கொடுத்தனர்
பழைய வேந்தர்கள்,
வாடிக்கிடக்கும் தமிழரையே
டாஸ்மாக்கால் ஈரப்படுத்தி
‘குடி’மகன்களை பாடவைத்துத்
தமிழ் வளர்த்தவர் தானைத் தலைவர்!

ஊனாடும்
ரோமாபுரி அடிமைப் பெண்களை
அந்தப்புரத்தில் ஆடவைத்து
தான்மட்டும் கண்டுகளித்தனர்
பழைய மன்னர்கள்

‘மானாட மயிலாட’ என
மற்றவரையும் பார்க்க வைக்கும்
தமிழினத் தலைவரின் பரந்த உள்ளத்தை
கலைஞர் தொலைக்காட்சி பறைசாற்றும்!
மழலையர் உதடுகளில் ஆங்கிலம் வளர்த்து
பெயர்ப்பலகையில் மட்டும் தமிழ் வளர்க்கும்
தந்திரம் முன்
பராந்தகச் சோழனே பயந்து போவான்!

‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்’ எனப் புலம்பி
ஊரறிய அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் போட்டுவிட்டு
சத்தம் போடாமல் உச்சநீதிமன்றத்தில்
பார்ப்பன மனுநீதிக்கு பங்கம் வராமல் பாதுகாக்க
அந்த முள்ளை எடுத்தே வேலிகட்டும்
இரண்டகத் திறமையில்
பார்ப்பன குலமே மயக்கமுறும்!

இயற்றமிழ் அழகிரி
இசைத்தமிழ் கனிமொழி
நாடகத்தமிழ் தளபதி
என முத்தமிழையும் வளர்த்து
தமிழ்நிலத்தை மொத்தமாய் வளைக்க
முயலும் திறமை முடியுமோ யாராலும்?

பிறப்பொக்கும் இவர் பேரன், பேத்தி
வாரிசு வரைக்கும்
மதுரை தினகரன் அலுவலகத்தில்
கொலையான ஊழியர்கள்
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமைகள்!
இருப்பினும் வாழும் வள்ளுவர்…

திருவள்ளுவர் அதிகாரங்களுக்கு மட்டுமல்ல,
அழகிரியின் அதிகாரத்திற்கும்
உரையெழுதும் திறமுடையார்!

இலக்கியக் கவர்ச்சிக்கு கண்ணகி
அரசியல் கவர்ச்சிக்கு குஷ்பு
அகமும், புறமும், மணிமேகலை,
சிலப்பதிகாரம், குண்டலகேசியுடன்
‘சின்னத்தம்பி படத்தையும்’ சேர்த்து
தமிழ்ப்பெருமை உருவாக்க தயங்காதார்!

வழிபாட்டுக் கருவறையில்
தமிழன் நுழைய முடியவில்லை..
வழக்காடு மன்றத்தில்
தமிழ் நுழைய முடியவில்லை..
என்னடா இது வீண் இரைச்சல்
என்று சாலையைப் பார்த்தால்…

கூஜாக்கள் குலுங்க…
ஜால்ராக்கள் சிணுங்க…
கோடம்பாக்கத்து காக்கைகள்
குறிபார்த்துக் கரைய…
பல்கலை நரிகள் பாசாங்கு முழங்க…
கரைவேட்டி முதலைகள்
மத்தளம் கொட்ட
வயிற்றெரிச்சலோடு
கொடநாட்டு மதயானை பிளிற…
களைகட்டுகிறது கருணாநிதிச் சோழரின்
கோவையலங்காரம்…

பேச்சு மறுக்கப்பட்ட
கோவை சிறுதொழில் உதடுகளில்
அறுந்து கிடக்கும்
ஓசையற்ற கைத்தறியில்
இறந்து கிடக்குது நம் தாய்மொழி…

தமிழகத்தை உய்ப்பிக்க
உழைக்கும் மக்களிடமிருந்து
உருவாக வேண்டும் ஒரு செம்மொழி…

- துரை. சண்முகம்

Sunday, June 20, 2010

நமது அடையாளம் தமிழரா? அல்லது திராவிடரா?- கருத்தரங்கம்

ஒரு பக்கம் உலக தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் மாநாடு நடத்தி கொண்டே இன்னொரு பக்கம் தமிழர்களுக்கு என்று தனி அடையாளம் கிடையாது என்ற மிகப்பெரிய வரலாற்று பிழை நிறைந்த கருத்தை தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

திராவிடமே நமது அடையாளம் தமிழ் அதில் உள்ளடக்கம் என்ற தமிழ் இன அழிப்பு கருத்தை வெளியிடுகிறார். எனவே நமது அடையாளம் தமிழரா? அல்லது திராவிடரா? என்பதைபற்றி ஒரு ஆழமான, அறிவு சார்ந்த விவாதம் துவக்கப்பட நேரம் வந்துவிட்டது.

சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, கோயமுத்தூர், சேலம், விழுப்புரம் ஆகிய முக்கிய நகரங்களில் கருத்தரங்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சூன் 21 ஆம் நாள் திங்கள் கிழமை மாலை 6.00 மணிக்கு சென்னையில் தி.நகர் 31, வெங்கட்நாராயண சாலை, சி.டி.நாயகம் தியாகராயநகர் உயர்நிலைப் பள்ளியில் முதல் கருத்தரங்கம் மருத்துவர் க.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற உள்ளது.

இதில் புலவர் புலமைபித்தன், மா.இலெ.தங்கப்பா பெ.மணியரசன், புலவர்.கி.த.பச்சையப்பன், இயக்குனர். புகழேந்தி தங்கராஜ், இதழாளர் அய்யநாதன் உட்பட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். தமிழ் ஆர்வலர்கள் இந்த கருத்தரங்கில் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
--

Saturday, June 19, 2010

எங்கள் பிணங்களின் மீதுதான் செம்மொழி மாநாடு நடக்கும்…

மதுரையில் 10வது நாளாக உண்ணாவிரதம் இருந்த பகத்சிங், நடராஜன், ராஜேந்திரன், பாரதி, எழிலரசன் மற்றும் ராஜு ஆகியோரை எப்போதுமே வழக்கறிஞர்களை காவல்துறையினரை வைத்து ஒடுக்குவதை வழக்கமாகக் கொண்ட கருணாநிதியின் காவல்துறை நேற்று இரவு, ஒரு பெரும் படையோடு எஸ்.பி.மனோகரன் தலைமையில் கைது செய்திருக்கிறது.

சொந்த மகன் பாராளுமன்றத்தில் தமிழ் பேச முடியவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை. ஆனால் தமிழுக்கு செம்மொழி மாநாடாம்… இந்த வெட்கங்கெட்டவர்களை என்னவென்று சொல்வது. இதில் ஒரு வாரம் இருமுறை பத்திரிக்கை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பிதழ் செவ்வாயன்றே கடைகளில் கிடைக்கும், அதே விலைக்கு இரண்டு புத்தகங்கள் என்று விளம்பரம் வேறு செய்கிறது என்றால் இந்த வெட்கங்கெட்டவர்களின் கூட்டணி எவ்வளவு விரிவானது என்று பாருங்கள்.

இந்த லட்சணத்தில் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பாம். சிறப்பு தற்செயல் விடுப்பு என்றால் என்ன தெரியுமா ? ஐந்து நாட்கள் விடுமுறை என்பதற்கு மறு பெயர். வெள்ளிக்கிழமை ஒரு மணி நேரம் பெண்கள் மட்டும் தாமதமாக வரலாம் என்று ஜெயலலிதா அரசாங்கம் வெளியிட்ட ஒரு முட்டாள்த்தனமான அரசாணையை இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த அனுமதி எதற்கென்றால், பெண்கள் வெள்ளிக்கிழமை தான் தலைக்கு குளிப்பார்களாம். இதன் காரணமாக உரிய நேரத்திற்கு அலுவலகத்திற்கு வர முடியாது என்பதால் ஒரு மணி நேரம் தாமதமாக வரலாம் என்ற இந்த ஆணையை பயன்படுத்திக் கொண்டு, 10 மணி அலுவலகத்திற்கு 12 மணிக்கு வரும் பெண் அரசு ஊழியர்களை எனக்குத் தெரியும். இப்படிப் பட்ட அரசு ஊழியர்களுக்கு, 5 நாள் சிறப்புத் தற்செயல் விடுப்பு அளித்தால் அரசு நிர்வாகம் முடங்கிப் போய் விடாதா ?

அப்படி அரசு நிர்வாகத்தையே முடக்கி விட்டு இப்படிப் பட்ட ஒரு செம்மொழி மாநாடு தேவையா ?

தான் முதுகு சொறிந்து கொள்வதற்கும் இது வரை கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாக்களின் தொகுப்பாக நடைபெறப் போகும், செம்மொழி மாநாட்டுக்க நமது வரிப்பணம் 400 கோடி…..

இதர நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட உரிமை உண்டு. இதற்கான சட்டம் 1956ல் வந்தது. இதன் காரணமாக, மாவட்ட நீதிமன்றங்களிலும் மற்ற நீதிமன்றங்களிலும், கிராமத்துப் பின்னணியில் இருந்து வரும் வழக்கறிஞர்கள், எளிமையாக தமிழிலேயே வாதாடி வருகின்றனர்.

ஆனால், இந்தியாவில், எல்லா கீழமை நீதிமன்றங்களிலும் நியாயம் கிடைத்து விடுகிறதா என்ன ? உயர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய தேவை இருக்கிறதல்லவா ? இங்கேதான் வருகிறது சிக்கல். கிராமங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற நீதிபதி ஆவது கனவில் கூட நடக்காதே … சென்னை உயர்நீதிமன்றத்தில் நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக் கொண்டு, நீதிபதிகளின் பின்னே காவடி தூக்கும் வழக்கறிஞர்கள் தானே உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகிறார்கள்.

மதுரையிலோ, தேனியிலோ தமிழில் வழக்கு நடத்தும் வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற நீதிபதி ஆக முடியுமா ? அவ்வாறு முடியாத பட்சத்தில் நீதிபதிகளாக வந்து அமர்பவர்கள் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் பிரபு வம்சத்தினர் தானே ? அவர்கள் எப்படி தமிழில் வாதாடுவதை விரும்புவார்கள் ? இதனால்தான், 1956ல் ஆட்சி மொழியாக தமிழ் அறிவிக்கப் பட்டாலும் இன்று வரை உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை.

மொழியினால் ஆட்சிக்கு வந்த திமுக, உயர் நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும் என்றால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறது. தமிழ் மொழியினால் ஆட்சிக்கு வந்த திமுக தமிழ் மொழிக்காக பட்டினிப் போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்களை காவல்துறையை வைத்து கைது செய்வது எப்படிப் பட்ட காலத்தின் கோலம் ?

காமராஜர் கொண்டு வந்த மொழிச் சட்டத்தை செயல்படுத்துவதற்கு கூட கருணாநிதிக்கு வலிக்கிறதென்றால், தமிழின் பெயரால் ஆட்சி நடத்திக் கொண்டு தமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்தும் கருணாநிதி, ஆன்மீகத்தின் பேரால் மோசடி செய்த சுவாமி நித்யானந்தாவை போன்றவர் தானே ? நித்யானந்தாவுக்கு ஆன்மீகம் கருணாநிதிக்கு தமிழ்.
வழக்கறிஞர்கள் கேட்பது நியாயம் தானே ?

சட்ட மேலவையை ஒரு வாரத்தில் கொண்டு வர முடிந்த கருணாநிதியால், உயர்நீதிமன்றத்தில் தமிழை கொண்டு வர முடியாதா ? மத்திய அரசில் முக்கிய கூட்டணித் தலைவராக இருக்கும் கருணாநிதி உண்மையில் தமிழை நேசிப்பவராக இருந்தால் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமா இல்லையா ?
கருணாநிதியின் நடவடிக்கைகளை பாருங்கள். இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் படுகொலை என்றால் கடிதம். ஈழத் தமிழரை காப்பாற்ற வேண்டுமென்றால் கடிதம். உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழி என்றால் கடிதம். பெட்ரோல் விலையை கூட்டக் கூடாது என்றால் கடிதம். இதற்கெல்லாம் கடிதம்.

தன்னுடைய மகனுக்கும், மகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் மந்திரி பதவி வேண்டுமென்றால் மட்டும் தள்ளுவண்டியில் டெல்லி செல்வாராம். எப்படி இருக்கிறது முத்தமிழ் அறிஞரின் தமிழ் உணர்வு ?

இந்தக் கருணாநிதியை நம்பினால் எந்த முன்னேற்றமும் நடக்காது என்பதை நன்கு உணர்ந்த மதுரை வழக்கறிஞர்கள், கடந்த ஏப்ரல் மாதம் இதேபோல் பட்டினிப் போரட்டம் நடத்திய வழக்கறிஞர்களிடம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளைப் பதிவாளர், மதுரைக் கிளையின் பெயர்ப் பலகை மூன்று நாட்களில் மாற்றப் படும் என்று உத்தரவாதம் அளித்தனர். ஆனால் இன்று வரை பெயர்ப்பலகை கூட மாற்றப் படவில்லை என்றால், அந்த வழக்கறிஞர்களுக்கு போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு என்ன வழி ?

பகத்சிங். மதுரையில் பட்டினிப் போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்களை தலைமையேற்று நடத்தி இன்று கைதாகி இருப்பவர். கொள்கை பிடிப்பானவர். கொண்ட நோக்கத்தில் உறுதியானவர். போராட்டத்தையே தன் வாழ்க்கை பாதையாக எடுத்துக் கொண்டவர். சமூகத்தின் பல்வேறு சீரழிவுகளை நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வந்து நிவாரணம் பெற்றுத் தந்தவர். தமிழ் மற்றம் தமிழகத்தின் உரிமைகளுக்கான போராட்டங்கள் அனைத்திலும் முன்நிற்பவர். மேலவளவு கொலை வழக்கில் பாதிக்கப் பட்ட தலித் மக்களுக்கு நியாயம் கிடைப்பதில் பெரும் பங்கு வகித்தவர்.

பத்து நாட்களாக தண்ணீரை மட்டுமே அருந்தி போராட்டம் நடத்தியவரை நேற்று இரவு கருணாநிதியின் காவல்துறை வலுக்கட்டாயமாக ஆம்புலன்சில் ஏற்றி கைது செய்தது. கைதாவதற்கு முன் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பகத் சிங் சொன்னது என்ன தெரியுமா ?

“எங்களது இந்த போராட்டம் சிறையிலும் தொடரும். எங்கள் இந்த கோரிக்கை நிறைவேறும் வரை போரட்டம் தொடரும். வழக்கறிஞர் சமூகம் இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். கருணாநிதியின் இந்த அடக்கு முறைக்கு அஞ்ச மாட்டோம். தமிழ் மொழிக்காக எங்களது உயிரைக் கொடுப்பதில் எங்களுக்கு இன்பமே.

உயர்நீதிமன்றத்தில் இல்லாத தமிழுக்கு எதற்கு மாநாடு ? எங்களின் பிணங்களின் மீதுதான் செம்மொழி மாநாடு நடக்கும். வலுக்கட்டாயமாக எங்களுக்கு உணவு கொடுக்க முயற்சித்தால், அதை எதிர்ப்போம். இதிலிருந்து அணுவளவும் பின் வாங்க மாட்டோம்” என்று சிங்கம் போல கர்ஜித்தார்.

இப்படி ஒரு உறுதியோடு, உயிரையும் இழக்கத் தயாராக ஒரு கூட்டம் இருக்கையில் கருணாநிதியும் அவர் காவல்துறையும் என்னதான் செய்து விட முடியும் ?

என் அன்பான சவுக்கு வாசகர்களே…. புலம் பெயர்ந்த தமிழர்களே…. முதன் முதலாக உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.

இந்தப் பதிவை உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கும் அனுப்புங்கள். குறிப்பாக செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளும் அறிஞர்களுக்கு அனுப்புங்கள். அல்லக்கைகளுக்கு அனுப்பாதீர்கள். அவர்கள், கருணாநிதி தலையிலிருந்து ஒரு மயிர் உதிர்ந்து விழுந்து, மயிர் இழந்த கவரிமான் என்று கருணாநிதிக்கு ஒரு பாராட்டு விழா நடந்தால் கூட முண்டியடித்துக் கொண்டு முன் வரிசையில் உட்காருவார்கள்.

ஆகையால், தமிழ் உணர்வாளர்களுக்கும் மனசாட்சி உள்ளவர்களுக்கும் இதை அனுப்புங்கள். செம்மொழி மாநாடு என்னும் கருணாநிதியின் பாராட்டுக் கூட்டங்களின் தொகுப்பு விழாவை, புறக்கணியுங்கள். இதுதான் நீங்கள் தமிழுக்கு செய்யும் மகத்தான சேவை. இந்த வேண்டுகோளை நீங்கள் நிராகரிக்காமல் செய்து முடிப்பீர்கள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. சவுக்கு வாசகர்களல்லவா நீங்கள் ?

திராவிடம் வீழ்த்திய தமிழ் தேசியம்-கட்டுரை 1

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன.மாநாடு துவங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாநாட்டை ஊதிப்பெருக்கி கூட்டம் சேர்க்கும் வேலையும் துவங்கி விட்டது,மாநாட்டிற்காக தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் பள்ளிகள் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடு துவங்குவதற்கு 400 கோடி ரூபாய் என ஒதுக்கப்பட்ட தொகை இப்போது 600 கோடியாக உயர்ந்து விட்டது,மாநாடு முடிவதற்குள் இன்னும் எத்தனை கோடிகளை தாண்டுமோ? அதில் எத்தனை கோடிகள் உண்மையில் மாநாட்டிற்கு செலவளிக்கப்படுமோ அது உலகத் தமிழினத் தலைவருக்கு மட்டுமே தெரிந்த வெளியிடப்படாத ரகசியம் .

மாநாட்டிற்காக பல கோடி ரூபாய் செலவில் 3 ஆயிரத்திற்கும மேலான குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதிகள கோவை நகரம் மட்டுமல்ல மாவட்டம் முழுவதும் பள்ளிகள் கல்லூரிகளில் மாநாட்டிற்கு வருபவர்கள் தங்குவதற்காக ஏற்பாடுகள்.இதற்காக மாவட்டம் முழுவதும் அலைந்து திரிந்த அதிகாரிகள்.ஊடகவியலாளர்களுக்கு பயணத்தில் துவங்கி வசதியான தங்கும் இடங்கள் என முழுமையான ராஜ உபசரிப்பு. ஏனெனில் மாநாட்டின் வெற்றியே ஊடகங்களை நம்பித்தான் உள்ளது..இத்தனைக்கும்மேலாக மாநாட்டின் மைய நோக்க பாடல் என்ற பெயரில புகழ் பெற்ற இசையமைப்பாளர் ரஹமானின் இசையில் மேற்கத்திய நடனங்களுடன் தமிழ் செம்மொழியாம் என்ற ஒரு பாப் பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.அந்த பெயருக்கு சில தமிழர்களும் பாடலில் சௌடிராஸடிரா ,தெலுங்கர்கள் மலையாளிகள் என பலரும் பாடுகிறார்கள்.இதை இயக்கியது கௌதம் மேனன் என்ற( ஆங்கில படங்களை உல்டா செய்யும் )மலையாள இயக்குநர்.இந்த பாடல் தமிழகத்தின் சந்துககளிலும் தெருக்களிலும் மூலைமுடுக்குகளிலும் ஒலிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் இப்பாடலைக்கேட்க இந்த பிறவியில் கொடுத்து வைத்தவர்கள் ஆகிறார்கள்.

மாநாட்டிற்கு வரும் உலகத் தமிழர்களுக்கு அருசுவை உணவு வேண்டாமா?அதற்கு சங்க தமிழ் வரலாற்றில் உள்ளது போல் உணவு வகைகளும் தயாராகின்றன.இதை விட மனனர் காலத்திலுள்ளது போல் தேனும் தினைமாவும் போன்று இனிப்பு வகைகள் வேறு. இதைத் தயாரிக்க தனியார் இனிப்பு தயாரிக்கும் வணிக நிறுவனத்துடன் கோடி ரூபாய் மதிப்புகளில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது .சங்க கால இனிப்புகளை பற்றி ஆராய அந்த தனியார் கம்பெனி ஆராய்ச்சியாளர்கள் குழு ஒனறையும் நியமித்துள்ளது.அக்குழுவின் ஆராய்ச்சிகளும் நாளுக்கு நாள் முன்னேறி வருவதாக கலைஞர் தொலைக்காட்சி செய்திகள் அறிவிக்கின்றன.

மாநாடு துவங்கும் பல மாதங்களுக்கு முன்னரே ஜால்ராக்களின் சத்தம் காதைப்பிளக்க துவங்கி விட்டது.கலைஞர் மானசீகமாக நேசிக்கும் இந்த ஜால்ராக்களில் பல வகைகள உள்ளன. கருணாநிதி எப்போதுமே ஜால்ராக்களையும் துதிபாடிகளையும் அவரது குடும்பத்தைப்போல மானசீகமாக நேசிப்பவர் அல்லவா?.அது அவரது தனிப்பட்ட உளவியல். இந்த உளவியலை சற்று ஆராய்வோம். முதியவர்களும் குழந்தைகளும் ஒரே மாதிரிதான் உளவியல் கொண்டிருப்பார்கள் அதாவது தன்னை இடைவிடாமல் யாராவது புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று குழந்தைகள் எதிர்பார்க்கும் .முதியவர்களும் அதே மாதிரி உளவியலைத்தான் கொண்டிருப்பர் எனறு உளவியல் நிபுணர்கள கூறுவார்கள். ஏறக்குறைய ஓய்வெடுக்க வேண்டிய வயதையும் தாண்டி உள்ள கலைஞர் அப்படிப்பட்ட மனநிலையில் உச்சத்தில்தான் இருந்து வருகிறார். எப்போதுமே தன்னை இராஜ ராஜ சோழனாக பாவித்துக்கொள்ளும் அவர் எல்லா விளம்பரங்களையும் அதே போல் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்துள்ளார. தனி நபர் துதியிலும் சுயமோகத்திலும் அவர் தன்னை சோழ பரம்பரையினராக சித்தரித்துக்கொள்வதும உடமை வர்ககங்களின் மாட்சிமை தாங்கிய மன்னர் மரபுகளிலும்,நிலவுடமை மரபுகளிலும் ஊறித்திளைத்தபடி நாள்தோறும் நாளிதழ்களில் அளிக்கும் விளம்பரங்களே அதற்கு சான்று .மாநாட்டு முதல் அறிவிப்பு விளம்பரமே இப்படித்தான் துவங்கியது,செம்மொழியாம் தமிழ்த்தாய்க்கு முத்தமிழ் தலைமகனாம் கலைஞர்எடுக்கும் ஒரு விழா .உலகத் தமிழர் கூடும் விழா.நாள்தோறும் ஒளவையார் வாயிலாகவோ என்றோ கம்பன் வாயிலாகவோ என்று துவங்கி எம் தமிழ் எம்மொழி எம்மான் கலைஞர் தம்மால் சிறப்புற்ற செம்மொழி வாழிய வாழியவே என்று தான் முடிகின்றன.திட்டமிட்டே அரசு விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.இதற்கு மேலும உதாரணங்கள் வேண்டுவோர்தமிழகத்தின் நகரங்களில் திரும்பும் இடமெல்லாம் இந்த விளம்பரங்களில்தான் முட்டிக்கொள்ள வேண்டும் என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம். இந்த செம்மொழி மாநாடும் அதற்காக நடத்தப்படுகிறது என்று அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.கருணாநிதியின் அரசியல் எதிரிகளின் கணிப்பு இப்படித்தான் உள்ளது.(கருணாநிதியை பொறுத்தவரை விமர்சித்தாலே எதிரிதான் .ஏனெனில் பாராட்டுபவன்தான் நண்பன் விமர்சித்தால் எதிரி என்ற ஓட்டுக்கட்சிகளின் பண்பாட்டில் பல பத்தாண்டுகளாக ஊறித்திளைத்தவர் அல்லவா? ஆனால் அதையும் தாண்டி பல நோக்கங்கள் இந்த மாநாட்டிற்கு உள்ளன.முதலில் எதற்காக எந்த சூழ்நிலையில் செம்மொழி மாநாடு நடத்தப்படுகிறது?

15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த போதிலும் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது குறித்து எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை.தமிழ் மாநாட்டின் அதிகாரப்பூர்வமான அமைப்பான உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் கருணாநிதியின் மாநாட்டை அங்கீகரிக்க மறுத்ததோடு அதைப்புறக்கணிககப்போவதாக அறிவித்தும் உடனே தமிழ் செம்மொழி மாநாடு என்று மாற்றிக்கொண்டு ஏன் நடத்த துடிக்கிறார்.அது சரி தமிழ் மீது இத்தனை ஆண்டுகளாக இல்லாத அக்கறை இப்போது ஏன்? காரணம் அனைவரும் அறிந்ததுதான் .அவர் ஈழத்தமிழருக்கு செய்த மறக்கவோ மன்னிக்கவோ முடியாத துரோகத்தை மறைப்பதற்குத்தான்.

ராஜ பக்சே அரசு புலிகள் மீது போர் தொடங்கியதிலிருந்தே இந்தியாதான் போரை திட்டமிட்டு வழிநடத்தியது.இது கருணாநிதியின் தலைமையிலான தமிழக அரசின் உதவியோ ஒத்துழைப்போ இன்றி சாத்தியமே இல்லை.இந்திய அரசு ஈழத்தமிழரை ஒழிக்க முன்வந்ததற்கு ஏற்பட்ட துணிச்சல் கலைஞர் இந்தியஅரசுக்கு நூற்றுக்கு நூறு துணை நின்றதால்தான் வந்தது.

கருணாநிதியின் திசை திருப்பும் முயற்சிகளையும் அடக்குமுறைகளையும் மீறி போர் நிறுத்த கோரிக்கை வலுவடைந்தபோதும் தன்னெழுச்சியாக ஒரே சமயத்தில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்த போதும் அதை அடக்குவதற்குஅவர் பல தந்திரங்களை கையாண்டார். போராட்டங்கள் எல்லை மீறிச் சென்ற போது அவரும் ஈழப்போர் நிறுத்ததிற்கு ஆதரவளிப்பதாகக் கூறி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்.மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினார்.அதே சமயத்தில் இதில் கலந்து கொள்ளாத காங்கிரசாரை யாரும் அம்பலப்படுத்தாமல் பார்த்துக்கொண்டார்.அந்த நேரத்தில் ஈழப்போர் நிறுத்தப்போராட்டங்களில் தன்னெழுச்சியாகவும் அதே சமயத்தில் போர் குணமிக்கதாகவும் நடத்தப்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டங்கள் கட்டுக்கடங்காமல் செல்லத்துவங்கின.காங்கிரஸ் தலைவர்கள் துரோகிகள் என குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் இல்லங்களிலும் அலுவலகங்களிலும் வழக்கறிஞர்களினால் தாக்கப்பட்டனர். அதுவும் முத்துகுமாரின் தியாக மரணத்தின்போது அவர் எழுதிய கடிதமும் கருணாநிதியை முழுமையாகஅம்பலப்படுத்தின.இதனால் வழக்கறிஞர்களை ஒடுக்குவதற்கு ஈவு இரக்கமின்றி நசுக்கிய விதம் இதுவரை வரலாறு காணாத சாணக்கியத்தனம் ஆகும் .வழக்கறிஞர்கள் எங்கு அதிகாரமுள்ளவர்களாக உணருகின்றனரோ அங்கேயே நீதிமனறத்திலேயே போலீசை அத்து மீறி நுழையச் செய்து கொடூரமாக நசுக்கினார்.போராட்டங்களின் தீவிரம் அதிகரித்த போது போரின் உச்சகட்ட நாட்களில் சாகும் வரை உண்ணாவிரதம் என்ற பெயரில் இருபுறமும் மனைவியரும் குளிரூட்டும் சாதனங்களும் இருக்க,கடற்கரையில்அண்ணா சமாதிக்கருகே போய் படுத்துக்கொண்டார்.தனது உண்ணாவிரதத்தால் போர் நிறத்தம் ஏற்பட்டதாக சிதம்பரம்கூறினார் என்று படுகேவலமான பொய்யை கூறினார்.இப்படி கூறப்பட்டதும் அது ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் அதைவிடபெரிய அதிர்ச்சி.

அந்த நிலையிலும் போரை நிறுத்தாவிட்டால் கருணாநிதி காங்கிரஸ அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வார் தனது பதவியை துறப்பார் என்றெல்லாம் தமிழ தேசிய இயக்கங்களினால் அப்பாவித்தனமாக எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் கருணாநிதி ஈழம்மலருவதற்கு உத்திரவாதம் தந்தால் பதவி விலகுவேன் என்று அவர்களது முகத்தில் திருப்பி அடித்தார்.முதலாவதாகஅப்படிப்பட்ட தியாகம் செய்வாரென்று எந்த வித அரசியல் பார்வை இல்லாதவர்களால் மட்டுமே எதிர்பார்க்க முடியும்.தனது வாரிசுகளின் பதவிகளுக்காக எந்த அளவுக்கும் செல்வார் என்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. போர் முடிந்ததும் அழகிரியின் அமைச்சர் பதவிக்காக நேரில் டெல்லி சென்றார்.ஆனால் ஈழப்போரை நிறுத்துவதற்கு எங்கும் செல்லவில்லை.உடல் நலமில்லை என்பது காரணமாக காட்டப்பட்டது.தள்ளாத வயதிலும் தள்ளுவண்டியில ¢டெல்லியில் சென்று பதவிபிச்சைகேட்டு மன்றாடியதைக் கண்டு தமிழக தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த காரிய வாதம் மிகவும் கொடூரமானதாக வெளிபபடுத்தியது என்னவெனில் தமிழர்களை ஒழிக்க இந்தியா இலங்கை அரசுக்கு பயிற்சி கொடுத்த போது தமிழகத்தில் எழுச்சி வராமல் பார்த்து கொண்டதற்கும் ஒத்துழைப்பு கொடுத்தார் அந்த ஒத்துழைப்பிற்கான சன்மானம்தான் அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி.இதனால் இவர் போலியாக படம் காட்டி வந்த உலகத் தமிழினத் தலைவர் பிம்பம் சுக்கு நூறாகியது .

இந்த சேதமடைந்த அம்பலப்பட்ட பிம்பத்தை தான் சாவதற்குள் நிமிர்த்தி விடவேண்டும் என்பதற்காகத்தான் பல கோடி செலவில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.அது மட்டுமின்றி இன்னொரு இலவச இணைப்பாக அவர் தமிழர்களுக்கு தரக்கூடிய பரிசு அவர்வாரிசுகளை அதிகாரப்பூர்வமாக மேடையில் ஏற்றி உலகத் தமிழ் அறிஞர்களிடம் (தமிழக மக்கள் எப்போதே ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டனர என்பதற்கு வேறு விடயம்) ஏற்றுக் கொள்ள வைப்பதற்குத்தான்.

ஆனால் எவ்வளவோ குலை அறுத்து உயிர் பறிக்கும் துரோகங்கள் கருணாநிதியால் இழைக்கப்பட்டிருந்தாலும் தமிழின் மீதுள்ள பற்றின் காரணமாக இம்மாநாட்டின் மூலமாக தமிழுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்பதை சிலர் நம்புகின்றனர்.அவர்கள் தமிழகத்தில் தமிழரின் தமிழின் நிலையை அறிய சில விபரங்களை மட்டும் பரிசீலிக்க வேண்டுகிறோம்.தமிழன் வாழ்ந்தால் தான் தமிழ் வாழும் .ஆனால் தமிழன் வாழ்வதற்கு எந்த வழியும் இல்லாத நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வேலை இல்லாத்திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது.இந்தியாவின் அதிகமான வேலையில்லாதோர் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது.பணியில் இருப்போர் எண்ணிக்கை 1971-1981ல் 2.58விழுக்காடாக இருந்தது 1981-1991ல் 1.83ஆக குறைந்து விட்டது.ஆட்குறைப்பு அடிப்படையிலான வளர்ச்சி (jobless growth)என்ற உலகமயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பட்டதிலிருந்து. இந்த நிலை ஏற்பட்டதை பார்க்கலாம்.1996-1997ல் 28.இலட்சத்து 27 ஆயிரம் பேர் வேலை இல்லாதோர் எண்ணிக்கை.இப்போது 75இலட்சத்தை தாண்டி விட்டது.

இந்தியாவிலேயே பன்னாட்டுக்கம்பெனிகளும் தேசங்கடந்த தொழிற்கழகங்களும் அமைதியாக தொழில் நடத்தக்கூடிய இடமாக தமிழகம் இருப்பதால் இன்னும் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கை கூடிய விரைவில் 1 கோடியை எட்டி விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.ஏனெனில் இந்த பன்னாட்டுக்கம்பெனிகள் உற்பத்தித் துறையை அல்ல வேலை வாய்ப்பு குறைவான சேவைத்துறைகளையே வளர்த்துள்ளன. (விவசாயத்திலும் உற்பத்தித் துறையிலும் வேலை வாய்ப்பானது 1971-1981 2,58 விழுக்காடாக இருந்தது 1981-91 டல 1.83 ஆக குறைந்து விட்டது) இது இப்படி இருக்க முதலில் அடிப்படையை பரிசீலிப்போம்.தமிழகத்தில்தாய்மொழிக்கல்வி என்பது ஏழை மக்களில் மிகவும் ஏழை மக்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களில்தான் உள்ளது.நடுத்தர வர்க்கத்தின் சொல்லாடலில் சொல்ல வேண்டுமானால் போக்கத்தவர் படிப்பதுதான் தாய்வழிக் கல்வி.தமிழ் மொழியில் படித்தவர்கள் சேரிவாசிகள்அல்லது ஒன்றுக்கும் வழியில்லாதவர்கள் என்ற நடுத்தர மற்றும் மேட்டுக்குடியினரின் பார்வைதான் அரசின் அதிகாரவர்ககத்தின் பார்வையாகவே உள்ளது.

தமிழ்மொழியில் கல்வி கற்றவர்கள் ,தமிழ் பட்டதாரிகள் தமிழ புலவர்கள் யாருக்கும் எந்த வேலை வாய்ப்பும் இல்லை.இதில் தஞ்சையில் வேலை இல்லாத தமிழ் புலவர்களின் சங்கமே செயல் பட்டு கொண்டிருக்கிறது.தமிழப் பட்டதாரிகள்வேலைகிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.இதில் தமிழிலில் முனைவர் பட்டம் படித்தவர்களின்நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாகவே உள்ளது.ஆசிரியர் வேலை வாய்ப்பைத் தவிர அவர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் இல்லை.கணிப்பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அளிக்கும் மிகுந்த முக்கியத்துவத்தின் காரணமாக கோமாளிகளாகவே பார்க்கப்படுகின்றனர்.

தலை நகரில் எப்போதுமே தமிழுக்கு இடமிருந்ததில்லை.சிங்காரச் சென்னையில் மட்டுமின்றி தமிழக நகரங்களில் துவங்கி குக்கிராமங்கள் வரை மொழிக்கலப்பின்றி தூய தமிழிலில் பேசினால் வேற்று கிரகப் பிராணிகளாக அவர்கள் பார்க்கப்படுவர்.இப்போதெல்லாம் எந்த தஞ்சைத் தமிழனும் மதுரைத் தமிழனும் சாப்பிடும்போது சோறு வேண்டும் என்று கேட்பதில்லை ரைஸ் போடுங்கள் என்றுதான் கேட்கிறான்.திராவிட இயக்கங்களின் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தும் அரசு ஆட்சி மொழியாக தமிழைக் கொண்டு வர இனனும் முடியவில்லை.மருத்துவம, பொறியியல் துவங்கி எந்த தொழில்சார்ந்த கல்வியிலும் தமிழிலில் இல்லை.அப்படி தமிழில் தேர்வு எழுதினால் அங்கீகரிக்கப்படுவதில்லை.தஞ்சையில் மருத்துவர் ஒருவரின் தேர்வு அங்கீகரிக்க மறுககப்பட்டதால் வழக்குத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.

தமிழர் பண்பாடோ சாகும் தருவாயில்தான் தனது இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறது.வேட்டி கட்டுவதற்கும் தமிழில் பேசுவதற்கும் , தமிழர் உணவு வகைகளை சாப்பிடுவதற்கும் பலநிறுவனங்களில் அனுமதி இல்லை. அரசு அலுவலகங்களில் போலீஸ் நிலையத்தில்,அரசு மருத்துவமனைகளில் வேட்டி உடுத்தி செல்லும் சாதாரண மககள இழிவான பிறவிகளாக நடத்தப்படும் விதமே இதற்கு சான்று.

தமிழர் பண்பாடு தமிழ் ஊடகங்களில் படும் பாடு சொல்லி மாளாது.இதற்கு தனி நூலே எழுதலாம் .பெயர்தான் தமிழ் ஊடகம் தவிர மற்ற எல்லாமும் ஆங்கிலத்தில்தான்.முழுமையாக ஆங்கில கலப்புடன் எப்போதாவது தமிழுடன் தான் நிகழ்ச்சிகள் அமைகின்றன.அரைகுறை உடைகளுடன் வந்து நின்று நிகழ்ச்சி வருணனையாளர்கள் இல்லாத தமிழ் தொலைக்காட்சிகள் காண்பது அரிது.கும்பல் கும்பலாக தொப்புள் ஆட்டம் இல்லாத தொலைக்காட்சிகள் இல்லை.சினிமாதான் 99 விழுக்காடு,.மீதி ஒரு விழுக்காடு ஏதாவது செய்தி நிகழ்ச்சியாக வரும்.வெள்ளைத் தோல் சிவப்பழகுதான் தொலைக்காட்சிகளில் வருவதற்கான தகுதி. கருத்ததமிழர்களுக்கும் உழைப்பாளிகளுக்கும் கிராமத்தினருக்கும் இங்கு இடமில்லை.சுருக்கமாக கூறினால் உழைத்து நசிவடைந்த அழுக்கு முகங்களுக்கு இங்கு இடமில்லை.தொலைக்காட்சிகளின் இச்சீரழிவு ஏகாதிபத்திய பண்பாட்டிற்கு வித்திட்டவர்களும் முன்னோடிகளும்உலகத்தமிழனத் தலைவர்களின் குடும்பத்தினர் நடத்தும் தொலைக்காட்சிகளதான் .இன்றும் தமிழனத் தலைவர் அவரே ரசித்து பெயர் சூட்டிய மானாட மயிலாட என்ற முழுமையான ஆபாச நிகழ்ச்சியை பார்க்காமல் தவறவிட்டால் வருந்துவாராம்.

இன்னொரு பக்கம் ஆங்கில ஏகாதிபத்தியவாதிகள் எப்போதே நாட்டை விட்டுபோனாலும் இன்னும் ஆட்சியாளர்களில் மூளைகளில் ஆங்கிலம்தான் ஆட்சி செய்கிறது .தமிழர் மனமோ ஆங்கில மோகம்தான் இயல்பாக உள்ளது. தமிழகத்தின் சோழ சக்ரவர்த்தியின் ஆட்சியில் வாரிசுகளுக்கு பட்டாபிசேகமும் முடிசூட்டுவிழவிற்கும் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது என்பது இப்போது அனைத்து குடிமக்களுக்கும் அறிந்த ஒன்று. ஒரு புறம் ஈழ நெருப்பு அணையாமல் கொதித்து எரிந்து கொண்டிருக்கிறது.ஏற்கனவே லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.மீதித் தமிழர்கள் வதைமுகாம்களில் மரணத்திற்காக காத்திருக்கின்றனர். தமிழுக்கும் தமிழருக்கும் வாழவுமில்லை வளமுமில்லை.இப்படி யதார்த்தத்தில் இல்லாத மரியாதையை தமிழுக்கு கனவுலகத்தின் மூலம் கட்டியமைக்க முயற்சிக்கிறார்கள். இவர்களே கனவுலகமான திரையுலயகலிருந்து வந்த இவர்களிடம் இருந்து வேறு எதையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?.

திருக்குவளையிலிருந்து வெறும் துண்டோடு வந்தவர் எப்படி ஆசியாவின் 23 ஆவது பணக்காரர் ஆனார்?திராவிட சித்தாந்தங்களினால் தமிழ் தேசியம் எப்படி சீர்குலைநது தோல்வி அடைந்தது? அடுத்த கட்டுரைகளில் பயணிப்போம்.