“தர்ம ஏகத் கலைஞர் தேவஸ்ய
கருணாநிதி ஸ்ரீமச்சாசனம்
ஊர்வச சிரோபபிஷசேகரி…”
இச்செப்பேடு
செப்புவது யாதெனில்,
“காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்!”
என்று ஈழத்தமிழர் கதறிய காலத்தே
பராக்கிரமத்தோடு சோனியாவுக்கு
விடாது கடிதமெழுதியதோடு,
அலைகடலோரம் நெடுஞ்சாண் கிடந்து
காலை உணவுக்கும், மதிய உணவுக்கும்
இடைப்பட்ட மணித்துளியில்
அன்ன ஆகாரம் உண்ண மறுத்து,
ஈழத்தமிழர் செத்த பின்பு
போரை நிறுத்திய ஒரே புறநானூற்றுத் தமிழன்
கருணாநிதிச் சோழனின்
மற்ற கைங்கர்யங்களாவன:
சோழநாடு சோறுடைத்ததைப்
பின்னுக்குத் தள்ளி
ஒரு ரூபாய் அரிசியாலேயே உடைத்தார்!
பகை முடித்தார்!
வண்ணத் தொலைக்காட்சி, காஸ் அடுப்பு,
மனை கட்ட உதவி, மணமகன் கட்ட உதவி,
மகப்பேறு உதவித்தொகை…
எனக் குடிதானம் ஏராளம்.
மக்களைத் தானாக வாழவிடாமல்
தடுத்தாண்ட சிறப்பிவைகள்.
மற்றபடி,
இடைத்தேர்தல் எதிர்ப்பட்டால்
வாக்காள பெருங்குடிக்கு
பொன்முடிப்பு தாராளம்!
காணியுடையோராய் இருந்த
தொல்குடிகள் நீக்கி,
காடு, மலை, நதியென
அந்நியப் பன்னாட்டுக் கம்பெனி
வேண்டுவன தட்டாமல் வழங்கும்
தகைமையில் விஞ்சுவாரின்றி
கருணையும், நிதியும் ஒன்றாய் ஆனார்!
யாதும் ஊரே; யாவரும் கேளிர்
ஹூண்டாயும், ஃபோர்டும் நம் உடன்பிறப்பே,
எனப் பன்னாட்டு உறவில் புது எல்லை கண்டான்!
அண்ணலும் ‘நோக்கியா’ அவளும் ‘நோக்கியா’
என கம்பநாட்டாழ்வரையே கற்பனையில் விஞ்சி
திருப்பெரம்புதூரில் தென்கொரியாவையே கொண்டான்!
அறக்கொடைகள் அம்மட்டோ!
வேளாண்வகை ஏரிகள் மாற்றி
பெப்சி, கோக்குக்கு சதுர்வேதி மங்களங்கள்!
திருவண்ணாமலை வேடியப்பன் மலையை எடுத்து
‘ஜிண்டால்’ கம்பெனிக்கு தேவதானம்!
சிறுவணிகத்தை மடைமாற்றி
ரிலையன்சு டாட்டாவுக்கு இறையிலி.
பாலியல் கொலைகாரன் காஞ்சி சங்கரனுக்கு
சட்டமும் போலீசும் பிரம்மதேயம்…
அண்டி நிற்கும் வீரமணிக்கும்
அவ்வப்போது அறச்சாலாபோகம்!
இத்தனை ஆட்சிக்குப் பிறகும்
எஞ்சியிருக்கும் தமிழ்க்குடிக்கு
தனது வீட்டையே தானம் கொடுத்தார்!
இன்னும் கொடுப்பதற்காய்
தமிழ்நாட்டையே எடுத்துக் கொண்டார்!
சாதனைகள் சொல்ல
செப்பேடு போதாது…!
காவிரிக்கு குறுக்கேதான்
கல்லணை அமைத்தான் கரிகாலன்..
காவிர, முல்லைப்பெரியாறு இரண்டிலுமே
நீதிமன்றத்திலேயே அணையைக்கட்டி
பிரச்சினை நிரம்பி வழியாமல்
பார்த்துக் கொண்டவர் கருணாநிதி!
பாடிச் சொரிந்த புலவர்க்கு மட்டும்
மதுவை ஊற்றிக் கொடுத்தனர்
பழைய வேந்தர்கள்,
வாடிக்கிடக்கும் தமிழரையே
டாஸ்மாக்கால் ஈரப்படுத்தி
‘குடி’மகன்களை பாடவைத்துத்
தமிழ் வளர்த்தவர் தானைத் தலைவர்!
ஊனாடும்
ரோமாபுரி அடிமைப் பெண்களை
அந்தப்புரத்தில் ஆடவைத்து
தான்மட்டும் கண்டுகளித்தனர்
பழைய மன்னர்கள்
‘மானாட மயிலாட’ என
மற்றவரையும் பார்க்க வைக்கும்
தமிழினத் தலைவரின் பரந்த உள்ளத்தை
கலைஞர் தொலைக்காட்சி பறைசாற்றும்!
மழலையர் உதடுகளில் ஆங்கிலம் வளர்த்து
பெயர்ப்பலகையில் மட்டும் தமிழ் வளர்க்கும்
தந்திரம் முன்
பராந்தகச் சோழனே பயந்து போவான்!
‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்’ எனப் புலம்பி
ஊரறிய அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் போட்டுவிட்டு
சத்தம் போடாமல் உச்சநீதிமன்றத்தில்
பார்ப்பன மனுநீதிக்கு பங்கம் வராமல் பாதுகாக்க
அந்த முள்ளை எடுத்தே வேலிகட்டும்
இரண்டகத் திறமையில்
பார்ப்பன குலமே மயக்கமுறும்!
இயற்றமிழ் அழகிரி
இசைத்தமிழ் கனிமொழி
நாடகத்தமிழ் தளபதி
என முத்தமிழையும் வளர்த்து
தமிழ்நிலத்தை மொத்தமாய் வளைக்க
முயலும் திறமை முடியுமோ யாராலும்?
பிறப்பொக்கும் இவர் பேரன், பேத்தி
வாரிசு வரைக்கும்
மதுரை தினகரன் அலுவலகத்தில்
கொலையான ஊழியர்கள்
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமைகள்!
இருப்பினும் வாழும் வள்ளுவர்…
திருவள்ளுவர் அதிகாரங்களுக்கு மட்டுமல்ல,
அழகிரியின் அதிகாரத்திற்கும்
உரையெழுதும் திறமுடையார்!
இலக்கியக் கவர்ச்சிக்கு கண்ணகி
அரசியல் கவர்ச்சிக்கு குஷ்பு
அகமும், புறமும், மணிமேகலை,
சிலப்பதிகாரம், குண்டலகேசியுடன்
‘சின்னத்தம்பி படத்தையும்’ சேர்த்து
தமிழ்ப்பெருமை உருவாக்க தயங்காதார்!
வழிபாட்டுக் கருவறையில்
தமிழன் நுழைய முடியவில்லை..
வழக்காடு மன்றத்தில்
தமிழ் நுழைய முடியவில்லை..
என்னடா இது வீண் இரைச்சல்
என்று சாலையைப் பார்த்தால்…
கூஜாக்கள் குலுங்க…
ஜால்ராக்கள் சிணுங்க…
கோடம்பாக்கத்து காக்கைகள்
குறிபார்த்துக் கரைய…
பல்கலை நரிகள் பாசாங்கு முழங்க…
கரைவேட்டி முதலைகள்
மத்தளம் கொட்ட
வயிற்றெரிச்சலோடு
கொடநாட்டு மதயானை பிளிற…
களைகட்டுகிறது கருணாநிதிச் சோழரின்
கோவையலங்காரம்…
பேச்சு மறுக்கப்பட்ட
கோவை சிறுதொழில் உதடுகளில்
அறுந்து கிடக்கும்
ஓசையற்ற கைத்தறியில்
இறந்து கிடக்குது நம் தாய்மொழி…
தமிழகத்தை உய்ப்பிக்க
உழைக்கும் மக்களிடமிருந்து
உருவாக வேண்டும் ஒரு செம்மொழி…
- துரை. சண்முகம்
Monday, June 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment