Monday, June 7, 2010

இலங்கை இந்திய அரசுகளின் முதற்தோல்வி எதிர்வரப் போகின்ற பல தோல்விகளின் ஆரம்பமா?

இலங்கையில் ஜுன் 3 முதல் 5 வரை நடைபெற்ற ஒஸ்காருக்கு நிகரான 11வது சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் அதன் தூதுவரும் பிரபலமான நடிகருமான அமிதாப்பச்சன் கலந்து கொள்ளாதது “மணமகன் இல்லாத திருமணத்தைப் போல அதனை ஆக்கி விட்டுள்ளது” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான றோஸி சேனநாயக்கா வர்ணித்திருக்கிறார்.

தாங்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளாமைக்கான வேறுவேறு காரணங்களைப் கூறி பொலிவூட்டின் பிரலமான சுப்பர் ஸ்டார்கள் அனைவரும் இந்த விழாவைப் பகிஸ்கரித்து விட்டிருக்கின்றனர்.

இதன்காரணமாக உலகம் முழுவதும் அண்மையில் நடைபெற்ற விழாக்களில் மிகவும் சர்ச்சைக்குரியதாகவும் அதேவேளையில் களையிழந்த ஒரு விழாவாகவும் இது மாறி இருக்கிறது.

ஆரம்பத்தில் இந்த விழாவை இலங்கையில் நடத்துவது என்ற முடிவில் இலங்கை வெற்றி பெற்றிருந்தது. அந்த வெற்றிக்கு இந்தியா பிரதான பங்காற்றியிருந்தது. இந்த விழாவை நடாத்துவதனூடாக ஐந்து பிரதான இலக்குகளை அடைய இலங்கை திட்டமிட்டிருந்தது.

முதலாவது சர்வதேச ரீதியாக உள்ள இலங்கை மீதான அபகீர்த்தியை இல்லாதொழித்து நற்பெயரை நிலைநாட்டுவது.

இரண்டாவது, கடந்த 3 வருட காலப் போரினால் அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ள சுற்றுலாத்துறையை மீளக் கட்டி எழுப்புவது.

மூன்றாவது, அரசாங்கத்திற்கெதிராக எழுந்து வருகின்ற தெற்கின் எதிர்ப்பலைகளை இவ்வகையான விழாக்கள் மற்றும் களியாட்டங்கள் மூலமாக நீர்த்துப் போகச் செய்வது.

நான்காவது இவ்விழாவில் பெருமளவு தமிழ் சுப்பர்ஸ்டார்களும் தமிழ் நடிக நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என்பதால் அவர்கள் பால் கொண்ட ஈர்ப்பின் காரணமாக இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் அரசாங்கத்திற்கெதிராக எதிர்ப்புணர்வு தணிந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு.

ஐந்தாவதும் மிக முக்கியமானதும் இந்திய முதலீட்டாளர்களையும் முதலீடுகளையும் கவர்ந்து இழுப்பது.

இலங்கையின் இத்திட்டப்படி இந்தியாவின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு ஆரம்பத்தில் இலங்கைக்குச் சாதகமானதாகவே இருந்தது. அமிதாப்பச்சன் இலங்கைக்கு வந்து ஜனாதிபதியுடன் விருந்துண்டார்.

இந்திய அரசாங்கம் வடஇந்திய நடிகர்களை விழாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாட்டைச் செய்து விட்டு தென்னிந்தியாவில் கை வைத்த போது தான் வந்தது வில்லங்கம்.

இலங்கை அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ஓராண்டு நிறைவுக்குள் இப்படி ஒரு விழாவா, இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த வீடுவாசல்களைவிட்டு அகதியாக அலைகையில் இப்படி ஒரு கொண்டாட்டமா? சர்வதேசமே இலங்கை அரசு மீது போர்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்திக் கொண்டிருக்கும் வேளையில் அந்த இலங்கை அரசாங்கத்துடன் நாம் கூடிக் குலாவுவதா, அந்த விழாவில் நாம் கலந்து கொள்வதா என்று தென்னிந்திய சினிமாத்துறையுள் ஆரம்பித்த முணுமுணுப்பு மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்தது.

தென் இந்திய வர்த்தக சினிமா சங்கம், தென்னிந்திய சினிமாத்துறை ஊழியர் சமாஜம், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகியன தமிழ் திரைத்துறையினர் இந்த விihவில் பங்கேற்கக் கூடாது என்று குரலெழுப்பினர்.

தமிழ் நாட்டிலிருந்து மட்டுமல்ல கேரளாவிலிருந்தும் எந்த ஒரு நடிகரும் இந்த விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்பது தெளிவாயிற்று. மொத்தமாகத் தென்னிந்தியாவே இந்த விழாவைப் பகிஸ்கரித்தது.

ஆனால் அதைவிட இவ்விழாவுக்குப் பேரிடியாக அமைந்தது சர்வதேச இந்திய திரைப்பட சம்மேளனத்தின் தூதுவரும் பிரதான நடிகருமான அமிதாப்பச்சன் தான் இவ்விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தது தான். ஆரம்பத்தில் இலங்கை வந்து இவ்விழாவை சிறப்புற நடாத்த உறுதியளித்த அவர் பின்னர் தான் இவ்விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்தார்.

இந்திய அரசின் நெருக்குதல் காரணமாக தான் கலந்து கொள்ளாத காரணத்தை நேரடியாகத் தெரிவிக்காத அவர் தனது வலைப்பக்கத்திலும் ருவிற்றரிலும் குஜராத்தின் சுற்றுலாத்துறையை வளர்ப்பதற்கான ஒரு படப்பிடிப்பில் இருப்பதால் கலந்து கொள்ள முடியாமலிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

அவருடைய மகனான அபிஸேக் பச்சனும் மருமகளான ஐஸ்வர்யா ராயும் கூட இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.

பிரபல திரைப்பட நெறியாளரான மணிரத்னத்தின் புதிய திரைப்படமான இராவணா இந்த விழாவில் திரையிடப்பட இருந்தது. ஆனால் அவர் கலந்து கொள்ளாதது மட்டுமல்ல. தனது திரைப்படத்தை திரையிடவும் அவர் மறுத்திருக்கிறார். காரணமாக அதன் தயாரிப்பு வேலைகள் இன்னும் பூர்த்தியடையவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஹிந்தியின் பிரபல்யமான இன்னொரு நடிகரான ஸாருக்கானோ தனது ருவிற்றரில் தனது வேலைப்பளு காரணமாக கொழும்பு விழாவில் பங்கேற்ற முடியவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே கொழும்பில் 2004ஆம் ஆண்டு ஸாருக்கான் கலந்து கொண்ட ஒரு விழாவில் குண்டு வீசப்பட்டதில் இருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர ஹிந்தியின் முன்னணி நட்சத்தரங்களான கரீனா கபூர், டீபிகா படுகோன், ரன்விர்கபூர், இம்ரான் கான், அமீர் கான், ராணி முகர்ஜி, கஜோல் போன்ற எவரும் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.

தமிழில் கமல்ஹாசன், ரஜனிகாந்த், விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களும் மணிரத்னம் போன்ற நெறியாளர்களும் முன்னரேயே விழா அழைப்பை நிராகரித்து விட்டிருந்தார்கள்.

தமிழ் திரைப்பட நடிகையான நமீதா தான் இந்த விழா அழைப்பைத் திருப்பி அனுப்பி விட்டதாகத் தெரிவித்ததோடு, என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய தமிழ் மக்களுடைய கோரிக்கைக்கு எதிராக தான் ஒரு போதும் செயற்படப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மொத்த்தில் முன்னணி நடிக நடிகையர் அனைவருமே புறக்கணிக்க இரண்டாம் தர நடிகர்களை வைத்தே விழாவை ஒப்பேற்ற வேண்டியதாகி விட்டது.

அதுவும் பல்வேறு காரணங்களால் இந்திய அரசின் நெருக்குதல்களுக்குப் பணிந்து போகக் கூடிய் பலகீனமான நிலையிலிருந்தவர்களையே இந்திய அரசு கழுத்தில் பிடித்துத் தள்ளி விட்டிருக்கிறது.

அப்படி வந்த ஒருவர் ஹிருத்திக் ரோஸன். விளைவாக தென்னகத்தில் திரையிடப்பட்டிருந்த அவருடைய கைற்ஸ் என்ற திரைப்படம் திரையிடப்படாமல் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது.

ஆக, மொத்தத்தில் இந்த திரைப்படவிழா ஒழுங்கமைப்பினால் இலங்கை அரசு தானே தனது முகத்தில் கரியைப் பூசியிருக்கிறது.

இதேவேளை இலங்கையில் நடைபெற்ற சர்வதேச இந்தியத்திரைப்பட விருது வழங்கும் விழாவைப் புறக்கணிப்பதற்கான போராட்டத்தை முன்னின்று நடாத்தியவர்களில் ஒருவரான தென்னிந்தியத் திரைப்படத் துறையைச் சேர்ந்த சீமான் என்.டி.ரிவிக்கு வழங்கிய நேர்காணலில் இப்படிச் சொல்கிறார். “எந்தவொரு சர்வதேச ஊடகமும் போய் முள்வேலி முகாம்களுக்குள் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சொல்லவும் தயாரில்லை. அங்கிருந்த அனுப்பி வைக்கப்பட்ட மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை அறியவும் முயலவில்லை. அவர்கள் வாழ அங்கு வழி இருக்கிறதா? அவர்களை அங்கு கொண்டு போய் வேறு சிறிய சிறிய முகாம்களுக்குள் தான் வைத்திருக்கிறார்கள். எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. அதிபர் தேர்தலும் முடிந்து விட்டது. பாராளுமன்றத் தேர்தலும் முடிந்து விட்டது. விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டு தமிழர்களுக்கான சுதந்திரத்தை அளிப்பேன் என்று சொன்ன ராஜபக்சவிடம் என்ன சுதந்திரத்தை அழித்தீர்கள் என்று கேட்கவும் யாருமில்லை. தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு எங்கே சமவுரிமை எங்கே என்று கேட்கவும் ஆளில்லை” என்கிறார்.

எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரோஸி சேனநாயக்காவோ மணமகன் இல்லாத திருமண வீடாக இருக்கிறது இந்த விழா என்று வர்ணித்ததோடு விட்டு விடவில்லை.

மேலும் சில விடயங்களையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து வாழும் மக்களை மீளக்குடியேற்றி விட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கின்றார். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான மக்கள் இன்றும் அகதி முகாம்களில் எதுவிதமான வசதிகளுமின்றி வாழ்கின்றனர். அம் மக்கள் இன்றும் தகரக் கொட்டில்களில் மிருகங்களைப் போல் வாழ்கின்றனர். உண்ண உணவில்லை, வாழ்வதற்கு வழியில்லாது, தொழில் இல்லாது பிள்ளைகளுக்கு கல்வி இல்லாது, அடிப்படை வசதிகளின்றி பரிதாபமான வாழ்வு வாழ்கின்றனர்.

மறுபுறம் யுத்தம் முடிந்து ஒரு வருடம் கழிந்தபோதும் இதுவரையில் தமிழ் மக்களுக்கு வழங்கப்போகும் அரசியல் தீர்வு என்னவென்பதை அரசாங்கம் முன்வைக்கவில்லை. அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து, அதிகாரப் பரவலாக்கல், இனத்துவ கௌரவத்தை வழங்கும் அரசியல் தீர்வை வழங்க வேண்டும். அதைவிடுத்து தமிழ் மக்களை ஓரம் கட்டும் நடவடிக்கைகளை தொடர்ந்தால் உலக நாடுகளிலிருந்து நாம் தனிமைப்படுத்தப்படுவோம் என்று எச்சரித்துமிருக்கிறார்.

தமிழ் மக்களை மீளக்குடியேற்றி அம் மக்களுக்கு அரசாங்கம் அரசியல் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின் அபகீர்த்திக்கு ஆளாகுவதிலிருந்து மீள முடியாது. இதனை சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழா வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் அழுத்திக் கூறியிருக்கிறார்.

இலங்கை அரசாங்கம் இந்த விழாவை ஒழுங்கு செய்த நோக்கம் தலைகீழாகி விட்டது.

முதலாவது, இதுவரை நடந்த 11 சர்வதேச இந்தியத் திரைப்பட விழாக்களில் சோபையிழந்த ஒரு விழாவாகவும், பெருமளவு நட்சத்திரங்கள் பகிஸ்கரித்த ஒரு விழாவாகவும், அரசியல் சர்ச்சைக்குள்ளான ஒரு விழாவாகவும் இது நடந்து முடிந்திருக்கிறது.

இரண்டாவது, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை இவ்வாறான களியாட்டங்களுள் மூழ்கடித்துவிட நினைத்த அரசாங்கத்தினது நோக்கங்களுக்கு மாறாக தமிழ் மக்களுடைய பிரச்சினை நியாயமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்ற குரல் தான் இந்த விழாச் சர்ச்சைகளூடு ஓங்கி ஒலித்திருக்கிறது.

இலங்கை அரசாங்கமும் அதற்கு உறுதுணையாக இருந்த இந்திய அரசாங்கமும் முதன் முறையாக ஒரு தோல்வியைச் சந்தித்திருக்கிறன.

இது எதிர்வரப் போகின்ற பல தோல்விகளின் ஆரம்பமா?

ஆனந்ததாண்டவன்
GTN

No comments: