Wednesday, June 16, 2010

நீதிமன்றத்திற்குள் செல்லாத தமிழுக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஆறு வழக்குரைஞர்கள் 9.6.10 முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருந்து போராடி வருகின்றனர். இளம் வழக்குரைஞர்களின் முன்முயற்சியினால் உந்தித் தள்ளப்பட்டிருக்கம் இப்போராட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின்(ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) வழக்குரைஞர்கள் முக்கியப் பாத்திரம் ஆற்றி வருகின்றனர்.

செம்மொழி மாநாடு என்ற நல்ல காரியம் நடக்கும்போது, அபசகுனமாக இப்படிப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த திமுக அரசு, முடிந்த வரை இப்பிரச்சினையை இருட்டடிப்பு செய்யும் பொருட்டு புறக்கணித்து. அதிகாரபூர்வ வழக்குரைஞர் சங்கங்களும் இதனைப் புறக்கணித்தன.

மதுரையில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் அதாரிட்டியான தென்மாநில முதல்வர் அழகிரி, இப்பிரச்சினையை 15 நாளில் முடித்துத் தருவதாகவும், போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படியும் நேற்று வழக்குரைஞர்களிடம் கூறியிருக்கிறார். தன் பேச்சைத் தட்டுவதற்கு மதுரையில் ஆள் கிடையாது என்ற நம்பிக்கையில் பழரசத்தை எடுத்துக் கொண்டு உண்ணாவிரதப் பந்தலை நோக்கி காரில் கிளம்பியும் விட்டார். ஆனால் வக்கீல்கள் மசிவதாக இல்லை. “அண்ணன் 15 நாளில் முடிப்பதற்கு இது ரியல் எஸ்டேட் பிரச்சினை இல்லை. இதற்கு பதில் சொல்லும் அதிகாரம் கொண்டவர்கள் பதில் சொல்லவேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்” என்று முடிவெடுத்து விட்டனர்.

வேலை மெனக்கெட்டு கிளம்பி வந்த அண்ணன் பந்தலுக்கு வந்து ஒரு வாழ்த்துரை வழங்கிவிட்டுப் போயிருக்கலாம். ஆங்கிலம் தெரியாத அண்ணன் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச முடியவில்லை. நீதிமன்றத்தில் தமிழ் என்ற கோரிக்கை கிட்டத்தட்ட அண்ணனின் பிரச்சினையுடன் நேரடியாகத் தொடர்புள்ளதுதான். அதற்காகவாவது வாழ்த்திவிட்டுப் போயிருக்கலாம். ஆனால், அண்ணன் தலையிட்டால் பிரச்சினை செட்டில் ஆகவேண்டுமே. அதனால்தான் திரும்பிப் போய்விட்டார்.
இன்றைக்கு ஜெ களத்தில் குதித்துவிட்டார். செம்மொழி மாநாடு எனும் பிரம்மாண்ட கேளிக்கையை வைத்து கருணாநிதி ஆதாயம் அடைவதை விரும்பாத ஜெயலலிதா, வழக்கறிஞர் போராட்டத்தை ஆதரித்து இவர் ஏதோ தமிழுக்கு ஆட்சி மொழி தகுதியை எதிர்காலத்தில் வாங்கித் தருவது போல காட்டிக் கொண்டிருக்கிறார். இத்தனை காலமும் கருணாநிதியின் நிழலில் இளைப்பாறி தமிழின் உணர்ச்சியை மட்டும் விற்பனை செய்து வந்த வைகோவும் நிச்சயமாய் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கிறார்.

கோவை மாநாட்டில் இந்த வழக்கறிஞர் போராட்டம் ஒரு கரும்புள்ளியாய் விழுந்துவிடக்கூடாது என்று துடிக்கும் கருணாநிதி வழக்கம் போல ஜெயலலிதாவின் அறிக்கைக்கு லாவணியாக ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அதிலிருந்து உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வராமல் இருப்பதற்கு தி.மு.க அரசு என்னென்ன முயற்சிகளை கிடப்பில் போட்டது என்ற உண்மை நமக்கு கிடைக்கிறது. சொந்த செலவில் சூன்யம்.

இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழும் இருக்கவேண்டுமென்பது தி.மு.கவின் திட்டவட்டமான கொள்கையாம். இதற்காக பலமுறை கழக பொது குழுக்களிலும், செயற்குழுவிலும் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்களாம். நீதிமன்றங்களிலும் தமிழ் இடம்பெற வேண்டுமென்று வாதாடி வந்திருக்கிறார்களாம். இந்த ‘வீர’ வரலாற்றின் தொகுப்பை சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் அறிக்கையாகவே வெளியிட்டிருக்கிறாராம்.
தமிழுக்காக கழகம் போராடியிருக்கும் அந்த ‘வீர’ வரலாற்றின் காலம் தி.மு.க ஆட்சியைப் கைப்பற்றியதிலிருந்தோ, இல்லை கருணாநிதி பொதுவாழ்க்கைக்கு வந்ததிலிருந்தோ தொடங்கியிருக்குமென்று நீங்கள் நினைத்தால் தவறு. அது வெறும் 21ஆம் நூற்றாண்டுச் சமாச்சாரம்தான்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் தமிழ்மன்றம் சார்பாக 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு ரிட் மனு தமிழுக்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அரசியலைமைப்புச் சட்டம், பிரிவு 348(2)இன் கீழ் தலையிட முடியாது என்று தீர்ப்பளிக்கின்றனர். அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசு இதை கிடப்பில் போட்டது என்று சரியாகவே சொல்லும் கருணாநிதி அவர் ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்தார்?
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தமிழ் வேண்டுமென்று 6.12.2006 அன்று சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் கருணாநிதி அரசால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பிறகு இந்த தீர்மானத்திற்கு கவர்னரின் பரிந்துரையையும், சென்னை உயர்நீதிமன்றத்தின் கொள்கை ரீதியிலான ஒப்புதலையும் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்களாம். ஏற்கனவே அரசியலைமைப்புச் சட்டத்தின் கீழ் இதைச் செய்யமுடியாது என்று கைவிரித்த நீதிபதிகள் இப்போது எந்த கொள்கையளவில் இதை ஆதரித்தார்கள் என்பது மேலிடத்து இரகசியமா இல்லை நடைமுறைக்கு வராத வெத்து வேட்டு என்ற மெத்தனமா தெரியவில்லை.

தி.மு.க அரசுக்கு கடிதம் மூலம் பதில் அளித்த மத்திய அரசு “தமிழக அரசின் முன் மொழிவுகள் உச்சநீதிமன்றத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் வட்டார மொழியை அறிமுகம் செய்வது தற்போதைக்கு இயலாத ஒன்று என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கருதுவதாகவும்” தெரிவித்துள்ளது.

2006க்குப் பின் 2 ஆண்டுகள் திமுக அமைச்சர் வெங்கடபதி மத்திய சட்டத்துறை இணை அமைச்சராக இருந்திருக்கிறார். அவர் என்ன செய்தார்? பீகார், உ.பி முதலான மாநிலங்களில் மட்டும் இந்தி நீதிமன்ற மொழியாக இருப்பதெப்படி என்ற கேள்வியை அவர் எழுப்பினாரா? தமிழக சட்ட மேலவைக்கு 4 நாளில் மத்திய அரசின் ஒப்புதல் பெற முடிந்த ராஜதந்திரி கருணாநிதி, அந்த ராஜதந்திரத்தை உயர்நீதி மன்றத்தில் தமிழைக் கொண்டுவருவதற்கு காட்டாதது ஏன்? மாவட்ட நீதிமன்றம் வரையில் அனுமதிக்கப்படும் தமிழ் மாநில நீதிமன்றமான உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படாத்து ஏன்? மாவட்டம் எல்லாம் சேர்ந்த்துதானே மாநிலம்? பொது அறிவுக்குப் புரியும் இந்தக் கேள்விகள் கூட திமுக அரசின் மண்டையில் உரைக்காத்து ஏன்?

தமிழ் மற்றும் மற்றைய தேசிய மொழிகளை சூத்திர பாஷை என்று எக்காளமிட்டு அடிமைப்படுத்திய பார்ப்பனியத்தின் அன்றைய வரலாற்றுக்கும், உச்சநீதிமன்றத்தின் இன்றைய வரலாற்றுக்கும் என்ன வேறுபாடு? ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான் முதலான நாடுகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் தாய்மொழி பேசும் மக்களைக் கொண்ட நாட்டில் அந்த மொழிகளை வெறும் வட்டார மொழி என்றும், சாத்தியமில்லை என்றும் கருதுவது வெறும் மேட்டிமைத்தனம் மட்டுமல்ல அது பார்ப்பனிய இந்திய தேசியத்தின் அடக்குமுறையும் ஆகும்.
இதெல்லாம் தெரியாத அளவுக்கு கருணாநிதி ஒன்றும் மக்கு இல்லை. எல்லாம் அறிந்தவர். வாரிசுகளுக்காக வளமான அமைச்சர் பதவிகளை கூசாமல் நேரில் சென்று கேட்டுப் பெற்றவர் தமிழுக்காக வெறும் கடித விளையாட்டுக்களை நடத்தியதையே சாதனையாக அறிவிக்க வேண்டுமென்றால் தமிழன் இளித்தவாயன் என்பதன்றி வேறென்ன? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாத்தியமில்லை என்று மத்திய அரசும் கழண்டு கொள்ள, விட்டது தொல்லை என்று கருணாநிதியும் விட்டுவிட்டார்.

சுவரே இல்லாத வீட்டுக்க்கு கூரையை தங்கத்தில் வேயலாமா, வெள்ளியில் வேயலாமா என்ற கதையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை கொண்டு வருவதற்கான உள்கட்டுமான பணிகளுக்காக தமிழக அரசு ஒதுக்க விரும்பியது 32 கோடியா, 22 கோடியா என்று ஜெயலலிதாவுடன் அறிக்கைப் போர் நடத்துகின்றார் கருணாநிதி. தமிழை கொண்டுவரமுடியாது என்று ஆனபிறகு அதற்கு எத்தனை கோடி ஒதுக்கித்தான் என்ன பயன்?
பிரச்சினை நடக்கும் நிகழ்காலத்தில் நீங்கள் சண்டையே போடவில்லை என்றால் 65இல் தமிழுக்காக பாளையங்கோட்டை தனிமைச்சிறையில் பல்லி, கரப்புகளுடன் அவதிப்பட்டேன் என்று இறந்த காலத்திற்கு பயணிக்கிறார் கருணாநிதி. சிறையை விடுங்கள், பல்லி, கரப்பு, கொசுக்களுடன்தான் இன்றும் பெரும்பான்மையான மக்கள் வீடுகளில் சாதாரணமாக வாழ்கிறார்கள். பாம்புக்கடிக்கும், நாய்க்கடிக்கும் மருந்தின்றி அரசு மருத்துவமனைகளில் அவதிப்படுகிறார்கள். ஆனால் அதையெல்லாம் தியாகமாக சித்தரிப்பதற்கு அவர்களெல்லாம் கோபாலபுரத்தில் பிறக்கவில்லை, என்ன செய்வது?

உயர்நீதிமன்றத்தில் கூட தமிழை கொண்டுவருவதற்கு இயலவில்லை எனும் போது 500 கோடி ரூபாய்களை இறைத்து செம்மொழி மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? கடந்த ஏழு, எட்டுமாதங்களாக முழு அரசு எந்திரமும் இந்த மாநாட்டுப் பணிக்காக மும்முரமாக பணியாற்றி வருகிறது.

அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் ஏற்வில்லை. மேட்டூரில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. போலி மருந்து பிரச்சினை முடியவில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்காக அளிக்கப்படும் தடையற்ற மின்சாரத்தினால் தமிழகம் மின்தட்டுப்பாட்டினால் தத்தளிக்கிறது. விலைவாசி உயர்வு விஷம் போல ஏறிவருகிறது.
இதையெல்லாம் ஏறெடுத்துப் பார்க்காத அமைச்சர்களும் அதிகாரிகளும் கோவை மாநாட்டின் சிலைகளும், அலங்கார ஊர்திகளும், அரங்கங்களும் சரியாக இருக்கிறதா என்று அணு அணுவாக சோதிப்பது ஆபாசமாக இல்லையா? யாரை ஏமாற்ற இந்த நாடகம்? இன்னும் எத்தனை நாள் தொடரும் இந்த கேலிக்கூத்து?

இது போக சில படித்த மேதாவிகள் அவர்களது வாழ்வுக்கு எந்த வகையிலும் தேவைப்படாத தமிழை நீதிமன்றங்களில் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை என்று நமக்கு வகுப்பு எடுப்பார்கள். அவர்களெல்லாம் நீதிமன்றங்களுக்கு வரும் மக்களைக் கொஞ்சம் சந்தித்து பார்த்தால் உண்மை அறியலாம்.
நீதிமன்றங்களில் தமிழ் என்பது மிகவும் அடிப்படையான ஜனநாயக கோரிக்கை. பெரும்பான்மை மக்களின் அடிப்படை உரிமை. ஆங்கிலம் கோலோச்சும் நீதிமன்ற நடைமுறைகளைப் பற்றி ஏதும் அறியமால் அதிகம் அல்லல்படும் அந்த மக்களுக்கு தமிழ் என்பது அங்கே வெறும் மொழியாக அல்ல அவர்களது சிவில் உரிமையாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் வந்துவிடுவதாலேயே அவர்களுக்கு நீதி கிடைத்துவிடுவதில்லை என்றாலும் தங்களுக்கு மறுக்கப்பட்ட நீதியின் யோக்கியதையையாவது புரிந்து கொள்ளலாம் அல்லவா?

வக்கீல்கள், போலீசுக்காரர்கள், நீதிபதிகள் சேர்ந்து சட்ட மொழியில் மக்களை ஏமாற்றும் நடைமுறைகளை தமிழ் வந்தால் அத்தனை எளிதாக செய்ய முடியாது. தங்களது பிரச்சினையின் நியாயத்தை புரிந்து கொள்ளும் மக்கள் அதையே சட்டமொழியாக தமிழ் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளினூடாகவும் புரிந்து கொள்வார்கள். தமிழ் நீதிமன்ற மொழி என்பது பெரும்பான்மை மக்கள் ஜனநாயக உரிமையாகும். அதை மறுப்பது பாசிசமே அன்றி வேறல்ல.

மதுரை வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்! தமிழுக்காக வேடம்போடும் கபட வேடதாரிகளின் பொய்முகத்தை தோலுரிப்போம்!!

நன்றி வினவு

No comments: