Sunday, June 27, 2010

குண்டுச்சத்தங்களுக்கிடையில் படித்து முதலிடம் பெற்ற மாணவர் புஷ்பக்காந்தனை வாழ்த்துவோம்..

இலங்கையில் ஒரு தமிழனின் சாதனைஅண்மைக் காலமாக இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட செய்திகளில் பிரபலமாகப் பேசப்பட்டதானது , அண்மையில் வெளியான பரீட்சை முடிவுகளில் முன்னிலைமை பெற்றவர்களுக்கு முதல்வரின் நேரடி வாழ்த்தும் , வழங்கிய பரிசும் பற்றிய சந்தோசமானதும் சமூகத்துக்கு ஆரோக்கியமானதுமான செய்தியாகும்.

அந்த மாணவர்களைப் போல என்பதை விட அதற்கும் ஒரு படி மேற்பட்ட சாதனை படைத்திருக்கிறார் இலங்கையில் ஒரு தமிழ் மாணவர்.கடந்த வருடம் இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவ பீடங்களிலும் பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய 700 க்கும் மேட்பட்ட வைத்தியகளிற்கான தரப்படுத்தலில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார் ஒரு தமிழ் மாணவர்.

புஷ்பக்காந்தனாகிய அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து கொண்டே இந்த சாதனையை செய்து முடித்துள்ளது எதை இழந்தாலும் இன்னும் எமது கல்வித்தரத்தை இழக்கவில்லை என்பதை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

மட்டக்களப்பு சிவானந்த பாடசாலையில் உயர் கல்வி கற்ற புஷ்பகந்தன் , உயர் கல்வியை யாழ் மருத்துவ பீடத்தில் தொடர்ந்தார். அங்கே பல் குழல் பீரங்கிகளின் சத்தங்களின் மத்தியில் இருந்து கொண்டு , தொடர்ச்சியான மின்சார வசதிகள் கூட இல்லாத நிலையிலே படித்தும், இலங்கையில் பல்வேறு வசதிகள் கொண்ட மற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற தமிழ் , சிங்கள மாணவர்களோடு போட்டி போட்டு முதல் இடம் பெறுவது என்பது மிகப் பெரிய சாதனை.

அதுமட்டுமல்லாமல் ஒரு பேராசிரியர் கூட இல்லாத நிலையில் , இறுதியாண்டு கற்பித்தல் செயற்பாடுகள் முற்று முழுதாக யாழ் வைத்திய சாலையில் பணிபுரியும் வைத்திய நிபுணர்கலால்தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பல்வேறுபட்ட துறை சார்ந்த பேராசிரியர்களால் பயிற்றப்பட்ட வேறு பல்கலைக் கழக மாணவர்களோடு போட்டி போட்டு புஷ்பக்காந்தனால் முதல் இடம் பெற முடிந்துள்ளது என்றால் நிச்சயமாக இவரை பயிற்று வித்த குறிப்பிட்ட சில வைத்திய நிபுணர்களின் அர்ப்பணிப்பான சேவையையும் நாம் பாராட்ட வேண்டும்.

சென்ற வருடம் மொத்தமாக 700க்கும் மேட்பட்ட வைத்தியர்கள் பட்டம் பெற்றுள்ளார்கள் , இதிலே தமிழ் மாணவர்கள் மொத்தமாக வெறும் 2ooக்கும் குறைவாகத்தான் இருக்கும் ( மாவட்டத்தில் இருந்து விகிதாசார அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படுவதால் இந்த எண்ணிக்கையில் எந்த அரசியல் செல்வாக்கும் இல்லை)எஞ்சியவர்கள் அனைவரும் சிங்கள மாணவர்களாகும் .

அத்தோடு கொழும்பு பல்கலைக் கழக மாணவரான பாலசிங்கம் பாலகோபி மருத்துவக் கல்லூரியின் சிறந்த மாணவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் மருத்துவம் பயிலும் தமிழ் மாணவர்கள் அனைவரும் யாழ்ப்பான மற்றும் கொழும்பு மருத்துவக் கல்லோரிகளிலேயே உள்வாங்கப் பட்டுள்ளார்கள்.( தற்போது சில வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலும் ஒரு கல்லூரி ஆரம்பிக்கப் பட்டுள்ளது)

ஆக ,அகில இலங்கை ரீதியாக மட்டுமல்ல , எங்கே எல்லாம் தமிழ் மாணவர்கள் இருதார்களோ அங்கேயெல்லாம் அவர்களே முதல் இடத்தைப் பெற்று எமக்கு பெருமை தேடித்தந்து உள்ளார்கள்.இவ்வாறான சாதனையாளர்களை சமுகத்துக்கு வெளிக் கொண்டு வருவது சமூகத்தில் இருந்து மேலும் பல சாதனையாளர்களை உருவாக்குவதற்கு வழிகாட்டியாக அமையும்.

இந்தியாவில் பத்தாம் ஆண்டு தேர்வில் முதன்மை வகிக்கும் மாணவர்களையே போட்டி போட்டுக் கொண்டு ஊடகங்கள் அறிமுகப்படுத்தி கௌரவித்து எதிர்கால மாணவர்களுக்கு ஒரு உந்து சக்தியை கொடுக்கின்றன

இலங்கையிலோ இந்த மாணவர்கள் பற்றி இதுவரை எந்த ஊடகத்திலோ எதுவுமே சொல்லப்படவில்லை என்றுதான் நினைக்கின்றேன். சினிமாத் தனத்தில் ஊறிப்போன இந்த ஊடகங்கள் ரகுமானுக்கு கிடைக்கும் விருதுகளை முதலில் யார் சொல்வது என்று போட்டி போட்டுக் கொள்கின்றன ஆனால் சொந்த மண்ணில் சாதனை செய்பவர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றன.

நான் முதலிடம் நானே முதலிடம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளவே நேரம் போதாத போது முதலிடம் பெற்ற ஒரு மாணவனை ஒரு செய்தியாகவேனும் சொல்ல இந்த ஊடகங்களுக்கு நேரம் இல்லாதது நியாயம்தான்.

சரி அந்த ஊடகங்கள் எதற்கு ? நமக்குத்தானே வலைப் பூக்கள் உள்ளன, இந்த செய்தியை உங்கள் தளங்களிலும் பிரசுரியுங்கள்( நீங்கள் அப்படியே உங்கள் பெயரிலேயே பிரசுரிக்கலாம்) அல்லது தமிழ் மனத்தில் பரிந்துரைத்து செய்து உலகம் எல்லாம் பரந்து கிடக்கும் தமிழர்களை போய்ச்சேர செய்யுங்கள்.அவர்கள் மகிழ்ச்சி கொள்ளட்டும் , இனனும் யாழ் பல்கலைக் கழகம் உயிர்ப்புடன்தான் உள்ளது என்று.

நீங்களும் விரும்பினால் வாழ்த்தி விட்டுச் செல்லுங்கள் அத்தனையையும் புஷ்பக் காந்தனைப் போய்ச் சேர செய்துவிடுகிறேன்..
நன்றி - மீனகம்

No comments: