தில்லியில் இருப்பவர்கள்தான் தமிழர்களின் முதல் எதிரிகள் என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா. செழியன் தெரிவித்தார்.
பத்திரிகையாளர் பாவை சந்திரன் தினமணி நாளிதழில் 178 நாள்கள் தொடர்ந்து எழுதிய ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சோவியத் கலாசார மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் நூலை வெளியிட, அனைந்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைமாமணி விக்கிரமன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவுக்குத் தலைமை ஏற்று இரா.செழியன் பேசியது:
ஈழத் தமிழர்களின் சோக சரித்திரத்தின் ஒரு பகுதியே இந்நூல். தமிழர்களின் வரலாறு தொடர் சோகமாக இருக்கிறது. நாம் எழுச்சி பெற்ற வரலாறு மறந்து விட்டது. மறக்கடிக்கப்பட்டு விட்டது. கடந்த 50 ஆண்டுகளாக தினமணியோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறேன்.
நெருக்கடி காலத்தில் தைரியத்தோடு கருத்துகளை வெளியிட்ட பத்திரிகை அது. அதே துணிவோடு பாவை சந்திரன் எழுதிய ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றை தினமணி வெளியிட்டுள்ளது.
கி.மு. 5-ம் நூற்றாண்டில் ஹெரிடோட்டர் என்ற வரலாற்று அறிஞர் கிரேக்கத்துக்கும் பெர்சியாவுக்கும் இடையே நடைபெற்ற போர் குறித்து புள்ளிவிவரங்களோடு எழுதினார். மேற்கத்திய வரலாறு குறித்து எழுதப்பட்ட முதல் நூல் அது. அதுபோல மிக நுணுக்கமாக ஆராய்ந்து இந்நூலை எழுதியுள்ளார். இத்தொடர் பற்றி இந்த நூலின் முன்னுரையில்
தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், 6 மாதங்களுக்கு முன்பே இத்தொடர் வந்திருந்தால், ஒரு வேளை மிகப் பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமோ என்னவோ என்கிற வருத்தம் என் கடைசி காலம் வரை தொடரும் என்று எழுதியிருந்தார். இந்த வருத்தம் தேவையற்றது.
6 மாதம் அல்ல. 6 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருந்தாலும் மாற்றம் ஏற்பட்டிருக்காது. ஆள்பவர்களின் மனம் மாறியிருக்காது. தமிழர்களைக் காப்பாற்ற தமிழர்களால் மட்டுமே முடியும். மற்றவர்கள் யாரும் அதற்காக முன்வர மாட்டார்கள்.
1983-ல் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற நூலகம் எரிக்கப்பட்டபோது அது குறித்து நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைத்தது. நான் பேசியதை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். 1960-ல் நேரு பிரதமராக இருந்தபோது தென் ஆப்பிரிக்காவில் நடந்த இனப்படுகொலை குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டதை சுட்டிக்காட்டி அதுபோல, இலங்கைத் தமிழர்களுக்காகவும் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றேன்.
இனப்படுகொலைக்கு எதிராக நேரு குரல் கொடுத்தார். அவருக்கு பிறகு எல்லாம் மாறிவிட்டது.
தில்லியில் ராஜபட்ச ராஜவலம் வந்துகொண்டிருக்கிறார். நமது எதிரி ராஜபட்ச அல்ல. தில்லியில் இருப்பவர்கள்தான் தமிழர்களின் முதல் எதிரிகள். சீனா, பாகிஸ்தானோடு சேர்ந்துகொண்டு இந்தியாவும் இலங்கைக்கு உதவுகிறது. கட்டடங்கள், அரண்மனைகள் அழிந்தால்கூட பரவாயில்லை. ஒரு இனம், மொழி அழிந்தால் நூற்றாண்டுகள் ஆனாலும் அதனை மீட்க முடியாது. இலங்கையில் ஒரு இனம் அழிக்கப்பட்டு வருகிறது.
இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் தீர்மானம் வந்தபோது இலங்கைக்கு ஆதரவாக சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இது குறித்து ஆதாரங்களுடன் 200-க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் கடிதம் அனுப்பினேன். ஆனாலும் யாரும் அதுகுறித்து பேசவில்லை.
இலங்கையில் இனப்படுகொலை நடப்பது குறித்து தில்லியில் இருப்பவர்கள் மெத்தனமாக இருப்பது ஏன் என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தனது வேதனையை பதிவு செய்துள்ளார். அவருக்கு இருந்த உணர்வு தமிழகத்தில் யாருக்கும் இல்லை.
இப்போது இருப்பது நாடாளுமன்றம் அல்ல. சட்டம் இயற்ற வேண்டிய இடத்தில் சத்தம் போடுகிறார்கள். மக்கள் பிரச்னைகளோ, தேசத்தை எதிர்நோக்கும் பிரச்னைகளோ விவாதிக்கப்படுவதில்லை. ஆனால், ஆட்சி நிச்சயமாக மாறும். எப்போது மாறும் என்று சொல்ல முடியாது. தேர்தல் வரும்போது நாட்டைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்.
இலங்கைப் பிரச்னைக்கு மாநில அரசால் தீர்வு காண முடியாது. தில்லிதான் முயற்சி எடுக்க வேண்டும். இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு நாட்டைப் பற்றிய கவலை இல்லை. அவர்கள் இந்தியாவை விற்றாலும் ஆச்சரியம் இல்லை. அதனைப் பங்குபோட பலர் தயாராக உள்ளனர். யாரை எதிர்ப்பது யாரை எதிர்த்து போராடுவது என்றே புரியவில்லை.
ராஜபட்ச தில்லியில் ராஜவலம் வருகிறார். இங்கே பல ராஜபட்சேக்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை அகற்றினால்தான் நாடு வளரும். பிரச்னைகள் தீரும் என்றார் இரா. செழியன்.
எழுத்தாளர் பொன்னீலன்
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, ஈழத் தமிழர்களுக்கு இங்கே பயிற்சி கொடுத்தார். அவர் உயிரோடு இருந்திருந்தால், வங்கதேசத்தை உருவாக்கியதைப் போல, இலங்கையிலும் தனி நாட்டை உருவாக்கியிருப்பார் என்று நான் நம்புகிறேன்.
வித்து வீரியமாக இருந்தாலும், அது வளர்வதற்கு நல்ல மண் தேவை. அதுபோல பாவை சந்திரன் எழுதிய இந்த வரலாற்றுத் தொடர் நன்றாக வருவதற்கு தினமணி மண்ணாக இருந்து உதவியிருக்கிறது.
பாவை சந்திரனின் ஈழப்போராட்ட வரலாறு இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க வேண்டும். அப்போதுதான், இலங்கையில் நடக்கும் கொடுமைகள் உலகுக்கு தெரியவரும்.
இந்தியாவில் உள்ள மற்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கும் தெரியவரும்.
நேரு ஒருமுறை இத்தாலிக்கு சென்றிருந்தபோது, பாசிசத் தலைவரான முசோலினியைச் சந்திக்க மறுத்துவிட்டார். முசோலினியின் கறைபடிந்த கரங்களை கைகுலுக்க மாட்டேன் என்று அப்போது நேரு தெரிவித்தார்.
ஆனால், கறைபடிந்த கரங்கள் உடைய ராஜபட்சவுக்கு தில்லியில் இன்று ராஜமரியாதை அளிக்கப்படுகிறது. இதுவெட்கக் கேடானது என்றார் பொன்னீலன்.
கலைமாமணி விக்கிரமன்
எழுத்துகள் மூலம்தான் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே எழுத்துக்கும், பேச்சுக்கும் ஒரு மரியாதை உருவாகும். அந்தப் பணியை தினமணி ஆசிரியர் செய்துவருகிறார்.
1951-ல் இங்குள்ள தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் தமிழ் விழா நடைபெற்றது. அதில் இங்குள்ள தமிழர்கள் பங்குபெற்றனர். 51-ல் சிறப்பாக இருந்த தமிழினம் இன்று அழிக்கப்பட்டுவிட்டது. இன்று தமிழர்களின் நிலை பற்றி கவலைப்பட யாரும் இல்லை.
1982-ல் யாழ்ப்பாணம் செல்ல முயன்றபோது, இங்குள்ள போலீஸôர் அங்கு புரட்சி வெடிக்க உள்ளதாகக் கூறி போக வேண்டாம் என்றனர்.
1983-ல்தான் இனக் கலவரமும், அதைத் தொடர்ந்து புரட்சியும் வெடித்தது. அதை இங்குள்ள உளவுத் துறை முன்கூட்டியே அறிந்துகொண்டிருந்தது. அந்த அளவு சக்திவாய்ந்த அரசாங்கம், தமிழர்களை காப்பாற்றுவதற்கு அன்றும் சரி, இன்றும் சரி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவர்களின் எச்சரிக்கையையும் மீறி நான் யாழ்ப்பாணம் சென்றேன். தமிழறிஞர்களைச் சந்தித்தேன். அங்கு எரிக்கப்பட்ட புகழ்பெற்ற நூலகத்தையும் பார்த்தேன். சிங்களவர்களின் இன அழிப்புக்கு எரிக்கப்பட்ட நூலகமே சாட்சி.
பாரதியார் இன்று இருந்திருந்தால் பிஜித் தீவு தமிழர்களுக்கு துடித்தது போல், இலங்கைத் தமிழர்களுக்காகவும் துடித்திருப்பார். நேதாஜி போன்ற மாவீரன்தான் பிரபாகரன்.
வரலாறு எப்போதுமே முடிவதில்லை. இந்த நூலிலும் அந்த வரலாறு முடிக்கப்படவில்லை. தனி நாடு கிடைத்தால்தான் ஈழத் தமிழர்களின் வரலாறு முடிவடையும்.
ஓவியர் வீர. சந்தானம், கோல்கத்தா விஸ்வபாரதி பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி சுப்பையா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
Wednesday, June 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment