Saturday, June 19, 2010

எங்கள் பிணங்களின் மீதுதான் செம்மொழி மாநாடு நடக்கும்…

மதுரையில் 10வது நாளாக உண்ணாவிரதம் இருந்த பகத்சிங், நடராஜன், ராஜேந்திரன், பாரதி, எழிலரசன் மற்றும் ராஜு ஆகியோரை எப்போதுமே வழக்கறிஞர்களை காவல்துறையினரை வைத்து ஒடுக்குவதை வழக்கமாகக் கொண்ட கருணாநிதியின் காவல்துறை நேற்று இரவு, ஒரு பெரும் படையோடு எஸ்.பி.மனோகரன் தலைமையில் கைது செய்திருக்கிறது.

சொந்த மகன் பாராளுமன்றத்தில் தமிழ் பேச முடியவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை. ஆனால் தமிழுக்கு செம்மொழி மாநாடாம்… இந்த வெட்கங்கெட்டவர்களை என்னவென்று சொல்வது. இதில் ஒரு வாரம் இருமுறை பத்திரிக்கை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பிதழ் செவ்வாயன்றே கடைகளில் கிடைக்கும், அதே விலைக்கு இரண்டு புத்தகங்கள் என்று விளம்பரம் வேறு செய்கிறது என்றால் இந்த வெட்கங்கெட்டவர்களின் கூட்டணி எவ்வளவு விரிவானது என்று பாருங்கள்.

இந்த லட்சணத்தில் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பாம். சிறப்பு தற்செயல் விடுப்பு என்றால் என்ன தெரியுமா ? ஐந்து நாட்கள் விடுமுறை என்பதற்கு மறு பெயர். வெள்ளிக்கிழமை ஒரு மணி நேரம் பெண்கள் மட்டும் தாமதமாக வரலாம் என்று ஜெயலலிதா அரசாங்கம் வெளியிட்ட ஒரு முட்டாள்த்தனமான அரசாணையை இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த அனுமதி எதற்கென்றால், பெண்கள் வெள்ளிக்கிழமை தான் தலைக்கு குளிப்பார்களாம். இதன் காரணமாக உரிய நேரத்திற்கு அலுவலகத்திற்கு வர முடியாது என்பதால் ஒரு மணி நேரம் தாமதமாக வரலாம் என்ற இந்த ஆணையை பயன்படுத்திக் கொண்டு, 10 மணி அலுவலகத்திற்கு 12 மணிக்கு வரும் பெண் அரசு ஊழியர்களை எனக்குத் தெரியும். இப்படிப் பட்ட அரசு ஊழியர்களுக்கு, 5 நாள் சிறப்புத் தற்செயல் விடுப்பு அளித்தால் அரசு நிர்வாகம் முடங்கிப் போய் விடாதா ?

அப்படி அரசு நிர்வாகத்தையே முடக்கி விட்டு இப்படிப் பட்ட ஒரு செம்மொழி மாநாடு தேவையா ?

தான் முதுகு சொறிந்து கொள்வதற்கும் இது வரை கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாக்களின் தொகுப்பாக நடைபெறப் போகும், செம்மொழி மாநாட்டுக்க நமது வரிப்பணம் 400 கோடி…..

இதர நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட உரிமை உண்டு. இதற்கான சட்டம் 1956ல் வந்தது. இதன் காரணமாக, மாவட்ட நீதிமன்றங்களிலும் மற்ற நீதிமன்றங்களிலும், கிராமத்துப் பின்னணியில் இருந்து வரும் வழக்கறிஞர்கள், எளிமையாக தமிழிலேயே வாதாடி வருகின்றனர்.

ஆனால், இந்தியாவில், எல்லா கீழமை நீதிமன்றங்களிலும் நியாயம் கிடைத்து விடுகிறதா என்ன ? உயர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய தேவை இருக்கிறதல்லவா ? இங்கேதான் வருகிறது சிக்கல். கிராமங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற நீதிபதி ஆவது கனவில் கூட நடக்காதே … சென்னை உயர்நீதிமன்றத்தில் நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக் கொண்டு, நீதிபதிகளின் பின்னே காவடி தூக்கும் வழக்கறிஞர்கள் தானே உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகிறார்கள்.

மதுரையிலோ, தேனியிலோ தமிழில் வழக்கு நடத்தும் வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற நீதிபதி ஆக முடியுமா ? அவ்வாறு முடியாத பட்சத்தில் நீதிபதிகளாக வந்து அமர்பவர்கள் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் பிரபு வம்சத்தினர் தானே ? அவர்கள் எப்படி தமிழில் வாதாடுவதை விரும்புவார்கள் ? இதனால்தான், 1956ல் ஆட்சி மொழியாக தமிழ் அறிவிக்கப் பட்டாலும் இன்று வரை உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை.

மொழியினால் ஆட்சிக்கு வந்த திமுக, உயர் நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும் என்றால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறது. தமிழ் மொழியினால் ஆட்சிக்கு வந்த திமுக தமிழ் மொழிக்காக பட்டினிப் போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்களை காவல்துறையை வைத்து கைது செய்வது எப்படிப் பட்ட காலத்தின் கோலம் ?

காமராஜர் கொண்டு வந்த மொழிச் சட்டத்தை செயல்படுத்துவதற்கு கூட கருணாநிதிக்கு வலிக்கிறதென்றால், தமிழின் பெயரால் ஆட்சி நடத்திக் கொண்டு தமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்தும் கருணாநிதி, ஆன்மீகத்தின் பேரால் மோசடி செய்த சுவாமி நித்யானந்தாவை போன்றவர் தானே ? நித்யானந்தாவுக்கு ஆன்மீகம் கருணாநிதிக்கு தமிழ்.
வழக்கறிஞர்கள் கேட்பது நியாயம் தானே ?

சட்ட மேலவையை ஒரு வாரத்தில் கொண்டு வர முடிந்த கருணாநிதியால், உயர்நீதிமன்றத்தில் தமிழை கொண்டு வர முடியாதா ? மத்திய அரசில் முக்கிய கூட்டணித் தலைவராக இருக்கும் கருணாநிதி உண்மையில் தமிழை நேசிப்பவராக இருந்தால் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமா இல்லையா ?
கருணாநிதியின் நடவடிக்கைகளை பாருங்கள். இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் படுகொலை என்றால் கடிதம். ஈழத் தமிழரை காப்பாற்ற வேண்டுமென்றால் கடிதம். உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழி என்றால் கடிதம். பெட்ரோல் விலையை கூட்டக் கூடாது என்றால் கடிதம். இதற்கெல்லாம் கடிதம்.

தன்னுடைய மகனுக்கும், மகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் மந்திரி பதவி வேண்டுமென்றால் மட்டும் தள்ளுவண்டியில் டெல்லி செல்வாராம். எப்படி இருக்கிறது முத்தமிழ் அறிஞரின் தமிழ் உணர்வு ?

இந்தக் கருணாநிதியை நம்பினால் எந்த முன்னேற்றமும் நடக்காது என்பதை நன்கு உணர்ந்த மதுரை வழக்கறிஞர்கள், கடந்த ஏப்ரல் மாதம் இதேபோல் பட்டினிப் போரட்டம் நடத்திய வழக்கறிஞர்களிடம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளைப் பதிவாளர், மதுரைக் கிளையின் பெயர்ப் பலகை மூன்று நாட்களில் மாற்றப் படும் என்று உத்தரவாதம் அளித்தனர். ஆனால் இன்று வரை பெயர்ப்பலகை கூட மாற்றப் படவில்லை என்றால், அந்த வழக்கறிஞர்களுக்கு போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு என்ன வழி ?

பகத்சிங். மதுரையில் பட்டினிப் போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்களை தலைமையேற்று நடத்தி இன்று கைதாகி இருப்பவர். கொள்கை பிடிப்பானவர். கொண்ட நோக்கத்தில் உறுதியானவர். போராட்டத்தையே தன் வாழ்க்கை பாதையாக எடுத்துக் கொண்டவர். சமூகத்தின் பல்வேறு சீரழிவுகளை நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வந்து நிவாரணம் பெற்றுத் தந்தவர். தமிழ் மற்றம் தமிழகத்தின் உரிமைகளுக்கான போராட்டங்கள் அனைத்திலும் முன்நிற்பவர். மேலவளவு கொலை வழக்கில் பாதிக்கப் பட்ட தலித் மக்களுக்கு நியாயம் கிடைப்பதில் பெரும் பங்கு வகித்தவர்.

பத்து நாட்களாக தண்ணீரை மட்டுமே அருந்தி போராட்டம் நடத்தியவரை நேற்று இரவு கருணாநிதியின் காவல்துறை வலுக்கட்டாயமாக ஆம்புலன்சில் ஏற்றி கைது செய்தது. கைதாவதற்கு முன் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பகத் சிங் சொன்னது என்ன தெரியுமா ?

“எங்களது இந்த போராட்டம் சிறையிலும் தொடரும். எங்கள் இந்த கோரிக்கை நிறைவேறும் வரை போரட்டம் தொடரும். வழக்கறிஞர் சமூகம் இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். கருணாநிதியின் இந்த அடக்கு முறைக்கு அஞ்ச மாட்டோம். தமிழ் மொழிக்காக எங்களது உயிரைக் கொடுப்பதில் எங்களுக்கு இன்பமே.

உயர்நீதிமன்றத்தில் இல்லாத தமிழுக்கு எதற்கு மாநாடு ? எங்களின் பிணங்களின் மீதுதான் செம்மொழி மாநாடு நடக்கும். வலுக்கட்டாயமாக எங்களுக்கு உணவு கொடுக்க முயற்சித்தால், அதை எதிர்ப்போம். இதிலிருந்து அணுவளவும் பின் வாங்க மாட்டோம்” என்று சிங்கம் போல கர்ஜித்தார்.

இப்படி ஒரு உறுதியோடு, உயிரையும் இழக்கத் தயாராக ஒரு கூட்டம் இருக்கையில் கருணாநிதியும் அவர் காவல்துறையும் என்னதான் செய்து விட முடியும் ?

என் அன்பான சவுக்கு வாசகர்களே…. புலம் பெயர்ந்த தமிழர்களே…. முதன் முதலாக உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.

இந்தப் பதிவை உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கும் அனுப்புங்கள். குறிப்பாக செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளும் அறிஞர்களுக்கு அனுப்புங்கள். அல்லக்கைகளுக்கு அனுப்பாதீர்கள். அவர்கள், கருணாநிதி தலையிலிருந்து ஒரு மயிர் உதிர்ந்து விழுந்து, மயிர் இழந்த கவரிமான் என்று கருணாநிதிக்கு ஒரு பாராட்டு விழா நடந்தால் கூட முண்டியடித்துக் கொண்டு முன் வரிசையில் உட்காருவார்கள்.

ஆகையால், தமிழ் உணர்வாளர்களுக்கும் மனசாட்சி உள்ளவர்களுக்கும் இதை அனுப்புங்கள். செம்மொழி மாநாடு என்னும் கருணாநிதியின் பாராட்டுக் கூட்டங்களின் தொகுப்பு விழாவை, புறக்கணியுங்கள். இதுதான் நீங்கள் தமிழுக்கு செய்யும் மகத்தான சேவை. இந்த வேண்டுகோளை நீங்கள் நிராகரிக்காமல் செய்து முடிப்பீர்கள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. சவுக்கு வாசகர்களல்லவா நீங்கள் ?

No comments: