Monday, June 7, 2010
ராசபக்சேவே திரும்பிப் போ -கண்மணி
கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழீழ மக்களின் குருதியை தாகம் தீர குடித்து, தமது உடல் முழுக்க தமிழர்களின் குருதியை பூசிக் கொண்டு இந்த மாந்த குல வாழ்விற்கே பெரும் சவாலாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனித உரிமை குற்றவாளி நாளை இந்தியா வருகிறானாம். தமிழ் மக்கள் அழித்த சண்டாளன், ராஜகம்பீரத்தோடு இந்தியா வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறான் என்றால், எம் தமிழ் இன மானத்தை அவர்களின் உள்ளார்ந்த உணர்வுகளை, அவர்களுக்குள் கொப்பளிக்கும் இன உறவுகளின் துடிப்புகளை இந்த நாடு புரிந்து கொள்ளவில்லை என்றுதான் பொருள்படும். இந்தியா வரும் இந்த மனித உயிர் குடித்த சண்டாளன் ராஜபக்சே, பிரான்ஸ் அரசால் போர் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டவன்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரிக் கிளிண்டன் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து சுட்டிக் காட்டிய மாந்த பேரவலத்தை நிகழ்த்திய மண்டையோட்டில் அமர்ந்து கொண்டு ஆட்சிப் புரியும் இந்த நூற்றாண்டின் ஆபத்து நிறைந்த சிங்கள வெறியன். ஐ.நா.பொதுச்செயலாளர் பான்.கி.மூன். அவனைப் பார்த்து, மாந்த குல எதிரி என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இந்த கொடியவனை விசாரிக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் விசாரணைக்குழு அமைத்திருக்கிறது. என்.டி.டிவி. அதன் வரலாற்றில் முதல் முறையாக நான்கு நாட்கள் சிங்கள பேரினவாதம் நிகழ்த்திய கடுமையான மாந்தகுல எதிர் நிகழ்வுகளை பதிவு செய்து, உலகமெல்லாம் பரப்பியது. இப்படிப்பட்ட ஒரு கொலைக்கார பாவி, அச்சமின்றி இந்தியாவிற்கு வருவதும், அவனுக்கு 1,900 கோடி ரூபாய் நிதி உதவி தருவோம் என நடுவண் அரசு சொல்வதும் நம்மை கடும் சோதனைக்கு உள்ளாக்குகிறது.
இந்த மாந்தகுல எதிரி டெல்லிக்கு வருகிறான். அவனுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்போகிறார்கள். இந்த வரவேற்பும், இந்த நிதி உதவியும் லட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்ற அந்த கொடுங்கோலனுக்கு அளிக்கப்படும் பரிசா என கேட்க வேண்டுகிறோம். செந்தமிழ் மாநாடு நடத்துபவர்கள் அந்த அயோக்கியனை எமது நாட்டிற்குள் அனுமதிக்காதே என்று சொல்வதற்கு பதிலாக, அவனுக்கு சாமரம் வீசுவதைப் போன்ற கடிதத்தை பிரதமருக்கு எழுதுகிறார்கள். இருவரும் சேர்ந்துதானே எம் இனத்தின் வேறறுக்கும் கொடுஞ்செயலை நிகழ்த்தி முடித்தார்கள். அப்படியிருக்க, இவர்கள் இந்த கொடுங்கோலனுக்கு எதிராக எதை செய்யப்போகிறார்கள். ரத்தக் கறையோடு வரும் அந்த கொடுங்கோலனின் கரங்களைப் பற்றி குலுக்கப் போகிறார்கள்.
மானம், ஈனம், சூடு, சுரணை அற்ற அவன், இவர்களைப் பார்த்து சிரிக்கப்போகிறான். தமிழர்களை கொன்றதற்கு நன்றி சொல்லவா அவன் டெல்லி வருகிறான். இல்லையெனில் தமிழர்களை கொன்று குவிக்க இவர்கள் கொடுத்துதவிய கருவிகளுக்கு நன்றி சொல்ல வருகிறானா? உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள், தமிழ் மொழி பேசும் ஒவ்வொருவரும் ராஜபக்சேவே திரும்பிப் போ என்று மானசீகமாக குரல் எழுப்ப வேண்டும். தான் தமிழன் என்று சொல்லிக் கொள்பவர்கள் அந்த கொடியவனின் கொடும்பாவியை எரித்து தமது எதிர்ப்புகளை பதிவு செய்ய வேண்டும். எத்தனை எத்தனை துன்பங்களை எமது மக்கள் மீது திணித்த பெரும் கொடுமையாளன், எமது மக்களின் வாழ்வாதாரத்தையும், இன அடையாளத்தையும் அழித்தொழிக்க முனைந்த அக்கிரமக்காரன் துணிவோடு இந்தியா வருகிறான்.
இந்த துணிச்சலை, இந்த கொடியவனுக்கு கொடுத்தது யார்? தமிழாய்ந்த தமிழ் மகன், தமிழ் நாட்டின் முதல்வனாக இருக்கும் முத்தமிழ் அறிஞர் செம்மொழி மாநாட்டின் கதாநாயகன் கருணாநிதி இந்த கொடியவனை எதிர்த்து, எம் இனத்தை அழித்த துரோகியே நீ வெளியேப் போ என்று சொல்வதற்குப் பதிலாக, தமது மக்களவை உறுப்பினர்களை அனுப்பி, அவனிடம் கோரிக்கை வைக்கப்போகிறார்களாம். கடந்த ஆண்டு முள்வேலி முகாமுக்குள் முடக்கப்பட்ட எமது மக்களை சந்திக்க சென்று திரும்பிய இந்த மக்களவை குழு, இதுவரை எதைக் கிழித்தது என்று யாருக்கும் விளங்கவில்லை.
அந்த கொடியவனை சந்தித்து, கை குலுக்கியதைத் தவிர வேறு என்ன பெரிதாக சாதித்தது? என்று புரியவில்லை. அவனை சந்தித்து விட்டு வந்தப் பிறகு, இந்த முகாமிலிருந்து வேறொரு முகாமிற்கு எமது மக்கள் மாற்றப்பட்டார்களா? என்றால், இல்லையே. எமது இனம் வாழ்ந்த இல்லங்கள் எல்லாம் சிங்கள காடையர்களின் குடியேற்றங்களாக மாறியிருக்கிறது. தமிழீழ தாயகத்திலிருந்து வரும் தகவல்கள், நமது நெஞ்சை உலுக்கி எடுக்கிறது. எங்கள் பண்பாட்டை காப்பாற்றுங்கள், எங்கள் கலாச்சாரத்தை காப்பாற்றுங்கள் என அழுது ஓலமிடும் எமது உறவுகளுக்கு கரம் நீட்டி ஆறுதல் சொல்ல எம்மால் முடியவில்லை. இப்படியிருக்க, எமது மக்களின் நிலங்களை, எமது மக்களின் இல்லங்களை, எமது உறவுகளின் உழவு கட்டமைப்புகளை அபகரித்துக் கொண்டு, அதை சிங்களனுக்கு தாரைவார்த்துக் கொடுத்த பெருங் கொடுமையைச் செய்த தமிழ் நிலங்களை கொள்ளையடித்த, கொள்ளைக்காரன் ராசபக்சேவை சந்திக்க இந்த மக்களவை உறுப்பினர்கள் ஏன் போக வேண்டும்? அவன் விமானத்தை விட்டு இறங்கும்போது, தமிழக மக்களவை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமிழினத்தை அழித்த கொடுமையாளன் ராசபக்சேவே திரும்பிப் போ என முழக்கமிடுவார்களாயின், அவர்கள் தமிழ் இன மானத்தை காத்தவர்களாவார்கள். தமிழர்களின் மனசாட்சியை உணர்ந்தவர்களாவார்கள்.
ஆனால் நாம் நினைப்பதை நிறைவேற்ற கருணாநிதியின் ஆட்சி சுகம் அனுமதிக்காது. தமிழ்நாட்டில் தமிழர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன், பெரியார் திராவிட கழக செயலாளர் விடுதலை ராசேந்திரன் போன்றோர்கள் ஒருபுறமும், மறுபுறத்தில் நாம் தமிழர் இயக்கமும் இந்த கொடுங்கோலனுக்கு எதிராக கண்டன முழக்கத்தை முன்வைத்து களத்தில் இருக்கும்போது, கருணாநிதி கடிதம் எழுதுகிறார், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் 2009 டிசம்பர் மாதத்திற்குள் மறுவாழ்வு அளிக்கப்படும் என்ற அந்நாட்டு அரசு அளித்த உறுதி நீங்கள் அறிந்ததுதான். ஐயா, பிரதமரே பாருங்க. எங்கள் மக்கள் ரொம்ப பாவங்க என்று சொல்வதைப் போல இந்த வரிகள்.
அடுத்து எழுதுகிறார். இலங்கையில் இப்போதும் எண்பதாயிரம் தமிழர்கள் முகாம்களில் இன்னும் இருக்கின்றனர். இவர்கள் அரசிடமிருந்து மறுவாழ்வு பணிகளை எதிர்பார்த்திருப்பதாக எமது கவனத்திற்கு வந்திருக்கிறது. இதுதான் இந்தியாவின் பிரதமருக்கு, தமிழ்நாட்டு முதல்வர் எழுதியிருக்கும் கடிதத்தின் சாராம்சம். அதோடு அவர் விட்டிருக்கலாம். தமது கட்சியின் மக்களவை உறுப்பினர்களை அனுப்பி, தமிழர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமாறு வலியுறுத்தச் செய்வாராம். நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் கூசுகிறது. வெறும் மூன்று நாட்களில் ஆயிரக்கணக்கான மக்களை சவக்குழிக்கு அனுப்பிய பெரும் கொடுமைக்காரன், நீ தமிழன் என்று சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. மனிதன் என்ற பார்வையிலாவது இந்த மாந்தகுல எதிரியை கண்டித்திருக்க வேண்டாமா?
ஆனால் அவனிடம் கெஞ்சி கூத்தாட வேண்டிய கட்டாயம் நமக்கு ஏன் வந்தது? கேவலம் பதவி சுகத்திற்காக, இன மான அடையாளத்தையும், நமது தமிழர்களின் வாழ்வுரிமையையும் விட்டுக் கொடுக்கும் அளவிற்கு நாம் போய்விட்டோமே? நமக்கு இச்செம்மொழி மாநாடு ஒரு தேவையா? என்பதை உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் ஒரே குரலில் சொல்கிறார்கள். அதெல்லாம் இவர்களின் காதுகளில் விழப்போவது கிடையாது. தமது சொந்த உறவுகள் கொடும் துயரில் இருக்கும்போது, இவர்கள் மாநாடு நடத்தும் அளவிற்கு மன இறுக்கம் கொண்டவராகத்தான் அரசாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கோ இருக்கும் என்.டி.வி. ராசபக்சேவின் தமிழ் விரோத கொள்கையை, தமிழர்களுக்கு இழைத்த அநீதியை, தமிழக மீனவர்கள் பட்ட அவலத்தை, அவர்தம் குருதியால் கடல்நீரை சிவப்பாக்கியதை செய்தியாக வெளியிடுகிறது. தமிழ்நாட்டில் இரண்டு பெரும் தொலைக்காட்சி குழுமங்கள் வைத்திருக்கும் இவர்கள், ஒருநாளாவது இந்த பெருங்கொடுமையை செய்தியாக பதிவு செய்திருப்பார்களா? அவர்கள் கோடிக் கோடியாக பணம் திரட்டியது, இத்தமிழக மக்களின் வியர்வையிலிருந்து விளைந்ததுதானே? அப்படிப்பட்ட அவர்களின் உழைப்பும், வியர்வையும், குருதியும் கலந்த பணத்தைக் கொண்டு ஆடம்பரமாக வாழக்கூடிய இவர்கள், எம்மினத்திற்கு எதிராக அந்த கொடியவன் செய்த அட்டகாசத்தை, அநியாயத்தை தட்டிக் கேட்காவிட்டாலும் பரவாயில்லை, இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நிகழ்ந்தது என சுட்டிக்காட்டியாவது இருக்கலாம் அல்லவா?
என்ன செய்வது? இது யாம் பெற்ற வரம். தமிழினம் உலகெங்கும் அல்லல்பட வேண்டும் என்பது அவனுக்கு ஏற்பட்ட ஒரு வாழ்க்கை. இதையெல்லாம் உடைத்தெறிவதற்குத்தான் இந்த அவலம் நிகழக்கூடாது என்பதற்காகத்தான், தமிழனின் தன்னிரகற்ற வீரத்தை அடையாளம் காட்டத்தான் அளப்பரியா ஆற்றலாளன், அநியாயத்திற்கு விடைகொடுக்கும் எள்ளாளன், நீதியை வென்றெடுக்க சமர் புரியும் பெரும் கோபக்காரன், பகைவனுக்கு பகை மொழியால் பதில் சொன்ன பகுத்தறிவு பண்பாளன், நாகரீகத்தின் அடையாளத்தை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டியவன், உலகத் தமிழர்களின் முகவரியாய் முத்திரையாய் நின்று நிலைப்பவன், சிரிப்பு முகத்தால் எமது துயரத்தைப் போக்கும் சிந்தனையாளன், அடிமை தளையை உடைத்தெறிந்து, உரிமையை மீட்டுத்தந்த புரட்சியாளன் எமது தேசியத் தலைவன் களத்தில் இருந்தபோது இப்படிப்பட்ட பெருங்கொடுமை நிகழவில்லை.
அவர் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். நரிகள் ஒன்றுகூடி நாட்டாமை செய்கிறது. ஆகவேத்தான் மந்தைக்கொரு ஆட்டைக் கேட்டு நரிக்கூட்டத்தின் அட்டகாசம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒழிய வேண்டும். இந்த மாந்த குல அநீதி ஒழித்தெறியப்பட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து அந்த கொடுமையாளனை திரும்பிப் போ என்று முழக்கம் எழுப்ப வேண்டும். அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் இந்த பார்ப்பனிய காங்கிரஸ் கூட்டாளிகளை அம்பலப்படுத்த வேண்டும். இது நமது கடமை. ஒன்றிணைவோம். தமிழர் வாழ்வை மீட்டெடுப்போம். தமிழீழத்தை உருவாக்குவோம். தொடர்ந்து போராடுவோம். வெற்றி நமதே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment