Friday, June 25, 2010

யாரடா பயங்கரவாதி?

தமிழீழ மக்கள்மீது கடந்த 60 ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டுவந்த இன அழிப்பு நடவடிக்கையின் உச்சக்கட்ட நடவடிக்கையாக கடந்த 2009 மே திங்களில் ஒரே நாளில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்றொழித்த பெரும் கொடுமைக்காரன் இட்லரின் அவதாரமாக முசோலினியின் மூளையாக செயல்பட்ட ராசபக்சே என்ற கொலை வெறியனின் செயல்கள் இன்று அம்பலப்பட தொடங்கிஇருக்கின்றன. சிங்கள இனவெறி பாசிச அரச பயங்கரவாத நடவடிக்கைகள் மெல்ல மெல்ல கசிந்து வர துவங்கியிருக்கிறது. வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு மாந்தகுல கொடுமைக்கு அளவுகோல் வைத்தவனாக ராசபக்சே இந்த 21ஆம் நூற்றாண்டின் இணையில்லா அடக்குமுறையாளனாக காட்சி அளிக்கிறான்.

நடந்து முடிந்த மாந்தகுல பேரழிவு நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் அச்சத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்குபவையாக இருக்கிறது. யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்ற மமதையோடு தமிழீழ மக்களை கொன்றொழித்த ராசபக்சே, இன்று அங்கே சிங்கள பேரினவாதத்தின் களமாக தமிழீழ பூமியை மாற்றும் பணியை மிக சிறப்பாக, வேகமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறான். யாரெல்லாம் இந்த பெருங்கொடுமைக்கு துணைபோனார்களோ, அவர்களே கூட நடுங்கி, அடடா என்று வாய்ப் பிளந்து நிற்கும் அளவிற்கும் தோண்டும் இடங்கள் எல்லாம் பிணங்களாக, பார்க்கும் பூமியெல்லாம் சமாதியாக மாறியிருப்பதைக் கண்டு திகைத்து நிற்கிறார்கள். அங்கே நடைபெறுவது ஒரு இன அழிப்புப் போர் என்று மிக கடுமையாக உலகத்தமிழர்கள் எல்லாம் எச்சரித்தபோது, எதையும் கண்டுகொள்ளாத உலக நாடுகள் சபை, இன்று அதன் உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கியிருக்கிறது.

உலக நாடுகளில் பல, ராசபக்சே போர் குற்றவாளிதான் என்ற மிக சாதாரண நடவடிக்கையின்கீழ் ராசபக்சேவை கண்டித்திருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி ராசபக்சே ஒரு மனித பேரழிவின் ஆற்றலாக, இந்த பூமியில் வாழும் ரத்த வெறி பிடித்த ஆட்சியாளன் என்பதை உலகம் உணரத் தொடங்கி இருக்கிறது. தொன்மை வாய்ந்த ஒரு இனத்தை அவர்களின் சொந்த பூமியிலேயே போட்டு புதைத்து, வாய்பிளந்து பிணம் மீது நின்று வெற்றி கொண்டாடும் கேடுகெட்ட மாந்தகுல எதிரியாக ராசபக்சே இன்று அறிமுகப்படுத்தப்படுகிறான். எப்படியாவது தமிழீழத்திலே இருக்கும் தமிழ் இனத்தை முற்றிலுமாக அழித்து, அவர்களின் இனமுகவரியை இல்லாதாக்கும் பெரும் கொடுமையை தமிழீழ மண்ணிலே நிகழ்த்திக் கொண்டிருப்பதாக நாள்தோறும் வரும் செய்திகள் சொல்லிக் கொண்டிருக்கிறது.

தமிழ் இனம் என்று ஒன்று தமிழீழ மண்ணில் வாழ்ந்ததற்கான அடையாளத்தை சிதைத்து, அங்கே சிங்கள பாசிச வெறிக்கொண்ட அவர்களின் படை அணிகளை கொடியேற்றும் பெரும் கொடுமையை ராசபக்சேவின் அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. உலகு எல்லாம் துண்டு ஏந்தி பிச்சைக் கேட்கும் இந்த பிச்சைக்கார அரசாங்கம், தமிழீழ மக்களின் மறுவாழ்வுக்காக தமது அரசு நிவாரணம் செய்யப்போகிறது என்றெல்லாம் பொய் சொல்லிக் கொண்டு இப்படி உலகெல்லாம் கிடைக்கும் பணத்தை தமது சிங்கள மக்களின் நல்வாழ்வுக்காகவும், தமிழ் மக்களின் ஒழிப்புக்காகவும் திட்டமிட்டு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை ஊடகங்கள் மிக மெல்லியதாக சொல்லத் தொடங்கியிருக்கும் தருணத்தில், இது இன அழிப்பு என்று தமிழகத்திலும், உலகெங்கும் இருக்கும் உறவுகளும் ஓங்கி அறிவித்த அனைத்து செய்திகளும் உண்மை என வெளிப்பட தொடங்கியிருக்கிறது.

அதன் தொடக்கமாகத்தான் சிங்கள இனவெறியன் ராசபக்சே உலக நாடுகளின் பொதுச் செயலாளர் பான்-கீ-மூனால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவை தனது நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என அடாவடியாக அறிவித்திருக்கிறான். புலிகள் மீதான போர் என அறிவித்து, மாபெரும் மாந்த உரிமை மீறலை நிறைவேற்றிய ராசபக்சேவிற்கு உலக நாடுகள் சபையின் விசாரணைக் குழுவை கண்டு நடுநடுங்கி நிற்பதற்கான காரணமென்ன? மடியில் கனம் இல்லையென்றால் வழியில் ஏன் பயம்? நீ உண்மையிலேயே நல்லவன் என்றால், உலக நாடுகளின் அவைதான் வந்து விசாரிக்கட்டுமே. நீ உண்மையை சொல்லேன். ஏன் அந்த குழுவை அனுமதிக்க மாட்டேன் என்று தடுக்க முயற்சிக்கிறாய்? அதோடல்லாமல், அந்த நாட்டின் இறையாண்மையில் உலக நாடுகள் தலையிடுவதாக கூப்பாடு போட வேண்டிய காரணம் தான் என்ன?

என்ன இறையாண்மை? எங்கள் தமிழீழ குடியரசின் மீது நீ நடத்திய பெரும் சமர், எமது தமிழ் மக்கள் மீது நீ நடத்திய கொடும் தாக்குதல், எமது தமிழீழ பெண்கள் மீது நீ நிகழ்த்திய பாலியியல் வன்கொடுமை எந்த விதத்தில் சரியானது? அது எமது இறையாண்மை மீது, எமது நாட்டின் இறையாண்மைமீது நடத்திய சமரல்லவா? அப்பொழுது இல்லாத உன்னுடைய இறையாண்மை போக்கு, இப்போது எப்படி உதயமானது? எதையாவது சொல்லலாம், எப்படியாவது சொல்லலாம், அதற்கு உன் நாட்டிலே வர்த்தகம் செய்து, ரத்தத்தில் தோய்த்தெடுத்த பணத்தில் தம் வாழ்வை வளர்க்கலாம் என்று போட்டிப்போடும் நாடுகள் வேண்டுமாயின் உன் நாட்டின் இறையாண்மையாக அதை கருதலாம். ஆனால் நாங்கள் எப்படி கருதமுடியும். எமக்கு நீதி வேண்டும். எமது மக்களின் கதறல்களுக்கு காரணம் வேண்டும். எமது பெண்களின் கண்ணீருக்கு தண்டனை வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்க, அதை முடியாது என்று சொல்லும் அளவிற்கு எங்கிருந்து துணிவு வந்தது? இந்த துணிவை உனக்குக் கொடுத்தது யார்? தனியாக நின்று எமது புலிகள் படையோடு மோத முடியாமல், பேடியாக கூட்டுச் சேர்ந்து அல்லவா எம்மை வென்றாய்? உன் ஆண்மையை தவற விட்ட நீ, விசாரணையைக்கூட தவிர்க்க ஏதேதோ திட்டம் வகிக்கிறாயே? இனியும் உலகம் உன்னை நம்ப தயாராக இல்லை.

நடைபெற்றது மாந்தகுல பேரழிவு தான். நடத்தி முடித்த உன்னுடைய அட்டூழியம் ஒரு இனஅழிப்பின் அடையாளம்தான் என்பதை உலக நாடுகள் புரிந்து கொள்ளும் காலம் தொடங்கியிருக்கிறது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும் என்கின்ற தத்துவத்திற்கேற்ப உண்மையை ஆழ குழி தோண்டி புதைத்தாலும் அது ஒரு நாள் தடையை மீறி எழுந்துவரும் என்கின்ற தத்துவத்திற்கேற்ப இதோ நீ செய்த அநியாயங்களின் அணிவகுப்பு இப்போது படிப்படியாய் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. இருட்டிலே மூடி மறைக்கலாம் என்று நீ செய்த முடிவு, இப்போது வெளிச்சம்போட்டு காட்டப்படுகிறது.

நீ செய்த அக்கிரமத்தை மறைப்பதற்காக ஊடகங்களை கழுத்தைப் பிடித்து நெறித்தாய். கருத்தியல்வாதிகளை கதறக் கதற கொன்றாய். அமைதிக்காக வந்தவர்களை அத்துமீறி கொன்றொழித்தாய். அத்தனையும் நிகழ்த்திவிட்டு, இப்போது உத்தமனைப் போல் வேஷம் போடுகிறாயே, எப்படி முடிகிறது? இதுதான் சிங்கள இனத்தின் அடையாளமோ! ஆனாலும்கூட எமது இனத்தின் எச்சங்கள் இருக்கும்வரை நாம் தமிழீழத்தை அடைந்தே தீருவோம். எமது இனத்தின் இறுதியான ஒரு குழந்தையின் அழுகைக்குரல் கேட்கும்வரை எமக்கான நாட்டை நாம் அடைந்தே தீருவோம். எத்தனை நாடுகளை கூட்டு சேர்த்து எவ்வளவு காலத்திற்கு தடுக்க முடியும்?

எத்தனை ஆயுதங்களை குவித்து வைத்து உயிராயுதங்களாய் உலாவரும் எமது உணர்வுகளை ஒடுக்கமுடியும்? கடுமையான உமது கருவிகள் எங்களுடைய கால்களில் போட்டு மிதிக்கும் காலம் இதோ அருகாமையில் இருக்கிறது. அடுக்கடுக்காய் தவறுகள், அடக்க முடியாத அளவிற்கு அக்கிரமங்கள், உரிமை கேட்டவர்களை ஒடுக்கிப்போட்ட உம் திமிர், அரசாங்கத்தின் தலைமையில் நீ இருக்கிறாய் என்பதற்காக உன் குடும்பத்தையே சிங்கள மண்ணிற்கு உரிமை கொண்டாட முனைந்தாயே? சிங்களனும் சேர்ந்தே உன்னை சிதறடிக்கும் காலத்திற்கு புதிய களம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது.

எமது உறவுகளே! சிங்கள பாசிச வெறியன் எமது ஒட்டுமொத்த உறவுகளை அடையாளம் தெரியாத அளவிற்கு அழித்துப்போட முனைந்த அக்கிரமக்காரன், அவன் துரோகங்களுக்கும், அவனின் அக்கிரமங்களுக்கும் துணைப்போன நம் இன துரோகிகள் அனைவரையும் அடையாளம் காட்டும் காலத்திற்கு நாம் வந்திருக்கிறோம். உலக நாடுகள் குழுவை அணுகுவோம். அமைக்கப்பட்டிருக்கும் விசாரணை குழுவிடம் சிங்கள இனவெறியன் நமது இனத்திற்கெதிராக செய்த அக்கிரமத்தின் சான்றுகளை உடனடியாக அளிக்க முனைப்புக் காட்டுவோம். புகைப்படங்களாக, காட்சிகளாக, தகவல்களாக ஏதெல்லாம் உங்களிடம் இருக்கிறதோ, அவை அனைத்தையும் விசாரணைக் குழுவிற்கு அனுப்புங்கள். இன அழிப்பின் குற்றவாளியை கூண்டில் ஏற்றி தண்டனை தருவதற்கு, வரலாறு நமக்கொரு வாய்ப்பை தந்திருக்கிறது.

நாட்டை காத்து, நாட்டின் ஒவ்வொரு அசைவையும் உயிருக்கு நிகராய் நேசித்து, மொழி, இனம், கலாச்சாரங்களை தமது உயிர் மூச்சாய் கருதி, அங்கிருக்கும் சிறு உயிருக்குக்கூட தீங்கு வரக்கூடாது என்பதிலே பெரும் முயற்சி எடுத்த புலிகளின் படையை பயங்கரவாதிகள் என்று பரப்புரை செய்தவனை உலகம் ஒருங்கிணைந்து பயங்கரவாதி என்று அறிவிக்கும் காலத்திற்கு வந்திருக்கிறது. எந்த தாக்குதல் நிகழ்ந்தாலும், அந்த தாக்குதலுக்கு இடையே சிங்கள இனவெறி அதிகாரிகளின் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் இருந்தால் அவர்களை பத்திரப்படுத்திவிட்டு, சமரைத் தொடங்குங்கள் என்று உத்தரவிட்ட மாந்தநேய சிந்தனையாளன் மேதகு தேசியத் தலைவர் அவர்களைப் பார்த்து பயங்கரவாதி என்று அறிவித்தவன், இன்று உலக அரங்கிலே பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறான்.

வனவிலங்குகளைக்கூட வாயார வாழ்த்தி மடி மீது கிடத்தி, தாயாக நேசித்த தமிழ் இனத்தின் தவப்புதல்வன் மேதகு தேசியத் தலைவர் அவர்களை பயங்கரவாதி என்று அறிவித்த சிங்கள பேரினவாத பயங்கரவாதி இன்று சர்வதேச குழுவால் பயங்கரவாத விசாரணைக்கு உட்படுத்தப்படப்போகிறான். நீங்கள் கேளுங்கள், யாரடா பயங்கரவாதி? 30 ஆண்டுகாலமாக வலிமை வாய்ந்த ஆற்றலாக களத்திலே இருந்தபோதுகூட, சிங்கள மக்களுக்கு சிறு தீங்கும் செய்யாத புலிகளா பயங்கரவாதி? புலிகளின் கண்ணியத்தை தமது கண் இமைப்போல் காத்த மேதகு தேசிய தலைவர் அவர்களா பயங்கரவாதி? ஆண், பெண், முதியோர், நோயார் என்று பாராமல் அனைவரையும் கொன்றொழித்த நீ பயங்கரவாதியா? யாருக்கும் தீங்கு வரக்கூடாது என்று யாரோடு எமக்கு சமர், அவனோடே களம் என கண்ணியமாக வாழ்ந்த எமது தேசிய தலைவர் பயங்கரவாதியா? காலம் மாறுகிறது. கடமையாற்ற புறப்படுங்கள். தமிழீழம் அடையும்வரை தவறாது உழையுங்கள். நாம் வெற்றிபெறும் காலம் அருகில் இருக்கிறது. தேசிய தலைவர் தலைமையிலான தமிழீழ குடியரசு மலரப்போகிறது.

-கண்மனி

No comments: