Thursday, July 28, 2011

பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா? - வே.மதிமாறன்



‘பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று சிங்கள ராணுவத்தின் செய்தியை விடுதலைப் புலிகளின் எதி்ர்ப்பாளர்கள் திரும்ப திரும்ப உறுதியாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உறுதியில் அந்தச் செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என்ற விரும்பமும் இணைந்திருக்கிறது. அந்த விருப்பமே அவர்களை உறுதியாக சொல்ல வைக்கிறது.

‘பிரபாகரன் இறக்கவில்லை’ என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உறுதியாக சொல்கிறார்கள். இவர்களின் உறுதியையும் இவர்களின் விருப்பமே தீர்மானிக்கிறது.

இலங்கைஅரசும், உளவுத்துறையும் வெளியிட்ட படங்கள்தான் விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள், பார்ப்பனர்கள் மத்தியில் பெரிய செல்வாக்கும் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அவர் உயிரோடு இருக்கக் கூடாது, விடுதலைப் புலிகள் இயக்கம் இத்தோடு முடிந்து விட வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள். அதனால்தான் இலங்கை ராணுவத்தின், இந்திய உளவு நிறுவனங்களின் செய்திகளை, படங்களை ஒரு சின்னன சந்தேகமின்றி நம்பவும், அவைகளை தனது படங்கள் போல எடுத்து பயன்படுத்தவும் செய்கிறார்கள்.

எந்தப் படங்களை வைத்து இவர்கள் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று உறுதியாக சொல்கிறார்களோ, அந்தப் படங்களைப்பார்த்துதான் ஆதரவாளர்கள் சந்தேகங்களை எழுப்புகிறார்கள். அவர் உயிரோடு இருப்பதாகவும் நம்புகிறார்கள்.

இதில் வேடிக்கை இலங்கை ராணுவம் வெளியிட்டு இருக்கிற பிரபாகரன் பற்றிய படத்தை, செய்தியை இலங்கை அதிபர் ராஜபக்சேவே நம்பவில்லை. அதனால்தான் ‘உண்டு, இல்லை‘ என்று திட்டவட்டமாக அறிவிக்க மறுக்கிறார். ராணுவம் வெளியி்ட்டு இருக்கிற பிரபாகரன் பற்றிய படங்களின் மூலம் தான் செய்த கொலைகளையும், வெறியாட்டத்தையும் திசை திருப்பவும், மீதமிருக்கிற தமிழர்களைப் பற்றி பேசாமல் பிரபாகரன் பற்றியே பேசவேண்டும் என்ற நோக்கத்திற்காகவுமே ராஜபக்சே மவுனம சாதிக்கிறார்.

அவரின் பிரதிநிதியாகவே செயல்படுகிற இங்கு இருக்கிற ஊடகங்கள் ‘பிரபாகரன் இறந்து விட்டார்‘ என்ற செய்தியை சிறப்பாக பரப்பிக் கொண்டிருக்கிறது. அதை மறுத்து ‘பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்’ என்று யாராவது நம்பினால், அப்படி நம்புவதே தவறு, என்று ராஜபக்சே ஆதரவு ஊடகங்களும் பார்ப்பனர்களும் எரிச்சலும், கோபமும் அடைகிறார்கள்.

பிராமணர் சங்கத்தின் பத்திரிகையான தாம்ப்ராஸ்…

‘‘இலங்கையில விடுதலைப்புலிகளின் தலைவர் திரு. வேலுபிள்ளை பிரபாகரன் இறந்து விட்டார் என்று இலங்கை ராணுவமும், இறக்கவில்லை என்று விடுதலைப் புலிகளின் சில ஆதரவாளர்களும் கூறுகின்றார்களே இதில் எது உண்மை?

-எம். ராதாகிருஷ்ணன், சேலம்

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை முறியடித்தது மட்டுமின்றி, அவர்களை ஈழத்தில் செயல்பட முடியாத அளவிற்கு விரட்டியடித்து விட்டது இலங்கை ராணுவம் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வேலுபிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று தான் அரசியில் நோக்கர்களும், நடுநிலை பத்திரிகையாளர்களும் தெரிவிக்கின்றனர்.

என்று மனமார எழுதுகிறது.

சோ துக்ளக்கில்…

விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை இலங்கை அரசு வெளியிட்டதிலிருந்து – அது பொய்ச் செய்தி என்று கூறுகிற மறுப்புகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இலங்கை அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள செய்தி தவறானது என்பது நிரூபிக்கப்படாத வரையில், பிரபாகரன் இறந்துவிட்டார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்: பல பத்திரிகைகளும், இந்திய அரசும் கூட, இந்தச் செய்தியை அப்படித்தான் பார்க்கின்றன.

………………………………………………………..

இது எப்படி வீரமரணம் என்பது நமக்குப் புரியவில்லை. அப்பாவி மக்களை தனக்குப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, அவர்கள் மத்தியில் தான் பாதுகாப்பாக இருந்துகொண்டு, இலங்கை ராணுவத்திடமிருந்து தப்பிக்க வழி தேடிய பிரபாகரனின் மரணம் எப்படி வீரமரணமாகும்?

……………………………………

தமிழ்த் தலைவர்களைக் கொன்று, தமிழர்களை அடிமைப்படுத்தி, அவர்களுடைய சிறுவர்களை இலங்கை ராணுவத்திற்குப் பலியாக்கி, தமிழர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, பிரபாகரன் நடத்தியது விடுதலைப் போர் அல்ல: தான் ஆள்வதற்கு, தன்னுடைய சர்வாதிகாரத்தின் கீழ் ஒரு நிலப்பரப்புதான் அவர் நாடியது. ஒரு நிலப்பரப்பைத் தனதாக்கி, அதில் வாழ்ந்த மக்களைத் தன்னுடைய அடிமைகளாக்கி விட, ஒருவர் நடத்திய வெறிச் செயல்கள் விடுதலைப் போராட்டம் அல்ல, ஆதிக்க வெறி.

…………………………………..

பற்பல காரணங்களினால், சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்துவிட்ட இலங்கைத்தமிழர்கள். இனி நிம்மதியுடன் வாழ்வதற்கு இப்போது வழி பிறந்திருக்கிறது. இந்த வாய்ப்பு கானல் நீராகப் போய்விடாமல் பார்த்துக் கொள்வது இந்திய அரசின் கடமை.

தமிழர்களின் வாழ்க்கை அல்ல, தமிழர்களே முடிந்திருக்கிறார்கள். ஆனால் சோ, ‘இனி நிம்மதியுடன் வாழ்வதற்கு வழி பிறந்திருக்கிறது’ என்று எழுதுகிறார்.

இவர்கள் விடுதலைப் புலிகளை எதிர்த்து எழுதுவதை நாம் குறை சொல்லவில்லை. அது அவர்களின் அரசியல் நிலை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், இலங்கை ராணுவம் தமிழர்களை கொன்று குவிப்பதை எதிர்த்து இலங்கை அரசையோ, ராணுவத்தையோ, ராஜபக்சேவையோ கண்டித்து ஒரு வார்த்தைகூட எழுத மறுக்கிறார்களே, ஏன்?

கேட்டால், ‘அப்பாவி மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வைத்திருக்கிறார்கள் விடுதலைப் புலிகள்’ என்று சொல்கிறார்கள்.

சரி. இதை உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.

சங்கர மடத்தில் புகுந்து ஒரு தீவிரவாத கும்பல் அங்கிருக்கிற ஜெயெந்திரன்-விஜேயேந்திரன் இன்னும் அவர்களை ஸேவிக்க வந்த பார்ப்பனர்களை, சொர்ணமால்யா போன்ற பக்தர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது ராணுவம் அல்லது காவல் துறை என்ன செய்யவேண்டும்?

தீவிரவாதிகளிடம் தந்திரமாக பேசி அல்லது கோரிக்கையை நிறைவேற்றி பிணைக்கைதிகளாக இருக்கிற ஜெயெந்திரன்-விஜேயேந்திரன் இன்னும மத்தியம் ஒருமணிக்கு ஜெயேந்திரனை தரிசிக்க வந்த பார்ப்னர்களை பத்திரமாக மீட்க வேண்டும். இதுதான் முறை.

ஆனால், அதற்குப் பதில் ராணுவம் , ஜெயெந்திரன்-விஜேயேந்திரன் உட்பட்ட ஒட்டுமொத்தப் பார்ப்பனர்களையும் கொன்று, அதன் பிறகு தீவிரவாதிகளையும் கொன்றுவிட்டால் அது மனித தர்மமாகுமா? அதைச் செய்வதற்கு ராணுவம் எதற்கு?

இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளுடனான போரில் என்றாவது, ஒரு இடத்திலாவது ஈழத் தமிழர்களை பாதுக்காக்க வேண்டும் என்று செயல்பட்டதா?

‘மாறாக நீ என்னடா கொல்றது நானே கொல்றேன்’ என்று ஒரு நாட்டு ராணுவம் தன் சொந்த நாட்டு மக்களை இப்படித்தான் கொல்லுமா? உலகில் எந்த நாட்டிலாவது பிணைக்கைதிகளை முற்றிலுமாக கொன்று அதன் பிறகு தீவிரவாதிகளை கொன்ற ராணுவம் இருக்கிறதா?

இதுபொல் இன்னொரு குற்றச்சாட்டையும் சொல்கிறார்கள் சோ போன்ற பார்ப்பனர்கள், ஈழத்தில் இருக்கிற தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் துப்பாக்கி முனையில் மிரட்டித்தான் தனக்கு ஆதரவாக வைத்திருக்கிறாகள் என்று.

சரி. இது உண்மையாக இருந்தால், உலகம் முழுவதும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களில் மிகப் பெருமான்மையானவர்கள், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் புலிகளின் ஆதரவாளர்களாக இருப்பதற்கு எது காரணம்? அவர்களை யார் மிரட்டுவது?

தமிழர்களைக் கொன்று குவிக்கிற இலங்கை ராணுவம் நேர்மையானது. ராணுவத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்கள் தீவிரவாதிகள். கொலைக்காரர்கள். நன்றாகத்தான் இருக்கிறது மனுநீதி.

இவைகள் பிராமணர் சங்கம், சோ போன்ற பார்ப்பன உணர்வை மறைக்காமல் வெளிபடுத்துகிறவர்களின் நிலை. இதே நிலைதான் முற்போக்காக ‘ரொம்ப நல்லவன்’ மாதிரி பேசுற பார்ப்பனர்களின் நிலையுமாக இருக்கிறது.

இணையத்தில் விரவி இருக்கிற பார்ப்பனர்களில் பலர், ஈழப் பிரச்சினையில் பெரும்பாலும் எந்த கருத்தும் சொல்லாதவர்கள் அல்லது ஈழமக்களுக்கு எதிராக இலங்கை அரசும் இந்திய ராணுவமும் செயல் பட்டதை கண்டித்து எழுதாதப் பார்ப்பனர்கள். இவர்கள் பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தி பரப்பப்பட்ட பிறகு, மிகுந்த வருத்தத்தோடு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள்.

“பிரபாகரன் இறந்து விட்டார் என்பதற்காக ஈழ விடுதலைப் போராட்டம் இத்துடன் முடிந்து விடாது. அது எந்த தனிநபரையும் சார்ந்து இல்லை.” என்று ஒரு போராளியைப் போல் சிலர் பிரகடனப் படுத்தினார்கள். அவர்கள் உறுதியாக சொல்ல வருகிற செய்தி இதுதான் ‘பிரபாகரன் இறந்துவிட்டார்.’

இன்னும் சிலர் “விடுதலைப் புலிகள் மீது நமக்கு விமர்சனம் இருந்தாலும் 30 ஆண்டுகளாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதை நினைத்து வருத்தமாகத்தான் இருக்கிறது. பிரபாகரன் இறந்து விட்டார். விடுதலைப் புலிகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கிறார்கள். இனி அங்கே விடுதலைப் போராட்டம் நடைபெறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று நினைக்கும் போது இன்னும் அதிக வருத்தமாகத்தான் இருக்கிறது.” என்று ஈழப் போரட்டத்தில் அதிக அக்கறை உள்ளவர்கள்போல், ஒட்டு மொத்தமாக ஈழப் போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தார்கள். இவர்கள் சுற்றி வளைத்து சொல்ல வருகிற செய்தி இதுதான்:

“ ஒழிஞ்சான்டா பிரபாகரன். முடிஞ்சுதுடா விடுதலைப் புலிகள் இயக்கம்”

விடுதலைப் புலிகள் இயக்கமோ அதன் தலைவர் பிரபாகரனோ பார்ப்பன எதிர்ப்பாளகளோ இந்து மத எதிர்ப்பாளர்களோ் அல்ல. இன்னும் சொல்லப்போனால் பிரபாகரன் உட்பட அவர்களில் பலர் இந்து மத கடவுள் நம்பிக்கையாளர்கள்தான். ஆனாலும் பார்ப்பனர்கள் ஏன் அவர்கள் மீது கடும் வெறுப்பு கொண்டு இருக்கிறார்கள்?

இந்தக் கேள்விக்கு பார்ப்பனர்கள் இப்படி பதில் சொல்லக்கூடும்: “விடுதலைப் புலிகள் யாரை வேண்டுமானலும் கொலை செய்பவர்கள். வன்முறையாளர்கள். அவர்களை நாம் எப்படி ஆதரிக்க முடியும்?”

அப்படியானால் இவர்கள் ஆதரிக்கிற இலங்கை ராணுவம் என்ன ‘வாடியப் பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்கிற வள்ளலார் வழி வந்தவர்களா? இவர்களின் குரு ஜெயேந்திரன் என்ன சங்கரராமனுக்கு கனகா அபிஷேகமா செய்து வைத்தார்? இவர்கள் தீவிரமாக ஆதரிக்கிறவர்களின் யோக்கியதை இப்படி இருக்கும்போது, அப்புறம் ஏன் இவ்வளவு வன்மம் விடுதலைப் புலிகளின் மேல்? இதற்கான விடையை தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் நீங்கள் தந்தை பெரியாரிடம்தான் வந்தாக வேண்டும்.

தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசை கண்டிக்காத, இலங்கைக்குத் துணை நின்ற இந்தியாவைப் பற்றி ஒரு வார்த்தை எழுதாத இவர்கள்தான் மனிதாபிமானம் பற்றி பேசுகிறார்கள். நம்புகங்கள் தோழர்களே, பார்ப்பனர்களும் தமிழர்கள்தான். பாவம் பெரியார்.

‘இயேசு கிறிஸ்து என்று ஒருவர் இருந்தார்’ என்பதற்கு பைபிளைத் தவிர எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. ஆனால் அப்படி ஒருவர் இருந்தார் என்று இன்னும் கோடிக்கணக்கான மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுகூட பரவாயில்லை, அப்படி இல்லாத ஒரு நபர் ‘இப்போது வரப்போகிறார்‘ என்று 2000 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதையும் உண்மை என்று நம்பி ரொம்ப சீரியசா கண்ணீர் மல்க ‘வருகீறாரா’ என்று ஆவலோடு காத்துக் கிடக்கிறார்கள் மிகப் பலர்.

அதையே நம்புகிறவர்கள் இருக்கும்போது, தங்களின் தலைவர் அல்லது தாங்கள் விரும்புகிற தலைவர் கொல்லப்பட்டார் என்ற செய்தி ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாதவரையில், அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாதவரையில் அவர் உயிரோடு இருக்கிறார் என்று அவர் ஆதரவாளர்கள் நம்புவதில் என்ன தவறு இருக்க முடியும்?

Monday, July 25, 2011

விதி வெல்ல வாக்களித்தோம் வலி தந்தாரை தோற்கடித்தோம்!: சுதந்திரன்

நெற்றிப்பொட்டில் துப்பாக்கி முனை மரணம் கொடுக்கக் காத்திருக்கும் போதும் எங்கள்
உணர்வுகளை சாகடித்து விட்டு நடக்க முடியாது என்கிற உணர்ச்சி வெளிப்பாட்டை தமிழர்கள் நடந்து முடிந்திருக்கின்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

யாரெல்லாம் எமக்கு மரணம் கொடுத்தார்களோ அவர்களெல்லாம் புனிதர்களாகி வந்தபோதும், நாங்கள் சிந்திய இரத்தம் உறையும் முன்னர் தாய் மண்ணை முத்தமிடுவதாய் கூறிக்கொண்டு எங்கள் இரத்தத்தை சுவை பார்த்தவர்கள் மீட்பர்களாய் மாறி வந்தபோதும், எங்கள் உணர்வுகளை சாகடித்து விட்டு நடக்க முடியாது என்கிற உணர்ச்சி வெளிப்பாட்டை தமிழர்கள் நடந்து முடிந்திருக்கின்ற உள்ளுராட்சி சபைத்தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

குழந்தைக்கும், தாய்க்கும், தந்தைக்கும் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைக்கப்பட்டது. உங்கள் ஆட்சி முடிந்து விட்டது. இப்போது எங்கள் ஆட்சி நடக்கிறது. இப்போதும் ஆடினால் நாயைப்போல் சுடப்படுவாய் தெருவில், இதுதான் இப்படித்தான் அதிகாலை வேலிகளைப் பிரித்துக்கொண்டு முகமூடிகளுடன் ஏ.கே47 தாங்கி வந்தவர்கள் சொன்னார்களாம். எங்கேயோ…! எப்போதோ கேட்டது போன்றதொரு ஞாபகம் வருகிறது. இதுதான் இலங்கையில் முடிந்து விட்டதாய் சொன்னார்கள்.

ஆனால் இப்போதும் உயிரோடு இருக்கின்றது. ஆகவே தமிழர்கள் பிரிந்து வாழ தமிழீழம் கேட்டதில் என்ன தவறிருக்க முடியும்? தந்தையை, தாயை, மகளை நான்குபேர் பிடித்து வைத்திருக்க ஒரு பல்கலைக்கழக மாணவனை வீட்டு முற்றத்தில் போட்டு காட்டுமிராண்டித்தனமாக ஒரு கொலைகாரனைப் போல் சுற்றி நின்று அடித்தார்கள். இது இந்தியன் ஆமி காலத்தில் நடந்த சம்பவத்தின் கதையல்ல, கடந்த 22ம் திகதி கிளிநொச்சியில் நடந்த சம்பவம். நம்பமுடியவில்லைத்தான் எம்மாலும் முதலில், நம்பித்தான் ஆகவேண்டும் என்று உணர்ந்து கொண்டோம்.

சம்பவ இடத்திற்கு சென்று அந்த மக்களுடன் பேசியபோது, நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது வெறிநாய்களைப்போல் சிலர் அங்குமிங்கும் ஒடித்திரிந்து நாங்கள் யார்? என்ன செய்கிறோம் என அவதானித்துக் கொண்டிருந்தபோது. இதுதான் எல்லாம் முடிந்த தேசத்தில் நடந்து கொண்டிருக்கும் கதை.

25 அமைச்சர்கள் 325 கோடியுடன் கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் முகாமிட்டார்கள். தமிழர்களுடைய தன்மானம் என்ன விலை? முள்ளிவாய்க்காலில் நாங்கள் செய்த வெறித்தனத்தை மறப்பதற்கு எவ்வளவு பணம் கேட்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே.

ஒன்றை மட்டும் மறந்துபோனார்கள் அவர்கள். கொடுத்தது வலி மட்டுமல்ல, வடுவும்தான் அது தமிழன் என்றொரு இனம் வாழும் வரைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதை.

தாயை, தந்தையை, பிள்ளையை, மனைவியை, கணவனைப் பறிகொடுத்தவன் மறப்பானா? நடந்தது எல்லாவற்றையும் மறந்து விடுங்கள் என்ற வார்த்தையும், உயர்த்திய கைகளும், சிரித்த முகமும், நாங்கள் உங்கள் நண்பன் என்ற வார்தைகளும் முள்ளிவாய்க்காலில் தமிழன் சிந்திய இரத்ததிற்கு ஈடாகுமா?

இன்றும் கூட தமிழர்கள் மீது புரிந்த வெறித்தனத்திற்க்கு மன்னிப்புக்கோர முடியாதவர்கள், வாழவேண்டிய பிள்ளைகள் கண்கள் கட்டப்பட்டு கோழைகள் கைகளில் உள்ள துப்பாக்கிகளால் கொல்லப்படுவது கண்டு மனம்வருந்த முடியாதவர்கள், எப்படி எங்கள் நண்பனாகமுடியும்? எப்படி எங்கள் சகோதரனாக முடியும்? இதைக்கூட உணர்ந்து கொள்ள முடியாத மடையர்களாக தமிழர்கள் இருந்து விடுவார்கள் என்ற மமதைக்குத்தான் தமிழர்கள் சொல்லிக் கொடுத்தார்கள் சரியான பாடம்.

தேர்தலுக்கு முதல்நாள் இரவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன, ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்பட்டது, மதுப் போத்தல்கள், தீப்பெட்டிகள், இராணுவத்தினரால் கொடுக்கப்பட்டது, ஒரு வாக்குச் சீட்டு 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரைக்கும் விலை பேசப்பட்டது.

வாக்குச் சாவடிக்கு மிக அருகில் புலனாய்வாளர்களும், சிவில் உடையில் இராணுவத்தினரும் நின்று கொண்டு வெற்றிலைக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டு நின்றார்கள்,

நள்ளிரவு கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சி, மாயவனூர், சம்புக்குளம், மலையாளபுரம், பராதிபுரம், கோணாவில், கனகாம்பிகைக்குளம், போன்ற பகுதிகளுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் சுமார் 6 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுக்களைப் பறித்தார்கள்.

வீட்டில் தனித்திருந்த பெண்ணின் தலைமுடியை ஜன்னலால் பிடித்து இழுத்து தங்கள் வெறித்தனத்தைக் காட்டினார்கள். வீடுகளுக்கு அலவாங்குகளால் குத்தி வீட்டில் இருந்த பொருட்களைக் கொள்ளையடித்து அடக்குமுறையின் உச்சத்திற்கே போனார்கள், ஆனால் அடக்குமுறைக்கும் உங்கள் வெறித்தனத்திற்க்கும் அடங்கி அழுத தமிழன் இதே நாளில் (23ம்திகதி) 1983ம் ஆண்டு இறந்துபோய்விட்டான். பின்னர் தமிழன் யார்? எப்படியானவன் என்று சொல்ல நீங்கள் இடித்தாலும் மாவீரர் துயிலுமில்லங்கள் சாட்சி.

இப்போது நாமும் சாட்சி. தமிழ்த் தேசியம் தமிழரின் தாயகத்தில் பெரு வெற்றி பெற்றிருக்கின்றது. தமிழன் சுதந்திரமாக வாழ விரும்புகிறான் என்பதற்கு இதுவொரு சிறந்த சமிக்ஞை. இதில் எங்கள் மக்களும் பலர் விரும்பியோ விரும்பாமலோ அரசிற்கு வாக்களித்திருக்கிறார்கள். இவர்களுக்காக பரிதாபப்பட மட்டும்தான் நம்மால் முடியும்,

வாக்குப் பெட்டிக்கு அண்மையில் செல்லும்போது கண்முன்னே துடித்துத் துடித்து இறந்தவர்கள், இறந்த பிள்ளையை தூக்கிப் புதைக்க முடியாமல் மணல்தரையில் விட்டு வந்தது, உடல் சிதறிப்போய் கிடந்த பிள்ளை என எமக்கு நடந்த கொடுரங்கள் கண்முன்னே வராதுபோனது துன்பம்தான்.

ஆனால் இந்தத்தேர்தல் மூலம் நாம் ஒரு யதார்த்ததை உணர்ந்த்தியிருக்கின்றோம். புலம்பெயர் மக்களே, தமிழக சொந்தங்களே, நாங்கள் முள்ளிவாய்க்காலில் சிந்திய இரத்தம் இன்னமும் உறையாமலிருக்கின்றது. நீங்கள் உறையும் பனியிலும், கொழுத்தும் வெயிலிலும் நின்று எமக்காக போராடிக் கொண்டிருப்பதால். தாயகத்தை நேசிப்பவன் தாயகத்திற்க்காக வாழ்பவன் இன்னமும் உயிரோடு இருக்கிறான்.

புலம்பெயர் சொந்தங்களே, தமிழக உறவுகளே உரத்துக் குரல் கொடுங்கள். விதி வெல்ல வாக்களித்தோம் வலி தந்தாரை தோற்கடித்தோம்….!

தாயத்திலிருந்து…
சுதந்திரன்.
suthanthiran86@gmail.com

தமிழீழம் அமைய, பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும்: வைகோ



எரித்திரியா, கிழக்குத் தைமூர், தெற்கு சூடான் ஆகிய பகுதிகளில் தனிநாடு அமைப்பதற்காக, அம்மக்களிடையே வாக்குப்பதிவு நடத்தி,

புதிய நாடுகளை அமைத்துக் கொடுத்த ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் தமிழீழத்தை அமைப்பதற்காக, தமிழீழ மக்களிடம் பொது வாக்குப்பதிவை நடத்திட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

இலங்கையில், சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தாயகமாகம் வடக்கு கிழக்கு மாநிலங்களில், பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள 26 மாகாண கவுன்சில்களில், 18 மாகாண கவுன்சில்களைக் கைப்பற்றியுள்ளது; 183 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 22 இடங்களில் வெற்றிபெற்றது.

தனித் தமிழீழமே தீர்வு என்று, 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா அவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்துக்குப் பின்னர், 1977ம் ஆண்டு, இலங்கை நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், வடக்கு கிழக்கு மாநிலங்களில், 90 விழுக்காடு தமிழர்கள் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர்.

அதேபோலத்தான், இப்போது, உள்ளாட்சித் தேர்தல்களிலும், தமிழீழ ஆதரவாளர்களையே தேர்ந்து எடுத்து இருக்கின்றார்கள். இது தமிழீழம் அமைவதற்கான முன்னோடித் தேர்தல் முடிவுகள் என்றே கொள்ள வேண்டும்.

எரித்திரியா, கிழக்குத் தைமூர், தெற்கு சூடான் ஆகிய பகுதிகளில் தனிநாடு அமைப்பதற்காக, அம்மக்களிடையே வாக்குப்பதிவு நடத்தி, புதிய நாடுகளை அமைத்துக் கொடுத்த ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும், அதேபோல தமிழீழத்தை அமைப்பதற்காக, தமிழீழ மக்களிடம் பொது வாக்குப்பதிவை நடத்திட வேண்டும் என்று, அண்மையில் நடைபெற்ற பிரஸல்ஸ் மாநாட்டில் நான் தெரிவித்த கருத்தை, உலகம் முழுமையும் உள்ள தமிழீழ ஆதரவு அமைப்புகள் வரவேற்றுள்ளன.

எனவே, உலக நாடுகளின் பார்வையாளர்கள் முன்னிலையில், தமிழீழம் அமைப்பதற்கான வாக்குப் பதிவை நடத்திட வேண்டும். அந்த வாக்குப்பதியில், உலகின் பல நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள ஈழத் தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே வாக்கு அளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடத்திய ராஜபக்ச மற்றும் அவரது கூட்டாளிகளை, உலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதற்கும் நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Friday, July 22, 2011

ஈழப் பிரச்சனை: டெல்லியில் வைகோ ஆர்ப்பாட்டம்

ஈழப் தமிழர்க்கு உலக அளவில் ஆதரவை திரட்ட டெல்லியில் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், இந்த ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 12ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு எதிரே நடைபெறும் என்றும் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமச்சீர் கல்வி: தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

சமச்சீர் கல்வி முறையை உடனே நிறைவேற்ற மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சமச்சீர் கல்வி விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறை கண்டனத்துக்கு உரியது என்றும் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


முல்லை பெரியார்: வைகோ உண்ணாவிரதம்

முல்லை பெரியார் அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து ஆகஸ்ட் 17 தேதி மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரதம் மேற்கொள்கிறார் என்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Wednesday, July 20, 2011

1 மணிநேரமாக ஜெயலலிதா கிலரிக்கு என்ன சொன்னார் ? தலையைப் பிய்க்கும் இலங்கை !



இலங்கைத் தமிழர்களுக்கும், ஏனைய இனத்தவரைப் போல சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று சென்னை வந்துள்ள அமெரி்க்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் டெல்லி வந்தடைந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், நேற்று அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவை சந்தித்து பேசினார்.

அதன்போது, பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

இன்று புதன்கிழமை அவர் தனி விமானம் மூலம் சென்னை வந்திறங்கினார். அவர் முதலில் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் மாணவர்களை சந்தி்த்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

நாங்கள் இந்திய மாணவர்களை மனதார வரவேற்கிறோம்.

தமிழகத்தில் தமிழர்கள் அரசியலில் ஆர்வமுடன் பங்கேற்பது பாராட்டுக்குரியது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

கடந்த 18 ஆண்டுகளில் இந்தியா அடைந்த வளர்ச்சி மிகப் பெரியது. வாய்ப்பு தேடி அமெரிக்கர்கள் இந்தியாவைத் தேடி வரும் சூழல் வந்துள்ளது.

பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்களில் நாங்கள் இந்தியாவுடன் சேர்ந்து செயல்படுவோம். உலக அரங்கில் இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வருகிறது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரி்கக அதிபர் ஒபாமா ஆதரவாக உள்ளார். உலக அளவில் அணு ஆயுத பரவலைத் தடுக்கும் முக்கிய பங்கு இந்தியாவுக்கு உண்டு என்றார்.

நேற்றைய தினம்(20.07.2011) சிறப்பு விமானம் மூலம் சென்னை சென்ற அமெரிக்க ராஜாங்கச் செயலாளரும் உலகின் பலம்மிக்க பதவியில் இருப்பவருமான திருமதி கிலரி கிளிங்கடன் அவர்கள் செல்வி ஜெயலலிதாவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தமிழ் நாடு தலைமைச் செயலகத்துக்கு சென்ற கிலரியை வரவேற்ற செல்வி ஜெயலலிதா அவருடன் சுமார் 1 மணிநேரமாக கலந்துரையாடியுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இதில் முதல் இடம் வகித்ததும், மற்றும் முதன்மையாகப் பேசப்பட்ட விடையமாக இலங்கைத் தமிழர் பிரச்சனை இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் உள்ள அகதிகள் தொடர்பாகவும், தமிழ் நாட்டில் உள்ள அகதிகள் தொடர்பாகவும் செல்வி ஜெயலலிதா கிலரிக்கு சில தகவல்களை எடுத்துரைத்துள்ளார். இதனை அடுத்து ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தம்மிடம் சில யோசனைகள் இருப்பதாகவும் அதனை செயல்படுத்த தாம் விரும்புவதாகவும் கிலரி கிளிங்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போர் குறித்தும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு பதிலளித்த கிலரி கிளிங்டன் அவர்கள் தாம் அனைத்தையும் அறிவோம் எனக் கூறியுள்ளார். இவர்கள் கலந்துரையாடலில் ஈழத் தமிழர்கள் குறித்து பல முக்கியவிடையங்கள் ஆராயப்பட்டாலும் ராஜதந்திர இரகசியக் காப்புக் காரணமாக அனைத்தையும் இங்கே வெளியிட முடியவில்லை. தொடர்ந்து இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடைமுறை தொடர்பிலும், தமிழ் நாட்டில் அமெரிக்காவின் முதலீடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. தமிழ் நாட்டில் அமெரிக்க நிறுவனங்கள் வாகனத் தயாரிப்பு தொழிற்சாலைகளை நிறுவலாம் எனவும் செல்வி ஜெயலலிதா பரிந்துரைத்தார்.

தமிழ் நாட்டில் நடந்த தேர்தலில் அமோக வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துத் தெரிவித்த கிலரி கிளிங்டன் அவர்கள், செல்வி ஜெயலலிதாவை அமெரிக்காவுக்கு விஜயம் செய்யுமாறு உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்துள்ளார். தமிழ் நாட்டில் பலத்த ஆதரவுடன் தேர்தலில் வெற்றிபெற்ற செல்வி ஜெயலலிதாவை அமெரிக்கா அவதானித்துவருவதாகவும் அங்கு நடந்த ஆட்சிமாற்றம் பற்றி அவர்கள் உண்ணிப்பாக கவனித்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Friday, July 15, 2011

முல்லை பெரியாறு உரிமை மீட்புக் கூட்டத்துக்கு அலைகடலென வாரீர் - சீமான்


நாம் தமிழர் கட்சி சார்பாக முல்லைபெரியாறு உரிமை மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாளை சனிக்கிழமை ஜூலை 16 மாலை 6 மணிக்கு மதுரையில் நடக்கிறது.இதில் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான்,மற்றும் இயக்குனர்கள் அமீர்,மணிவண்னன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.இது தொடர்பாக நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள‌ அறிக்கை.

முல்லை பெரியாறு உரிமை மீட்புக் கூட்டத்துக்கு அலைகடலென வாரீர்-சீமான்

தமிழன் இல்லாத நாடில்லை என்பது மட்டுமல்ல, அவன் இழக்காத உரிமையும் இல்லை. இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் இழந்ததைக் கூட இன்னும் அறியாமலேயே இருக்கிறான்.பாலக்காடு,தேவிகுளம் பீர்மெடு,வெங்காலூரு,காவிரி என பட்டியல் முடியாத வரிசையில்முக்கியமானது முல்லை பெரியாறு.ஆம் தமிழனுக்குச் சொந்தமான தமிழனின் நிலத்தில் தமிழனின் பணத்தில் கட்டப்பட்ட அணை இன்று தமிழனின் வாழ்வாதாரத்துக்கு பயனபடாமல் மலையாள்களின் ஆதிக்கத்தில் சிக்கித் தவிக்கிறது. அந்த அணைகட்டப்படும்போது வந்த வெள்ளத்தில் சிக்கி சிதைந்த தொழிலாளர்களின் உயிரெல்லாம் தமிழ் உயிரே. முல்லைபெரியாறு அணை விஷயத்தில் இதுவரை தமிழ்நாடு தனது பல உரிமைகளை இழ்ந்திருக்கிறது.

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் பாசன மற்றும் மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யும் முல்லை பெரியாறு அணையின் மூலம் தமிழன் பல்வேறு வழிகளில் வஞ்சிக்கப்பட்டிருக்கிறான்.

முல்லைபெரியாறு அணை கட்டியதால் 8000 ஏக்கர் பாதிக்கப்பட்டது என்று கூறி ஏக்கருக்கு குத்தகை என்று ரூ.5 வாங்கிய அரசு,அதனைக் கடுமையாக உயர்த்தி ரூ.30 ஆக்கியது.ஆனாலும் நீரை 152 அடி தேக்க மறுத்து வருகிறது.மேலும் அனையின் நீர் மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்து விட்டது.அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னும் கேரள அரசு பணிய மறுக்கிறது.பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யலாம் என்கிறது. பல ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை பயனற்றுப் போனதால்தான், தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தினை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனாலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை,மீண்டும் மீண்டும் வழக்குகள்,என்று கேரளம் தொடர்ந்து நம்மை வஞ்சிக்கிறது. இந்த வஞ்சனையில் காங்கிரஸ் அரசு கம்யூனிஸ்ட் அரசு என்று எந்த வேறுபாடும் இல்லை.

தமிழ்நாட்டை இதுவரை ஆண்ட அரசுகள் இதில் உரிய அக்கறை காட்டாத நிலையில் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வு இன்று கேள்விக்குறியாக உள்ளது.ஆனாலும் தமிழக விவசாயியோ இன்னும் சகிப்புத்தன்மையுடனும்,நெஞ்சில் ஈரத்துடனும்,தனது நிலங்களில் விளையும் அரிசி முதல் அனைத்து விளை பொருட்களையும் நெய்வேலி மின்சாரத்தையும் தமிழ்நாட்டில் இருந்து அனுப்புகிறான்.ஆனால் தண்ணீர், கடலில் கலந்து வீணாகப் போனாலும் பரவாயில்லை என்று அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை விட மறுக்கிறது கேரளம்.

எந்தக்கட்சியாய் இருந்தாலும். காந்திவழியில் வந்த‌தாக கூறினாலும், காரல்மார்க்சை பேசினாலும் அவர்கள் தமிழனை வஞ்சிப்பதில் ஓரணியில் நிற்கிறார்கள். இங்கிருக்கும் அந்தக் கட்சியினரோ தமிழனை தங்கள் அகிலஇந்திய தலைமைக்கு அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள். நாம் தமிழராய் இணைந்து நம் உரிமைகளுக்காக ஒன்றுசேரவேண்டிய‌ கட்டாயக்காலம் இது.நாளை (சனிக்கிழமை)மாலை 6 மணிக்கு மதுரை யில் நடைபெறும் முல்லைபெரியாறு உரிமை மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு, வாருங்கள் தமிழர்களே! இணைவோம் தமிழர்களாக!

Friday, July 8, 2011

தெற்கு சூடான் எனும் புதிய நாடு நாளை உதயமாகிறது.

சூடான் நாட்டிலிருந்து தெற்கு சூடான் எனும் புதிய நாடு நாளை உதயமாகிறது.
இதற்காக முதல் சுதந்திர தின விழா தெற்கு சூடான் நாட்டின் ஜூபா நகரில் கொண்டாடப்படவுள்ளது.
ஆப்ரிக்க நாடுகளில் மிகப்பெரிய நாடு சூடான். எண்ணெய் வளம் மிக்க இந்த நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும்
என பல ஆண்டுகளாக கோரிக்கை வலுத்து வந்தது. இதனால் ஏற்பட்ட உள்நாட்டு போரி்ல் 1.5 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட அமைதி பேச்சவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி சூடானை இரண்டாக பிரிக்க மக்கள் வாக்கெடுப்பு
நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த மக்கள் வாக்கெடுப்பில் சூடான் இரண்டாக பிரிய ஆதரவு பெருகியதைத்தொடந்து. அதிபர் பஷீர்அல்-அசாத் சூடானை, சூடான், தெற்கு சூடான் என இரண்டாக பிரிக்கும் முடிவுக்கு அனுமதியளித்தார். அதன்படி நாளை (9-ம் தேதி) தெற்கு சூடான் தனி நாடு ஆப்ரிக்க கண்டத்தில் உதயமாகிறது. தலைநகர் ஜூபாவில் கோலாகல விழாவுடன் ‌கொண்டாடப்படுகிறது. புதிய ராணுவ வீரர்கள் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக தீவிர ஒத்திகையில் ஈடுபட்டனர்.இரு நாடுகளின் எல்லையாக அபைய், தெற்கு கோர்டோபான் நகரங்கள் பிரிக்கப்பட்டன.
‌தெற்கு சூடான் நாடு உதயமாவ‌தற்கு , அதிபர் பஷீர் அல்-ஆசாத் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெற்கு சூடானின் தலைநகராக ஜூபா இருக்கும்.தெற்கு சூடான் புதிய நாட்டின் முதல் அதிபராக சல்வாகெய்ரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராணுவ உயரதிகாரியாக இருந்த இவர் சூடான் மக்கள் விடுதலை இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி தெற்கு சூடான்
விடுதலைக்காக பல ஆண்டுகளாக போராடி போராடி வந்தார். நாளை சல்வாகெய்ரர் தெற்கு சூடான் நாட்டின் முதல் அதிபராக பதவியேற்கிறார்.


--