Monday, July 25, 2011

தமிழீழம் அமைய, பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும்: வைகோ



எரித்திரியா, கிழக்குத் தைமூர், தெற்கு சூடான் ஆகிய பகுதிகளில் தனிநாடு அமைப்பதற்காக, அம்மக்களிடையே வாக்குப்பதிவு நடத்தி,

புதிய நாடுகளை அமைத்துக் கொடுத்த ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் தமிழீழத்தை அமைப்பதற்காக, தமிழீழ மக்களிடம் பொது வாக்குப்பதிவை நடத்திட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

இலங்கையில், சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தாயகமாகம் வடக்கு கிழக்கு மாநிலங்களில், பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள 26 மாகாண கவுன்சில்களில், 18 மாகாண கவுன்சில்களைக் கைப்பற்றியுள்ளது; 183 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 22 இடங்களில் வெற்றிபெற்றது.

தனித் தமிழீழமே தீர்வு என்று, 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா அவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்துக்குப் பின்னர், 1977ம் ஆண்டு, இலங்கை நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், வடக்கு கிழக்கு மாநிலங்களில், 90 விழுக்காடு தமிழர்கள் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர்.

அதேபோலத்தான், இப்போது, உள்ளாட்சித் தேர்தல்களிலும், தமிழீழ ஆதரவாளர்களையே தேர்ந்து எடுத்து இருக்கின்றார்கள். இது தமிழீழம் அமைவதற்கான முன்னோடித் தேர்தல் முடிவுகள் என்றே கொள்ள வேண்டும்.

எரித்திரியா, கிழக்குத் தைமூர், தெற்கு சூடான் ஆகிய பகுதிகளில் தனிநாடு அமைப்பதற்காக, அம்மக்களிடையே வாக்குப்பதிவு நடத்தி, புதிய நாடுகளை அமைத்துக் கொடுத்த ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும், அதேபோல தமிழீழத்தை அமைப்பதற்காக, தமிழீழ மக்களிடம் பொது வாக்குப்பதிவை நடத்திட வேண்டும் என்று, அண்மையில் நடைபெற்ற பிரஸல்ஸ் மாநாட்டில் நான் தெரிவித்த கருத்தை, உலகம் முழுமையும் உள்ள தமிழீழ ஆதரவு அமைப்புகள் வரவேற்றுள்ளன.

எனவே, உலக நாடுகளின் பார்வையாளர்கள் முன்னிலையில், தமிழீழம் அமைப்பதற்கான வாக்குப் பதிவை நடத்திட வேண்டும். அந்த வாக்குப்பதியில், உலகின் பல நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள ஈழத் தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே வாக்கு அளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடத்திய ராஜபக்ச மற்றும் அவரது கூட்டாளிகளை, உலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதற்கும் நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments: