Thursday, July 28, 2011

பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா? - வே.மதிமாறன்



‘பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று சிங்கள ராணுவத்தின் செய்தியை விடுதலைப் புலிகளின் எதி்ர்ப்பாளர்கள் திரும்ப திரும்ப உறுதியாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உறுதியில் அந்தச் செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என்ற விரும்பமும் இணைந்திருக்கிறது. அந்த விருப்பமே அவர்களை உறுதியாக சொல்ல வைக்கிறது.

‘பிரபாகரன் இறக்கவில்லை’ என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உறுதியாக சொல்கிறார்கள். இவர்களின் உறுதியையும் இவர்களின் விருப்பமே தீர்மானிக்கிறது.

இலங்கைஅரசும், உளவுத்துறையும் வெளியிட்ட படங்கள்தான் விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள், பார்ப்பனர்கள் மத்தியில் பெரிய செல்வாக்கும் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அவர் உயிரோடு இருக்கக் கூடாது, விடுதலைப் புலிகள் இயக்கம் இத்தோடு முடிந்து விட வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள். அதனால்தான் இலங்கை ராணுவத்தின், இந்திய உளவு நிறுவனங்களின் செய்திகளை, படங்களை ஒரு சின்னன சந்தேகமின்றி நம்பவும், அவைகளை தனது படங்கள் போல எடுத்து பயன்படுத்தவும் செய்கிறார்கள்.

எந்தப் படங்களை வைத்து இவர்கள் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று உறுதியாக சொல்கிறார்களோ, அந்தப் படங்களைப்பார்த்துதான் ஆதரவாளர்கள் சந்தேகங்களை எழுப்புகிறார்கள். அவர் உயிரோடு இருப்பதாகவும் நம்புகிறார்கள்.

இதில் வேடிக்கை இலங்கை ராணுவம் வெளியிட்டு இருக்கிற பிரபாகரன் பற்றிய படத்தை, செய்தியை இலங்கை அதிபர் ராஜபக்சேவே நம்பவில்லை. அதனால்தான் ‘உண்டு, இல்லை‘ என்று திட்டவட்டமாக அறிவிக்க மறுக்கிறார். ராணுவம் வெளியி்ட்டு இருக்கிற பிரபாகரன் பற்றிய படங்களின் மூலம் தான் செய்த கொலைகளையும், வெறியாட்டத்தையும் திசை திருப்பவும், மீதமிருக்கிற தமிழர்களைப் பற்றி பேசாமல் பிரபாகரன் பற்றியே பேசவேண்டும் என்ற நோக்கத்திற்காகவுமே ராஜபக்சே மவுனம சாதிக்கிறார்.

அவரின் பிரதிநிதியாகவே செயல்படுகிற இங்கு இருக்கிற ஊடகங்கள் ‘பிரபாகரன் இறந்து விட்டார்‘ என்ற செய்தியை சிறப்பாக பரப்பிக் கொண்டிருக்கிறது. அதை மறுத்து ‘பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்’ என்று யாராவது நம்பினால், அப்படி நம்புவதே தவறு, என்று ராஜபக்சே ஆதரவு ஊடகங்களும் பார்ப்பனர்களும் எரிச்சலும், கோபமும் அடைகிறார்கள்.

பிராமணர் சங்கத்தின் பத்திரிகையான தாம்ப்ராஸ்…

‘‘இலங்கையில விடுதலைப்புலிகளின் தலைவர் திரு. வேலுபிள்ளை பிரபாகரன் இறந்து விட்டார் என்று இலங்கை ராணுவமும், இறக்கவில்லை என்று விடுதலைப் புலிகளின் சில ஆதரவாளர்களும் கூறுகின்றார்களே இதில் எது உண்மை?

-எம். ராதாகிருஷ்ணன், சேலம்

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை முறியடித்தது மட்டுமின்றி, அவர்களை ஈழத்தில் செயல்பட முடியாத அளவிற்கு விரட்டியடித்து விட்டது இலங்கை ராணுவம் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வேலுபிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று தான் அரசியில் நோக்கர்களும், நடுநிலை பத்திரிகையாளர்களும் தெரிவிக்கின்றனர்.

என்று மனமார எழுதுகிறது.

சோ துக்ளக்கில்…

விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை இலங்கை அரசு வெளியிட்டதிலிருந்து – அது பொய்ச் செய்தி என்று கூறுகிற மறுப்புகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இலங்கை அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள செய்தி தவறானது என்பது நிரூபிக்கப்படாத வரையில், பிரபாகரன் இறந்துவிட்டார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்: பல பத்திரிகைகளும், இந்திய அரசும் கூட, இந்தச் செய்தியை அப்படித்தான் பார்க்கின்றன.

………………………………………………………..

இது எப்படி வீரமரணம் என்பது நமக்குப் புரியவில்லை. அப்பாவி மக்களை தனக்குப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, அவர்கள் மத்தியில் தான் பாதுகாப்பாக இருந்துகொண்டு, இலங்கை ராணுவத்திடமிருந்து தப்பிக்க வழி தேடிய பிரபாகரனின் மரணம் எப்படி வீரமரணமாகும்?

……………………………………

தமிழ்த் தலைவர்களைக் கொன்று, தமிழர்களை அடிமைப்படுத்தி, அவர்களுடைய சிறுவர்களை இலங்கை ராணுவத்திற்குப் பலியாக்கி, தமிழர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, பிரபாகரன் நடத்தியது விடுதலைப் போர் அல்ல: தான் ஆள்வதற்கு, தன்னுடைய சர்வாதிகாரத்தின் கீழ் ஒரு நிலப்பரப்புதான் அவர் நாடியது. ஒரு நிலப்பரப்பைத் தனதாக்கி, அதில் வாழ்ந்த மக்களைத் தன்னுடைய அடிமைகளாக்கி விட, ஒருவர் நடத்திய வெறிச் செயல்கள் விடுதலைப் போராட்டம் அல்ல, ஆதிக்க வெறி.

…………………………………..

பற்பல காரணங்களினால், சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்துவிட்ட இலங்கைத்தமிழர்கள். இனி நிம்மதியுடன் வாழ்வதற்கு இப்போது வழி பிறந்திருக்கிறது. இந்த வாய்ப்பு கானல் நீராகப் போய்விடாமல் பார்த்துக் கொள்வது இந்திய அரசின் கடமை.

தமிழர்களின் வாழ்க்கை அல்ல, தமிழர்களே முடிந்திருக்கிறார்கள். ஆனால் சோ, ‘இனி நிம்மதியுடன் வாழ்வதற்கு வழி பிறந்திருக்கிறது’ என்று எழுதுகிறார்.

இவர்கள் விடுதலைப் புலிகளை எதிர்த்து எழுதுவதை நாம் குறை சொல்லவில்லை. அது அவர்களின் அரசியல் நிலை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், இலங்கை ராணுவம் தமிழர்களை கொன்று குவிப்பதை எதிர்த்து இலங்கை அரசையோ, ராணுவத்தையோ, ராஜபக்சேவையோ கண்டித்து ஒரு வார்த்தைகூட எழுத மறுக்கிறார்களே, ஏன்?

கேட்டால், ‘அப்பாவி மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வைத்திருக்கிறார்கள் விடுதலைப் புலிகள்’ என்று சொல்கிறார்கள்.

சரி. இதை உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.

சங்கர மடத்தில் புகுந்து ஒரு தீவிரவாத கும்பல் அங்கிருக்கிற ஜெயெந்திரன்-விஜேயேந்திரன் இன்னும் அவர்களை ஸேவிக்க வந்த பார்ப்பனர்களை, சொர்ணமால்யா போன்ற பக்தர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது ராணுவம் அல்லது காவல் துறை என்ன செய்யவேண்டும்?

தீவிரவாதிகளிடம் தந்திரமாக பேசி அல்லது கோரிக்கையை நிறைவேற்றி பிணைக்கைதிகளாக இருக்கிற ஜெயெந்திரன்-விஜேயேந்திரன் இன்னும மத்தியம் ஒருமணிக்கு ஜெயேந்திரனை தரிசிக்க வந்த பார்ப்னர்களை பத்திரமாக மீட்க வேண்டும். இதுதான் முறை.

ஆனால், அதற்குப் பதில் ராணுவம் , ஜெயெந்திரன்-விஜேயேந்திரன் உட்பட்ட ஒட்டுமொத்தப் பார்ப்பனர்களையும் கொன்று, அதன் பிறகு தீவிரவாதிகளையும் கொன்றுவிட்டால் அது மனித தர்மமாகுமா? அதைச் செய்வதற்கு ராணுவம் எதற்கு?

இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளுடனான போரில் என்றாவது, ஒரு இடத்திலாவது ஈழத் தமிழர்களை பாதுக்காக்க வேண்டும் என்று செயல்பட்டதா?

‘மாறாக நீ என்னடா கொல்றது நானே கொல்றேன்’ என்று ஒரு நாட்டு ராணுவம் தன் சொந்த நாட்டு மக்களை இப்படித்தான் கொல்லுமா? உலகில் எந்த நாட்டிலாவது பிணைக்கைதிகளை முற்றிலுமாக கொன்று அதன் பிறகு தீவிரவாதிகளை கொன்ற ராணுவம் இருக்கிறதா?

இதுபொல் இன்னொரு குற்றச்சாட்டையும் சொல்கிறார்கள் சோ போன்ற பார்ப்பனர்கள், ஈழத்தில் இருக்கிற தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் துப்பாக்கி முனையில் மிரட்டித்தான் தனக்கு ஆதரவாக வைத்திருக்கிறாகள் என்று.

சரி. இது உண்மையாக இருந்தால், உலகம் முழுவதும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களில் மிகப் பெருமான்மையானவர்கள், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் புலிகளின் ஆதரவாளர்களாக இருப்பதற்கு எது காரணம்? அவர்களை யார் மிரட்டுவது?

தமிழர்களைக் கொன்று குவிக்கிற இலங்கை ராணுவம் நேர்மையானது. ராணுவத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்கள் தீவிரவாதிகள். கொலைக்காரர்கள். நன்றாகத்தான் இருக்கிறது மனுநீதி.

இவைகள் பிராமணர் சங்கம், சோ போன்ற பார்ப்பன உணர்வை மறைக்காமல் வெளிபடுத்துகிறவர்களின் நிலை. இதே நிலைதான் முற்போக்காக ‘ரொம்ப நல்லவன்’ மாதிரி பேசுற பார்ப்பனர்களின் நிலையுமாக இருக்கிறது.

இணையத்தில் விரவி இருக்கிற பார்ப்பனர்களில் பலர், ஈழப் பிரச்சினையில் பெரும்பாலும் எந்த கருத்தும் சொல்லாதவர்கள் அல்லது ஈழமக்களுக்கு எதிராக இலங்கை அரசும் இந்திய ராணுவமும் செயல் பட்டதை கண்டித்து எழுதாதப் பார்ப்பனர்கள். இவர்கள் பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தி பரப்பப்பட்ட பிறகு, மிகுந்த வருத்தத்தோடு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள்.

“பிரபாகரன் இறந்து விட்டார் என்பதற்காக ஈழ விடுதலைப் போராட்டம் இத்துடன் முடிந்து விடாது. அது எந்த தனிநபரையும் சார்ந்து இல்லை.” என்று ஒரு போராளியைப் போல் சிலர் பிரகடனப் படுத்தினார்கள். அவர்கள் உறுதியாக சொல்ல வருகிற செய்தி இதுதான் ‘பிரபாகரன் இறந்துவிட்டார்.’

இன்னும் சிலர் “விடுதலைப் புலிகள் மீது நமக்கு விமர்சனம் இருந்தாலும் 30 ஆண்டுகளாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதை நினைத்து வருத்தமாகத்தான் இருக்கிறது. பிரபாகரன் இறந்து விட்டார். விடுதலைப் புலிகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கிறார்கள். இனி அங்கே விடுதலைப் போராட்டம் நடைபெறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று நினைக்கும் போது இன்னும் அதிக வருத்தமாகத்தான் இருக்கிறது.” என்று ஈழப் போரட்டத்தில் அதிக அக்கறை உள்ளவர்கள்போல், ஒட்டு மொத்தமாக ஈழப் போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தார்கள். இவர்கள் சுற்றி வளைத்து சொல்ல வருகிற செய்தி இதுதான்:

“ ஒழிஞ்சான்டா பிரபாகரன். முடிஞ்சுதுடா விடுதலைப் புலிகள் இயக்கம்”

விடுதலைப் புலிகள் இயக்கமோ அதன் தலைவர் பிரபாகரனோ பார்ப்பன எதிர்ப்பாளகளோ இந்து மத எதிர்ப்பாளர்களோ் அல்ல. இன்னும் சொல்லப்போனால் பிரபாகரன் உட்பட அவர்களில் பலர் இந்து மத கடவுள் நம்பிக்கையாளர்கள்தான். ஆனாலும் பார்ப்பனர்கள் ஏன் அவர்கள் மீது கடும் வெறுப்பு கொண்டு இருக்கிறார்கள்?

இந்தக் கேள்விக்கு பார்ப்பனர்கள் இப்படி பதில் சொல்லக்கூடும்: “விடுதலைப் புலிகள் யாரை வேண்டுமானலும் கொலை செய்பவர்கள். வன்முறையாளர்கள். அவர்களை நாம் எப்படி ஆதரிக்க முடியும்?”

அப்படியானால் இவர்கள் ஆதரிக்கிற இலங்கை ராணுவம் என்ன ‘வாடியப் பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்கிற வள்ளலார் வழி வந்தவர்களா? இவர்களின் குரு ஜெயேந்திரன் என்ன சங்கரராமனுக்கு கனகா அபிஷேகமா செய்து வைத்தார்? இவர்கள் தீவிரமாக ஆதரிக்கிறவர்களின் யோக்கியதை இப்படி இருக்கும்போது, அப்புறம் ஏன் இவ்வளவு வன்மம் விடுதலைப் புலிகளின் மேல்? இதற்கான விடையை தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் நீங்கள் தந்தை பெரியாரிடம்தான் வந்தாக வேண்டும்.

தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசை கண்டிக்காத, இலங்கைக்குத் துணை நின்ற இந்தியாவைப் பற்றி ஒரு வார்த்தை எழுதாத இவர்கள்தான் மனிதாபிமானம் பற்றி பேசுகிறார்கள். நம்புகங்கள் தோழர்களே, பார்ப்பனர்களும் தமிழர்கள்தான். பாவம் பெரியார்.

‘இயேசு கிறிஸ்து என்று ஒருவர் இருந்தார்’ என்பதற்கு பைபிளைத் தவிர எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. ஆனால் அப்படி ஒருவர் இருந்தார் என்று இன்னும் கோடிக்கணக்கான மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுகூட பரவாயில்லை, அப்படி இல்லாத ஒரு நபர் ‘இப்போது வரப்போகிறார்‘ என்று 2000 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதையும் உண்மை என்று நம்பி ரொம்ப சீரியசா கண்ணீர் மல்க ‘வருகீறாரா’ என்று ஆவலோடு காத்துக் கிடக்கிறார்கள் மிகப் பலர்.

அதையே நம்புகிறவர்கள் இருக்கும்போது, தங்களின் தலைவர் அல்லது தாங்கள் விரும்புகிற தலைவர் கொல்லப்பட்டார் என்ற செய்தி ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாதவரையில், அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாதவரையில் அவர் உயிரோடு இருக்கிறார் என்று அவர் ஆதரவாளர்கள் நம்புவதில் என்ன தவறு இருக்க முடியும்?

No comments: