Friday, July 15, 2011

முல்லை பெரியாறு உரிமை மீட்புக் கூட்டத்துக்கு அலைகடலென வாரீர் - சீமான்


நாம் தமிழர் கட்சி சார்பாக முல்லைபெரியாறு உரிமை மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாளை சனிக்கிழமை ஜூலை 16 மாலை 6 மணிக்கு மதுரையில் நடக்கிறது.இதில் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான்,மற்றும் இயக்குனர்கள் அமீர்,மணிவண்னன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.இது தொடர்பாக நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள‌ அறிக்கை.

முல்லை பெரியாறு உரிமை மீட்புக் கூட்டத்துக்கு அலைகடலென வாரீர்-சீமான்

தமிழன் இல்லாத நாடில்லை என்பது மட்டுமல்ல, அவன் இழக்காத உரிமையும் இல்லை. இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் இழந்ததைக் கூட இன்னும் அறியாமலேயே இருக்கிறான்.பாலக்காடு,தேவிகுளம் பீர்மெடு,வெங்காலூரு,காவிரி என பட்டியல் முடியாத வரிசையில்முக்கியமானது முல்லை பெரியாறு.ஆம் தமிழனுக்குச் சொந்தமான தமிழனின் நிலத்தில் தமிழனின் பணத்தில் கட்டப்பட்ட அணை இன்று தமிழனின் வாழ்வாதாரத்துக்கு பயனபடாமல் மலையாள்களின் ஆதிக்கத்தில் சிக்கித் தவிக்கிறது. அந்த அணைகட்டப்படும்போது வந்த வெள்ளத்தில் சிக்கி சிதைந்த தொழிலாளர்களின் உயிரெல்லாம் தமிழ் உயிரே. முல்லைபெரியாறு அணை விஷயத்தில் இதுவரை தமிழ்நாடு தனது பல உரிமைகளை இழ்ந்திருக்கிறது.

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் பாசன மற்றும் மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யும் முல்லை பெரியாறு அணையின் மூலம் தமிழன் பல்வேறு வழிகளில் வஞ்சிக்கப்பட்டிருக்கிறான்.

முல்லைபெரியாறு அணை கட்டியதால் 8000 ஏக்கர் பாதிக்கப்பட்டது என்று கூறி ஏக்கருக்கு குத்தகை என்று ரூ.5 வாங்கிய அரசு,அதனைக் கடுமையாக உயர்த்தி ரூ.30 ஆக்கியது.ஆனாலும் நீரை 152 அடி தேக்க மறுத்து வருகிறது.மேலும் அனையின் நீர் மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்து விட்டது.அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னும் கேரள அரசு பணிய மறுக்கிறது.பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யலாம் என்கிறது. பல ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை பயனற்றுப் போனதால்தான், தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தினை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனாலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை,மீண்டும் மீண்டும் வழக்குகள்,என்று கேரளம் தொடர்ந்து நம்மை வஞ்சிக்கிறது. இந்த வஞ்சனையில் காங்கிரஸ் அரசு கம்யூனிஸ்ட் அரசு என்று எந்த வேறுபாடும் இல்லை.

தமிழ்நாட்டை இதுவரை ஆண்ட அரசுகள் இதில் உரிய அக்கறை காட்டாத நிலையில் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வு இன்று கேள்விக்குறியாக உள்ளது.ஆனாலும் தமிழக விவசாயியோ இன்னும் சகிப்புத்தன்மையுடனும்,நெஞ்சில் ஈரத்துடனும்,தனது நிலங்களில் விளையும் அரிசி முதல் அனைத்து விளை பொருட்களையும் நெய்வேலி மின்சாரத்தையும் தமிழ்நாட்டில் இருந்து அனுப்புகிறான்.ஆனால் தண்ணீர், கடலில் கலந்து வீணாகப் போனாலும் பரவாயில்லை என்று அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை விட மறுக்கிறது கேரளம்.

எந்தக்கட்சியாய் இருந்தாலும். காந்திவழியில் வந்த‌தாக கூறினாலும், காரல்மார்க்சை பேசினாலும் அவர்கள் தமிழனை வஞ்சிப்பதில் ஓரணியில் நிற்கிறார்கள். இங்கிருக்கும் அந்தக் கட்சியினரோ தமிழனை தங்கள் அகிலஇந்திய தலைமைக்கு அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள். நாம் தமிழராய் இணைந்து நம் உரிமைகளுக்காக ஒன்றுசேரவேண்டிய‌ கட்டாயக்காலம் இது.நாளை (சனிக்கிழமை)மாலை 6 மணிக்கு மதுரை யில் நடைபெறும் முல்லைபெரியாறு உரிமை மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு, வாருங்கள் தமிழர்களே! இணைவோம் தமிழர்களாக!

No comments: