Wednesday, June 9, 2010

ராஜபக்சேவுடன் வந்திருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும்: சென்னை ஐகோட்டில் புகழேந்தி வழக்கு

ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.


தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலரும் வக்கீலுமான புகழேந்தி இம்மனுவை கொடுத்துள்ளார்.

அம்மனுவில், ’’இலங்கையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் மந்திரியாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் இ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தில் இருந்தார். இவர் அலுவல் ரீதியாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு இன்று வர இருக்கிறார்.

1986-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு
என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார்.

இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.

வெளியே வந்த பிறகு, 1988-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்ப்பாக்கம் போலீசில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

1989-ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார்.

இலங்கையில் கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில், இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேல்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை கைது செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments: