Tuesday, June 29, 2010

கருணாநிதியை விமர்சித்தால் தாக்குதல்தான்! - காவற்துறையும் கைது செய்யாது - பெ.மணியரசன்!

முதல்வர் கருணாநிதியின் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்து கூறுவோர் மீது வன்முறை தாக்குதல் நடப்பது தி.மு.க ஆட்சியில் அதிகரித்து விட்டது எனவும் காவற்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருப்பதால், அவர்கள் கைது செய்யப்படுவதில்லை என தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் பெ. மணியரசன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கை
தமிழ் மொழி உணர்வும் தமிழ் இன உணர்வும் மிக்க எழுத்தாளர் பழ.கருப்பையா அவர்களும், அவர் மகனும் அவரின் கார் மற்றும் வீட்டுப் பொருள்களும் 27.06.2010 மாலை வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டதற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘கருணாநிதியைத் தாக்கிப் பேசிய வாய் இதுதானே’ என்று கத்திக் கொண்டே அக்கும்பல் பழ.கருப்பையா அவர்களின் வாயில் குத்தியதாக அவர் கூறுகிறார். அண்மைக் காலமாக தமிழக முதல்வர் கருணாநிதியின் செயல்பாடுகள் கருத்துகள் குறித்து பழ.கருப்பையா கடுமையாக அரசியல் விமர்சனம் எழுதி வருகிறார். பேசி வருகிறார். இதனால் ஆத்திரமுற்ற கும்பல் இந்த வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது.

முதல்வர் கருணாநிதியின் அரசியல் நிலைபாட்டுக்கு எதிராகக் கருத்து கூறுவோர் மீது வன்முறைத் தாக்குதல் நடப்பது தி.மு.க. ஆட்சியில் அதிகரித்து விட்டது. அப்படிப்பட்ட வன்முறையில் ஈடுபட்டவர்களை தி.மு.க ஆட்சி கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தாததால் இந்த அராஜகம் மேலும் மேலும் ப ருகிவருகிறது.

ஈழத்தமிழ் மக்களை இந்திய அரசின் துணையோடு சிங்கள இனவாத அரசு கடந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கில் கொன்றபோது, இந்தியாவையும் அந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறிய கருணாநிதியின் இனத்துரோகத்தையும் விமர்சித்த திரைப்பட இயக்குநர் சீமான் காருக்கு காலிகள் சிலர் தீ வைத்தனர். அடுத்து ஒரு வன்முறைக்கும்பல் இயக்குநர் பாரதி ராஜாவின் அலுவலகத்தைத் தாக்கி இருபது லட்ச ரூபாய் பெறுமானமுள்ள திரைப்படக் கருவிகளையும் மேசை நாற்காலிகளையும் நொறுக்கி அழித்தது. அதன்பிறகு வேறொரு வன்முறைக் கும்பல் இந்தியக் கம்யு+னிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர் தோழர் தா. பாண்டியன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை எரித்தது.

மேற்கணட மூன்று வன்முறைத் தாக்குதலிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. காவல்துறையின் கையைக் கருணாநிதி அரசு கட்டிப் போடாமல் இருந்திருந்தால் மேற்கண்ட வன்முறையாளர்களைக் காவல்துறையினர் கைது செய்திருப்பார்கள். தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளையும் அக்கூட்டணியின் ஆட்சியையும் விமர்சிப்பவர்களைத் தாக்கினால் அரசு நடவடிக்கை எடுக்காது என்ற துணிச்சல்தான் இப்பொழுது திரு. பழ. கருப்பையாவையும் அவரது வீட்டையும் தாக்கத் தூண்டியுள்ளது. அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளைப் பேச, எழுத அனைவர்க்கும் உரிமை இருக்கிறது. அவ்வுரிமைகளைக் கொல்லைப் புற வன்முறைகள் மூலம் தி.மு.க. அரசு பறிக்கிறது.

இந்நிலை தொடர்ந்தால் எதிர்வினைகள் உருவாகும். வன்முறைக்கு எதிர் வன்முறை என்ற அராஜகங்களைத் தமிழகம் எதிர்கொள்ளும் நிலை வரும் எனவே பழ.கருப்பையா அவர்களைத் தாக்கிய வன்முறையாளர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்

தோழமையுடன்,பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

நன்றி-
http://www.4tamilmedia.com/ww1/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/7079-pmaniyarasan-complain-again-karunanidhi

No comments: