Friday, June 11, 2010

‘‘இதுவல்லவோ நீதி!’

இரவு மணி 9: போபால் நகரில் உள்ள யூனியன் கார்பைட் கம்பெனியின் குழாய்களை தண்ணீரில் சுத்தம் செய்யும் பணி ஆரம்பமாகிறது.

இரவு மணி 10: சுத்தம் செய்யும் தண்ணீர் டேங்க் எண் 610 &ல் எதிர்பாராதவிதமாக நுழைய அது தன் வேலையைக் காட்டத் துவங்குகிறது.

இரவு மணி 10.30: உள்ளே நுழைந்த தண்ணீர் டேங்க்கில் இருந்த ரசாயனப் பொருட்களோடு கலந்து நச்சு வாயுவாக மாறி அது வெளியேறுவதற்காக வைக்கப்பட்டிருந்த குழாயின் வழியாக வெளியேறத் துவங்குகிறது.

இரவு மணி 12.30: தொழிற்சாலையின் உள்ளே இருக்கும் அபாய சங்கு நீண்ட ஓலத்தை ஒலித்தபடி தனது மூச்சை நிறுத்திக் கொள்கிறது.

இரவு மணி 12.50: அபாய சங்கின் ஒலியைக் கேட்ட தொழிலாளர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்பித்து ஓடுகிறார்கள்.

ஆனால் அது பற்றி எதுவும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது போபால் நகரம்.

அவ்வளவுதான்......

அதன் பிறகு வந்த ஒவ்வொரு கணமும் கொடூரமானவை.

யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய மெதில் ஐசோ சயனைட் நச்சு வாயு நகரைச் சூழும்போது எல்லாமே கையை மீறிப் போயிருந்தது.

அந்த நச்சுப்புகையை மக்கள் சுவாசிக்கத் தொடங்கிய மறு நொடியே மூச்சுத்திணறலுக்கு ஆளாகிறார்கள்...

அடுத்து கடும் இருமலும் வாந்தியும் அவர்களைப் புரட்டி எடுக்கிறது...

கண்கள் தீயெனப் பற்றி எரிகின்றன எரிச்சலில்...

வீட்டுக்குள் மழலைகளோடு படுத்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் என்ன நடக்கிறது? ஏது நடக்கிறது? என எதுவும் புரிபடாமல் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வருகிறார்கள்.

ஓட ஓட துரத்துகிறது நச்சுவாயு. ஓடியவர்கள் கும்பல் கும்பலாக செத்து விழுகிறார்கள் வீதிகளில்.

செத்து விழுந்தவர்கள் போக மற்றவர்கள் இரவு இரண்டு மணி வாக்கில் ஹமீதையா மருத்துவமனையை அடைய அங்கேயே பலபேருக்குப் பறிபோகிறது கண்பார்வை.

வாயில் நுரை தள்ளியவாறும், மூச்சுத் திணறியபடியும் குற்றுயிராகிப் போன ஆயிரக்கணக்கானோர் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதன்பிறகுதான் ஒலிக்க ஆரம்பிக்கிறது தொழிற்சாலைக்கு வெளியில் இருந்த அபாயச்சங்கு.

ஒருவழியாக காலை நாலு மணியளவில் நச்சுவாயு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

இது நடந்தது டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி. ஆண்டு : 1984.

மறுநாள் காலை ஏழு மணிக்கு போலீசின் ஒலிபெருக்கிகள் ஒலிக்கின்றன : எல்லாமே சரி செய்யப்பட்டு விட்டன.

இச்சம்பவம் நடந்து முடிந்து இன்றோடு இருபத்தி ஆறு ஆண்டுகள்.

அது சரி... போலீசின் ஒலிபெருக்கிகள் சொன்னனவே ‘‘எல்லாமே சரி செய்யப்பட்டு விட்டன”

அந்த ‘எல்லாமே’ என்றால் எவையெவை?

அந்தக் கொடூரச் சம்பவம் நடந்த வேளையில் செத்து மண்ணோடு மண்ணாக சுண்ணாம்பாகி விழுந்தவர்கள் மட்டுமே இருபதாயிரம் பேருக்கு மேல்.

பல லட்சம் பேர் தீராத புற்றுநோய்க்கும், நுரையீரல் நோய்களுக்கும் ஆளாக்கப்பட்டனர்.

கண்பார்வை பறிபோனவர்கள் ஏராளமானோர்.

முதலில் ஓரிரு நாட்களுக்கு செத்தவர் போக மற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. புதிதாக அனாதையாக்கப்பட்டவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டன.

விதவைகள் ஆக்கப்பட்டவர்-களுக்கான பென்ஷன் மாதம் ரூ 200/-& அளிக்க உத்தரவிடப்பட்டது. பிற்பாடு ‘பெரிய மனசு’ பண்ணி அது 750/- ஆக உயர்த்தித் தரப்பட்டது.

மாத வருமானம் 500 ரூபாய்க்குள் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி ‘நிவாரணம்’ ஆக 1500 ரூபாயை அள்ளி வழங்கியது அரசு.

அதுவும் “சந்தேகத்துக்கு இடமின்றி விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்தான்” என்று மருத்துவரிடம் கியூவில் நின்று சான்றிதழ் வாங்கி வந்தவர்களுக்கு.

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இதில் பாதிக்கப்பட்டதாக ஒருவர்கூட பதிவு செய்யப்படவில்லை. ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு லட்சத்திற்கும் மேல்.

1984-ல் நடந்த இந்தக் கொடூரத்துக்கு ஆறு ஆண்டுகள் கழித்து விபத்துக்கு முன் பிறந்தவர்களுக்கு இடைக்கால ‘நிவாரணத் தொகை’யாக 200 ரூபாயை வாரி வழங்கினார்கள் வள்ளல்கள். அதுவும் உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட பிறகு. இறந்தவர்கள் போக விஷவாயு தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இறுதி இழப்பீடாக 25,000 ரூபாயையும்... விஞ்ஞானத்தின் ‘வளர்ச்சிக்காக’ தங்கள் உயிரை ‘அர்ப்பணித்து’க் கொண்டவர்களின் குடும்பத்துக்கு 62000 ரூபாயையும் கருணை உள்ளத்தோடு அளித்தார்கள்.

இந்தக் கொடூரத்தைக் கண்டு கோபம் கொண்டு போபால் நகரையே ஒரு “ஞிவீsஜீஷீsணீதீறீமீ சிவீtஹ்” என்று எழுதினார் தமிழகத்தின் இலக்கியவாதியும் மனித உரிமை ஆர்வலருமான நண்பர் நாகார்ஜுனன்.

ஆம்.

பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் தேநீர்க் குவளைகளைப் போல...

பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் ஊசி போடும் சிரிஞ்சுகளைப் போல...

போபால் நகரமும் பயன்படுத்திவிட்டு குப்பைக் கூடையில் வீசப்பட்ட ஒரு நகரம்தான்.

இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஞ்ஞான பலிகளுக்கான ‘தீர்ப்புதான்’ இந்த வாரம் ஆற அமர வந்திருக்கிறது.

வந்த அந்தத் தீர்ப்பும் இந்தத் திருப்பலிகளுக்குக் காரணமானவர்களைக் ‘கொடூரமாக’ தண்டித்து ‘நீதியை’ நிலை நாட்டி இருக்கிறது.

இருபதாயிரம் பேருக்கு மேல் சாகடிக்கப்-படுவதற்கும்...

ஐந்து லட்சம் பேருக்கு மேல் நிரந்தர நோயாளிகளாக ஆக்கப்பட்டதற்கும்...

730 நாட்கள் ‘கடும் தண்டனை’ அளித்து தீர்ப்பு வழங்கியதோடு ஜாமீனும் வழங்கியிருக்கிறார் ‘கனம் மாஜிஸ்ட்ரேட்’ அவர்கள்.

அதுவும் அன்றைக்கு யூனியன் கார்பைட் கம்பெனியின் தலைவராக இருந்த... இத்தனை லட்சம் பேரை நடைபிணமாக்கிய... வாரன் ஆண்டர்சன் பற்றி ஒரு வரி கூடக் குறிப்பிடாமல்!

இதுவல்லவோ நீதி!

1984 தொடங்கி 2010 வரைக்கும் துப்புக்கெட்ட இந்த இந்திய அரசும் மானம் கெட்ட அமெரிக்க அரசும் சேர்ந்து தேடோ தேடென்று தேடுகிறார்களாம் அந்த ஆண்டர்சனை.

இருபத்தி ஆறு ஆண்டு-களுக்கு முன்னர் கைதான ஆண்டர்சனை ஆறே மணி நேரத்தில் ஜாமீனில் விடுதலை செய்து தனி ஜெட் விமானத்தில் வழியனுப்பி வைத்தவர்கள் யார்? அப்பொழுது இருந்த வெளியுறவு, உள்ளுறவு அமைச்சர்கள் தொடங்கி அதிகாரிகள் வரைக்கும் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்?

கிரீன்பீஸ் என்கிற பசுமை அமைப்பு பிரிட்டன் பத்திரிகை ஒன்றின் உதவியோடு துப்பறிந்து அந்தக் கொலைகார ஆண்டர்சன் அமெரிக்காவிலுள்ள லாங் ஐலேண்டு என்கிற இடத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவதையும்... அவன் கோல்ப் விளையாட்டுக்கான ஒரு மாத செலவு மட்டுமே போபாலில் பலியான ஒரு குடும்பம் பெற்ற தொகையை விடவும் பலமடங்கு அதிகம்...எனவும் அம்பலப்படுத்தியது ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு முன்னரே.

ஆனால் அதற்கெல்லாம் நமது பிரதமர்களுக்கு ஏது நேரம்? தேடப்படும் குற்றவாளியை இழுத்து வருவதா அவர்களுக்கு வேலை?

சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக் கொலையில் இன்னமும் விசாரிக்கப்படாமல் இருக்கிற.... இன்னமும் ‘தேடப்படுகிற’ டக்ளஸ் தேவானந்தாவோடு கியூபாவில் கை குலுக்கினாரே மன்மோகன் சிங்... அப்படி ஆண்டர்சனோடும் கை குலுக்காமல் இருப்பதற்காகவே ஒரு பாராட்டு விழா வைக்கலாம் நாம்.இப்படி எழுதோ எழுதென்று எழுதி, கிழியோ கிழியென்று கிழித்தாலும் யாருக்கு உரைக்கப் போகிறது?

ஜாலியன் வாலா பாக்கில் நூற்றுக்கணக்கானோரை கொன்று குவித்ததற்குப் பழி தீர்க்க பல்லாண்டுகள் ஜெனரல் டயரைப் பின் தொடர்ந்து இறுதியாக லண்டன் நீதி மன்றத்தில் வைத்து சுட்டுக் கொன்றான் மாவீரன் உத்தம்சிங்.

ஆனால் பல்லாயிரம் பேரைப் பலிகொண்ட கொலைகார ஆண்டர்சனை சுட வேண்டாம்... ஆனால் குறைந்தபட்சம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக் கூட கையாலாகாதவர்களாக இருக்கிறோம் நாம்.

ஏனென்றால் நாம் ஒரு போதும் உத்தம்சிங்குகள் அல்ல.

சகலமும் மழுங்கிப்போன மன்மோகன் சிங்குகள்!



பாமரன்

No comments: