Sunday, September 5, 2010

கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி



போன ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி அன்று பிரசுரித்தேன். இப்போதும் அதே காரணத்திற்காகத்தான் மீண்டும் பிரசுரிக்கிறேன்
பெரியாரும் பெரியார் இயக்கத்தவர்களும், “கடவுள் பயல்களிலேயே களவானிப்பய கண்ணன்தான்” என்று பலமுறை அவனது லீலைகளை அம்பலப்படுத்தியப் பிறகும் கூட பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாத பக்தக் கோடிகளும் தங்களின் மூடநம்பிக்கைகளின் மீது மிகுந்த ‘நம்பிக்கை’யாக இருக்கிறார்கள்.

சில தமிழ்தேசியவாதிகளும், பார்ப்பனரல்லாத கடவுள்களின் நம்பிக்கையாளர்களுமான சில ‘நாத்திகர்களும்’ ஈவ்டீசிங் பேர்வழியான கண்ணனை ‘யாதவர்’ என்றும் அவன் ‘பார்ப்பனர் கிடையாது அதனால்தான் அவன் கருப்பாக இருக்கிறான். மாகாகவி பாரதிகூட அதன் காரணத்தால்தான் கண்ணனை சிலாகித்தான்’, என்றும் ‘கோனார்’ உரை எழுதுகிறார்கள்.

கண்ணன் அல்லது கிருஷ்ணன் பார்ப்பானோ இல்லை பார்ப்பனரல்லாதவனோ, அவன் தூக்கி நிறுத்தியது பார்ப்பனியத்தை. அதனால்தான் அவனை பார்ப்பனர்களும் கொண்டாடுகிறார்கள். ‘நானே நாலு வர்ணத்தை உண்டாக்கியவன்’ என்று ஒரு அசிங்கத்தை அதிகாரத்தோடு சொன்ன காரணத்திற்காகத்தான், அய்யங்கார் அல்லது வைணவ கடவுள் கண்ணனை, அய்யர் பாரதியும் கொஞ்சி குலாவுகிறார். பெருமாளை வணங்காத அயயர்கள்கூட கண்ணணை வணங்கும் ரகசியமும் அதுவே.

ஒருவேளை பார்ப்பனரல்லாத அறிஞர் பெருமக்கள், தங்களின் கூர்மையான அறிவினால் துப்பறிந்து, ‘கண்ணன் பிறப்பால் பார்ப்பனரல்லாதவன்தான், அதுவும் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்’ என்று நிரூபித்தாலும்கூட, இல்லை அதுவே உண்மையாக இருந்தாலும்கூட அதனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சமூகத்திற்கும் என்ன பயன்? அவமானம்தான்.

அவன் பிறப்பால் என்னவாகப் பிறந்தானோ? ஆனால் தன் செயலால் அவன் பார்ப்பானராகவே உயர்ந்து நிற்பதால், நிச்சயம் அவன் பார்ப்பனர்தான்.

அன்றைக்கு சத்ரியனாக அவதரித்த ராமன், பார்ப்பன நலனுக்காக பாடுபட்டதினால்தான் இன்றைக்கும் பார்ப்பனர்கள் ராமனை கடவுளாக போற்றுகிறர்கள்.

இன்றைக்கு பார்ப்பனர்களின் இந்திய கதாநாயர்கள் யார் தெரியுமா?

பார்ப்பனரல்லாத மோடியும், அத்வானியும்தான்.

***

களவானித்தனம் மற்றும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டாலும், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக்கொ யாத தொல்லை’ என்று கடவுள் கண்ணனின் பொறுக்கித் தனத்தை பாடல் எழுதி பெருமைபட்டுக் கொண்ட பாரதி போன்ற பக்தர்களுக்கு பச்சைக் குழந்தையாகவே காட்சியளிக்கிற, பார்ப்பனர் பார்ப்பனரல்லாதவர்களின் கவர்ச்சிகக் கடவுளான கிருஷ்ணனை பற்றி டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார்:

“கிருஷ்ணன் என்ற பெயரில் நான்கு பேர் இருக்கிறர்கள். ஒரு கிருஷ்ணன், சத்யவதியின் மகன். திரிதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகியோரின் தந்தை. இரண்டாவது கிருஷ்ணன், சுபத்ராவின் சகோதரன், அர்ஜுனனின் நண்பன். மூன்றாவது கிருஷ்ணன், வசுதேவர், தேவகி ஆகியோரின் மகன், மதுராவில் வசித்தவர். நான்காவது கிருஷ்ணன் கோகுலத்தில் நந்தனாலும் யசோதாவாலும் வளர்க்கப்படடவர்; இவர்தான் சிசுபாலனை கொன்றவர்.”

“பிரமா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் வழிபாட்டுடன் ஒப்பிடும்போது கிருஷ்ணன் வழிபாட்டில் ஒரு செயற்கைத் தன்மை காணப்படுகிறது. பிரமா, விஷ்ணு, மகேஸ்வரன் கடவுள்களாகவே பிறந்தவர்கள். கிருஷ்ணன் மனிதனாகப் பிறந்து கடவுளாக உயர்த்தப்பட்டவர்.”

“கிருஷ்ணனின் தொடக்க நிலை இப்படி அடக்கமானதாயிருந்தாலும், அவர் எல்லோருக்கும் மேலாக உயர்ந்த கடவுள் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டவர் ஆனார்.”

“எனவே பகவத் கீதையைப் பொறுத்த மட்டில் கிருஷ்ணனைவிடப் பெரிய கடவுள் யாரும் இல்லை என்பது தெளிவாகிறது. அவர் அல்லா ஹு அக்பர். அவர் மற்ற எல்லாக் கடவுள்களையும் விடப் பெரியவர்”

இப்படி ஹாலிவுட் மேக்கப் மேனின் உதவியே இல்லாமல் பல வேடங்களில் வந்து கமல்ஹசனையே தூக்கிச் சாப்பிடுகிற கிருஷ்ணனின் யோக்யதை எப்படிப்பட்டது? என்பதை டாக்டர் அம்பேத்கர் விவரிக்கிறார்:

“கிருஷ்ணனுடைய அநாகரிகமான அநேக காரியங்களுள் மிகக் கேவலமானது என்னவெனில் அவன் இராதா என்ற கோபியருடன் கொண்ட முறைகெட்ட வாழ்க்கையாகும். கிருஷ்ணன் இராதாவுடன் கொண்டிருந்த தொடர்பினைப் பற்றிப் பிரம்ம வர்த்த புராணத்தில் வருணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.”

“இராதாவோ ஏற்கனவே மணமானவள். முறைப்படி மணந்த ருக்மணியை கைவிட்டுவிட்டு வேறொருத்தன் மனைவியான இராதாவுடன் கிருஷ்ணன் வாழ்க்கை நடத்துகிறான்.”

“கிருஷ்ணன் மாவீரன் மாத்திரமல்ல; இளம்வயது முதலே மிகச் சிறந்த அரசியல் வித்தகன் எனவும் சொல்லப்படுகிறது. போர் வீரனாகவோ அல்ல அரசியல் வாதியாகவோ அவன் செய்த ஒவ்வொரு காரியமும் அறத்திற்கு மாறானவை. அந்த வகையில் அவன் செய்த முதற்காரியம் தன் சொந்த தாய்மாமனான கம்சனைக் கொன்றதாகும். அப்போது கிருஷ்ணனுக்கு வயது பன்னிரெண்டுதானாம்”

“கிருஷ்ணன் கம்சனைப் போர்க்களத்திலோ அல்லது தனிப்பட்ட முறையில் சண்டையிட்டோ கொன்றிடவில்லை.”

“மதுராபுரியை வந்தடைந்தவுடன் (கம்சனை கொல்வதற்கு) தாம் அணிந்திருந்த சாதாரண ஆயர் உடையை மாற்றிச் சற்று நாகரிகமான உயைணிந்து கொள்ள கிருஷ்ணனும் அவனுடைய சகோதரர்களும் விரும்பினர். அவ்வழியே வீதியில் வந்த கம்சனனின் சலவைக்காரரிடம் மிரட்டித் துணி கேட்டனர். அவன் திமிரா நடந்து கொண்டதால் அவனைக் கொலை செய்துவிட்டு, அவன் சுமந்துவந்த துணி மூட்டையிலிருந்து தாம் விரும்பிய துணிகளை எடுத்துக் கொண்டனர்.

பிறகு கம்சனுக்கு வாசனைத் திரவியங்களைப் பூசும் குப்ஜா என்ற பெண்ணைச் சந்திக்கின்றனர். குப்ஜா ஒரு கூனி. அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க அவள் மணங்கமழும் சந்தனக் குழம்பைப் பூசி விட்டாள். பதிலுக்கு கிருஷ்ணன் கூன் விழுந்த குப்ஜாவின் முதுகை குணப்படுத்தினானாம்.

வேறோர் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணன் குப்ஜாவைச் சந்திக்க நேர்ந்தபோது வழக்கம் போல தகாத முறையில் குப்ஜாவுடன் உடலுறவு கொண்டதாகப் பாகவதம் சொல்கிறது. (பன்னிரெண்டு வயசு பையன் பண்ணற வேலைய பாத்திங்களா?-வே. மதிமாறன்) இருப்பினும் இந்தச் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் குப்ஜா வாசனைத் திரவியங்களைப் பூசினாள்.”

“ருக்மணியைத் தொடர்ந்து பெரும் மந்தையே கிருஷணனின் மனைவிக் கூட்டமானது. கிருஷ்ணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை பதினாறாயிரத்து ஒரு நூற்றெட்டு பேர்கள். அவனுடைய குழந்தைகளின் எண்ணிக்கையோ ஒரு லட்சத்து எண்பாதாயிரம் பேர்கள்.”

நிர்வாணமாக்கி ஊர் பெண்கள் மானத்தை எல்லாம் வாங்கிய கிருஷ்ணன், மகாபாரதத்தில் பாஞ்சாலியின் மானம் காக்க உடைகொடுத்ததானம்! பாஞ்சாலியின் மானம் காத்தது இருக்கட்டும், இங்கே டாக்டர் அம்பேத்கரின் வாதத்திறமையின் முன்னால் அவன் மானம் போகிறேதே என்ன அவதாரம் எடுத்து ‘தன் மானத்தை’ காப்பற்ற முயற்சிப்பான், கிருஷ்ணன். என்ன பதில் சொல்லி கிருஷ்ணனின் ‘மானம்’ காப்பார்கள் பக்தர்கள்.

விசித்திரமானது இந்து மதம். வேடிக்கையாக இருக்கிறது இந்துக்களின் இறைநம்பிக்கை.

‘ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுக்கமாக வாழ்ந்தான் ராமன் அதற்காகத்தான் அவனை வணங்குகிறோம்’ என்கிறார்கள் இந்துக்கள். அவர்களேதான், பாலியல் நோய் வந்து பாதிக்கப்பட்டிருக்க வேண்டிய அளவிற்கு சகமேட்டுமேனிக்கு பல பெண்களோடு உறவு கொண்ட, கொலைபோன்ற கிரிமனல் குற்றங்களுக்காக சிறுவர் சீர்திருத்த்தப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டிய கிருஷ்ணனையும் தெய்வமாக தொழுகிறார்கள்.

ஒழுக்கம் குறித்து தனிவாழ்க்கையில் அதிகம் பேசுகிற இந்துக்கள், தங்களின் கடவுள் பொறுக்கியாக இருந்தாலும் அதனை பூரிப்போடு ஏற்றுக் கொள்கிறார்கள்.

இந்துக்களின் இறைவழிபாட்டில் இருக்கிற இந்த முரண்பாட்டை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை. டாக்டர் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் புரியவைத்தால் அதை புரிந்து கொண்ட பின் அதற்காக அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை. இந்து மதம் இந்துக்களை சுயமரியாதையும், சுயஅறிவும் அற்றவர்களாகவே உருவாக்கி வைத்திருக்கிறது.

இந்துக்களாக அடையாளப்படுத்தப்பட்டு, முட்டாள்களாக, சூத்திரர்களாக நடத்தப்படுகிற, அவமரியாதைக்குள்ளாகிற பிற்படுத்தப்பட்டவர்களின் சுயமரியாதைக்காக பார்ப்பனிய தந்துவங்களோடு நேருக்கு நேர் மோதிய டாக்டர் அம்பேகத்ரை, அவமதிக்கிறார்கள், சுயமரியாதையற்ற சூத்திரர்கள்.

‘நான் யாருக்கும் அடிமையில்லை

எனக்கடிமை யாருமில்லை’


என்ற நூலிலிருந்து…….

ஆசிரியர் வே. மதிமாறன்

விலை ரூ. 45

கிடைக்குமிடம்:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 337384

--

No comments: