Thursday, September 2, 2010

தமிழனுக்கொரு நீதி!



ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பூட்டா சிங் இருந்தபோது,​​ நாடாளுமன்றத்தின் ​ மாநிலங்களவையில் அ.தி.மு.க.வின் தலைவராக இருந்த ஆலடி அருணா,​​ தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்காதது பற்றி குறிப்பிடுகையில் இந்தியா பல மொழிகளையும்,​​ பல கலாசாரங்களையும்,​​ பல மதங்களையும்,​​ பல தேசிய இனங்களையும் கொண்ட ஒரு நாடு என்று அவருக்கே உரிய திராவிட பாணியில் அழுத்தமாகக் கூறினார்.​ ​​ பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு என்று அவர் கூறியதும் அவையில் இருந்த பூட்டா சிங் ஏவுகணைபோல் எழும்பி இது மிகுந்த வெட்கத்துக்குரியது என்றார்.​ வெட்கப்படுவது உங்கள் உரிமை என்று கடைஉதட்டுப் புன்னகையோடு கூறிவிட்டு ஆலடி அருணா தன் பேச்சைத் தொடர்ந்தார்.​ இது நடந்து இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன.​

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் இன்றும் தொடர்கிறது.​ சிந்துபாத் கதைபோல் நாடாளுமன்றத்தில் விவாதங்களும் தொடர்கின்றன.​ ​ ​​ சென்ற ஜூலை 7-ம் தேதி கடல் மாதாவின் மடியில் மரணத்தைத் தழுவிய வேதாரண்யத்தைச் சார்ந்த மீனவர் செல்லப்பனோடு,​​ இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் 100-க்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.​ நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகளும் வலைகளும் நாசம் செய்யப்பட்டிருக்கின்றன.​ பலநூறு மீனவர்கள் உடல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர்.​ ​​ மானத்தோடு வாழ்வதற்கு பஞ்சபூதங்களோடு அன்றாடம் போராடும் மீனவர்களைப்போல் திக்கற்ற ஒரு வர்க்கம் வேறில்லை என்றே கூறலாம்.​ விவசாயக் கூலிகளுக்கு இருக்கிற பேரம் பேசுகிற சக்திகூட இல்லாமல்,​​ வறுமை அரக்கனின் வாய்க்குள் நொறுங்கிப்போகின்றவர்களாகத்தான் மீனவர்கள் இருக்கிறார்கள்.​

தமிழன் என்பதால்தான் இவர்களின் துயரம் தொடர்கதையாக இருக்கிறதோ என்ற எண்ணம் நாளுக்குநாள் மேலோங்குவதைக் கண்டுகொள்ளாமல் மத்திய அரசும் மெüனம் காக்கிறது.​ ​​ பனிப்பிரதேசத்தையும் பாறைப் பகுதிகளையும் பாகிஸ்தானிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் காக்க போர் பல புரிந்து இன்றளவும் போராடி வருகிற இந்தியா,​​ தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான கடலுக்குள் கருவூலம் போன்ற கச்சத்தீவை இலங்கைக்கு ஏன் தாரை வார்த்தது என்பதற்கான விடை இதுவரை கிடைக்கவில்லை.​ ​

​​ வங்கதேசம் தம் நாட்டின் இருபகுதிகளையும் இணைக்க இந்தியாவிடம் நடைபாதை கேட்டபோது மேற்கு வங்கத்தில் அதற்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.​ ஒருவழியாக 1974-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் கூச்-பிகார் பகுதியில் தீன்பிகா என்ற 178 மீட்டர் நீளமும் 85 மீட்டர் அகலமும் உள்ள நடைபாதையைக் கொடுப்பதற்கு ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.​ அந்த ஒப்பந்தத்தின்கீழ் தீன்பிகாவின் இறையாண்மை இந்தியாவிடமும்,​​ அதைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் குத்தகை உரிமை மட்டும் வங்கதேசத்திடமும் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.​ எக்காரணம் கொண்டும் அத்தீவை வங்கதேச ராணுவத்தளமாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் முடிவானது.​ இன்றும் அதேநிலைதான் தொடர்கிறது.​ ​​ மேற்கு வங்கத்துக்குச் சொந்தமான தீன்பிகா என்னும் சாலை போன்ற நடைபாதையை வங்கதேசத்துக்குக் குத்தகைக்கு விடும்போது எடுத்துக்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கையும் அக்கறையும் ஏன் கச்சத்தீவைத் தாரை வார்க்கும்போது எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று தமிழன் கேட்டால்,​​ நீ இந்தியனா என்ற எதிர்க்கேள்வியே ஈட்டிபோல் பாய்கிறது.​

தமிழர்கள் பிரச்னை என்றால் தேசிய நீரோட்டம் வடவேங்கடத்தோடு நின்றுபோகும் மர்மம்தான் என்ன?​ ​ ​​ கச்சத்தீவு ஒப்பந்தத்தை மதிக்காமல் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை நிராகரித்து இலங்கைக் கடற்படை அவர்களைத் தொடர்ந்து தாக்கிவரும்போது,​​ அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு கச்சத்தீவை மீட்டு எடுத்துக்கொள்கிற வல்லமை இந்தியாவுக்கு இல்லையா?​ அதே வங்கக் கடலில் ரோந்து செல்கிற இந்தியக் கடற்படையும் கடலோரக் ​ காவல் படையும் தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கைக் கடற்படைமீது ஒருமுறையேனும் திருப்பிச் சுட்டிருந்தால்,​​ "தாய் மண்ணே வணக்கம்' என்று தமிழன் உணர்ச்சிப்பிழம்பாகி இருப்பானே!​ இந்திய ராணுவத்தின் பீரங்கி தமிழனுக்காக ஒருமுறையாவது ஒலிக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சால் இதயம் கனத்துப்போகிறது.​ கடற்கரையில் காத்துக் கிடக்கிற பெண்டுபிள்ளைகளின் பசியைத் தணிக்க வாய்க்கரிசி போட்டுக்கொண்டு கடலுக்குச் செல்கிற மீனவனை நடுக்கடலில் சிங்களவன் நிர்வாணப்படுத்துகிறபோது,​​ துச்சாதனனைப் போன்று இந்திய தேசத்தையல்லவா அவன் துகிலுரிகிறான்.​ இந்தச் செயலைக் கேட்ட மாத்திரத்தில் தில்லி ஆதிக்கபுரியினருக்கு ரத்தம் கொதிக்க வேண்டுமல்லவா? ரத்தம் சூடேறியதாகக்கூட இதுவரை தகவல் இல்லாதது தேசிய உணர்வை நீர்த்துப்போகச் செய்வது இயற்கைதானே.​ ​​ 1988-ம் ஆண்டு எங்கோ இருக்கிற மாலத்தீவு என்னும் நாட்டைக் கூலிப்படையினர் கைப்பற்றிக் கொண்டபோது,​​ இந்திய அரசின் இரும்புக் கரங்கள் இந்துமாக் கடல் வரை நீண்டு ஜனாதிபதி அப்துல் கயூமை மீண்டும் அரியணையில் அமர்த்தியது நினைவில் சுழலத்தானே செய்கிறது.​

அன்னிய நாட்டவனுக்குக் காட்டப்படுகிற அந்தப் பரிவு,​​ "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே' என்று குதூகலித்த மகாகவி பாரதி வழிநின்று மீன்பிடி படகிலேகூட மூவண்ணத்தைத் தீட்டிக்கொள்கிற திக்கற்ற மீனவனுக்குக் காட்டப்படாதது ஏன்?​ ​​ ஆசியக் கண்டத்தில் பிலிப்பின்ஸ் நாட்டுக்கு அருகில் இருக்கிற பால்மஸ் தீவு தமக்குச் சொந்தமென்று,​​ ஐரோப்பா கண்டத்தின் வடக்கு அட்லாண்டிக் கடல்பகுதியில் ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிற நெதர்லாந்து உரிமை கொண்டாடியது.சர்வதேச போலீஸ்காரன் என்று தம்பட்டமடித்துக்கொள்ளும் அமெரிக்காவின் பிடியில் இருந்த அந்த 3 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள தீவை சர்வதேச நீதிமன்றத்தில் நெதர்லாந்து வழக்காடித் திரும்பப் பெற்றது.​ ஆனால்,​​ ராமேசுவரத்திலிருந்து 18 கி.மீ.​ தொலைவில் சர்வதேச நடைமுறைகளின்படி இந்தியக் கடல் எல்லைப் பகுதியில் உள்ள கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டு இன்று தமிழக மீனவர்கள் சூறாவளியில் சிக்கிய பாய்மரக் கப்பலாய் சீரழிந்து கிடக்கிறார்கள்.​ ​ சென்னைக்கு வடக்கே பழவேற்காட்டில் தொடங்கி கன்னியாகுமரி வரை சுமார் 1,062 கிலோ மீட்டர் நீளமான கிழக்குக் கடற்கரையோரத்தில் வாழும் மீனவ சமுதாயத்தினர்,​​ சுனாமி வந்து சுருட்டிப்போட்டாலும் கடல்மாதாவே கதி என்று கடலை அண்டியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.மனித நாகரிகம் தொடங்கிய நாளிலிருந்து மீனவர்களின் ஜீவாதாரமாக இருந்துவரும் கடல்,​​ மத்திய அரசின் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தின்கீழ் மீனவமக்களிடமிருந்து பறிக்கப்பட்டு மெல்ல மெல்ல தனியார் வசமாகிவிடும் சூழல் நிலவுகிறது.​ நடுக்கடலுக்கும் செல்ல முடிவதில்லை,​​ இனி கடற்கரையை ஒட்டியும் மீன்பிடிக்க இயலாது.​

தமிழனுக்கு இது போதாத காலம் போலும்.​ தமிழ்நிலத்தின் உயிர்நாடியான காவிரியில் காலங்காலமாய்ப் பாய்ந்தோடிய தண்ணீரைக் கன்னடர்கள் மறுக்கிறார்கள்,​​ உபரிநீர் அரபிக்கடலில் கலந்தாலும் பரவாயில்லை;​ தமிழகத்துக்குத் தர முடியாது என்று கேரளத்தவர்கள் முரண்டுபிடிக்கிறார்கள்.​ சென்னை மக்களுக்கு கிருஷ்ணா நதிநீர் கிடைக்க ஆந்திரத்திடம் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது.​ கடலை நம்பியே காலந்தள்ளிவந்த தமிழக மீனவர்கள் நிர்கதியாக நிற்கிறார்கள்.​ தமிழக மீனவர்களைப் பாதுகாக்கக் கோரி கடந்த கால் நூற்றாண்டாக தமிழக அரசு மத்திய அரசுக்கு மாறிமாறி அனுப்பிய கடிதக் குவியல்கள் விரைவில் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தாலும் வியப்பில்லை.​ இந்தி நடிகர் ஷாருக்கான் கடந்த ஆண்டு அமெரிக்க விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்கு உள்படுத்தப்பட்ட சம்பவம் இந்திய ஊடகங்களில் ஒருவாரம் கொழுந்துவிட்டெரிந்தது.​ அந்த நிகழ்வு தில்லி ஆட்சி பீடத்தையே உலுக்கியது.​ விளக்கங்கள்,​​ மறுப்புகள்,​​ பேட்டிகள் என்று அதிகார மையங்கள் ஆடிப்போயின.​ ஆனால்,​​ தமிழக மீனவர்களின் உயிர் ஒன்று,​​ இரண்டு...​ நூறு...​ என்ற கூட்டல் கணக்கோடு முடிந்துபோகிறது.​ ​​ இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காப்போம் என்ற முழக்கம் வெறும் நிலப்பரப்பைக் காப்பதென்ற தவறான புரிதலில் ஆட்சியாளர்கள் இருப்பது மாபெரும் கருத்துப்பிழை.​ மக்களின் உணர்வை மதித்துக் கொள்கை முடிவெடுக்கிற தலைவர்களைக் கொண்ட தேசம்தான் காலமுகடுகளைக் கடந்து கற்பக விருட்சமாய் வியாபித்து நிற்கும்.​ ​
தமிழா, நீ பேசுவது தமிழா?

தில்லை நாகசாமி

No comments: