Tuesday, November 9, 2010

தினமலர்-பதிவுலகம் இணைந்து வழங்கும் “இதுதாண்டா போலீஸ்” ரீலோடட் !

Elangovan - kuwait,குவைத்
2010-11-09 13:35:48 IST
நல்ல தீர்வு, சட்டம் ஒரு இருட்டறை குற்றவாளியை அதன் முன்னால் நிறுத்தினால் குளிர்காய்ந்து கொண்டிருப்பான் என்பதை உணர்ந்து செயல்பட்ட திரு சைலேந்திரபாபு அவர்களுக்கு நம் நாட்டு மக்கள் எல்லோர் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சட்டங்கள் கடுமையாக்க பட வேண்டும்….
BALAMURUGAN - johor,மலேஷியா
2010-11-09 13:35:11 IST
… (இவனையெல்லாம் அப்படியே உயிரோடு வைத்து சித்திரவதை செய்து, அந்த குழந்தைகள் பட்ட துன்ப வேதனைகளையெல்லாம் இவன் அனுபவிக்காமல் ஒரே encounter லே போய்ட்டான் என்கிற ஆதங்கம் தான் வருது)…
சிவா - சென்னை,இந்தியா
2010-11-09 13:29:54 IST
இது போல கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு குழந்தைய ஒரு பொண்ணு கொன்னு போட்ட அவ பேரு புவிழலி’ன்னு நினைகரன். அவளையும் இப்படி போட்டு தள்ள முடியுமா???????? அப்படி போட்டு தள்ள ஆண்டவனை வேண்டுகிறேன். கோவை போலீஸ்’கு என்னுடைய ஆயிரம் நன்றிகள்….
selva - coimbatore,இந்தியா
2010-11-09 13:28:49 IST
ஆல் தமிழன்ஸ் ஒன்று சேர்வோம். எழுதுங்கள் சீப் மினிஸ்டருக்கு கோயம்புத்தூர் போலிசை பாராட்டி கமிஷ்நேர் சைலேந்திர பாபு தனது திறமையால் மக்கள் மனதை கவர்ந்து விட்டார் ஹாட்ஸ் ஆப் சார்…
சுரேஷ்குமார் - coimbatore,இந்தியா
2010-11-09 13:22:10 IST
அரசன் அன்றே கொல்வான். போலீஸ் (தெய்வம்) நின்று கொள்ளும். நன்றி. கோவை மக்களுக்கு தீபாவளி 5 ம் தேதி அல்ல. இன்று தான் உண்மையான தீபாவளி….
Raga - சென்னை,இந்தியா
2010-11-09 12:36:26 IST
To Coimbatore Police comissioner: Thanks for saving our Tax payers money and saving time of our judicial system for this kind of criminal activities. அவனை விவேக் ஒரு படத்தில் மைனர் குஞ்சுவை சுட்டது போல் சுட்டிருக்க வேன்டும்! இது மாதிரி விரைந்து தீர்ப்பு அளித்தால் நாட்டில் இது மாதிரியான குற்றங்கள் குறையும்! ஊழல், அக்கிரமும் செய்யும் அரசியல் வாதிக்களுக்கும், அரசாங்க வேலை யாட்ட்களுக்கும் இது மாதிரி உடனடி தண்டனை குடுத்தால் மிகவும் நல்லா இருக்கும்!!…
தமிழன் - சென்னை,இந்தியா
2010-11-09 12:35:03 IST
இது போன்ற நிகழ்வுகளில் மக்களின் ஒற்றுமையான உணர்வுகளின் வெளிபாடு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. வெல்க நியாயம் வளர்க மக்களின் ஒற்றுமை ஓங்குக நமது காவல்துறையின் பணி. சிறப்பான இந்த காரியத்தை செய்து முடித்த நமது காவல்துறைக்கும், நமது முதல்வர் மு.க அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி……..
ஷபீர் - manama,பஹ்ரைன்
2010-11-09 12:33:03 IST
தமிழக அரசு , திரு.சைலேந்திர பாபு மற்றும் அவருடன் சேர்ந்து இம்முடிவினை எடுத்த அவரது சகாக்கள், என்கௌண்டர் செய்ய உதவி புரிந்த போலீசார் அனைவருக்கும் என் மணமாந்த வாழ்த்துக்கள்!!!. எது எதுக்கோ பரிசு வழங்குகிறார்கள். இந்த வீரர்களுக்கு பாரத ரத்னா போன்ற விருந்துகள் வழங்க வேண்டும்….
Krishnas - nj,யூ.எஸ்.ஏ
2010-11-09 12:28:42 IST
“போலிசே தண்டனை கொடுத்தால் சட்டம் என்ன ஊறுகாய் போடவா இருக்கிறது” இது சில மேதாவிகளின் கேள்வி இங்கு. இந்த மாதிரி குழந்தைகளை கடத்துவது, கொல்வது, கற்பழிப்பது போன்ற கொடூர செயல்களில் ஈடுபடும் மிருகங்களுக்கு எதற்கு சட்ட உதவி. நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி இந்திய மக்களின் வரிப்பணம் ஏன் வீணாகவேண்டும். அந்த மிருகங்களை குற்றவாளி என்று நிரூபணம் ஆனவுடன் அந்த இடத்திலயே கொன்று விடவேண்டும்…..
Kumaran - chennai,இந்தியா
2010-11-09 12:18:27 IST
இது மாதிரி சீன் விஜயகாந்த், அர்ஜுன் படத்தில ஏற்கனவே வந்துவிட்டது. இதை தான் நாங்களும் ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தோம். ஆனாலும் ஒரு பண்ணி உயிரோட இருக்கு…தயவு செய்து அவனுக்கும் ஒரு பிளான் போடுங்க.. என் அருமை மனித உரிமை கமிஷன் தலைவர்களே கொஞ்சம் கண்ண மூடிக்கோங்க…. அடி பட்ட போலீஸ் சிங்கங்களுக்கு என் ஆறுதல்கள் அண்ட் வாழ்த்துக்கள்…….
Sankaran - chennai,இந்தியா
2010-11-09 12:18:17 IST
அது தான் ஐநூறு பேர் போலிசை பாராட்டியிருக்கிரார்களே என்று கருத்து எழுதாமல் இருக்காதீர்கள். ஐந்தாயிரம் பேர் எழுதினாலும் குறைவு தான். வெள்ளைக்காரனின் துருப்பிடித்த சட்டங்களை கட்டிக்கொண்டு அழும் அறிவுஜீவிகளுக்கு சாதா இந்தியனின் ஆத்திரமும் குமுறலும் என்று தான் புரியுமோ? கசாபுக்கும் இந்த முடிவு எப்போது என்று ஏங்கும் கோடானு கோடி இந்தியர்களின் சார்பாக,…
____________________________________________________________

இவை தினமலருக்கு வந்துள்ள 1000 க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களில் சில. கோவை முழுவதும் மார்வாடி சேட்டுகள் இனிப்பை வழங்கி பட்டாசுகளையும் அள்ளி தருகிறார்கள். சேட்டுகளின் தயவில் கோவையே சமூக தீபாவளியை கொண்டாடி வருகிறது. தமிழ் பதிவுலகிலும் அதே மனநிலைதான்.

இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், கொல்லப்பட்ட மோகன்ராஜ் போலீசை சுட்டுக்கொல்ல முயன்றதாகவும், தற்காப்புக்காக போலீசு சுட்டதில் மோகன்ராஜ் செத்துப்போய்விட்டதாகவும் போலீசு கொடுத்துள்ள செய்தி கடைந்தெடுத்த பொய் என்பதை 1000 பின்னூட்டக்காரர்களும் அடித்துச் சொல்கிறார்கள். இருந்தபோதிலும் “பொய் வாழ்க, போலீசு வாழ்க, கொலை வாழ்க! ஜெய்ஹிந்த்!” என்று கருத்துக் கூறி முடித்திருக்கிறார்கள்.

வாசகர்களுடைய தர்ம ஆவேசம் தாங்க முடியவில்லை. இப்படி அறவுணர்ச்சி பொங்கி வழியும் தமிழகத்திலா லஞ்ச ஊழல் தாண்டவமாடுகிறது, பொதுச்சொத்துக்கள் கொள்ளை போகின்றன? இந்த தமிழ்நாட்டில்தானா சில போலீசுகாரர்கள் டூட்டி முடிந்தபின் மப்டியில் வந்து திருடுகிறார்கள், பல போலீஸ்காரர்கள் யூனிபார்மிலேயே திருடுகிறார்கள்..? நம்பமுடியவில்லை.

இருந்தாலும் ஒரு கேள்வி. ஒருவேளை… ஒருவேளை மட்டும்தான், மோகன்ராஜ் என்ற நபர் அப்பாவியாக இருந்து, உண்மையிலேயே அந்தக் குழந்தைகளைக் கடத்திக் கொன்றவர்கள் சேட்டுடைய சொந்தக்காரப் பையன்கள் என்ற சேதி கொஞ்சநாளைக்குப் பின்னர் வெளிவந்தால்? சில நாட்களுக்கு முன் சென்னையில் சிறுவனைக் கடத்தியதாக கைது செய்யப்பட்டிருப்பவர்கள் அவனது சொந்தக்கார இளைஞர்கள், ஹை டெக் கிரிமினல்கள். கேட்ட பணத்தைக் கொடுப்பது போலக் கொடுத்து பின்னர் அவர்களை மடக்கிப் பிடித்தது போலீசு என்ற செய்தியைப் படித்திருப்பீர்கள். அதனால்தான் ஒரு சந்தேகமும் வருகிறது.

“இப்படி பணத்தைக் கொடுத்து குற்றவாளியைப் பிடித்திருப்பது போலீசு துறைக்கே அவமானம்” என்றும், “மைனாரிட்டி திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் யோக்கியதை இதுதான்” என்றும் மறுநாள் ஜெயலலிதா விட்ட அறிக்கையையும் படித்திருப்பீர்கள்.

சட்டமன்றம் வேறு கூடவிருப்பதால், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை” என்று ஆத்தாளுக்கும் மக்களுக்கும் நிரூபிக்கும் விதத்தில், உடனே “கிடா வெட்டி பொங்கல் வைக்குமாறு” போலீசுக்கு உத்தரவிடப்பட்டதாகவும், கோவை போலீசுதான் “சேச்சே.. அப்படியெல்லாம் உடனே சுட்டுக்கொல்வது ஐ.பி.எஸ் பதவிக்கு அழகு இல்லீங்கய்யா, ரெண்டு நாளாவது போகட்டும்” என்று கூறி, கிடாவெட்டினை தள்ளி வைத்து நிறைவேற்றியதாகவும் ஒரு செய்தி உலவுகிறது. எப்படியோ, மோகன்ராஜ் என்ற நபருக்கு “எமன்” ஜெயலலிதா உருவில் வந்திருக்கிறான்.

ஜெயலலிதா மட்டும்தான் எமன் என்று சொல்லிவிட முடியாது. தேர்தல் நெருங்கும் வரை திமுகவின் காலை நக்கிப் பிழைத்துவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் தங்கள் “வலிமை”யை கருணாநிதிக்குப் போட்டுக் காட்டும் பத்திரிகைகளும், கருணாநிதி என்னதான் அள்ளிக் கொடுத்தாலும் “தானாடாவிட்டாலும் தசையாடும்” என்று இனப்பாசத்துடன் அம்மாவின் அறிக்கைகளை 5 ஆம் பக்கத்திலிருந்து முதல் பக்கத்துக்கு கொண்டுவந்திருக்கும் பார்ப்பன நாளேடுகளும் கூடத்தான் இந்த என்கவுன்டரில் பங்கேற்றிருக்கின்றன. இவர்கள் உருவாக்கிய தர்மாவேசம்தான், இந்தக் கொலையை ஒரு திருவிழாவாக கொண்டாடும் மனநிலைக்கு வாசகர்களைத் தயார்படுத்தியிருக்கிறது.

கும்பலோடு சேர்ந்து கொண்டு தர்ம அடி போடும் “வீரர்கள்” அடிவாங்குபவன் நல்லவனா, கெட்டவனா என்று தெரிந்து கொள்ள எப்போதுமே விரும்புவதில்லை. சொந்த முறையில் நேருக்கு நேர் எந்த அநீதியையும் தட்டிக் கேட்கும் துணிவோ, நேர்மையோ இல்லாத கோழைகள்தான் தரும அடி வீரர்களாக தினமலர் பின்னூட்டங்களில் அவதரிக்கிறார்கள்.

“பாலியல் வன்முறை நடந்திருப்பதாக பிரேத பரிசோதனை கூறுகிறது” என்று போலீசு சொல்கிறது. ஆனால் குழந்தைகளை கடத்தியவர்கள் “பணத்துக்காகத்தான் கடத்தினார்கள்” என்பது கூட இதுவரை உறுதியானதாகத் தெரியவில்லை. பணத்துக்கு கடத்தினார்களோ, பழி வாங்குவதற்காக கடத்தினார்களோ, எதற்காகக் கடத்தியிருந்தாலும் குற்றம்தான். அதில் சந்தேகமில்லை.

ஆனால் அந்தக் கொலை ஆதாயத்துக்காக செய்யப்பட்ட கொலையா (murder for gain), ஆத்திரத்தில் செய்யப்பட்ட கொலையா, அவசரத்தில் செய்யப்பட்ட கொலையா என்பதைப் பொறுத்து குற்றவாளிகளுக்கான தண்டனை ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை அதிகரித்துச் செல்லும். “எதற்காக கொன்றார்கள் என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவையா, கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல், கொலைக்கு கொலை… ” என்று முழங்குகிறார்கள் தினமலர் பின்னூட்டக்காரர்கள்.

அதுதான் நீதி என்றால், இதே போன்றதொரு என்கவுன்டரில் ஜெயேந்திரரை அன்று ஆந்திரா பார்டரில் வைத்தே போட்டுத் தள்ளியிருக்கலாமே! அந்தக் கிரிமினலின் கையால் வழங்கப்பட்ட ஒண்ணரை கிலோ எடையிலான தங்க கிரீடத்தை தலையில் சுமக்கும் துர்ப்பாக்கிய நிலையநிலிருந்து வெங்கடாஜலபதி பெருமாளும் தப்பியிருப்பாரே! கோவை என்கவுன்டரை ஆதரிப்பவர்கள் அப்படி ஒரு ஆந்திரா என்கவுன்டர் நடந்திருந்தால் அதனை ஆதரித்திருப்பார்களா?

அன்று “ஹ்யூமன் ரைட் வயலேஷன், மிஸ்யூஸ் ஆஃப் பவர், ஹாரஸ்மென்ட்” என்று பல மாமாக்களும் மாமிகளும் டிவிக்களில் பேட்டி கொடுத்தார்களே! “இந்த அநீதியைப் பொறுக்க முடியாமல்தான் சுனாமியே வந்தது” என்று கூட சென்னை அயோத்தியா மண்டபத்தின் பக்கம் பேசிக்கொண்டார்களே! அன்று சென்னை உயர்நீதி மன்றம் விடுமுறை நாளில் சங்கராச்சாரியின் பெயில் பெட்டிசனை விசாரித்ததே, பெரியவாளை ஜெயிலுக்கு அனுப்பாமல் ஜட்ஜ் பங்களாவிலேயே ரிமாண்டு பண்ண முடியுமா என்று ஒரு மாட்சிமை தங்கிய நீதிபதி அரசு வக்கீலிடம் கேட்டாரே அதெல்லாம் நினைவிருக்கிறதா?

“இன்றைக்குத்தான் எங்களுக்கு தீபாவளி” என்று பேட்டி கொடுத்திருக்கிறார்கள் அந்தப் பிள்ளைகளின் பெற்றோரான சேட்டுகள். வரதராஜப் பெருமாள் சந்நிதியில் சங்கரராமனை ஆள் வைத்துப் போட்டுத்தள்ளியதாக குற்றம் சாட்டப்பட்ட பெரியவாளையும் அன்றைக்கே போட்டுத்தள்ளியிருந்தால், சங்கரராமனின் மனைவியும் அன்று தீபாவளி கொண்டாடியிருப்பாரே! பாண்டிச்சேரிக்கு கேசை மாற்றி, இழுத்தடித்ததனால்தானே இன்றைக்கு சங்கரராமனின் ஆவியைத் தவிர எல்லா சாட்சிகளும் பல்டியடித்து விட்டார்கள்?

இது ஒரு உதாரணம் மட்டும்தான். இதே கோவை நகரில் போலீசுக்காரர் செல்வராஜ் கொலையைத் தொடர்ந்து இந்து முன்னணிக் காலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம் மக்களில் ஒருவருக்கு கூட இன்று வரை நீதி கிடைக்கவில்லை. ஆனால், பதிலுக்கு குண்டு வைத்த அல்உம்மாக் காரர்கள் மட்டுமின்றி பல அப்பாவிகளும் ஆயுள்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

“குஜராத் படுகொலையை எப்படி நடத்தினோம், எப்படி வன்புணர்ச்சி செய்தோம்” என்று ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் வீடியோவையே தெகல்கா வெளியிட்டதே.. அதன் பிறகு எத்தனை ஆர்.எஸ்.எஸ் காலிகள் என்கவுன்டரில் போட்டுத்தள்ளப்பட்டார்கள்? ரதயாத்திரையில் தொடங்கி மும்பை படுகொலை வரை கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கான முஸ்லிம் உயிர்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? தற்போது ஆஜ்மீர் முதலான பல குண்டுவெடிப்புகளை நடத்தியவர்களே சங்க பரிவாரத்தினர்தான் என்று குட்டு உடைந்தவுடன், “அரசியல் பழிவாங்கல்” என்று அவர்கள் ஏன் அலறுகிறார்கள்? அதைக் கேட்டு நமக்கு ஏன் கோபம் வரவில்லை?

“இப்படித்தான் கசாப்பையும் போட்டுத்தள்ளவேண்டும்” என்று பின்னூட்டம் போடுகிறவர், “ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தையும் இப்படித்தான் போட்டுத்தள்ளவேண்டும்” என்று ஏன் சொல்ல மறுக்கிறார்? அலகாபாத் தீர்ப்பு வந்தவுடன், “கடந்த காலக் கசப்புகளையெல்லாம் மறந்து விடுங்கள்” என்று முஸ்லிம்களுக்கு அறிவுரை சொல்கிறாரே பகவத், அதை பெருந்தன்மை என்று பாராட்டுகின்றனவே பத்திரிகைகள், அதையெல்லாம் எப்படி இயல்பாக எடுத்துக் கொள்ள முடிகிறது? அதே மாதிரி ஒரு அறிவுரையை சொல்லும் உரிமை கசாப்புக்கு கிடையாதா? மோகன்ராஜுக்கோ மனோகரனுக்கோ கிடையாதா?

1984 இல் டெல்லியில் கொல்லப்பட்ட சீக்கியர்களுக்காக “விதவை விகார்” என்று குடியிருப்பே கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறதே, அந்த விதவைகள் என்றைக்கு தீபாவளி கொண்டாடுவது? தண்டகாரண்யாவிலும் காஷ்மீரிலும் நடக்காத பாலியல் வன்முறையா, படுகொலையா? “இந்தியாவிலிருந்து விடுதலை” என்று காஷ்மீரே இன்று கையில் கல்லை எடுத்துக்கொண்டு நிற்கிறதே இந்த நிலையை ஏற்படுத்தியது யார்? இந்திய இராணுவமல்லவா?

“போலி என்கவுண்டரில் தங்களை பிள்ளைகளை போட்டுத் தள்ளிய இந்திய இராணுவத்தினரை பதிலுக்கு என்கவுன்டரில் போட்டுத்தள்ள வேண்டும்” என்று காஷ்மீர் மக்கள் கோரவில்லை. மனித உரிமை அமைப்புகளும் கோரவில்லை. “எல்லோரையும் போல அவர்களையும் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும்” என்பதுதான் காஷ்மீர் மக்களின் கோரிக்கை. “எத்தனை கொலை செய்தாலும், வன்புணர்ச்சி செய்தாலும் எங்களை நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடாது” என்று இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரிகள்தான் மிரட்டுகிறார்கள். இந்த அதிகாரத்துக்குப் பெயர்தான் “ஆர்ம்டு போர்சஸ் ஸ்பெசன் பவர் ஆக்ட்”. கொல்லவும், வல்லுறவு கொள்ளவுமான “ஸ்பெஷல் பவர்”!

“இராணுவத்திற்கு கொடுத்திருக்கும் அப்படிப்பட்ட ஸ்பெஷல் பவரை எங்களுக்கும் கொடுங்கள்” என்பதுதான் போலீசின் கோரிக்கை. அதைத்தான் தினமலரின் பின்னூட்டக்காரர்கள் வழிமொழிகிறார்கள். வழக்குகளோ வாய்தாக்களோ இல்லாமல் வாச்சாத்தி, பத்மினி, ரீட்டா மேரி, அந்தியூர் விஜயா .. என்று லாக் அப்பை லாட்ஜாகவும், தூக்குமேடையாகவும் மாற்றிக் கொள்ளும் அதிகாரத்தைத்தான் போலீசு கேட்கிறது. ஏற்கெனவே நடப்பில் இருக்கும் அந்த அதிகாரத்தை, அதிகார பூர்வமாக, சட்டப்படியே வழங்க வேண்டும் என்பதுதான் போலிசின் கோரிக்கை.

தா.கிருஷ்ணனைக் கொன்ற கொலைகாரர்கள், மதுரை தினகரன் ஊழியர்கள் மூவரைக் கொன்ற கொலைகாரர்கள் இவர்களையெல்லாம் போட்டுத் தள்ளுவதற்காகவா இந்த அதிகாரத்தைக் கேட்கிறது போலீசு?

சென்னையில் ஒரு சரிகா ஷா என்ற பெண் ஈவ் டீசிங்கிற்கு பலியானவுடன் மீடியாவும் அரசும் கொந்தளித்தன. உடனே ஈவ் டீசிங்கிற்கு சட்டமெல்லாம் வந்துவிட்டது. இப்போது கோவை கடத்தல் கொலை நடந்தவுடனே என்கவுன்டரைச் சட்டமாக்கச் சொல்கிறார்கள் தினமலர் ரசிகர்கள். பணக்காரனும், பார்ப்பன மேட்டுக்குடியும், சேட்டுகளும் பாதிக்கப்பட்டால்தான் இவர்களிடம் மனிதாபிமானம் கொப்புளித்து எழும் போலும்!

மேலவளவு படுகொலை நடந்தபோது இப்படியொரு தார்மீக ஆவேசத்தை நாம் மீடியாக்களில் பார்க்கவில்லையே! அந்த வழக்கில் “விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பலரும் கொலைக்குற்றத்துக்காக தண்டிக்கப்படவேண்டியவர்களே” என்று சென்னை உயர்நீதி மன்றம் கூறிய பின்னரும், அவர்களை தண்டிப்பதற்கு திமுக, அதிமுக அரசுகள் முயலவில்லையே, அதையெல்லாம் யாரும் கேட்டதாக நினைவில்லையே! தற்போது பெண்ணாடம் மாணவன் பாரத் கொலை பற்றியும் வினவு தளத்தில் எழுதியிருக்கிறோம். அதனைப் படித்து வாசகர்களோ, பதிவுலகமோ பொங்கி எழவில்லையே!

சின்ன கவுண்டர், பெரிய கவுண்டர் என்று கூறிக்கொண்டு தலித் மக்களுக்கு எதிரான சாதிவெறிக் குற்றங்களையும் பாலியல் வன்முறைகளையும் கொலைகளையும் நடத்திக் கொண்டிருக்கும் கொங்கு மண்ணில்தான் இன்று தரும ஆவேசம் தலைவிரித்து ஆடுகிறது. என்கவுண்டருக்கு ஆதரவாக வெடி வெடிக்கிறார்கள். “என்” கவுண்டரோ, “உன்” கவுண்டரோ, யாராயிருந்தாலும் “நம்” கவுண்டர்தானே என்றுகூட அவர்கள் புரிந்து கொண்டிருக்கக் கூடும்.

கோவை என்கவுன்டரை பாராட்டும் ரசிகர்களே, பதிவர்களே உங்கள் முகத்தைக் கண்ணாடியில் ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனிதாபிமான வேடம் உங்களுக்கே அருவெறுப்பாகத் தெரியவில்லையா?

தினமலர் தினகரன் போன்ற பத்திரிகைகளுக்கு பாலியல் குற்றங்களைப் பற்றி எழுதும் அருகதை உண்டா? இந்தக் குற்றங்களின் தோற்றுவாயே அவர்கள்தானே! “முதலிரவு காட்சியை லைவ் ஆகப் பார்ப்பதற்கான இணையதளம் இதுதான்” என்று லிங்க் கொடுத்த பத்திரிகை அல்லவா அது? அதன் உரிமையாளர் குடும்பத்தை சேர்ந்த அந்துமணி ரமேசின் மீதே பாலியல் குற்றத்துக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கவில்லையா? வாரமலரில் பா.கே.ப வில் வரும் சேதிகள் பலவற்றின் நிறம் நீலமில்லையா?

பலான படங்களைக் காட்டியே ஹிட்ஸை அதிகரித்துக் கொள்ளும் தினகரன் வெப்சைட் பாலியல் குற்றம் பற்றி மூச்சு விடலாமா? அல்லது தங்கள் திருக்குவளை குடும்பத் தகராறுக்கு “தினகரன் குடும்பத்தை” சேர்ந்த ஊழியர்கள் மூன்று பேரை காவு கொடுத்துவிட்டு, அப்புறம் மாமாவும் மச்சானும் சமரசமாகி, மந்திரியாகிக் கொண்ட கும்பலுக்கு மனிதாபிமானம் பற்றிப் பேசும் அருகதை உண்டா?

பதிவுலகத்தையே எடுத்துக் கொள்வோம். கோவை சிறுவர்கள் கொலைக்காக இணைய உலகில் ஓடிய கண்ணீரை வைத்து சென்னை நகருக்கே ஒருநாள் தண்ணீர் சப்ளை செய்து விடலாம். ஏ ஜோக்குகள், அரை நிர்வாணப் படங்கள், 18+ பதிவுகள் போட்டு தமது ஹிட்ஸை கூட்டிக்கொள்ளும் பதிவர்களும், அவர்களது ரசிகர்களும் இப்போது மோகன்ராஜின் பாலியல் குற்றம் கண்டு கொதித்து எழுகிறார்கள். மெய் குற்றத்துக்கு என்கவுன்டர், மெய் நிகர் குற்றத்துக்கு?

கேட்டால், “நாங்கள் எல்லா என்கவுன்டரையும் ஆதரிக்கவில்லை. சின்னஞ்சிறுவர்களைக் கொலை செய்த கொலைகாரர்கள் என்பதனால், இந்த என்கவுன்டரை மட்டும்தான் ஆதரிக்கிறோம்” என்று ஜகா வாங்குவார்கள். சீரியலுக்கு அழுவது, இந்திரா காந்தி செத்தால் ராஜீவ் காந்திக்கு ஓட்டுப் போடுவது, ராஜீவ் காந்தி செத்தால் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடுவது, ஜெசிகா லாலுக்கு மெழுகுவர்த்தி கொளுத்துவது ஆகியவை அனைத்தும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவைதான். இந்த விசயத்தில் படித்தவனும் பாமரனும் ஒன்றுதான்.

“உணவுக்கிடங்குகளில் மக்கிமடிந்தாலும் அந்த தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாகத் தரமாட்டேன்” என்று கூறும் பிரதமரின் இரக்கமின்மையையும், கோவைக் கொலைகாரனின் இரக்கமின்மையையும் நாம் ஒப்பிட்டுப் பேசினால் அதை இந்தப் படித்தவர்களின் மனம் ஒப்புமா? நிச்சயம் ஒப்பதாது. “அதெல்லாம் குதர்க்கவாதம். மன்மோகன்சிங் சொல்வது ‘மாக்ரோ’ பாலிசி டெசிஷன். இது ‘மைக்ரோ’ அச்சாசினேஷன். ரெண்டும் எப்படி ஒண்ணாகும்?” என்று கேள்வி எழுப்புவார்கள்.

கொலையில் கூட பணக்காரன் ஏழை வித்தியாசம் பார்ப்பது வக்கிரமானது என்று சாடுவார்கள். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று வசை பாடுவார்கள். அப்படி வித்தியாசம் பார்த்து ஏழைக் குழந்தைகளின் சாவை அலட்சியப்படுத்துவதும், பணக்காரக் குழந்தைகளின் சாவுக்கு குடம் குடமாய் கண்ணீர் விடுவதும் யார் என்பதை அவர்கள்தான் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தலித், முஸ்லிம் மக்கள் மீதான படுகொலைகள், காஷ்மீர் படுகொலைகள், பட்டினிச்சாவுகள் போன்றவற்றுக்காக நாம் “இயல்பாக“ இத்தனை கோபத்துடன் குமுறி எழுந்திருக்கிறோமா, அவையெல்லாம் தமக்கு நேர்ந்தவை போலக் கருதி கண்ணீர் விட்டிருக்கிறோமா என்று அவர்களே சிந்தித்துப் பார்க்கவேண்டும். அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது மட்டும் நமக்கு வருகிறதே, அவ்வாறாயின் நமது “இயல்பு“ என்ன என்பதையும் அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.

மோகன்ராஜ் என்பவன் கேடியா, கிரிமினலா எங்களுக்குத் தெரியாது. அவன் எவனாக வேண்டுமானால் இருக்கட்டும். நீதிக்காகவும், வாழ்க்கைக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காக்கை குருவிகளைப் போல சுட்டு வீழ்த்தப்படுகிறார்களே, பட்டினியால் செத்து மடிகிறார்களே அது குறித்துத்தான் நாம் முதன்மையாக கவலைப்படவேண்டும். இப்படி எவனோ ஒருவன் சாவது குறித்து எங்களுக்கு விசேடக் கவலை ஒன்றும் இல்லை.

இப்பிரச்சினையில் கவலைக்குரிய விசயம் ஒன்றுதான். கோவை சம்பவத்தை முன்வைத்து தற்போது தமிழகத்தில் ஓடிக்கொண்டிருப்பது, 1980 களில் வெளிவந்த “இதுதாண்டா போலீசு” என்ற திரைப்படத்தின் ரீ மிக்ஸ். ஏற்கெனவே தட்டிக்கேட்க ஆளில்லாமல் தறிகெட்டு அலையும் போலீசுக்கு, “விசாரணையே இல்லாமல் சுட்டுத்தள்ளும் அதிகாரத்தையும் வழங்கவேண்டும்” என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வாசகப் பெருங்குடி மக்களும், பதிவுலக மேதைகளும் ஒரே ஒரு இரவை போலீசு லாக் அப்பில் கழிக்கும் பாக்கியத்தை இறைவன் வழங்க வேண்டும் என்பது மட்டும்தான் “எல்லாம் வல்ல எம்பெருமானிடம்” நாங்கள் செய்து கொள்ளும் பிரார்த்தனை.

மற்றப்படி இந்த மோகன்ராஜ் என்கவுன்டரின் விளைவாகத் தனது “கனவு கலைந்து” போன ஒரு ஜீவன் போயஸ் தோட்டத்தில் வருந்திக் கொண்டிருக்கிறது. அந்த தாயுள்ளத்துக்கு மட்டும் எங்கள் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி வினவு
http://www.vinavu.com/2010/11/10/kovai-encounter/

No comments: