Sunday, October 31, 2010
இந்தியா புலிகளை அழித்து தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டது.
போர் முடிந்த பின்னர் நீங்க|ள் சொல்வதனையே நாம் செய்வோமென டில்லிக்கு தமாஸ் காட்டினார் மஹிந்த டில்லியும் போர் முடியட்டும் இப்போ புலிகள் அழிவதுதான் எமது இலக்கு என பேசாமல் இருந்தது. ஆனால் புலிகளை முடித்த பின்னர் தம் அடுத்த திட்டமான இலங்கையினை கையிற்குள் போடும் திட்டம் தடம்புரண்டு போவதனை டில்லி பார்த்துக்கொண்டே பதறுகின்றது.
போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து டில்லி முன்னெடுத்து வந்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் தேக்க நிலையை அடைந்துள்ளனவாம். புதுடில்லியின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகிறது. இதனாலேயே அவை தேக்கத்தை அடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அடுத்த மாதம் இலங்கைக்கு மேற்கொள்ள இருந்த பயணம் இழுபறி நிலையை அடைந்துள்ளதாகப் புதுடில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புலிகள் அழிந்தார்கள் என்ற கையோடு இந்தியாவும் அமெரிக்க பாணியில் வாக்குறுதிகளை அள்ளி வீசியது, ஒப்பந்தகாரர்களை இலங்கைக்கு அனுப்பியது எல்லாமே இலங்கையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முதலீடாகவே பார்த்தது. ஆனால் இந்தியா புலிகளை அளித்ததைதவிர வேறெதனையும் இன்னமும் சாதிக்க முடியவில்லை.
தமிழ் மக்களைஏமாற்றி உள்வாங்கலாம் என இந்தியா அவசர உதவிகளை வழங்கியது. குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களுக்கான அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டன. அத்தோடு 500 கோடி இந்திய ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்ட உதவிகளையும் புதுடில்லி அறிவித்தது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடை யில் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களையும் விரைவாகச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
ஆனால் இப்போது இந்தத் திட்டங்கள் தேக்க நிலையை அடைந்துள்ளன இவ்வாறு புதுடில்லிசொல்கின்றது.
உண்மையில் தமிழர்களை உள்வாங்கவோ அல்லது தமிழர் இடங்கள் மீது இந்தியா ஆதிக்கம் செலுத்தவோ இப்போ இருக்கின்ற தமிழர்கள் பிரதி நிதிகள் விரும்பினாலும் ஏன் தமிழ் மக்கள் விரும்பினாலும் சிங்களம் விடாது. இதுவே உண்மை.ஆனால் இந்தியா இந்த உண்மையினை மறந்து தமது ஆதிக்கத்திற்கு புலிகள் மற்றும் தமிழீழ கொள்கைதான் தடையாக இருந்ததாக இந்தியா நினைத்து தமிழர் போராட்டத்தினை அழித்து தமிழர்களின் எதிரிகளாக மாறியது.
இந்த விடயத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நரி தந்திரத்தினை ஒத்ததாகவே மஹிந்தவின் திட்டமும் அமைந்திருந்தது. அதாவது இலங்கை தமிழர்களின் நண்பனாக இந்தியா இருக்க கூடாது என்பது சிங்கள ஏகாதிபத்தியத்தின் நீண்டகால திட்டம். ஆனால் தமிழர் போராட்டத்தினை பொறுத்தவரை இந்தியாவை நிரந்தரமாக எதிரியாக பார்க்கும் எண்ணம் இருந்திருக்கவில்லை.
இந்தியா தாம் தமிழர்களுக்கு ஏற்படுத்திய காயத்தை போக்கவும் கூடவே தம் ஆதிக்கத்தை நிலை நாட்டவும் சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு அமைத்துக் கொடுக்கும் என அறிவித்த 50,000 வீட்டுத் திட்டம், வடக்குக்கான ரயில் பாதை புனரமைப்புத் திட்டம், சம்பூர் மின் நிலையத் திட்டம், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம், பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டம் என்பன தற்போது தேக்க நிலையை எட்டி உள்ளதாக அதிகாரிகள் புலம்ப தொடங்கியுள்ளனர்.
இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர இணக்கம் காணப்பட்டிருந்தது. எனினும் இப்போது இலங்கை அரசு புதிதாக நிபந்தனைகளை விதிக்கின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் காணப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் இந்தத் திட்டங்களை இந்திய அரசு தானே முன்னெடுக்க இருந்தது. ஆனால், இரு நாடுகளும் இந்தத் திட்டங்களில் பங்காளிகளாக இருக்க வேண்டும் என்று இப்போது இலங்கை அரசு புதிய நிபந்தனைகளை விதிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான ஒப்பந்தகாரர்களைத் தெரிவு செய்தல், வேலையாள்களைத் தெரிவு செய்தல், மூலப் பொருள் கொள்வனவுகள், திட்டப் பயனாளிகளைத் தெரிவு செய்தல் போன்றவற்றில் தானே முடிவுகளை எடுக்க வேண்டும் எனக் கொழும்பு இப்போது வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்டுள்ள இழுபறி நிலையைத் தொடர்ந்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இது சீனர்களின் ஆலோசனையே என கூறப்படுகின்றது.
ஆனால்
இலங்கையில் சீனா முன்னெடுக்கும் இதுபோன்ற அபிவிருத்தித் திட்டங்களில் இவ்வாறான விடயங்களில் சுதந்திரமாகச் செயற்பட அதனால் முடிகின்றது
அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், நுரைச்சோலை அனல் மின் நிலையத் திட்டம், இராணுவம் மற்றும் பொலிஸாருக்கான வீடமைப்புத் திட்டம் போன்றவற்றில் சீனத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதற்கும், சீன நிறுவனங்களின் இயந்திர சாதனங்களைப் பயன்படுத்துவதற்கும் அனுமதித்துள்ள இலங்கை அரசு அதேபோன்ற வசதிகளை இந்தியாவுக்கு வழங்குவதற்குப் பின்னடிப்பதாக புதுடில்லி வட்டாரங்கள் இப்போ குமுறுகின்றன.
இலங்கையின் நிபந்தனைகளை கடிந்து கொள்வதற்காகவே இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கை வரவுள்ளதாக கூறப்பட்டது ஆனால் இந்த மாதம் வருகை தர இருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பயணம் பிற்போடப்பட்டுள்ளது. மஹிந்தவிற்கு நேரம் இல்லையாம் என கொழும்பு சொல்லிக்கொண்டே இருக்கின்றது.
உண்மையில் விடயம் இதுதான் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்களுடன் இந்தியா தம் உறவுகளை வைத்திருக்க வேண்டுமாயின் அல்லது இலங்கையில் இந்தியா தம் செல்வாக்கினை செலுத்த வேண்டுமாயின் அல்லது தமது பாதுகாப்பிற்கு இலங்கை அச்சுறுத்தலாக இருக்க கூடாது எனின் அது தமிழர்களால்தான் முடியும். சிங்களம் என்றுமே இதற்கு இடம் அளிக்க போவதில்லை.
சிங்களத்தின் உறவு ஊடாக இந்தியா தமது செல்வாக்கை செலுத்த முடியாது. சுருக்கமாக சொல்வதாயின் இந்தியா தனது அரிய சந்தர்ப்பத்தை ( புலிகளுடனான உறவை) தானாகவே அழித்துக்கொண்டது என்றே கூறவேண்டும். ஆக கடைசியாக 2002 மற்றும் போரின் இறுதி காலமான 2009 இலும் இந்தியாவிற்கு புலிகள் சந்தர்ப்பம் கொடுத்தார்கள்.
இங்கு இந்தியா புலிகளை அழித்தார்கள் என்பதனைவிட தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டார்கள் என்பதே பொருத்தமானது.
நன்றி : ஈழநாதம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment