இலங்கைத் தமிழர்களுக்கு கண்ணியமான, கெளரவமான வாழ்வு உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான அரசியல் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் சிறிலங்க அதிபர் ராஜபக்சவிடம் தான் வலியுறுத்தியதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
எகிப்தில் நடந்த முடிந்த அணி சேரா நாடுகள் (Non Aligned Movement - NAM) மாநாட்டில் கலந்து கொள்ள வந்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சயுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் இராசா எழுப்பிய கேள்விக்கு விளக்கமளித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து இந்தியா மிகவும் கவலை கொண்டுள்ளது என்றும், அவர்களின் பிரச்சனைக்கு 1987ஆம் ஆண்டு (இராஜீவ் - ஜெயவர்த்தனே) ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டு்ம் என்று தான் ராஜபக்சவுடம் கூறியதாகவும் மாநிலங்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி, இலங்கையில் 33 முகாம்களில் உள்ள 3 இலட்சம் தமிழர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அவர்களின் மறுவாழ்விற்காக அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை சிறிலங்க அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
“இலங்கைத் தமிழர்களின் நிலையை அடிப்படையாகக் கொண்டே இந்திய - சிறிலங்க உறவு அமையும்” என்றும் கூறிய பிரதமரின் இந்தப் பேச்சை தொலைக்காட்சியில் நேரடியாக கேட்டவர்களுக்கும், செய்தித்தாள்களில் படித்தவர்களுக்கும் அவர்கள் தமிழர்களாக இருந்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்! இத்தனை கரிசனத்தோடுதான் ஈழத் தமிழர்களின் பிரச்சனையை இந்திய அரசு இதுவரை அணுகியுள்ளதா? என்ற கேள்வியும் மிகுந்த சந்தேகத்துடன் அவர்களின் மனதில் பிறந்திருக்கும்.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் இந்தியாவின் அணுகுமுறை பல்லாண்டுக் காலமாக கீழ்க்கண்ட அடிப்படைகளில்தான் இருந்துவந்தது:
இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் நீடித்த அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.
அந்தத் தீர்வு இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் (Unity and Integrity) உட்பட்டதாகவும் அந்நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமை அளிப்பதாகவும், ஏற்புடையதாகவும் இருக்கவேண்டும்.
இதுவே இந்தியாவின் நிலைப்பாடு என்றும், இலங்கை இனப் பிரச்சனைத் தொடர்பான நமது நாட்டின் அணுகுமுறையாகும் என்றும் குடியரசுத் தலைவர் உரையிலும், அயலுறவு அமைச்சர், பிரதமர் உரைகளிலும் பலமுறை தெளிவாக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டு அரசின் (இதில் பாரதிய ஜனதா அரசு வேறுபடவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்) இந்த அணுகுமுறை ஈழத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வைத் தரவல்லதா என்பது வேறு விடயம். ஆனால் நாடாளுமன்றத்திலும் வெளியேயும் பிரகடனம் செய்யப்பட்ட இந்த அணுகுமுறையை இந்தியா நடைமுறையில் கடைபிடித்ததா? என்பதே கேள்வியாகும்.
இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தமும் தமிழர் நலனும்
இலங்கை தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லீம்கள் ஆகியோர் வாழும் ஒரு பன்முக சமூகம் என்பதை இந்த (இராஜீவ் - ஜெயவர்த்தனே) ஒப்பந்தம் ஏற்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் அந்த ஒப்பந்தத்தின் வாயிலாக தமிழ் மொழிக்கு சிங்கள மொழிக்கு இணையான (அந்நாட்டு அரசமைப்புச் சட்டத்தில்) சம நிலை அளிக்கப்படும் என்று கூறப்பட்டதா எனறால் இல்லை.
இலங்கையில் வாழும் ஒவ்வொரு மொழி இனத்திற்கும் அதற்கென தனித்த மொழி மற்றும் பண்பாட்டு அடையாளம் உள்ளதை இந்த ஒப்பந்தம் (பிரிவு 1.3) அங்கீகரிக்கிறது, அவைகளை சிரத்தையுடன் வளர்க்கப்பட வேண்டும் ((1.3 Recognizing that each ethnic group has a distinct cultural and linguistic identity which has to be carefully nurtured) என்று கூறியுள்ளது இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம். ஆனால் அப்படி ஒவ்வொரு மொழி இனங்களின் பண்பாட்டு அடிப்படைகள் காப்பாற்றப்பட வேண்டுமெனில், அவைகளுக்கு அரசமைப்பு ரீதியாக பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டுமல்லவா? அந்த மொழிகள் அனைத்திற்கும் சிறிலங்க அரசில் சம உரிமை (அந்தஸ்து) அளிக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா? அதனை இராஜீங் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் உறுதி செய்யவில்லையே! தமிழர்களின் தனித்த அடையாளங்களை காப்பாற்றுவாரா ராஜபக்ச?
சமீபத்தில் இங்கிருந்து வெளிவரும் ஒரு ‘பாரம்பரியமிக்க’ ஆங்கில தேசிய இதழ் பேட்டி கண்டபோது கூட, சிங்கள மக்கள் தமிழைப் படிக்க வேண்டும், தமிழ் மக்கள் சிங்களத்தைப் படிக்க வேண்டும் என்று தான் சிறிலங்க அதிபர் ராஜபக்ச கூறினாரே தவிர, சிங்கள மொழிக்கு உள்ள அரசின் நிர்வாக மொழி என்ற அந்தஸ்து தமிழ் மொழிக்கு வழங்கப்படும் என்று கூறவில்லையே? அப்படியானால் என்ன பொருள்? சிறிலங்க அரசு நிர்வாகப் பணிகளில் தமிழர்கள் தேர்வு செய்யப்பட வேண்டுமெனில் அவர்கள் சிங்கள மொழியை பயின்றிருக்க வேண்டும்! இதுதான் அங்குள்ள சமூகங்களின் மொழி, பண்பாட்டை அங்கீகரித்து வளர்க்கும் உறுதி மொழியா?
அதுமட்டுமன்று, இப்போது இருப்பது போல் அல்லாமல் இலங்கையில் ஒரு கலப்பினம் உருவாக வேண்டும் என்கிறார் ராஜபக்ச!
my theory…[that] there are no minorities in Sri Lanka, there are only those who love the country and those who don’t. They tried to twist that but I still maintain that position. For reconciliation to happen, there must be a mix [of ethnicities]. Here the Sinhalese, the Tamils, and Muslims inter-marry.
இலங்கையின் பன்மொழி, பல மத பன்முகச் சமூகத் தன்மைகளைக் காப்பாற்றி, அதன் மூலம் அனைத்துக் குடிமக்களுக்கும் சமத்துவம், பாதுகாப்பு, ஒத்திசைவு உறுதி செய்து அவர்கள் மேம்படவும், அவர்களின் அபிலாஷைகள் நிறைவேறவும் இலங்கையின் ஒற்றுமையை உறுதி செய்யும் சக்திகளை பலப்படுத்தவும், அந்நாட்டின் நில ஒற்றுமையையும், இறையாண்மை காப்பாற்ற வேண்டும் (1.5 Conscious of the necessity of strengthening the forces contributing to the unity, sovereignty and territorial integrity of Sri Lanka, and preserving its character as a multi ethnic, multi lingual and multi religious plural society in which all citizens can live in equality, safety and harmony, and prosper and fulfill their aspirations) என்றும் ஒப்பந்தம் கூறியுள்ளது.
இந்த நிலை இலங்கையில் அதுவரை (ஏன் இன்றுவரை கூட) நிலவவில்லை என்பதற்கும், அதனால்தான் அங்கு இனப் பிரச்சனை பிறந்தது என்பதற்கும் இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் இடம்பெற்ற இந்த விவரமே போதுமானதாகும்.
ஆக, சம உரிமை, சமத்துவம் பற்றிப் பேசும் இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒபந்தம் அதனை அந்நாட்டின் அரசமைப்பு ரீதியாக உறுதி செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
1987 ஒப்பந்தத்தின் மற்றொரு முக்கிய அம்சம் (இதுதான் இந்த ஒப்பந்த்தை அரை மனதுடன் விடுதலைப் புலிகளை ஏற்க வைத்ததற்கான காரணமாகும்) தமிழர்கள் வரலாற்றுக் காலந்தொட்டு வாழ்ந்துவரும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக (administrative unit) ஏற்று, அதனை வாக்கெடுப்பு நடத்தி உறுதி செய்வது என்பதுதான்.
(2.1 Since the government of Sri Lanka proposes to permit adjoining provinces to join to form one administrative unit and also by a referendum to separate as may be permitted to the Northern and Eastern Provinces as outlined below)
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்துவிட்டது, அவர்களின் பிடியில் இருந்து தமிழர்களை மீட்டுவிட்டோம் என்று உலக நாடுகளுக்கு அறிவித்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் இந்தப் பகுதியை ஏற்கிறாரா?
இங்கிருந்து வரும் அந்த ‘பாரம்பரிய’ நாளிதழில் வெளியிடப்பட்ட அந்தப் பேட்டியைப் பாருங்கள். “தற்பொழுது இருக்கும் நிலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அருதியிட்டுக் கூறியுள்ளார் ராஜபக்ச! “எதைத் தர வேண்டும், எதைத் தரக்கூடாது என்பதை நான்தான் முடிவு செய்வேன், ஏனென்றால் எனக்குத்தான் சிறிலங்க மக்கள் (தேர்தல் தீர்ப்பு வாயிலான) அந்த அதிகாரத்தை (Mandate) அளித்துள்ளார்கள். அவர்கள் நினைப்பது (கூட்டாட்சி) கிடைக்காது” என்று கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியில் மகிந்த ராஜபக்ச கூறியிருப்பது இதுதான்:
[As for the political] solution, I’m willing. I know what to give and I know what not to give. The people have given me the mandate, so I’m going to use it. But I must get these people [the TNA representatives] to agree to this. They must also know that they can’t get what they want. No way for federalism in this country.
ஆக, இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கும்:
அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமை என்பதும்;
இலங்கையிலுள்ள அனைத்து மொழிப் பிரிவினரின் பண்பாடுகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதும்;
தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு நிர்வாகப் பகுதியாக இணைக்கப்பட வேண்டும் என்பதும்;
இந்தியாவில் உள்ளது போன்ற ஒரு அரை கூட்டாட்சியாவது (மத்திய, மாநில அரசுகள் போல) அங்கு ஏற்படவேண்டும் என்பதும்;
தனது அரசியல் தீர்வுத் திட்டத்தில் கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளது மட்டுமின்றி, அவர்கள் (தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளாகத் திகழும் தமிழர் தேசியக் கூட்டணி (Tamil National Alliance - TNA) எதிர்ப்பார்ப்பது எதுவும் கிடைக்காது என்றும் தெளிவாக கூறியுள்ளார்.
ஆனால் தனது தீர்வுத் திட்டத்தை அவர்கள் ஏற்கச் செய்ய வேண்டும் என்ற ‘அவசியத்தையும்’ ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ளார். ஏனென்றால் அவர்களின் ஒப்புதலின்றி இவர் உருவாக்கும் எந்த தீர்வையும் தமிழர்கள் மீது திணிக்க முடியாது என்பதும், அதனைக் காட்டி சர்வதேச சமூகத்தை ஒப்புக் கொள்ளச் செய்ய முடியாது என்பதும் ராஜபக்சவுக்கு தெளிவாகத் தெரியும்.
மகிந்த ராஜபக்ச உருவாக்கும் ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை அவர் சிங்களர்கள் பெரும்பான்மை கொண்ட சிறிலங்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் காட்டிட முடியும், ஆனால் அது தமிழர் பிரதிநிதிகளின் ஒப்புதலின்றி ஏற்கப்படாது என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்துள்ளது.
இதற்குத்தான் அவர் இந்தியாவை நாடுகிறார். இதனைச் சாதித்துத் தருவதற்குத்தான் டெல்லியும் தமிழர் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேசியது. இதெல்லாம் தமிழர்களுக்குப் புரியாதது அல்ல.
ஆக, நாடாளுமன்றத்தில் பிரதமர் கூறியது போல இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடனும், கண்ணியத்துடனும் வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதும் அதற்கு இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் நடந்தேறப் போவதில்லை என்பது தெளிவு.
சிவ்சங்கர் மேனன் கூறியதன் பொருளென்ன?
தமிழர்களின் பிரச்சனைக்கு கெளரவமான ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை அளிப்பது நமதுப் பிரதமரின் அப்பழுக்கற்ற நோக்கமெனில், நமது நாட்டின் அயலுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் இவ்வாறு கூறியதற்கும் பொருளென்ன:
“இலங்கையில் இனப் பிரச்சனைக்குத் தீர்வு என்று எதையும் இந்தியா சிறிலங்காவிற்குக் கூறப்போவதில்லை. இதைச் செய், அதைச் செய் என்று நாம் அந்த நாட்டிற்கு உத்தரவிட முடியாது. அது இறையாண்மை கொண்ட வேறு ஒரு நாடு” என்று டெல்லி வந்த சிறிலங்கப் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசிய சி்வ் சங்கர் மேனன் கூறியுள்ளார்.
இலங்கையில் பன்னெடுங் காலமாக ஒடுக்கப்பட்டுவரும் தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு சம உரிமை அளிக்க வகை செய்யும் தீர்வுத் திட்டத்தை இந்தியா முன்மொழிந்து, அதற்கான ஒப்புதலையும் பெற்றதே 1987 இராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம். இதனடிப்படையில் தீர்வு காணப்படும் என்று இந்தியாவின் பிரதமர் நாடாளுமன்றத்தில் கூறுகிறார்.
இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெற்ற மக்களாக வாழ்வதற்கு வகை செய்யப்பட வேண்டும் என்று புதிய அரசு பதவியேற்றப்பின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் கூறுகிறார்.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் புதிய அரசின் அயலுறவு அமைச்சராக பொறுப்பேற்ற எஸ்.எம். கிருஷ்ணாவும் கூறினார்.
ஆனால், சிறிலங்க அரசுடன் - அதன் அதிபர் மகிந்த ராஜபக்ச, அவருடைய ஆலோசகர் பசில் ராஜபக்ச, அந்நாட்டு பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபக்ச ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டு பேசிவரும் அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனன் வேறு குரலில் பேசுகிறார்!
இது மட்டுமல்ல, தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கவும், அவர்கள் மறுவாழ்விற்கான திட்டங்களை நிறைவேற்றவும், முகாமில் உள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை அளிக்கவும் சிறிலங்க அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பேசியதைக் கண்டித்து, கோத்தபய ராஜபக்சவின் நண்பர் அந்நாட்டு பாதுகாப்புத் துறையின் இணைய தளத்தில் கட்டுரை எழுதினார். அதில் இலங்கைத் தமிழர்கள் தங்கள் நாட்டு மக்கள் என்றும், அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எந்த ஒரு நாடும் தங்களுக்கு ஆலோசனை கூற வேண்டாம் என்றும் காட்டமாக எழுதியிருந்தார். அவரும் சிறிலங்கா ஒரு இறையாண்மை மிக்க நாடு என்று சிவ்சங்கர் மேனன் கூறியதையே தனது கட்டுரையிலும் கூறியிருந்தார்.
ஆக, பிரதமர் உட்பட நமது தலைவர்கள் பேசுவது ஒரு அடிப்படையிலு்ம, நமது அயலுறவு செயலர், சிறிலங்க அதிபர் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் பேசுவது வேறொரு அடிப்படையிலும் இருப்பது, இந்திய அரசின் வெளிப்படையான நிலைப்பாட்டிற்கும், அதன் நடவடிக்கைகளுக்கும் உள்ள முரண்பாட்டையே காட்டுகிறது.
இராணுவ உதவி செய்தது ஏன்?
தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு இராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்வு காண்பதே சரியாக இருக்குமெனில், இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக மட்டுமே நீடித்த, நிரந்தரத் தீர்வை எட்ட முடியும் என்று இந்திய அரசு நம்புவது உண்மையெனில், அப்படிப்பட்ட தீர்வை எட்ட பேச்சுவார்த்தை உள்ளிட்ட அரசியல் ரீதியான அணுகுமுறைகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தாமல், தமிழர்களின் மீது போரை நடத்தி தீர்வுகாண முற்பட்ட சிறிலங்க அரசிற்கு இராணுவ உதவிகளை செய்தது ஏன்? அதன் மூலம் அதிபர் ராஜபக்சவின் இனப் படுகொலைக்கு உதவியது ஏன்?
விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம், எனவே அதனை அழிக்கத்தான் சிறிலங்க அரசிற்கு இந்தியா இராணுவ உதவி செய்கிறது என்றால், அதனை அதிகாரப் பூர்வமாக அறிவித்து செய்யாமல், அனைத்து உதவிகளையும் ரகசியமாக செய்தது ஏன்?
ஈழத் தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள்தான் என்பதை இரண்டு கட்டங்களில் இந்தியா ஒப்புக்கொண்டு அங்கீகரித்திருக்கிறது.
இராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன்னர், விடுதலைப் புலிகளின் ஒப்புதலைப் பெற அன்றைய பிரதமர் இராஜீவ் படாத பாடுபட்ட வரலாறு நாடறியந்த ரகசியம். அவர்களின் சம்மதமின்றி இலங்கையில் அமைதி ஏற்படாது என்பதும், ஈழ மக்களின் ஆதரவு தங்கள் ஒப்பந்தத்திற்கு கிடைக்காது என்பதும் இந்தியாவிற்கும் தெரியும், ஜெயவர்தனேவுக்கும் தெரியும்.
அதன்பிறகு, 2002ஆம் ஆண்டில் நார்வே நாட்டின் அனுசரணையுடன் சிறிலங்க அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே துவங்கிய அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா அங்கீகரித்தது. ஏனென்றால், அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே நீடித்த அரசியல் தீர்வை எட்ட முடியும் என்ற இந்தியாவின் நிலைப்பாடும், அதன் எட்ட வேண்டுமெனில் விடுதலைப் புலிகளுடன்தான் பேச்சுவார்த்தை நடத்தியாக வேண்டும் என்பதையும் இந்தியா ‘உணர்ந்திருந்த’ காரணத்தினால், அதனை அங்கீகரித்தது. எனவே இராஜீவ் உயிருடன் இருந்தபோதும் சரி, அவருடைய படுகொலைப் பின்னரும் சரி, ஈழத் தமிழர்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள்தான் என்பதை மற்ற சர்வதேச நாடுகளைப் போல இந்தியாவும் ஒப்புக் கொண்டுதான் அந்த அமைதிப் பேச்சுவார்த்தையை அங்கீகரித்தது.
அதனால்தான், ஒருதலைப்பட்சமாக பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு இராணுவத் தீர்வை நோக்கி போரை ராஜபக்ச துவக்கியபோது அதனை இந்தியா கண்டித்து அறிக்கை வெளியிட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு இராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்று அந்த அறிக்கையில் திட்டவட்டமாகக் கூறியிருந்தது.
ஆனால் சில மாதங்களிலேயே அதன் போக்கு (ரகசியமாக) மாறியது! தமிழர்களின் சம உரிமை போராட்டத்தை இராணுவ ரீதியாக நசுக்க முற்பட்ட ராஜபக்ச அரசிற்கு ராடார் கொடுத்து உதவி அந்தப் போர் பெளத்த - சிங்கள மேலாதிக்க சிறிலங்க அரசிற்கு வெற்றியாக முடிய தொடர்ந்து ஆலோசனையும் வழங்கியது. இதைத்தான் அந்நாட்டு அமைச்சர்கள் தங்கள் நாட்டின் நாடாளுமன்றத்திலேயே அறிவித்து இந்தியாவை பாராட்டினார்கள்.
வெளிப்படையாக ஒரு நிலை, ரகசியாக மற்றொரு நிலை என்றெடுத்து ஈழ தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை முற்றிலுமாக நசுக்கிவிட்டு, அதனை விளைவாக, எந்த வன்னி மண்ணில் அவர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக சுதந்திரமாகவும், செழிப்பாகவும், பாதுகாப்பாகவும் வாழ்ந்து வந்தார்களோ, அதே வன்னி மண்ணில் அவர்களை முள் வேலிகளுக்கு உள்ளே முடக்கிவிட்டு, அவர்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு கண்ணியமான, கெளரமான வாழ்வு கிடைக்க வேண்டும் என்றும், அதனை மறுக்கும் அரசின் தலைவரிடம் தான் வலியுறுத்தியதாக பேசுவது அயோக்கியத்தனம் அல்லாமல் வேறென்ன?
தங்கள் தொப்பூழ்க் கொடி உறவுகளை இராணுவ பலம் கொண்டு ஒடுக்கிவரும் ஒரு அரசிடமிருந்து காப்பாற்ற வேண்டு்ம் என்று தமிழ்நாட்டு மக்கள் விடுத்த கோரிக்கையை இராஜ தந்திர வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையிடும் வாய்ப்பைப் பெற்ற இந்திய அரசு, எந்த மக்களின் உரிமைகளை காக்க கோரிக்கை எழுப்பினார்களோ அவர்களுக்கு உதவாமல், ஈழத் தமிழர்களுக்கு உறுதுணையாக நிற்காமல், அவர்களை அடக்கி ஒடுக்கி, இனப் படுகொலை செய்து முற்றிலுமாக ஒழிக்க திட்டமிட்டு போர் தொடுத்த அரசுடன் நட்புறவு கொள்கிறது என்றால் இதுதான் ராஜ தந்திரமா? அல்லது தமிழினத்திற்குச் செய்த அப்பட்டமான துரோகமா?
தங்கள் பிரச்சனையில் இந்தியாவின் பேச்சிற்கும் செயலிற்கும் என்ன அர்த்தம் என்பதை ஈழத் தமிழினமும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு மேலும் இந்திய அரசின் தமிழின விரோத இராஜ தந்திர விளையாட்டிற்கு தமிழர்கள் பகடையாக மாட்டார்கள்.
ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதையும், இதுநாள் வரை அப்பிரச்சனையில் இந்தியா மேற்கொண்ட அணுகுமுறையையும் ஆழமாக பார்க்கும் எவரும், ஈழத் தமிழர்களுக்கு இந்தியா துரோகம் இழைத்து வருகிறது என்பதை நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள்.
வெள்ளையருக்கு எதிரான நமது தலைவர்கள் நடத்திய மாபெரும் விடுதலைப் போராட்டத்தில் முன்மொழியப்பட்ட தார்மீக நெறிகளை இன்றைய அரசும், எதிர்க்கட்சிகளும் முற்றிலுமாக நிராகரித்துவிட்டன. அதன் விளைவே தடையன்று நடந்த ஈழத் தமிழினப் படுகொலை. அந்த ரகசிய உதவி நாடகம் வெளிப்பட்ட இடமே ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிறிலங்க அரசை காப்பாற்றிய இந்தியாவின் பெரும் முயற்சி.
சொந்த நாட்டு மக்களை பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி, கொன்று குவித்த குற்றத்திற்கான சிறிலங்க அரசு ஒரு நாள் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும்போது, நீதியின் விரல் இந்தியாவிற்கு எதிராகவும் நீளும்… அதில் சந்தேகமில்லை.
Monday, July 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment