Sunday, May 17, 2009

ஈழப் போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது-விடுதலைப் புலிகள்

ஈழப் போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்து விட்டது. அப்பாவி மக்களின் நலனுக்காக எங்களது துப்பாக்கிகளை மெளனமாக்குகிறோம் என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் குறித்த செய்திகள் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் பத்மநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...

இலங்கை ராணுவத்தினரால் தமிழ் மக்கள் ஈவிரக்கம் இன்றிப் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு உலகத்தில் உள்ள நாடுகளை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், இந்தக் கோரிக்கை யாருடைய காதிலும் விழவில்லை. போர் இடம்பெறும் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழர்களைப் பாதுகாப்பதற்கும் ராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு சர்வதேச சமூகத்தை நான் கேட்டுக் கொள்கிறேன்.கசப்பான முடிவு..

இந்த போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. தமிழ் மக்களின் முடிவில்லாத ஆதரவையும் உதவியையும் தவிர எங்களுக்கு எந்த உதவியும் இல்லாத நிலையில் சிங்களப் படையினர் முன்னேறியபோது நாங்கள் பின்வாங்க வேண்டியேற்பட்டது. எங்களது மக்கள்தான் இப்போது குண்டுகளாலும் எறிகணைகளாலும் நோய்களாலும் பட்டினியாலும் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மேலும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. எங்களிடம் இப்போது கடைசியாக ஒரே வாய்ப்புதான் உள்ளது. எங்களது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்.

அப்பாவி மக்களுடைய ரத்தம் தொடர்ந்து சிந்தப்படுவதை எம்மால் சகித்துக்கொள்ள முடியாது. விடுதலைப் புலிகள் அமைப்பானது கடந்த முப்பது ஆண்டு காலமாக சிங்கள ராணுவத்துடன் போரிட்டு, இந்தத் தீவில் வசிக்கும் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக ஆயுதங்களை வைத்திருப்பதற்கான உரிமையைப் பெற்றிருந்தது.2002 ஆம் ஆண்டு நார்வேயின் ஒத்துழைப்புடன் தொடங்கிய சமாதான முயற்சிகளில் இருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறிய பின்னர், இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இலங்கை அரசு ராணுவத் தீர்வை நாடியது.

2007 ஆம் ஆண்டில் போர் தீவிரமடைந்த பின்னர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மரணமடைந்திருக்கின்றனர். வடபகுதியில் ராணுவம் தனது நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியதையடுத்து பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், பட்டினியாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாமையாலும் மேலும் பலர் மரணமடைந்திருக்கின்றனர். இந்தக் கொடூர நிகழ்வுகளை நிறுத்துவதற்கு எங்களு எல்லைக்கு உட்பட்ட எதனையும் செய்வதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம்.

எங்களது ஆயுதங்களை மெளனிக்கச் செய்வதுடன், சமாதான நடைமுறைக்குள் பிரவேசிப்பதாக இருந்தாலும் அவற்றுக்கு நாங்கள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருக்கின்றோம். இன்றைய தருணத்தில் இதுதான் தேவை. இதன் மூலமாக ஆயிரக்கணக்கான மக்களுடைய உயிர்களைப் பாதுகாக்க முடியுமாயின் அது செய்யப்பட வேண்டும்.

எங்களது மக்களுக்காகத்தான் நாங்கள் போராடுகின்றோம் என்பதை நாங்கள் மறந்துவிடவில்லை. தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில், எங்களது மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவதற்கு இந்த போரை சிங்கள அரசு பயன்படுத்துவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது. நாங்கள் எங்களது துப்பாக்கிகளை மெளனிப்பதற்கு தயாராவிருக்கின்றோம். எங்களது மக்களைப் பாதுகாக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் தொடர்ந்து கோருவதைவிட எங்களுக்கு வேறு வழியில்லை என்று கூறியுள்ளார் பத்மநாதன்.

No comments: