Saturday, October 24, 2009

இந்தியாவின் அரசியல் போக்கையே மாற்றியமைத்த பெருமை, ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதிய பேரம் போபர்ஸ்


இந்தியாவின் அரசியல் போக்கையே மாற்றியமைத்த பெருமை, ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதிய பேரம், இந்தியாவில் மிக நீண்டகாலமாக விசாரிக்கப்பட்டு இன்னமும் துப்பு துலங்காத வழக்கு... இப்படி பல பெருமைகள் போபர்ஸ் விவகாரத்துக்கு உண்டு. ‘செலக்டிவ் அம்னீஷியாவில் இருக்கும் நோயாளி’யின் நினைவுகள் போல, அவ்வப்போது இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்படும்; அப்புறம் அப்படியே அமுங்கிவிடும். கடந்த செப்டம்பர் 29ம் தேதி, ‘இத்தாலி தொழிலதிபர் குவட்ரோச்சி மீதான போபர்ஸ் வழக்குக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாததால், இந்த வழக்கை மூடிவிட அனுமதி வேண்டும்’ என சி.பி.ஐ. சார்பில் டெல்லி கோர்ட்டில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் மனு தாக்கல் செய்தார். போபர்ஸ் விசாரணையின் இறுதி அத்தியாயமாக இது கருதப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் சில வழக்கறிஞர்களும் தவிர, இதை எதிர்க்க ஆளில்லை! ‘சென்சிடிவ்வான இந்த வழக்கை இப்படி குளோஸ் செய்ய அனுமதிக்கக்கூடாது’ என சி.பி.ஐ. முடிவுக்கு எதிராக, டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜய் அகர்வால் வழக்கு போட்டிருக்கிறார். அந்த வழக்கில் குவட்ரோச்சியின் தலைவிதி சிக்கிக்கொண்டிருக்கிறது.


ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்களை சாதாரணமாகப் பார்க்கும் காலம் இது; அந்த வகையிலான பல ஊழல்களின் பெயர்கள்கூட நமக்கு ஞாபகம் இருப்பதில்லை; வெறும் பேச்சளவிலேயே நின்றுபோய் அந்த ஊழல்கள் தொடர்பாக வழக்குகள்கூட எதுவும் போடப்படுவதில்லை. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவோம்’ என்று வாக்குறுதி கொடுக்கிற கட்சியே, ஊழல் செய்த கட்சியோடு தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக்கொள்கிற அரசியல் அசிங்கத்தை எல்லாம் சகித்துக் கொண்டு வாழப் பழகிவிட்டோம். இப்படி நம்மை ஊழல் விஷயத்தில் சுரணையற்றுப் போனவர்களாக மரத்துப் போகச் செய்த பெருமை போபர்ஸ் ஊழலுக்கு மட்டும்தான் உண்டு. இத்தனைக்கும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட தொகை வெறும் 64 கோடி மட்டும்தான் என்பதை இந்தத் தலைமுறை அரசியல்வாதிகள் ரொம்பவே கிண்டலோடு குறிப்பிடுவார்கள்.


24 ஆண்டுகளில் எத்தனை திருப்பங்களையும், மோசமான அரசியல் நாடகங்களையும் பார்த்திருக்கிறது இந்த வழக்கு...


கடந்த 86ம் ஆண்டு... இளம் ராஜீவ் பிரதமராகி, இந்தியாவை வித்தியாசமான வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லப்போவதாக வாக்குறுதிகள் கொடுத்துக்கொண்டிருந்த நேரம் அது. ராஜீவுக்கு முந்தைய காலம் வரை ராணுவ பேரங்களை இடைத்தரகர்கள் மூலமாக நிகழ்த்தி, அவர்களுக்கு நிறைய கமிஷனையும் தந்துகொண்டிருந்தது மத்திய அரசு. இதே ரேஞ்சில் அந்த இடைத்தரகர்கள் வெளிநாட்டு ஆயுத நிறுவனங்களிடமும் கமிஷன் வாங்கிக் கொண்டிருந்தார்கள். ‘இடைத்தரகர்கள் மூலமாக ஆயுதங்கள் வாங்குவதை நிறுத்தவேண்டும்; தேவையான ஆயுதங்களை நேரடியாகத் தயாரிப்பு நிறுவனங்களிடமே ஒப்பந்தம் போட்டு வாங்கவேண்டும்’ என்ற தைரியமான முடிவை ராஜீவ்தான் எடுத்தார்.


அவர் எடுத்த முடிவை அவரே மீற வேண்டிய சந்தர்ப்பம் நிகழ்ந்தது. அதுதான் போபர்ஸ் விவகாரத்துக்கான விதை. ஸ்வீடன் பிரதமர் ஒல்ப் பால்மே ராஜீவுக்கு நெருங்கிய நண்பர். 86ம் ஆண்டு ஸ்வீடனில் தேர்தல் வந்தபோது, அவரது தொழிலாளர் கட்சியின் செல்வாக்கு சரிந்திருந்தது. பெரிதாக ஏதாவது செய்யாவிட்டால் அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் என்பது ஸ்வீடன் நாட்டில் எல்லோருக்குமே தெரிந்திருந்தது. அப்போது ராணுவத்துக்கு புதிய பீரங்கிகளை வாங்க இந்தியா முடிவெடுத்திருந்தது; ஸ்வீடனில் இருக்கும் ஏ பி போபர்ஸ் ஆயுதத் தயாரிப்பு நிறுவனம், போதுமான ஆர்டர்கள் வராததால் மூடப்படும் அபாயத்தில் இருந்தது. ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்தால், தேர்தல் நேர நெருக்கடி இன்னும் முற்றும்.


இரண்டையும் முடிச்சு போட்டுப் பார்த்த பால்மே, ஆறு நாடுகளின் தலைவர்கள் கூட்டம் ஒன்றுக்காக டெல்லி வந்தபோது ராஜீவை தனிமையில் சந்தித்துப் பேசினார். பீரங்கி ஆர்டரை தங்கள் நாட்டு நிறுவனத்துக்குத் தருமாறு அன்போடு வேண்டுகோள் விடுத்தார். நண்பரின் கோரிக்கையை ராஜீவால் நிராகரிக்க முடியவில்லை. ஆயிரத்து 437 கோடி ரூபாயில் 400 ஹோவிட்ஸர் பீரங்கிகளை வாங்கும் ஆர்டர் போபர்ஸ் நிறுவனத்துக்குத் தரப்படுவதாக அறிவிப்பு வெளியானது. ஸ்வீடன் தேசமே இதைக் கொண்டாடியது. ராஜீவின் விருப்பத்தாலேயே ஒப்பந்தம் போடப்படுகிறது என்பது தெரிந்ததும், இதை எதிர்க்க யாரும் தயாராக இல்லை; ஒரே ஒருவரைத் தவிர! அவர், பாதுகாப்பு அமைச்சகத்தில் இணை செயலாளராக இருந்த எஸ்.கே.அக்னிஹோத்ரி. ‘இந்தியா நிர்ணயித்திருக்கும் தரத்தில் போபர்ஸ் நிறுவன பீரங்கிகள் இல்லை’ என அவர் ஒப்பந்த விவாதத்தில் குறிப்பு எழுதினார். அடுத்த சில தினங்களில் அக்னிஹோத்ரி ஜவுளி அமைச்சகத்துக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட, மூன்று மாதங்களில் அப்படியே ஒப்பந்தம் கையெழுத்தானது.


ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு ஒரு மாதம் முன்னதாக, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஒரு தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார் ஒல்ப் பால்மே. இன்றுவரை போபர்ஸ் ஊழல் போலவே, பால்மே படுகொலையும் விடுவிக்கப்படாத புதிராகவே இருக்கிறது. போபர்ஸ் ஊழலுக்கும் அவரது படுகொலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா; இல்லையா என்பதுகூட புலப்படவில்லை.


1987 ஏப்ரல் 16ம் தேதி... ஸ்வீடன் ரேடியோ நிருபர்கள் இருவர், ஒரு காலை மலர் நிகழ்ச்சியில் ஸ்கூப் நியூஸ் ஒன்றைத் தந்தனர். ‘போபர்ஸ் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு இந்திய அரசியல்வாதிகளுக்கு 64 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டது’ என அவர்கள் கொளுத்திப் போட்ட திரி டெல்லி வரை வெடித்தது. ‘போபர்ஸ் விவகாரத்தில் இடைத்தரகர்கள் யாரும் இல்லை; யாருக்கும் லஞ்சம் தரப்படவில்லை’ என நாடாளுமன்றத்தில் ராஜீவ் சொன்னதை யாரும் ஏற்கவில்லை. புகழின் உச்சியில் ராஜீவ் இருந்ததால், கிட்டத்தட்ட எதிர்க்கட்சிகள் அனைத்துமே முடங்கிப் போயிருந்த சூழல் அது! அல்வாத்துண்டு மாதிரி கிடைத்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை.


ராஜீவை ஒரு திருடராக சித்தரிக்க அவை முயற்சி செய்தன. அதில் அவர்களுக்கு வெற்றியும் கிடைத்தது. சின்னக் குழந்தைகள்கூட, ‘ராஜீவ் ஒரு திருடன்’ என பாட்டு பாடும் அளவுக்கு போபர்ஸ் ஊழல் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனது. வி.பி.சிங் என்ற புதிய தலைவர் உருவானார். ‘போபர்ஸ் ஊழலில் கைமாறிய லஞ்சப்பணம் ஸ்விஸ் வங்கியில் ரகசிய அக்கவுன்ட்களில் போடப்பட்டிருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்ததும் அதை அம்பலப்படுத்துவேன்’ என்று தேர்தல் பிரசாரம் செய்தார். ராஜீவ் தோற்றார். ஆனால் பிரதமரான வி.பி.சிங் அப்படி வேகமாக எதையும் செய்யமுடியவில்லை. வி.பி.சிங்கைக் கவிழ்த்துவிட்டு, சந்திரசேகரை தனது ஆதரவுடன் ராஜீவ் பிரதமராக்கியபோதே போபர்ஸ் விவகாரத்துக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டதாகச் சொல்லலாம்.

வழக்கை விசாரித்த சி.பி.ஐ. குழுவினரைவிட இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர்கள் கண்டுபிடித்தது அதிகம். போபர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்ட்டின் ஆர்ட்போவின் டைரி பக்கங்களைத் தோண்டியெடுத்து, யார் யாருக்கு லஞ்சம் தரப்பட்டது என்பதை வெளியிட்டது பத்திரிகைகள்தான்!


‘மிஸ்டர் க்யூ’, ‘நீரோ’, ‘காந்தி டிரஸ்ட் வழக்கறிஞர்’ என மூன்று பேரை சங்கேத வார்த்தைகளில் குறிப்பிட்டிருந்தார் ஆர்ட்போ. இதில் மிஸ்டர் க்யூ என்பது குவட்ரோச்சியையும் நீரோ என்பது ராஜீவ் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த அவரது உறவினரான அருண் நேருவையும் குறிக்கும் என்பது யூகம்.


ராஜீவ் காந்தி, போபர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்ட்டின் ஆர்ட்போ, அந்த நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி வின் சத்தா, போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து லஞ்சப்பணத்தை பெற்று இந்திய அரசியல்வாதிகளுக்குக் கொடுத்ததாகக் கருதப்படும் குவட்ரோச்சி, இடைத்தரகர்களாக செயல்பட்ட தொழிலதிபர்கள் இந்துஜா சகோதரர்கள், அருண் நேரு, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் எஸ்.கே.பட்நாகர் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க குவட்ரோச்சி வெளிநாடு தப்பிச் சென்றார். திருடர் என்ற பட்டத்தைச் சுமந்து ராஜீவ் இறந்து பதின்மூன்று ஆண்டுகள் ஆனபிறகு, ‘ராஜீவ் குற்றமற்றவர்’ என கடந்த 2004ம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்தது. இதேபோன்ற வேகத்தில் போபர்ஸ் வழக்கு நடக்க, பட்நாகர், வின் சத்தா உட்பட குற்றம் சாட்டப்பட்ட பலரும் வழக்கு விசாரணை நடக்கும்போதே இறந்துவிட்டார்கள். போபர்ஸ் விவகாரத்தை வைத்து ராஜீவிடம் தினம் 10 கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்த பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, திடீரென ஒருநாள் இந்துஜா சகோதரர்களுக்காக வாதாடிய அசிங்கமான திருப்பத்தையும் இந்த தேசம் பார்த்தது.


இப்படியான முரண்பாடுகளுக்குப் பிறகு, போபர்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இப்போது உயிரோடு இருக்கும் ஒரே நபர் குவட்ரோச்சிதான்! வழக்கு போடப்பட்டதும் அவர் மலேசியாவுக்குத் தப்பிச் சென்றார். அவரை அங்கிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவர சி.பி.ஐ. தீவிர முயற்சி எடுத்ததாக பல ஆண்டுகள் சொல்லப்பட்டது. ஆனால் இடையில் ஒருமுறை மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது இந்தியப் பிரதமர் வாஜ்பாயை சந்தித்தபோது, ‘சீரியஸாகவே குவட்ரோச்சியை இந்தியாவுக்குக் கொண்டுவர முயற்சிக்கிறீர்களா... இந்த விஷயத்தில் நான் ஏதாவது உதவட்டுமா?’ என்று கேட்டதாகவும், வாஜ்பாய் இதற்கு பதிலே சொல்லாமல் ஜன்னல் வழியே வெளியில் எங்கோ வேடிக்கை பார்த்ததாகவும் சொல்வார்கள். ஒருவழியாக மலேசியாவிலிருந்து அவரை இந்தியாவுக்குக்கொண்டுவரும் முயற்சியில் சி.பி.ஐ. வெற்றிபெற்றபோது அவர் அர்ஜென்டினா தப்பிச் சென்றிருந்தார். இன்டர்போல் அமைப்பு மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுத்து, அவரைக் கைது செய்ய வைத்தது சி.பி.ஐ. ஆனால் உடனே குவட்ரோச்சிக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. அர்ஜென்டினாவுக்கும் இந்தியாவுக்கும் சட்டப்பூர்வ ஒப்பந்தம் ஏதுமில்லாததால், குவட்ரோச்சியை இந்தியா கொண்டுவரும் முயற்சி பலனளிக்கவில்லை. லண்டனில் இருக்கும் அவரது வங்கிகணக்குகளை முடக்குவதற்காக எடுத்த நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில்தான், ‘குவட்ரோச்சி மீதான புகார்களுக்கு போதுமான ஆதாரம் இல்லை’ எனச் சொல்லி, வழக்கைக் கைவிட முடிவெடுத்திருக்கிறது சி.பி.ஐ.


64 கோடி ரூபாய் போபர்ஸ் ஊழல் விவகாரத்தை விசாரிக்க, சி.பி.ஐ. இதுவரை செலவிட்டிருக்கும் தொகை சுமார் 250 கோடி ரூபாய். கிட்டத்தட்ட ஊழலில் கைமாறிய லஞ்சப்பணத்தைவிட நான்கு மடங்கு அதிகம்! இவ்வளவு செலவிட்டு அவர்கள் கண்டுபிடித்த உண்மை... ‘போதுமான ஆதாரம் இல்லை’ என்பதுதான்!


சாதாரண இந்தியனுக்குள் எழும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்... ‘ராஜீவ் குடும்பத்துக்கு நெருக்கமான நண்பர்’ என்பதுதான் குவட்ரோச்சிக்கு இருக்கும் ஒரே இந்திய அடையாளம். அப்படிப்பட்டவர் மீதான குற்றச்சாட்டு இப்படியான ஒரு முடிவுக்கே வரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இதைக் கண்டுபிடிக்க மக்கள் வரிப்பணத்தில் 250 கோடியை வீணாக்கவேண்டுமா என்பதுதான்!
- நாடோடி





No comments: