Tuesday, January 12, 2010

பொங்கல் - எதுவும் புரியவில்லை ?



தைப்பொங்கல் திருநாளாம்
தமிழர்களின் பெருநாளாம்
புத்தரிசி கொண்டு பொங்கும்
புதுப்பானைப் பொங்கலதாம்
ஆதவனை நினைப்பதற்காய்
அன்று பொங்கும் பொங்கலதாம்
எல்லோரும் சொல்லுகிறார்
எனக்கேதும் புரியவில்லை...

நன்றி பல செய்திட்ட
நற்கடவுள் சூரியனை
தையில் விழாவெடுத்து
தமிழ் முற்றம் பொங்கலிட்டு
நன்றி கடன் தீர்க்கும்
நன்நாளாம் தைப்பொங்கல்
எல்லாரும் சொல்லுகிறார்
எனக்கேதும் புரியவில்லை...

முக்கனிகள் கரும்பினுடன்
முத்தான சக்கரையும்
புத்தம் புது நெல்லின்
புது சுகந்த அரியுடன்
சொத்தாக மணி அளித்த
சூரியனுக்கொரு பொங்கலென
எல்லாரும் சொல்லுகிறார்
எனக்கேதும் புரியவில்லை...

புத்தாடை போட்டு அன்று
புதுப்பானை முற்றமதில்
பொங்கலுடன் பலகனியும்
பொங்குகின்ற நேரமதில்
பட்டாசும் வெடித்து
பகிர்ந்துண்டு உண்பதென
எல்லாரும் சொல்லுகிறார்
எனக்கேதும் புரியவில்லை...

ஈழத்தமிழனாகிய நாங்கள்
வீடுவிட்டு அகதிகளாய்
வீதியிலே நாள் படுத்து
காடு தந்த இலை கொண்டு
கஞ்சி காய்ச்சி பசி போக்கி
தேடுகின்றோம் அரிசியை நாம்
கிடைக்காத இந்நிலையில்
எல்லாரும் பொங்கலென்றார்
எனக்கேதும் புரியவில்லை...







No comments: