Wednesday, December 7, 2011

உடையப் போவது அணையா? தேசிய ஒருமைப்பாடா?

1886 ஆம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தானத் துக்கும் சென்னை மாகாணத்துக்கும் இடையே 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டது. 125 ஆண்டுகள் முற்றுப் பெறுவதற்கு முன்பாகவே இந்த ஒப்பந்தத்தை முறிக்கும் வகையில் கேரள மாநில அரசு நடந்துகொள்வது சரியானது தானா? இந்தப் பிரச்சினையில் தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்கிற முரட்டுத் தனத்தில் கேரளா ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது. இப்பொழுது கேரள அரசின் பாதுகாப்போடு வன்முறை நிகழ்வுகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பேருந்துகள், லாரிகள் தாக்கப்படுகின்றன. சபரி மலைக்குச் செல் லும் தமிழ் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள்கூட தாக்கப் படும் அவலம். வேலைக்குச் செல்லும் தமிழர்கள் அடித்து விரட்டப்படுகின்றனர். கேரள இளைஞர் காங்கிரசினர் தமிழ்நாட்டின் எல்லைக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி இருக் கின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறையினர் தாக்கப்பட்டிருக்கின்றனர். தமிழ்நாட்டின் பகுதியில் காங்கிரஸ் கொடியை நட்டு வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். பி.ஜே.பி.யும் தன் பங்குக்குப் போராட்டம் நடத்துகிறது. இதன் பொருள் என்னவாக இருக்க முடியும்? கேரளாவில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கிறது என்பதை நினைவூட்டவா? தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி என்று ஒன்று இருக்கிறதா? அது என்ன செய்து கொண்டிருக்கிறது? அதன் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் என்பது வெறும் மாநிலக் கட்சிதானா? அது தேசியக் கட்சி என்ற நிலையை இழந்துவிட்டதா? ஒருக்கால் தமிழ்நாட்டில் உள்ள காங்கிரசுக்கு மட்டும்தான் தேசிய உணர்வு உண்டு; மற்ற மாநிலங் களில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு அந்த உணர்வு கிடையாது என்பதையாவது அறிவித்து விடட்டும். காங்கிரசின் இந்த நிலைப்பாடுதான் கேரளா மற்றும் கருநாடக மாநிலத்தில் உள்ள பி.ஜே.பி., இடது சாரிகள் நிலையும் கூட. என்னதான் தேசியம் பேசினாலும் உள்ளத்துக்குள் ஊற்று எடுத்துக் கொண்டு இருப்பது மாநில உணர்ச்சி தான்! அதையாவது அறிவு நாணயமாக ஒப்புக் கொள்ள வேண்டாமா? தங்கள் பக்கம் நியாயம் இல்லை - ஏற்கெனவே வந்த தீர்ப்புகள் மறுபடியும் வந்துகொண்டிருக்கும் என்பதை உணர்ந்த நிலையில், வன்முறையில் இறங் கும் ஒரு வேலையில் கேரளா இறங்கியுள்ளது. இதற் குக் கேரள மாநில அரசும் பின்னணியில் உள்ளது. இதன் மூலமாக, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் அமைந்துள்ள குழுவையும் மிரட்டுகின்ற யுக்தியைக் கையாளுகின்றார்கள். கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி மிகப் பெரிய அளவில் பெரும்பான்மை கொண்ட ஆட்சியாக இல்லை. நூலிழையில் நித்திய கண்டம் பூரண ஆயுள் என்ற பரிதாபத்தில்தான் உள்ளது. இதிலிருந்து மீளும் யுக்தியும் இதில் புதைந்து இருக்கிறது. காவிரிப் பிரச்சினையில் கருநாடக மாநிலமும் சரி, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளாவும் சரி, ஒரு சார்பாக எல்லா வகையான நியாயங்கள், நேர்மை, நாணயம், நீதி, சட்டம், ஒப்பந்தம் முதலியவற்றை எல்லாம் மூர்க்கத்தனமாக தூக்கி எறிந்து செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மத்திய அரசின் போக்கும் சந்தேகத் துக்கு அப்பாற்பட்டதாக இருக்கவில்லை. தேர்தல் நேரம் என்றபோது கண்டும் காணாமலும் இருந்தது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி நடத்தும் நிலையில், காங்கிரசுக்குச் சாதகமான மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. திட்டவட்ட மாக பிரதமர் வாயிலிருந்து சொற்கள் வருகின்றனவா? அணையை உடைக்கும் அளவுக்குக் கேரளா நடந்து கொள்ளும் நிலையில், மத்திய காவல் படையைப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையைக் கூட ஏற்காமல் அதிகாரிகளைக் கலந்து ஆலோசிப்பதாகக் கூறுவது எல்லாம் தட்டிக் கழிக்கும் ஒன்றாகவே கருதப்பட வேண்டியுள்ளது. அணையை மட்டும் உடைக்கவில்லை. தேசிய ஒருமைப்பாட்டையும் உடைத்திட தேசியவாதிகள் முண்டா தட்டி நிற்பது பரிதாபமே!

No comments: